விடுதலை வேள்வியில் நாகம்மையார் & கண்ணம்மாள் கட்டுரை – பேரா.மோகனா

விடுதலை வேள்வியில் நாகம்மையார் & கண்ணம்மாள் கட்டுரை – பேரா.மோகனா




சுதந்திர தாகம்

விடுதலைப் போராட்டம் என்றாலே ஏதோ உயர்குடிப் பெண்கள் அல்லது பரம்பரையாக செல்வந்தர் மற்றும் விடுதலைப் போராட்ட குடும்பத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள் என்பது நமது பொதுப் புத்தியில் ஊறிப்போன விஷயம். மிகவும் சாதாரண குடும்பத்தில் வாழ்ந்தவர்களும் கூட சுதந்திர தாகத்தால் ஈர்க்கப்பட்டு, விடுதலை வேள்வியில் அவர்களும் வெந்து தணிந்திருக்கின்றனர் என்ற உண்மை நம்மை பெரிதும் வியப்பில் ஆழ்த்துகின்றது. அப்படிப்பட்ட இருவர்தான் நாகம்மையார் மற்றும் கண்ணம்மா. இவர்கள் யார் தெரியுமா? நாகம்மையார் பகுத்தறிவுப் பகலவன் ஈ. வெ. ரா. பெரியாரின் முதல் மனைவி. கண்ணம்மா ஈ.வெ.ரா வின் தங்கை. ஈ.வெ.ரா. பெரியாருக்கு  கிருஷ்ணசாமி என்ற ஒரு மூத்த சகோதரரும், கண்ணம்மா மற்றும் பொன்னுதாய் என்ற இரண்டு சகோதரிகளும் இருந்தனர்.

நாகம்மை பிறப்பும் மணமும்..

அன்றைய சென்னை மாகாணத்துக்கு உட்பட்ட சேலம் மாவட்டம், தாதம்பட்டியில் ரெங்கசாமி, பொன்னுத்தாயி என்ற தம்பதியருக்கு, 1885ம் ஆண்டு மகளாகப் பிறந்தவர் நாகரத்தினம். இவரை நாகம்மையார் என்றும் அழைத்தனர். நாகம்மை முறையான பள்ளிக் கல்வி பயின்றதில்லை. தனது 13-வது வயதில், பகுத்தறிவுப் பகலவன் தந்தை ஈ. வெ. ரா. பெரியாரை மணந்துகொண்டவர்.  Nagammaiyar & Kannamma Essay on Liberation Velvi - Pera.Mohana விடுதலை வேள்வியில் நாகம்மையார் & கண்ணம்மா கட்டுரை - பேரா.மோகனா

இவர் பெரியாருடைய தாயாரின் ஒன்று விட்ட தம்பி மகள் ஆவார். நாகம்மை பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்தவர். அதனால் பெரியாரின் அன்னை,  இவரை தன் மகனுக்குத் திருமணம் செய்துவைக்க முதலில் விரும்பவில்லை; எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் மகன் ராமசாமி பிடிவாதமாக,  நாகரத்தினத்தைத் தான் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்றார். மேலும் நாகரத்தினமும் ஒரேடியாக,   “மணந்தால் ராமசாமியைத்தான் மணப்பேன், இல்லையென்றால் இறந்துவிடுவேன்” என அடம்பிடித்து மிரட்டினார் பெரியாரின் அன்னையை. எனவே வேறு வழியின்றி இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஈ.வெ.ராமசாமிக்கும், நாகரத்தினம் என்கிற நாகம்மைக்கும் திருமணம் 1898-ம் ஆண்டு சிறப்பாகவே நடந்து முடிந்தது. திருமணத்தின்போது ஈ.வெ.ராவுக்கு வயது 19.

திருமணத்துக்குப் பின் முற்போக்கு வழியில் மாறிய நாகம்மை..

திருமணமாகி, இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 1900ம் ஆண்டு, ஈ.வெ.ராமசாமிக்கும், நாகரத்தினத்திற்கும், ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை பிறந்து ஐந்து மாதங்களிலேயே நோயுற்று காப்பாற்ற முடியாமல் இறந்துவிட்டது. பின்னர் அவர்களுக்கு குழந்தை பிறக்கவே இல்லை. இதுவே நாகம்மையாரின் பிந்தைய தீவிரமான சமூகப்பணிக்கு காரணமாக அமைந்தது என்றும் கூறலாம். ஆனால் திருமணத்திற்கு பிறகு நாகம்மையார் தன்னுடைய கணவரின் புரட்சிக்கு முழுவதுமாக தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். ஈ.வெ.ராமாசாமி தந்தை பெரியாராக பரிணாமம் அடைந்திருந்தவருக்கு  முதல் மனைவியான நாகம்மை தன்னை தகுதியுள்ளவராக நிகழ்த்திக் காட்டுவதற்குரிய சந்தர்ப்பமாகவே அனைத்துப் போராட்டங்களையும் அவர் பயன்படுத்திக் கொண்டார்.

மனைவியை விளையாட்டாய் ஏமாற்றி, மாற்றிய ஈ.வெ.ரா..

திருமணம் ஆனவுடன், நாகம்மை மாமியாரின் சொல்படி, விரதம் இருந்தார். ஆனால் பெரியார், நாகம்மை சாப்பிடுமுன்னர், அவர் சாப்பிட உள்ள சோற்றில் எலும்புத்துண்டை வைத்துவிடுவார். இது தொடர்ந்து நடைபெற்றதால், ஈ.வெ.ராமசாமியின் அன்னை, இனி நீ விரதம் இருக்க வேண்டாம் என்று மருமகள் நாகம்மையிடம் கூறிவிட்டார். ஈ.வெ.ராவுக்கு மனைவி தாலி அணிவதில் விருப்பம் இல்லை. இரவில் மனைவி நாகம்மையை தாலியைக் கழட்டி கீழே வைக்கும்படி கூறுவார். நாகம்மை அதற்கு மறுத்துவிடுவார். இதனைப் பார்த்த ஈ.வெ. ராமசாமி, நாகம்மையிடம், பெண்கள், தன் கணவர் அருகில் இருக்கும்போது தாலி அணியக்கூடாது. வெளியில் தூரத்தில் சென்றிருந்தால்தான் தாலி அணிய வேண்டும் என்பார். அப்பாவியான நாகம்மை இதனை நம்பிவிடுவார். பின்னர் ஈ.வெ.ரா மனைவியின் தாலியைக் கழட்டச் சொல்லி, தனது சட்டைப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு புறப்பட்டு விடுவார். காலையில் நாகம்மைக்கு, மாமியார் மற்றும் மற்ற பெண்களுடன் ஏன் தாலி இல்லை என்ற கேள்விக்குப் பதில் சொல்லி மாளாது. இதுவே தொடர்ந்ததால், ஈ.வெ. ரா வின் அன்னை, மகனையும், மருமகளையும் எதுவும் சொல்வதில்லை என்ற முடிவு எடுத்தார். இப்படியே ஈ.வெ.ரா தனது முற்போக்குக் கருத்துக்களை வீட்டுக்குள்ளும், மனைவியிடமும் விதைத்தார்.

ஈ.வெ.ராமசாமியின் சமுதாயப்பணி,

1905-1908ம் ஆண்டுகளில் ஈ.வெ.ராமாசமிக்கு  வயது 26-29: பொது வாழ்வில் ஈ.வெ.ராமசாமி விருப்பங்கொண்டு மக்கள் நலப்பணி ஆற்றினார். ஈரோட்டில் பிளேக் நோய் பரவிய போது மீட்புப்பணி ஆற்றியதுடன், இறந்த சடலங்களை உறவினர்களே கைவிட்டுச் சென்ற போதும், தன் தோள்மீது சுமந்து சென்று  அப்புறப்படுத்தி அரும்பணி ஆற்றினார்.காங்கிரஸ் இயக்கத்தில் நாட்டம் கொண்டார். ராமசாமியின் அனைத்து செயல்பாடுகளிலும் தன்னை இணைத்துக்கொண்டார் மனைவி நாகம்மை. 1909ம் ஆண்டு ராமசாமி, 30 வயதில்,  இளம் விதவையான தனது தங்கையின் மகளுக்கு  எதிர்ப்புக்கிடையில் மனைவி நாகம்மை உதவியுடன் விதவைத் திருமணம் செய்தார். 1911ம் ஆண்டு 32 வயதில் ஈ.வெ.ராமசாமி தந்தையை இழந்தார்.

மனமாற்றம்.. கடவுள் மறுப்பாளர் 

நாகம்மையாரை மணந்துகொண்டு தமது தந்தையின் வணிகத்தை கவனித்து வந்த நேரம், குடும்பத்தில் ஏற்பட்ட பிணக்கு காரணமாக அவர் வீட்டை விட்டு வெளியேறி துறவு பூணும் நோக்கத்தோடு காசிக்குச் சென்றார். அங்கிருந்த அன்ன சத்திரங்கள் பிராமணர் அல்லாதோரை உள்ளே அனுமதிக்க மறுத்தன. அவர் பசியில் வாடி, சத்திரத்தில் இருந்து வீசி எறிந்த இலைகளில் இருந்து உணவை எடுத்து உண்டார். இது அவரது மனதில் நீங்கா வடுவை ஏற்படுத்தியது.  அப்போது நடந்த நிகழ்வுகள்தான் அவரை கடவுள் மறுப்பாளராக மாற்றின.

