Suranga Nagaram Book By Mu Nadesan Bookreview By Pavannan நூல் அறிமுகம்: மு.நடேசனின் சுரங்க நகரம் - பாவண்ணன்

நூல் அறிமுகம்: மு.நடேசனின் சுரங்க நகரம் – பாவண்ணன்



உண்மையின் தரிசனம்
பாவண்ணன்

மு.நடேசன் எழுத்தாளரல்ல. நெய்வேலி சுரங்கத்தில் அறுபதுகளில் அளவையாளராக இணைந்து படிப்படியாக பொறியாளராக உயர்ந்து 1994இல்பணிநிறைவு செய்த ஓர் எளிய குடும்பஸ்தர். அவர் மேச்சேரிக்கு அருகில் காடம்பட்டியானூர் என்னும் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து  பள்ளிப்படிப்பை முடித்தார். வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் ஓர் எழுத்தராக வேலை கிடைத்தபோதும், மேற்படிப்பு படிக்கும் ஆவலால் கோவை தொழில்நுட்பக்கல்லூரியில் சுரங்கவியல் படித்து நெய்வேலியை அடைந்தார். அதற்குப் பிறகு அவர் நெய்வேலியை விட்டுச் செல்லவில்லை. அறுபது ஆண்டுகள் ஓடிவிட்டன. 

தினந்தோறும் நாட்குறிப்பு எழுதும் பழக்கத்தாலும் பல வகையான நூல்களை வாசிக்கும் பழக்கத்தாலும் தெளிந்த நீரோடை போல தடையின்றி வாசிக்கவைக்கும் அழகான மொழி அவருக்கு வசப்பட்டுவிட்டது.  தன் பணிக்கால அனுபவங்களையெல்லாம் எழுதிவைக்கும் விருப்பத்தில் இருநூறு பக்க நோட்டு ஒன்றில் தனித்தனியாக தலைப்பிட்டு எப்போதோ ஒரு சமயத்தில் எழுதி வைத்திருந்தார்.  ஒருநாள் அந்தக் காலத்துக் கல்வி எப்படி இருந்தது என்று கேள்வி கேட்ட மகனிடம், இந்த நோட்டைக் கொடுத்து படித்துப் பார்க்குமாறு சொன்னார். அந்தக் குறிப்புகள் வழியாக அப்பாவின் ஆளுமையை மகன் புரிந்துகொண்டார். அன்று, அப்பாவின் எழுத்துகளுக்கு இடையில் புலப்பட்ட எழுத்தாளரின் முகத்தை அவர்தான் முதலில் கண்டுபிடித்தார். தான் கண்டடைந்த ஒன்றை தமிழுலகமும் காண வேண்டும் என்ற எண்ணத்தில் நண்பர்கள் உதவியுடன் அக்குறிப்புகளை வரிசைப்படுத்தி அழகானதொரு புத்தகமாக கொண்டுவந்திருக்கிறார். 

புத்தகம் இரு தளங்களில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து முழுமையடையும் போக்கில் அமைந்துள்ளது. ஒருபக்கம் நடேசனின் சொந்த வாழ்க்கை. இன்னொரு பக்கம் விவசாய கிராமங்களின் தொகுதியாக இருந்த நெய்வேலி ஒரு சுரங்க நகரமாக மாறி ஆயிரக்கணக்கான மக்களுக்கு அடைக்கலமாக ஓங்கி வளர்ந்த போக்கு. ஒரு நாவலைப்போல இரு தளங்களும் ஒன்றோடொன்று பின்னிக்கொண்டு வளர்ந்து செல்கின்றன. நடேசனின் மொழி படைப்பூக்கத்துடன் உள்ளது. 140 பக்கங்களையும் ஒரே மூச்சில் படித்துமுடிக்கத் தூண்டும் வகையில் அவருடைய மொழி ஈர்ப்புடன் உள்ளது. 

ஒரு சுரங்கம் எப்படி இயங்குகிறது என்பதை ஒட்டி நடேசன் வழங்கும் சின்னச்சின்னக் காட்சிச் சித்திரங்களை வாசிக்கும்போது ஓர் அறிவியல் நூலைப் படிப்பதுபோல சுவாரசியமாக உள்ளது. கச்சிதமாக சுருக்கி எழுதப்பட்டுள்ள அவருடைய அலுவலக அனுபவங்களையும் வாழ்க்கை அனுபவங்களையும் படிக்கும்போது, ஏதோ ஒரு நாவலின் அத்தியாயங்களைப் படிப்பதுபோலவே இருக்கிறது. சில செய்திகளைக் குறைத்து, இன்னும் சில செய்திகளை இணைத்து வளர்த்து எழுதப்பட்டிருந்தால், இதை ஒரு தன்வரலாற்று நாவல் என்று சொல்வதில் யாருக்கும் தடையிருக்காது.

புத்தகத்தைப் படித்து முடித்ததும் ஒவ்வொரு காட்சியையும் மனத்துக்குள் மீண்டும் நிகழ்த்திப் பார்த்து அசைபோட்டபடி இருந்தபோது, ஒரு புனைகதைக்கே உரிய சில தருணங்களையும் முரண்புள்ளிகளையும் உணர முடிந்தது. வாழ்க்கை ஒருபோதும் நேர்க்கோட்டில் நிகழும் பயணமல்ல என்பதையே ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் இந்த மண்ணில் உணர்த்தியபடி இருக்கிறது. மேடுகள், பள்ளங்கள், திருப்பங்கள், கசப்புகள், நட்புகள், துரோகங்கள், தியாகங்கள், இழப்புகள் எல்லாம் இணைந்ததே இவ்வாழ்க்கை.  நடேசனின் வாழ்க்கையும் அந்த மாறா உண்மையையே உணர்த்துகிறது.  

ஒரு நிகழ்ச்சி. நடேசனுக்கு மூன்று பிள்ளைகள். ஒரு மகன். இரு மகள்கள். மகன் பெயர் செல்வம். அவரை நன்கு படிக்கவைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நெய்வேலியிலேயே உள்ள தனியார் பள்ளியான குளூனி பள்ளியில் சேர்க்கிறார். ஆனால் செல்வத்துக்கு கல்வியில் அந்த அளவுக்கு நாட்டமில்லை.  ஆனால் ஓவியம் வரைவதில் அளவற்ற நாட்டமுள்ளவராக இருக்கிறார். ஒவ்வொரு பாடத்திலும் சராசரி மதிப்பெண்களோடு மட்டுமே அவரால் தேர்ச்சி பெற முடிகிறது. எப்படியோ பத்தாம் வகுப்புக்கு வந்துவிட்டார்

பத்தாவது வகுப்பில் அவர் படித்துக்கொண்டிருந்தபோது ஒருநாள் பள்ளியின் தலைமையாசிரியர் அந்த மாணவரிடம் தன் அப்பாவை அழைத்துவரச் சொல்கிறார். மறுநாளே நடேசன் சென்று நிற்கிறார். வழக்கமாக பள்ளியிறுதித் தேர்வுகளில் நூறு சதவீதம் தேர்ச்சியை ஒரு சாதனையாக தொடர்ந்து நிகழ்த்திவரும் பள்ளி அது. செல்வம் தேர்ச்சி பெறுவதைப்பற்றி தனக்கிருக்கும் ஐயத்தை அந்தத் தலைமையாசிரியர்  செல்வத்தின் தந்தையிடம் தெரிவிக்கிறார். குளூனியிலிருந்து சான்றிதழ் பெற்றுச் சென்று வேறு பள்ளியில் சேர்த்துவிட ஆலோசனை வழங்குகிறார்.

பள்ளி நிர்வாகத்தின் சொல்லுக்கு இணங்குவதைத் தவிர நடேசனுக்கு வேறு வழி தெரியவில்லை.  எழுதிக் கொடுத்துவிட்டு சான்றிதழ் பெற்றுக்கொள்கிறார். அப்போது அந்த மாணவர் தன் நினைவாக பள்ளியில் இருக்கட்டும் என ஓர் ஓவியத்தை வரைந்து கொடுத்துவிட்டு வருகிறார். மகனை அழைத்துச் சென்ற தந்தை அருகிலேயே என்.எல்.சி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்த்துவிட்டு வீட்டுக்கு வந்துவிடுகிறார். குளூனி பள்ளி நிர்வாகம் அஞ்சியதற்கு மாறாக பள்ளியிறுதித் தேர்வில் அவர் வெற்றி பெற்றுவிடுகிறார்.  

அந்த வெற்றியைத் தொடர்ந்து, மகனுடைய ஓவிய ஆர்வத்தைப் புரிந்துகொண்ட நடேசன் செல்வத்தை அழைத்துச் சென்று கும்பகோணம் ஓவியக்கல்லூரியில் சேர்த்துவிடுகிறார். ஓவியத்தில் பட்டம் பெறும் அவர் புகைப்படக்கலையிலும் நன்கு பயிற்சி எடுத்துக்கொள்கிறார். சில ஆண்டுகளுக்குப் பிறகு அதே நெய்வேலியில் ஜவஹர் மேல்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராக செல்வம் சேர்ந்து ஆசிரியராகப் பணிபுரியத் தொடங்குகிறார். தோல்வியடையக்கூடும் என முதலில் நினைத்த குளூனி பள்ளி, செல்வம் அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டு வந்த ஓவியத்தை, அதன் அழகு கருதி முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக செல்வத்தின் நினைவாக இன்றளவும் பாதுகாத்து வருகிறது.

இன்னொரு முக்கியமான நிகழ்ச்சி. ஆங்கிலேயர் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் 1935இல் நெய்வேலி பகுதியில் ஏராளமான நிலத்துக்குச் சொந்தமாக இருந்த ஜம்புலிங்க முதலியார் என்பவர் பாசன வசதிக்காக தன் நிலத்தில் கிணறு தோண்டியபோது கரிய நிறத் திரவமொன்று தண்ணீரோடு கலந்து வந்ததைப் பார்த்துத் திகைத்தார். அந்தச் செய்தியை ஆங்கிலேய அரசின் புவியியல் துறையினரிடம் தெரிவித்தார். அவர்கள் சில சோதனைகளை மேற்கொண்டு அங்கே நிலக்கரி இருப்பதை உறுதிப்படுத்தினர்.  ஆயினும் அன்றைய நிர்வாக நெருக்கடியின் காரணமாக ஆங்கில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

விடுதலை பெற்று புதிய சுதேசி அரசு அமைந்ததும், மீண்டும் இச்செய்தியை காமராஜரின் கவனத்துக்குக் கொண்டு சென்றார் ஜம்புலிங்க முதலியார். விடுதலை பெற்ற இந்தியாவில் மக்களுக்குச் சேவையாற்றும் விதமாக சில பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்க நேரு தலைமையிலான அரசு திட்டமிட்டிருந்த நேரம் அது. காமராஜரும் நேருவைச் சந்தித்து நெய்வேலியில் சுரங்கம் அமைப்பதைப்பற்றி எடுத்துரைத்தார். ஆரம்ப கட்ட ஆய்வுகள் அந்த இடத்தில் நிலக்கரி இருப்பதை உறுதிப்படுத்தின. நேருவுக்கும் சுரங்கம் அமைப்பதில் ஆர்வமிருந்தது. ஆனால் போதுமான நிதியை ஒதுக்கீடு செய்வதில் சிறிதளவு தயக்கம் இருந்தது. அந்தத் தயக்கத்தை உணர்ந்த ஜம்புலிங்க முதலியார் நெய்வேலி நிலக்கரி சுரங்க நிறுவனம் உருவாக்க, தனக்குச் சொந்தமான 620 ஏக்கர் நிலத்தை மாநில அரசுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். அதற்குப் பிறகு  அரசுத் தரப்பிலிருந்து வேலைகள் வேகவேகமாக நடந்தன. இறுதியில் 1956 முதல் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் வெற்றிகரமாக இயங்கத் தொடங்கியது. எண்ணற்றோருக்கு வேலை வாய்ப்பை இந்த நிறுவனம் உருவாக்கிக் கொடுத்தது. இங்கிருந்து உற்பத்தியாகும் நிலக்கரியும் மின்சாரமும் இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும் சென்றன. 

ஜம்புலிங்க முதலியாரின் கொடையுள்ளத்தைப் பாராட்டும் விதத்திலும் இன்றைய தலைமுறையினருக்கு அவரை அறிமுகப்படுத்தும் விதத்திலும் 26.02.2013 அன்று நிலக்கரி நிறுவனத்தின் சார்பில் நகரத்துக்கு நடுவில் அவருடைய உருவச்சிலை திறந்துவைக்கப்பட்டது. அந்த விழாவில் கெளரவிப்பதற்காக முதலியாரின் வாரிசுகளும் கலந்துகொள்ள அழைக்கப்பட்டனர்.  விழாவில் பங்கேற்ற அவர்கள் தற்போது தம் குடும்பம் சிரமதசையில் இருப்பதாகவும் நிறுவனத்தில்  தம் குடும்பத்தினருக்கு வேலை அளித்தால் உதவியாக இருக்குமென்றும் ஒரு கோரிக்கையை முன்வைத்தனர். எண்ணற்றோருக்கு வாழ்க்கையை அளித்த அந்த நிறுவனத்தின் உருவாக்கத்துக்காக ஒருகாலத்தில் தம் நிலத்தையே அன்பளிப்பாக கொடுத்தவரின் கொடிவழியினருடைய இன்றைய வாழ்க்கைச்சூழல் பற்றிய செய்தி துயரமளிக்கிறது. வாழ்வில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களும் மாற்றங்களும் புதிரானவையாகவே உள்ளன.

நடேசனின் சுரங்கப் பணிக்காலத்தில் சுரங்க மேலாளராக இருந்த பி.எஸ்.டி.நாயுடு என்பவர் பரந்த மனப்பான்மையும் மனிதாபிமானமும் நிறைந்தவராக முன்வைக்கப்பட்டுள்ளார். நடேசனின் வாழ்க்கையில் நாயுடுவின் குழுவில் வேலை செய்த காலமே ஒரு பெரிய திருப்புமுனைக்காலம். இளமையிலேயே பல இடர்களுக்கிடையில் தன்னம்பிக்கையுடன் படித்தும் உழைத்தும் மேல்நிலைக்கு வந்த அதிகாரி அவர். வட இந்தியாவில் வேலை செய்துவிட்டு நெய்வேலிக்கு வந்திருந்தார்.

தனக்குக் கீழே பணிபுரியும் அளவையாளர்களிடமும் ஊழியர்களிடமும அவர் அன்புடனும் கண்ணியத்துடனும் பழகினார். அனைவருக்கும் அவர்மீது நல்ல மதிப்பிருந்தது.  மத்திய அரசு நடத்தும் துறைத்தேர்வுகளை எழுதும்படி அவர் அனைவரையும் தூண்டினார்.  சுரங்க மேலாளர் தேர்வில் வெற்றி பெறுபவர்கள்  மட்டுமே எதிர்காலத்தில் சுரங்கவேலையில் நீடிக்க முடியும் என்ற உண்மையை அவரே முதன்முதலில் நடேசனிடமும் மற்றவர்களிடமும் பகிர்ந்துகொண்டார். அவர்களை உடனடியாக தேர்வு எழுதும்படி நினைவூட்டியபடியே இருந்தார். நெய்வேலிச் சுரங்கமோ திறந்தவெளிச் சுரங்கம். சாதாரணமாக அந்தப் பணி அனுபவத்தைக் கொண்டு அந்தத் தேர்வை எழுதமுடியாது. அப்படித்தான் அரசு விதி இருந்தது. தற்செயலாக சில மாதங்களுக்குப் பிறகு அந்த விதி தளர்த்தப்பட்டது. பெரும்பாலும் விதி மாற்றங்களைப்பற்றியெல்லாம் அதிகாரிகள் ஊழியர்களிடையில் உரையாடுவது கிடையாது. விதிவிலக்காக நாயுடு அனைவருக்கும் அச்செய்தியைத் தெரிவித்து, உடனடியாக தேர்வை எழுதத் தூண்டினார். அடுத்தடுத்து மூன்று துறைத்தேர்வுகளை எழுதிய நடேசனும் பிற நண்பர்களும் வெற்றி பெற்று பணியில் எளிதாக உயர்நிலைக்குச் செல்லமுடிந்தது.  

தனக்குத் தொடர்பே இல்லாத ஒரு செயலுக்குப் பொறுப்பேற்று சரிவைச் சந்திக்கும் தருணமும் நடேசனின் வாழ்க்கையில் அமைந்துள்ளது. ஒருநாள் சுரங்கத்தில் ஏதோ ஒரு பகுதியில் ஒரு வேலையை மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தார் அவர். அப்போது தொழிற்சங்கத்தைச் சேர்ந்த இருவர் சுரங்கத்துக்குள் வந்தனர். அவருடைய அனுமதியைப் பெறாமலேயே வேறொரு தளத்தில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்களுடன் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமான தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் செயற்பொறியாளராக இருந்தவருக்கும் மோதல் உருவாகிவிட்டது. கடைசியில் அது கைகலப்பாக முடிந்தது. கட்டுப்பாட்டு அறை வழியாக செய்தியை அறிந்த நடேசன் உடனடியாக அந்த இடத்துக்குச் சென்று மோதலை விலக்கிவிட்டார். அக்கணத்தில் இருவரும் பிரிந்து விலகிச் சென்றனர். ஆயினும் சிறிது நேரத்துக்குப் பிறகு செயற்பொறியாளர் சார்பில் சில பொறியாளர்கள் இணைந்துகொண்டு தொழிற்சங்கக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அழுத்தம் கொடுத்தனர்.

ஒருவேளை நடவடிக்கை எடுக்க மறுத்தால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்தனர். அதற்குள் அந்தச் செய்தி நிர்வாகத்தின் கவனத்துக்குச் சென்றுவிட்டது. நிர்வாகம் எந்த விசாரணையும் இல்லாமல் நடைபெற்ற சம்பவங்களுக்கு நடேசனையே பொறுப்பாளியாக்கி, வேறொரு சுரங்கத்துக்கு மாற்றலாணை வழங்கிவிட்டது. தன் தரப்பைத் தெரிவிக்கவும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. மாற்றப்பட்ட இடத்தில் அவருடைய தகுதிக்குரிய வேலைகள் கொடுக்கப்படவில்லை. பொறுப்புகள் குறைக்கப்பட்டன. வெளிநாடு செல்லும் வாய்ப்பும் தடுக்கப்பட்டது.  எல்லாவற்றுக்கும் காரணமாக இருந்தவர் ஓர் உயர் அதிகாரி. 

ஒரே நிறுவனத்தில் ஓர் அதிகாரி அடிமட்ட ஊழியர்கள் அனைவரும் அடுத்தடுத்த நிலைக்கு உயர்ந்து நல்வாழ்வு வாழ வேண்டும் என நினைக்கிறார். இன்னொரு அதிகாரியோ செய்யாத ஒரு பிழைக்கு எளிய ஊழியர்களைப் பொறுப்பாக்கி தண்டிக்க நினைக்கிறார்.  பூபதி போன்றவர்கள் பணிபுரிந்த அதே சுரங்கத்தில்தான் நாயுடு போன்றவர்களும் வேலை செய்தனர் என்னும் உண்மையின் விசித்திரத்தை யாராலும் வியக்காமல் இருக்கமுடியாது. எண்பத்துநான்கு வயது நிறைந்த நடேசன்  தன் அனுபவச்சுரங்கத்திலிருந்து முன்வைத்திருக்கும் காட்சிகளில் உண்மையின் தரிசனத்தைக் காண முடிகிறது. 

