Pothikai Minnal Award for three books published by Bharathi Puthakalayam | பாரதி புத்தகாலயம் வெளியிட்ட மூன்று நூல்களுக்கு பொதிகை மின்னல் விருது

பாரதி புத்தகாலயம் வெளியிட்ட மூன்று நூல்களுக்கு பொதிகை மின்னல் விருது

பாரதி புத்தகாலயம் வெளியிட்ட பெரணமல்லூர் சேகரனின் 'வன்ம மேகம் கலையும் போது', சரிதா ஜோவின் 'சரஸ்வதிக்கு என்னாச்சு' ஷர்மிளாவின் மகிழினி IPS ஆகிய மூன்று நூல்களுக்கு பொதிகை மின்னல் விருது பொதிகை மின்னல் இலக்கிய மாத இதழ் மாநில அளவில் நூல்…
நூல் அறிமுகம் : ஒளிவிளக்கு – பெரணமல்லூர் சேகரன்

நூல் அறிமுகம் : ஒளிவிளக்கு – பெரணமல்லூர் சேகரன்

  தில்லி விவசாயிகள் இயக்கம்: வரவிருக்கும் காலத்திற்கான ஒளிவிளக்கு 12 விவசாய சங்கத் தலைவர்களின் அனுபவச் சித்திரம் தமிழில்..வீ.பா. கணேசன் பாரதி புத்தகாலயம்  2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் நாள் துவங்கி 2021 ஆம் ஆண்டு டிசம்பர்…
நூல் அறிமுகம் வெள்ளி மயிலிறகு டாக்டர் சிரி தமிழாக்கம்: பாலசுப்ரமணியம் nool arimugam vellimayiliragu doctor siri thamizhakam:balasubramaniyam

நூல் அறிமுகம்: வெள்ளி மயிலிறகு – பெரணமல்லூர் சேகரன்


ஆசிரியர்: டாக்டர் சிரி
தமிழில்: ஏ.ஆர்.பாலசுப்பிரமணியம்
பக்கங்கள்: 112
விலை: ₹110
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
புத்தகம் வாங்க இங்கே கிளிக் செய்யவும்: https://thamizhbooks.com/product/velli-mayiliragu/

இன்றைய உலகம் உயர்தொழில்நுட்ப உலகமாக உள்ளது. சிறுவர்கள் கைகளிலும் திறன்பேசிகள் தவழும் காலமிது. இந்நிலையில் வாசிப்பை வசப்படுத்த இளம் பிராயத்தில் இருந்தே துவங்க வேண்டியுள்ளது.

‘ஒரு ஊர்ல ஒரு ராஜா’ எனத் துவங்கி கதை சொல்ல வீடுகளில் மூத்த குடிமக்கள் குறிப்பாக பாட்டிகள் இல்லை. ஒன்று முதியோர் இல்லத்தில் பாட்டிகள் இருக்கும் நிலை. இரண்டு தனியாகவே வாழும் நிலை. மூன்று அபூர்வமாக பாட்டியுடன் வாழும் வாய்ப்பிருந்தாலும் பாட்டி கதை சொல்லவும் குழந்தைகள் அதைக் கேட்கவும் தயாரில்லை.

தாங்க முடியாத புத்தகச் சுமை யுடன் பள்ளிக்குச் சென்று திரும்பும் குழந்தைகள் வீட்டுக்கு வந்ததும் வராததுமாக ட்யூஷன், பாட்டுக்கிளாஸ், டான்ஸ் கிளாஸ், இந்தி கிளாஸ், கராத்தே கிளாஸ் என ஏதேனும் சிலவற்றில் குழந்தைகளைச் சேர்த்துவிட்டு பெற்றோர்கள் குழந்தைகளைப் படுத்தும் பாடு சொல்லி மாளாது.

இந்நிலையில் குழந்தைகள் பாடப்புத்தகங்களைத் தவிர்த்து கதைகளை, பாடல்களை, கட்டுரைகளை உள்ளடக்கிய நூல்களை வாசிக்க வேண்டுமெனில் பெற்றோர்கள் அக்கறை காட்ட வேண்டியது அவசியம். ஆனால் வேலைக்குப் போகும் பெற்றோர்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் உழைப்புச் சுரண்டலில் உழன்று வீட்டுக்கு வந்தவுடன் ஓய்வும் உறக்கமுமே தழுவும் யதார்த்த நிலை. இவற்றையெல்லாம் மீறி குழந்தைகளுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த கடும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். “முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்”
வார விடுமுறை தினத்திலாவது இத்தகைய பணியை மேற்கொள்ளலாம்.

நூல்களை வாசிக்கக் கொடுக்கும்போது அவை கதைகளாகவும் பாடல்களாகவும் இருப்பதே உகந்தது. அத்தகைய கதைகளை உள்ளடக்கி வந்துள்ள நூல் வரிசையில் ‘வெள்ளி மயிலிறகு’ குறிப்பிடத் தக்க சிறுவர் இலக்கியம் எனின் மிகையன்று.

இந்நூலில் உள்ள 20 கதைகளும் சிறுவர்கள் ஆர்வமாகக் கேட்கவும் படிக்கவுமானவை. வாசிக்கக் கேட்பதும் வாசிப்பதும் சிறுவர்களின் அந்தந்த வயதைப் பொறுத்தது.

அறிவுரை சொன்னாலே பிடிக்காத சமுதாயமாக இன்றைய இளைஞர்கள் சமுதாயம் உள்ளது கண்கூடு. எனினும் அப்படியே இளைஞர்களின் போக்கிலேயே விட்டுவிடவும் முடியாது. எனவேதான் கதையைச் சொல்லி அதன் மூலம் இறுதியில் நீதியையோ அறிவுரையையோ சொல்லும்போது அது ஏற்கத்தக்கதாக அமைகிறது.

அத்தகைய கதைகளைக் கொண்ட நூலாக அமைந்துள்ளது ‘வெள்ளி மயிலிறகு’.

முதல் கதையையே நூலின் தலைப்பாக்கியுள்ளார் நூலாசிரியர். அத்தகைய முதல் கதையான ‘வெள்ளி மயிலிறகு’கதை மூலம் ஒருவர் மற்றவர்க்கு உதவி செய்து அதன்மூலம் மகிழ்ந்து வாழ்வதால் ஏற்படும் நன்மையை விலங்குகள் மற்றும் பறவைகள் மூலம் பசுமரத்தாணியாய் சிறுவர்கள் மத்தியில் பதிய வைக்கிறார்.

ஒரு சமூகம் முன்னேறவும் ஒரு குடும்பம் மகிழ்வுடன் வாழவும் உழைப்பு இன்றியமையாதது. அத்தகைய உழைப்பின் அவசியத்தை உணர்த்த வேண்டிய மன்னனே உழைப்பைப் பற்றிக் கவலைப்படவில்லையென்றால் அந்நாடு வளர்ச்சி காணாது. மன்னனையும் உணரச்செய்து மக்களையும் உணரச் செய்து முன்னேற்றம் கண்டதை ‘உண்மையான அரசன்’ கதை மூலம் அறிய முடிகிறது.

நேர்மை என்பது வாழ்வின் ஓர் அங்கம். அதை சிறுவயதிலிருந்தே நேசிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். அதைத்தான் செய்துள்ளது ‘முத்துநிலவனின் நேர்மை’ எனும் கதை.

பிறக்கும்போதே திருடர்களாய் யாரும் பிறப்பதில்லை. சந்தர்ப்ப சூழ்நிலையால் திருடனாக மாறினாலும் திருடனின் தவறை திருடனையே உணரச் செய்து திருந்தி வாழச் செய்தல் குறிப்பிடத்தக்க முக்கிய சேவை. ‘மாறிய திருடன்’ எனும் கதை அதைச் செய்து காட்டியுள்ளது.

‘இடைவிடாத பயிற்சி’ மூலம் எண்ணியதை சாதிக்கலாம் என்பதையும், ‘பட்டாம்பூச்சிகள்’ மூலம் அன்பாக இருக்க வேண்டும் என்பதையும் கற்பித்துள்ளார் நூலாசிரியர்.

கல்வி, கலை எதுவாயினும் தொடர்ந்து கற்று வர வேண்டும். அதன்மூலம் அவற்றில் சிறந்து விளங்க முடியும் என்பதை ‘உண்மையான சிற்பி’ கதை உணர்த்துகிறது.

கழுதையானாலும் அதை மதிப்பவரிடத்தில் அது மகிழ்வுடன் உழைக்கிறது என்னும் கதை மூலம் பிறரை மதித்து நடக்க வேண்டும் என்னும் நல்ல விதைகளை விதைத்துள்ளது பாராட்டத் தக்கது.

ஏட்டுக் கல்வி மட்டுமல்லாமல் அனுபவக் கல்வி, வாழ்க்கைக் கல்வி போன்றவற்றை சிறுவர்கள் கற்க வேண்டும் என்பதை ‘வெற்றிச் செல்வன் கற்ற பாடம்’ மூலம் கற்பிக்கிறார் நூலாசிரியர்.

‘கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்’ என்பது முதுமொழி. அதை ‘கண்ணுக்குத் தெரியாத உண்மை’ என்ற கதையில் போதிக்கிறார் நூலாசிரியர்.

‘நல்லதை மட்டும் கேள். தீயதாக இருந்தால் ஒரு காதில் வாங்கி மறு காதில் விட்டுவிடு’ என்பர் பெரியோர். அதைத்தான் சொல்கிறது ‘கடத்தி-கடத்தி அல்லாதது’ எனும் கதை.

மக்கள் எண்ணங்களை அறிய மாறுவேடத்தில் அரசர்கள் நகர்வலம் வருவது வழக்கம். சில கதைகளில் இது கையாளப்பட்டுள்ளது. அதில் ஒரு கதைதான் ‘அரசர்-அமைச்சர்’. அதே போன்றுதான் அரசனாக இருந்தாலும் குடியானவன் கூறிய அறிவுரையால் சாப்பாட்டுப் பிரியனாய் இருந்த அரசன் மக்கள் பிரியனாய் மாறியதை ஒரு கதையின் மூலம் உணர்த்தியுள்ளார் நூலாசிரியர்.

‘சிவநேசன் சத்திரம்’ எனும் கதை ‘உழைப்புக்கேற்ற ஊதியம்’, ‘பணிச்சுமைக்கேற்ற பணியாளர்’ அவசியம் என்னும் தொழிற்சங்க பாலபாடத்தைப் போதிக்கிறது.

இப்படியாக இருபது கதைகளும் சிறுவர்களுக்கான கதைகளாக வடித்திருந்தாலும் பெரியவர்களும் மனதிற் கொள்ள வேண்டிய கதைகளாகவே உள்ளன.

டாக்டர் சிரியின் தெலுங்கு மொழியிலான இந்நூலை ஏ.ஆர். பாலசுப்ரமணியம் சிறப்பாக மொழிபெயர்த்து வழங்கியுள்ளார். ஒவ்வொரு கதைக்கும் படங்களை இடம் பெறச் செய்து அழகிய முறையில் அச்சிட்டு வழங்கியுள்ள பாரதி புத்தகாலயம் பாராட்டுக்குரியது. இந்நூலை வாங்கி சிறுவர்களுக்கு வழங்குவதும் அவர்களை வாசிக்கச் செய்வதும் இந்நூல் வீட்டு நூலகத்தில் இடம் பெறச் செய்வதும் பெற்றோரின் தலையாய கடமை.

நூல் அறிமுகம்: சா.ரஷீனாவின் ’குழந்தைகள் வாழும் ஆலயம்’ – பெரணமல்லூர் சேகரன்

நூல் அறிமுகம்: சா.ரஷீனாவின் ’குழந்தைகள் வாழும் ஆலயம்’ – பெரணமல்லூர் சேகரன்




“குழந்தைகள் என்றால் தூய்மையான மழைநீர் போல இந்த உலகத்து மாசும் அழுக்கும் படாத தூய்மையான நீர் அது” -மு.வ.

அத்தகைய குழந்தைகள் வாழும் ஆலயம் கல்வி நிறுவனங்கள் எனின் மிகையன்று. எனவேதான்,
“ஒரு நாடு அந்த நாட்டின் கல்வி நிறுவனங்களிலிருந்துதான் உருவாக்கப்படுகிறது” என்றார் டாக்டர் ராதாகிருஷ்ணன்.

ஆக, ஒரு நாட்டை உருவாக்கும் புனிதமான ஆசிரியர் பணியிலிருந்து கொண்டு தமது கடமைகளை அர்ப்பணிப்பு உணர்வுடனும், நேசிப்புடனும் செய்தால் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்பதை அனுபவ வாயிவாக உணர்த்தும் உன்னதமான எளிமையான நூலே “குழந்தைகள் வாழும் ஆலயம்.”

தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் மழலையர் பள்ளிகளிலும் ஆரம்பப் பள்ளிகளிலும் உயர்நிலை மேனிலைப் பள்ளிகளிலும் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களுள் அரசுப் பள்ளி ஆசிரியர்களாக அதிலும் ஆரம்பப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களாகப் பணிபுரிபவர்கள் பெரும்பாலும் பெண்களே. இது ஒருவகையில் குழந்தைகளுடன் பழகும் தாய் போன்ற அனுபவத்தை அவர்களுக்குத் தருகிறது. இதன்மூலம் அக்குழந்தைகளுக்கு அன்பும் அரவணைப்பும் ஈர்ப்பும் ஏற்படுகிறது. பொதுவாகவே கல்வி பயிலும் சூழல் நல்ல முறையில் அமைவதைப் பொறுத்துத்தான் குழந்தைகளைக் கல்வி இயல்பாய்- எளிதாய்ச் சென்று சேர்கிறது.

அத்தகைய சூழலை சில ஆசிரியர்கள்தான் உருவாக்குகிறார்கள். அவர்களுள் குறிப்பிடத்தக்கவராகக் குன்றின் மேலிட்ட விளக்காகத் திகழ்கிறார் சா. ரஷீனா. தான் கல்வி பெற்ற அனுபவங்களையும், பெற்ற கல்வியை அர்த்த அடர்த்தியுடன் கற்பித்து குழந்தைகளைத் தாயுள்ளத்தோடு அணுகி அவர்களைப் பன்முகத் தன்மை கொண்ட மாணவர்களாகப் பரிணமிக்கச் செய்யும் பணிகளை எவ்வாறு மேற்கொண்டார் என்பதைச் சுவைபட தன்னனுபவங்களோடே படம் பிடித்துக் காட்டியுள்ள நூலே “குழந்தைகள் வாழும் ஆலயம்”.

தான் குழந்தையாய் இருக்கும்போது ஏனைய இஸ்லாமியக் குழந்தைகளைப் போல மதரஸா பள்ளியில் சேர்ந்து அரபுப்பாடங்களில் உள்ள அடிப்படைப் பாடங்களை மட்டும் படித்துவிட்டு வீட்டோடு வளர விரும்பிய அன்னையிடம் அப்பாவின் துணையுடன் போராடி கல்வி கற்று, கல்வியைக் கற்பிக்கும் ஆசிரியர் கல்வி கற்கிறார் ரஷீனா. அத்தகைய முயற்சியும், போராட்ட குணமும் தந்தையின் திராவிட இயக்கப் பின்னணியால் வலுவாகிறது.

பின்னர் ஆசிரியர் பணியேற்று தனியார் ஆங்கிலப் பள்ளியில் சில ஆண்டுகள் பணியாற்றிய அனுபவங்களோடு அரசுப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக சேர்ந்த பிறகுதான் ரஷீனாவின் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது.

ஆரம்பப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணி புரிபவர்தான் அனைத்துக்கும் பொறுப்பு என்றாலும் பிற பள்ளிகளின் இடைநிலை ஆசிரியர் போல ‘தானுண்டு தன் வேலையுண்டு’ என்று காலம் கழிக்கவில்லை ரஷீனா. தான் சேர்ந்த பள்ளியில் பயிலும் மாணவர்களைத் தன் குழந்தைகளாக எண்ணி அவர்களின் நலனில் அக்கறை கொண்டு அரவணைத்து அவர்களுக்குப் பாசத்தையும் கல்வியையும் ஊட்டிய பாங்கு மகத்தானது.

குழந்தைகள் தன்னை “லாங் ஹேர் மிஸ்”, என்றதும், “டீச்சர் நீங்க ரொம்ப அழகாயிருக்கீங்க” என்றதும், “டீச்சர், உங்க புடவை நல்லாயிருக்கு” என்றதும் ரஷீனா இன்னும் குழந்தைகளை நெருங்க வைத்தது.

“வகுப்பறை என்பது என்னைப் பொறுத்தவரை தவம் மேற்கொள்ளும் இடம். அந்த தவத்தினால் கிடைக்கும் வரங்களைக் குழந்தைகளிடம் கொண்டு சேர்ப்பதில் ஒரு மகிழ்ச்சி. வகுப்பைக் கலகலப்போடு நடத்தவேண்டுமென்று முயற்சிப்பவள் நான்.” எனக்கூறும் ரஷீனா அப்படியே செய்து காட்டியுள்ளார். மேலும் “வகுப்பறை என்பது குழந்தைகளிடம் கற்றுக்கொள்ளும் இடமாகவே தோன்றியது” என்பதைத் தமது சொந்த அனுபவமாகவே கூறியுள்ளது சிறப்பு.

ஆண்டுவிழாவே நடத்தாத பள்ளியாக இருந்ததை மக்கள் பங்களிப்புடன் ஆண்டுவிழா நடத்தி குழந்தைகளின் திறமைகளை வெளியுலகுக்குக் கொண்டுவந்து பெற்றோர்களின் உள்ளங்களை மகிழ்வித்து அவர்களின் உள்ளங்களில் ரஷீனா இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

பல்லாண்டுகளாக சும்மா கிடந்த பள்ளித் தோட்டத்தை மாணவர்களைக் கொண்டே பண்படுத்தி கீரைகளையும் காய்களையும் பயிர் செய்து சாதனை படைத்ததும் பள்ளித் தோட்டத்தில் குழந்தைகளின் கரங்களாலேயே மரக்கன்றுகள் நட்டதும் சிறப்பு. விதைப்பந்து விநாயகர்களை உருவாக்கி, இஸ்லாமிய ஆசிரியையாக ரஷீனா இருந்தபோதிலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடியதும், அவ்விநாயக மண்சிலைகளைக் கரைப்பதன் மூலம் அதன் விதைகள் செடிகளானதும் ரஷீனா மேற்கொண்ட வித்தியாசமான முயற்சி.

நான்கு வயதே ஆனாலும் பெற்றோர் ஆசையை நிராகரிக்காமல் தர்ஷினி என்ற குழந்தையைப் பள்ளியில் அனுமதித்தார் ரஷீனா. அக்குழந்தைக்குப் பயிற்சி கொடுத்துத் தொய்வு ஏற்பட்ட போதெல்லாம் ஊக்கப்படுத்தி பிற்காலத்தில் 1330 குறட்பாக்களையும் ஒப்புவித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடத்திலும், கல்வியமைச்சர் கரங்களாலும் விருது பெற்றது சாதனைதான். மேலும் கொரோனா காலத்தில் பள்ளிக்கு விடுமுறை ஆயினும் குழந்தைகளின் வீடுகளுக்கே சென்று கல்வி கற்பித்த ரஷீனாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இதன்மூலம் ‘திருக்குறள் உலக சாதனைக்காக பயிற்றுனர்’ எனும் விருதைப் பெற்றது ரஷீனாவின் இடைவிடாத முயற்சிக்குக் கிடைத்த வெற்றி.

அன்பால் அரவணைத்து கல்லாங்குத்து எனும் கிராமத்தின் அரசுப்பள்ளி மாணவர்களை ஈர்த்து உயரம் கண்ட ரஷீனா “அன்பாசிரியர்” எனும் விருதைக் கல்வி அமைச்சர் மூலமாகப் பெற்றபோது “ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்” எனும் குறள்படி ரஷீனாவின் தாய் , தந்தை, கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் என மகிழ்ந்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் இடைநிலை ஆசிரியர் நிலையில் தலைமை ஆசிரியரைக்காட்டிலும் இடைவிடாதியங்கிய ரஷீனா தன் பள்ளியை ,”ஸ்மார்ட். கிளாஸ்” ஆக்குவதற்குப் பெரு முயற்சி எடுத்து வெற்றியும் பெற்றது சாதாரணமானதன்று. 28.3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உருவான “ஸ்மார்ட் வகுப்பும் கட்டிடமும்” தலைமை ஆசிரியையைத் தாண்டி ரஷீனா சாதித்தது எனின் மிகையன்று. மாவட்ட ஆட்சியர் அவ்வகுப்பறையைக் காண அப்பள்ளிக்கு வந்ததும் குழந்தைகளைத் தட்டிக் கொடுத்ததும் குழந்தைகளுக்குப் பசுமரத்தாணி போல் பதிந்தது.

குழந்தைகளுக்குக் கதைகளைச் சொல்லி மனமகிழச் செய்த ரஷீனா ‘ஆயிஷா’ கதையைச் சொன்னபோது, “ஆயிஷா செத்திருக்கக்கூடாது, படித்துப் பெரிய ஆளாக வந்திருக்க வேண்டும்” என்று குழந்தைகள் ஆதங்கப்பட்டதைப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர் ரஷீனா.

பொன்னூரில் நடைபெற்ற திருக்குறள் ஆய்வு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பேராசிரியர் அருணன், அந்நிகழ்வில் பங்கேற்று உலக சாதனை நிகழ்த்திய தனது மாணவி தர்ஷினியையும் பயிற்சி அளித்த தன்னையும் பாராட்டியதைக் குறிப்பிட்டு ரஷீனா மகிழ்ந்துள்ளார் இந்நூலில். தர்ஷினி தனக்குக் கிடைத்த பணத்தைக் கொரோனா நிவாரண நிதியளிக்கும் வகையில் சமூக ஆர்வலராக மாற்றிய பெருமை ரஷீனாவையே சாரும்.

மாணவர்களின் திறமைகளைத் தமது முகநூலில் பகிர்ந்தது, அதன்மூலம் முகநூல் நண்பர்களால் மாணவர்களுக்குப் பரிசுப்பொருட்கள் கிடைத்ததும் அதன்மூலம் சிறுசேமிப்புப் பழக்கத்தை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தியதையும் பகிர்ந்து மகிழ்கிறார் ரஷீனா.

மாணவர்களை இன்பச் சுற்றுலா அழைத்துச் சென்றது ஒருபுறம் எனில் மறுபுறம் அவர்களை வாசிப்பாளர்களாக்கப் புத்தகத் திருவிழாவுக்கு அழைத்துச் சென்றதும் இனிய அனுபவங்கள்தானே.

இத்தகையைச் சாதனையாளருக்கு மாநில அளவிலான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது குறுகிய காலத்திலேயே மாநில கல்வி அமைச்சர் மூலமாக வழங்கப்பட்டது விருதுக்குத்தானே சிறப்பு சேர்க்கும்.

இத்தகைய தன்னனுபவங்களை எளிய நடையில் நூலாக்கி வழங்கியுள்ள ரஷீனா அவரது நூலையும் சென்னை புத்தகத் திருவிழாவில் கண்டபோது புல்லரிக்கிறார். இத்தகைய சாதனையாளர் ரஷீனாவின் நூலை வாங்கிப் படிப்பது ஆசிரியப் பெருமக்களுக்கு மட்டுமல்ல வாசிப்புப் பழக்கம் உள்ள அனைவருக்குமே அவசியம் எனின் மிகையன்று.

..பெரணமல்லூர் சேகரன்

நூல் அறிமுகம்: பல்லவி குமாரின் ”உதிரும் பூக்களின் இறுதிக் கவிதைகள்” – பெரணமல்லூர் சேகரன்

நூல் அறிமுகம்: பல்லவி குமாரின் ”உதிரும் பூக்களின் இறுதிக் கவிதைகள்” – பெரணமல்லூர் சேகரன்




“படகெல்லாம் மூழ்கவில்லை
தோணிகள் அங்கங்கே
துணை அற்றுக் கிடந்தாலும்
துறை இன்னும் மூழ்காமல்
துடிப்புடனே இருக்கிறது”

இப்படி ஒரு இறுதிக்கால கவிதையைப் படித்துக் கொண்டிருந்த போதுதான் பல்லவி குமாரின் ‘உதிரும் பூக்களின் இறுதிக் கவிதைகள்’ எனும் நூல் கிடைத்தது. என்னே ஒரு பொருத்தம்!

