பெண்ணியம் பேசிப் பறக்கும் தமிழ்த்தும்பி கவிதை – பேசும் பிரபாகரன்
கண்டம் விட்டு கண்டம் பாயும்
தட்டான்பூச்சி தம்பி
நீ உயிருள்ள ஹெலிகாப்டர் தும்பி !
நீ தூரத்தில் பறந்தால்
தொலைவில் மழை !
நீ தொடும் தூரத்தில் பறந்தால்
படும் தூரத்தில் மழை !
காலம் காட்டும் கணவானே
கொஞ்சம் கருத்துப் பேசலாம் வா !
நீ நீருக்குள் நெடுங்காலம் வாழ்ந்தாலும்
உன்னிடம் தடுமாற்றம் இல்லை
பாருக்குள் இருக்கும் நீருக்குள்
சென்றுவிடாதே
பறக்கும் பூச்சியான நீ
பாடும் பூச்சி ஆகிவிடுவாய் !
மதுபானம் குடித்து
புது கானம் பாடிவிடுவாய் !
தன் வலிக்கு மருந்தென்று , மது வழிக்கு போவோன்
தனித்தெளிவு பெற
தனித்தமிழ் தும்பியே
தரணியெங்கும் நீ பற !
வசதியான பெண் தேடும்
வக்கில்லா குடும்பத்தார்
அழகான பெண் வேண்டும்
மன அழுக்கான வம்சத்தார்
தகுதி மீறி பெண் பார்க்கும்
தன்னை தான் இகல் பரம்பரையினார்
மனத் திசைகளில் தீ மூட்ட
கொடுந்தமிழ் தும்பியே
குரல் கொடுத்து நீ பற !
பெண்ணடிமை பேதைமை !
பெண்ணுரிமை தோழமை !
பெண் குழந்தை பால் உரிமை !
பெண் விடுதலை பார் கடமை !
என பெண்ணியம் பேசவே
கன்னித்தமிழ் தும்பியே
கானம் பாடி நீ பற!
படித்த பெண் தருவாள் ,
பாருக்கு புத் உலகம் !
பணி செல்லும் பெண் படைப்பாள் ,
தொழில் கூறும் நல்லுலகம் !
எடுத்த செயல் முடிப்பாள் ,
எமனுக்கே வழி சொல்வாள் !
கொடுத்துப்பார் அவளிடத்தில்
கொள்கையும் லட்சியமும்
அவளின்றி ஒரு பொருளும்
அசையாது என்றுணர்வோம்!
அருந்தமிழ் பெருந்தும்பி ,
அழகாக நீ பற!
பேனாவே நீ வா ,
அவள் பெருங்காவியம் படிக்கவுள்ளாள் !
பெரும் படிப்பே நீ வா
அவள் நீ பெருமை பட பணிசெய்வாள் !
முதலாளியே நீ வா
அவள் உனக்கு மூலதனமாய் தானிருப்பாள் !
கலையனைத்தும் கிளம்பி வா ,
அவள் கலை மகளாய் உனக்கருள்வாள் !
அவள் தானே சக்தியென்று
செந்தமிழ் தும்பியே
செம்மையாக நீ பற !
பின் பறக்கத்தெரியும் உன்னைப்போல் ,
பறப்பதிலல்ல சோம்பலில் !
முன் பறக்கவும் தெரியும் உன்னைப்போல்
பறப்பதிலல்ல முன்னேற்றமாய் !
சுற்றி சுற்றி நீ பறப்பாய் 360 பாகையிலும் ,
சுற்றி சுற்றி தான் உழைப்பாள்
அவள் தன் வீடு , தன் நாடு என்று
அவள் வாழ்க்கை நம் வாழ்க்கை
அவள் வாழ்க்கை சமூக வளர்ச்சி
அவள் என்று சொல்லாமல்
அவளை அவர் என்று சொல்லி
அருந்தமிழ் தும்பியே
அவனியெங்கும் நீ பற