நூல்: சுரங்க நகரம்
ஆசிரியர்: மு.நடேசன்
வெளியீடு: செம்மண் பதிப்பகம்
விலை: 150

Kondaikuruvi Book By Pavannan BookReview By Dhurai Arivazhagan நூல் அறிமுகம்: பாவண்ணனின் கொண்டைக்குருவி - துரை. அறிவழகன்

நூல் அறிமுகம்: பாவண்ணனின் கொண்டைக்குருவி – துரை. அறிவழகன்



நூல்: “கொண்டைக்குருவி”
ஆசிரியர்: பாவண்ணன்

(Rhymes for children)
வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன்,
Pages : 64 /
Rs.60/
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்: thamizhbooks.com

“இசைமொழிப் பாடல்கள்”

“குழந்தை எழுத்தாளன் தானும் ஒரு குழந்தையாகி விடுகிறான்” என்று சொல்வார் குழந்தை இலக்கிய முன்னோடி ‘வாண்டு மாமா’. இச்சொல்லை தன் அகச் சுடராகக் கொண்டு பயணிப்பவர் “பாவண்ணன்”. அண்டரண்டப் பட்சியின் சிறகுகள் கொண்ட, சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் இவர்.

குழந்தைகளின் இசைமொழி இத்தொகுப்பில் பாடல்களாக வடிவம் கொண்டு மலர்ந்துள்ளது. இயற்கையோடு கலந்த உலகை அழகிய சித்திரங்களாகத் தீட்டியுள்ளார் நூலாசிரியர். ஓசை நயத்துடன், பன்முக உலகை வெளிப்படுத்தும் சிறார் இலக்கிய ஆளுமையாக பாவண்ணன் அவர்களை இத்தொகுப்பு வழி பார்க்க முடிகிறது.

குழந்தைகளின் படைப்பூக்க ஆளுமை அவர்களின் குழந்தை நாட்களில்தான் கடலென அவர்களுக்குள் கட்டமைக்கப்படுகிறது. இப்படைப்பூக்க நிலத்தில் பயிர் விதைகளை பாடல்களாக விதைத்துப் போகிறார் பாவண்ணன் அவர்கள். குழந்தைகளின் செல்ல விலங்குகளும், பறவைகளும் இத்தொகுப்பில் உயிரோட்டத்துடன் துள்ளி விளையாடுவதைப் பார்க்க முடிகிறது. பால் மனம் கொண்ட மெல்லிய இதயத்தில் இருந்து உதிர்ந்த வண்ண சிறகுகளாக தொகுப்பில் உள்ள பாடல்கள் காட்சியளிக்கின்றன.

ஐரோப்பிய இலக்கியங்களின் சிகரமாக ஸ்காண்டிநேவிய இலக்கியத்தை சொல்வது போல, சிறார் இலக்கியத்தின் சிகரம் என்று குழந்தைப் பாடல்களை சொல்ல வேண்டும். குழந்தைகளுடன் உரையாடும் தன்மை கொண்டவைகளாக அமைய வேண்டும் இப்பாடல்கள்.

இலைகள் துளிர்க்கும் அழகும், பூத்த பூக்களின் நறுமணமுமாக இருக்க வேண்டும் குழந்தைப் பாடல்கள். அத்தகைய குழந்தைப் பாடல்களாக அமைந்துள்ளன இந்த நூலில் உள்ள பாடல்கள். ஒரு தாயின் அன்புடனும், ஆசிரியரின் கனிவுடனும், நண்பர்களின் நேசத்துடனும் குழந்தைகளை அணைத்து வருடிக் கொடுக்கின்றன இப்பாடல்கள்.

கவிமணி, பாரதி, பாரதிதாசன், அழ.வள்ளியப்பா என நீளும் குழந்தைக் கவிஞர்களின் வரிசையில் சமகால ஓசைநயம்மிக்க கவிஞராக மலர்ந்து நிற்கிறார் பாவண்ணன் அவர்கள். இந்த நூலில் உள்ள பாடல்களின் ஓசை இன்பம் குழந்தைகளை துள்ளச் செய்யும் என்று உறுதியாகச் சொல்லலாம்.
“தடதட வண்டி
தம்பி ஓட்டும் வண்டி
காற்றைப் போல பறக்கும் வண்டி
கல்லிலும் மண்லும் ஓடும் வண்டி
……”
(வண்டி)

“அச்சாலக்கடி அச்சாலக்கடி
குண்டு மாம்பழம்
கண்டமங்கலம் தாத்தா கொடுத்த
குண்டு மாம்பழம்
….”
(மாம்பழம்)

“வெள்ளையான பூனைகுட்டி
வீட்டைச் சுற்றும் பூனைக்குட்டி
குள்ளமான பூனைகுட்டி
குறும்புகாரப் பூனைகுட்டி
……
(பூனைக்குட்டி)

“தத்தக்கா புத்தக்கா கன்றுக்குட்டி
தாவ நினைக்கும் கன்றுக்குட்டி
……
(கன்றுக்குட்டிக்கு முத்தம்)

“ஓலைவெடி ஓலைவெடி
தாத்தா செய்த ஓலைவெடி
பனையோலையை நறுக்கி
பக்குவமாய்ச் செய்த வெடி
…..”
(ஓலைவெடி)

இப்படியான ஓசை நயமிக்க வரிகள் கொண்ட இத்தொகுப்பில் உள்ள பாடல்வரிகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
பாரதி, பாரதிதாசன், கவிமணி, அழ.வள்ளியப்பா, மயிலை சிவமுத்து ஆகியோர்களைத் தொடர்ந்து பாவண்ணனின் பாடல்களும் சிறுவர் பாட நூல்களில் இடம்பெற பூரண தகுதியைக் கொண்டுள்ளன.
மழலை பாடல்களின் சமகால சிகரம் என்று “கொண்டைக்குருவி” தொகுப்பைச் சொல்லலாம். மழலையர் பள்ளிகளில் ஒலிக்க வேண்டிய பாடல்கள் இவை என்றும் உறுதிபட சொல்லலாம்.
***

Veezhchi Book By Albert Kamyu in tamil translated by Su. Aa. Venkata subburaya Nayakar BookReview By Pavannan. நூல் அறிமுகம்: ஆல்பர்ட் காம்யூவின் வீழ்ச்சி | தமிழில்: சு. ஆ. வெங்கட சுப்புராய நாயகர் - பாவண்ணன்

நூல் அறிமுகம்: ஆல்பர்ட் காம்யூவின் வீழ்ச்சி | தமிழில்: சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் – பாவண்ணன்



நன்மையும் தீமையும்
                                        – பாவண்ணன்

ஏடன் தோட்டம் களிப்பின் உறைவிடம் என்பது ஒரு நம்பிக்கை. அழகான நிலப்பரப்பு, இனிமையான சூழல், விரிந்த வானம், மரங்களும் செடிகளும் கொடிகளுமாக அடர்ந்திருக்கும் பசுமை படர்ந்த இடம் என எங்கெங்கும் பார்க்கப் பார்க்க பரவசமூட்டும் இடமாக அத்தோட்டம் இருக்கிறது. அந்தத் தோட்டத்தில் ஆதாமும் ஏவாளும் இணைப்பறவைகளாக பறந்து திரிந்து மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள். மலர்க்குவியலில் ஒரு மலராக, பறவைக்கூட்டத்தில் ஒரு பறவையாக, அச்சூழலின் ஒரு பகுதியாகவே உல்லாசமாக அலைகிறார்கள். ஏதோ ஒரு கணத்தில் எதிர்பாராத விதமாக அவர்கள் நெஞ்சில் படரும் ஆசை அவர்களை அந்த உல்லாசநிலையிலிருந்து அவர்களை விழவைத்துவிடுகிறது. ஆசை இன்பத்தை வழங்கியபோதும், ஒருவித குற்ற உணர்வையும் வழங்குகிறது. ஆதாம் ஏவாள் காலத்தில் தொடங்கிய அந்த மாபெரும் வீழ்ச்சி நவீன மனிதனின் காலம் வரைக்கும் மீட்சியின்றி தொடர்ந்துகொண்டே உள்ளது. 

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, இலட்சியவாதம் மங்கி தன்னலவாதம் ஓங்கி வளரத் தொடங்கிய சூழலில் மனிதர்கள் பொருளற்ற ஓர் அபத்த நிலையில் அவநம்பிக்கையுடன் வாழ்வதைப்போன்ற உணர்வில் குழம்பி வாழ்ந்தனர். அந்த அபத்தத்தையும் குழப்பத்தையும் வெளிப்படுத்தும் படைப்புகளை அன்றைய பிரெஞ்சு எழுத்தாளரான ஆல்பர்ட் காம்யூ தொடர்ந்து எழுதினார். வீழ்ச்சி அவருடைய இறுதி நாவல். ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, பிரெஞ்சிலிருந்து நேரிடையாக க.ஆ.வெங்கட சுப்பராய நாயகர் முதன்முதலாக இப்போது தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். தெளிவும் சரளமும் பொருந்திய நாயகரின் மொழி ஒரு நேரடிப் படைப்பைப் படிக்கும் அனுபவத்தைக் கொடுக்கிறது.

ஆல்பெர்ட் காம்யூ இந்த நாவலை மிகவும் ஆர்வமூட்டும் விதமாக கட்டமைத்திருக்கிறார். ழான் பத்தீஸ்த் கிலெமான்ஸ் என்னும் முன்னாள் வழக்கறிஞரின் தனியுரைகளை, அருகிலேயே இருந்து கேட்ட ஒருவர் தொகுத்தளித்ததைப்போன்ற அமைப்பில் நாவல் உள்ளது. கிட்டத்தட்ட ஓர் உரைத்தொகுப்பு என்றே குறிப்பிடலாம். வாசகர்களுக்கு நம்பகத்தன்மையை ஊட்டும் விதமாக அந்த உரைகள் அமைந்திருக்கின்றன என்பதுதான் நாவலின் வெற்றிக்குக் காரணம்.  

பாரீஸில் பணியாற்றிய கிலெமான்ஸ் ஆம்ஸ்டர்டாம் மதுக்கூடம் ஒன்றில் தன் எதிரில் அமர்ந்துள்ள பிரெஞ்சுக்காரர் ஒருவரிடம் தன் நினைவுகளை எவ்விதமான வரிசைமுறையும் இல்லாமல் மனம்போன போக்கில் பகிர்ந்துகொள்வதுபோல முதல் பகுதி தொடங்குகிறது.  ஆறு பகுதிகளாக நீளும் இந்தத் தனியுரையை மொத்தமாக படித்துமுடித்த பிறகு ஒரு வாழ்க்கை வரலாற்றைப் படித்த அனுபவம் கிடைக்கிறது. தன் வழக்கை தானே நடத்தும் வழக்கறிஞரைப்போல அவர் தன் நேர்மையையும் உயர்வுகளையும் தாழ்வுகளையும் பிழைகளையும் வீழ்ச்சிகளையும் தன் தரப்பு நியாயங்களையும் தொகுத்து முன்வைக்கிறார். தன் மீது தானே குற்றம் சுமத்திக்கொள்வதன் மூலம் நம் கவனத்தை ஈர்த்து நம் நம்பிக்கையைப் பெற்று, அந்த வாதங்களை கவனமாக காதுகொடுத்துக் கேட்கத் தொடங்கும் நேரத்தில் சமூகத்தில் நிகழும் பல்வேறு குற்றங்களை அடுக்கடுக்காக முன்வைக்கிறார்.

அந்தப் பெருங்குற்றங்களின் முன்னால் தன் சிறுகுற்றத்தை சிறு குன்றிமணியாகத் தோற்றமளிக்கவைக்கும் விதமாக அவருடைய பேச்சாற்றல் அமைந்திருக்கிறது. கிலெமான்ஸ் ஒரே நேரத்தில் குற்றவாளியாகவும் நீதிபதியாகவும்  தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறார். கிலெமான்ஸ் உரைக்கும் ஒவ்வொரு சொல்லும் இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய ஐரோப்பியர்களின் மனநிலையைப் புரிந்துகொள்ள  உதவியாக இருக்கிறது.

கிலெமான்ஸின் இரட்டை மனநிலை நாவலெங்கும் வெளிப்பட்டபடி உள்ளது. ஓரிடத்தில் தன்னைப்பற்றி மிகையான நல்லுணர்வைக் கொண்டவனாக வெளிப்படுகிறான். மற்றோரிடத்தில் தன்னைத்தானே வெறுத்துக்கொள்பவனாக வெளிப்படுகிறான். தான் அதுவரை அடைந்ததைவிட இன்னும் கூடுதலாக அடைவதற்கு ஒவ்வொரு கணமும் அவனுடைய ஆழ்மனம் விரும்புகிறது. 

ஒரே நாளில் இந்த உரையாடல் முடியவில்லை. வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு சூழல்களில் இந்த உரையாடல் நடக்கிறது. முதலில் கிலெமான்ஸ் தன் பணிச்சூழல் சார்ந்த உலகத்தைப்பற்றிச் சொல்கிறான். பிறகு தன் நகரத்தில் வாழும் தன் வாடிக்கையாளர்கள் மனநிலை சார்ந்து பேசத் தொடங்குகிறான். மற்றொரு நாளில் தான் அறிந்த வெவ்வேறு மனிதர்களின் கதைகளைப் பகிர்ந்துகொள்கிறான். பிறகு மெல்ல மெல்ல தன்னுடைய காமக்களியாட்டங்களையும் தீய வாழ்க்கைமுறைகளையும் பற்றி எடுத்துரைக்கிறான். உரையாடல் போக்கில் அமைந்திருப்பதால், கிலெமான்ஸ் தன் பேச்சின் ஊடே ஒவ்வொரு நாளும் ஏராளமான சின்னச்சின்ன நிகழ்ச்சிகளை நினைவுகூர்ந்தபடி இருக்கிறான். 

ஒரு நிகழ்ச்சி. விலங்குகளையும் மனிதர்களையும் நேசிக்கும் மனமுடைய ஒரு பெரியவர் நகரத்தில் நடைபெறும் மதப்போரின் அக்கிரமங்களைக் கண்ணால் காண விரும்பாமல் தன் சொந்த கிராமத்துக்குச் சென்றுவிடுகிறார். அனைவரையும் நேசிக்கும் தன் பண்பின் காரணமாக “நீங்கள் எங்கிருந்து வருபவர்களாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி, உள்ளே வாருங்கள். உங்கள் வரவு நல்வரவாகுக” என்று வீட்டு வாசலில் எழுதி வைத்தார். மறுநாளே இராணுவ உதவிப்படை அவருடைய வீட்டுக்குள் சென்று அவரைக் கொன்றுவிடுகின்றனர்.

இன்னொரு நிகழ்ச்சி. ஒரு நகரத்தில் ஒரு தொழிலதிபர் இருக்கிறான். அவனுடைய மனைவி அழகானவள். எல்லோருக்கும் உதவி செய்யும் நற்குணங்கள் வாய்க்கப்பெற்றவள். அவளுக்கு துரோகமிழைத்து விலைமகள்களுடன் அந்தத் தொழிலதிபர் சுற்றுகிறான். அவள் அவனைத் தட்டிக் கேட்பதில்லை. தன்னுடைய நல்ல குணத்திலிருந்து சிறிதும் வழுவாது நடந்துகொள்கிறாள். தன் துரோகம் அவள் பார்வையில் படவில்லையோ எனக் கருதி, அவள் கண் முன்னாலேயே பிற பெண்டிருடன் அலையத் தொடங்குகிறான் அபன். அதையும் பெரிதுபடுத்தாமல் அவள் வாழ்கிறாள். அவளுடைய அமைதியும் உறுதியும் அவனை வெகுவாகச் சீண்டுகின்றன. சீற்றமுறவைக்கின்றன. ஒருநாள் ஆத்திரம் கொண்டு அவளைக் கொன்றுவிடுகிறான்.

மற்றொரு நிகழ்ச்சி. ஒரு குடியிருப்பில், அங்கு  வசிப்பவர்களுக்கு நகரத்திலிருந்து கடிதங்களைக் கொண்டுவந்து கொடுத்து குற்றேவல் புரிந்து வருகிறான் ஒருவன். பொதுவாக அவனை குடியிருப்பில் யாருமே மதிப்பதில்லை. திடீரென அவன் உடல்நலம் குன்றி படுத்த படுக்கையாகக் கிடக்கிறான். அவன் வேலைகளை அவனுடைய அழகான மனைவி செய்கிறாள். அவள் சேகரித்து வந்து வைத்திருக்கும் மடல்களை, குடியிருப்பில்  இருப்பவர்கள் அவளுடைய வீட்டுக்கே சென்று அவளிடமிருந்து வாங்கிக்கொள்ளத் தொடங்குகின்றனர். அவன் இறந்தபோது அனைவரும் சேர்ந்து இறுதிச்சடங்கு செய்கின்றனர். திடீரென ஒருநாள் அவள் யாரோ ஒரு பாடகனை மணம் புரிந்துகொள்கிறாள்.

தினமும் அவன் மாலை வேளைகளில் பாடுகிறான். பிறகு அவளைப் போட்டு அடிக்கிறான். அவளைத் துன்புறுத்தி அழவைத்துப் பார்ப்பதில் அவன் மகிழ்ச்சியடைகிறான். அவள் கூக்குரல் குடியிருப்பு முழுக்க எதிரொலிக்கிறது. ஒருவரும் நெருங்கிச் சென்று விசாரிப்பதில்லை. ஒருநாள் அவன் குரலும் கைகளும் ஓய்ந்துவிடுகின்றன. ஒருவருக்கும் தெரியாமல் அவன்  அந்தக் குடியிருப்பிலிருந்து ஓடிவிடுகிறான். பழைய கணவனின் புகழைப் பேசியபடி அந்தப் பெண் மீண்டும் குடியிருப்புக்குள் நடமாடத் தொடங்குகிறாள்.

ஒருமுறை கிலெமான்ஸ் ஓர் இளம்பெண்ணின் மீது விருப்பம் கொண்டு நாடுகிறான். ஆனால் அவளோ அவனை ஒதுக்கிவிட்டுச் சென்றுவிடுகிறாள். எனினும் அவன் தன் முயற்சியைக் கைவிடாமல் அவளுடன் பழகிப்பழகி நட்பைச் சம்பாதிக்கிறான். அவள் அன்பைப் பெற்று அவளுடன் இன்பமாக பொழுதைக் கழித்த பிறகு அவளுடைய உறவைத் துண்டித்துக்கொள்கிறான்.

அவளோடு இன்பம் துய்ப்பதே தன்னுடைய நோக்கமாக இருந்ததே அன்றி, அவள் மீது தனக்கு எவ்விதமான நாட்டமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கிறான் அவன். ஒவ்.வொரு நாளும் தீமையின் மீது தன் நாட்டம் பெருகுவதை அவனே தெரிவிக்கிறான். பாவம் இல்லாமலோ, செய்யாமலோ இந்த மண்ணில் வாழ்வது இயலாத செயல் என்ற முடிவை அவன் மனம் எடுக்கிறது. ஏணியின் உச்சியில் மேல்படியிலிருந்து வாழ்க்கை ஒவ்வொரு படியாக அவனை இறக்கி, இறுதிப்படிக்கு இழுத்துவந்து நிற்கவைத்துவிடுகிறது.

நாவலில் இடம்பெற்றிருக்கும் ஆறு தனியுரைகளும் ஒருவகையில் தேவாலயத்தில் முன்வைக்கப்படும் பாவமன்னிப்பு உரையின் சாயலில் இருப்பதை ஒரு துணுக்குறலுடன் உணரமுடிகிறது. தான் கொஞ்சம் கொஞ்சமாக சரிவை நோக்கி வந்த கதையை ஒருவன் முன்வைப்பதையும் உணரமுடிகிறது. புத்திசாலித்தனம், அப்பாவித்தனமான அன்பு, எதையும் எதிர்பார்க்காத பெருந்தன்மை, கேலி, ஆற்றாமை, அலட்டல், எல்லாம் எனக்குத் தெரிந்த விஷயமே என்பதுபோன்ற மேதாவித்தனம் என அனைத்தும் அக்குரலில் மாறிமாறி ஒலிப்பதையும் உணரமுடிகிறது. 