1919-ம் ஆண்டு ஈ.வெ.ராமசாமி, காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்து, காந்தியின் ‘ஒத்துழையாமை இயக்கத்தில்’ தீவிரமாக ஈடுபட்டார். அப்போது அவர் ஈரோடு நகர்மன்றத் தலைவராக சிறப்பாகப் பணியாற்றியதுடன், குடிநீர்த்திட்டம், சுகாதார வசதி போன்ற பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றினார்.ஏறத்தாழ 28 மதிப்புறு பதவிகளை ஏற்றுப் பணியாற்றினார். ஈரோட்டில்  பெருவணிகர். தான் வகித்துவந்த மதிப்புறு பதவிகள் அனைத்தினின்றும் தானே விலகியே,காந்தியின் காங்கிரசில் சேர்ந்தார்.

நாகம்மை கதராடை ஏற்பு 

ஈ.வெ.ராமசாமி ,காந்தியாரின் நிர்மாணத் திட்டத்தை ஏற்று எளிய வாழ்வை  மேற்கொண்டதுடன், ஆடம்பர ஆடையைத் துறந்து கதர் ஆடையை உடுத்தினார். அப்போது  தன் அன்னை உட்பட குடும்பத்தினர் அனைவரையும் கதராடை அணியச் செய்தார். கதர் மூட்டையைத் தோளில் சுமந்து, ஊர் ஊராகச் சென்று விற்பனை செய்தார். அந்த கால கட்டத்தில்,  ஆடம்பரமிக்க ஆடை, அணிகலன்களைத் துறந்தார் நாகம்மையார். பின் காந்தியின் , கதராடையை அணிந்து  எளிமையை ஏற்றுக்கொண்டார் நாகம்மையார்.

 நாகம்மை –காங்கிரஸ் இயக்கம் மற்றும் காந்தி சந்திப்பில் 

1919ம் ஆண்டு ஈ.வெ.ராமசாமி இந்திய தேசிய காங்கிரஸில் இணைத்துக் கொண்ட போது நாகம்மை தன்னையும் அப்போது காங்கிரஸ் உறுப்பினராக்கிக் கொண்டார். அந்தக் காலக்கட்டத்தில்  மகாத்மா காந்தி தொடங்கிய கள்ளுக்கடைப் போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்திருந்தது. அப்போது பிரசாரத்திற்காக ஈரோடு வந்திருந்த மகாத்மா காந்தி தந்தை பெரியார் வீட்டில்தான் தங்கியிருந்தார். அச்சமயம்  மகாத்மா காந்தி கள்ளுக்கடையினால் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக அவரிடம் கூறினார்.  எனவேதான் கள்ளுக்கடை போராட்டம் என்றார். காந்தி பெண்கள் மீது அதீத அக்கறையுடன் இருந்ததை, பெண்ணாக இருந்து நாகம்மை உணர்ந்தார். உண்மையை அறிந்தார்.

நாகம்மையும், கண்ணம்மாவும் கள்ளுக்கடை மறியல் 

1921-ம் ஆண்டில் ஈரோட்டில் நடந்த கள்ளுக்கடை மறியலின் போது ஆங்கிலேய அரசால் ஈ.வெ.ராமாசாமி கைது செய்யப்பட்டார். அப்போது பெரியார் கள் உற்பத்திக்குக் காரணம் தென்னை மரங்கள் என்பதால், தனது தோப்பில் இருந்த 500-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தி போராட்டத்தைத் தீவிரமாக்கினார். ஆங்கிலேயே அரசு அப்போது 144 தடை உத்தரவு போட்டது. அதனையும்  ஈ.வெ.ரா.பெரியார் மீறியதால் கைது செய்யப்பட்டார். அப்போது நாகம்மையாரும் பெரியாரின் தங்கை கண்ணம்மாளும் பல பெண்களுடன் சேர்ந்து மறியலைத் தொடர்ந்தனர். தமது மனைவி நாகம்மையையும், சகோதரி கண்ணம்மாவையும் அரசியலில் ஈடுபட ஊக்குவித்தவரே ஈ.வெ. ராமசாமி பெரியார்தான்.

சிறை சென்ற நாகம்மாள் & கண்ணம்மாள் 

ஈ.வெ.ராமசாமியின் மனைவி நாகம்மையாரும் பெரியாரின் தங்கை கண்ணம்மாளும்  இருவரும் , 1921ம் ஆண்டு  கள்ளுக்கடைகளை மூட வலியுறுத்தி தலைமையேற்று காங்கிரஸ் கட்சியின், ஈரோடு கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை முன்னின்று நடத்தினர். கள்ளுக்கடை மறியலில் , ஈடுபட்டதால், ஈ.வெ. ராமசாமியின்  தங்கை கண்ணம்மாள், மனைவி நாகம்மாள் இருவரும் சிறை செல்ல நேரிட்டது. அவர்களுடன் ஈ.வெ. ராமசாமியும் கள்ளுக்கடை மறியலில் பங்கேற்றுச் சிறை சென்றார்.. இதன் பலனாக அன்றைய ஆங்கில அரசு நிர்வாகத்தினர் உடனடியாக பணிந்தனர். மீண்டும் ஒத்துழையாமை மற்றும் மிதமாக மது குடித்தல் சட்டங்களை எதிர்த்து மறியல் செய்தது ஆகியவற்றால் கைது செய்யப்பட்டார்.

போராட்டம் நிறுத்துவது ஈரோடு பெண்கள் கையில்..என காந்தி

அதன் பின்னர் அந்தப் போராட்டத்தினை நாகம்மையாரும், பெரியாரின் தங்கை கண்ணம்மாவும் முன்னின்று நடத்தினர். பெண்கள் விடுதலைப் போரில் கலந்துகொண்டு கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டது இந்திய வரலாற்றிலேயே  அதுதான் முதல்முறை. அரசு விதித்திருந்த 144 தடை உத்தரவை மீறியதால் ஈரோடு நகரம் முழுவதுமே கலவரம் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. மக்களின் எழுச்சியைக் கண்ட அரசு கைது நடவடிக்கையைத் தொடர அஞ்சி, சமரசத்துக்கு முன்வந்தது. மறியல் போராட்டத்தைக் கைவிடுமாறு காந்தியைச் சிலர் வேண்டினார்கள். அதற்கு காந்தி “போராட்டத்தை நிறுத்துவது என் கையில் இல்லை. அது ஈரோட்டிலுள்ள இரண்டு பெண்களிடம் இருக்கிறது. அவர்களைத்தான் கேட்க வேண்டும்” என்றார்.

சாதி, மத வேறுபாடுகளைக் களைய குரல் கொடுத்த நாகம்மை 

சாதி மத வேறுபாடுகளை நீக்கவும், மூடப்பழக்க வழக்கங்களை ஒழிக்கவும் மேடைகளில் முழக்கமிட்டார் நாகம்மை. பெண் கல்வி மற்றும் பெண்ணுரிமைக்கு உலகளவில் முதல் குரல் கொடுத்த இந்திய சுயமரியாதை இயக்கத்தின் தலைவர் ஈ.வெ. ராமசாமியின் வீட்டுப் பெண்களும் அவருக்கு நிகரான சேவைகளை தமிழகத்திற்கு புரிந்தனர். ‘கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்’ என்பதற்கு நிகராக பெரியாருக்கு நிகராக அவரது வீட்டுப் பெண்கள் களத்தில் இறங்கி தங்களை நிருபித்தனர்.

காங்கிரஸ் அகில இந்திய செயற்குழு உறுப்பினராக நாகம்மை 

பெண் கல்வியின் இன்றியமையாமை, கலப்பு மணம், விதவைகள் மறுமணம், சுயமரியாதைத் திருமணம் போன்ற கருத்துகளைத் தமது பிரசாரங்களில் வலியுறுத்தினார்.1923 ம் ஆண்டு, டிசம்பர் 4ம் நாள்,  திருச்சியில், மதராஸ் (தமிழ்நாடு) மாகாண காங்கிரஸ் முதலாவது கமிட்டியில், அனைத்திந்திய காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் நாகம்மை. தமிழ்நாட்டில் அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் நாகம்மை ஆவார்

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக நாகம்மை வைக்கத்தில் கைது 

கேரளத்தின் திருவிதாங்கூர் மாகாணத்தில் தீண்டாமை ரொம்பவும்  ஆதிக்கம் செலுத்தியது.  1924-ம் ஆண்டு ஏப்ரலில் இன்றைய கேரள மாநிலம் வைக்கத்தில் (  அன்றைய மதராஸ் மாகாணத்தின் ஒரு பகுதி) ஈழவர் எனப்படும் தீயர், புலையர் ஆகியோருக்கு இழைக்கப்பட்ட தீண்டாமைக் கொடுமையை ஒழிக்க நடைபெற்றதே வைக்கம் போராட்டம்.  இங்கு தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலுக்குள் நுழைவதையும், கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் நடப்பதற்கும் அப்போது தடை இருந்தது. எனவே காங்கிரஸ் இயக்கம், தாழ்த்தப்பட்ட மக்கள் கோயில் மற்றும் தெருக்களுக்குள் நுழைவதைத் தடை செய்வதை எதிர்த்து வைக்கம் சத்தியாக்கிரகத்தைத்  தொடங்கியது. இந்தப் போராட்டத்தினால் இரண்டு முறை சிறைப்பட்டார் பெரியார். அப்போது நாகம்மையார், தமிழகத்துப் பெண்களைச் அழைத்துக்கொண்டு ஈரோட்டிலிருந்து வைக்கம் வந்து சேர்ந்தார். நாகம்மையும்  மற்றும் இராமசாமியும்  1924 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டத்தினை முன்னெடுப்பதால் சிறைத்தண்டனை கிடைக்கும் என்று அறிந்தும் அதற்கு அஞ்சாமல் துணிவுடன் போராட்டக் களத்தில் நாகம்மையார் உறுதியுடன் நின்றார். நாகம்மை போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்களை முன்னின்று நடத்தி,1924 ம் ஆண்டு,  மே மாதம் அங்கேயே கைது செய்யப்பட்டார்.

