பென்னாகரம் புத்தகத் திருவிழா 2021
தர்மபுரி மாவட்ட மக்களை அறிவுத்தளத்தில் கொண்டு செல்வதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தர்மபுரியில் தகடூர் புத்தக பேரவை என்ற அமைப்பானது ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாக புத்தகத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று அனைத்து தரப்பு மக்களின் பாராட்டுகளையும் பெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா நோய்த்தொற்று காரணமாக புத்தகத் திருவிழா நடத்த முடியாமல் போனது.
இருப்பினும் வட்டார அளவில் புத்தக கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அந்தந்த பகுதியில் இருக்கும் தன்னார்வ அமைப்புகளை இணைத்துக்கொண்டு தகடூர் புத்தக பேரவை, பாரதி புத்தகாலயம் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. கடந்த செப்டம்பர் 3ந் தேதி முதல் 5 ந்தேதி வரை மூன்று நாட்கள் பென்னாகரத்தில் புத்தக கண்காட்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந்த புத்தக கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளரும் ஏற்பாட்டாளருமான தலைமையாசிரியர் மற்றும் சமூக செயல்பாட்டாளர் மா. பழனி அவர்களிடம் புத்தக கண்காட்சி பற்றிய அனுபவங்களை கேட்டோம்.
தகடூர் புத்தக பேரவை தோற்றுவிக்கப்பட்டு நடத்தப்படுகின்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு நிர்வாகிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறேன்.
வட்டார அளவில் புத்தக கண்காட்சி நடத்த முடிவு எடுக்கப்பட்டு அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர் ஆகிய பகுதிகளில் புத்தக கண்காட்சி நடத்தி முடிக்கப்பட்டது. தொடர்ச்சியாக பென்னாகரத்தில் புத்தக கண்காட்சி நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய முடிவெடுத்து தகடூர் புத்தக பேரவை மற்றும் பாரதி புத்தகாலயத்துடன் இணைந்து ஃப்யூவிஷன் கிளப் பென்னாகரம் புத்தக கண்காட்சியை நடத்த திட்டமிட்டு பணிகளை துவக்கினோம். புத்தகக் கண்காட்சி செப்டம்பர் – 3ந்தேதி காலை 10 மணியளவில் தகடூர்புத்தகப் பேரவையின் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இரா. செந்தில் புத்தக கண்காட்சியை திறந்து வைத்தார். தொடக்கவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட வாசகர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தது மிகப்பெரிய மனநிறைவைத் தந்தது.
வாசகர்கள் பெருவாரியாக புத்தக கண்காட்சிக்கு வருகை தந்து அவர்களுக்கு தேவையான நூல்களை வாங்கி சென்றனர். அத்துடன் விழாக்களில் சால்வை மற்றும் மாலைக்கு பதிலாக புத்தகங்களை பரிசளிக்க முன்வந்து வாசகர்கள் புத்தகங்களை வாங்கியது காண முடிந்தது. மாலை நேர இலக்கிய நிகழ்வுகள் உள்ளூர் எழுத்தாளர்கள் கவிஞர்கள் மூலம் நடத்தப்பட்டது.
மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் புத்தக கண்காட்சிக்கு வந்து புத்தகம் வாங்கி சென்றதை பார்க்கும் போது இனி ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற புத்தகக் கண்காட்சியை பென்னாகரத்தில் தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கி இருக்கிறது. வாசகர்களும் தொடர்ச்சியாக வருடந்தோறும் புத்தக கண்காட்சி நடத்த வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்திருக்கிறார்கள்.
மூன்று நாள் முடிவில் புத்தக விற்பனை ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நடந்துள்ளதாக புத்தக கடைக்காரர்கள் தெரிவித்தது மனதிற்கு இதமாக இருந்தது.
மூன்று நாட்களும் ஒரு குடும்ப விழாவை எப்படி ஒருங்கிணைத்து நடத்த வேண்டுமோ அதே போன்ற உணர்வுடன் ஒருங்கிணைத்து அனைவரின் நட்பையும் அன்பையும் பெற்று சிறப்பாக நடத்துவதற்கு ஃப்யூவிஷன் கிளப் பொறுப்பாளர்கள் முன்வந்தது மிகுந்த மனநிறைவைத் தருவதாக இருந்தது.
இந்த இனிய நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் தலைமை ஆசிரியர்கள் ஓய்வு பெற்றவ அரசுப் பணியாளர்கள் கலந்து கொண்டதோடு பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் வருகை தந்தது சிறப்பு அம்சமாகும். கிராமப்புறங்களில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் நூலகங்களுக்கு புத்தகங்கள் அன்பளிப்பாக அளிப்பதற்கு தொண்டு நிறுவனங்கள் தனிநபர்கள் முயற்சித்தது இந்த புத்தக கண்காட்சியில் சிறப்பு அம்சமாக இருந்தது.
நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவதற்கு முழுமையாக வழிகாட்டிய தகடூர் புத்தக பேரவையின் தலைவர் இரா. சிசுபாலன் அவர்களுக்கும், நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை புரிந்திருந்த அனைத்து சான்றோர் பெருமக்களும் மிகுந்த நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
என்னோடு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவதற்கு இரவு பகல் பாராமல் உழைத்திட்ட ஃப்யூவிஷன் கிளப் பொருளாளர் மணிவண்ணன் மற்றும் தேவகி உட்பட கிளப் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி.
மிகப்பெரிய அளவில் விளம்பரங்கள் செய்து புத்தக கண்காட்சி வெற்றி பெற செய்வதற்கு விளம்பரங்கள் கொடுத்த விளம்பர நிறுவனங்களுக்கும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் இந்த நேரத்தில் நான் மிகுந்த நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். ஒவ்வொரு வருடமும் புத்தக கண்காட்சி நடத்துவதற்கான முயற்சியை தொடர்ந்தும் முன்னெடுப்பது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
கூத்தப்பாடி பழனி
தலைமை ஆசிரியர்,
பென்னாகரம்.