Pazhutha olai poetry by Era kalaiyarasi இரா.கலையரசியின் பழுத்த ஓலை கவிதை

பழுத்த ஓலை கவிதை – இரா.கலையரசி



இளமை எட்டி உதைத்து
முதுமை பரிசை வழங்கியது
பழுப்பு நிற கண்களாய்
ஒளி மங்கி உயர நிற்கிறது.
பூச்சிகள் படுக்கும் மெத்தையாய்
புழுங்கி தான் போய் விட்டாய்.
வயது வந்த காலத்தின் வாழ்வு
வயோதிக மனதை வருத்துகிறது.

ஒற்றை சிட்டுக்குருவி ஒன்று
ஓராயிரம் கதை பேசியது அன்று!
இலை நரம்புகளில் கசிந்த இசை
இழைந்து ஓட தொட்டது அவளை!
வளைந்து கீழே முட்டி நின்றாலும்
சிட்டு அவள் தவறியது இல்லை!
அலகில் கொத்தி அன்பு பரிமாறி
அளவாய் பேசிய நாட்கள் அவை!

வீட்டு கூரைகள் ஏற்க மறுத்து
வயோதிக வாழ்வை நகைத்தது!
பழத்த பழங்கள் கடைகள் சேர
பழுத்த ஓலை படுக்கை சேர்ந்தது.
இதோ! வந்தே விட்டது மரணம்!
இளமை கால மேகங்கள் தவழ
எங்கோ கூவிய குயிலின் இசை
கீழே விழுந்த பழுத்தோலையின்
இரங்கற்பா ஆனது.!