பெண் குயிலின் பெரும்பாடு – வே. சங்கர்
சூழலியல் கட்டுரை
இப்பூமிப்பந்தின் பூர்வகுடிகளான பறவையினத்திற்கென்று ஒரு வசீகரமுண்டு. அதன் உடலமைப்பு, சிறகின் வண்ணம், குரலின் மென்மை, கூடமைக்கும் முறை, இணையைக் கவரும் உக்தி, பறக்கும் தன்மை என்று சொல்லிக்கொண்டே செல்லலாம்.
பறவைகளே பரவசப்பட்டுப்போகும் அளவுக்கு தமிழில் கவிதைகள் ஏராளம். மெல்லிசையின் ஆதிநாதம்கூட பறவைகளின் கீச்சுக்குரலில் இருந்தே தோன்றியிருக்கவேண்டும் என்பது என் கணிப்பு.
சங்ககாலம் தொட்டே பறவைகளைப் பற்றி ஏராளமான குறிப்புகள் இருப்பதில் வியப்பொன்றுமில்லை. அகண்ட வானின் வாசலை வண்ணமயமாக்குவது வசந்தகாலப் பறவைகளைத் தவிர வேறென்னவாக இருக்கமுடியும்?.
அதிலும், கூவும் குயிலைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அடர்கருப்பு அழகுக்கும், தேன்தடவிய குரலுக்கும் குயில்தானே ஒப்பீடு!. இசைபாடும் பறவைகள் நாட்டுக்கு நாடு ஏராளமாக வரிசைகட்டி நின்றபோதும், அவ்வரிசையில் முதலிடம் பிடிப்பது குயிலாகத்தான் இருக்கமுடியும்.
குயில் என்றவுடனே குழந்தைக்கும் நினைவில் நிற்பது, மனதை இதமாய் வருடும் மந்திரக்குரல்தான். காவியம் படைக்க கிளர்ந்தெளும் கவிஞர்களுக்குக்கூட அதன் நிறமும், காற்றின் வழியே வழிந்தோடும் அதன் குரலும், மனதை மையல்கொள்ளும் ராகமும். இதயம் தொட்டு மென்இதழ் பதிக்கும் இசையும் அவர்களது எழுதுகோலுக்கு ஊற்றப்படும் உற்சாக ’மை’..
எத்தனைதான் இருந்தாலும், ஒன்றைப்பற்றி முழுமையாக அறிந்துகொள்ளாதவரை, அதன்மீது காழ்புணர்வும் எதிர்மறை சிந்தனையும் ஒன்றன்பின் ஒன்றாக எழுவது இயல்புதானே!.
குயிலுக்குக் கூடுகட்டத்தெரியாது, காக்கையை முட்டாளாக்கி அதன் கூட்டில் முட்டையிட்டுவிட்டு பொறுப்பில்லாமல் பறக்கும் சுயநலமிக்க பறவை என்றெண்ணம்தான் சிலரது பொதுப்புத்தியை விட்டு விலகாமல் இருக்கிறது.
அதைவிட, குயிலின் குரலைக் கேட்டவரைவிட அதை நேரில் பார்த்தவர்கள் மிகக்குறைவே. காற்றில் கசிந்து ஒவ்வொருவரின் காதை நிரப்பும் குரலுக்குச் சொந்தம் ஆணா? அல்லது பெண்ணா? என்ற சந்தேகம் என்போன்றோர்க்கு எப்போதுமே உண்டு.
இத்தனை இனிமையான குரல் நிச்சயமாக பெண்குரலாகத்தான் இருக்கும் என்றுதான் நான்கூட பலநாட்களாய் நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால், உண்மையில் அடர்மரங்களில் அமர்ந்துகொண்டு பெண் குயிலின் கவனத்தைக் கவரத்தான் இத்தனை இனிமையாகப் பாடிக்கொண்டிருக்கிறது ஆண்குயில் என்பது மிகத் தாமதமாகத்தான் தெரியவந்தது..
ஆண்குயில் பெரும் குரலெடுத்துக் கூவிக்கொண்டே இருக்கும். பெண்ணில் சம்மதத்திற்கு ஏங்கிக்கொண்டே இருக்கும். அதை ரசித்தாலும் உடனே ஒத்துக்கொள்ளாமல் நீண்ட நேரம் ஏங்கவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்குமாம் பெண்குயில்.