மனித வாழ்வின் வீழ்ச்சியை அல்லது மதிப்பீடுகளின் வீழ்ச்சியைப்பற்றிய உரையாடலைத் தொடங்குவதற்காகவே காம்யூ இந்த நாவலை எழுதியிருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிலெமான்ஸின் வீழ்ச்சி என்பது மனிதகுலத்தின் வீழ்ச்சியே.  தொடக்கத்தில் அவன் தன் மனத்துக்கு நெருக்கமாக வளர்த்துவைத்திருந்த மதிப்பீடுகள் எதுவும் அவனுடை நல்வாழ்க்கைக்கு வழிவகுக்கவில்லை. அவன் அடைய நினைத்த எதையும் அடைய துணைசெய்யவில்லை. தன்னை அறியாமலேயே அவன் மனம் தீமையின் பாதையில் நகரத் தொடங்கிவிட்டது. தீமைக்கு இருக்கும் ஈர்ப்பும் வசீகரமும் சொல்லில் அடங்காதவை.

நூல்: வீழ்ச்சி
ஆசிரியர்: ஆல்பர்ட் காம்யூ
தமிழில்: சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி.சாலை. நாகர்கோவில்.
விலை. ரூ.140 

Or Annadukatchiyin Selam Book written by vittal Rao Bookreview by Pavannan. நூல் மதிப்புரை – விட்டல்ராவின் ஓர் அன்னாடு காச்சியின் சேலம் – பாவண்ணன்

நூல் மதிப்புரை – விட்டல்ராவின் ஓர் அன்னாடு காச்சியின் சேலம் – பாவண்ணன்




நம் நாடு விடுதலையடைந்து எழுபத்தைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. நம் நகரங்களும் கிராமங்களும் அப்போது இருந்ததைவிட இன்று பல மாற்றங்களுடன் வளர்ந்துவிட்டன. நம் வாழ்க்கைச்சூழலிலும் கருத்துநிலைகளிலும் கூட பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. இரண்டு மூன்று தலைமுறைக்கு முந்தைய புகைப்படத் தொகுப்பையோ அல்லது பழைய நாட்குறிப்பையோ அல்லது பழைய புத்தகத்தையோ பார்க்கும்போது, அந்த மாற்றங்கள் துல்லியமாகப் புலப்படுவதை உணரலாம்.

இன்று பெருநகர மாநகராட்சியாக உயர்த்தப்பட்டிருக்கும் நகரம் சேலம் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகியவற்றின் தொடர்ச்சியாக ஐந்தாவது இடத்தில் அமைந்திருக்கும் முக்கியமான நகரம். இது சேர்வராயன் மலைத்தொடரை ஒட்டி அமைந்துள்ளது. சேர + அரையன் என்பதன் திரிபே சேர்வராயன் ஆகும். அரையன் என்பதற்கு அரசன் என்று பொருள். ஏத்தாப்பூரில் கண்டெடுக்கப்பட்ட செப்பேட்டில் இந்த நகரம் சாலிய சேரமண்டலம்  என்றே குறிப்பிடுகிறது. தொடக்கத்தில் மதுரை நாயக்கர்களின் கட்டுப்பாட்டில் இருந்து, பிறகு மதுரைக்கும்  மைசூருக்கும் இடையில் நடைபெற்ற போரைத் தொடர்ந்து ஹைதர் அலியின் கட்டுப்பாட்டுக்குச் சென்று, இறுதியாக கிளைவ்  காலத்தில் ஆங்கிலேயர் வசமாகிவிட்டது. அவர்கள் அந்த நகரத்தில் கோட்டை கட்டி இராணுவத்தளமாக மாற்றிக்கொண்டனர். 

பொதுவாக ஒரு நகரத்தின் கதையைச் சொல்பவர்கள் இப்படி வரலாற்றுத் தரவுகளை இணைத்தும் தொகுத்தும் சொல்வதுதான் வழக்கம். ஒரு நகரத்தின் வரலாற்றைப் புறவயமாகப் புரிந்துகொள்ள அது ஒரு வழிமுறை. எளிய நகர மனிதர்களின் அன்றாட வாழ்க்கைச்சித்திரங்கள் வழியாகப் பார்ப்பது இன்னொரு வழிமுறை. ஆய்வாளர்கள் முதல் வழிமுறையைப் பின்பற்றும்போது, எழுத்தாளர்களுக்கு இரண்டாவது வழிமுறை உகந்ததாக உள்ளது. எழுத்தாளர்கள் தீட்டிக் காட்டும் மனிதர்கள் இப்போது மறைந்துபோயிருக்கலாம். அந்த இடங்களும் உருமாறிப் போயிருக்கலாம். அந்த வாழ்க்கை முறையே வழக்கொழிந்துபோயிருக்கலாம். ஆனால் எழுத்தாளனின் ஆவணத்தில் அவர்கள் இடம்பெற்றவுடன் அவர்கள் காலத்தின் அடையாளமாக மாறிவிடுகிறார்கள். 

விட்டல்ராவ் புதிதாக எழுதி சந்தியா பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் ஓர் அன்னாடுகாச்சியின் சேலம் புத்தகத்தை தாராளமாக நாம் ஒரு சமூக ஆவணமாக எடுத்துக்கொள்ளலாம். நாற்பதுகளை ஒட்டிய சேலத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை நாம் இந்தப் புத்தகத்தில் காணமுடியும். ஏராளமான எளியவர்களின் வாழ்க்கைச்சித்திரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. பல இடங்களில் ஒரு சிறுவனாக அன்று தான் கண்ட மனிதர்களையும் காட்சிகளையும் ஒரு புனைகதைக்கே உரிய மொழியில் அழகாகச் சித்தரித்துள்ளார் விட்டல்ராவ்.  இந்தப்  பார்வைக்கோணம் இந்தப் புத்தகத்துக்கு ஒருவித தனித்துவத்தை அளிக்கிறது. ஒரு பக்கம் அவருடைய தன்வரலாற்றின் சித்திரங்களையும் இன்னொரு பக்கம் நகரம் சார்ந்த கதைகளையும் நம்மால் பார்க்கமுடிகிறது. 

இடமாற்றம் தொடர்பான அரசு ஆணை காரணமாக மனைவி, பிள்ளைகளோடு சேலத்துக்கு வருகிறார் ஒருவர். சேலம் அக்குடும்பத்துக்கு முற்றிலும் புதிய நகரம். அலுவலக வழியில் அறிமுகமான ஒரே ஒரு நண்பர் மட்டுமே சேலத்தில் அவருக்குத் தெரிந்த ஒரே முகம். அவர் ஊட்டிய தைரியத்தில்தான் அக்குடும்பம் சேலத்துக்கு வந்து சேர்கிறது. அப்போது சேலத்தில் பெரிய சத்திரங்கள் உள்ளன. நாள் ஒன்றுக்கு எட்டணா வாடகைக்கு அங்கு அறைகள் கிடைக்கின்றன. தொடக்கத்தில் அந்தச் சத்திரத்தில் சில நாட்கள் தங்கியிருக்க ஏற்பாடு செய்கிறார்  நண்பர். பிற்பாடு ஊருக்குள் வாடகைக்கு வீடு கிடைத்ததும் குடும்பம் அங்கே குடிபோகிறது. ஏற்கனவே ஒரு கோவில் வழிபாட்டுக்காக அப்படி வந்து சத்திரத்தில் தங்கிச் சென்ற அனுபவம் இருந்ததால் அந்தக் குடும்பம் தைரியமாக சேலத்துக்கு வந்து சேர்கிறது. அந்தக் குடும்பத்தில் பள்ளிக்கூடம் செல்லும் சிறுவனொருவன் இருக்கிறான். அவன் பார்வை வழியாகவே சேலம் அனுபவங்கள் சித்தரிக்கப்படுகின்றன. மலை, கோவில், கடைத்தெரு, திரையரங்குகள், தெருக்கள் திருவிழா அனைத்தும் அச்சிறுவனின் நினைவுத்தொகுப்பாக உள்ளன. 

ஒரு காலத்தில் நகரத்தின் மையத்தில் ரயில் தண்டவாளப்பாதைகள் சாலையின் குறுக்கே சென்றன. ரயில்கள் நகரத்துக்குள் வரும்போதும் நகரைவிட்டுச் செல்லும்போதும் சாலை மூடப்படுவதால் ஒவ்வொர் நாளும் இரு பக்கங்களிலும் வாகனங்கள் முன்னேறிச் செல்லமுடியாமல் நின்று தடுமாறின.  போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக தண்டவாளப்பாதைகளின் மேல் ஒரு மேம்பாலம் கட்டப்பட்டது. வாகனங்கள் பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்தது. ஆனால் நடந்து செல்லும் மனிதர்களுக்கு புதிதாக பிரச்சினை உருவானது. ஒவ்வொரு முறையும் அவர்கள் ஏறி இறங்கவேண்டியிருந்தது. விளையாட்டாகவும் வேதனயோடும் அவர்கள் அந்தப் பாலத்தை ‘ஏத்துமதி இறக்குமதி’ என்ற சொல்லால் குறிப்பிடத் தொடங்கினார்கள். கசப்பை வெளிப்படுத்த பயன்படுத்தப்பட்ட அச்சொல் மெல்ல மெல்ல மக்களிடையில் வேகமாகப் பரவி அந்த அடைமொழியே அந்த இடத்துக்குரிய அடையாளமாக மாறிவிட்டது. “ஏத்துமதி எறக்குமதிகிட்ட வந்து நில்லு” “ஏத்துமதி எறக்குமதிகிட்ட வண்டிய நிறுத்து” என்று சொல்லும் அளவுக்கு அனைவருடைய நாவிலும் படிந்து ஒரு வரலாற்றுச் சொல்லாகிவிட்டது.

இன்னொரு சம்பவம். திருவிழாவுக்குச் சென்ற குடும்பம் கோயிலிலிருந்து வீட்டுக்கு குதிரைவண்டியில் திரும்பிவருகிறது. வண்டிக்குள் ஏறியவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால், வண்டிக்காரரால் வண்டியைச் சரியாக ஓட்டமுடியவில்லை. முன்பாரம் அதிகமாக இருக்கும்போது பின்னால் செல்லும்படியும் பின்பாரம் அதிகமாக இருக்கும்போது முன்பக்கம் நகரும்படியும்  மாறிமாறிச் சொல்லிக்கொண்டே வண்டியை ஓட்டுகிறார் வண்டிக்காரர்.  பிரயாணிகளும் அதற்கு இசைவாக மாறிமாறி உட்கார்கிறார்கள். அவர்களும் வண்டியில் ஏறி அனுபவம் இல்லாதவர்கள். இருப்பினும் ஒரு கட்டத்தில் வண்டிக்காரரின் கட்டுப்பாட்டை மீறி வண்டி குடைசாய்ந்துவிடுகிறது. பயணிகள் கீழே விழுந்துவிடுகிறார்கள். ஒரு கதைத்துணுக்கு போல சித்தரிக்கப்பட்டிருக்கும் இக்காட்சி நாற்பதுகளுக்கே உரிய சித்திரம்.

திருவிழாவையும் பொருட்காட்சியையும் முன்னிட்டு ஊருக்கு வரும் சர்க்கஸ் ஊர் மைதானத்தில் முகாமிடுகிறது. ஊருக்குள் சர்க்கஸ் நடக்கப் போகிறது என்பதை ஊர்மக்கள் அறிந்துகொள்ளும் விதமாக விலங்குகளை ஏற்றிய வண்டிகளை ஊரின் முக்கியத் தெருக்கள் வழியாக ஓட்டிச் செல்கிறார்கள். யானைகளும் குதிரைகளும் நடந்துவருகின்றன. சர்க்கஸ் ஊழியர்கள் தனியாக வண்டியில் பொதுமக்களைப் பார்த்து கையசைத்தபடி வருகிறார்கள். இந்திப்பாடலையும் மேனாட்டு இசைப்பாடலையும் பாடியபடி சர்க்கஸ் பேண்ட் குழுவும் வருகிறது. சர்க்கஸ் குள்ளர்களும் பஃபூன்களும் ஆரவாரத்தோடு பாட்டுப் பாடியபடி வருகிறார்கள். விசித்திரமான அமைப்பிலிருக்கும் பலவண்ணக் குல்லாய்களை அவர்கள் அணிந்திருக்கிறார்கள். பின்னாலேயே ஓடிவரும் சிறுவர்களை ஈர்க்கும் வகையில் அவர்கள் பாடுகிறார்கள்.

அப்பாடல் வரிகளை மனப்பாடம் செய்து பிள்ளைகளும் குதித்துக்கொண்டே திரும்பப் பாடுகிறார்கள். ‘ஒத்தைக்குல்லா சந்திலே ரெட்டைக்குல்லா முக்கிலோ சேலம் சிவப்பு, செவ்வாப்பேட்டை கருப்பு, ஒடைச்சா பருப்பு, தின்னா கசப்பு’ என்னும் பாடல் அவர்கள் நடந்து செல்லும்  திசையிலெல்லாம் ஒலிக்கிறது. ஊரே திரண்டு சர்க்கஸ் பார்க்கப் போகிறது. சர்க்கஸ் முடிந்ததும் மக்கள் வெளியேறும் சமயத்தில் ஒரு புதுவிதமான இசை ஒலிக்கிறது. ”கதம் கதம் படாயே ஜா, படாயே ஜா குஷி கெ கீதெ காயா ஜா காயா ஜா” என்ற வித்தியாசமான இசை அனைவரையும் ஈர்க்கிறது. அனைவரும் அப்பாடலை ஆர்வத்துடன் நின்று கேட்கிறார்கள். பாடல் விவரங்கள் பற்றித் தெரியாதவர்களுக்கு தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். நேதாஜியின் இந்தியன் நேஷனல் ஆர்மியின் நடைப்பயிற்சிக்குரிய பாட்டு அது. நேதாஜியின் ராணுவப்பாடல் இங்கேயும் பொதுமக்கள் கேட்கும் வகையில் பாடப்பட்டது என்பதற்கு விட்டல்ராவ் சித்தரித்திருக்கும் இக்காட்சியே ஒரு வரலாற்றுச் சான்று.

சுதந்திரத்துக்குப் பிறகு நெசவாளர்கள் வாழ்க்கையை வறுமை சூழ்ந்தது. நெசவுக்குத் தேவையான நூல் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. நெய்த துணிகள் விற்பனையாகவில்லை. கூலிக்கு நெய்வதற்குக் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. குடும்பம் குடும்பமாக நெசவாளர்கள் கிராமங்களை விட்டு வெளியேறி சேலத்தை நோக்கி வந்தனர். கஞ்சிக்காக பாத்திரம் ஏந்தி வீடு வீடாகச் செல்லும் நிலை உருவானது. இளம்வயதில் தன் வீட்டைத் தேடி வந்த ஒரு நெசவாளர் குடும்பத்தைப்பற்றிய உருக்கமான சித்திரமொன்றை விட்டல்ராவ் ஒரு கட்டுரையில் தீட்டியிருக்கிறார்.

வாசலில் வந்து நின்ற குடும்பம் வயிற்றையும் பச்சைக்குழந்தையையும் தொட்டுக் காட்டி உதவி கேட்கிறது. ”எங்க குடும்பத்திலயும் ஏழு பசங்க இருக்குது. நாங்களும் கஷ்டத்திலதான் இருக்கிறோம்” என்று தெரிவிக்கிறார் அம்மா. ”வடிச்ச கஞ்சியாவது குடு தாயி” என்று கேட்டு வாங்கிக் கொள்கிறார்கள் அவர்கள். தொடர்ந்து அன்று இரவு திண்ணையில் படுத்துறங்க அனுமதி கேட்கிறார்கள். அக்கா அதை அனுமதிக்காமல் அனுப்பிவிட முயற்சி செய்கிறாள். ஆனால் அப்பா குறுக்கிட்டு அக்காவைத் தடுக்கிறார். தங்கிக்கொள்ள அனுமதி கொடுக்கிறார். ஓர் அலுமினியப் பாத்திரத்தில் தண்ணீரும் குவளையும் கொண்டுவந்து அவர்கள் அருகில் வைத்துவிட்டுச் செல்கிறார். அக்காவுக்கு அதில் உடன்பாடில்லை.

அவர்கள் இரவோடு இரவாக எடுத்துக்கொண்டு சென்றுவிடக் கூடும் என்று அக்கா விவாதிக்கிறாள். யாரையும் அப்படி அவநம்பிக்கையுடன் பார்க்கக் கூடாது எனு எடுத்துச் சொல்கிறார் அப்பா. பஞ்சத்தின் காரணமாகத்தான் அவர்கள் வீதிக்கு வந்திருக்கிறார்களே தவிர, அவர்கள் எப்பொருளையும் எடுத்துச் செல்லும் பழக்கமுள்ளவர்கள் இல்லை என்று அவளுக்குப் புரியும் வகையில் எடுத்துச் சொல்கிறார். விடிந்ததும் குடும்பமே எழுந்துவந்து வாசல் திண்ணையைப் பார்க்கிறது. வந்தவர்கள் திண்ணையில் இல்லை. காலையிலேயே எழுந்து சென்றுவிட்டார்கள். அந்தத் தண்ணீர்ச் செம்பும் குவளையும் கூட வைத்த இடத்தில் வைத்த நிலையிலேயே இருக்கிறது. ஒருவாய் தண்ணீர் கூட அந்தச் செம்பிலிருந்து யாரும் எடுத்துப் பருகவில்லை. அக்காட்சியைப் படிக்கும்போது மனம் கரைந்துபோகிறது.

சேலத்தில் ஓரியண்டல் தியேட்டரும் நியூ சினிமா தியேட்டரும் அந்தக் காலத்தில் மிகப்பெரிய திரையரங்குகள். நூறு நாள் ஓடிய பல சாதனைப்படங்கள் அந்தத் தியேட்டர்களில் திரையிடப்பட்டிருக்கின்றன. இப்போது இரண்டு அரங்குகளும் இல்லை. எப்போதோ இடிக்கப்பட்டு வணிகவளாகங்களாக மாறிவிட்டன.

ஹிண்டு மாடர்ன் கஃபேயும் தேவபிரகாஷ் விடுதியும் நாற்பதுகளில் சேலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த இடங்கள். இவையிரண்டும் ராகவேந்திர ராவ் என்ற எளிய மனிதர் உருவாக்கியவை. ஒரு சமூக நாவலைப்போன்ற அவருடைய வாழ்க்கைச்சம்பவங்கள் படித்த கணத்திலேயே நெஞ்சில் இடம்பிடித்துவிட்டன. மூத்த மகனுக்கு தான் நடத்திய ஓட்டலை அளிக்கும் தந்தையார் இளையமகனான ராகவேந்திர ராவிடம் ஐயாயிரம் ரூபாய் மட்டும் கொடுத்து பிழைக்க வழி தேடிக்கொள்ளும்படி அனுப்பிவைத்துவிட்டார். பம்பாய் பக்கம் சென்ற ராவ் சில ஆண்டுகள் பல இடங்களில் அலைந்து பலவிதமான இனிப்பு வகைகளையும் தோசை வகைகளையும் செய்வதற்குக் கற்றுத் தேர்ந்து சிறந்த சமையல்கலைஞராக உருவானார். 

உடனே சேலத்துக்குத் திரும்பி கையிலிருக்கும் பணத்தை முதலீடாகப் போட்டு சின்ன ஓட்டலொன்றை முதலில் தொடங்கினார். முதலாளியாகவும் தொழிலாளியாகவும் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தார். அவர் கடையின் சிற்றுண்டிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஏராளமான வாடிக்கையாளர்கள் தாமாகவே அமைந்தார்கள். வருமானம் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருகியது.  அடுத்த நடவடிக்கையாக அவர் நகரத்திலேயே ஒரு நல்ல இடத்தைப் பார்த்து புதிதாக வேறொரு ஓட்டலைத் தொடங்கினார். சிறிது காலத்துக்குப் பிறகு, ஓட்டலுக்குப் பக்கத்தில் கோயம்பத்தூர் லாட்ஜை போக்கியத்துக்கு எடுத்து நடத்தும் வாய்ப்பு கிடைத்தது. உடனே அதை எடுத்து ’ஹிண்டு மாடர்ன் கஃபே’ என்று பெயர் மாற்றி வெற்றிகரமாக நடத்தினார். போர்டிங் அண்ட் லாட்ஜிங் அவருக்கு நல்ல பெயரையும் லாபத்தையும் சம்பாதித்துக்கொடுத்தது. மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் நடிக்க வந்த நடிகநடிகையர் அனைவரும் அங்கேயே தங்கியதால் விரைவிலேயே பிரபலமானது. 