 சுயமரியாதை இயக்கத்தில் நாகம்மை 

ஈ.வெ.ராமசாமி, 1925 ஆம் ஆண்டு சுயமரியாதை  இயக்கம் என்ற ஒன்றைத் தொடங்கினார். அப்போது இதில் பெண்கள் அவ்வளவாக இல்லை. ஆனால் அந்த இயக்கம் தொடங்கிய போது. சுயமரியாதை இயக்கத்தில் பெண்களும் பங்கேற்று தங்களது உரிமைகளை நிலை நாட்டிட வேண்டும் என்று பெண்களை அதிகளவில் சுயமரியாதை இயக்கத்தில் இணைப்பதற்கு காரணமாக இருந்தார் நாகம்மையார். இயக்கத்தில் பெண்கள் பங்குபெறுவதை ஊக்கப்படுத்தியவர், உறுதிப்படுத்தியவர் இவர். அதேபோல் சுயமரியாதை இயக்கத்திற்கு பெருமை சேர்த்திடும் வகையில், விதவை மறுமணங்கள் மற்றும் சுயமரியாதைத் திருமணங்களை முன்னின்று நடத்தியுள்ளார்.

 குடியரசு இதழின் ஆசிரியராக 

ஈ.வெ.ராமசாமி பெரியார் சிறை சென்ற காலத்தில் நாகம்மை “குடிஅரசு, ரிவோல்ட்” ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகவும் விளங்கினார். ஈ.வெ. ராமசாமி ஐரோப்பாவிற்கு சுற்றுப் பயணம் சென்றார். அப்போதும் நாகம்மையார்   குடியரசு இதழின் ஆசிரியராக பொறுப்பு ஏற்று அதனை திறம்பட நடத்தினார்.

நாகம்மை மறைவு 

மனைவி நாகம்மைக்கு உடல்நிலை சரியில்லை. அருகிலிருந்து கவனித்து அவளுக்குத் தைரியமூட்டி, ஆறுதல் சொல்ல ஈ.வெ.ரா, அதைப் பற்றி எண்ணவில்லை. தனது தொண்டுதான்,  பெரிதென்றெண்ணி, பொதுக் கூட்டங்களில் உரையாற்றப் பயணம் சென்று விட்டார். நாளுக்கு நாள் நாகம்மையார் உடல்நிலை மோசமடைந்து வந்தது.வைத்தியம் செய்த மருத்துவர்கள் இனிப் பிழைப்பது அரிது என்று கூறினார்கள். அருகிருந்து  கவனித்துக் கொள்ள பலர் இருந்தும், நாகம்மையாரின் தளர்ந்த விழிகள், நாற்புறமும் கணவரைத் தேடித் துழாவின. இத்தருணத்திலும் தன் கணவர் அருகில் இல்லாமல் போனது நாகம்மையாரின் மெல்லிய மனத்தை மிகவும் வருத்தியது. வந்துவிடுவார், வந்து விடுவார் என்கிற நம்பிக்கை வரவர அவரது உள்ளத்தில் தளர்ந்து கொண்டே வந்தது.

அப்போது ஈ.வெ.ரா திருப்பத்தூர் மநாட்டில்  பலத்த கைதட்டல்களுக்கிடையே பேசிக் கொண்டிருந்தார். ஈரோட்டிலிருந்து சென்ற ஆள், ஈ.வெ.ராவிடம் நாகம்மையாரின் மோசமான நிலைமையையும், அவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதையும் எடுத்துக் கூறினார். ஆனால், இதைக் கேட்டும், ஈ.வெ.ரா. உடனே புறப்பட்டு விடவில்லை.மாநாட்டில் தன் முழு உரையையும் முடித்த பின்னரே புறப்பட்டார். ஈரோடு மிஷன் மாருத்துவமனையில் நாகம்மையார், கணவரைக் காணும் கடைசி ஆசையும் நிறைவேறாமலே, 1933 -ம் ஆண்டு மே மாதம் 11ம் நாள், உயிர்துறந்தார். ஈ.வெ.ரா. ஊர்வந்து, நாகம்மையாரைக் காண மருத்துவமனை சென்றபோது,நாகம்மையின் உயிரற்ற உடல்தான் அவரை வரவேற்றது. எதற்கும் கலங்காத ஈ.வெ.ராவை,நாகம்மையாரின் மரணமும் கலக்கவில்லை.அன்பே உருவானவர் நாகம்மையார்.

நாகம்மையை பெரியார் பாராட்டு 

“நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய, தனக்காக அல்ல என்பதை நன்றாக உணர்ந்தேன்”  என தன் மனைவி நாகம்மையார் மறைந்த போது தந்தை பெரியார் சொன்ன வார்த்தைகள் இவை. அவர் அப்படி சொன்னதற்குக் காரணம் தான் வாழ்க்கைத் துணையாக மட்டுமல்லாமல் தன் கொள்கை வழித்துணையாகவும் நாகம்மையார் விளங்கினார் என்பதனாலேயே

நாகம்மை பெருமை 

@ தந்தை பெரியாருடன் வாழ்ந்த காலத்தில், அவருடன் அவரது கொள்கைப் போராட்டத்தில் தன்னையும் முழுமையாக ஈடுபடுத்தி கொண்டார் நாகம்மை..

@ தந்தை பெரியாரின் மனைவியாக வாழ்ந்ததுடன், அவரது கொள்கையால் ஈர்க்கப்பட்டவராக தந்தை பெரியார் வலியுறுத்திய புதுமைப் பெண்ணாகவும் வாழ்ந்து காட்டியவர் நாகம்மை.

@தமிழ் நாட்டில் பல பள்ளிகள் நாகம்மையின் பெயரைத் தாங்கியுள்ளன. தமிழ்நாட்டில் பெண்களுக்கு உயர்கல்வி வழங்குவதற்கு தமிழக அரசு பெரியார் ஈ. வெ. ரா. நாகம்மை இலவசக் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

@தஞசாவூரில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் உள்ளது

@வேலூரில் நாகம்மை பெயரில், அரசு ஈ.வெ.ரா நாகம்மை மேல்நிலைப் பள்ளி உள்ளது.

@மதுரையிலும் பெரியார் நாகம்மை பள்ளிகள் உள்ளன.

@ காந்தியின் பிரச்சாரத்தில் வெகுவாக ஈர்க்கப்பட்ட நாகம்மை ஈரோட்டில் தங்களது வீட்டின் அருகே தெருவொன்றில் பெண்களைத் திரட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டார். நாகம்மை கள்ளுக்கடைக்காக நடத்திய போராட்டத்தின் காரணமாக மறியல் போராட்டம் நடைபெற்ற இடம் தற்போதும் கள்ளுக்கடை மேடு என்றழைக்கப்பட்டு வருகிறது.

@ நாகம்மை, கணவரைப் பலசமயம் தன் வீட்டாரிடம் விட்டுக் கொடுக்காமலும். வெளியுலகில் தன் கணவரது பொதுத் தொண்டுகள் அனைத்திற்கும் ஒத்துழைப்புக் கொடுத்தவர்.கணவர் சிறைபுக நேர்ந்ததால், அவர் விட்ட இடத்திலிருந்து தொண்டைத் தொடர்ந்து போராடி, சிறைக்கும் அஞ்சாமல் வீரசாகசம் புரிந்த ஒப்பற்ற வீராங்கனையாக வாழ்ந்து காட்டி சரித்திரத்தில் இடம் பெற்றவர் நாகம்மையார்.

@ காந்திஜிக்கு மனைவியாக அமைந்த கஸ்தூரிபாய் அவருக்கு தொண்டும், உதவியும் செய்தது போலவே, ஈ.வெ.ரா. வுக்கு நாகம்மை கிடைத்தார்.அவருக்கு ஏகமாகப் பணிபுரிந்தார், சமூகப் போராளியாகவும் இருந்தார்.

