Peralai Kavithai By S. V. Venugopalan பேரலை கவிதை - எஸ். வி. வேணுகோபாலன்

பேரலை கவிதை – எஸ். வி. வேணுகோபாலன்




பேரலை வந்து
ஓரடி அடித்து மீள்கிறது
கடலுக்கு

குதிரைப் படை ஆட்கள்
மிரட்டிக் கொண்டே செல்கின்றனர்
கரையோரம்

போக்கு காட்டி விட்டு
நீருக்குள் ஓடிச் சென்று
உப்புக் குளியல் போட்டுக்
கரையேறும் சிறுவர்களின்
காலில் பளீர் என்று விழுகிறது
துரத்தி வந்து அடித்துப் போகும்
காவல் துறை ஆசாமி ஒருவரின் கைப் பிரம்பு

அலை மோதுகிறது கூட்டம்
எட்டிப் பார்த்தும்
அருகே வந்து கால் நனைத்தும்
புகைப்படங்கள் எடுத்துக் கொண்டும்
ஒருவர் மீது ஒருவர்
நீரிறைத்துக் கொண்டும்
ஓவென்ற
கூச்சல் எழுப்பிக் கொண்டும்
முன்னும் பின்னும் ஓடியும்
பாம்பைக் கண்டது மாதிரி
பெரிய அலைக்கு பயந்து
வீலென்று அலறி கரையில் ஏறியும்
போதும் போதும் என்று சொல்லியபடி
போதாத உணர்வில்
கடலைப் பிரிய
மனமின்றியும்

இப்போது இருட்டிவிடுகிறது
குதிரையில் வரும் காவல் துறையினர்
இந்த முறை
ஏதோ பெரிய கதவை வைத்துச்
சாத்துவது போல்
கடலைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வந்து மூடப் பார்க்கின்றனர்

கிட்டத் தொலைவில் இருந்து
உருண்டு திரண்டு புரண்டு
பேருரு எடுத்து
ஹோவென்று சீறியடித்து வரும்
பேரலைக்குத் தாங்கமாட்டாது
முன்னிழுக்கப் பார்க்கும் குதிரையின்
லகான் இழுத்து விட்டு
நின்ற இடத்தில் பெருவட்டம் அடித்தும்
இயலாது போகவே
அலுப்பும் சலிப்புமாய்
நகர்ந்து போகிறது
மாநகரத்தின் அதிகாரம்

ஒரு மாபெரும் வேலை நிறுத்தம்
இரண்டாம் நாளும்
வீறு கொண்டு அடித்ததைப்
பார்க்கவும் வாசிக்கவும் பேசிக் கொள்ளவும்
செய்கிறது நாட்டு ஜனம்.