பக்கத்தில் விற்பனைக்கு வந்த இடத்தை வாங்கி புதியதொரு கட்டடத்தை சொந்தமாகவே கட்டியெழுப்பி விடுதியை அங்கே மாற்றினார். அவர் வருமானம் பெருகிக்கொண்டே சென்றது. உடனே திரைப்படங்களை வாங்கி விநியோகிக்கும் நிறுவனத்தைத் தொடங்கினார். குளிர்சாதன வசதியோடு தேவபிரகாஷ் என்னும் விடுதியை உருவாக்கி அதையும் வெற்றிகரமாக நடத்தினார். செர்ரி ரோடில் அவர் வாழ்ந்த இடத்துக்கு அவர் பெயரே பெரிய அடையாளமாக மாறியது. தொடங்கியதில் இருந்து ஏறுமுகமாக அமைந்த அவருடைய வாழ்க்கை ஒரு தொன்மக்கதையைப்போல அமைந்திருக்கிறது. ஓர் எளிய மனிதன் வசதி மிக்க ஆளுமையாக வளர்ச்சி பெற்று ஒரு நகரத்தின் முகமாக மாறுவது என்பது சாதாரண விஷயமல்ல.

செவ்வாய்ப்பேட்டையில் செளராஷ்டிர மொழியைப் பேசும் நெசவாளர்கள் ஆண்டுதோறும் நடத்திய இசைவிழா, அங்கு நடைபெற்ற நாமகிரிப்பேட்டை கிருஷ்ணனின் நாதசுரக்கச்சேரி, சேலம் ஜெயலட்சுமியின் தமிழிசைக்கச்சேரி, பித்துக்குளி முருகதாஸின் பஜனையிசை ஆகிய செய்திகளைப் படிக்கும்போது, அவரோடு சேர்ந்து நாமும் அந்த இசையரங்கின் வாசலில் நிற்பதைப்போலவே உள்ளது. ஊற்றுப்பேனா பழுது பார்ப்பவர்களைப் பற்றிய பகுதியைப் படிக்கும்போது, ஊற்றுப்பேனாவே வழக்கொழிந்துவிட்ட இக்காலத்தில் ஒருவித நினைவேக்கத்தை எழுப்புகிறது. ஒருவகையில் இத்தொகுதியில் உள்ள பன்னிரண்டு கட்டுரைகளையும் சேலம்வாழ் நினைவுகள் என்று குறிப்பிடலாம். மனிதர்களைப் பேசுவதன் வழியாக இத்தொகுதி நகரத்தைப்பற்றிப் பேசுகிறது. 

நூல்: ஓர் அன்னாடு காச்சியின் சேலம்
ஆசிரியர்: விட்டல்ராவ்
வெளியீடு: சந்தியா பதிப்பகம்
விலை. ரூ.150

Era Narumpoonathan's book Tirunelveli Neer Nilam Manithargal book review by Pavannan. இரா.நாறும்பூநாதனின் திருநெல்வேலி நீர் நிலம் மனிதர்கள் - பாவண்ணன்

நூல் அறிமுகம்: இரா.நாறும்பூநாதனின் திருநெல்வேலி நீர் நிலம் மனிதர்கள் – பாவண்ணன்



மனிதர்களின் சித்திரத்தொகுப்பு

ஒரு தொன்மக்கதை. முன்னொரு காலத்தில் ஒரு சிற்பி வாழ்ந்துவந்தார். வளர்ந்து இளைஞனான அவருடைய மகன் எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர்சுற்றித் திரிவது அவருக்குப் பிடிக்கவில்லை. ஒருநாள் கடுமையான சொற்களால் அவனைக் கண்டித்தபோது, இளைஞன் வீட்டைவிட்டு வெளியேறிவிடுகிறார். ஏதோ ஆத்திரத்தில் அவனை வெளியேற்றிவிட்டாலும் அவருடைய மனம் அவனை எண்ணி உருகியபடியே இருக்கிறது. அவன் பிரிந்துசென்ற துயரத்தை நெஞ்சில்
சுமந்தபடி அலைந்த அவருக்கு சிற்பவேலைகளில் ஓய்வின்றி ஈடுபடுவது மட்டுமே ஆறுதலளிப்பதாக உள்ளது.

காலம் உருண்டோடினாலும் அவருடைய துயரம் கரையவில்லை. ஒருநாள் அந்த ஊரின் ஒதுக்குப்புறத்தில் இருக்கும் ஒரு குன்றில் சிற்பங்களைச் செதுக்கத் தொடங்குகிறார். அதே சமயத்தில் அந்தக் குன்றின் பள்ளத்தாக்கில் தாழ்வான பகுதியில் வேறொரு சிற்பியும் ஒரு சிற்பத்தைச் செதுக்கிக் கொண்டிருக்கிறான். ஒருவர் செதுக்குவதை இன்னொருவர் உணராமலேயே சிற்பங்கள் வளர்ந்துவருகின்றன. ஒருநாள் மூத்த சிற்பி இளைப்பாறுவதற்காக செதுக்கும் வேலையை நிறுத்திவிட்டு வெற்றிலை போட மரத்தடியில் அமர்கிறார். அப்போதுதான் கீழேயிருந்து உளிச்சத்தம் எழுவதை அவர் மனம் அறிகிறது. உடனே வேகவேகமாக பள்ளத்தாக்கில் இறங்கி சத்தம் வந்த திசையை நோக்கி நடக்கிறார். தனக்குத் தெரியாமல் தான் சிற்பம் செதுக்கும் பகுதியில் தன்னைச் சீண்டுவதற்காகவே யாரோ ஒருவர் வந்து சிற்பம் செதுக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார் என்ற எண்ணத்தால் அவர் நடை விசைகொண்டதாக மாறுகிறது.

அருகில் நெருங்கி ஆள் நின்றிருப்பதை உறுதிசெய்துகொண்ட கணத்திலேயே, அவன் யார் என்று தெரிந்துகொள்ளக்கூட முயற்சி செய்யாமல் கையில் இருந்த உளியை அவனை நோக்கி வீசுகிறார். அது அந்த இளைய சிற்பியின் கழுத்தில் ஆழமாக இறங்கிவிட, அக்கணமே அவன் அப்பா என்ற அலறலோடு கீழே சாய்கிறான். அப்போதுதான் அவன் முகத்தை அவர் பார்க்கிறார். அவன் சில ஆண்டுகளுக்கு முன்பாக வீட்டைவிட்டு வெளியேறிச் சென்ற தன் மகனே அந்த இளைய சிற்பி என்பதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்து புலம்பத் தொடங்குகிறார். அவன் அங்கே செதுக்கிவைத்த ஒற்றைக்கல் கோபுரத்தையும் சிற்பங்களையும் பார்த்து திகைத்து நின்றுவிடுகிறார். எவ்வளவு பெரிய தவறை இழைத்துவிட்டோம் என நினைத்து உருகி உருகி அழுகிறார். திருநெல்வேலிச் சீமையில் கழுகுமலையை ஒட்டியிருக்கும் வெட்டுவான்கோவில் குன்றோரத்தில் காணப்படும் முற்றுப்பெறாத சிற்பத்துக்குப் பின்னணியில் இந்தத் துயரமான அப்பா-மகன் கதை மறைந்துள்ளது.

ஒரு வரலாற்றுச் செய்தி. அருட்பணியாற்றுவதற்காக லண்டனிலிருந்து 1843இல் நெல்லைச்சீமைக்கு வந்த மருத்துவர் ஒருவர் ஊரிலிருக்கும் தன் இளைய சகோதரிக்கு எழுதிய கடிதத்தில் நெல்லைவாழ் பெண்களின் நிலையைப்பற்றி ஆதங்கத்துடன் சில தகவல்களைத் தெரிவிக்கிறார். படிப்பறிவில்லாதவர்களாக அவர்கள் வாழ்வதைப் பார்த்த தன் துயரத்தை சகோதரியுடன் பகிர்ந்துகொள்கிறார். அந்தச் சகோதரியின் பெயர் சாராள் டக்கர். அந்த மருத்துவரின் பெயர் ஜான் டக்கர்.

மாற்றுத்திறனாளியான அச்சகோதரி ஒரு பள்ளி மாணவி. இந்தியாவில் பெண்கள் கல்வியறிவில்லாதவர்களாக இருக்கிறார்கள் என்னும் செய்தியே அவளைத் திகைக்கவைக்கிறது. அவள் மனம் அக்கணமே நெல்லைச்சீமையில் பெண்களுக்காகவே ஒரு பள்ளியைத் தொடங்கவேண்டும் என்று உறுதிகொள்கிறது. அவளும் அவள் தோழிகளும் சேர்ந்து இருபது சவரன் தங்கத்தைத் திரட்டி நன்கொடையாக இந்தியாவுக்கு அனுப்பிவைக்கிறார்கள். அந்தத் தொகையை மூலதனமாகக் கொண்டு மருத்துவர் அந்த ஊரில் சிறுமிகள் படிக்கும் வகையில் ஒரு பள்ளியைத் தொடங்குகிறார்.

பதின்மூன்று ஆண்டுகள் மட்டுமே அந்தப் பள்ளி இயங்கியது. பிறகு போதிய பணவசதியின்றி அதை மூடவேண்டிய நிலை உருவானது. தன் சகோதரரின் கடிதம் சுமந்துவந்த அச்செய்தியைப் படித்துவிட்டு சாராள் டக்கர் வேதனையில் மூழ்குகிறாள். எதிர்பாராத உடல்நலக்குறைவால் அவளும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த சமயம் அது. இந்தியா என்னும் பெயரை வரைபடத்தில் பார்த்ததைத்தவிர, இந்தியாவைப்பற்றி வேறு எந்தச் செய்தியும் அறியாத அந்த இளம்பெண்ணின் மனம் மூடப்பட்ட அந்தப் பள்ளியை எப்படியாவது தொடர்ந்து நடத்தவேண்டும் என்று தவியாய்த்தவிக்கிறது. அந்தத் தவிப்பிலேயே அவள் உயிர் பிரிந்துவிடுகிறது.

அவள் அடக்கம் செய்யப்படும் நாளில் அவளுடைய தோழிகளும் இரு மூத்த சகோதரிகளும் சாராளின் பள்ளிக்கனவை நிறைவேற்றுவதாக உறுதிமொழி எடுக்கிறார்கள். நகர் முழுதும் அலைந்து பலரைச் சந்தித்து நிதி திரட்டுகிறார்கள். ஏறத்தாழ எண்ணூறு பவுனுக்கு மேல் திரண்டுவிட்ட நிதியை இந்தியாவுக்கு அனுப்பிவைக்கிறார்கள். 1861இல் பள்ளிக்காக நிலம் வாங்கப்பட்டு கட்டுமான வேலை தொடங்கியது. சாராள் டக்கர் பெயரிலேயே முதலில் தொடக்கப்பள்ளி உருவானது. முப்பதாண்டு வளர்ச்சிக்குப் பிறகு அது உயர்நிலைப்பள்ளியாக வளர்ந்தது. அடுத்த ஐந்தே ஆண்டுகளில் அது கல்லூரியாகவும் வளர்ந்தது. தென்னிந்தியாவிலேயே பெண்களுக்காக முதன்முதலாக ஒரு கல்வி நிலையம் நெல்லைச்சீமையில் உருவான வரலாற்றின் பின்னணியில் சாராள் டக்கரின் கருணையும் தியாகமும் கரைந்துள்ளன.

அந்தப் பள்ளியின் முதல்வராக பணிபுரிந்தவர் ஆஸ்க்வித் என்னும் அருட்பணியாளர். ஒருநாள் பள்ளிக்கூட வளாகத்தின் பக்கம் தட்டுத்தடுமாறி வந்து நின்று வேலை கேட்டுக் கெஞ்சிய பார்வையற்ற சிறுவனுக்கு அவர் அடைக்கலம் அளிக்கிறார். அச்சிறுவனுக்கு கல்வியின் மீது இருக்கும் ஆர்வம் அவருக்கு புதுமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. பார்வையில்லாதவனுக்கு எப்படி கல்வியை அளிப்பது என்ற யோசனையில் மூழ்கிவிடுகிறார். இதற்காகவே அவர் லண்டனுக்குச் செல்கிறார். மூன் என்னும் மருத்துவருடன் இணைந்து புதிய எழுத்து முறைகளை உருவாக்குகிறார். இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து உழைத்த பிறகு அவருடைய முயற்சிக்கு வெற்றி கிடைக்கிறது. சாராள் டக்கர் கல்வி நிலைய வளாகத்திலேயே பார்வையற்றோர் பள்ளியை அவர் உருவாக்குகிறார். அப்பள்ளியின் உருவாக்கத்துக்குக் காரணமான சிறுவன் அப்பள்ளியில் படித்து, வளர்ந்து பட்டம் பெற்று அதே பள்ளியில் ஆசிரியராகவும் பணிபுரிந்து சேவையாற்றினார்.

மற்றொரு வரலாற்றுச் செய்தி. தஞ்சையில் வாழ்ந்த மராட்டிய பிராமண வகுப்பைச் சேர்ந்த இளம்பெண் கோகிலா. அந்த ஊர் திவானின் மனைவி. குடும்ப வழக்கப்படி கணவன் மறைந்ததும் அவளை உடன்கட்டை ஏறுவதற்குச் சம்மதிக்கவைத்துவிடுகிறார்கள் அவள் உறவினர்கள். குழந்தைப்பருவத்திலிருந்து அவளை வளர்த்த பெண்மணி, அந்த வட்டாரத்தைச் சேர்ந்த லிட்டில்டன் என்னும் ஆங்கிலேய அதிகாரியைச் சந்தித்து புகாரளித்து கோகிலாவைக் காப்பாற்றும்படி கேட்டுக்கொள்கிறாள். உடன்கட்டைக்கு ஏற்பாடுகள் நடைபெறும் இடத்துக்கு விரைந்து சென்ற லிட்டில்டன் சின்னச்சின்ன தீக்காயங்களோடு அவளைக் காப்பாற்றிவிடுகிறார். பிறகு தன் மாளிக்கைக்கே அவளை அழைத்துச் சென்று தக்க மருத்துவ வசதிகளுக்கு ஏற்பாடு செய்து பிழைக்கவைக்கிறார். தனிவீட்டில் கோகிலாவைத் தங்கவைத்து பாதுகாப்பளித்த லிட்டில்டன் அவளுக்கு ஆங்கிலத்தைக் கற்பிக்கிறார். அவளிடமிருந்து அவர் சமஸ்கிருதம் கற்றுக்கொள்கிறார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சையிலிருந்து நெல்லைக்கு மாற்றலாகி புறப்படும்போது கோகிலாவையும் தன்னோடு அழைத்துக்கொண்டு வருகிறார் லிட்டில்டன். அவர்கள் இருவரும் சேர்ந்து வாழத் தொடங்குகிறார்கள். அங்கே அவருக்குப் புதிய வாழ்க்கை தொடங்குகிறது. கோகிலா என்ற பெயரை கிளாரிந்தா என்று மாற்றிக்கொள்கிறார். அந்த வட்டாரத்தைச் சேர்ந்த சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் கல்வியறிவைப் புகட்டுவதற்காக முதலில் அவர் தன் பெயரிலேயே ஒரு பள்ளியை உருவாக்குகிறார். பிராட்டஸ்டண்டு சித்தாந்தங்களை நன்கு கற்றறிந்த அவர் 1783இல் ஒரு அழகான தேவாலயத்தைக் கட்டத் தொடங்கி இரண்டாண்டுகளில் கட்டிமுடித்தார். பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பாளையங்கோட்டை தெற்குப் பகுதியில் இரு கிணறுகளை வெட்டினார்.

‘பாப்பாத்தியம்மாள் கிணறு’ என்ற அடைமொழியோடு அவை இன்றளவும் மக்கள் நாவில் திகழ்கின்றன. கால்டுவெல் தன் நூலில் அளித்துள்ள இந்தியக் கிறித்துவர்களின் பெயர்ப்பட்டியலில் முதல் பெயராக கிளாரிந்தாவின் பெயர் இடம்பெற்றிருக்கிறது. இன்னுமொரு வரலாற்றுச் செய்தி. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பாளையங்கோட்டை. ஒருபக்கமாகவும் திருநெல்வேலி மறுபக்கமாகவும் பிரிந்திருக்க இடையில் தாமிரபரணி நதி கரைபுரண்டு ஓடியது. ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குச் செல்ல மக்கள் பரிசில்களையே சார்ந்திருந்தனர். ஆனால் பரிசில் பயணம் அவ்வளவு எளிதானதாக இல்லை. உயர்சாதி மக்கள் அமர்ந்திருக்கும் பரிசிலில் தாழ்ந்த சாதி மக்களால் அமர்ந்து செல்லமுடியவில்லை. ஒவ்வொரு நாளும் தீராத சாதிச்சண்டைகள். அப்போது ஆட்சியராக இருந்தவர் தாம்சன் என்னும் ஆங்கிலேயர். அவருடைய அலுவலகத்தில் தலைமை எழுத்தராக இருந்தவர் சுலோச்சனா முதலியார். ஒவ்வொரு நாளும் அலுவலகத்துக்கு வந்து குவியும் புகார்களில் இந்தச் சாதிச்சண்டை புகார்களே அதிகம்.

இந்த மோதல்களுக்கு ஒரு முடிவை உருவாக்க நினைத்த ஆட்சியர் இரு கரைகளையும் இணைக்கும் வகையில் நீண்டதொரு பாலத்தைக் கட்டியெழுப்பும் திட்டத்தை வகுத்தார். பொருத்தமான பொறியாளரைக் கொண்டு திட்டத்தை நிறைவேற்றுவதற்கான செலவுத்தொகை கணக்கிடப்பட்டது. பொருத்தமான தீர்வைக் கண்டறிந்த ஆட்சியர் அச்செலவுத்தொகையை ஈட்டுவதற்கான வழியை மட்டும் பொருத்தமில்லாத வகையில் வகுத்தார். மக்கள் மீது புதிய வரிகளை விதித்து வசூலாகும் தொகையை வைத்து அச்செலவை ஈடுகட்ட நினைத்தார்.

முதலியாருக்கு அந்தத் திட்டம் ஏற்புடையதாகப் படவில்லை. அன்று இரவே தன் மனைவியிடம் இதைப்பற்றி உரையாடி மொத்த செலவையும் தானே ஏற்பதாகவும் அதற்காக தன் சொத்துகளை விற்றுத் தருவதாகவும் தெரிவித்தார். முதலியாரின் கருணையைக் கண்டு ஆட்சியர் மகிழ்ந்தார். பாலத்தின் கட்டுமானத்திட்டக் கோப்பைத் திறந்து, முதலியாரின் திட்டத்தை ஏற்பதாகவும் கட்டி முடிக்கப்பட்ட பிறகு அப்பாலத்துக்கு முதலியார் பெயரையே சூட்டவேண்டும் என்றும் குறிப்பெழுதி கையெழுத்திட்டார். பாலத்தை கட்டி முடித்த சமயத்தில் தாம்சன் இடமாற்றலில் வேறு ஊருக்குச் சென்றுவிட்டார். புதிய்வர் ஒருவர் பதவி ஏற்றிருந்தார். ஆயினும் தாம்சன் எழுதிய குறிப்பின்படியே பாலத்துக்கு சுலோச்சனா முதலியார் பாலம் என்றே பெயர்சூட்டப்பட்டது. இன்றளவும் பயன்பாட்டில் உள்ள அப்பாலம் ஒரு கோணத்தில் மாபெரும் கருணையின் அடையாளம். இன்னொரு கோணத்தில் அகற்றமுடியாத அளவுக்கு மனிதமனத்தில் மண்டிக்கிடக்கும் சாதியுணர்வை நினைவூட்டும் புள்ளி.