விருந்தோம்பலில் சிறந்த பண்பாளர் நாகம்மை 

விருந்தோம்பலில் நாகம்மையாருக்கு இணையானவர் எவருமில்லை . தம் இல்லத்திற்கு வரும் யாவர்க்கும் இன்முகத்துடனும் இன்சொல்லுடனும் விருந்து படைப்பதைக் கண்டு அனைவரும் நெகிழ்வார்கள். ஆனால் பெரியார் சிக்கனவாதி; இதனை விரும்பாதவர். ஆனால் எந்த நேரத்தில், யார் தன் வீடு தேடி வந்தாலும், அவர்களை வாயார உபசரித்து; வயிராற உணவளித்து அனுப்புவார் நாகம்மை. தனது.மாமனார், மாமியாரையும்  தன் இரு கண்கள் போல் போற்றிக் கடைசிக் காலம்வரைத் தொண்டு செய்தவர்.

”ஒரு சமயம் நானும், பெரியாரும் திருநெல்வேலிக்குப் பிரசார நிமித்தம் சென்றுவிட்டு ஈரோட்டுக்கு இரவு 12.30 மணிக்கு வந்தோம். அன்னம் கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற ஐயப்பாட்டுடனே வந்தோம். அப்பொழுது நாகம்மை அம்மையார் அன்புடன் வரவேற்று, உடனே அறுசுவையுடன் அமுது படைத்ததை யான் என்றும் மறவேன்” என்று திரு.வி.க எழுதியிருக்கிறார்.

ராஜாஜியும் கூடப் பெரியார் வீட்டு விருந்தோம்பல் குறித்து 1953-ம் ஆண்டுடில், நான் ஈ.வெ.ராமசாமியின் வீட்டுத் தோசையை விரும்பிச் சாப்பிடுவேன். அதன் பக்குவம் என்ன என்று நான் கேட்பதுண்டு” என்று பொதுக்கூட்ட மேடையிலேயே பேசியிருக்கிறார். பெரியாருடன் மலேசியா, சிங்கப்பூர் சென்றுவிட்டு, இந்தியாவிற்குத் திரும்பும்போது, தங்களுக்கு விருப்பமான, தேவையான மலாய் நாட்டுப் பொருள்கள் எவை என்று கேட்ட தமிழர்களிடம், “நீங்களெல்லாம் இங்கே சுயமரியாதை இயக்கத்தைப் பாடுபட்டுப் பரப்பியிருக்கிறீர்களே, அதுவே எனக்கு அருமையான பொருள்” என்று உள்ளம் நிறைந்து பாராட்டினாராம் நாகம்மையார்.

நாகம்மை இல்லம்.

நாகம்மையாரின் பெயர் என்றும் நிலைத்திடும் வகையிலும், நாகம்மையின் சமூகப் பணியின் நினைவாகவும், ‘நாகம்மையார் இல்லம்’ என்ற பெயரில், ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான இல்லம்  தந்தை பெரியாரால் 1959-ம் ஆண்டு திருச்சியில் உருவாக்கப்பட்டது. 2009-ம் ஆண்டு தனது பொன்விழாவினை இந்த இல்லம் கொண்டாடியுள்ளது. இந்த இல்லம் இன்னும் எத்தனையோ பெண் குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றி வருகிறது.

Ref:

  1. https://ta.wikipedia.org/wiki
  2. https://www.dinamani.com/editorial-articles/special-stories/2020/mar/08/womens-day-2020-remembering-nagammai-maniammai-3376051.html
  3. https://ta.wikisource.org/wiki/
  4. https://www.vikatan.com/social-affairs/women/remembering-nagammai-on-her-death-anniversary
  5. amilvu.org/library/nationalized/pdf/49-na.ra.nachiyappan/ilaignarkalukkuthantha
  6. iperiyarvaralaru.pdfhttp://
  7. modernrationalist.com/category/feminism/
  8. https://feminisminindia.com/2019/09/16/nagammai-fearless-forgotten-dalit-feminist-activist/

Nagammaiyar & Kannamma Essay on Liberation Velvi - Pera.Mohana விடுதலை வேள்வியில் நாகம்மையார் & கண்ணம்மா கட்டுரை - பேரா.மோகனாNagammaiyar & Kannamma Essay on Liberation Velvi - Pera.Mohana விடுதலை வேள்வியில் நாகம்மையார் & கண்ணம்மா கட்டுரை - பேரா.மோகனா

பிச்சுமணியின் கவிதை

பிச்சுமணியின் கவிதை




பகுத்தறிவுக் கிழவனே
வெண்தாடித் தலைவனே..
ஓய்வறியாமல்
ஓடி ஓடி மானத்தையும் அறிவையும்
விதைத்த கிழவா

யார் சொல்லினும்
மெய் சொல் காண் என்றார்
தமிழ்வள்ளுவர்

எதனையும் சந்தேகி என்றார்
பேராசான் மார்க்ஸ்

அறிவையும் மனத்தையும்
விதைத்துச் சென்ற நீயும்
அதையே சொன்னாய்..

மனிதன் மானம் கொள்ள
தமிழ் மண்ணில் வழித்தடம்
அமைத்தவன் நீ

நீ போட்ட வழித் தடத்தில்
நடை பயின்றது தமிழகம்
சிலர் வழி மாறியிருக்கலாம்
சிலர் விழி மூடி நடக்கலாம்
ஆனாலும் உன் வழித்தடம்
மாறாமல் இருக்கிறது

1900 வரை
ஆதிக்கத்துக்கு எதிராய்
சுயமரியாதைப் போர் புரிந்த
ஒட்டுமொத்தப் போராளிகளின்
அடையாளமாய் நீ நிற்கிறாய்..

உன் வழித்தடம்
மிக மிக நீண்டது..
அது பயணித்துக் கொண்டே இருக்கிறது

பிறப்பில் பேதம் பேசினால்
உன் கைத்தடியே முதலில்
வாள் வீசுகிறது

உரிமைகளை யார் தடுத்தாலும்
உன் குரலே முதலில் எதிர்த்து ஒலிக்கிறது

யோ.. கிழவா..
உன்னை மறுதலித்து விட்டு
இந்த மண்
சமூகநீதி பேச முடியாது
பெண்ணியம் பேச முடியாது
சுயமரியாதை பேச முடியாது
பகுத்தறிவு பேச முடியாது.

பகுத்தறிவுக் கிழவனே
கருப்புச் சட்டைத் தலைவனே.
கடைக்குட்டிப் பேரன்கள்
வாழ்த்துகள் செய்திகள்
குவிந்து கிடக்கின்றன
வா.. வந்து பார்..

– பிச்சுமணி

புத்தகம் பேசுது தமுஎகச மாநாடு சிறப்பிதழிலிருந்து: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்  கலைஞர்கள் சங்கமும் நானும்… – இயக்குநர் ஞான ராஜசேகரன்

புத்தகம் பேசுது தமுஎகச மாநாடு சிறப்பிதழிலிருந்து: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் நானும்… – இயக்குநர் ஞான ராஜசேகரன்




நான் வேறொரு துறையிலிருந்து சினிமா துறைக்கு வந்தேன் என்பது எல்லோருக்கும் தெரியும். 1995 இல் ‘மோகமுள்’ திரைப்படத்துடன் தமிழ் சினிமாவில் நுழைந்தபோது தமிழ்சினிமாவில் இருந்த பிரபுத்துவமும், புதிய முயற்சிகளை நிந்திக்கின்ற விதமும் மிகுந்த ஏமாற்றங்களையே எனக்குத் தந்தன.

அப்போதுதான் தமுஎகச என்கிற அமைப்புடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. சேலம் அருகில் தனம் என்கிற தலித் சிறுமிக்கு இழைக்கப்பட்ட அநீதியை அடிப்படையாக வைத்து நான் உருவாக்கிய ‘ ஒரு கண் ஒரு பார்வை’ என்கிற குறும்படத்தை தமுஎகச தன் தோள்களில் எடுத்துச்சென்று தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளில் நடந்த தமுஎகச விழாக்கள் அனைத்திலும் திரையிட்டு பிரபலப்படுத்தினார்கள். வர்த்தக ரீதியில் வெற்றிபெற்ற ஒரு திரைப்படத்தின் அந்தஸ்தை எனது குறும்படத்துக்கு தமுஎகச இயக்கம் பெற்றுத்தந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. அப்போதுதான் இளைஞர்கள் மிகுந்த தமுஎகச இயக்கத்தின் சக்தியை நான் புரிந்து கொண்டேன்.

அடுத்து நான் உருவாக்கிய திரைப்படங்களில் தமுஎகச உறுப்பினர்களை தவறாமல் நான் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தேன். ‘முகம்’, ‘பாரதி’ படங்களில் சென்னை, பாண்டிச்சேரி, திருநெல்வேலி முதலான இடங்களில் படப்பிடிப்புகள் நடந்த போது அங்கே உள்ள தமுஎகச கிளை உறுப்பினர்கள் பெருமளவில் பங்கெடுத்தார்கள்.

