திரு மாணிக்கம் (Thiru.Manickam) & பயணிகள் கவனிக்கவும் (Payanigal Gavanikkavum) -Tamil Movie review - https://bookday.in/

திரு மாணிக்கம் & பயணிகள் கவனிக்கவும்  

திரு மாணிக்கம் & பயணிகள் கவனிக்கவும்  இந்த இரு திரைப்படங்களுக்கும் உள்ள ஒற்றுமை, உண்மையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டவை; ‘திரு மாணிக்கம் ‘ கேரளாவில் நடைபெற்றது; ‘ பயணிகள் கவனிக்கவும் ‘ 2019 இல் மலையாளத்தில் எடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கழித்து தமிழில் எடுக்கப்பட்டது. இரண்டிலுமே மாற்று திறனாளிகள் முக்கிய பாத்திரமாக இருக்கிறார்கள்.  இரண்டையும் ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ ‘லப்பர் பந்து’ ‘மெய்யழகன்’ போன்ற படங்களின் வரிசையில் சேர்க்கலாம். அதாவது நாயக அந்தஸ்து, அடிதடி, பெண்களை அழகு பொம்மைகளாக காட்டுவது போன்ற ஃபார்முலாக்கள் இல்லாதவை.  ‘திரு மாணிக்கம்’ ஒரு நேர்மையான நாயகனின் கதையை சொன்னால்,‘பயணிகள் கவனிக்கவும்’ ஒரு நடுத்தர வர்க்க மாற்றுத்திறனாளிக்கு எதிர்பாராமல் ஏற்படும் இன்னல்களை கூறுகிறது. முன்னதில் காவல்துறையின் வழக்கமான முகத்தைக் காட்டினால் பின்னதில் அதன் இன்னொரு அபூர்வமான பக்கத்தை பார்க்க முடிகிறது. ‘திரு மாணிக்கம்’ விதிவிலக்கான நிகழ்வை வைத்து மனிதர்களின் இயல்புகளை வெளிக்கொணர்கிறது. ‘பெரியவர் லாட்டரி சீட்டிற்கு பணம் தரவில்லை. யாரென்றே தெரியவில்லை. இந்த நிலையில் அதற்கு விழுந்த பரிசுத் தொகையை அவரை தேடிச் சென்று கொடுக்க வேண்டுமா? லாட்டரி சீட்டு கடைக்கு முன்பணம் தாலியை அடகு வைத்து கொடுக்கப்பட்டிருக்கிறது. பேச்சு வராத குழந்தைக்கு சிகிச்சைக்கு பணம் வேண்டியதிருக்கிறது.  எனவே பரிசுத் தொகையை நாமே வைத்துக் கொள்ளலாம்’ என்று மனைவியும் மற்றவர்களும் கூறுவது நியாயமாகவே படும். மாணிக்கம் வளர்க்கப்பட்ட சூழல் தெரிந்தால்தான் அவனது மன உறுதியை புரிந்து கொள்ள முடியும்.  முற்பகுதி சற்று விறுவிறுப்பாகவும் பஸ் பயண நிகழ்வுகள் சற்று அலுப்பூட்டுவதுமாக இருக்கும்போது மாணிக்கத்தின் பிள்ளைப் பருவ நிகழ்வுகள் படத்தை மீண்டும் தூக்கி நிறுத்துகிறது. லாட்டரி சீட்டின் மூலம் குடும்ப கஷ்டங்களை தீர்த்துக் கொள்ளலாம் என்று   மாணிக்கத்தின் குடும்பத்தினரும் அதை வாங்க இருந்த பெரியவரும் வைக்கும்  வாதங்கள் கேரளசமுதாயத்தில் ஆழமாகப் பதிந்திருக்கும் லாட்டரி சீட்டு மோகத்தை காட்டுகிறது.  எல்லாக் குழந்தைகளும் பிறக்கும்போது சாதி மதம் என்னவென்று தெரியாமல்தான் பிறக்கின்ரன. நாம்தான் அதற்கு அதையெல்லாம் கற்றுக் கொடுக்கிறோம். இதில் வரும் மாணிக்கம் இஸ்லாமியப் பெரியவரால் நல்வழிப்படுத்தப்பட்டு கிறித்துவப் பாதிரியாரால் அரவணைக்கப்படுகிறான். ஆனால் இந்து வழிபாட்டு முறையை பின்பற்றுகிறான்.  அவன் குடும்பத்தினருக்கும் அதில் எந்த நெருடலும் இல்லை. உயர்ந்த இலட்சியங்களான நேர்மையும் மத நல்லிணக்கமும் இந்த திரைப்படத்தில் தூக்கிப் பிடிக்கப்படுகிறது. ‘பயணிகள் கவனிக்கவும்’ இன்று மேலோங்கி வரும் ‘காணொளி கலாச்சாரத்தின்’ தீய பக்கத்தை காட்டுகிறது. ‘காணொளிகள்’ அதிகார வர்க்கத்தின் வரம்பு மீறுதலையும் சமூக விரோதிகளின் நடவடிக்கைகளையும் வெளிச்சத்துக் கொண்டு வரவும் உதவுகின்றன என்பதையும் நாம் நினவில் கொள்ள வேண்டும். இதில் விளையாட்டாக ஒரு காணொளியை சமூக ஊடக்கத்தில் பதிவிட்டு பின்,   அதன் விளைவுகளை கண்டு அவதியுறும் ஆன்டனியின் பாத்திரம் சிறப்பு. காய்ச்சலுக்கு மருத்துவத்தை நாடாமல் மத நம்பிக்கைளை நாடுவதும் இலேசாக சுட்டிக்காட்டப்படுகிறது.  மாற்றுத்திறனாளி சங்க செயலாளர் நிதி விஷயங்களில் முறைகேடாக நடப்பது போல் காட்டப்படுவது அந்த மொத்த இயக்கத்தையும் தவறான வெளிச்சத்தில் காட்டுகிறது. இயக்கங்களில் இப்படிப்பட்ட நபர்கள் இருக்கலாம். ஆனால் நேர்மையான இயக்கங்களும் இருக்கின்றனவே. ஒரு குறும்படத்துக்கான கருவை முழு நீளப் படமாக மாற்றும்போது ஏற்படும் சிரமம் வெளிப்படுகிறது. இருந்தாலும் இது போன்ற எதாரத்தப் படங்கள் வரவேற்கப்பட வேண்டியவையே.…