வாய்வழித் தகவல்களாகவும் நூல்வழித் தகவல்களாகவும் திரட்டப்பட்ட ஏராளமான வரலாற்றுச் செய்திகளை ஒருங்கே தொகுத்து நூலாக்கியிருக்கிறார் நாறும்பூநாதன். ’திருநெல்வேலி நீர் – நிலம் – மனிதர்கள்’ என பொருத்தமாகவே தலைப்பைச் சூட்டியிருக்கிறார். அந்தக் கால நெல்லைச்சீமையைப்பற்றிய சித்திரத்தை இந்த நூலை வாசித்த பிறகு நம்மால் உருவாக்கிக்கொள்ள முடியும்.

இந்தப் புத்தகத்தில் நாற்பத்தொன்று அத்தியாயங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு புனைகதையைப் படிக்கும் சுவாரசியத்துடன் அமைந்துள்ளது. எகிப்திலிருந்து மரக்கலங்கள் வழியாக கொச்சி துறைமுகத்துக்கு வந்து, அங்கிருந்து காயல்பட்டினத்தை நோக்கி நடைப்பயணமாகத் தொடங்கி தென்தமிழகத்துக்குள் இறங்கி, களைப்பின் காரணமாக தாமிரபரணிக் கரையோரமாக மங்காநல்லூரில் தங்கி, பிறகு அங்கேயே நிலைத்து வாழத் தொடங்கிய இஸ்லாமியர்களின் வாழ்க்கைவரலாற்றைப் படிக்கும்போது ஒரு நாவலின் சுருக்கத்தைப் படித்ததுபோல இருக்கிறது.

ஒரு அத்தியாயத்தில் வீடுகளை விற்றுவிட்டு பிழைப்பைத் தேடி வேறு ஊர்களுக்கு இடம்பெயர்ந்து செல்லும் இந்து குடும்பத்தினர் பற்றிய செய்தி இடம்பெற்றிருக்கிறது. அந்த வீடுகளை வாங்கிய இஸ்லாமிய மக்களிடம் தம்முடைய பகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலைப் பாதுகாக்கவேண்டும் என்னும் வாக்குறுதியை வாங்கிக்கொண்ட பிறகே அவர்கள் அங்கிருந்து வெளியேறுகிறார்கள். இன்றைய தலைமுறை வரைக்கும் இஸ்லாமியர் அந்த வாக்குறுதியைக் காப்பாற்றிவருகிறார்கள் என்னும் செய்தி நல்லிணக்கம் நாடும் மனத்துக்கு மிகவும் ஆறுதலாகவும் நம்பிக்கையின் அடையாளமாகவும் இருக்கிறது.

தனிமனிதர்கள் தன் நினைவுகள் வழியாக எழுதும் ஊர்வரலாறுகள் நெஞ்சுக்கு நெருக்கமாக உள்ளன. அது அவர்கள் அறிந்துவைத்திருக்கும் எண்ணற்ற மனிதர்களின் சித்திரத்தொகுப்பாக அமைந்திருப்பதுதான் முக்கியமான காரணம். நாறும்பூநாதன் எழுதியிருக்கும் திருநெல்வேலி வரலாறு நமக்குக் கிடைத்திருக்கும் அபூர்வச் சித்திரங்களின் தொகுப்பு. ஒரு படைப்பாளியின் மனம் இயங்கும் விதத்தை ஒருவராலும் அறுதியிட்டுச் சொல்லமுடியாது. அது ஒரு புயல்காற்று போல. தானாகவே உருவாகி, தானாகவே வீசி, தானாகவே அடங்கி ஓய்ந்துவிடும். சாத்தான்குளம் ராகவனுடைய புத்தகத்துக்கு இசக்கி அண்ணாச்சி அட்டைப்படம் வரைந்துகொடுத்ததைப்பற்றி இந்நூலில் இடம்பெற்றிருக்கும் சிறுகுறிப்பே இதற்குப் பொருத்தமான எடுத்துக்காட்டு. நாள்கணக்காக தாமதப்படுத்திய ஓர் ஓவியத்தை நள்ளிரவில் நாலுமணி நேரத்தில் வரைந்துமுடித்துக் கொடுத்து அனுப்பிவிடுகிறார் அண்ணாச்சி. அக்கணத்தில் எங்கிருந்தோ ஒரு ஆற்றல் அவருக்குள் செயற்பட்டு அவரிடமிருந்து விலகிச் சென்றுவிட்டது. அந்த ஆற்றலின் வருகைக்காகவே அவர் அத்தனை நாட்கள் காத்திருந்தார் போலும்.. இசக்கி அண்ணாச்சியை அன்று ஓவியம் தீட்டவைத்த அதே ஆற்றலே, ஏறத்தாழ முப்பதாண்டுகளுக்கு மேலாக நெல்லைச்சீமையைச் சுற்றிச்சுற்றி வந்த நாறும்பூநாதனை இந்த வரலாற்றை எழுத வைத்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

 திருநெல்வேலி நீர் – நிலம் – மனிதர்கள்
இரா.நாறும்பூநாதன்
சந்தியா பதிப்பகம்
53வது தெரு, 9வது அவென்யு
அசோக் நகர், சென்னை -83.
விலை ரூ.270

Books in my life by Pavannan book review by S.Jayasri பாவண்ணனின் என் வாழ்வில் புத்தகங்கள் நூல் அறிமுகம் எஸ்.ஜெய ஸ்ரீ

நூல் அறிமுகம்: பாவண்ணனின் என் வாழ்வில் புத்தகங்கள்- எஸ்.ஜெயஸ்ரீ



வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் புத்தகம்

இன்றைய சூழ்நிலையில் கல்விக்கூடம் என்பது மாணவமாணவிகளை வெறுமனே பாடங்களை உருவேற்றி மதிப்பெண் என்னும் சூழலுக்குள் தள்ளும் இடமாக மாறிவிட்டது. வாசித்தல் வகுப்பு, நூலக வகுப்பு என்பதெல்லாம் மலையேறிப் போய்விட்ட காலமாகிவிட்டது. கணினி யுகத்தில் கற்றுக்கொள்வதற்கும் தெரிந்துகொள்வதற்குமான வழிமுறைகள் கணக்கற்ற அளவில் பெருகிவிட்டன. டிஜிட்டல் வழியாகவே வாசிக்கும் வழக்கமும் வளர்ந்துவிட்டது. பல பக்கங்கள் உள்ள புத்தகங்களைக்கூட கைப்பேசியிலோ, கணினியிலோ, கிண்டில் எனப்படும் கைப்புத்தகத்தில் சேமித்துவைத்துக்கொண்டு வாசிக்கமுடிகிறது. ஆனால் புத்தகங்கள் கிடைப்பதே அரிதான ஒரு காலத்தில், கிடைத்தாலும் பணம் கொடுத்து வாங்கமுடியாத நெருக்கடியான சூழலில் புத்தகங்களைத் தேடித்தேடி வாசித்த இளமைக்காலத்து அனுபவங்களை நாமும் அறிந்துகொள்வதற்கு ஏதுவாக புத்தகமாக எழுதியிருக்கிறார் பாவண்ணன்.

என் வாழ்வில் புத்தகங்கள் என்ற பாவண்ணனின் சமீபத்திய புத்தகம் வழியாக, அவர் படித்துக் கடந்த பால்யகால நாட்களை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. வாசிப்பின் வளர்ச்சியும் ரசனையும் ஒருவரிடம் சி/றிய வயதிலிருந்து படிப்படியாக எப்படி அழகாக வளர்கிறது என்பதையும் உணர்த்துகிறது.

‘விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’ என்பது பழமொழி. பாவண்ணன் சிறந்த எழுத்தாளராகவும் தான் படித்த புதிய சிறந்த புத்தகங்களை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துபவராகவும் இருக்கிறார். ஒரு பாடகர் சிறந்த பாடகராக வேண்டுமெனில் நன்றாக சாதகம் செய்யவேண்டும். கைவேலையோ, கைத்தொழிலோ சிறப்பாகச் செய்யவேண்டுமெனில் அதில் நல்ல முறையான பயிற்சி வேண்டும். மண்பாண்டம் செய்வது அவ்வளவு எளிதல்ல என்பது, குயவரின் சுற்றும் சக்கரத்தில் கைவைத்துப் பார்த்தால்தான் தெரியும். இயற்கையிலேயே சில பண்புகளும் திறமைகளும் சிலரிடம் அமைந்துவிடுவதுண்டு. அதைக் கண்டறிந்து, ஊக்கமூட்டி, சரியாக முறைப்படுத்தி வழிநடத்த ஒரு குருவும் கிடைத்துவிட்டால் அது ஒருவர் பெற்ற நற்பேறு.

பாவண்ணனுக்கு இயல்பிலேயே படிக்கும் ஆர்வமும் எழுதும் ஆர்வமும் அமைந்துவிட்டிருக்கின்றன. அவற்றைத் தூண்டிவிட்டு ஒளிரச் செய்யும் ஆசிரியர்களும் நூலகர்களும் அவருடைய வாழ்வில் அமைந்திருக்கிறார்கள். அவர்களைப்பற்றிய அக்காலத்து நினைவுகளை இப்புத்தகத்தின் வழியாக பாவண்ணன் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார். நவநீதம் டீச்சர், கண்ணன், ராமனாதன், ரங்கநாதன் என பல ஆசிரியர்களைப்பற்றி நாமும் அறிந்துகொள்ள அவருடைய கட்டுரைகள் உதவியாக அமைந்துள்ளன. சிறுவனாக இருக்கும்போது படக்கதைகள், காமிக்ஸ் என்று ஆரம்பித்து அம்புலிமாமா, துப்பறியும் கதைகள் என வளர்ந்து சரித்திர நாவல்கள், மற்றைய இலக்கியங்கள் என அடுத்தடுத்து சுவை மாறுபட்டு வாசிக்கும் புள்ளியை வந்தடைந்த விதத்தை இயல்பாகவும் மிக அழகாகவும் இப்புத்தகத்தில் பாவண்ணன் பதிவு செய்திருக்கிறார்.

பள்ளிக்கூட ஆசிரியர்கள் பிள்ளைகளுக்கு கதைகளையும் பாட்டுகளையும் சொல்லி அவற்றில் ஆர்வத்தை வளர்த்தெடுத்திருக்கிறார்கள். மாணவர்களை தன்னம்பிக்கையுடன் பேச வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு அனுபவத்தையும் தனித்தனி காட்சியாக எழுதியிருக்கிறார் பாவண்ணன். ‘வாலு போச்சு, கத்தி வந்தது டும்டும்டும்’ என்ற பாடலை ஆசிரியர் வகுப்பில் சொல்லிக் கொடுத்தபோதே, அதை சுவாரசியமாகச் சொல்லித் தந்ததை பதிவு செய்திருக்கும் விதத்தைப் படிக்கும்போது, நாமும் அவரோடு வகுப்பில் சேர்ந்து உட்கார்ந்து படிக்கும் உணர்வும் குதூகலமும் தன்னிச்சையாக ஏற்படுகின்றன. அதுபோன்ற ஆசிரியர்களிடம் சென்று மீண்டும் படிக்கமாட்டோமா என்னும் ஏக்கத்தையும் ஏற்படுத்துகிறது.

எல்லாக் காலத்திலும் இலக்கணம் என்றாலே கசப்பாக உணர்பவர்களே மிகுதி. ஆனால் தளை பிரித்தல் என்னும் கடினமான இலக்கண வகையை தம் காலத்தில் ஆசிரியர் எவ்வளவு சுவைபட புரியவைத்தார் என்பதை பாவண்ணன் விவரித்திருப்பதைப் படிக்கும்போதே சுவையாக இருக்கிறது. ஒரு திரைப்படத்தின் பெயரைச் சொல்லவைத்து, அதைத் தளைபிரித்து புரியவைத்திருக்கிறார் ஆசிரியர். இப்படி புரியவைக்கப்படும் பாடங்களும் விஷயங்களும் எந்தக் காலத்திலும் மறந்துவிடாத அளவுக்கு நெஞ்சில் ஆழமாகப் பதிந்துவிடுவது இயற்கையே. இப்படியெல்லாம் பணியாற்றிய ஆசிரியர்களை நினைத்தாலே மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது.

ஒருமுறை பள்ளியில் நடைபெற்ற ஓவியப்போட்டியில் பாவண்ணனுக்கு பரிசு கிடைக்கிறது. அவரிடம் காணப்படும் ஓவியத்திறமையை அறிந்துகொண்ட ஓவிய ஆசிரியர் மேலும் மேலும் பல சுவடிகளை பாவண்ணனிடம் கொடுத்து வரைந்து பழக ஊக்கப்படுத்துகிறார். இப்படி ஒரு கட்டுரை நீண்டு செல்கிறது. ஒருமுறை பாவண்ணன் தான் எழுதிய கவிதையை தன்னுடைய ஆசிரியரிடம் காட்டுகிறார். அதைப் படித்த ஆசிரியர் அவருக்குள் முளைவிடும் எழுத்தார்வத்தைப் புரிந்துகொள்கிறார். தன் அறைக்கு வரவழைத்து பிழைகள் திருத்தி மேலும் எழுத ஊக்கப்படுத்துகிறார். இப்படி ஒரு கட்டுரை விரிந்துசெல்கிறது. புத்தகம் படிக்கும் ஆர்வம் இருப்பதை அறிந்துகொள்ளும் ஆசிரியர்கள், தம் வீட்டுக்கே வந்து புத்தகங்களைப் படிக்கவும், வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்க அனுமதித்தும் உற்சாகப்படுத்துகிறார்கள். இப்படியும் சில கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் ஒரு புதிய உலகத்தை அறிமுகம் செய்துகொண்ட விதத்தை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறது.

ஆசிரியர்கள் வழியாக புத்தகங்களைப்பற்றித் தெரிந்துகொண்டு, அவர்களுடைய வழிகாட்டலின்படி நூலகத்துக்குச் சென்று புத்தகம் படிக்கும் வழக்கத்தை வளர்த்துக்கொண்ட விதத்தை, இந்த நூல்முழுதும் சின்னச்சின்ன காட்சிச்சித்திரங்களாக வடித்திருக்கிறார் பாவண்ணன். அவர் குறிப்பிடும் நூலகரான பாண்டியன் அண்ணன் என்பவர்தான் எவ்வளவு அருமையான மனிதர். ஒரு சிறுவன் ஆர்வமாகப் படிக்கிறான் என்பதைத் தெரிந்துகொண்டு, அவன் வாசிக்க ஏற்ற வகையில் அடுத்தடுத்து நல்ல நூல்களை எடுத்துக்கொடுத்து படிக்க வைப்பதில் அவர் காட்டும் ஈடுபாடும் ஆர்வமும் மிகமுக்கியமானவை. ஒரு சிற்றூரில் இப்படிப்பட்ட எளிய வழிகாட்டல்கள் ஒருவருடைய வாழ்வில் மகத்தான மாற்றங்களையும் விளைவுகளையும் உருவாக்கும் தன்மையுடையவை என்பதற்கு பாவண்ணனின் புத்தகம் ஒரு சாட்சியாக விளங்குகிறது.

தம் வீட்டுக்கு அருகில் வசித்த அக்காமார்களைப்பற்றிய பாவண்ணனின் சித்தரிப்பு மனநெகிழ்ச்சியை அளிக்கிறது. அவர்கள் படிப்பார்வம் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். பள்ளிக்கூடங்களில் நன்றாகப் படிக்கிறார்கள். பத்திரிகைகளையும் புத்தகங்களையும் வாங்கி வரச் சொல்லி ஆர்வமுடன் படிக்கிறார்கள். திருமணம் முடிவானதுமே எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டு, புதிய வேறொரு ஆளாக புகுந்த வீட்டுக்குச் செல்லவேண்டிய நெருக்கடிக்கு ஆளாகிறார்கள். தாமாக எந்த முடிவையும் எடுக்கமுடியாத சூழலிலும் தமக்கென எந்த விருப்பத்தையும் சொந்தமாக வைத்துக்கொள்ள முடியாத சூழலிலும் வாழ்ந்த அக்காலத்துப் பெண்களின் வாழ்க்கையை ஒரு குறுக்குவெட்டுச் சித்திரமாக பாவண்ணனின் கட்டுரையில் காணமுடிகிறது. ஒரு காலகட்டத்துச் சூழலை உணர்த்தும் ஒரு முக்கியமான சமூக ஆவணம் என்றே அக்கட்டுரையைக் கருதலாம்.

அடுத்த வீட்டு அக்காவுக்குக் குற்றேவல் செய்யும் சிறுவனாக இருந்த காலத்தில் அவருக்காக கடைக்குச் சென்று பத்திரிகைகளும் புத்தகங்களும் வாங்கி வந்து கொடுத்த அனுபவத்தைப்பற்றிய நினைவலைகள் சுவாரசியான பதிவாக இருக்கின்றன. அவற்றை வாங்கிவரும் வழியிலேயே வேகவேகமாக புரட்டிப் படிக்கும் தருணத்தைப்பற்றிய சித்தரிப்பு உயிரோட்டமுடன் உள்ளது. திருமணம் நிச்சயிக்கப்பட்டதும் தம்மிடம் இருக்கும் புத்தகங்களையெல்லாம் கடைக்குப் போடச் சொல்லி அந்த அக்கா கொடுப்பதும், அவற்றையெல்லாம் அக்காவின் அனுமதியுடன் அச்சிறுவன் தன் வீட்டுக்கு எடுத்துச் சென்று படிப்பதும் ஒரு சிறுகதைக்குரிய திருப்பத்துடன் அமைந்துள்ளது. ( பெரிய எழுத்தாளரான போது, இதுதான் பெண்களின் நிலைமை என்று உணர அவர் மனத்தில் படிந்திருக்கும் இப்படிப்பட்ட பல நிகழ்ச்சிகளே தூண்டுகோலாக அமைந்திருக்கும் என்று தோன்றுகிறது )

இந்தப் புத்தகத்தை வாசிக்கும் நடுவயதுக்காரர்கள் ஒவ்வொருவரும் தம் பள்ளிநாட்களின் நினைவுகளில் மூழ்குவது உறுதி. சிறுவர்கள் வாசித்தால், அவர்கள் சுவாரசியமான பல பாடல்களையும் கதைகளையும் தெரிந்துகொள்ளலாம். நூலகத்துக்குச் செல்லும் ஆர்வமும் ஏற்படக்கூடும். பள்ளி ஆசிரியர்கள் படித்தால், எப்படி மாணவர்களை உருவாக்கலாம் என்ற புதிய யோசனை பிறக்கலாம். பெற்றோர்கள் வாசித்தால் குழந்தைகளின் வாசிப்புப்பழக்கத்தை எப்படி ஆற்றுப்படுத்தலாம் என்ற யோசனை பிறக்கலாம். இந்த வகைகளையெல்லாம் கடந்த புதியவிதமான வாசகர்களுக்கோ, இப்படியெல்லாம் ஆசிரியர்களும் நூலகர்களும் இந்த மண்ணில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து வியப்பு உருவாகலாம்.

