சிறுகதை: பேராசை – மரு. உடலியங்கியல் பாலா
தொழிலதிபர் ராஜசேகருக்கு தொலைபேசி அழைப்பு வர, “ஹலோ ” என்றார்.
எதிர்முனையில் கட்டையான ஒரு குரல் “உன் மகன் கல்யாண விஷயமா “என்று ஒலிப்பதற்குள்,
இடைமறித்து “ஐயா, முதலில் நான் போட்ற கண்டிஷனுக்கு
ஓகேனா, மேல் கொண்டு பேசலாம் “என கூற
எதிர்க்குரல் “நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க “என்றொலிக்க…
சற்றே எரிச்சலுடன் “நான் சொல்றத நீங்க மொதல்ல கேளுங்க.. எனக்கு ஒரே பையன். என் மருமகள் பிளஸ் 2க்கு மேல படிச்சிருக்கக் கூடாது. மூல நட்சத்திரம், செவ்வாதோஷம், துஷ்ட ஜாதகம் எல்லாம் கூடாது. பொண்ணு சிகப்பா லட்சணமா, மஹாலக்ஷ்மி போல இருக்கணும்..
“வீட்டு வேலை எல்லாம் பொம்பரமா சுழன்று செய்யணும்.. நல்லா சமைக்க தெரிஞ்சிருக்கணும்..
“அதல பாருங்க, எங்க வீட்டு சம்பிரதாயப்படி… வைர செட், 100 சவரன் நகை, பெரிய கார், புல்லட் பைக்..5L கேஷ்.. கண்டிப்பா தரணும்.
“இன்னொரு முக்கியமான விஷயம், கல்யாணத்த, 1500பேர் அமரக்கூடிய பெரிய ஏ சி கல்யாண மண்டபத்துல, பாட்டு கச்சேரி, கெண்டை மேளம், பாண்ட் செட், அரேபியா குதிரைமேல மாப்ள ஊர்வலம், என்று தடபுடலா, உங்க செலவுலயே நடத்தணும். சாப்பாடு பந்தி பிரமாதபடணும்..ஒருத்தனும் ஒரு கொறையும் சொல்லப்படாது.
அப்றமா, இன்னொண்ணையும் சொல்லி போடறேன்.. பொண்ணு அம்மா வூட்டுக்கு அடிக்கடி போக கூடாது…….”
என்று நிறுத்தாமல் தொடர..
எதிர்க்குரல் கடுப்பாகி, “யோவ் நாங்க டி 3 போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து பேசறோம்.. உம் பையன் ஒரு மலையாள மைனர்
பொண்ணைக் கடத்தி காதல் கல்யாணம் பண்ணியிருக்கான்.. அவனை கைது பண்ணி ஸ்டேஷன் லாக் அப்ல, போட்ருக்கோம், உன்னையும் கைது பண்ண வல வீசி தேடறோம்.. ஒழுங்கா உடனே ஸ்டேஷன் வந்து சேரு “என்று அதட்டலுடன் மிரட்ட,
சப்த நாடியும் ஒடுங்கி, மயங்கி விழுந்தார், தொழிலதிபர்.
***********