‘பாரதி’ திரைப்படம் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்றாலும் சில பிற்போக்காளர்கள் எதிர் பிரச்சாரம் செய்ய முயன்றார்கள். அதை முதலிலேயே யூகித்து திரு சிகரம் ச.செந்தில்நாதன், திரு இரா.தெ. முத்து, திரு. அ.குமரேசன் ஆகியோர் தமுஎகச சார்பாக திருவல்லிக்கேணி பாரதி நினைவு இல்லத்தில் எதிர் பிரச்சாரத்தை முறியடிக்கும் விதத்தில் ‘பாரதி’ படத்திற்கு மிகப்பெரிய பாராட்டு விழா நடத்தியதை நான் என்றைக்குமே மறக்கமுடியாது. அதைப்போலவே திருப்பூர், ஈரோடு, பாண்டிச்சேரி, திருநெல்வேலி முதலான நகரங்களிலும் ‘பாரதி’ படத்தை மக்களிடம் தமுஎகச எடுத்துச்சென்றது. கோவை நகரில் அமரர் அய்யாசாமி அவர்கள் முன்னெடுத்து நடத்திய ‘பாரதி’ படத்துக்கான ஆதரவு இயக்கத்துக்கு தமுஎகச தோள்கொடுத்து உதவியது. கே.ஜி தியேட்டரில் பாரதி அரங்கு நிறைந்த காட்சிகளாக நூறு நாட்கள் ஓடியது.

தமிழ்சினிமாவில் நான் எப்படிப்பட்ட படங்களை எடுக்கவேண்டும் என்று தீர்மானிக்க தமுஎகச போன்ற இயக்கங்கள் எனக்கு மிகவும் ஆதாரமாக இருந்தன என்றே சொல்ல வேண்டும். ‘பெரியார்’ ‘ராமானுஜன்’ முதலான தமிழ்நாட்டின் மிக முக்கிய ஆளுமைகளை திரையில் கொண்டுவர நான் முடிவெடுத்ததன் பின்னணி அதுதான். பெண்ணியச் சிந்தனைகளை உளவியல் பார்வையோடு எழுதிய
ஆர். சூடாமணியின் ஐந்து கதைகளை அடிப்படையாக வைத்து நான் உருவாக்கிய “ஐந்து உணர்வுகள்” திரைப்படத்துக்கு திரு ஆதவன் தீட்சண்யா, திரு இரா.தெ.முத்து மற்றும் தமிழகம் முழுவதுமான தமுஎகச தோழர்கள் நல்கிய அன்பும் ஆதரவும் மறக்க இயலாதது.

சுமார் 25 வருடங்களாக தமுஎகச இயக்கத்தையும் அதன் செயல்பாடுகளையும் நன்றாக அறிந்தவன் என்கிற முறையில் அந்த இயக்கத்தைப் பற்றி சில கருத்துகளை பகிர்ந்து கொள்ள நான் ஆசைப்படுகிறேன்.

1. தமுஎகச இயக்கம் நல்ல முற்போக்கான சமூகச் சிந்தனையுடைய இளைஞர்களை ஈர்க்கும் ஒரு அமைப்பாக இருந்து வருகிறது என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை.

2. இலக்கியம், சினிமா, நடிப்பு, இசை முதலான பல்துறைகளில் திறமையுள்ளவர்களும் ஆர்வமுள்ளவர்களும் அதில் அதிகம் நிறைந்திருக்கிறார்கள் என்பதையும் யாரும் மறுக்க முடியாது.

3. தமுஎகச வில் இருந்தவர்களில் பலர் இன்று ஆளுமைகளாக திகழ்கிறார்கள் என்பதும் ஒரு உண்மை. பாரதி கிருஷ்ணகுமார், திண்டுக்கல் லியோனி போன்றவர்கள் தமுஎகசவினால் அடையாளம் காணப்பட்டவர்கள் என்பது மட்டுமல்லாமல் அவர்களுக்கு நல்ல Patronage தந்து தமுஎகச அவர்களை வளர்த்திருக்கிறது என்று நிச்சயமாக கூற முடியும். மேலும் எண்ணிறந்த இளைஞர்களை organisational skill உள்ளவர்களாக தமுஎகச வளர்த்திருக்கிறது என்பதும் உண்மை.

4. ஆனால் தமுஎகச போன்ற துடிப்புள்ள கலை இலக்கிய ஈடுபாடு மிகுந்த இளைஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு இயக்கம், இன்னும் பல சாதனைகளை செய்திருக்கலாம் என்றே நான் கருதுகிறேன். கலை இலக்கியம் முதலான துறைகளில் ஆர்வம் உள்ளவர்களை வைத்து கலை இரவுகள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதோடு நின்றுவிடாமல் அவர்களுக்கு முறையான பயிற்சிகளை அளித்து அவர்களின் திறமைகளை செப்பனிட்டு தமுஎகசவின் BRAND AMBASSADORS களாக பலரை உருவாக்கி இருக்கலாம். கேரளாவில் இது போன்று பல இயக்கங்கள் ஆச்சரியப்படத்தக்க சாதனைகளைச் செய்திருக்கின்றன.

தமுஎகச பட்டறையிலிருந்து தரமான -ஆற்றல் மிக்க- கவிஞர்கள், எழுத்தாளர்கள், திரைக்கதையாளர்கள், இயக்குநர்கள் நடிகர்,நடிகையர் நாட்டுப்புறக் கலைஞர்கள்….இப்படி எல்லாத் துறைகளிலும் உன்னத ஆளுமைகள் உருவாகியிருக்கலாம்.

எனக்கு இத்தகைய ஆதங்கம் இருப்பதற்குக் காரணம், தமுஎகசவுக்கு எல்லா தகுதிகளும் இருப்பதால்தான். திறமையுள்ள இளைஞர்கள் தமுஎகசவை நோக்கி வருகிறார்கள். அவர்களின் ஆர்வத்தை மட்டும் பயன்படுத்திக் கொள்வதோடு நின்றுவிடாமல் தீவிரமான பயிற்சி வகுப்புகள், திறன் மேம்பாட்டு திட்டங்கள் ( Skill Development Programmes) முதலானவைகளை தமுஎகச நடத்தி அவர்களுக்குள் இருக்கும் திறமையை மென்மேலும் வளர்த்து அவர்களை ஆளுமைகளாக ஆக்கினால் வறட்சி மிகுந்த தமிழின் இலக்கியம், சினிமா மற்றும் பிற கலைத்துறைகளில் மிகப்பெரிய புரட்சியை தமுஎகச என்கிற இயக்கம் நடத்திக்காட்ட முடியும். இதுவே என் நம்பிக்கையும், வேண்டுகோளும்.

இயக்குநர் ஞான ராஜசேகரன்

நெகிழ்ந்த ஒரு கதை கட்டுரை – பேரா.எ.பாவலன்

நெகிழ்ந்த ஒரு கதை கட்டுரை – பேரா.எ.பாவலன்




உங்களிடம் ஷேக்ஸ்பியர் புத்தகம் இருக்குமா சார்?, ஜெயகாந்தன்?

“உங்களிடம் ஷேக்ஸ்பியர் புத்தகம் இருக்குமா சார்?, ஜெயகாந்தன் புத்தகம் இருந்தாலும் பரவாயில்லை… “

இந்தக் கேள்வி என்னை வியப்பில் ஆழ்த்தியது. எனக்குப் பதில் சொல்லத் தோன்றவில்லை. அந்த அம்மையார் பேசும்போதும் அவருடைய முகத்தையும், புருவம் தூக்கி கண்கள் விரியும் அழகையும் ரசித்துக் கொண்டிருந்தேன்.

அந்தத் தாயாரின் வயிற்றில் நான் பிறந்திருந்தால் அல்லது அவர் எனக்கு அம்மாவாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற ஒரு கணம் இந்த எண்ணம் என்னுள் வந்து செல்வதற்குக் காரணமாக இருந்தவர் நான் வேலை பார்க்கும் கல்லூரியில் ஆயம்மா வேலை செய்யும் தேவகி அம்மாதான்.

இரண்டு நாட்களுக்கு முன்பு “வானம் வரையாத ஞான மின்னல்கள்” என்னும் கவிதைத் தொகுப்பைப் பேராசிரியர் நண்பர் சந்திரசேகர் அவர்கள் என்னிடம் கையளித்தார். அந்த நூலின் ஆசிரியர் கவியரசன். அவருடைய நூலுக்கு நானும், நண்பர் சந்திரசேகரும் கருத்துரையும், அணிந்துரையும் எழுதி இருந்தோம். அதனால் நண்பரிடம் இருந்த அந்தப் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு அவருடைய தேர்வு கட்டுப்பாட்டு அறையை விட்டு வெளியில் வந்தேன்.

எதிரே தேவகி அம்மா. என் கையில் இருக்கும் புத்தகத்தைப் பார்த்துவிட்டு, ”என்ன புத்தகம் சார் அது?” புத்தகத்தைக் காண்பித்தேன். புத்தகத்தின் அட்டையின் பின்பக்கத்தில் உள்ள எங்கள் இருவருடைய நிழற்படமும் சிறிய அளவிலான கருத்தும் இருப்பதையும் பார்த்துவிட்டு ஒரே நிமிடத்தில் அதைப் படித்து விட்டு முகம் மலர்ந்து பாராட்டினார்.

அந்த அம்மையார் சொன்ன வார்த்தை “இது ரொம்ப நல்லா இருக்கு சார்” அந்த வார்த்தையின் கூர்மையை உணர்ந்து, ”வேண்டுமென்றால் படித்துட்டு கொடுங்கள்” என்று சொன்னவுடன், வேண்டாம் இருக்கட்டும் சொல்வார்கள் என்று தான் எதிர்பார்த்தேன். ஆனால் தேவகி அம்மா,

”படிச்சிட்டு நாளைக்குத் தரட்டுமா சார்” என்றார்.