இலக்கியம் என்பது முற்றிலும் புதிய ஓர் உலகமென்றும் வாழ்க்கைக்கும் அதற்கும் தொடர்பில்லை என்றும் நினைப்பவர்களின் எண்ணத்தை இப்புத்தகத்தில் பாவண்ணன் விவரிக்கும் ஒரு நிகழ்ச்சி கலைத்துப்போட்டுவிடுகிறது. இரண்டும் வேறுவேறல்ல என்பதையும் இலக்கியத்தையும் வாழ்க்கையையும் இணைத்துப் புரிந்துகொள்ளவோ அல்லது இலக்கியத்தின் மூலம் வாழ்க்கையைப் புரிந்துகொள்ளவோ முடியும் என்பதை உணர்த்தும் ஒரு சிறிய எடுத்துக்காட்டாக இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது. ஒருநாள் அவருடைய தந்தையார் ஒரு பிச்சைக்காரனை ஆதரித்து உதவி செய்கிறார். கு.அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’ சிறுகதையை வாசிக்கும்போது அந்தப் பழைய நிகழ்ச்சியை நினைத்துக்கொள்கிறார். இரண்டையும் இணைத்துப் பார்க்கும் சிறுவனின் மனம் ‘ஒரு மனிதர் காசில்லாமல் கூட வாழலாம். ஆனால் கருணையில்லாமல் வாழமுடியாது’ என்னும் எண்ணத்தை அடைகிறான். அடுக்கடுக்கான இந்தத் தளமாற்றத்தைப் படிக்கும்போது மனம் சிலிர்ப்படைகிறது. இதுதான் இலக்கியம். அது நேரிடையாக எதையும் சொல்வதில்லை. உணரவைக்கிறது.

பாவண்ணன் பஞ்சுமிட்டாய் என்னும் குழந்தைகள் இதழுக்காக தொடர்ந்து எழுதிவந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்தப் புத்தகம். ஒருபுறம் பாவண்ணனின் பள்ளிக்கூட நாட்களின் சுயசரிதையைப்போல இயல்பாக இருக்கிறது. மறுபுறம் படிப்படியாக இலக்கிய ரசனையின் வளர்ச்சியை, அவருடையதாக மட்டுமல்லாமல், வாசகருக்கும் கடத்துகிறது. வாசிப்பின் மீதான ஆர்வத்தை வளர்க்கும் விதமாக இத்தொகுப்பைக் கொண்டுவந்துள்ள பாவண்ணனும் சிறப்பாக வெளியிட்டிருக்கும் சந்தியா பதிப்பகத்தாரும் பாராட்டுக்குரியவர்கள்.

என் வாழ்வில் புத்தகங்கள் – பாவண்ணன்
கட்டுரைத்தொகுதி.
சந்தியா பதிப்பகம்,
53 வது தெரு, 9 வது அவென்யு,
அசோக் நகர்,
சென்னை -83.
விலை. ரூ.180

M. Gopala Krishnan's Tamil Translation Anton Chekhov Kathaigal (ஆன்டன் செகாவ் கதைகள்) Book Review By Writer Pavannan

நூல் அறிமுகம்: மாறுபட்ட கோணங்கள் – பாவண்ணன்



நவீன சிறுகதைக்கான பாதையை உருவாக்கிய படைப்பாளிகளில் முக்கியமானவர் ரஷ்ய எழுத்தாளரான ஆன்டன் செகாவ். அவருடைய முதல் சிறுகதைத்தொகுதி 1884இல் வெளிவந்தது. கச்சிதமான வடிவ அமைப்பு, நுட்பமான சித்தரிப்பு, வசீகரமான மொழி ஆகியவற்றின் காரணமாக இலக்கிய உலகில் அவருடைய சிறுகதைகளுக்கான இடம் அப்போதே உறுதிப்பட்டுவிட்டது. அடுத்த இருபதாண்டுகளில் அவர் எழுதிய சிறுகதைகள் பதிமூன்று தொகுதிகளாக வெளிவந்தன. ரஷ்யாவுக்கு வெளியே பல மொழிகளில் அக்கதைகள் மொழிபெயர்க்கப்பட்டன. அவற்றின் வழியாக உலகெங்கும் அவருக்கு வாசகர்கள் உருவானார்கள். கடந்த நூற்றைம்பது ஆண்டுகளுக்கும் மேலாக உலகெங்கும் புதிய தலைமுறை வாசகர்களால் தொடர்ந்து வாசிக்கப்படும் எழுத்தாளராகவும் மீண்டும் மீண்டும் மொழிபெயர்க்கப்படும் எழுத்தாளராகவும் விளங்குகிறார் ஆன்டன் செகாவ்.

தொடக்கத்தில் பணத்தேவைக்காக சுவாரசியமான வாழ்வியல் நிகழ்ச்சிகளையே செகாவ் சிறுகதைகளாக எழுதினார். ஏழாண்டு காலத்தில் ஏறத்தாழ இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதிய பிறகே அவரால் அந்த முதற்கட்டத்தைத் தாண்ட முடிந்தது. அப்போது மாபெரும் எழுத்தாளுமையான தல்ஸ்தோய் மிகவும் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்தார். அவருடைய ஒழுக்கவியல் பார்வையும் மனிதர்களின் எண்ண ஓட்டங்களைத் தொகுத்து மதிப்பிடும் பார்வையும் எழுத்துலகில் செல்வாக்கு பெற்றிருந்தது. அப்பார்வைகளின் அடிப்படையில் செகாவ் தனக்குத் தெரிந்த உலகத்தின் சித்திரங்களை விரிவாக எழுதிப் பார்த்தார். அது அவருடைய இரண்டாம் கட்டத்தைச் சேர்ந்த கதைகள். விடைகளைக் கண்டடைவதைவிட, ஒரு தருணத்தை வெவ்வேறு கோணங்கள் வழியாகத் திரட்டி தொகுத்துக்கொள்வதன் வழியாக கேள்விகளை வரிசைப்படுத்துவதே அவருடைய கதைகளின் அழகாக இருந்தது.

ஒருமுறை அவர் சைபீரியாவின் வதைமுகாமுக்குச் சென்று மூன்று மாதகாலம் தங்கி, அங்கு அடைக்கப்பட்டிருந்த பல்வேறு கைதிகளைச் சந்தித்து உரையாடினார். அங்கு வசித்துவந்த பெண்களின் நிலையையும் சிறுவர் சிறுமியரின் நிலையையும் கண்டு ஆழ்ந்த துயருற்றார். அந்த உளமாற்றத்தின் விளைவாக சிக்கலான தனித்துவம் நிறைந்த பல சிறுகதைகளை அவர் எழுதினார். இவையே அவருடைய மூன்றாவது காலகட்டக் கதைகள். அவருடைய படைப்பியக்கத்தில் இந்த மூன்றாம் கட்டக் கதைகளுக்கு மிகமுக்கியமான இடமுண்டு. நாற்பத்துநான்கு ஆண்டுகள் மட்டுமே உயிர்வாழ்ந்த செகாவ் ஐநூறுக்கும் மேற்பட்ட கதைகளை எழுதியுள்ளார். இந்த மூன்றாம் கட்டக்கதைகள் வழியாகவே உலக அளவில் மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளர் என்னும் பெருமையை அவர் அடைந்தார்.

செகாவின் சிறுகதைகளை வெவ்வேறு காலகட்டங்களில் தமிழில் ரா.கிருஷ்ணையா, பூ.சோமசுந்தரம், இளம்பாரதி, எம்.எஸ்., க.ரத்னம், சு.ஆ.வெங்கடசுப்பராய நாயகர், சந்தியா நடராஜன் ஆகியோர் மொழிபெயர்த்திருக்கின்றனர். தொகுப்பாக வெளிவரவில்லை என்றாலும், தனித்தனி முயற்சிகளாக மேலும் சிலர் செகாவ் கதைகளை மொழியாக்கம் செய்திருக்கின்றனர். அக்கதைகளின் எண்ணிக்கை ஏறத்தாழ அறுபது அல்லது எழுபது இருக்கக்கூடும். இப்படி பல வழிகளின் மூலம் தமிழுக்கு ஏற்கனவே அறிமுகமான கதைகளை விடுத்து, இதுவரை தமிழுக்கு வராத கதைகளிலிருந்து பன்னிரண்டு கதைகளை நாவலாசிரியரான எம்.கோபாலகிருஷ்ணன் தமிழ் வாசகர்களுக்காக மொழிபெயர்த்து அளித்திருக்கிறார். இந்தக் கதைகளில் பெரும்பாலானவை செகாவின் படைப்பியக்கத்தில் மூன்றாம் காலகட்டத்தைச் சேர்ந்தவை. செகாவின் எழுத்தாளுமையை நெருக்கமாக உணர இக்கதைகள் மிகவும் உதவியாக இருக்கின்றன. வான்கா, பச்சோந்தி, ஒரு எழுத்தரின் மரணம், வேட்டைக்காரன் போன்ற கதைகளைவிட முற்றிலும் மாறுபட்ட களத்தையும் மாறுபட்ட கோணத்தையும் கொண்டவை. செகாவின் வாழ்க்கையைப்பற்றியும் படைப்பியக்கத்தைப்பற்றியும் எம்.கோபாலகிருஷ்ணன் எழுதியிருக்கும் விரிவான முன்னுரை இந்தத் தொகுதிக்கு ஒரு முக்கியத்துவத்தை உருவாக்குகிறது.

குடியானவப் பெண்கள் இத்தொகுதியின் மிகச்சிறந்த சிறுகதை. ஒரு கிராமத்தில் இரண்டு தளங்களைக் கொண்ட வீட்டில் ஒரு தளத்தை தன் வசிப்பிடமாகவும் இன்னொரு தளத்தை வழிப்போக்கர்கள் வாடகைக்கு தங்கிவிட்டுச் செல்லும் விடுதியாகவும் வைத்திருக்கிறார் ஒரு பெரியவர். அவர் பெயர் கஷின். அவருக்கு இரு மகன்கள். ஒருவன் தொழிற்சாலையில் பணிபுரிபவன். அவன் மனைவி சோஃபியா ஒரு நோயாளி. இன்னொரு மகன் கூனன். தந்தைக்கு உதவியாக இருப்பவன். அவன் மனைவி வார்வரா அழகும் ஆரோக்கியமும் கொண்டவள். இப்படி விரிவான அறிமுகத்துடன் கதையைத் தொடங்குகிறார் செகாவ்.

ஒருநாள் ஒரு பயணி எட்டுவயதுச் சிறுவனொருவருடன் அந்த விடுதியில் தங்குகிறான். ஓய்வு நேரத்தில் கதை பேசும் பழக்கமுள்ள கஷின் அந்தப் பயணியிடம் பேச்சு கொடுக்கும் விதமாக “இந்தப் பையன் உங்கள் பிள்ளையா?” என்று ஒரு கேள்வியை எழுப்புகிறார். அதற்கு அந்தப் பயணி அச்சிறுவனை தன் தத்துப்பிள்ளை என்று சொல்கிறார். அவனை ஏன் தத்தெடுத்துக்கொள்ள வேண்டிய சூழல் உருவானது என்பதைச் சொல்வதற்காக தன் கதையை விரிவாகச் சொல்லத் தொடங்குகிறார்.

M. Gopala Krishnan's Tamil Translation Anton Chekhov Kathaigal (ஆன்டன் செகாவ் கதைகள்) Book Review By Writer Pavannanபத்து ஆண்டுகளுக்கு முன்பாக அந்தப் பயணியின் வீட்டுக்கு அருகிலிருந்த வீட்டில் ஒரு விதவைத்தாயாரும் வாஸ்யா என்னும் பெயருடைய மகனும் வசித்துவந்தார்கள். தன் இறுதிக்காலம் நெருங்கி வருவதை உணர்ந்த அந்தத் தாய், அதே ஊரைச் சேர்ந்த இளம்விதவையான மாஷென்கா என்னும் பெண்ணை தன் மகனுக்குத் திருமணம் செய்துவைக்கிறாள். அதற்குப் பிறகு சில நாட்களிலேயே அவள் உயிர் பிரிந்துவிடுகிறது. அதற்கடுத்து சில மாதங்களுக்குப் பிறகு ராணுவ சேவைக்காக வாஸ்யாவும் கிராமத்தைவிட்டு வெளியேறுகிறான். கருவுற்ற மாஷென்காவின் பிள்ளைப்பேறு முடியும் வரைக்கும் உதவிக்கு வந்த அவள் தாய், அதற்குப் பிறகு தன் மகன் வீட்டுக்குச் சென்றுவிடுகிறாள். தனித்திருந்த மாஷென்காவுக்கு பக்கத்து வீட்டுக்காரன் என்கிற முறையில் அந்தப் பயணி சின்னச்சின்ன ஒத்தாசைகள் செய்கிறார். படிப்படியாக அந்த நட்பு இருவருக்குமிடையில் உறவாக வளர்ந்துவிடுகிறது. பிறழ் உறவை இருவருமே நாடுகிறார்கள். கணவன்மனைவியைப் போலவே இருவரும் சேர்ந்து வாழத் தொடங்கிவிடுகிறார்கள்.

சிறிது காலத்துக்குப் பிறகு ராணுவச் சேவையை முடித்துக்கொண்டு வாஸ்யா கிராமத்துக்குத் திரும்பும் செய்தி கிடைக்கிறது. அக்கணமே பயணியின் மனம் மாறிவிடுகிறது. மாஷென்காவிடம் தன்னை மறந்துவிடுமாறும் வாஸ்யாவுடன் சேர்ந்து தொடர்ந்து இல்லறத்தை நடத்துமாறும் அறிவுரை வழங்கத் தொடங்குகிறான். அதை ஏற்க மறுக்கிறாள் மாஷென்கா. இதற்கிடையில் திரும்பிவந்துவிட்ட வாஸ்யா மீது அன்பைக் காட்ட அவள் மனம் மறுக்கிறது. அடுத்தநாள் வாஸ்யாவின் உயிரற்ற உடலையே அனைவரும் பார்க்கிறார்கள்.

மருத்துவப்பரிசோதனையின் போது வாஸ்யாவின் உடலில் நஞ்சு கலந்திருந்ததை அறிந்த காவல்துறை மாஷென்காவை கைது செய்து சிறையில் அடைக்கிறது. அந்த நஞ்சு அவனே அருந்தியதா, அல்லது பிறிதொருவரால் கொடுக்கப்பட்டதா என்பது இறுதிவரைக்கும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஆயினும் சந்தேகத்தின் அடிப்படையில் அவளுக்குத் தண்டனை வழங்கி சிறைக்கு அனுப்பிவிடுகிறது நீதிமன்றம். சில மாதங்களிலேயே சிறைக்குள் அவள் இறந்துவிடுகிறாள். அவளோடு சிறையில் தங்கவைக்கப்பட்டிருந்த அவளுடைய ஆண்குழந்தையை தத்தெடுத்துக்கொண்ட பயணி அன்றுமுதல் தானே வளர்த்துவருகிறான். தனக்குத் தெரிந்த தொழிலைக் கற்பிக்கிறான்.

விடிந்ததும் பயணி வாடகையைக் கொடுத்துவிட்டு தன் வழியில் சிறுவனை அழைத்துக்கொண்டு சென்றுவிடுகிறான். வீட்டிலிருக்கும் பெண்கள் ஒவ்வொருவரும் அந்தப் பயணியைப்பற்றி ஒவ்வொரு விதமாக விமர்சனச்சொற்களை வீசுகிறார்கள். அத்துடன் கதை முடிந்துவிடுகிறது.

ஒரு கோணத்தில் சிறுவனைத் தன் மகனாக தத்தெடுத்த பின்னணியை ஒருவன் சொல்வதுபோன்ற கதையாகத் தோற்றமளித்தபோதும், இன்னொரு கோணத்தில் பிறழ் உறவைச் சார்ந்து வேறு சில புள்ளிகளை இக்கதை தொட்டுக் காட்டுவதையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். உதறமுடியாத அளவுக்கு பிறழ் உறவின் மீது மாஷென்கா ஏன் நாட்டம் கொண்டவளாக இருக்கிறாள், பிறழ் உறவு என்றபோதும் மாஷென்காவை ஆழ்ந்து நேசித்த பயணி, கணவனின் வருகைக்குப் பிறகு சட்டென ஏன் உதறிவிடத் துடிக்கிறான், சிறையில் திடீரென மாஷென்கா மறைந்துபோனதும், ஊரே அறிய அவள் குழந்தையை அவன் ஏன் தத்தெடுத்து வளர்க்கத் தொடங்குகிறான் ஆகிய கேள்விகள் முக்கியமானவை. மாஷென்கா – வாஸ்யா – குஷ்கா என அமைதியாக, சீராக சென்றிருக்க வேண்டிய வாழ்க்கை ஒருவரும் எதிர்பாராத வகையில் ஏன் சீர்குலைந்து திசைமாறிப்போனது? நேராக அமைந்திருக்க வேண்டிய கோடு ஏன் வளைந்துபோனது? ஒழுக்கம் என்பது ஒருபோதும் மாறாத நெறியா அல்லது மாற்றத்தை ஏற்று நெகிழ்ந்துகொடுக்கும் வழிமுறையா என்னும் அடிப்படைக்கேள்வியை நோக்கிய கதையை நகர்த்திச் செல்கிறார் செகாவ்.

ஆரோக்கியமான கணவனுக்கு நோயாளி மனைவி, அழகும் சுறுசுறுப்பும் கொண்ட மனைவிக்கு உடற்குறை உள்ள கணவன், பணத்தேவை இல்லாத ஒருவனிடம் வந்து குவிந்துகொண்டே இருக்கும் செல்வம். பணத்துக்கான தேவை இருப்பவனை சூழ்ந்திருக்கும் வறுமை என எங்கெங்கும் நிறைந்திருக்கும் எதிரெதிர் புள்ளிகளின் இணைவை போகிற போக்கில் செகாவ் சுட்டிக்காட்டுவதையும் கவனிக்க வேண்டும். மாறிக்கொண்டே இருக்கும் இத்தனை எதிரீடுகளின் நெருக்கடிகளுக்கு நடுவில் மாற்றமே இல்லாத நெறிக்கும் இருக்கும் மதிப்பென்ன என்னும் மையத்தை நாம் அப்போது காணலாம். அது செகாவின் தரிசனம். அதுவே அவர் எழுப்பும் கேள்வி. நூற்றைம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கேள்வி உயிரோடு இருப்பதாலேயே இந்தக் கதையும் உயிரோட்டத்துடன் உள்ளது.
இன்னொரு கோணமும் இக்கதையில் உள்ளது. பயணி மாஷென்காவுடன் கொண்டிருந்த பிறழ்உறவு பற்றி விவரிக்கத் தொடங்கியதுமே, கஷின் வீட்டுப் பெண்கள் அதைக் கேட்டு அருவருப்படைகின்றனர்.

முகம்சுளித்து அவனைப் பார்த்து முணுமுணுக்கின்றனர். அவன் விவரிக்கும் கதையைக் கேட்கவே அவர்கள் தயாராக இல்லை. ஏதேதோ வேலைகளில் ஈடுபட்டபடி போகும்போதும் வரும்போதும் காதுகொடுத்துக் கேட்டுவிட்டுச் செல்கின்றனர். தன் மீது கொட்டப்படும் வசைகளைக் காதுகொடுத்து கேட்டும் கேட்காதவனைப்போல அவன் தன் போக்கில் தன் கதையைச் சொல்லி முடிக்கின்றான். எதற்காக அவன் அப்படிச் சொல்லவேண்டும் என்றொரு கேள்வி எழுகிறது. மாஷென்காவின் மெளனமும் மரணமும் உறுதியும் அவனைக் கலங்கவைத்துவிட்டன. அவள் தன் தண்டனையை ஏற்றுக்கொண்ட விதம் அவனை அமைதியிழக்க வைத்துவிட்டது. உறவில் இருவரும் இணையாகப் பங்குகொண்டிருந்தபோதும், தண்டனையை அவள் மட்டுமே ஏற்றுக்கொண்ட விதம் அவனுக்குள் ஒருவித குற்ற உணர்ச்சியைத் தூண்டியபடியே இருக்கிறது. அந்தக் குற்ற உணர்ச்சியின் விளைவாகவே சிறுவன் குஷ்காவை அவன் தத்தெடுத்துக்கொள்கிறான். அவன் தத்தெடுத்த கதையை விவரிப்பது, அதைக் கேட்பவர்கள் சொல்லும் வசைகளை அமைதியாக ஏற்பது எல்லாமே குற்ற உணர்ச்சியின் விளைவுகளே. கிட்டத்தட்ட அது ஒரு சுயவதை என்றே சொல்ல வேண்டும். அந்த வதை வழங்கும் கணநேர விடுதலையே ஒருவேளை அவன் விரும்பும் விடுதலையாக இருக்கலாம்.

