நாளை சிவப்பு புத்தக தினம் – பேரா.வெங்கடேஷ் ஆத்ரேயா
மதத்தைப் பற்றி என்ன சொல்கிறது மார்க்சியம்?
1848ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21 ஆம் நாள் நவீன கால மானுட வரலாற்றில் மிக முக்கியமான நாள். அன்றைய தினம் தான் மாமேதை கார்ல் மார்க்ஸ்சும் ஏங்கெல்சும் எழுதிய மகத்தான சிறு நூலான கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை பிரசுரமாக வெளிவந்தது. உலகின் பல மொழிகளில் பிரசுரிக்கப்பட்டு எண்ணற்ற பிரதிகள் விற்பனையாகி, அதைவிட பன்மடங்கு உழைப்பாளி மக்களால் உலகெங்கும் வாசிக்கப்பட்டு நவீன உலகின் போக்கையே நிர்ணயிப்பதில் இச்சிறு நூல் மிக முக்கிய பங்கு வகித்துள்ளது என்றால் அது மிகையாகாது.
உலகம் முழுவதும்
இந்த நாளை பொருத்தமான முறையில் கொண்டாடும் வகையில், 2020 ஆம் ஆண்டு இடதுசாரி பதிப்பகமான லெப்ட்வேர்ட் புக்ஸ் உலகெங்கும் இச்சிறு நூல் வாசிக்கப்படும் நிகழ்வை நடத்தலாம் என்ற ஆலோசனையை முன்வைத்தது. (1999 யுனெஸ்கோ பொது மாநாட்டில் வங்கதேசத்தின் முன்மொழிவின் அடிப்படையில் பிப்ரவரி 21 ‘‘தாய் மொழி தினம்’’ என்று ஐக்கிய நாடுகள் அமைப்பால் பிரகடனப்படுத்தப்பட்ட நாள் என்பது கூடுதல் செய்தி.) லெப்ட்வேர்ட், பாரதி புத்தகாலயம், சிந்தா, நேஷனல் புக் ஏஜென்சி, நவ தெலுங்கானா, பிரஜாசக்தி, மற்றும் வாம் ஆகிய இடதுசாரி பிரசுர நிறுவனங்கள் இணைந்து 2020ஆம் ஆண்டில் முதல் முறையாக பிப்ரவரி 21 நாளை உலக செந்நூல் தினமாக (‘‘வேர்ல்ட் ரெட் புக்ஸ் டே’’) வாசிப்பு இயக்க வடிவில் கொண்டாடினர். உலகெங்கும் பொதுவெளியில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வாசிப்பு அமர்வுகளை நடத்திட அறைகூவல் விட்டனர். உலகெங்கும் பல இடது அமைப்புகள் இவ்வியக்கத்தில் தம்மை இணைத்துக்கொண்டன. 30,000 மக்களுக்கும் மேலாக இந்த வாசிப்பு இயக்கத்தில் பல நாடுகளில் பங்கேற்றனர். இதில் இந்தியாவின் நான்கு தென் மாநிலங்கள் – தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், கேரளம், தமிழகம் – உலகளவில் சிறப்பான பங்கை ஆற்றினர்.
தமிழ்நாட்டில்…
தமிழ்நாட்டில் பாரதி புத்தகாலயமும் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுவும் மிக அதிகமான நிகழ்ச்சிகள் நடத்தின. தமிழகத்தில் மட்டும் 10,000 மக்கள் செந்நூல் விழாவில் பங்கேற்றனர். இதேபோல் 2021 மற்றும் 2022 ஆண்டுகளிலும் செந்நூல் புத்தக தின விழாக்கள் சிறப்பான வாசிப்பு இயக்க நிகழ்வுகளாக நடந்துள்ளன. இந்தியா முழுவதும் செந்நூல் தின விழாக்கள் விரிவாக நடந்தன. 2022 இல் கேரளாவில் 35000 கூட்டங்களில் தோழர் இஎம்எஸ் அவர்களது புத்தகங்களை 5 லட்சம் மக்கள் வாசித்தனர். நாளை சிவப்பு புத்தக தின விழா இந்த ஆண்டும் சிவப்பு புத்தக தின விழா விரிவாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய நாட்டில் மதவெறியைக் கிளப்பி ஆட்சியைக் கைப்பற்றும் தீயசக்திகள் மக்களின் மத நம்பிக்கையை மதவெறியாக மாற்றுவதில் தீவிரமாக உள்ளன. மறுபுறம் நாம் வாழும் சமூகத்தில், அதுவும் தீவிர தாராளமய கொள்கைகளால் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டுவரும் சூழலில் உழைக்கும் மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்த மதம் பற்றிய சரியான புரிதலை நமது அணிகள் உள்வாங்க வேண்டியுள்ளது. இதனை கணக்கில் கொண்டு மார்க்சிய பேரறிஞர்களான மார்க்சும் ஏங்கெல்சும் அவர்களது எழுத்துக்களில் மதம் பற்றிய மார்க்சியப் பார்வையை தெளிவாக முன்வைத்துள்ள சில பகுதிகளை தொகுத்து (இவை ஆங்கில மூலத்தில் இருந்து முற்போக்கு இலக்கிய முன்னோடி தோழர் தொ.மு.சி.ரகுநாதன் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன.) எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் ஒரு விளக்கமான முன்னுரையுடன் அளித்துள்ளார். இந்நூலை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.
மதம் தொடர்பாக மார்க்சியம்
இத்தொகுப்பில் கீழ்க்கண்ட நூல்களில் இருந்து மதம் தொடர்பான மாரக்சிய அணுகுமுறையை விளக்கும் வகையில் சில பகுதிகள் இடம் பெற்றுள்ளன:’
1. ஹெகலின் உரிமைத் தத்துவம் பற்றிய விமர்சனத்துக்கு அளித்த மேற்குறிப்பு – காரல் மார்க்ஸ்
2. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை – மார்க்ஸ், ஏங்கெல்ஸ்
3. திருச்சபை எதிர்ப்பு இயக்கம்- ஹைட் பார்க்கில் ஆர்ப்பாட்டம் – காரல் மார்க்ஸ்
4. மூலதனம், புத்தகம் I – காரல் மார்க்ஸ்
5. ஆரம்பகாலக் கிறிஸ்தவத்தின் சரித்திரம் பற்றி – ஏங்கெல்ஸ் 55
-இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் பலவற்றில் அவை எழுதப்பட்ட காலத்திலானதும் அதற்கு முன்னதாகவும் ஐரோப்பிய நாடுகளில் மதம் பற்றி நிகழ்ந்துள்ள விவாதங்களும் சர்ச்சைகளும் குறிப்பிடப்படுகின்றன. இவை நம்மில் பலருக்கு பரிச்சயமில்லாதவையாகவே இருக்கும். அதேபோல் மார்க்சும் ஏங்கெல்சும் மிகச்சிறந்த எழுத்தாற்றல் கொண்டவர்கள் என்பதால் நையாண்டியுடன் இணைந்து- ஆனால் முன்பின் முரணற்ற இயக்கவியல் பொருள்முதல்வாத நிலைப்பாட்டில் இருந்து ஐரோப்பிய வரலாற்றில் இடம்பெற்ற நிகழ்ச்சிகளையும் விவாதங்களையும் விரிவாக எழுதுகிறார்கள். இவையும் நம்மில் பலருக்கு முன்பே அறிமுகமாகாத விவாதங்களாக இருக்கக் கூடும். எனினும் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் எழுதியுள்ள விளக்க முன்னுரையுடன் இவற்றை புரிந்துகொள்ள இயலும். எனவே தோழர்கள் விரிவான எண்ணிக்கையில் வாசிப்பு இயக்கத்தில் பங்கேற்பது அவர்களுக்கு பல புதிய வெளிச்சங்களை தரும்.
அறிவியல்பூர்வமான புரிதலுக்கு…
பல பகுத்தறிவு வாதிகள் கடவுள் மறுப்பு என்ற நிலைப்பாட்டை வலுவாக முன்வைக்கின்றனர். ஆனால் கடவுள் மறுப்பு மட்டுமே மதம் பற்றிய அறிவியல்பூர்வமான புரிதலை அளிக்காது. இதனை இப்புத்தக வாசிப்பில் தெரிந்துகொள்ளலாம். மதம் பற்றி ஆழமாக விவாதித்த பின்பு ஒரு இடத்தில் ‘மதம் மக்களுக்கு வாய்ந்த அபின்’ என்று கூறியிருக்கிறார். அதற்கு முன்பு என்ன கூறினார் என்பதை மறைத்து, வலதுசாரி அறிவுஜீவிகள் மார்க்சின் ஆழமான புரிதலை புறந்தள்ளி இது தான் மதம் பற்றிய மார்க்சிஸ்டுகளின் புரிதல் என்று கொச்சைப்படுத்துகின்றனர். இப்படி மாரக்சிய அறிவியல் அணுகுமுறை முன்வைக்கும் மதம் பற்றிய தெளிவான அறிவியல் பார்வை மறுக்கப்படுவது மட்டுமின்றி திரிக்கப்படுகிறது. மறைக்கவும் படுகிறது. இந்திய நாட்டிலும் குறிப்பாக தமிழ் நாட்டிலும் மதம் பற்றிய மாரக்சிய அறிவியல் அணுகுமுறை பற்றிய பலவகையான தவறான விமர்சனங்கள் பல தத்துவ நிலைப்பாடுகளில் இருந்து – இவை ஒன்றோடொன்று முரண்பட்டும் உள்ளன – முன்வைக்கப்படுகின்றன. இவை சமூக ஊடகங்களிலும் விரவிக் கிடக்கின்றன. இவற்றையெல்லாம் எதிர்கொள்ள பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள இந்நூல் பெரிதும் உதவும். ச.தமிழ்ச்செல்வன் தனது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளதுபோல், ‘‘கடவுள் உண்டா இல்லையா என்கிற கேள்வியை விட கடவுள் சமூகத்தில் ஏன் தேவைப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்கிற கேள்வி மார்க்சியர்களுக்கு முக்கியமானதாகிறது. கடவுளை நம்புகிற மக்களை முட்டாள்கள் என மார்க்ஸ் சொல்லவில்லை’’.
நன்றி: தீக்கதிர்
நூல் : மதத்தை பற்றி
தமிழில் : ரகுநாதன்
விலை : ரூ.₹80/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]