உண்மையில் நான் பூரிப்படைந்தேன்.

அந்தப் புத்தகத்தை அவரிடம் கொடுத்த பின்பு, இரண்டு நாட்களாக அந்தத் தாயின் சிந்தனை அவ்வப்போது எண்ணில் ஊறிக்கொண்டே இருந்தன. புத்தகத்தைக் கொடுத்த மறுநாள் அந்த அம்மாவே நான் முதல் தளத்திலிருந்து கீழே இறங்கி வரும்போது,

“சார் இன்னும் அந்தப் புத்தகத்தை முடிக்கவில்லை நாளைக்குத் தந்துவிடுகிறேன்” என்றார்.

”சரிம்மா நீங்க எப்பொழுது முடிக்கிறிங்களோ அப்பொழுது கொடுத்தால் போதும்”

என்று சொல்லிவிட்டுச் சென்றாலும், தேவகி அம்மாவைப் பற்றிய எண்ணம் என்னுள் துளிர்விடத் தொடங்கியது. அவரிடம் நிறையப் பேச வேண்டும், அவரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கத் தொடங்கியது. அந்த தாயாரின் நடவடிக்கையும், கண்ணியமும் பற்றி நண்பர்களுடன் சிலாகித்துச் சொல்ல ஆரம்பித்தேன் அவர்களும் கேட்டும், கேட்காமல் அடுத்த நிகழ்வுகளுக்குத் தாவிச் சென்று விடுவோம். Staff appraisal form ready பண்ணனும், எக்ஸாம் டூட்டி இருக்கு, இன்னும் சம்பளம் பத்தல அதுக்கு வேற ஏதாவது PART TIME வேல பார்த்தாதான் ஏதாவது பண்ணமுடியும்.

சமயத்தில் அரசியல்…

பொதுவுடைமையைப் பற்றிச் சொல்வதற்குக் குறியீடாக ஒரு நிகழ்வைச் சொல்லுவது வழக்கம். தன்னைப் பார்க்க வரும் நண்பர்களுக்குக் காரல் மார்க்ஸ் அனைவருக்கும் தேநீர் கொடுங்கள் என்பார். அதைப் பெரியார் அனைவருக்கும் சமமாகக் கொடுங்கள் என்பார். அம்பேத்கர் அனைவருக்கும் ஒரே மாதிரியான குவளையில் கொடுங்கள் என்று சொல்வதாகக் கற்பனை கலந்த கதையைச் சொல்லுவதெல்லாம் பேசி செல்வது வழக்கம். ஆயினும் தேவகி அம்மாவைப் பற்றிய எண்ணம் என்னுள் ஓடிக்கொண்டிருக்கும்.

உண்மையில் அந்த அம்மாவிற்குப் படிக்க நேரம் இருக்குமா?. காரணம் கல்லூரியில் நாங்கள் பார்க்கும் பொழுது ஏதாவது ஒரு வேலையைச் செய்து கொண்டே இருப்பார். வகுப்பறையைச் சுத்தம் செய்வது, மாணவர்களின் கழிப்பறையைச் சுத்தம் செய்வது, இப்படி ஏதாவது ஒரு வேலை அவருக்கும், மற்ற ஆயாம்மாக்களுக்கும் இருந்து கொண்டே இருக்கும். சிறுநீர் கழிப்பதற்காக சமயத்தில் நண்பர்களுடன் கழிவறைக்குச் செல்லும் பொழுது உள்ளே வந்த அம்மா சுத்தம் செய்து கொண்டிருப்பார். எங்களுடைய பேச்சு சத்தம் கேட்டால் உடனே வெளியே வந்து நீங்கப் போங்க சார் என்று வெளியே வந்துவிடுவார். இதை நான் பலமுறை கவனித்திருக்கிறேன்.

நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயன்படுத்தும் அந்த கழிவறைக்குள் நாங்கள் உள்ளே செல்லும் பொழுது அருவருப்புடன் தான் சென்று வருவோம். அந்த அளவிற்கு நாற்றமெடுக்கும். சிலர் மாஸ்க் போட்டுக்கொண்டு இன்னும் சிலர் மூக்கில் தன்னுடைய கைக்குட்டையைப் பொத்திக்கொண்டோ ஒன்றிரண்டு நிமிடங்களில் வெளியில் வந்து நாற்றம் பொறுக்காமல் காரி காரி உமிழ்வதுண்டு. ஆனாலும் தேவகி அம்மா எந்த முகச்சுளிப்பு இல்லாமல் ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில் பினாயுளும், ஆசிட், பாத்ரூம் கழுவும் தென்னம் தொடப்பம், மாபு போடும் குச்சி… சுத்தம் செய்யும் மற்ற பொருட்களுடனும் உள்ளே சென்று அத்துணை அழகாக சுத்தம் செய்து விட்டு வருவார். பெரும்பாலும் கழிப்பறைகளைச் சுத்தம் செய்த பின்புதான் ஆயாம்மாக்கள் சாப்பிடுவார்கள். உண்மையில் எவ்வளவு பெரிய சகிப்புத்தன்மை வேண்டும் அவர்களுக்கு.

தேவகி அம்மாவைக் கடந்து செல்லும் பொழுது ஏனோ பேசத் தோன்றும். பேசுவதற்கு எவ்வளவோ இருந்தாலும் ஆயம்மா சாப்பிட்டீங்களா? நான் சேமித்து வைத்திருந்த அந்த ஒத்த வார்த்தை மட்டும் கேட்பேன். அந்த வார்த்தையைத் தேவதூதன் தங்கள் பாவங்களுக்காக இறக்கப்பட்டது போலச் சாப்பிட்டோம் சார், இன்னும் இல்ல சார், சாப்பிட போறோம் சார்…

நீங்க சாப்டிங்களா சார் என்று பதில் கேள்வி அதே அனுசரணையுடன் வந்து நிற்பதை நான் ரசித்து இருக்கிறேன்.

இப்படிதான் தேவகி அம்மா உள்ளிட்ட ஆன்மாக்களைக் கடந்து செல்வதுண்டு. அதுபோன்று ஒரு நாளில்தான் நண்பரிடம் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டு வரும் பொழுது என்னிடம் தேவைக்கு அம்மா கேட்டார் என்ன புத்தகம் சார் அது?.

இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்த அம்மாவைப் பார்ப்பதற்காக அவர் இருக்கும் இடத்திற்கு சென்றேன் அவரைப் பார்க்க வந்ததை அறிந்து அந்த புத்தகத்தை என்னிடம் கொடுத்து நல்லா இருக்கு சார் தேங்க்ஸ் என்றார்கள். அந்த புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு மட்டும் வந்துவிட வேண்டுமென்று மனமில்லை. குறைந்தபட்சம் அந்த அம்மாவுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் அதிகபட்சம் அதிகபட்சம் அவரிடம் எதையாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. அதனால் கிடைத்த ஒன்றிரண்டு நிமிடங்களில் மட்டும் தான் பேசி இருப்பேன். அதன்பிறகு அந்த தாயார் மீது பெரிய மரியாதையும், அன்பும் நிரம்பி வழிய தொடங்கியது.

நீங்க எதுவரைக்கும் படிச்சிருக்கீங்க? எப்படி உங்களுக்குப் படிக்கும் ஆர்வம் வந்தது என்ற இரண்டு கேள்விகள் அவரிடம் கேட்டிருந்தேன்.அதற்கு அந்த அம்மா…

சார் நான் பத்தாம் கிளாஸ் வரைக்கும் படிச்சிருக்கேன் நான் நிறைய புத்தகங்களைப் படிப்பேன் சார் எங்க வீட்டுக்காரரு PTC TRAINSPORTல் வேலை பார்த்தார். எனக்கும் அவருக்கும் கல்யாணமான கொஞ்ச நாளிலேயே உடம்பு முடியாம போச்சு. அதனால VRS வாங்கிட்டு வீட்டிலேயே இருந்தாரு. ஆனாலும் அவரால் சும்மா இருக்க முடியல அதனால NEW CENTURY BOOK HOUSEல வேலைக்குப் போனாரு. அங்கிருந்து சில புத்தகங்களைக் கொண்டுவந்து தருவாரு. அப்போ நிறைய படிப்பேன் சார்.

அதேபோல நானு நிறைய கம்பெனிகளில் வேலை பார்த்து இருக்கேன். ஜெரோ கார்மெண்ட்ஸ் கம்பெனி CUTTING PIECE நான் நல்ல தைப்பேன். நான் செய்ற வேலைய பார்த்துட்டு அந்த கம்பெனி வெளிநாட்டில இருக்கிற அவங்க கம்பெனிக்கு போறியான்னு கேட்டாங்க… அப்போ உடம்பு முடியாத கணவர் குழந்தை பிறந்து 3 வருஷம் தான் ஆச்சி இப்படிப்பட்ட சூழலில் என்னால போக முடியல என்று சொன்னார்கள்.