கோபாலகிருஷ்ணன் தேர்ந்தெடுத்திருக்கும் மற்றொரு அருமையான சிறுகதை ஈஸ்டர் இரவு. கோல்த்வா என்னும் நதிக்கரையின் இரு புறங்களிலும் சின்னச்சின்ன கிராமங்கள் உள்ளன. ஒரு கரையில் காத்திருக்கும் மனிதர்களை மற்றொரு கரைக்கு அழைத்துச் செல்ல ஒரே ஒரு படகு மட்டுமே அந்த ஊரில் உள்ளது. அந்தப் படகை ஓட்டும் படகோட்டி யெரோனிம்.

ஈஸ்டர் தினம். தேவாலயத்துக்குச் செல்வதற்காக கரைக்கு வந்த ஒருவர் வெகுநேரமாக படகுக்குக் காத்திருக்கிறார். தேவன் எழுந்தருளியதன் அடையாளமாக தொலைவிலிருந்து ஆலய மணியின் சத்தம் கேட்கிறது. அப்போது கரைக்கு வந்த படகு அவரை ஏற்றிக்கொண்டு, உடனடியாக புறப்பட்டுச் செல்கிறது. ஒரு துறவியின் தோற்றத்தில் இருக்கும் அந்தப் படகோட்டியின் உருவம் பயணியை வியப்பிலாழ்த்துகிறது. அந்தப் பயணத்தில் நிகழும் உரையாடலே கதையாக விரிகிறது.

M. Gopala Krishnan's Tamil Translation Anton Chekhov Kathaigal (ஆன்டன் செகாவ் கதைகள்) Book Review By Writer Pavannanஊரே வாணவேடிக்கையைக் கண்டும் தேவாலயத்தில் அலைமோதும் பார்வையாளர்களைக் கண்டும் மகிழ்ந்திருக்கையில், தேவாலயத்துக்குச் சொந்தமான மடத்தைச் சேர்ந்த நிகலோய் என்னும் துறவி அன்று இறந்துவிட்டதாக அந்தப் படகோட்டி தெரிவிக்கிறார். அது தனக்கு ஆழ்ந்த துயரத்தை அளிப்பதாகவும் சொல்கிறார். தன்னிடம் உரையாடவேண்டும் என்பதற்காக அடிக்கடி கரையிலிருந்து எழும் துறவியின் குரல் நினைவுக்கு வந்துகொண்டே இருப்பதாகவும் தெரிவிக்கிறார். தொடர்ந்து அவருடைய திறமைகளைப் புகழ்ந்து சொல்கிறார். எந்தப் பள்ளியிலும் படிக்கக் கற்றுக்கொள்ளாத அவர் ஸ்தோத்திரங்களை எழுதி மனமுருகப் பாடும் திறமை வாய்ந்தவர் என்று குறிப்பிடுகிறார். கேட்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் ஆற்றல் கொண்டது அவருடைய குரல். அவரைப்போன்ற திறமைசாலி அந்த ஊரிலேயே இல்லை. ஆனால் அந்த மடத்தில் அவரை யாரும் பொருட்படுத்தவே இல்லை. அந்த அருமையான துறவிக்கு நிகழும் இறுதிச்சடங்கில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை என்னும் வருத்தம் வாட்டுகிறது. படகோட்டத் தெரிந்தவர்கள் யாருமே அங்கில்லை என்பதால் படகோட்டுவதையும் அவரால் விடமுடியவில்லை. தனக்கும் அவருக்கும் இருந்த நெகிழ்ச்சி மிக்க உறவைப்பற்றி உணர்ச்சி ததும்ப எடுத்துரைக்கிறார்.

ஈஸ்டருக்கான பூசை தொடங்கவிருக்கும் நேரத்தில் அவர்கள் கரையை அடைந்துவிடுகிறார்கள். பயணி படகிலிருந்து இறங்கி தேவாலயத்தை நோக்கிச் செல்கிறார். சுற்றியிருக்கும் மக்கள் அனைவரும் வாணவேடிக்கைகளிலும் பொழுதுபோக்கிலும் மூழ்கியிருக்கிறார்கள். ஒருவரும் அங்கே பாடப்படும் ஸ்தோத்திராத்தின் பொருளை அறிய முனைப்பு காட்டவே இல்லை. அக்காட்சி அந்தப் பயணிக்கு உறுத்தலாக உள்ளது. ஒருபுறம் ஸ்தோத்திரத்தின் பெருமையையோ, அல்லது மறைந்துபோன துறவியின் அருமையையோ எதையும் அறியாத பாமரக்கூட்டம். அதைப்பற்றி அறிந்த அந்தப் படகோட்டிக்கோ அந்த ஆலயத்திலேயே இடமில்லை. எங்கோ யாரையோ ஏற்றிக்கொண்டு அக்கரைக்கும் இக்கரைக்கும் படகோட்டியபடி இருக்கிறார்.

வழிபாடு முடிந்ததும் ஆழ்ந்த துயரத்தோடு அந்தப் பயணி கரைக்கு வருகிறார். யெரோனிம் இன்னும் படகை ஓட்டிக்கொண்டிருக்கிறார். அவரை பணியிலிருந்து விடுவிக்க அப்போதும் ஒருவரும் வரவில்லை. கரையோரம் காத்திருப்பவர்களை ஏற்றிக்கொண்டு அவர் மீண்டும் படகை ஓட்டத் தொடங்குகிறார். மேலோட்டமாகப் படிக்கும்போது, படகோட்டியுடனான உரையாடலைப்போலவே அமைந்துவிட்ட சிறுகதை என்று தோன்றினாலும் உள்ளூர அது கருணையையும் கனிவையும் முன்வைக்கும் கதை.

நிகலோய் பற்றிய படகோட்டியின் சித்தரிப்பு மிகமுக்கியமானது. இருவரும் சந்திக்காத நாளே இல்லை. இரவு வேளைகளில் கரைக்குத் திரும்ப தாமதமாகிவிடும் பொழுதுகளில் கரையில் நின்று குரல்கொடுத்து, அக்குரல் வழியாகவே ஒருவரையொருவர் உணர்த்திவிட்டு விலகிப்போன பல தருணங்கள் அவருடைய நெஞ்சில் மோதுகின்றன. துறவி உருகி உருகிப் பாடும் ஸ்தோத்திரங்களின் அழகையும் ஈர்ப்பையும் பற்றி மெய்மறந்து பேசுகிறார் படகோட்டி. ஆனால் எதார்த்தத்தில் அந்தத் துறவியின் திறமைக்கோ, பக்திக்கோ அந்த இடத்தில் கிஞ்சித்தும் மதிப்பில்லை. இறையியல் அனுபவத்தைவிட, அங்கிருப்பவர்களுக்கு உலகியல் அனுபவமே பெரிதாகத் தோன்றுகிறது. அதனால் அவர்களுடைய பார்வையில் துறவியாக இருந்தாலும் நிகலோய் மிகச்சாதாரணமான ஒரு மனிதர் மட்டுமே. ஆனால் அவருடைய கருணையையும் கனிவையும் மட்டுமே நினைத்துக்கொண்டிருக்கும் படகோட்டிக்கு நிகலோய் அபூர்வமானதொரு மனிதர்.

படகோட்டி – பயணி இருவருக்கும் இடையிலான உரையாடலாகத் தோன்றினாலும் ஈஸ்டர் இரவு சிறுகதை ஒருவரை மதிப்பிட இவ்வுலகத்தினர் வைத்திருக்கும் வெவ்வேறு அளவுகோல்களைச் சித்தரிக்கும் சிறுகதையாகும். தேவன் பிறந்துவரும் நாள் பற்றிய கதையில் படகுக்காக வெகுநேரம் காத்திருந்த ஒருவனை அழைத்துச் செல்ல தேவனே படகோட்டியாக வந்தான் என்ற கோணத்திலும் ஒரு வாசிப்பை நிகழ்த்தமுடியும். அப்போது தேவமலர் சிறுகதையைப்போல செகாவின் ஈஸ்டர் இரவு நிகழ்த்தும் அற்புதத்தை உணரலாம்.

கடல்சிப்பி, நீத்தார் பிரார்த்தனை, சம்பவம், நலவாழ்வு இல்லம் போன்ற சிறுகதைகள் சித்தரிக்கப்பட்டிருக்கும் எல்லைக்கும் அப்பால் விரிந்துசெல்லக்கூடிய சாத்தியம் நிறைந்தவை. இன்று எழுதப்படும் சிறுகதைகளைப்போலவே இக்கதைகளையும் வாசிக்கமுடிகிறது என்பதே இக்கதைகளின் வெற்றி. செகாவ் மிகப்பெரிய ஆளுமை என்பதற்கு இத்தகு கதைகள் எடுத்துக்காட்டுகளாக உள்ளன. இன்றைய புதிய வாசகர்களுக்கு விருந்தாக இக்கதைகளை மொழிபெயர்த்துத் தொகுத்திருக்கும் எம்.கோபாலகிருஷ்ணனும் ராதுகா பதிப்பகத்தின் புத்தகத்தைப்போலவே அழகான அச்சமைப்போடும் உறுதியான அட்டையோடும் ரஷ்யச் சாயலில் இத்தொகுப்பை வெளியிட்டிருக்கும் நூல்வனம் பதிப்பகமும் பாராட்டுக்கு உரியவர்கள்.

(ஆன்டன் செகாவ் கதைகள்
தமிழில் எம்.கோபாலகிருஷ்ணன்
நூல்வனம்,
எம்22, ஆறாவது அவென்யு,
அழகாபுரி நகர்,
ராமாபுரம்,

சென்னை -89.
விலை.ரூ230)

Pavannan's Venkat Swaminathan Sila Pozhuthugal Sila Ninaivugal Book Review By Jayashri Raghuraman Book Day is Branch of Bharathi Puthakalayam நூல் அறிமுகம்: ஒன்றில் ஆயிரம் - எஸ்.ஜெயஸ்ரீ

நூல் அறிமுகம்: ஒன்றில் ஆயிரம் – எஸ்.ஜெயஸ்ரீ



பெங்களூரில் 107 மொழிகள் பேசப்படுவதாக சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது. பல மொழிகள் பேசப்படும் இடமாகவும் பலவிதமான பண்பாடுகளைப் பின்பற்றும் மக்கள் வசிக்கும் இடமாகவும் பெங்களூரு இருப்பதையும் பல கலைகள் செழித்தோங்கும் இடமாக கர்நாடக மாநிலம் விளங்குவதையும் அச்செய்தியின் வழியாக அறிந்துகொள்ள முடிந்தது. சமீபத்தில் படிக்க நேர்ந்த பாவண்ணனின் ‘வெங்கட் சாமிநாதன் : சில பொழுதுகள் சில நினைவுகள்’ புத்தகத்தின் வழியாக அச்செய்தியை உறுதிப்படுத்திக்கொள்ள முடிந்தது.

பாவண்ணன் தமிழ் இலக்கிய உலகில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக சிறுகதை, நாவல், கட்டுரைகள், சிறுவர் இலக்கியம் என பல தளங்களில் செயல்பட்டபடி இருப்பவர். அவருடைய ‘வெங்கட் சாமிநாதன்: சில பொழுதுகள், சில நினைவுகள்’ என்ற புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனுடன் பாவண்ணன் நேரிடையாகவும், தொலைபேசி வழியாகவும் நிகழ்த்திய உரையாடல்கள் நினைவலைகளாகத் தொகுத்து அருமையான கட்டுரைகளாக்கி, இந்தப் புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார். தேசிய அளவில் நன்கு அறியப்பட்ட வெங்கட் சாமிநாதன் 2015இல் இயற்கையெய்தினார். அவருடைய மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தீராநதி இதழில் ஒரு தொடரை எழுதினார். ஓராண்டு காலம் வெளிவந்த அத்தொடரில் வெங்கட் சாமிநாதனுடன் பழகிய நினைவுகளையும் உரையாடிய தருணங்களையும் நினைவுகூர்ந்து பன்னிரண்டு கட்டுரைகளை எழுதினார். பிறகு 2017இல் அக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூல்வடிவம் பெற்று வெளியானது. ஒவ்வொரு கட்டுரையும் ஒரு வாசகனுக்கு ஒரு புதிய புத்தகத்தையோ, நாடகத்தையோ, கதை பற்றிய ஆழத்தையோ உணர்த்துவதாக வருகிறது. இலக்கியம் சார்ந்து இருவர் சந்தித்துக் கொள்ளும்போது கிளர்ந்தெழும் சுவாரசியம் புத்தகமெங்கும் வழிந்தோடுகிறது.

பாவண்ணன் இயல்பிலேயே அமைதியானவரும் பிறரோடு உரையாடுவதில் ஆர்வமும் கொண்டவர் படைப்புகளை ஆழ்ந்து வாசித்து அதன் அழகுகளையும் அழகுக்குறைபாடுகளையும் மிக அழகாக முன்வைப்பவர். படைப்புகளை நெருங்கி நின்று அணுகி அறிய முயற்சி செய்வதுபோலவே, பாவண்ணன் மனிதர்களையும் நெருங்கி நின்று புரிந்துகொள்ள முயற்சி செய்கிறார்.

முன்னுரையில் பாவண்ணன் முதலில் தான் வெ.சா.விடமிருந்து விலகி நின்றிருந்ததாகவும் ஏதோ ஒரு தருணத்தில் நெருங்கிச் சென்று பழகத் தொடங்கியதாகவும் குறிப்பிடுகிறார். அந்த முதல் சந்திப்பைப்பற்றிய குறிப்புகளை மிகவும் நேர்த்தியாகத் தொகுத்து முன்வைத்திருக்கிறார் பாவண்ணன். அந்தச் சந்திப்பிலேயே அவருடன் ஏன் மற்றவர்கள் சாதாரணமாக நெருங்க முடியவில்லை என்பதற்கான காரணத்தை உரையாடலின் ஒரு சிறு துணுக்கின் வழியாக காட்டிவிடுகிறார். தொடர்ந்து வரும் கட்டுரைகள் வழியாக வெ.சா. என்னும் ஆளுமையைப்பற்றிய சித்திரத்தை வாசகர்களின் நெஞ்சில் அழுத்தமாக தீட்டிவிடுகிறார் பாவண்ணன். புத்தகத்தை வாசித்து முடிக்கும் தருணத்தில் அவரை இழந்துவிட்ட வலியை உணரமுடிகிறது.

வெ.சா.வின் உண்மையான வருத்தங்கள், தமிழிலக்கியம் பல்வேறு வகைகளில் சிறப்பாக வளரவேண்டும் என்ற நெஞ்சார்ந்த கனவுகள், அப்படி வளரவில்லையே என்ற அவருடைய ஆதங்கங்கள் எல்லாவற்றையும் ஒருசேரப் படிக்கும்போது, தமிழிலக்கியத்தில் இவைசார்ந்த வளர்ச்சி உருவாகாததன் வருத்தம் புத்தகங்களை வாசிப்பவர்களுக்கும் ஏற்படுகிறது.

Pavannan's Venkat Swaminathan Sila Pozhuthugal Sila Ninaivugal Book Review By Jayashri Raghuraman Book Day is Branch of Bharathi Puthakalayam நூல் அறிமுகம்: ஒன்றில் ஆயிரம் - எஸ்.ஜெயஸ்ரீ
வெங்கட் சாமிநாதன்: சில பொழுதுகள் சில நினைவுகள்

வங்காள எழுத்தாளர் ஒருவர் மகாகவி பாரதியாரை, அவரது பாஞ்சாலி சபதத்தை, அதன் நாடகத்தன்மை பற்றியெல்லாம் சொன்ன நிகழ்ச்சியை வெ.சா.விடம் விவரித்து பெருமைப்பட்ட போது, அந்த வங்காள எழுத்தாளரிடம் வங்காள இலக்கியம் பற்றி என்ன கேட்டுத் தெரிந்துகொண்டீர்கள் என்றொரு கேள்வியைத் தொடுக்கிறார் வெ.சா. தான் எதுவும் கேட்கவில்லை என்று பதில் சொல்கிறார் பாவண்ணன். அப்போது மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள நாம் ஏன் கூச்சப்பட வேண்டும் என வெ.சா. கேட்ட கேள்வி இலக்கிய ஆர்வமுடைய ஒவ்வொருவரிடமும் கேட்கப்பட்ட கேள்வியாகவே இருக்கிறது.

நாடகம் என்றொரு இலக்கிய வகை தமிழில் பெரிதாக வளரவில்லை என்ற தன் வருத்தத்தையும் அவர் பதிவு செய்த விதத்தை பாவண்ணன் அழகாக எழுதியிருக்கிறார். கன்னடத்தில் சிறந்த நாடகங்களாக விளங்கக்கூடிய ஹயவதனன், துக்ளக், ஊருபங்க போன்றவற்றைப்பற்றி வாசகர்களும் தெரிந்துகொள்ள முடிகிறது. கன்னட இலக்கியத்தின் வளர்ச்சியையும் கன்னடத்தின் தலைசிறந்த எழுத்தாளரான சிவராம காரந்தரைப்பற்றியும் அவருடைய முக்கியமான நாவல்களான ‘மண்ணும் மனிதரும்’ , ‘பித்து மனத்தின் பத்து முகங்கள்’ போன்றவை பற்றியும் ஒரு கட்டுரை வழியாக நமக்கு அறிமுகம் கிடைக்கிறது.
மற்றொரு கட்டுரையின் வழியாக ந.பிச்சமூர்த்தியின் முக்கியமான படைப்புகளான ‘தவளை ஜபம்’, ’பதினெட்டாம் பெருக்கு’, ‘’மாங்காய்த்தலை’, ‘மோகினி’, ’தாய்’, ‘காவல்’ போன்றவற்றைப்பற்றிய அறிமுகம் கிடைக்கிறது. ‘குடும்பக்கதை’ என்னும் கதையைப்பற்றிய வெ.சா.வின் பார்வை, அந்தச் சிறுகதையை எப்படி அணுகவேண்டும் என்று அவர் எடுத்துரைக்கும் பாங்கு அனைத்தும் சேர்ந்து அவற்றையெல்லாம் தேடியெடுத்து உடனே வாசிக்கும் ஆவலைத் தூண்டுகிறது.
இன்னொரு கட்டுரையில் ரயில்வே ஸ்டேஷனில் வெ.சா.வுடன் பாவண்ணனும் மற்றும் சில நண்பர்களும் உரையாடுகிறார்கள். இதுபோன்ற எழுத்தாளுமைகள் சந்தித்துக்கொள்ளும்போது, இயல்பாகவே அவர்களுடைய உரையாடல்கள் இலக்கிய நுட்பங்கள் சார்ந்த பகிர்தல்களாக எப்படி மலர்கின்றன என்பதை உனர்ந்துகொள்ள முடிகிறது. ரயில்வே ஸ்டேஷன் பற்றிய கதைகளைக் குறித்த பகிர்தலாகவே அந்த உரையாடல் அமைந்துவிடுகிறது. கு.அழகிரிசாமியின் ‘குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷன்’, பாரதியாரின் ‘ரயில்வே ஸ்தானம்’, கு.ப.ரா.வின் ‘விடியுமா?’ தி.ஜானகிராமனின் ‘சிலிர்ப்பு’ என பல கதைகளை அறிமுகப்படுத்துகிறது.

