நூல் மதிப்புரை – பெ.சசிக்குமார் / பா.அரவிந்தனின் விண்வெளி மனிதர்கள் – வே சங்கர்
நூலின் பெயர் : விண்வெளி மனிதர்கள்
ஆசிரியரின் பெயர் : பெ.சசிக்குமார் / பா.அரவிந்த்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 296
விலை : ரூ.270/-
புத்த்கம் வாங்க இங்கே க்ளிக் செய்க: thamizhbook.com
”விண்வெளி மனிதர்கள்” என்ற இந்த நூலை, இதில் விவரிக்கப்பட்டிருக்கும் தகவல்களில் இருந்தே எனது மதிப்புரையைத் தொடங்கவேண்டும் என்று நினைக்கிறேன்.
”அப்பல்லோ – 11 திட்டத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங், பஸ் ஆல்ட்ரின், மைக்கேல் காலின்ஸ் என்ற மூன்று வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். காலின்ஸ் கட்டுப்பாட்டுக்கூடத்தில் தங்கி நிலவின் சுற்று வட்டப்பாதையில் சுற்றிவருவது எனவும், நிலவில் இறங்கும் விண்வெளி ஓடத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் ஆகிய இருவரும் பயணம் செய்வது எனவும் முடிவுசெய்யப்பட்டது.
அப்பல்லோ-11 திட்டம் துவங்குவதற்கு சிறிது நாட்களுக்கு முன்பாக மனித குலத்திலிருந்து முதன்முதலில் நிலவில் காலடி வைக்கப்போகும் அந்த மனிதர் யார்? என்ற ஆர்வம் அமெரிக்கா முழுவதும் தொற்றிக்கொண்டது. நீல் ஆம்ஸ்ட்ராங்கைக் காட்டிலும் பஸ் ஆல்ட்ரின் அதிக கல்வித் தகுதி உடையவராக இருந்தார்.
ஒரு கட்டத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் இடம் முதலில் நிலவில் யார் கால் வைப்பது என்பதை முடிவு செய்து கொள்ளலாம் என்று கேட்டார். ஆனால், அதைப் பற்றி இப்பொழுது கூற இயலாது நமது பயணத்தின்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம். நாம் நிலவில் இறங்கியவுடன் அதைப் பற்றி யோசித்துக் கொள்ளலாம் என்று நீல் ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின் இடம் கூறியிருந்தார்.
நிலவில் இறங்க முயற்சி செய்து கொண்டிருந்த நீல் ஆம்ஸ்ட்ராங் முதலில் திட்டமிட்ட இடத்தில் பெரிய பள்ளங்கள் இருப்பதைக் கண்டார். அங்கே இறங்கினால் பின்னர் மேலே எழும்ப இயலாது என்ற காரணத்தால் பக்கவாட்டில் அவர் விண்கலத்தை நகர்த்திக்கொண்டே சென்றார். அவர் இவ்வாறு நகர்த்திக்கொண்டே சென்றதால் கீழே இறங்குவதற்கு உபயோகிக்கப்படும் எரிபொருளின் அளவு குறைந்துகொண்டே வந்தது.
நிலவில் விண்கலத்தை நிலை நிறுத்திய பொழுது மேலும் 25 வினாடிகளுக்கு இயக்கக்கூடிய எரிபொருள் மட்டுமே இருந்தது. ஜூலை மாதம் 21 ஆம் தேதி 1969 ஆம் ஆண்டு, விண்கலத்தை நிலவில் நிலை நிறுத்திய பிறகு, நீல் ஆம்ஸ்ட்ராங் தனது காலடியை நிலவில் பதித்தார்.
நிலவில் இருந்து கிளம்பி கட்டுப்பாட்டுக் கூடத்திற்கு செல்லத் தயாராகும்போது ஆல்ட்ரின் தவறுதலாக கட்டுப்பாட்டுக் கருவியின் ஒரு பொத்தானை உடைத்துவிட்டார். அது இல்லாமல் அவர்கள் கட்டுப்பாட்டு அறைக்கு வந்து சேர்ந்தனர்.
அப்பல்லோ திட்டத்தைப் பற்றி காலின்ஸ் இடம் ஒரு முறை கேட்ட பொழுது, திட்டத்தின்படி நிலவில் இறங்கிய விண்கலத்திற்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் அதைப்பற்றிக் கவலை இல்லாமல் நீங்கள் மட்டும் புவிக்கு திரும்பவேண்டும் என்பது அவருக்கு கொடுக்கப்பட்ட அறிவுரை என்று கூறியுள்ளார்”.