அது மட்டும் இல்ல கல்யாணம் ஆகி 5 வருஷத்திலேயே வீட்டுக்காரரு இறந்துட்டாரு. இதையெல்லாம் கோர்வையாக சொல்லும் பொழுது என் கண்கள் விரிய அவரையே ஏதோ ஒரு ஆச்சரியம் நிறைந்தைப் பார்ப்பதைப் போலவே பார்த்துக்கொண்டிருந்தேன்.

மனம் கனம் கூடியது அதே சமயத்தில் இலகுவாக மாறியது. கணவரை இழந்த பின்பு தன் ஒற்றை மகனை கரை சேர்ப்பதற்கு அந்த அம்மா எத்துணைப் பெரிய பாதையைக் கடந்து வந்திருப்பார்.

இன்றைக்கு ஓய்வெடுக்கும் வேண்டிய வயது ஆனாலும் சொந்த உழைப்பில் உழைத்துச் சம்பாதித்த பணத்தில் சாப்பிடும் எண்ணமும், லட்சியமும் எவ்வளவு பெரிய உன்னதமான செயல்.

நான் அறிய அந்த அம்மா வேலையைப் பார்த்து பயந்தது இல்லை. ஒதுங்கியது இல்லை. பதுங்கியது இல்லை. யார் எப்பொழுது கூப்பிட்டு வேலை சொன்னாலும் எந்த விதமான முகசுளிப்பும் இல்லாமல் அந்த வேலையைச் செய்து முடித்து விடுவார்.

பத்து நாட்களுக்கு முன்பு தான் தமிழ்த்துறை இலக்கிய மன்ற விழாவை நடத்தியது. அப்பொழுது கடுமையான பணி நெருக்கடி. ஒரே நேரத்தில் பேச்சு போட்டி கவிதைப் போட்டி கட்டுரைப் போட்டி ஓவிய போட்டி என ஒவ்வொரு அறைகளிலும் ஒவ்வொரு போட்டிகள் நடத்துவது என தீர்மானித்திருந்தோம். அதனால் போதிய அளவிற்கு எங்களுக்கு இடவசதி இல்லை. ஓவியப் போட்டி நடத்துவதற்கு தரைதளத்தில் கருத்தரங்க அறைக்குப் பக்கத்தில் இரண்டு அறைகள் இருந்தன. அதைப் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தபோது, அந்த அறைகள் அசுத்தமாக இருந்தன. அப்பொழுது தேவகி அம்மையார் உட்பட மூன்று ஆயமகள் வந்து சுத்தம் செய்தார்கள்.

குறித்த நேரத்தில் சுத்தம் செய்து கொடுத்து விட்டார்கள். மிகவும் குறைவான நேரத்திலேயே கடுமையான பணிச்சுமை களுக்கு மத்தியில் நேர்த்தியாக அந்த அறையை சுத்தம் செய்து ஒப்படைக்கும் போது அவர்கள் செய்த இந்த வேலைக்காகப் பெரிய நன்றி மா என்று சொன்னேன். அதற்கு அவர்கள் சொன்ன பதில் இது.‌ அது எங்க வேலை சார். அதுக்கு எதுக்கு சார் நன்றி சொல்றீங்க என்றார். அதற்கு நான்… இல்லம்மா ஏற்கனவே உங்களுக்கு நிறைய வேலைகள் இருக்குது. கூடவும் இந்த வேலை கொஞ்சம் சுமைதானம்மா என்றவுடன். அப்படின்னு பார்த்தா நாம எங்க வேலைக்கு போக முடியாது. வீட்லதான் இருக்குனும். வேலைக்கு வந்துட்டா இருக்கிற வேலையை செய்துதான் ஆகணும். இந்த வார்த்தையைக் கேட்ட பிறகு நானும் என்னுடைய வேலையை எண்ணிப்பார்த்தேன்.

இதுபோன்ற கடுமையான பணி சூழலுக்கு மத்தியில் தான் அந்த அம்மா எங்கள் கல்லூரியில் வேலை பார்க்கிறார். இதற்கிடையில் தான் அந்த அம்மா வீட்டுக்குச் சென்றாலும் தனி மனுஷியாக தன்னுடைய வேலைகளைச் செய்து கொள்ள வேண்டும். இதற்கிடையில் தான் அந்த அம்மா புத்தகத்தைப் படிக்க வேண்டும்.

உன்னிடம் நிறைய பணம் இருந்தால் அள்ளிக்கொடு. உன்னிடம் நிறைய படிப்பு இருந்தால் சொல்லிக்கொடு ஒரு பழமொழி ஒன்று உண்டு. இந்த பண்பு யாரிடம் இருக்கிறது தெரியவில்லை.

சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியர்களை நிறைய படிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. நேர்காணல் ஒன்றில் கவிஞர் இன்குலாப் அவர்கள் கவிதையைப் பொறுத்தவரையில் இன்றும் நான் மாணவன்தான் என்பார். இந்த வார்த்தையைச் சொல்லும் பொழுது நாடறிந்த நல்ல கவிஞர். தமிழ்நாட்டைத் தாண்டி உலக நாடுகளில் உள்ள படைப்பாளிகளிடம் அவருடைய பெயர் நன்கு பரிச்சயமானது. ஆனாலும் என்று தன்னை ஒரு

மாணவனாக நினைத்துப் படித்தால்தான் நாளைக்குப் பேராசிரியராக இருக்க முடியும். இல்லை என்றால் பேருக்கு கூட ஆசிரியராக இருக்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை.

படிக்கும் முறையை குறித்து சர்வே ஒன்று இப்படி சொல்லுகிறது. பன்னிரண்டாம் வகுப்புக்குப் பிறகு 60 சதவீத மாணவர்கள் படிப்பதே இல்லை. அவர்கள் படிப்பை விட்டு விலகி நிற்கிறார்கள். அதே போன்று ஆசிரியர்களிலும் ஐந்தில் ஒருவர் தான் அன்றாடம் வாசிக்கும் பழக்கம் கொண்டவராக இருக்கிறார் அல்லது புதுப்புது தகவல்களை அறிந்து வைத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இன்னும் சிலர் வேலைக்கு வருவதற்காக மட்டுமே தன்னுடைய பாடத்திட்டத்தை மட்டுமே விரும்பி படிக்கிறார்கள். மற்றவற்றை அறிந்துகொள்வதில் ஈடுபாடு குறைவாகவே காணப்படுகிறது.

வாசிப்பு என்பது உடற்பயிற்சி போல… அன்றாடம் வாசித்தால் மட்டும் தான் புதிய புதிய சிந்தனைகள் உருவாகும் அறிவு தெளிவடையும், சிந்தனை மேலோங்கும்.

வள்ளுவப் பெருந்தகையும் தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு என்கின்றார்.

தேவகி அம்மாவைப்பற்றி கணிதத் துறை பேராசிரியர் நண்பர் முனைவர் ஸ்டாலின் அவர்களிடம் ஒருமுறை சிலாகித்துப் பேசி இருந்தேன்.

அவர் இப்படியாகச் சொல்லியிருந்தார். எழுத்தாளர் ஜெயகாந்தன் யாருக்காக எழுதினாரோ?. அந்த எழுத்துக்கள் அவர்களிடம் முறையாகச் சென்று சேர்ந்திருக்கிறது என்றார்.

உண்மைதானோ…

பேரா.எ.பாவலன்
[email protected]

நூல் மதிப்புரை : டி. வீரராகவன் Half a Day for Caste? சாதிக்கு அரை நாளா? – அருணன்

நூல் மதிப்புரை : டி. வீரராகவன் Half a Day for Caste? சாதிக்கு அரை நாளா? – அருணன்



பள்ளிக்கூடமே வேண்டாம்

அருணன் திரு

நூல் – Half a Day for Caste? (சாதிக்கு அரை நாளா? )
ஆசிரியர் – டி. வீரராகவன்
பதிப்பகம் – லெஃப்ட் வேர்டு புக்ஸ், புதுதில்லி
விலை – ரூ.250

நான் எட்டாவது படித்துக்கொண்டிருக்கும்போது எங்கள் ஊரில், ‘பண்ணையார் பரமசிவம்’ என்று ஒரு மேடை நாடகம் நடந்தது. பண்ணையார்தான் வில்லன். கிராமத்திலிருக்கும் குடியானவர்களின் பிள்ளைகள் அரசு பள்ளிக்கூடத்திற்குப் படிக்கச் செல்ல வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். அவரது பண்ணையில் வேலை செய்யும் ஆறுமுகம், தன் பையன் அரசனைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்க பணம் கட்டுவதற்குக் கடன் கேட்கிறார். அதற்குப் பண்ணையார் கோபமாக ஆறுமுகத்தைப் பார்த்து பல கேள்விகள் கேட்பார். ‘ஏய்யா, உங்க பிள்ளைங்க எல்லாம் படிக்க போயிட்டா, யார்யா ஆடு மாடுகளை மேய்க்கறது? நாளைக்குத் துணி வெளுக்கிறது? பெருக்கிக் கூட்றது? சவரம் பண்றது? பண்ணைக்கூலின்னு எந்த வேலைக்கும் ஆள் கிடைக்க மாட்டாங்க. எப்படிடா நான் குடித்தனம் பண்றது?’-அப்படின்னு. இவைபோன்ற வசனங்களைத் தமிழ்ச்சூழலில் ஆயிரக்கணக்கான நாடகங்களில், திரைப்படங்களில், கதைகளில் கேட்டிருக்கிறோம், பார்த்திருக்கிறோம்.

