Posted inPoetry
பெண் ஞானி கவிதை – க. புனிதன்
ஆணுக்கு
வீடு வாசல்
தெரு
புளிய மரம்
தம் அடிக்கும்
நிழல் கூடம்
என்று வெவ்வேறு நிலம் இருக்கிறது
வீடு
தெருமுக்கு தேநீர் கடை
எங்கே வேண்டுமானாலும்
தேநீர் பருக முடியும்
புத்தர் உள்பட
எந்த ஆணாய் இருந்தாலும்
துறவி ஆகிறேன் என
வெளியேற முடியும்
களி மண்ணில்
சின்ன சிலை செய்து
வீட்டில் வைத்து கொண்டாடும்
பெண்ணின் துறவறம் வேறு
நறுக்கும்
வெண்டை காயில்
ஒதுக்கி வைக்கும்
காம்பை கூட
கலை பொருளாய் பார்க்கும்
அவள் அக மகிழ்வு வேறு