ஒருகட்டத்தில் ஆணின் குரலில் மையல்கொண்ட பெண்குயில். அதன் சூட்சும அழைப்பை ஏற்றுக்கொள்ளும் விதமாக பெண்குயிலும் தன் பங்குக்கு சோகம் இழையோடும் மெல்லிய எதிர்குரலில் சம்மதத்தைத் தெரிவிக்கும்.
பிறகென்ன?, இருவரின் கண்ணசைவில் காதல் கரைபுரண்டோடும். அடர்ந்த மரக்கிளைகளில் அமர்ந்தபடியே கானக்குரலில் கலந்துகட்டிக் கவிதை படிக்கும். இணைபிரியா இருதலைக்காதல் கூடி, பூக்கள் பூத்துக்குலுங்கும் ஐந்துமாத காலமும் இனப்பெருக்கத்திற்கு அச்சாரமிட்டுக்கொள்ளும்.
மேடிட்ட அடிவயிற்றில் உயிர்தோன்றியதும், இனிமையாக கழியவேண்டிய தாய்மைப் பருவம் பதற்றம் கொண்டதாகவே மாறிப்போகும். சுவாரசியமான காதல்கதையில் வில்லன் குறுக்கிடுவதுபோல் இயற்கை, பெண்குயிலுக்கு மட்டும் இடைவிடாமல் ஓரவஞ்சனை செய்யும்.
ஆம், பெண்குயிலின் வாழ்வியலும் வசந்தகாலமும் வாடிவதங்கி சொல்லொண்ணாத் துயரத்தில் துண்டாடப்படும். தன் இனத்தை விருத்தி செய்யவும் பாதுகாக்கவும் எல்லா உயிரினங்களுக்கும் கூடொன்று வேண்டுமல்லவா!
ஆனால், துயரத்திலும் துயரம் கூடுகட்டவும்தான் இட்ட முட்டையை அடைகாக்கவும் தெரியாத பறவையினமாகக் பெண்குயில் பிறந்ததுதான். மாற்றான் கூட்டில் தன் சந்ததியை யாரையோ நம்பி வளர்க்கவேண்டிய உளவியல் சிக்கலும், பெண்ணினத்தின் பெரும்பாடும் இணைந்தே சந்திக்கிறது பெண்குயில்.
தாய்மைஅடைந்த சந்தோசத்தை முழுமையாக அனுபவித்துத் தீர்ப்பதற்குள் ஏதேனும் ஒரு காக்கையின் கூட்டை உடனடியாகத் தேடவேண்டும். கூடுகிடைத்துவிட்டால் போதாது. ஆண்குயில் கூட்டிலிருக்கும் காக்கையின் கவனத்தைத் திசைதிருப்பி நெடுந்தொலைவுக்கு அழைத்துச் செல்லவேண்டும்.
அதற்கு ஒரே வழி காக்கையைக் கோபமூட்டுவதுதான். கோபம் கொண்ட பெண் காகம் ஆண்குயிலைத் துரத்திச் சென்று திரும்புவதற்குள் பெண் குயில் அக்கூட்டில் பரபரக்கும் இதயத்துடிப்போடு முக்கி முனகியேனும் முட்டையிட்டுவிட வேண்டிய நிர்பந்தம். அது சுகப்பிரசவமா அல்லது குறைப்பிரசவமா என்று பார்த்து ஆறுதல் தேடவெல்லாம் அவகாசமிருக்காது.
இட்ட முட்டைகளை ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருக்கும்போதே அலங்கோலமான காக்கைக் கூட்டின் முட்டைநெரிசலில் சில முட்டைகள் தவறிக்கூட கீழே விழுந்துவிடலாம்.
யார்கண்டது அது குயிலின் முட்டையா அல்லது காக்கையின் முட்டையா என்று? கிடைத்த சந்தர்ப்பத்தில் முட்டையிட்டதே பெரும்பாடு. அதுமட்டுமா?, ஆண்குயிலைத் துரத்திச் சென்ற காக்கை திரும்பிவருவதற்குள் அதன் கண்களில் அகப்படாமல் தப்பிக்கவேண்டும்.
கோபத்தோடு தொலைவில் திரும்பி வரும் காக்கையின் கண்களில் பட்டுவிட்டால் அவ்வளவுதான். வாழ்க்கையில் எப்போதாவது சோதனை என்றால் எதிர்கொள்ளலாம். எப்போதுமே சோதனையென்றால் என்னதான் செய்ய?
ஒருவேளை காக்கைக் கூடு கிடைக்கவில்லை என்றால் வேறு ஏதாவது ஒரு பறவையின் கூட்டில் முட்டையிடவேண்டிய பரிதாபநிலை பெண்குயிலுக்குத்தான் உண்டு. இதுபோலவே, குயிலைவிட உருவத்தில் சிறிய சின்னான் பறவையின் கூட்டில் முட்டையிட முடியாமல் திரும்பிய துரதிஷ்டமான தருணங்கள் ஏராளம்.
காக்கையின் கூடு கரடுமுரடாய் முள், குச்சி, கம்பி என்று கிடைத்ததையெல்லாம் கொண்டு கட்டியிருந்தாலும், ஏதோ ஒருவகையில் பெண்குயிலுக்கு முட்டையிட காக்கையின் கூடுதான் தோதாக இருக்கிறது. ஒருவேளை காக்கை தன்குஞ்சுகளையும் சேர்த்துப் பத்திரமாக அடைகாத்துப் பறக்கவிட்டுவிடும் என்ற நம்பிக்கையால்கூட இருக்கலாம்.
காக்கையின் முட்டையைப்போலவே நிறத்தில் ஒன்றாக இருப்பினும் அளவில் குயிலின் முட்டை சிறிதுதான். ஆனால், அளவும் சரி, எண்ணிக்கையையும் சரி காக்கைக்கு பாகுபடுத்தத் தெரியாதது ஒருவிதத்தில் நல்லதுதான். இல்லாவிட்டால் குயிலின் இனம் எப்போதோ காணாமல் போயிருக்கும்.
நிறைந்து வழியும் காக்கையின் கூட்டிலிருந்து குயிலின் முட்டைகள் இரண்டு வாரத்திற்கு முன்னதாகவே பொறித்துவிடும். காக்கையின் குஞ்சுவைப்போலவே நிறத்தில் இருப்பது ஒன்றும் பெரியவிசயமில்லை, குஞ்சாக இருக்கும்போது கரகரத்த காக்கையின் குரலை ஒத்த குரலில்தான் குயிலின் குஞ்சுகளும் ஒலிஎழுப்புகின்றன.
ஆனால், குயில் குஞ்சுகள் வளர வளரத்தான் பிரச்சனை தொடங்கும். ஆண்குயிலின் நிறம் மிளிரும்கருப்பாக இருப்பதால் காக்கை, தன்குஞ்சு பொன்குஞ்சு என்ற ரீதியில் அன்புசெலுத்தும்.
ஆனால், பெண்குயில் வளர வளர பழுப்பு நிறச் சிறகும், மெல்லிய வெள்ளைக் கோடுகளும், பொறிப்பொறியான புள்ளிகளும் தோன்றத்தோன்ற காக்கையின் சந்தேகத்தை வலுப்படுத்திவிடும். என்னதான் தன் கூட்டில் தன் இனக்குஞ்சுகளோடு பிறந்திருந்தாலும் பெண்குயிலின் மேல் எக்கச்சக்க வெறுப்பேற்பட்டு கொத்தத் தொடங்கும்.
முட்டையிலிருந்து வெளிவந்தது தொடங்கி, வயிறார பசிக்கு உணவூட்டிவந்த காக்கையைத் தன் தாய் என்று நம்பிக்கொண்டிருந்த பெண்குயில் ஏன் தன்னைத் தொடர்ந்து கொத்துகிறது என்பதைக்கூட புரிந்துகொள்ளமுடியாமல் தவிக்கும். வலியும் வேதனையும் பொறுக்கமுடியாமல், பெண்குஞ்சு ஒரு கட்டத்தில் ஏக்கத்தோடு அந்த கூட்டிலிருந்து பிரிந்து செல்ல நேரிடும்.
சினிமாவில் வருவதுபோல குடும்பப் பாட்டு என்ற ஒன்று இருந்தபோதும் சொந்தத் தாய் தகப்பன் யார் என்ற அடையாளம் தெரியாமல் தனித்துவாழத் தொடங்குகின்றன பெண் குயில்கள்.
இயற்கையின் குதுகளிப்பில், பருவம் அடைந்ததும் ஆண்குயிலின் இடைவிடாத குரலுக்கு சோகம் இழையோடும் மெல்லிய எதிர்குரலில் சம்மதம் தெரிவிப்பதும் இனிமையான இனப்பெருக்க காலம் முடியுமுன்னே ஏதேனும் ஒரு காக்கையின் கூட்டையோ அல்லது தோதான மற்றொரு பறவையின் கூட்டையோ தேடுவதுமாகவே கழிகிறது பெண்குயிலின் காலம்.
உண்மையில், பறவையினத்தில் பெண்குயிலின் பாடு பெரும்பாடுதான் தோழர்களே.