பாரதியாரின் ‘ரயில்வே ஸ்தானம்’ கதையைப்பற்றி வெ.சா. சொல்லும்போது இந்தக் கதையையெல்லாம் வாசிக்கவில்லையே என்றொரு ஏக்கம் உருவாவதைத் தடுக்க முடியவில்லை. தான் கூட இக்கதையை தொடக்கத்தில் ஒரு நடைச்சித்திரமாகவே நினைத்துக் கொண்டிருந்ததாக பதிவு செய்கிறார் பாவண்ணன். வெ.சா. அந்தக் கதையில் வரும் மூன்று திசைவழி செல்லவிருக்கும் தடங்களையும் பயணிப்பதற்காக அமர்ந்திருக்கும் ஒரு மனிதனின் வாழ்க்கை நிலையையும் இணைத்துச் சொல்லும் விதத்தில் இருக்கும் அழகைக் கவனித்துப் புரிந்துகொள்ள வேண்டும் என்று சொல்கிறார்.

ஒரு கதையில் இடம்பெறக்கூடிய ஒவ்வொரு தகவலையும் ஏதோ ஒரு நுட்பமான வகையில் கதையின் மையத்தோடு பிணைத்தே ஒரு படைப்பாளி எழுதிச் செல்கிறான். அந்த நுட்பத்தைக் கண்டடைந்து மகிழ்பவனே உண்மையான வாசகன். வாசிப்பதால் கிடைக்கும் பேரின்பமே அதுதான். பாவண்ணனும் வெ.சா.வும் நிகழ்த்தும் உரையாடல் வழியாக, புனைகதை வாசிப்பு சார்ந்த ஒரு பேருண்மையை வாசகர்களால் எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது. இப்படியெல்லாம் கதைகளை அணுக வேண்டும் என்பதையும் வாசகனுக்கு உணர்த்துவதோடு கதைகளின் விவரிக்கப்படும் விவரங்களுக்கும் கதைக்கும் உள்ள இணைப்பையும் கண்டடைந்து படிக்கவேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.

மற்றொரு கட்டுரையில் புதுமைப்பித்தனின் செல்லம்மாள் கதையைப் பற்றிய உரையாடலும் மிக முக்கியமானது. அந்த உரையாடல் வழியாக அந்தக் கதையை ஆழமாகப் புரிந்துகொள்ள ஒரு திறப்பு கிடைக்கிறது.

Pavannan's Venkat Swaminathan Sila Pozhuthugal Sila Ninaivugal Book Review By Jayashri Raghuraman Book Day is Branch of Bharathi Puthakalayam நூல் அறிமுகம்: ஒன்றில் ஆயிரம் - எஸ்.ஜெயஸ்ரீ
எழுத்தாளர் பாவண்ணன்

படைப்புகளைப்பற்றி அழகாகச் சொல்வது போலவே வெங்கட் சாமிநாதன் தன் வாழ்வில் தான் சந்தித்த முக்கியமான மனிதர்களைப் பற்றியும் பகிர்ந்துகொள்கிறார். தன்னை வளர்த்த பாட்டி, தன்னை வாழ்க்கையில் கைதூக்கிவிட்ட மாமா, தனக்கு விமான நிலையத்தில் உதவி செய்த பணியாளர் என எல்லா மனிதர்களையும் மறக்காமல் தன் மனத்தில் பதித்திருக்கிறார். இளகிய மனம் உடையவராகவும் தன் கண்களைத் தானம் செய்யும் பெரிய உள்ளம் கொண்டவராகவும் வெ.சா. வாழ்ந்திருக்கிறார் என்னும் செய்தி அவர் மீது பெருமதிப்பை உருவாக்குகிறது.

ஒரு மனிதர் அடுத்த மனிதர் மீது ஏன் கோபப்பட்டுக்கொண்டே இருக்கிறார் என்றும், ஏன் சாடிக்கொண்டே இருக்கிறார் என்றும் புரிந்துகொள்ளாமலேயே, அவரைச் சிடுமூஞ்சி என ஒதுக்கி வைப்பது அனைத்தும் மனித இயல்பாகவே மாறிவிட்டது. அவர்களுடைய கோபம் அல்லது சிடுசிடுப்புக்குப் பின் உள்ள உண்மைப்பொருளை சரியாகப் புரிந்து கொள்ள மறுப்பதும் இயல்பாகிவிட்டது. அப்படி, பலராலும் சரியாகப் புரிந்துகொள்ளப்படாமல் போன, ஒரு நல்ல இலக்கிய விமர்சகரை, இலக்கிய ஆளுமையை சரியாக வெளிக்கொண்டுவர இந்தக் கட்டுரைத்தொகுதி வழியாக பாவண்ணன் முயற்சி செய்திருக்கிறார்.

வெ.சா. என்பவர் வம்பிழுப்பவர் அல்லர். மாறாக, ஒரு சவாலான அழைப்பு விடுப்பவர். சிறப்பாகவும் வித்தியாசமாகவும் இலக்கியங்களைப் படைக்க படைப்பாளர்களுக்கு அறைகூவல் விடுப்பவர். நன்றாகப் படிக்கச் சொல்லி கண்டிக்கும் ஆசிரியரைப்போன்றவர். கண்டிப்பான தந்தையைப்போன்றவர் என ஆங்காங்கே பாவண்ணன் கூறுகிறார். இக்கட்டுரைகளின் மூலம் வாசிப்பவராலும் இதை உணரமுடிகிறது.

பாவண்ணன் கன்னட இலக்கியம் சார்ந்து இயங்கும் தமிழ்ப்படைப்பாளராக இருப்பதனால் பல இடங்களில் கன்னடத்தில் முக்கியமான படைப்புகள் பற்றிய உரையாடல்கள் நிறைந்திருக்கின்றன. அதனால் கன்னட இலக்கியத்தின் முக்கியப்படைப்புகள் குறித்த அறிமுகம் வாசகர்களுக்கு எளிதாகக் கிடைக்கிறது. 117 பக்கங்களில் பன்னிரண்டு கட்டுரைகளைக் கொண்ட இந்தப் புத்தகத்தை வாசிப்பதன் மூலம் பல சிறுகதைகள், நாடகங்கள் பற்றி வாசகர்கள் தெரிந்துகொள்ள முடிகிறது.

பாவண்ணன் உரையாடல்களை மிகச்சரியாக குறிப்பெடுத்துக்கொண்டோ கவனத்திலும் நினைவிலும் கொண்டோ மிக அருமையான கட்டுரைகளாக ஆக்கியிருப்பது பாராட்டுக்குரியது. வெ.சா. மூலம் பல படைப்புகளைப்பற்றிய அறிமுகம் வாசகர்களுக்குக் கிடைக்கிறது. இது இப்புத்தகத்தின் மிகப்பெரிய பயன். உரையாடல்களை மிகச்சிறப்பான கட்டுரைகளாக்கித் தந்திருக்கும் பாவண்ணன் பாராட்டுக்குரியவர். புத்தகத்தை அழகான வடிவமைப்போடு வெளியிட்டிருக்கும் சந்தியா பதிப்பகமும் பாராட்டுக்குரியது.

(வெங்கட் சாமிநாதன் : சில பொழுதுகள் சில நினைவுகள். பாவண்ணன், சந்தியா பதிப்பகம், 53 வது தெரு, 9 வது அவென்யு, அசோக் நகர், சென்னை -83. விலை. ரூ.120)

Suryanila Poems Collection Neerkagam (நீர்க்காகம்) Book Review By Writer Pavannan (பாவண்ணன்). Book Day is Branch of Bharathi Puthakalayam.

காதலென்னும் ஊஞ்சல் – பாவண்ணன்



சூர்யநிலாவின் கவிதைத்தொகுதியின் முகப்பில் பரணர் எழுதிய நற்றிணைப்பாடலை வழங்கியிருப்பது ஏதோ ஒரு வகையில் புதுமையாகத் தோன்றியது. முன்னுரை வாக்கியங்களைப்போலத் தோன்றிய அப்பாடல் வரிகள் கவிதைத்தொகுதிக்குள் அழைத்துச் செல்ல, வாசலில் நின்று வரவேற்பதுபோலத் தோன்றியது. என்ன தொடர்பு இருக்கக்கூடும் என்றொரு கேள்வி ஒரு பறவையைப்போல சிறகடித்தபடி இருக்க, அப்பாடலை நாலைந்து முறை படித்துவிட்டேன். அதன் உள்ளோசைக்காக ஒரு முறை. அதன் காட்சியமைக்காக ஒரு முறை. அதன் கற்பனையழகுக்காக ஒரு முறை. அதன் பொருளுக்காக ஒரு முறை. படிக்கப்படிக்க அதன் அழகு பெருகியபடியே இருந்தது.

ஓர் அன்னப்பறவை கூட்டிலிருக்கும் தன் குஞ்சுகளுக்காக இரை தேடிப் பறந்து செல்கிறது. இரை கிட்டும்வரை இரை பற்றிய நினைவே வாட்டுகிறது. இரை கிடைத்ததும் குஞ்சுகளின் நினைவு வாட்டத் தொடங்குகிறது. கிடைத்த சிறு உணவுடன் மீண்டும் கூட்டை நோக்கிப் பறந்து வருகிறது. இரையை ஊட்டியதும் இரை தேடிப் பறந்து செல்கிறது. அமைதியற்ற அந்த அன்னப்பறவைக்கு ஓய்வே இல்லை. ஒய்வின்றி பறந்தபடியே இருக்கிறது. மீண்டும் மீண்டும் கூட்டுக்குத் திரும்பி வருகிறது. அந்த அமைதியின்மையைச் சுட்டிக் காட்டுவதற்காகத்தான் அக்காட்சியைக் கட்டமைக்கிறார் பரணர்.

காதலியைச் சந்திக்க முடியாத காதலன் ஊருக்கு வெளியே தனிமையில் தவிப்போடு நிற்கிறான். அந்த அன்னப்பறவையைப்போல அவன் மனம் மட்டும் அவளை நோக்கிச் சென்று அலைந்துவிட்டு அமைதியிழந்து திரும்புகிறது. அமைதி குலைந்த மனத்திடம் ஆறுதல் சொற்களைச் சொல்கிறான் காதலன். அபூர்வமானதொரு கணத்தில் சூரியனுக்கு அருகில் வெள்ளி தோன்றுவதுபோல என்றேனும் ஒருநாள் தனக்கருகில் காதலி வந்து சேருவாள் என நம்பிக்கைச் சொற்களைச் சொல்லி அமைதிப்படுத்துகிறான்.

காதலின் இரு பக்கங்களான அமைதியின்மையையும் நம்பிக்கையையும் பரணரின் வரிகள் அழகாகக் காட்சிப்படுத்துகின்றன. மீண்டும் மீண்டும் பறந்தபடியே இருக்கும் அன்னப்பறவையை ஆழ்நெஞ்சில் அசைபோட்டபடி ஒவ்வொரு கவிதையாக படிக்கத் தொடங்கினேன். பல கவிதைகள் புன்னகை பூக்கவைத்தன. பரணர் தீட்டிய காதலனின் சாயலை சூர்யநிலா தீட்டியிருக்கும் காதலனின் சித்திரத்தில் பார்க்கமுடிந்ததுதான் காரணம். அதே அமைதியின்மை. அதே நம்பிக்கை. முகப்பில் பரணருடைய வரிகளின் இருப்புக்கான காரணத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் காதலின் தன்மை எவ்விதமான மாற்றமுமில்லாமல் அப்படியே இருக்கிறது. இத்தனை ஆண்டுகள் சூர்யநிலா பயின்று பெற்ற கவிமொழி அவருடைய காட்சியமைப்புக்குத் துணையாக உள்ளது. அவர் இன்னொரு பரணராக மாற முயற்சி செய்திருக்கிறார். சூர்யநிலா தனக்குள் இருக்கும் ஏதோ ஓர் அந்தரங்கமான தேடலை இத்தொகுதியில் படிமங்களாகவும் உருவகங்களாகவும் மாற்றி முன்வைக்க விழைந்திருக்கிறார்.

நிலா பார்த்தல் ஒரு நல்ல கவிதை. காதல் மீது கொண்ட நம்பிக்கையையும் உறுதியையும் புலப்படுத்தும் கவிதை.

பெரும்நம்பிக்கையில்
கட்டப்பட்ட
உன்மீதான காதல்
கட்டு தளரும்போதெல்லாம்
இறுக்கி இறுக்கிக் கட்டுகிறேன்
காலம்
உன்னையும்
என்னையும்
சேர்த்தே
தீருமென்ற
நம்பிக்கையில்
நான்
நிலா
பார்க்கப்
போனேன்
நீ
நிலவாகியிருந்தாய்

தளர்வே இல்லாத உறுதியான கட்டமைப்பாக காதல் நிலவவேண்டும் என்பதுதான் எல்லாக் காதலர்களுக்கும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் எதார்த்தத்தில் அப்படி வாய்ப்பதில்லை. சில நேரம் உறுதி. சில நேரம் தளர்வு. ஆனால் அப்படி அதன் போக்கில் மாற்றமடைவதை, விதியே என வேடிக்கை பார்த்தபடி அமர்ந்துவிடவில்லை சூர்யநிலாவின் காதலன் அல்லது காதலி. தளரும்போதெல்லாம் இறுக்கி இறுக்கிக் கட்டுகிறார்கள். நம்பிக்கை சார்ந்த அச்செயல்பாடு காதலுக்கு வலிமையைச் சேர்க்கிறது. பார்க்கும் இடங்களிலெல்லாம் நெஞ்சிலிருக்கும் ஒன்றையே பார்ப்பது என்பது உலகியல் நோக்கில் பித்தாகத் தோன்றலாம். ஆனால் காதல் உலகிலும் கவிதை உலகிலும் அது ஒரு பெரும்பேறு. காக்கைச் சிறகினில் கண்ணனின் கருநிறத்தைப் பார்த்த பாரதியாரைப் போன்ற ஒருசிலருக்கே கிடைத்த நற்பேறு. ‘நிலா பார்க்கப் போனேன், நீ நிலவாகியிருந்தாய்’ அழகான வரி.

இக்கவிதைக்கு முற்றிலும் எதிர்த்திசையில் பயணம் செய்வது காலத்தின் பெருங்கல் என்னும் கவிதை

சிறகடிப்பின்போது
பெருங்கல்லொன்று
குறி தவறாமல்
என் மேல் விழுகிறது
என்னைக் கீழே
மிக கீழே தள்ளிவிட்டு
கைகொட்டிச் சிரிக்கிறது அப்பெருங்கல்

எதிர்பாராத விபத்து போல நிகழ்ந்துவிட்ட கல்லின் தாக்குதல் ஒருகணம் திகைப்பையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. ஆனால் தளரும் போதெல்லாம் இறுக்கி இறுக்கிக் கட்டி, உறுதியை உறுதிப்படுத்துக்கொள்ளும் மனம் அதிர்ச்சியிலிருந்து மீண்டும் பறக்கத் தொடங்கியிருக்கக்கூடும் என்று நம்பிக்கை கொள்ளவே விழைகிறது.



மிதந்து நகரும் அகல் என்பது ஒரு கவிதையின் தலைப்பு. மிக அழகான சொற்சேர்க்கை. காதலைக் கரைசேர்க்கும் நெஞ்சுக்கு இதைவிட பொருத்தமான வேறொரு சொற்கூட்டு அமையாது. கவிதையில் இச்சொற்கூட்டு வேறொரு பொருளில் அமைந்திருந்தாலும், அப்புள்ளியிலிருந்து சிறகடித்து எழுந்து பல தளங்களை நோக்கித் தாவும் ஆற்றல் கொண்டதாக உள்ளது.

நீ
மேலமாசி
கீழமாசி
வீதிகளில்

நான்
தெற்கு
வடக்கு
இரத வீதிகளில்

மிதந்து நகரும்
அகல்விளக்குகளைப்போலவே
சொக்கனின் தெப்பக்குளத்தில் நடனமாடும்
நமது நிழல்களை உண்டு
பசியாறும்
மீன்களின் நிழல்களை உண்ணும்
நிழல்கள் நாம்

மூன்று நிழல்களை ஒரே புள்ளியில் இணைக்க முயற்சி செய்கிறார் சூர்யநிலா. ஒரு நிழல் தெப்பக்குளத்தில் படிந்து அசையும் காதலர்களின் நிழல். இரண்டாவது நிழல் தெப்பக்குளத்தில் விழுந்த நிழலை ஏதோ இரையென நினைத்து கவ்விக்கொள்ள நீந்தியோடும் மீன்களின் நிழல். மூன்றாவது நிழல் காதலர்கள். அவர்கள் இந்த உலகத்திலேயே இல்லை. மீன்கள் இரையைக் கவ்விக்கொள்வதைப்போல ஒருவரையொருவர் கண்ணோடு கண் சேர்த்து பார்த்தபடி உறைந்து விடுகிறார்கள். அவர்கள் நிழலென உறைந்து, மீனின் நிழலைப் பார்க்கிறார்கள். ஒரு கோட்டில் இணையும் மூன்று நிழல்கள் அழகான கற்பனை.
அன்பின் காலம் என்பது இன்னொரு முக்கியமான கவிதை. மலர்களை அலைகலாகவும் காற்றாகவும் பாடல்களாகவும் உருமாற்றி மனத்தைத் தீண்டிக் கரையேறவைக்கும் அன்பின் ஆற்றல் மகத்தானது.

பூத்துக் கிடக்கும்
உனதன்பின்
மலர்கள்

எனது மெல்லிய விசும்பலில்
பாடலாக, காற்றாக
அலைகளாக கரையேறுகின்றன
உனது மனதின் மீது

ஒரு பறவையும் ஒரு நிழலும் மற்றொரு சிறப்பான கவிதை. பறவையைத் தேடும் நிழலின் தவிப்பும் நிழலைத் தேடிப் பறக்கும் பறவையின் தவிப்பும் காலம் காலமாக தொடர்ந்துகொண்டே இருக்கும் காதலின் ஆடல். மேலதிகமான விளக்கமெதுவும் தேவையற்ற கவிதை.

சிறகுகளின் மீது
வெண்சாம்பலைப்போலுள்ள
கோடுகள்
பனிகளின் துளிகள் என்பதை
அறியாமலேயே
உயர உயரப் பறந்து செல்கிறது
ஒரு பறவை

உன் மீதுள்ள நிழல்
நான்தான்
என்பதை அறியாமல் நீ
சென்றதைப் போலவே

இன்னும் திரும்பவே இல்லை
என் வாசலுக்கு
ஒரு பறவையும்
ஒரு நிழலும்

கற்கள் இத்தொகுதியின் மிகச்சிறப்பான கவிதை. காதல் தன் இலக்குப்புள்ளியைத் தொட இயலவில்லை என்பது மாபெரும் துயரம். துயரத்தின் எடையை சூர்யநிலாவின் குறைவான சொற்கள் முழுமையாக உணர்த்திவிடுகின்றன.

முழுவதும் அன்பினால்
தடவி வீசப்பட்ட
எனது கற்களில் ஒன்று
உன் மதிலில் விழுந்தது
மற்றொன்று
உன் குடிலில் விழுந்தது
மேலுமொன்று
உன் மடியில் விழுந்தது
எப்படி வீசினாலும்
எந்தக் கல்லும் விழவில்லை
உன் மனதில்

நம்பிக்கையின் இறுக்கம் தளரும்போதெல்லாம் இறுக்கி இறுக்கிக் கட்டி நம்பிக்கையை மீட்டுக்கொள்ளும் காதலன் ஒரு பக்கம். எப்படி வீசினாலும் எந்தக் கல்லும் விழவில்லை உன் மனத்தில் என நம்பிக்கை தளர்ந்துவிழும் காதலன் மற்றொரு பக்கம். ஒரு எல்லையில் உற்சாகம். மற்றொரு எல்லையில் துயரம். ஒரு எல்லையில் கனவு. மற்றொரு எல்லையில் எதார்த்தம். இரு எல்லைகளையும் மாறிமாறித் தொட்டு அசைந்தபடியே இருக்கிறது காதல் என்னும் ஊஞ்சல்.

(நீர்க்காகம் – சூர்யநிலா கவிதைகள்
எழுத்துக்களம் வெளியீடு,
398/190,
பஞ்சநாதன் தெரு,
குப்தா நகர்,
சேலம் – 636009.
விலை. ரூ.125)