பொதுவாகவே துன்பியல் குறித்து ஆர்வம் காட்டாதது தமிழ்கூறும் நல்லுலகம். துன்பியலே எல்லாமுமாக எனும்படியானது இறுதிக்காலம். ஏனெனில் பெரும்பான்மையோர் தனது இறப்பு குறித்துக் கவலைப்படுபவர்ககளாக, அச்சப்படுபவர்களாகத்தான் தமிழர்கள் அறியப்பட்டுள்ளனர். மிகச்சிலரே விதிவிலக்கு. இந்நிலையில் உலக அளவிலான எனும்படியாக இல்லையென்றாலும் பல மொழிகளில் வெளியான இறுதிக் கவிதைகளைத் தேடிப் பிடித்து அவை குறித்தான ஆய்வுகளை மேற்கொண்டு கட்டுரைகளாக பல்வேறு இதழ்களில் வெளியிட்டு அவற்றைத் தொகுப்பாகவும் கொண்டு வந்துள்ளதன் துணிவும் மெனக்கெடலும் மிகவும் பாராட்டத் தக்கவை. அவ்வகையில் பல்லவி குமாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இந்நூலில் இடம் பெற்றுள்ள 11 கட்டுரைகளும் இறுதிக் கவிதைகளையும் அவற்றுக்கான விளக்கங்களையும் பெற்றுள்ளன. ஒவ்வொரு கட்டுரையாக வாசிக்கும்போது வியப்பு மேலிடுகிறது. தனது இறுதிக் காலத்தை முன்கூட்டி உணர்தல், தாமாகவே தமது மரணத்தைத் தேடிக் கொள்ளுதல், அத்தகைய காலகட்டத்திலும் கவிதையைக் கட்டாயமாக எழுதிவைத்து விட்டுப் போதல் ஆகிய அம்சங்களில் வியப்பு மேலிடுவது இயல்புதானே!

மனிதனின் வாழ்க்கை ஒரு பூவிற்கு சமமானது. அதன் புனிதத்தால் அது மலர்கிறது. அதன்மீது பனித்துளிகள் விழலாம். அதிலும் சூரியனின் ஒளி பண்ணலாம். அல்லது அது ஒரு காட்சியாகவோ கனவாகவோ தோன்றலாம். ஆனால் இவையாவும் இயற்கைக்குப் புறத்தே இருந்து வருவதொன்றுமில்லை. அவையாவும் இயற்கையின் உள்ளிருந்தே தோன்றுகின்றன. இவ்வுலகினில் எதுவும் நிரந்தரமல்ல. எதுவும் நிலையானதுமல்ல. இயற்கையின் தோற்றம் அனைத்தும் இயற்கையுடன் இணைந்து விடுவதுதான் இயற்கையின் விதி. இது இவ்வுலகின் பிறப்பிற்கும் மற்றும் இறப்பிற்குப் பொருந்தும்.
இயற்கை என்பதுதான் நிரந்தரமானது என்ற புரிதல் ஜப்பானியர்களுக்கு உள்ளது சிறப்பு.

ஜப்பானியர்கள் பிறப்பு மற்றும் வாழ்வினைப் போலவே இறப்பும் ஒரு நிறைவான செயல் என்று கருதுவதை மும் அவர்கள் வாழந்ததற்கு அடையாளமாக உள்ள சமுதாயத்திற்கு நன்றி சொல்லவே இறப்பிற்கு முன்பு கவிதை எழுதும் வழக்கமும் கொண்டிருப்பது உண்மையில் வியப்பூட்டுவதாகவே உள்ளது.

“அழிவைத் தரும் கத்தி
அதனை விளையாட்டுத் திடலின்
பக்கத்தில் பதித்து வைத்தேன்
ஐயோ! அந்தக் கத்தி”

எனும் பாடலைப் பாடி முடித்தவுடன் யாமாட்டோ டேக்ரு-நோ-மிக்கோடோ இறந்து விட்டதாகப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.

ஜப்பானிய கவிதைகளின் தந்தை என்று போற்றப்படுபவரான காகிநோமோட்டோ-நோ-ஹிட்டோமாரோ தமது மரணக் கவிதையாக இப்படி எழுதுகிறார்.

“எனக்குத் தெரியவில்லை
எனது உடல் கிடக்கிறது
காமோ மலைப்பாதையில்
எனது காதல்
எனக்காகக் காத்திருக்கிறது”

மரணக் கவிதை எழுதுவது வியப்பென்றால் வாள் பாய்ச்சி மரித்துப் போவது அதிர்ச்சியல்லவா?

“தேவையில்லையென வெட்டிய கிளை போல
மண்ணில் பாதி புதைந்துள்ளேன்
எனது வாழ்க்கை
இனிய மலர் முடியாது -வந்தது
இந்த சோக முடிவு”

இந்தக் கவிதையும் யோரிமாசா தன் கையிலிருந்த வாளைத் நன வயிற்றுக்குள் பாய்ச்சி மரணமடைந்தார் என்பது பெரும் சோகம் தானே!

புத்தத் துறவிகளின் மரணக் கவிதைகள் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன.
சுவாங்-சூ எனும் புத்தத்துறவி இறக்கும் நிலேயிலிருந்தபோது, அவரது சீடர்கள் அவருக்கு ஆடம்பரமான இறுதிச் சடங்குகளைச் செய்ய ஏற்பாடு செய்திருந்த நிலையில் சுவாங்-சூ அடக்கத்திற்கான அனைத்து அலங்காரங்களும் ஏற்கெனவே இருக்கின்றன என்றும் தமது சவப்பெட்டியினை வானமும் பூமியும் அலங்கரித்திருப்பதாகவும் ஆபரணங்களாக நட்சத்திரங்கள் மின்னுகின்றன என்றும் உலகின் பத்தாயிரம் விஷயங்கள் பரிசுப் பொருளாக இருக்கின்றன எனக் கூறியதோடு “தரையின் மேலே கழுகுகள் மற்றும் காகங்கள் என்னை சாப்பிடும் முந்தைய வர்களுக்கு உணவளிப்பதைத் தடுப்பது நியாயமானதில்லை” என்று கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.

சில ஜென் துறவிகள் இறப்புக் கவிதை எழுதும் நடைமுறைகளுக்கு எதிராகவும் இருந்துள்ளனர். அவர்கள் இதனைக் கடுமையாகவும் விமர்சித்துள்ளனர் என்ற பதிவையும் இந்நூலில் காண முடிகிறது.

தாம் இறக்கும் தேதியை முன்கூட்டி அறிந்து அறிவிப்பது பெரும் வியப்பூட்டுவதாக உள்ளது. ‘தேசிய ஆசிரியர்’ என்று பட்டமளிப்பு அழைக்கப்பட்ட என்னீ எனும் புத்தத் துறவி 1280 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் தமது 79வது வயதில் இறந்துவிடுவதாக அறிவித்து தன்னுடைய இறப்பினை முரசறிவித்துத் தெரிவிக்குமாறு கட்டளையிட்டார். பின்னர் ஒரு நாற்காலியில் அமர்ந்தார். அவருடைய இறுதிக்கவிதையினை எழுதினார். தேதியினைக் குறிப்பிட்டுக் கையெழுத்திட்டார். சற்று நேரத்தில் உயிர் துறந்தார் என்பது நம்புதற்கரிதாகவே உள்ளது. அவரது இறுதிக் கவிதை:-
“வாழ்நாள் முழுதும் மக்களுக்கு சென் போதித்தேன்
ஒன்பது மற்றும் எழுபது ஆண்டுகள்
விவரங்களை உணராதவர்கள் அதனைப் பார்க்கிறார்கள்
சென் ஒருபோதும் தெரிவதில்லை”

டெட்சூஜென் டோகோ எனும் புகழ்பெற்ற அறிஞர் 1682 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் பஞ்சத்தின் போது தமது பெருஞ்செல்வத்தை மக்களுக்காகப் பயன்படுத்தியுள்ளதையும் அதன் மூலம் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அவரால் காப்பாற்றப்பட்டதும் இந்நூல் மூலம் அறியமுடிகிறது. மேலும் அவர் “ஏழைகளுக்கு உணவளிக்க நாம் கோயில்களையும் கூட விற்கலாம்” எனக் கூறிய பதிவுகள் சிறப்பு வாய்ந்தவை. அவரது நேர்த்தியான இறுதிக் கவிதை இதோ:-

“முழுவதும் பெரிய மாற்றங்கள் நிறைந்தவை
எனது மூன்று மற்றும் ஐம்பது ஆண்டுகள்
புனித எழுத்து குறித்த என் கருத்து-ஒரு பெரும் பாவம்
அது வானத்தில் எதிரொலித்தது
இப்போது நான் தாமரை மலர்ந்த ஏரியில் பயணிக்கிறேன்
அத்துடன் தண்ணீருக்குள் இருக்கும் வானத்தை உடைக்க”

சாமுராய் என அழைக்கப்பட்ட ஜப்பானிய போர் வீரர்கள் விசுவாசத்திற்காகவும் நாட்டிற்காகவும் மன்னருக்காகவும் போரில் ஏற்பட்ட தோல்விக்காகவும்
தங்களை மாய்த்துக் கொள்ளும் பழக்கம் மூட நம்பிக்கையாக இருப்பினும் அக்காலகட்டத்தில் மரணக் கவிதைகளையும் எழுதியுள்ளது வியப்பூட்டுகிறது.

சுகிடோமோ எனும் சாமுராய் போர் வீரர் விலங்கு கொம்பினாலான எறிந்து தாக்கும் ஆயுதம் ஒன்றின் மேல் அமர்ந்துகொண்டு வாழ்விற்கு விடை கொடுக்கும் கீழ்க்கண்ட இறுதிக் கவிதையை எழுதியதும் அக்கவிதை புத்தமதச் சிந்தனைகள் பொதிந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

“பஞ்சபூதங்கள் என்னில் வெளியேற இறங்கிவிட்டன
அதில் நான்கு திரும்பவும் கீழ்ப்படிய மறுக்கின்றன
நான் என் கழுத்தினை உறை விடுத்த கத்தியில் வைத்தேன்
அதன் வெட்டு எனக்கான காற்றின் சுவாசம் போன்றது”

இறப்புக் கவிதைகள் எழுதுவதில் பெண்களும் சளைத்தவர்கள் அல்லர் என்பது இந்நூல் மூலம் தெரிகிறது. ரோமுரா பூடா எனும் பெண் கவிஞரின் தமது இறுதிக் கவிதையை இப்படி எழுதி விட்டுத் தம் உயிரை மாய்த்துக் கொள்கிறார்.
“பயனில்லாத எனது உடலில்
பாசிப் படர்ந்து விட்டது
அது வளர்ந்து வருகிறது
இதில் நாட்டுப்பற்று மட்டும்
என்றுமே சிதைவடையாது”

காதலர்களும் தங்களது இறுதிக் கவிதைகளை எழுதியுள்ளதைப் பல கவிதைகள் மூலம் உணர்த்துகிறார் நூலாசிரியர்.

“நான் காதலித்த அவன்
என் பேச்சைக் கேட்கவில்லை
உன்னிடம் எனது கோரிக்கை
அவன் என்னைப் பிரிந்து விட்டான்
என் வாழ்க்கை மங்கிப் போகிறது”

“எனது நாட்கள் நீளமாகவுள்ளன
இருண்மை இன்னும் நீடிக்கிறது
நான் உலகை விட்டுப் பிரியமாட்டேன்
இறப்பின் வழியில் மலைமீதேறி
நான் நிலவைக் கைப்பற்றுவேன்”
போன்றவை சான்றுகளாகும்.

ஹைக்கூவின் தந்தை மாஸ்கோவின் இறுதிக் கவிதை:
“பயணத்தால் நோயில் விழுந்தேன்
என் கனவுகள் அலைந்தன
காய்ந்த புற்கள் வயற்பரப்பில்”

கொரிய இறுதிக் கவிதைகளுள் ஒன்று:
“இவ்வுடல் இறக்கும்
இறக்கட்டும் மீண்டும்
நூறு முறைக்கு மேல்
வெள்ளை எலும்புகள் தூளாகட்டும்
ஆன்மாவைக் கண்டும
காணாமல்
இறைவனை நோக்கியே இருக்கும்
எனது இதயம் சிறிதும் மாற்றிவிடாது.”

சீனாவில் தவறு செய்பவர்கள் தானே தம்மை மாய்த்துக் கொள்ளும் பழக்கமும் இறுதிக் கவிதை எழுதும் வழக்கமும் இருந்திருக்கிறது.

“வடக்கின் கண்ணாடி
தெற்கில் நிற்கவில்லை
வாரிசு யாரெனச் சொல்லிவிடும்
வாய்ப்பும் எனக்கில்லை
இல்லாத ஒருவனின்
இருப்பினை எப்படி
இன்னொருவர் அறியமுடியும்
எதையும் புத்தனிடம் ஒப்படை
எல்லாம் நிறைவாகும்”

இறுதிக்கவிதையில் அவமானம், அடிமைத்தனம் பற்றிய கருத்துக்கள் தெருப்பாடலிலும் ஒலித்துள்ளது. அதற்குச் சான்று இதோ:-

“நாம் போராடவில்லை யெனில்
நம் எதிரிகள்
நம்மைக் கொன்று விடுவார்கள்
அவர்களின் துப்பாக்கி முனையுடன்
அழுத்தமான எங்களின் எலும்புகளை
சுட்டிக்காட்டிச் சொல்லுங்கள்
சுதந்திரம் நம் வசமாகும்
பாருங்கள் அவர்கள் அடிமைகள்”

பிற நாடுகளின் இறப்புக் கவிதைகளைப் பேசிவிட்டு நம் நாட்டு இறப்புக் கவிதைகளை விடுவாரா நூலாசிரியர்?

இந்தியாவில் இறப்புக் கவிதைகளாக திருமந்திரத்தில் சில கையாளப்பட்டுள்ளன.

வள்ளலாரை விட மென்மையாக இருந்துள்ளார் கபீர்தாசர் எனக் கூறும் அதற்குச் சான்றாக அவரது கவிதை ஒன்றினைப் பொருத்தமாகப் பதிவு செய்துள்ளார் பல்லவி குமார்.
“பூக்களைச் பறிக்காதீர்
வலிக்கும் அதற்கும்
எனக்கும்.”

“பண்டம்பெய் கூரை பழகி விழுந்ததில் கல்
உண்ட அப் பெண்டிரும் மக்களும் பின் செலார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழி நடவாதே”

ஒரு மனிதனின் மரணத்திற்குப்பின் அவனது ஆவியுடன் வருவனவற்றையும் வராதவற்றையும் திருமூலரின் மேற்கண்ட பாடல் குறிப்பிடுகிறது.
பட்டினத்தாரின் “காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே” என்பதும் கையாளப்பட்டுள்ளது.

நேரு தம் கைப்பட ஒரு காகிதத்தில் எழுதி இறுதிக்காலத்தில் தலையணைக்கு அடியில் வைத்திருந்தது ஆங்கிலக் கவிஞர் ராபர்ட் பிராஸ்டின் கவிதை வரிகள்:-
“காடுகள்
அழகாக இருக்கின்றன
அவைகள் இருண்டு இருக்கின்றன
ஆனாலும்
நான் சில வாக்குறுதிகளை
நிறைவேற்ற வேண்டியிருக்கிறது
தூங்குவதற்கு முன்பாக
நெடுந்தூரம் பயணிக்க வேண்டியுள்ளது”

இறுதியாக ‘தமிழ் இலக்கியத்தில் இறப்புச் சிந்தனைகள்’ எனும் கட்டுரையில்
“வினை விதைத்தவன்
வினை அறுப்பான்
தினை விதைத்தவன்
தினை அறுப்பான்”

என்ற பழமொழியையும்

“யாதும் ஊரே யாவருங் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நோதலுந் தணிதல மவற்றோ
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்று மிலமே
முனிவின்
இன்னா தென்றாலு மிலமே”
எனும் கலியன் பூங்குன்றனாரரின் புறநானூற்றுப் பாடலும் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.

கணைக்கால் இரும்பொறையின் நிலைக்குத் தானே இரங்கிப் பாடிய

“குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆள் அன்று என்று வாளின் தப்பார்,
தொடர்ப் படுஞமலியின் இடர்ப் படுத்து இரீஇய
கேள்அல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி, வயிற்றிதுத். கீத் தணிய
தாம் இருந்து உண்ணும் அளவை
ஈன்மரோ இவ்வுலகத்தானே”

பாடல் குறிப்பிடப்பட்டுள்ளதும் மகா கவி பாரதியின்,
“காலா உன்னைச் சிறு புல்லென
மதிக்கிறேன்-என்றன்
காதருகே வாடா சற்றே உன்னை
மிதிக்கிறேன்”
எனும் இறுதிக் கவிதையும் சிறப்பு.

கடைசியாக இக்காலக் கவிஞர்களான கண்ணதாசனின்,
“வாழ்க்கை என்பது வியாபாரம்
ஜனனம் என்பது வரவாகும்
மரணம் என்பது செலவாகும்”

வாலியின்,
“பிறந்தாலும் பாலை ஊட்டுவார்-இங்கே
இறந்தாலும் பாலை ஊற்றுவார்
உண்டாவது கொண்டால்தான்
ஊர் போவது நாலால தான்
கருவோடு வந்தது
தெருவோடு போனது
மெய்யென்று
மேனியை யார் சொன்னது?
போன்ற பாடல்களைக் குறிப்பிட்டு சிந்திக்க வைக்கிறார் பல்லவி குமார். அத்துடன் ஜப்பானில் உள்ளதைப் போல இறப்பினை நேசிக்கும் வழக்கம் நம்மிடையே இல்லை எனக்குறிப்பிட்டுள்ளது அர்த்த அடர்த்தி மிக்கது.

வித்தியாசமான சிந்தனையுடன் எழுதப்பட்ட இக் கட்டுரைத் தொகுப்பிற்கு எழுதிய அணிந்துரையில் பொன்.குமார் “அவை இறவாக் கவிதைகள். இதயத்தை வருடுகின்றன. இறந்தவர்களை இருக்கச் செய்கின்றன. பல்லவி குமாருக்கு ஒரு பெயர் சொல்லும் தொகுப்பாகும் “உதிரும் பூக்களின் இறுதிக் கவிதைகள்” குறிப்பிட்டுள்ளது பொருத்தமானது. தொடரட்டும் பல்லவி குமாரின் வித்தியாசமான முயற்சிகள். படைக்கட்டும் மாறுபட்ட படைப்புகள்.

– பெரணமல்லூர் சேகரன்.

நூல் அறிமுகம்: பல்லவி குமாரின் ‘ஊடு இழை’ சிறுகதை – பெரணமல்லூர் சேகரன்

நூல் அறிமுகம்: பல்லவி குமாரின் ‘ஊடு இழை’ சிறுகதை – பெரணமல்லூர் சேகரன்



ஊடும் பாவுமான எளிய மக்களின் வாழ்க்கைக் கதைகள்
———————-
“இலக்கியத்தைக் கட்டளையிட்டு உருவாக்க முடியாது” என்பார் லெனின். உண்மைதான். இயல்பாய் இழைந்தோடும் அருவி போன்றது இலக்கியம். வாழ்வனுபவத்தின் கண்ணாடியால்.. பல வண்ணங்களோடு பல வடிவங்களோடு உருவாகும் படைப்பே இலக்கியமாக, அழியாத இலக்கியமாக நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும்.

அன்றாடம் வாழ்க்கையோடு மல்லுக்கட்டும் எளிய மக்களின் சராசரி வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் சிறுகதைகளாக ‘ஊடு இழை’ சிறுகதைத் தொகுப்பைக் கொண்டு வந்துள்ளார் கவிஞர் பல்லவி குமார். இச்சிறு கதைகள் போன்ற மக்கள் இலக்கியமே அழியாத இலக்கியமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.

இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள 15 சிறுகதைகளும் நாம் அன்றாடம் சந்திக்கும் கதை மாந்தர்களே. வாழ்க்கைப் போராட்டத்தில் அவரவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக் கதை நேர்த்தி குன்றாமல் ஊடும் பாவுமாக படைத்துள்ளார் பல்லவி குமார்.

பொருளாதாரம் தான் உறவு முறையையே தீர்மானிக்கிறது என்றார் மார்க்ஸ். அதை எளிமையாக ‘அம்மாசி தாத்தா’ சிறுகதை மூலம் உணர்த்தியுள்ளார் நூலாசிரியர். பெற்ற தந்தையே ஆயினும் பணம் சம்பாதித்துக் கொண்டு வந்தால்தான் சாப்பாடும் மரியாதையும் கிடைக்கிறது என்பதை அம்மாசி தாத்தா பாத்திரத்தின் வழி நம்மைக் கரைய வைக்கிறார் பல்லவி குமார். நாள்தோறும் அரங்கேறி வரும் ஆணவக்கொலையின் அவலங்களை உணர்த்துகிறது ‘சாட்சி’ சிறுகதை. “ஆணவக்கொலை தொடர்பாகச் சிறப்புச் சட்டங்களை இயற்றி கறாராக அமுல்படுத்த வேண்டும்” என்னும் கோரிக்கையை வைத்துப் போராடிக் கொண்டிருக்கும் இடதுசாரிகள் நம் மனதில் வருகிறார்கள். மாடும் மனிதனும் ஒன்றாக வதைபடுவது இச்சமூகத்தின் மீதான கோபத்தை ஏற்படுத்துகிறது. இக்கதையில் ‘ஆச்சரியக் குறிகளாக வந்து விழும் மழைநீர்’, ‘முருக்கிப் போட்ட துணிபோல் கிடந்தான்’ என்னும் வர்ணனைகள் யதார்த்தக் காட்சிகள்.

கடந்த ஐம்பதாண்டுகளில் இல்லாத வேலையின்மை நாட்டில் கோரத் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக ‘கனல்’ சிறுகதை தகிக்கிறது.

இத்தொகுப்பின் தலைப்புக் கதையான ‘ஊடு இழை’ குறிப்பிடத்தக்கச் சிறுகதை எனலாம். சண்டை சச்சரவு இல்லாத குடும்பம் இருக்க முடியாது. ஆயிரம் சண்டை சச்சரவுகள் இருந்தாலும் குடும்ப உறவுகளுக்கு ஒன்று வந்துவிட்டால் ‘தானாடாவிட்டாலும் தன் தசையாடும்’ என்பதற்கொப்ப சண்டை சச்சரவுகளைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு அன்யோன்யமாக இயங்குவது குடும்பத்தின் இயல்பு என்பதை அழகுறக் கதையாக்கியுள்ளார் நூலாசிரியர். “தறியில எந்த சிக்கலும், எவ்வளவு சத்தமும் வந்தாலும் ஊடு இழை மட்டும் அறுவாம ஓடிக்கிட்டு இருந்துதுன்னா.. நெசவு நல்லா இருக்கும். அதுமாதிரி நெசவாள  குடும்பத்துல எந்த சிக்கலும் எவ்வளவு சச்சரவு வந்தாலும் வீட்டுக்கு வந்த பெண் மட்டும் இழுத்துப் புடிச்சிக்கிட்டு போய்ட்டான்னா.. அந்த குடும்பம் நல்லாயிருக்கும்” என்பது காலங்காலமாக பெண்களே குடும்பத்தில் அனுசரித்துப் போக வேண்டும் என்பது எளிய குடும்பங்களில் இன்னமும் விரவிக் கிடக்கின்றன என்தற்கு இக்கதையும் ஒரு உதாரணம்.

‘கல்லு வூடு’ கனவில் ஓயாதுழைக்கும் குடும்பம்.. குறிப்பாக காமாட்சி கல்லு வூட்டில் கண்ட அவலக் காட்சிக்குப் பிறகு கல்லு வூடு பிரம்மை தகர்ந்து தனது கூரை வீட்டு மகிழ்ச்சியே மகத்தானது என்று எண்ணும் நிலை. ஆக.. கூரை வீடா கல்லு வீடா என்பதல்ல பிரச்சினை. வீட்டில் வாழும் மாந்தர்களின் நடவடிக்கைகளே வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன என்பதைப் பூடகமாக இக்கதை மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. மண்ணுக்கும் மரத்துக்குமான உறவைத் தன் சொந்த அனுபவம் போல  இயல்பாகக் கதை சொல்கிறார் பல்லவி குமார்.

இன்றளவும் கிராமங்களில் நம்பப்படும் செய்வினை, ‘செய்வினை’ கதை மூலம் வாசகர்களுக்கு நினைவூட்டப்படுகிறது. ஆனால் இக்கதையில் மூடநம்பிக்கைகளையும் அறிவியலையும் ஒருங்கிணைத்துச் சென்று வெற்றி பெற்றுள்ளார் நூலாசிரியர்.

‘பிராது’ எனும் சிறுகதையில் குறி சொல்வது, பிராது கட்டி விடுவது போன்றவை பாத்திரங்களின் வழி இயல்பாக வந்து போகின்றன. ஆனால் இறுதியில் தனக்கு வரவேண்டிய பதவி உயர்வு பறிபோனதற்கு யார் மேல் பிராது கட்டுவது எனும் கேள்விக் கணையுடன் கதையை முடித்திருப்பது சிறப்பு.

இத் தொகுப்பில் உள்ள சில கதைகளில் நெசவுத் தொழில் காட்சிப்படுத்தப்படுவதும் அத்தொழிலில் கையாளப்படும் சிறுசிறு வேலைகளுக்கான வட்டார  வழக்குச் சொற்களை லாவகமாகக் கையாண்டுள்ளதும் பாராட்டத்தக்கது.

வெவ்வேறு கருப்பொருள்கள் போன்ற நல்ல சிறுகதைகளுக்குரிய இலக்கணங்களுடன் பெரும்பான்மை அளவில் பாத்திரங்களைப் படைத்துள்ள ஆசிரியரின் நடைச் செழுமையைப் போற்றியுள்ள எழுத்தாளர் ஜீவகாருண்யனின் அணிந்துரையை வழிமொழியலாம். இந்நூலை அழகுற வெளியிட்டுள்ள ‘தமிழ்ப் பல்லவி வெளியீடு ‘ பாராட்டுக்குரியது‌.

“கலை இலக்கியங்கள் யாவும் மக்களுக்கே” எனும் உயர்ந்த நோக்கில் வெளிவந்துள்ள எளிய மக்களின் வாழ்வியல் குறித்த “ஊடு இழை’ சிறுகதைத் தொகுப்பினை வாங்கிப் படிக்க வேண்டியது வாசகர்களின் கட்டாயக் கடமை.

– பெரணமல்லூர் சேகரன்

நூலின் பெயர் : ’ஊடு இழை’ சிறுகதைத் தொகுப்பு
நூல் ஆசிரியர் : பல்லவி குமார்
பக்கம்: 132

விலை : ₹125
வெளியீடு : தமிழ் பல்லவி
9/1ஏ இராஜ வீதி, கூட்டுறவு நகர்
பெரியார் நகர் (தெற்கு)
விருத்தாசலம் 606 001
கடலூர் மாவட்டம்
04143238369, 9942347079

நூல் அறிமுகம்: தமிழில் ப. ஜீவகாருண்யனின் சிறந்த சிறார் கதைகள் 111 – பெரணமல்லூர் சேகரன்

நூல் அறிமுகம்: தமிழில் ப. ஜீவகாருண்யனின் சிறந்த சிறார் கதைகள் 111 – பெரணமல்லூர் சேகரன்




பல்சுவையாகும் சிறார் கதைகள்
ஒரு காலத்தில் சிறுவர்களுக்கென்று காமிக்ஸ் நூல்கள் தவிர வேறெந்த நூல்களும் கிடைக்காது. இன்று சிறுவர் இலக்கியம் என்பது தனித்த ஒரு இலக்கியத் துறையாகவே வளர்ந்திருக்கிறது. குழந்தை இலக்கியத்திற்கென்று `பால புரஸ்கார்’ என்ற பெயரில் சாகித்ய அகாதமி ஒரு விருதையே வழங்குகிறது. தமிழகத்தின் முன்னணிப் பதிப்பகங்கள், அழகிய வண்ண அட்டைகள் மற்றும் ஓவியங்களோடு குழந்தைகளுக்கான புத்தகங்களைப் பதிப்பித்து வெளியிடுகின்றன.

சிறார் இலக்கியத்தின் முக்கியத்துவம் குறித்தும், சிறுவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை வளர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும், சிறார் இலக்கியம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் கீழ்க்கண்டவாறு பேசுகிறார் சிறார் இலக்கியத்தின் முக்கிய ஆளுமைகளில் ஒருவரான எழுத்தாளர் உதயசங்கர்.

“பொதுவாகவே குழந்தைகள் எதையும் சுலபமாக நம்பி விடுவார்கள். அவர்களுடைய குழந்தமை அவர்களுக்கென்று ஒரு உலகை உருவாக்குகிறது. அந்த உலகத்தில் மரப்பாச்சி பொம்மை அம்மாவாக, மகளாக, மாறிப்போகும். மரப்பாச்சி பொம்மை பல் தேய்க்கிறது. குளிக்கிறது. பள்ளிக்கூடம் போகிறது. டீச்சரிடம் பாடம் கேட்கிறது. மரப்பாச்சிக்குக் காய்ச்சலோ வயிற்றுவலியோ வருகிறது. டாக்டரிடம் போய் மருந்து வாங்கிக் கொடுக்கிறாள் அம்மா. கசப்பு மருந்தைக் குடிக்க கஷ்டப்படுகிறது. டாக்டர் ஊசி போடும்போது அழுகிறது. தூங்க மறுக்கிறது. அப்போது அம்மா பூச்சாண்டி வந்துருவான் என்று பயமுறுத்துகிறாள். மரப்பாச்சி சமர்த்தாய் உறங்குகிறது. எல்லாவற்றையும் உயிருள்ள குழந்தையைப் போல மரப்பாச்சி செய்கிறது.

இந்தப் போலச்செய்தலைக் குழந்தை உண்மையாக நம்புகிறது. இதில் எங்கெல்லாம் எதையெல்லாம் யதார்த்தமாய் செய்யமுடியாதோ அங்கெல்லாம் அதையெல்லாம் ஃபேண்டஸியாக மாற்றுகிறது. இரண்டடி இடத்திலேயே வீடு, பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி, கார், பைக், என்று நொடிக்கு நொடி எல்லாவற்றையும் மாற்றுகிறது. கைக்குக் கிடைக்கிற பொருட்களின் வழியே தன் கற்பனையின் எல்லைகளை விரிப்பதில் குழந்தமைக்கு எந்தத் தடையுமில்லை. அது தான் குழந்தைமையின் மாயாஜாலம்.”

இந்நிலையில் காலங்காலமாக சொல்லப்பட்டு வந்த வாய்வழிக் கதைகளும், புராணக் கதைகளும், காட்டு விலங்குகள், வீட்டு விலங்குகள், இணையற்ற இயற்கைக் கொடைகள் ஆகியவற்றுடனான கதைகளும் சிறார் கதைகளாகப் பரிணமித்துப் பல நூல்கள் வந்த வண்ணமுள்ளன. இவை புத்தகக் கண்காட்சிகளில் சிறார்களாலும் பெற்றோர்களாலும் விரும்பி வாங்கப்படுகின்றன. இத்தகைய நடைமுறை சிறார்களுக்கு வாசிப்பு வாசலைத் திறந்து வைக்கிறது. இது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. சிறு வயது முதலே வாசிப்பு வசப்படுமாயின் பசுமரத்தாணியாய் அப்பழக்கம் பிஞ்சு மனதைப் பற்றிக் கொள்ளும். அவ்வகையில் சிறார் கதைகளும், பாடல்களும், ஓவியங்களும் இன்ன பிறவும் சிறார் இலக்கிய உலகில் வரவேற்கப்பட வேண்டியவை.

பல்வேறு மொழிகளில் சிறார்களுக்கான படைப்புக்கள் விரவிக்கிடக்கின்றன. அவற்றை அடையாளங் கண்டு தமிழில் மொழிபெயர்த்து நூல் வடிவில் வெளியிடுதல் மெச்சத்தக்க பணி. அப்பணியைச் செவ்வனே செய்துள்ளார் சிறந்த எழுத்தாளரான ப.ஜீவகாருண்யன்.

சிறுகதைகள், நாவல்கள் என தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்த ஜீவகாருண்யன் சிறார் இலக்கியத்திலும் தடம் பதித்துள்ளது வரவேற்கத்தக்கது. அதன் ஒரு பகுதியாக ஜார்ஜ் இம்மட்டியின் மலையாள சிறார் கதைகள் 111 ஐத் தமிழில் மொழிபெயர்த்து வழக்கம் போல நிவேதிதா பதிப்பகம் மூலம் அழகுற வெளியிட்டுள்ளார் ஜீவகாருண்யன்.

இந்நூலில் இடம் பெற்றுள்ள பல கதைகள் காலங் காலமாக சிறார்களுக்குச் சொல்லப்பட்ட கதைகள். கற்பனைக் கதைகள் மூலம் அறிவுரைகள் கூறினால் மட்டுமே சிறார்களின் சிந்தையில் பதியும். அவ்வகையில் இந்நூலில் கதைகள் விரவியுள்ளன. அனைத்துக் கதைகளையும் இங்கு குறிப்பிட வேண்டியதில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக தொட்டுச் சென்றாலே போதுமானது.

வடிவத்தில் சிறியவை ஆயினும் எறும்புகளை ஏளனமாக எண்ணக்கூடாது என்பது யானை அறியாதது. ஒரு நிகழ்வின் மூலமாக சிற்றெறும்புகளின் தனித்தன்மையை யானைக்கு மட்டுமல்ல, சிறார்களுக்கும் உணர்த்தும் கதையொன்று வருகிறது.

சிலந்தி தனது விடாமுயற்சியால் வெற்றி கண்டதைச் சிறையில் கண்ட புரூஸ் அரசன் விரக்திக்கு முடிவு கட்டி மீண்டும் படை திரட்டி வெற்றி கண்டு அரசனாவது சிறார்களுக்கு நம்பிக்கையை நங்கூரமாக்கும் கதை.

பேராசை பெருநஷ்டம் என்பதைப் பல கதைகள் மூலம் இந்நூல் மூலம் சிறார்களுக்கு உணர்த்தப்பட்டுள்ளது. அவற்றுள் வழக்கமாய் சொல்லப்பட்ட கதைகளும் உண்டு. புதிய கதைகளும் உண்டு.

“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்”
என்றார் திருவள்ளுவர். அத்தகைய ஒழுக்கத்தைக் கற்பிக்கும் கதைகள் பல இத்தொகுப்பில் உள்ளன.

நட்பு குறித்து திருவள்ளுவர் ‘நட்பு’, ‘கூடாநட்பு’, ‘தீ நட்பு’ போன்ற அதிகாரங்களில் விளக்கியுள்ளார். அதைக் கருத்தில் கொண்டு இந்நூலில் மூன்று வகையான நட்புகளையும் கதைகள் மூலம் உணர்த்தப்பட்டுள்ளது.

“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு” என்றார் பாரதியார். அதை உணர்த்தும் வகையில் சில கதைகள் மூலம் இத்தொகுப்பில் உணர்த்தியுள்ளார் நூலாசிரியர்.

“முள்ளை முள்ளால் எடுப்பது” என்பது இன்றளவும் கிராமத்தின் பழமொழி. ‘குல்லாய் வியாபாரியும் குரங்குகளும்’ என்னும் கதை மூலம் சுவைபடச் சொல்லியுள்ளார் கதாசிரியர்.

சூழ்ச்சி, வஞ்சகம், பொய், புறங்கூறுதல் போன்ற தீய செயல்களால் கேடுகளே விளையும் என்பதை சிறார்களின் சிந்தையில் தமது கதைகள் மூலம் ஆழப் பதிந்துள்ளார் நூலாசிரியர்.

மனித நேயம் மகத்தானது. அதே போன்று விலங்குகள் தங்களுக்குள் நேயத்துடன் உதவுவதும் பழகுவதும் பாராட்டத்தக்கது. பின்பற்றத் தக்கது. இதற்கான கதைகளுக்கும் இத்தொகுப்பில் பஞ்சமில்லை.

நம்பிக்கை இல்லாமல் வாழ்க்கையில்லை. அத்தகைய நம்பிக்கை விதைகளைச் சரியாக விதைத்த விட்டால் அவை முளைத்து செடியாகி, மரமாகி, விருட்சமாகி வரலாறு படைக்கும் என்பதில் ஐயமில்லை. அத்தகைய நம்பிக்கை விதைகளை விதைக்கும் கதைகள் பல இடம் பெற்றுள்ளது பாராட்டத் தக்கது.

ஒரு நாடு நல்ல நாடாக விளங்குவது அந்நாட்டு அரசின் செயல்பாடுகளைப் பொறுத்தது. அது அக்காலத்திய மன்னராட்சியாக இருந்தாலும், இக்காலத்திய மக்களாட்சியாக இருந்தாலும் மக்களின் நலனை முன்னிறுத்திச் செயல்பட வேண்டியது அவசியம். அதை மன்னராட்சி மூலமாக உணர்த்தும் கதைகள் வரவேற்கப்பட வேண்டியவை.

‘பீம சேனனும் அரக்கனும்’ போன்ற புராணக் கதைகளும் உண்டு. ‘புலி வருது புலி வருது’ போன்ற பழங்கதைகளும், ‘விளையாட்டு வினையாகும்’ கதைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘சீச்சி திராட்சை புளிக்கும்’ என்னும் பழங்கதையை மாற்றி ‘புளிக்காத திராட்சை’ என வழங்கப்பட்டிருக்கும் கதை பாராட்டத்தக்கது.

ஒவ்வொரு கதைக்கும் பொருத்தமான படங்களை இடம்பெறச் செய்தமை சிறப்பு.

இந்நூலில் இடம்பெற்ற கதைகளை மலையாளத்தில் வழங்கிய ஜார்ஜ் இம்மட்டியும் எளிய தமிழில் மொழிபெயர்த்து வழங்கிய எழுத்தாளர்
பா. ஜீவகாருண்யனும் பாராட்டுக்குரியவர்கள். அனைத்து இல்லங்களிலும் நூலக அலமாரியில் இடம் பெறச் செய்து சிறார்களைப்
படிக்க வைக்க வேண்டியது பெற்றோர்களின் கண்ணான கடமை.

– பெரணமல்லூர் சேகரன்

நூல் : சிறந்த சிறார் கதைகள் 111
ஆசிரியர் : தமிழில் ப. ஜீவகாருண்யன்
விலை : ரூ: 200
வெளியீடு : நிவேதிதா பதிப்பகம்

தொடர்புக்கு : 044 – 24332924

நூல் மதிப்புரை : கோ.ஜனார்த்தனன் நேர்காணல். நடுநிலையாளன் என்பது மோசடி – பெரணமல்லூர் சேகரன்

நூல் மதிப்புரை : கோ.ஜனார்த்தனன் நேர்காணல். நடுநிலையாளன் என்பது மோசடி – பெரணமல்லூர் சேகரன்




நூல்: நடுநிலையாளன் என்பது மோசடி
நேர்காணல் நூல்
பக்கங்கள்: 32
விலை: ₹30
பாரதி புத்தகாலயம்
7 இளங்கோ சாலை
தேனாம்பேட்டை
சென்னை 600 018
044 24332424 ,044 24334924 ,

முற்போக்கு எழுத்தின் தடம்
“பகுத்தறியாதவன் பிடிவாதக்காரன்
பகுத்தறிய முடியாதவன் அறிவிலி
பகுத்தறியத் துணியாதவன் அடிமை”

எச்.டி.ரூமாண்ட்
பிடிவாதக்காரனாகவும், அறிவிலியாகவும், அடிமையாகவும்

வாழாமல் பகுத்தறிவாளனாக வாழ்வது மேலானது. அதற்கு கற்றல் இன்றியமையாதது. ‘கற்றலின் கேட்டலே நன்று’  என்பர். அத்தகைய ‘கேள்வி’ குறித்து ஓர் அதிகாரத்தையே படைத்துள்ளார் திருவள்ளுவர்.

ஒருவரது கேள்வி ஞானம் அவரது பேச்சாலும் எழுத்தாலும் பளிச்செனத் தெரிந்துவிடும். அவ்வாறுதான் எழுத்தாளர் ப. ஜீவகாருண்யனும். அவரது எழுத்தின் வழி அவர் எத்தகையவர் என்பதை உணர்ந்துள்ள தமிழ் கூறும் நல்லுலகம் அவரது நேர்காணல் வழி அவரது அகப்புற தோற்றம் குறித்து அழுத்தம் தரும். அவ்வகையில் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் ‘அறம்’ கிளை எடுத்துள்ள எழுத்தாளுமைகளின் நேர்காணல் என்னும் நல்ல முயற்சியின் ஒரு பகுதியாக எழுத்தாளர் ப. ஜீவகாருண்யனின் நேர்காணல் அமைந்துள்ளது.

இச்சிறு நூலில் எழுத்தாளரிடம் கேட்கப்பட்ட 50 கேள்விகளும் அவற்றுக்கான பதில்களும் இடம் பெற்றுள்ளன.

எழுத்தாளரின் பெயரிலிருந்து துவங்குகிறது கேள்வி. எழுத்தாளரின் குடும்பப் பின்னணியில் அவரது தந்தை ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ எனும் வள்ளலாரின் சிந்தனை வயப்பட்டவர் என்பதும் அவர் தமிழ் ஆர்வலர் என்பதும் புலனாகிறது. இது இயல்பாகவே எழுத்தாளராகப் பரிணமிக்க ஜீவகாருண்யன் அவர்களுக்கு உந்துவிசையாக இருந்துள்ளது.

சைவ அசைவ உணவு குறித்த பார்வையில் எழுத்தாளர் சரியான பதிலையே தந்துள்ளார். ‘சைவம் – அசைவம் என்பது மனிதர்களின் விருப்பம் சார்ந்தது’ என்றும் ‘புரதச்சத்து மிகுந்த விலையுயர்ந்த தானியங்கள் போன்றவற்றை எளிதில் வாங்கிப் பயன்படுத்த முடியாத ஏழை-எளியவர்களுக்கு ‘குறைந்த விலையில் நிறைந்த புரதம்’ என்னும் வகையில் மாட்டிறைச்சி போன்றவை மிகவும் அவசியம் என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாக முன் நிற்கிறது’ என்பது அர்த்த அடர்த்தி மிக்கது. அதே நேரத்தில் கடந்த ராம நவமியன்று ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அசைவ உணவு உண்ட மாணவர்கள் மீது வன்முறையைத் கட்டவிழ்த்து விட்ட மதவெறி மாணவர்கள் கண்முன் வந்து நிற்கின்றனர். உண்ணும் உணவு, உடுத்தும் உடை போன்றவற்றில் மூக்கை நுழைத்து வன்முறையில் இறங்குவோர்க்கு ஒன்றிய அரசின் ஆதரவும், வெறுப்பு அரசியலும் நெருஞ்சி முள்ளாய் குத்தத்தான் செய்கிறது.

நேர்காணலில் தமது சிறு வயதிலிருந்தே வாசிக்கும் வழக்கம் கைகூடியதைக் குறிப்பிடும் எழுத்தாளர் ப. ஜீவகாருண்யன், இத்தகைய வாசிப்பு அனுபவம் பிற்காலத்தில் தான் எழுத்தாளனாவதற்கு அடிகோலியதாக எண்ணுகிறார். ஆனால் இன்றைய இளைஞர்கள் கைபேசியில் செயலி, சமூக வலைதளங்கள் என தொலைந்து போவதை வேதனையுடன் குறிப்பிடுகிறார். உண்மையில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளைக் கட்டுப்படுத்த இயலாமல் கையறு நிலையில் உள்ளது இளைய தலைமுறைக்குக் கேடு விளைவிக்கும் எனின் மிகையன்று. இதனால் இளைஞர்களின் உடல் நலமும் உள்ள நலமும் நம் கண்முன் கெடுவதைப் பார்க்கும் அவலம் அணி வகுக்கிறது.

எழுத்தாளரை எழுதத் தூண்டியதும் எழுத்தார்வத்தை வளர்த்ததும் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் அவ்வமைப்பு சார்ந்த இலக்கிய ஆளுமைகளும் எனக் கூறியிருப்பதிலிருந்து அவரது இலக்கியப் பயணம் சரியான பாதையில் பயணித்தது என்பதையும் அதன் பலனாக இதுவரை சிறுகதை, கவிதைகள், நாவல், மொழிபெயர்ப்பு என 28 நூல்களை வெளியிடவும் பல நூல்கள் தமிழக அரசு மற்றும் பல அமைப்புகள் வழி விருதுகள், பரிசுகள் என இவருக்குக் குவிந்தன என்பதையும் உணர முடிகிறது.

‘மாற்றுக் கருத்தை மறுத்து இலக்கியம் படைப்பதற்கு மாற்றுக் கருத்து குறித்த நூல்களை ஆழ்ந்து பயில வேண்டும்’ என்னும் கருத்துடன் இளம் வயதிலிருந்து இன்றுவரை பல துறை நூல்களையும் படிப்பவராகத் திகழ்கிறார் ப. ஜீவகாருண்யன்.

பழந்தமிழ் இலக்கியங்களில் சங்க இலக்கியங்களின் வழி ஆதித் தமிழர் வாழ்வியலை அடையாளம் காண முடிவதைக் கூறும் எழுத்தாளர், சங்க இலக்கியங்கள் குறித்து பிற மொழிகளில் நூல்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று தமது வேட்கையையும் தெரிவிக்கிறார்.

எழுத்தாளரின் ‘கிருஷ்ணன் என்றொரு மானிடன்’ என்ற நூல் அவருக்கு மட்டுமல்ல நான் உட்பட பலர் ரசித்துப் படித்திருப்பர் என்பதில் ஐயமில்லை. அந்தளவுக்கு அந்நூலில் அழகியலும், வர்ணனைகளும், புராண இதிகாசமெனும் மகாபாரதக் கதைகளின் மீதான குறுக்கு விசாரணைகளும் மற்றும் அதற்கான பதில்களும் பொதிந்து கிடக்கின்றன.

பெண் சமத்துவம் குறித்து மட்டுமல்லாமல் ‘மனிதர் யாவரும் சமம்’ என்னும் கருதுகோளை மையப்படுத்துவதன் முக்கியத்துவத்தைக் குறிப்பிடும் எழுத்தாளர், அதற்கான அரசியல் விழிப்புணர்வு மக்களிடையே தேவைப்படுவது குறித்தும் அழுத்தம் கொடுத்திருப்பது சிறப்பு

சாதி, மதம், கடவுள் எனும் வலைப் பின்னலில் ஏழை எளியோரும், தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களும் சிக்குண்டுச் சீரழிவை மதங்களின் வெற்றியாகச் சித்தரிக்கிறார் எழுத்தாளர்.

ப. ஜீவகாருண்யன், இந்திய இலக்கியங்கள் மட்டுமல்லாது பிற நாட்டு இலக்கியங்களையும் படித்துப் பரவசமடைந்த நிலையில் அவை போன்ற நூல்கள் தமிழில் எழுதப்பட வேண்டும் என்னும் வேட்கையைத் தணிக்க அவரும் அவரையொத்த சிந்தனையுடைய தமிழ் எழுத்தாளர்களும் முன்வர வேண்டும்.

வாழ்க்கை சவால் மிக்கது. இன்றைய நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ சமூக அமைப்பில் வாழும் அனைவரும், குறிப்பாக கரத்தாலும் கருத்தாலும் உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ப. ஜீவகாருண்யனும் எதிர்கொண்டுப் போராடி முன்னேறி வந்துள்ளார் என்பதை நேர்காணலில் உணர முடிகிறது.

எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் தொடர்பில்லாமல் ஊருக்கு உபதேசிக்கும் இலக்கியவாதிகளே அதிகம் நிறைந்துள்ள இக்காலத்தில் எழுத்தின் வழி வாழ்க்கை என்பதை வரித்துக் கொண்ட எழுத்தாளர் ப. ஜீவகாருண்யனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். புதுமனை புகுவிழாவில் புரோகிதத்தைப் புறக்கணித்தது பாராட்டத்தக்கது. பின்பற்றத் தக்கது.

அரசியலே அனைத்தையும் தீர்மானிக்கிறது எனும் நிலையில்,’நான் நடுநிலையாளன்’ என்பது ஏமாற்று மோசடி என சாட்டையைச் சுழற்றுகிறார் எழுத்தாளர். முதியோர் இல்லங்கள் பெருகி வர ஆண்களை விட பெண்களே அதிக காரணகர்த்தாக்களாக உள்ளனர் என்ற எழுத்தாளரின் கூற்றை முழுமையாக ஏற்க இயலவில்லை. இக்கால நுகர்வு கலாச்சாரம், மேல் நாட்டு நாகரிகம்,  உட்பட பல காரணிகள் முதியோர் இல்லங்கள் பெருகக் காரண கர்த்தாக்களாகின்றன.

‘தன்னைப் போல் பிறரை நேசிப்பவர் ஆரோக்கியமான மனிதர்’ என்பது உள்ள ஆரோக்கியத்தை வைத்து எழுத்தாளர் கூறியிருப்பார் என்றே எண்ணத் தோன்றுகிறது. தமது 42வது வயதில் புற்றுநோயின் கொடும்பிடியில் சிக்கி மீண்டபோது இடதுசாரிக் கட்சியும், இலக்கிய அமைப்பும் தொழிற்சங்கமும் உற்ற தோழனாய் இருந்ததை நினைவு கூர்ந்துள்ளார் எழுத்தாளர். அதை போன்று எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு அவரது ‘மாதொரு பாகன்’ நூல் மூலம் ஏற்பட்ட மிகப் பெரும் அச்சுறுத்தலின் போது தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மட்டுமே அவரை அரவணைத்துக் கொண்டதைப் பதிவு செய்திருப்பது பாராட்டத் தக்கது.

இன்றைய ஒன்றிய அரசும், அதனால் வரலாறும் பாட நூல்களும் திருத்தப்படுவதும் ஆபத்தானவை என்பதை உணர்ந்த எழுத்தாளர் ஒரு படி மேலே போய் இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சொல்லும் ‘புதிய கல்விக் கொள்கை’ நாடு முழுவதும் நடைமுறையாக்கப்பட வேண்டும் என தமது விருப்பத்தை வெளிப்படுத்தியிருப்பது எழுத்தாளரின் துணிச்சலான தெளிவான அணுகுமுறை.

‘பொதுத்துறை நிறுவனங்கள் தேசத்தின் ஆலயங்கள்’ என்ற ஜவகர்லால் நேருவின் வாக்குப் பொய்யாய் பழங்கதையாய் ஆகுமளவிற்கு இன்றைய ஆட்சியாளர்கள் பொதுத் துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். மனித அறம், சமூக அறம், இயற்கை அறம் குறித்த ஜீவகாருண்யனின் விளக்கம் அருமை. இறுதியாக மரணம் குறித்து ‘இயன்ற வரையில் அர்த்தமுள்ளதோர் வாழ்க்கை வாழ்ந்து மரணத்தை எதிர்கொள்ள வேண்டும்’ என்னும் எழுத்தாளர் ஜீவகாருண்யனின் பதிலுடன் நேர்காணலை முடித்துள்ளார் கோ.ஜனார்த்தனன்.

இந்நூல், வடிவில் சிறியதாக இருந்தாலும் உட்பொருளில் பெரிதாகவே இருக்கிறது. இந்நூலை வாங்கிப் படித்துப் பயன்பெற வேண்டியது அவசியம்.

..பெரணமல்லூர் சேகரன்

Patta short story by Peranamallur Sekaran பெரணமல்லூர் சேகரனின் பட்டா சிறுகதை

பட்டா சிறுகதை – பெரணமல்லூர் சேகரன்



கொசுக்கடியொரு புறம் என்றால் மறுபுறம் நினைவுச் சங்கிலியின் அனத்தல். மத்தளத்திற்கான இருபக்க இடியாய் உறக்கம் தங்கம்மாவுடன் சண்டையிட்டது.

பெயருக்கொன்றும் குறைச்சலில்லை. பெயரில்தான் தங்கம்மா. நிஜத்தில் குண்டுமணி பொன்னகை கூட உடம்பில் இல்லை. பார்வையற்றவன், பெயரில் கண்ணாயிரம், பிச்சைக்காரன், பெயரில் கோட்டீஸ்வரன் இருப்பதில்லையா? அது மாதிரிதான். பெற்றவர்கள் பெயர் வைக்க காசா, பணமா யோசிக்க? வாயில் வந்தது, அப்பன், பாட்டன், முப்பாட்டன், அம்மா, பாட்டி என அவர்களின் பெயரையோ, குலதெய்வங்களின் பெயரையோ வைப்பது முண்டு. எது எப்படியோ தங்கம்மாவுக்கு வைத்த பெயர் மீது அவளுக்கே விருப்பமில்லை.

என்னதான் இருளர் குடியாக இருந்தாலும் பசி, பட்டினி இல்லாமல் இருந்தாலே போதும் என்கிற மனோநிலை தான். இப்பவும் ரேஷன் அரிசியில் சாதம் வடித்து கத்தரிக்காய் குழம்பு வைத்து புருஷனுக்கும் மகனுக்கும் மகளுக்கும் சாப்பாடு போட்டு சாப்பிட்ட பிறகு சட்டியைப் பார்த்தாள். அரை வயிறு நிரம்பும். பரவாயில்லை என்று நினைத்துக் கொண்டது மனம்.

டவுன் பஞ்சாயத்துன்னுதான் பேரு. எந்த வசதியுமில்ல. மூனாவது தலமுறயா பத்துக்குப் பத்து ரூம்ல தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, புருஷன், ரெண்டு பசங்களோட எப்படி அடஞ்சிக் கெடக்கிறது? மல சங்கத்துல பட்டா கேட்டு நம்மள மாதிரி பதினஞ்சி குடும்பம் எத்தினி தரம் போராடுறது? எப்படியோ மனசு வந்து இப்பத்தான் மணிகார், ஆர்.ஐ, சர்வேயர், தாசில்தார்னு வந்து கைகாமிச்சிட்டுப் போயி ஒரு வாரமாச்சு. இந்த பாழாப் போன மக்களும் சட்டுப்புட்டுனு கொட்டாயப் போட்டா தான!

மனதுடன் பேசிக் கொண்டிருந்த தங்கம்மாவுக்கு முனகல் சத்தம் கேட்கவே எழுந்து பெட்ரமாஸ் விளக்கு நாடாவை உயர்த்திப் பார்த்தாள். மகனும் மகளும் கொசுக்கடியில் முனகிக்கொண்டே கொசுவை அடித்துக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் மீது சேலையை நன்றாகப் போர்த்தி கால்களைச் சுற்றி சுருட்டிவிட்டாள். மீண்டும் பெட்ரோமாஸ் விளக்கு நாடாவைத் தாழ்த்திவிட்டு வந்து படுத்துக் கொண்டாள்.

புருஷன் ஞாபகம் வந்தது. பழைய வீட்டில் பெருசுகளுடன் படுக்கப் போய்விட்டான்.

“நீங்க போட்டிருக்கிற குடிசைலதான் தங்கனும். இல்லன்னா நீங்க பேருக்குத் தான் பட்டா கேப்பிங்க. அப்புறம் வித்துட்டு வேற இடத்துக்குப் போய்விடுவிங்கன்னு எகத்தாளமா தாசில்தார் பேசுறாரு”

மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர் சொன்னது தங்கம்மாவின் நினைவுக்கு வந்தது.

“எங்க சொன்னா கேக்குதுங்க? புருஷங்காரன் பழய வீட்ல போய் படுத்துக்கினான். எதையாவது சொனனாலோ, அவர் சொல்றத மீறிக் கேட்டாலோ ‘அதனால்தாண்டி உன்னைக் கட்னவன் ரெண்டு வருசத்துல ரெண்டு புள்ளய குடுத்துட்டு ஆந்திராவுக்குப் பூட்டான்’னு குத்திக்காட்றான். என்ன செய்ய?
என் நெலமதான் இப்படின்னா பரிமளான்றவ புருஷன் எந்நேரமும் குடி குடின்னு பொண்டாட்டி கஷ்டப்பட்டு சம்பாதிச்சிக் கொண்டாறத அழிச்சிட்டுத் திரியறான். மளிகை சாமான் இல்லாம புள்ளைக்கும் இந்த ராத்திரியில கஞ்சியக் குடிப்புட்டுத் தானும் குடிச்சிட்டுப் படுத்துக் கெடக்கா. அவள் புருஷனோ குடிச்சிட்டு வந்தவன் பாற மேல படுத்துக் கெடக்கான். வீட்டுக்கு வீடு வாசப்படிதான்.

இப்போது முகத்தின் மீது உட்கார்ந்து கொசுவைப் படாரென அடித்து நசுக்கினாள். குடிசையின் பக்கவாட்டில் ஓலைகள் கட்டப்படாததால் சில்லென்ற காற்று பக்கத்து ஏரி நீரிலிருந்து வந்து படுத்தியது. ஊசியால் குத்துவதைப் போல காற்று. பழய வீட்டில் இருக்கும் சேலையை நினைத்துக் கொண்டாள். நாளைக்கு எடுத்துக் கொண்டு வந்தால்தான் போர்த்திக் கொள்ள முடியும் என்று தீர்மானித்தது மனம்.

மாடு அசைபோடுவதைப் போல பழைய சம்பவங்கள் வந்து போயின.

“இருளக் கூட்டத்துக்கு வழி காட்னதே நீங்கதான! மலையில இருக்கிற முருகருக்கே இது அடுக்காது! திருனா சமயங்கள்ல ஏராளமான கூட்டம் வரும். அப்ப கீழே இந்த குடிசைங்களும், கலீஜ் பண்ற இருளருங்களும் இருந்தா நல்லாவா இருக்கும்? நாங்க இத விடமாட்டோம். எங்கெங்க போகுமோ அங்கெல்லாம் போவம்” னு கோயில் நிர்வாகம் பார்க்கும் கந்தசாமியின் மகள் கொக்கரித்து தங்கம்மாவின் நினைவுக்கு வந்தது.

“தோ பாருங்க..சும்மா அனத்தாதீங்க..அந்த முருகனோட பொண்டாட்டி வள்ளி யார் தெரியும்ல, வள்ளியே பழங்குடிதான், நீங்க என்னவோ பழங்குடி மக்களக் கேவலமா பாக்கறீங்க! இத கம்ப்ளெயிண்டா குடுத்தா உங்க நெலம என்னாகும்னு யோசிங்க”ன்னு தோழர் செல்வன் சொன்னதும் அந்த இடமே களேபரமானதும் கண்முன் நின்றது. எதிர்த்தரப்பு கூட்டமாக சேர்ந்துவிட வாயில் இந்த வார்த்தைகள் என்றில்லாமல் சகட்டுமேனிக்கு வந்து விழுந்தன.

செல்வன் சொன்னது நடந்தே விட்டது. அதற்கேற்றாற்போல் ஏற்கெனவே போடப்பட்டிருந்த பத்து குடிசைகளில் ஒன்று பிய்த்தெறியப்பட்டது. வார்த்தை வசவுகள் சரமாரியாக விழுந்தன. தகவல் தோழர்களுக்குப் போகவே போலீஸ் ஸ்டேஷனில் புகார் தரப்பட்டது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை கோரப்பட்டது.

கவிழ்ந்து படுத்தும் மல்லாக்காகப் படுத்தும் உறக்கம் வரவில்லை தங்கம்மாவுக்கு.

“மொதல்ல கட்னவன் ஒழுங்கா குடும்பம் பண்ணியிருந்தா இந்த கதி வந்திருக்குமா..கண்ணுமறய கிடந்திருப்போம். அம்மா அஞ்சலிதான் அல்லாடுது. அப்பா கூட மனக்கஷ்டத்துக்குப் போதை ஏத்திக்கிட்டுப் படுத்துக் கெடந்துடுது. ஆனா அம்மா, அப்டியில்லயே! வாழாவெட்டியா புள்ள குட்டிங்களோட கண்கலங்கி வந்து நின்னப்ப தைரியம் சொல்லிச் சேத்துக்கிச்சி..ஆனா தெனம் தெனம் ரெண்டு குடும்பத்தயும் சமாளிக்க மாடா உழைக்குது. பக்கத்து ஊர்ல பொண்டாட்டி செத்துப் போய் கெடந்த ரவிகிட்ட பேசி ஒருத்தருக்கொருத்தர் ஆதரவா இருங்க. உனுக்கும் வயசு முப்பத்தஞ்சி, அவளுக்கும் முப்பது, ரெண்டு பசங்களயும் உம் பசங்களா நெனச்சி குடும்பம் பண்ணுன்னு ஓயாம புத்திமதி சொல்லி கல்யாணத்தையும் பண்ணி வச்சிது. இந்நேரம் அம்மாவுக்கும் தூக்கம் வராதுதான்.

மழை சத்தம் சிந்தனையைக் கலைத்தது. பெட்ரோமாஸ் லைட் நாடாவை உயர்த்தினாள் தங்கம்மா. மழையிலும் பிள்ளைகள் தூங்கிக் கொண்டுதான் இருந்தார்கள். அவர்கள் மீது போர்த்திய புடவை விலகாமல் இருந்தது. குடிசையின் முனைக்கு வந்து எட்டிப் பார்த்தாள். மழை சோவெனப் பெய்து கொண்டிருந்தது. மலை சங்கத்தில் கொடுத்த அழுத்தத்தால் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் போட்டிருந்த மின்விளக்கு கம்பத்தில் எரிந்து கொண்டிருந்தது.

மீண்டும் வந்து படுத்துக் கொண்டாள் தங்கம்மா. பழய வீட்லயும் ஒழுகல் தான். அநேகமா நாலு பேரும் தூக்கத்துல எழுந்து உட்கார்ந்துகினு இருப்பாங்க. பிரிச்சிப்போட்ட குடிசைக்காரி நெறமாச புள்ளத்தாச்சி. அவ அம்மா வூட்டுக்குப் புருஷனோட போயிட்டா.

சிந்தனையைக் கைபேசி கலைத்தது. கையைத் துடைத்துக் கொண்டு கைபேசியை எடுத்துக் காதில் வைத்தாள் தங்கம்மா.
“தோழரே..நாளைக்கி தாலுக்காபீஸ்ல காத்திருப்புப் போராட்டம். நாம கொடுத்த கேஸ்ல நடவடிக்கை எடுக்கல. பட்டாவும் கொடுக்கல. கலகம் பொறந்தா தான் நீதி பொறக்கும். ஒருத்தர் விடாம எல்லோரையும் அழச்சிக்கிட்டு டாடாஏசி வண்டியில வந்துருங்க”

‘சரி தோழரே’ என்றதோடு பதிலேதும் பேசவில்லை தங்கம்மா. தோழர் தங்கம்மாவிடம் மட்டும் பேசியிருக்க மாட்டார். கைபேசி வைத்திருக்கும் எல்லோரிடமும் பேசியிருப்பார். இது போல் எத்தனையோ போராட்டங்கள் நடந்திருக்கின்றன. எல்லாப் போராட்டங்களிலும் பழங்குடியினர் கலந்து கொள்வதால் அவர்களது பட்டா கோரிக்கையை இந்த முறை வெல்ல வேண்டும் என்பதில் குறியாக இருந்தார் செல்வன்.

“உள்ளூர்ல பெரிய எதிர்ப்பு. கோயில் சாமின்ற பேர்ல மெஜாரிட்டி ஆளுங்க ஒன்னாயிட்டாங்க! ஊர்ப்பஞ்சாயத்துன்ற பேர்ல கூப்டு பாத்தாங்க, செல்வனும் மற்ற தோழருங்களும் அசஞ்சி கொடுக்கல. இதனால செல்வத்தோட வீட்ல வேற நெருக்கடி. உள்ளூர்ல பிரச்சினை பெருசாயி கரிச்சிக் கொட்றாங்களே! இது என்ன ஞாயம்? நாங்க என்ன ஜனங்களோட பட்டா எடத்தயா கேக்கறோம். ஆபீசருங்க காமிச்ச இடம் முள்ளுக் காடா கெடந்தத வெட்டி சுத்தப்படுத்தன பிறகு ஜனங்க ஆட்சேபணை பண்றாங்க. கோயிலுக்கு மண்டபம் கட்டப் போறன்றாங்க”
மனப் பேச்சு பெருமூச்சுடன் முடிந்தது.

தாலுக்காபீஸ் முன்பு நூறு பேருக்குத் திரண்டு கோஷம் போட்டுக் கொண்டிருந்தனர். தகவலை முன்கூட்டியே தெரிந்து கொண்ட தாசில்தார் வேண்டுமென்றே முகாம் சென்று விட்டார்.

பழங்குடி மக்கள் எல்லோருமே தாலுக்காபீஸ் வரவும் போடப்பட்ட பத்து குடிசைகளும் தாசில்தார் துணையோடு ஆதிக்கவாதிகள் பிய்த்து எறிந்து விட்டதாகத் தகவல் வரவே போராட்டம் தீப்பிடித்தது. தாசில்தார், துணைத்தாசில்தார், ஆர்.ஐ, மணியக்கார், போலீஸ்காரர்கள் என யாரையும் விட்டுவைக்கவில்லை போராட்டக்காரர்கள். தங்களின் பலவீனங்களால் அவர்கள் செய்து வரும் அட்டூழியங்களை அடுக்கிக் கொண்டே போனார்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள். செல்வன் எல்லோரையும் தாலுக்காபீசில்‌ குடியேறச் சொன்னதுதான் தாமதம். டாடா ஏசியில் ஏற்கெனவே பேசியபடி கொண்டுவந்திருந்த அண்டா குண்டா தொடப்பம் முறத்தோட திபுதிபுவென கூட்டம் தாலுக்காபீசுக்குள் நுழைந்தது. சீட்டுகளுக்கிடையிலும் நடு ஹாலில் நீளமாகவும் தட்டுமுட்டுச் சாமான்களுடன் உட்கார்ந்து கொண்டார்கள். போலீஸ் என்னென்னவோ செய்து பார்த்தது. ஒன்றும் செல்லுபடியாகவில்லை. வந்திருப்பவர்கள் பழங்குடியினர். அவர்கள் மீது கை வைத்தால் படையெடுத்துக் கொண்டிருக்கும் மீடியாக்கள் சாட்சியாகி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் போலீஸ்காரர்கள் மீதே பாய்ந்துவிடும் என்னும் பயம்.

மீடியாக்கள் கர்ப்பிணியையே குறிவைத்து புகைப்படமும் வீடியோவும் எடுத்தார்கள். கர்ப்பிணியைக் காண்பித்து “இந்த நெறமாச கர்ப்பிணியோட கொட்டவதான் மொதல்ல பிரிச்சாங்க! இரக்கமே இல்லாத ஆளுங்க! அதுக்குத் துணை போற தாசில்தாரு, ஆர்.ஐ. மணிக்கார். ‘சீச்சீ வெட்கக்கேடு..தூத்தூ மானக்கேடு” என செல்வன் முழக்கமிட்டதை ஃபோகஸ் செய்தார்கள் மீடியாக்காரர்கள்.

டி.எஸ்.பி தலைவர்களை அழைத்துச் சமாதானம் செய்ய முயற்சித்துத் தோல்வியில் முடிந்தது.

“போராட்டம் இங்கே பற்றி எரிகிறது. தாசில்தார் அங்கே கூரைகளைப் பிய்த்து எறிகிறார். பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் இந்நேரம் தாசில்தார் இங்கே இருந்திருக்க வேண்டும்”
ஆக்ரோசமாக செல்வன் பேசிக் கொண்டிருந்ததை ஒலியும் ஒளியுமாக தொலைக்காட்சி அலை வரிசைகளும் சமுக வலைதளங்களும் பரப்பிக் கொண்டிருந்தன. தாசில்தார் தனது பணியை முடித்துத் திரும்பிக் கொண்டிருக்கும்போதே தமது அறையையும் ஆக்கிரமித்துப் பழங்குடியினர் உக்கிரமாகப் போராடிக் கொண்டிருப்பதைக் கைபேசியில் கண்டு கொதிப்படைந்தார். ஜீப்பை ஓரங்கட்டச் சொல்லி நிறையப் பேருக்கு போன் பேசினார். ஜீப் திரும்பிப் போராட்டக்காரர்களின் ஊருக்கே சென்றது.

போராட்டக்காரர்களுக்கு வழங்கப்பட்ட பாக்கெட் சாப்பாட்டை அலுவலகத்திற்கு உள்ளேயே பிரித்து சாப்பிட்டனர். அதுவும் படமானது. தாலுக்காபீஸ் ஊழியர்கள் சிலர் ஒருபுறம் பழங்குடியினரைக் கரித்துக் கொட்டினர். மறுபுறம் “நாமும் தான் போராட்டம் நடத்துறமே! இவங்களப் பாத்தாவது கத்துக்கனும்” என்றவர்களும் உண்டு.

மாலை இருட்டத் துவங்கி விட்டது. போராட்டத்தை முடித்துக் கொண்டு போய்விடுவார்கள் என்று எண்ணிய வர்கள் மனதில் மண் விழுந்தது.

“தாசில்தாரிடம் பட்டா வாங்காமல் எவ்வளவு நாட்கள் ஆனாலும் இந்த இடத்தை விட்டு நகரமாட்டோம்” என்று கர்ச்சித்தார் செல்வன். சகோதர சங்கங்கள் போராட்டத்தை வாழ்த்திச் சென்றது பழங்குடி மக்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது.

தாசில்தாருக்கு அடுத்த ரேங்கில் உள்ள டெபுடி தாசில்தார் செல்வனை அழைத்து ஏதோ பேசிக் கொண்டே இருந்தார். செல்வனோ தலையை அசைத்துப் பேச்சைத் துண்டித்துக் கொண்டு தாலுக்கா பீஸ் ஹாலுக்குள் வந்து பழங்குடியினர் மத்தியில் கோரிக்கையின் நியாயத்தைப் பற்றியும் பட்டா கோரிக்கைக்காக இரண்டு ஆண்டுகளாக நடத்தி வரும் போராட்டஙகள் குறித்தும் விளக்கிப் போராட்டத்தை உசுப்பேத்தினார்.

இரவு மணி ஏழு. ஊழியர்கள் வீட்டுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தனர். டெபுடி தாசில்தார் சில ஊழியர்களுடன் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தார். அவ்வப்போது செல்வனை அழைத்து சந்தேகங்களைக் கேட்டு நிவர்த்தி செய்து கொண்டிருந்தார். தங்கம்மாவுக்கு முன்பு போல் ஆவேசமாக இல்லாமல் செல்வன் டெபுடி தாசில்தாரிடம் பேசிக் கொண்டிருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

தங்கம்மா அவளது அம்மாவின் காதில், “தோழர் சோரம் போயிடுவாராம்மா? ஆவேசமா பேசிக்கிட்டிருந்த மனுசன் இப்ப அந்த ஆளோட சிரிச்சிப் பேசிக்கிட்டிருக்காரு. அங்க என்னடான்னா தாசில்தாரு நம்ம எல்லாக் குடிசகளயும் பிரிச்சுப் போட்டுட்டாராம். இந்நேரம் வரைக்கும் தாசில்தார் வரல. அப்டியே அவரு வீட்டுக்குப் போயிட்டா நம்ம கதி என்னாவறது?”

“வாய மூடுடி! தோழரப் பத்தி தப்பா பேசாத, நாக்கு அழுகிடும்! நானே உன்ன தொடப்பக்கட்டயால அடிப்பன்”

இருவரும் பிரிந்து வெவ்வேறு இடங்களில் உட்கார்ந்து கொண்டார்கள். பெருசுகள் குத்துக்காலிட்டும் நீட்டியும் மடக்கியும் உட்கார்ந்திருந்தார்கள். கர்ப்பிணிக்குப் பெண் கிளார்க் தன் நாற்காலியின் பக்கத்தில் வைத்திருந்த பெட்டி மீது உட்கார்ந்து கொள்ள இடம் கொடுத்தார். வந்திருந்த சிறுவர்கள் ஹாலுக்குள்ளே ஓடியும் ஆடியும் காலத்தைக் கழித்துத் கொண்டிருந்தார்கள்.

தாலுக்காபீசின் ஹாலில் அந்தக் காலத்து பெண்டுலம் கடிகாரம் எட்டு முறை மணியடித்தது. ஜீப் சத்தம் கேட்டு எழுந்திருந்த மக்களை அப்படியே அமரச் சொன்னார் செல்வன்.
தாசில்தார் ஜீப்பிலிருந்து இறங்கி விருட்டென்று நடந்தார். அவரது அறைக்குச் செல்ல வழி விட்டனர் பழங்குடியினர். அவர் நாற்காலியில் அமர்ந்ததும் ஃபைலோடு ஓடி வந்தார் டெபுடி தாசில்தார். பத்து ஃபைலையும் பார்த்துப் பார்த்துக் கையெழுத்திட்டார் தாசில்தார்.

செல்வனை அழைத்த தாசில்தார்,
“அவசரப்பட்டுட்டீங்க! ஊர்ல சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரக்கூடாதுங்கிறதுக்காகத்தான் குடிசைகளைப் பிரிச்சேன். பிரச்சினை இல்லாத வேறு இடத்துல இப்ப பட்டா ரெடி பண்ணியாச்சி..எல்லோரையும் வந்து வாங்கிக்கச் சொல்லுங்க”

புன்முறுவலுடன் தலையசைத்த செல்வன் பழங்குடியினர் மத்தியில் சென்றார்.
“தோழர்களே..நமது ஒன்றுபட்ட போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாக பதினைந்து குடும்பங்களுக்கும் பட்டா வழங்கப் போறாங்க. ஆனா இடம் வேற. பிரச்சினை இல்லாத இடம். இத மொதல்லயே காட்டியிருந்தா, பட்டா கொடுத்திருந்தா நாம ஏன் போராடப் போறோம். அதிகார வர்க்கம் அப்படித்தான் இருக்கும். இப்ப பட்டா கொடுக்க பெயர் படிப்பாங்க. வாங்க..வரிசையா வாங்கிக்கங்க”

வெற்றி முழக்கம் விண்ணைப் பிளந்தது. தாசில்தாரும் செல்வனும் சேர்ந்து முதலில் தங்கம்மாவுக்குப் பட்டா கொடுக்கவும், தங்கம்மா அஞ்சலியைப் பார்த்தாள். அஞ்சலி கட்டை விரலை உயர்த்தினாள். தங்கம்மாவின் கண்கள் ஆனந்தத்தால் கலங்கின.