இந்தத் தகவல் ஒரு உதாரணம்தான். இதுபோன்ற நாம் கேள்விப்பட்டிராத, மயிருகூச்செரியும் தகவல்கள் இந்நூலில் ஏராளமாகக் கொட்டிக்கிடக்கின்றன.
அறிவியல் சம்பந்தமான நூல்கள் எதை வாசித்தாலும் அது பள்ளிக்கூடப் புத்தகங்களை நினைவுபடுத்தும் தன்மைகொண்டது என்ற எண்ணம் என்னுள் எப்போதும் இருந்துகொண்டே இருந்தது. அந்த எண்ணத்தைத் தகர்த்தெறிந்த புத்தகம் என்று சொன்னால் அது இஸ்ரோவில் பணிபுரியும் விஞ்ஞானிகளான பெ.சசிக்குமார் மற்றும் பா.அரவிந்த் ஆகியோர் எழுதி வெளிவந்திருக்கும் “விண்வெளி மனிதர்கள்” என்ற புத்தகம்தான்.
இதுதான் இவர்கள் இருவரும் சேர்ந்து எழுதிய முதல் புத்தகம் என்று சொல்லப்பட்டாலும், நம்மால் சிறிதும் நம்பமுடியவில்லை. அத்தனை தகவல்களை நேர்த்தியாக திரட்டியும், கருத்துச் செறிவுடனும், எளிய நடையோடும் எழுதப்பட்டுள்ளது. முதல் வாசிப்பிலேயே இந்நூல் மீதான ஆச்சரியத்தையும் பிரம்மிப்பையும் ஒருசேர உணரமுடிகிறது.
அறிவியல் சம்பந்தமான நூல்கள் பெரும்பாலும் ஆங்கில மொழியிலேயே கிடைக்கின்றன.. அதில் சில வார்த்தைகள் புரியும் பல வார்த்தைகள் கடைசிவரை புரியவே புரியாது. ஒருவேளை தப்பித்தவறி தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தால், அதற்கு ஆங்கிலமொழியே பரவாயில்லை என்ற எண்ணம் துளிர்த்துவிடும். அந்த அளவுக்கு அதில் பிரயோகிக்கப்பட்டிருக்கும் சொல்லாடல் படுத்தி எடுத்துவிடும்.
ஆனால், இந்நூல் அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, எளிய மொழி நடையில். அதுவும் நேரடித் தமிழ்மொழியில், ஒரு கைதேர்ந்த கதை சொல்லி ஒரு நீள்கதையை சுவாரசியமாகச் சொல்லிச் செல்வதைபோல எழுதப்பட்டிருக்கிறது. இதற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் நாசாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆங்காங்கே இணைக்கப்பட்டுள்ளன.
ஒரு சாமானிய வாசகன் ஒரு திகில் கதையை எப்படி வாசித்துப் புரிந்துகொள்வானோ அதைப்போல, ஒரு இடத்திலும் தொய்வில்லாமல் அடுத்தது என்ன அடுத்தது என்ன என்ற ஆர்வத்தை ஏற்படுத்திச் செல்வதாலேயே இந்நூல் அனைவரையும் கவர்ந்துவிடுகிறது. இந்நூலை பாரதிபுத்தகாலயம் மிகச்சரியாக அடையாளம் கண்டு தேர்ந்தெடுத்து வெளியிட்டிருப்பதற்கு வணக்கங்களும், வாழ்த்துக்களும்.
நம் வாழ்நாளில் காணமுடியாத பிரம்மாண்டம் என்று எதையெல்லாம் கற்பனை செய்துவைத்திருந்தோமோ அதையெல்லாம் கண்முன்னே கொண்டு நிறுத்தினால் எப்படியிருக்கும் அப்படி கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது இந்நூல்.
நாளேடுகளிலும், செய்தி ஊடகங்களிலும் அடிக்கடி கேள்விப்படும், மனிதர்களைக் கொண்டுசெல்லும் விண்கலம், அவற்றில் யார் யார் பயணித்தார்கள் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற பொதுஅறிவுச்செய்திகள் அடங்கிய ஒருகாலப்பெட்டகம் இந்நூல். பள்ளிக்கூட மாணவர்களும், அறிவியல் ஆசிரியர்களும் கண்டிப்பாக வாசிக்கவேண்டிய நூல் என்று சொன்னால் அது மிகையல்ல.
அறிவியலில் ஆர்வம் கொண்ட எல்லா சிறார்களுக்கும் வானத்தில் பறக்கும் வானூர்தி உட்பட விண்கலங்கள், விண்வெளி ஓடம் விண்வெளி நிலையம் போன்றவற்றின் மேல் ஒருவித ஈர்ப்பு இயல்பாகவே இருக்கும்.
இந்நூலை வாசிக்க வாசிக்க நம் ஆர்வம் கூடிக்கொண்டே செல்வதற்கு காரணம், விண்வெளி என்றால் என்ன?, ஏவூர்தி உருவான வரலாறு, விண்வெளி நிலையம் எவ்வாறு இருக்கும்? விண்வெளியில் ஏற்பட்ட விபத்துக்கள், பயணத்திற்கு முன்பான பயிற்சிகளின்போது இறந்தவர்கள், ஏவுவாகனத்தில் இருந்து காப்பாற்றப்பட்ட விண்கலங்கள் என்று ஏராளமான தகவல்கள்தான்.
இதுமட்டுமல்ல, விண்வெளி உடை பற்றிய தகவல்கள் மிகவும் சுவாரஸ்யம் நிறைந்தவையாக இருக்கின்றன. அதில் ஒன்று வாசகர்களின் பார்வைக்காக; “ அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரர் ஆலன் ஷெப்பர்ட், தன் பயணத்திற்கு காலை 6 மணிக்குத் தயாரானார். சுமார் 4 மணி நேரம் காலதாமதம் ஆகியும் குறிப்பிட்டபடி ஏவு ஊர்தி கிளம்புவதாக இல்லை. நீண்ட நேரம் ஊர்தியில் அமர்ந்து இருந்ததாலும், பயணத்திட்டம் தள்ளிப்போன காரணத்தாலும் இயற்கை உபாதையால் சிறுநீர் கழிக்க வேண்டிய அவசியம் அவருக்கு ஏற்பட்டது.
அவர் இதை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு உடனடியாக உபாதையை கழிக்க வேண்டும் என்று தெரியப்படுத்தினார். அவருக்கு உடுத்தப்பட்டிருந்த உடையில் இதற்கான வசதி செய்திருக்கப்படவில்லை. ஒருகட்டத்தில் அவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. நான் இந்த விண்வெளி உடையிலேயே உபாதையை கழிக்கப்போகிறேன் என்று கூறிவிட்டு அதைப்போல் செய்தார்.
கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்களுக்கு சிறுநீர் அங்குள்ள மின்சார பொருட்களில் படும்பொழுது அதன் செயல்பாடுகள் நின்றுவிடும் என்று பயந்தனர். ஆனால் விண்வெளி வீரரின் உடை ஒரு தகுந்த சீதோஷ்ண நிலையில் வைக்கப்பட்டிருந்ததால், சுமார் ஒரு மணி நேரத்தில் ஈரப்பதம் அனைத்தும் ஆவியாகி, உடை உலர்ந்துவிட்டது. அதன்பிறகு, விண்வெளி பயணத்திற்கு தயாரிக்கப்பட்ட உடைகளில் இயற்கை உபாதைகளை உறிஞ்சக்கூடிய நாப்கின்கள் வைக்கப்பட்டன”.
வளர்ந்த நாடுகள் விண்ணில் செலுத்தும் விண்கலங்கள், அவற்றில் பயணிக்கும் விண்வெளி மனிதர்களைப் பற்றி அறிமுகப்படுத்திவிட்டுச் செல்லும் இந்நூல் கொஞ்சம் கொஞ்சமாக விண்வெளியில் வாழ்வதால் ஏற்படும் சவால்களையும் தெளிவாக சொல்லிச்செல்கிறது.
விண்வெளியில் ஆழ்ந்த உறக்கத்திற்கு இடையூறாக பல சவால்கள் இருப்பதை இந்நூல் இவ்வாறு சுட்டிக்காட்டுகிறது. “ முதலாவதாக, இரவுபகல் வேறுபாடுகள். புவியில் 12 மணி நேரம் இரவு, 12 மணி நேரம் பகல் என்று சீராக உள்ளது. விண்வெளி மனிதர்கள் புவிக்கு அருகில் சுற்றிக்கொண்டிருக்கும் பொழுது ஒன்றரை மணி நேரத்தில் அவர்கள் புவியை ஒருமுறை சுற்றி வருகிறார்கள். இதில் ஒரு மணிநேரம் வெளிச்சத்திலும் அரைமணி நேரம் இருட்டிலும் இருக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அடுத்ததாக விண்வெளி நிலையத்தை இயக்கத்தில் வைத்துக்கொள்ள இயங்கும் கருவிகளில் இருந்து ஏற்படும் இரைச்சல்கள். அதுமட்டும் இல்லாமல் நாம் வீட்டில் உறங்குவதுபோல் விண்வெளி நிலையத்தில் அனைவரும் ஒரே நேரத்தில் உறங்குவதற்கான வசதிகளும் இல்லை” போன்ற தகவல்கள் வாசிக்கும் நமக்குப் புதிதிலும் புதிது…
ஒரு வரலாற்று ஆவணத்தைப் பாதுகாத்து வைப்பதற்கு எவ்வளவு பிரயத்தனப்பட வேண்டுமோ, அந்த அளவுக்கு இந்த நூலை பாதுகாத்து வாசிப்பது அவசியம் என்பதை இதைவாசிக்கும் வாசகர்களால் உணரமுடியும்.
விண்வெளி என்றால் என்ன? ஏன் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பவேண்டும்? விண்வெளிப்பயணத்தில் உள்ள பயன்கள் என்ன?, ராக்கெட் உருவான வரலாறு, ராக்கெட்டின் அமைப்பு, அதன் பாகங்கள், மற்றும் சுற்றுவட்டப் பாதைகளில் ஏற்படும் நிகழ்வுகள் ஆகியவை வாசிக்க வாசிக்க சுவாரசியத்தைக் கூட்டிக்கொண்டே செல்கிறது.
விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் போட்டியில் முதன்முதலில் எவற்றையெல்லாம் மற்றும் யார்யாரையெல்லாம் அனுப்பினார்கள், விண்வெளியில் முதலில் உணவுண்ட மனிதர் யார்? விண்வெளி மனிதருக்குக் கொடுக்கப்படும் பயிற்சிகள் என்னென்ன? விண்வெளியில் விலங்குகளில் செய்யப்படும் ஆராய்ச்சிகள், தாவரங்களில் நடத்தப்படும் ஆராய்ச்சிகள், நெருப்பு எரிதல் பற்றிய ஆராய்ச்சிகள், விண்வெளிப் பயணத்தின் எதிர்காலம் எப்படியிருக்கும்? போன்ற தகவல்கள் வாசிக்கும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
முதல் விண்வெளி வீராங்கனை யார்? விண்வெளித்திட்டங்கள் எவ்வாறெல்லாம் ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டது மேலும் இதுவரை விண்ணிற்கு அனுப்பப்பட்ட விண்கலங்களின் பெயர்கள் ஆகியவை கோர்வையாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
283 ஆம் பக்கத்தில் விண்வெளி சாதனையாளர்கள் என்ற பட்டியலை வெளியிட்டுயிருந்தது மிகச்சிறப்பு. போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகும் இன்றைய தலைமுறையினருக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்பதைச் சொல்லத்தேவையில்லை.
இந்நூலைப்பற்றி மதிப்புரை எழுத ஏராளமான விசயங்கள் இருக்கிறது. இம்மதிப்புரையின் நோக்கம் இந்நூலை வாசித்து ஒருவர் மற்றவருக்கு அறிமுகம் செய்யவேண்டும் என்பது மட்டுமல்ல, இன்றைய இளம்தலைமுறையினருக்கு அறிவியலின் மேல் ஆர்வத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதுவும் ஆகும். இந்நூலை வாசிப்பதற்கு முன்பாக இளம்மனங்களில் இருந்துவந்த சந்தேகங்கள் ஒவ்வொன்றாக தீர்ந்துபோவதை உணரமுடியும். இன்றைய காலகட்டத்தில் அனைவராலும் வாசிக்கப்படவேண்டிய புத்தகம் இந்த “விண்வெளி மனிதர்கள்” என்ற நூல்.