அண்மையில் புதிய கல்விக் கொள்கை பற்றிய தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் மெத்தப்படித்த மேட்டிமை குலத்தைச் சேர்ந்த ஒருத்தர் கேட்கிறார்.‘எல்லாரும் இஞ்சினியர், டாக்டர் ஆகிட்டா பிளம்பர் வேலைக்கு, எலக்ட்ரீசியன், கார்ப்பென்டர் வேலைக்கு எப்படி சார் ஆள் கிடைப்பாங்க?’ என்று. காலம் உருண்டோடினாலும், புறத்தோற்றங்களும், தொழில்நுட்பங்களும் மாறினாலும் இந்தியச்சமூகம் தனது சாதியப் படிநிலை அமைப்பை ஒரு அங்குலம் கூட விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என்பதுதான் நம் முகத்தில் அறையும் எதார்த்தம்.

கல்வி என்பது எப்படி இந்தியச்சமூகத்தில் வாழும் ஒருவரின் சமூக, பொருளாதார நிலையை மாற்றுகிறது என்பதைக் கண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறோம். அந்த மாற்றத்தைத் தடுக்கும் பிற்போக்குச் சக்திகள் மீண்டும் தலைதூக்கிக்கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்தத் தருணத்தில், ‘பாதி நாள் சாதிக்கு?’ (Half a Day for Caste?) என்ற ஆய்வு நூலைப் பார்க்க நேர்ந்தது. சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்த ‘திலீப்’ வீரராகவன் (1958-2009), முன்னதாக எம்.ஃபில்., பட்டத்திற்காகச் சென்னைப் பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பித்த, ‘1953இல் மெட்ராஸ் மாநிலத்தில் தொடங்கப்பட்ட மாற்றியமைக்கப்பட்ட தொடக்க கல்வித் திட்டமும், அதன் பாதிப்பும்’ என்ற ஆய்வேடு ஆ.இரா.வேங்கடாசலபதியின் முன்முயற்சியால் தற்போது நூலாக வெளிவந்துள்ளது.

ஆறாண்டுகளுக்கு முன்பு, ‘மதராஸ் பட்டினத்திலும், சுற்றுப்புறத்திலும் 1918 முதல் 1939 வரையிலான தொழிற்சங்க இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்’ பற்றிய வீரராகவனின் நூல் வெளிவந்து பரபரப்பாகப்பேசப்பட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். டி. வீரராகவன், 1987ஆம் ஆண்டு சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்திற்குச் சமர்ப்பித்த முனைவர் பட்ட ஆய்வேடு அது.

மாற்றியமைக்கப்பட்ட தொடக்க கல்வித் திட்டம்

இராஜகோபாலாச்சாரியார், மதராஸ் மாநில முதலமைச்சராக 1952-53 கால கட்டத்தில் இருந்தபோது கொண்டுவந்தது, ‘மெட்ராஸ் மாநில மாற்றியமைக்கப்பட்ட தொடக்க கல்வித் திட்டம்’. 1937இல் ஒன்றிணைந்த மதறாஸ் மாகாணத்தின் அவர் பிரதமராக இருந்தபோதே இத்திட்டத்தைச் செயல்படுத்த முயற்சித்தார் என்ற செய்தி இந்நூல் மூலமாகத் தெரியவருகிறது. பள்ளிக்கூடத்தில் பாதி நாள் ஏட்டுக்கல்வி வகுப்புகள், மீதிப்பாதி நாள் சொந்த சாதித்தொழிலைக் கற்றல் என்ற ரீதியிலான இந்தத்திட்டத்தைப் பலதரப்பினரும் எதிர்த்தனர். இத்திட்டத்தைத் தீவிரமாக எதிர்த்த பெரியார், குலக்கல்வித்திட்டம் என்று இதைப் பெயரிட்டு அழைத்தார். அந்தப் பெயரே நிலைத்துவிட்டது. இன்றளவும் அதே பெயரில்தான் பொதுமக்களால் நினைவுகூரப்படுகிறது.

காந்தியடிகளின் ஆதாரக்கல்வியும், இராஜாஜியின் திட்டமும்

1937இல் அரிஜன் இதழில் காந்தியடிகள் தான் முன் மொழிந்த ஆதாரக்கல்வித் திட்டத்தைப்பற்றி தொடர்ந்து எழுதி வந்தார். அக்கல்வித்திட்டம், அவரது பொருளாதார, சமூகக் கண்ணோட்டத்துடன் பொருந்தியதாக இருந்தது.

கல்வி, ஒரு குழந்தையின் 7 வயதில் ஆரம்பித்து, தொடர்ந்து 7 ஆண்டுகள் வழங்கப்படவேண்டும். அக்கல்வி, படிக்கும் குழந்தையின் உள்ளூர்ச் சூழலுக்கு நெருக்கமானதாக இருக்கவேண்டும். முழு நேரக்கல்வியாக இருக்கவேண்டும். ஆதாரக்கல்வியில் நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர் அடிப்படைப் பாடங்களையும், தொழிற்கல்வியையும் சொல்லித்தருவார். குழந்தைகளுக்குச் சொல்லித்தரப்படும் பாடங்கள், கைவினைத்தொழிலுக்கு இயைந்த வகையில் இருக்கவேண்டும் என்பது காந்தியடிகளின் கல்வித் திட்டத்தின் சில அம்சங்கள்.

காந்தியடிகளின் சமூக பொருளாதாரக் கொள்கையில் அழுத்தமான நம்பிக்கை கொண்டிருந்தாலும் இராஜாஜி ஒரு பழமைவாதி. அவர், புத்தகங்கள் மூலம் கல்வி கற்பிப்பது குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஊறுவிளைவிக்கும் என நம்பினார். பள்ளிக்கூடங்கள், சிறைச்சாலைகளைப் போன்றவை; பள்ளிக்கூடங்கள் இல்லாமல் இருந்தால் நல்லது என்றும் கூட அவர் எண்ணினார்.

இதனால், ஏற்கனவே இருந்த பள்ளிக்கூட முறையை மாற்ற இராஜாஜி முயற்சி செய்தார். கல்வி கற்பிக்கக் குடும்பங்களே சரியான கருவிகள் என அவர் கருதினார். இராஜாஜி தனது பேச்சொன்றில் இப்படிச்சொல்கிறார். ‘குடும்பமே ஒரு தொழிற்கல்விக்கூடம். ஒரு குடும்பத்தில் உணவு உற்பத்தி செய்யப்படுகிறது; துணி நெய்யப்படுகிறது; தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன; மாட்டு வண்டிகளும், உழுகலப்பைகளும் செய்யப்படுகின்றன; சரி செய்யப்படுகின்றன; நல்லவேளை இன்னமும் சாதிகள் இருக்கின்றன; சாதிகளைச்சேர்ந்தவர்கள் அவரவர் சாதித்தொழில்களைச் செய்துவருகின்றனர். ஆகவே, குடும்பம் தொழிற்கல்விக்கூடமாகவும், பெற்றோரே தொழில் பயிற்றுநர்களாகவும் விளங்குகின்றனர்.’

‘பாதிநாள் பள்ளிப்படிப்பு’ கல்வித்திட்டத்தை 1952இல் முதலமைச்சராகப் பதவி ஏற்றவுடன் நடைமுறைப்படுத்த உத்தரவிட்டார் இராஜாஜி. 1953 ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி பள்ளிக் கல்வி இயக்குனர், வரும் ஜூன் மாதம் தொடங்கும் கல்வியாண்டு முதல் புதிய கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பினார். இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் 1. பள்ளியில் ஒரு நாளில் மூன்று மணி நேரமே வகுப்புப் பாடம் நடத்தப்படும். 2. பிறகு, மாணவர்கள் பெற்றோர் எந்த கைவினைத் தொழிலைக் கொண்டுள்ளார்களோ, அந்தத் தொழிலில் பயிற்சி எடுத்துக்கொள்வார்கள்.3.காலையில் ஒரு பிரிவு மாணவர்களும், மாலையில் இன்னொரு பிரிவு மாணவர்களும் பள்ளிக்கு வருவர். 4. இரண்டு பிரிவுகளுக்கும் அதே ஆசிரியர்கள்தாம் கற்பிப்பர்.

திட்டம் அமல்படுத்தப்பட்டவுடன் ஆசிரியர்கள், கல்வியாளர்கள், காங்கிரஸில் உள்ள சிலர் எனப் பலதரப்பிலும் எதிர்ப்பு தீவிரமாக கிளம்பியது. உரிய கலந்துரையாடல் இல்லாமல், திட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டதாகத் தென்னிந்திய ஆசிரியர் சங்கம் மங்களூரில் நடைபெற்ற மாநாட்டில் எதிர்ப்பை வெளியிட்டது. ஆசிரியர்கள் தங்களது வேலைப்பளு 20 சதவீதம் அதிகரிக்கும் எனக் குற்றம் சாட்டினார்கள். கூடுதல் வேலைக்கு ