கவியோவியத் தொடர்: பீடங்கள் 23 – நா.வே.அருள்
பீடங்கள்
************
ஒரு நாட்டுக்கு
காலத்திற்கு ஏற்ற மன்னனை நியமிப்பது
கடினமான காரியம்.
அவனது சித்திரத்தை
ஒரு பிரபலமான உலைக்களத்தில்
உலோக மனிதனைப்போல வடித்தெடுத்து
வரலாற்றை ஏமாற்ற வேண்டும்.
அதுவும் ஜனநாயக துதிபாடி
வெளிநாடுகளில்
சுற்றிவைக்கப்பட்ட கழிப்பறைத் தாள்களைப்போல
ஓட்டுச் சீட்டுகளின் உருளைகளில்
சுழன்றுவர வேண்டும்.
ரப்பர் பந்தாலான இதயத்தைப்
பொருத்திக் கொள்வதுடன்
கையில் பாசக் கயிற்றுடன்
பறக்கத் தெரிந்த எருமையில் நகர்வலம்.
துப்பாக்கியில் பொருந்துகிற
தோட்டாக்கள்போலக்
கச்சிதமான கண்கள்.
அறிஞர்களின் கொலைகளில் மௌனம்
எறும்பு மிதித்துச் செத்த
யானைக்கு அஞ்சலி
பூமி நாணயமிட
பன்னாட்டு உலோகங்களால் செய்த
புதிய உண்டியல்.
ஏலச் சந்தையில்
விடுதலையின் மியூசிக் ஆல்பம்.
நவீன மன்னனின் கடைசிப் பயிற்சிக் கூடம்
ஏர்க்கலப்பைகளின்
சித்திரவதைக் கூடங்கள்.
கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்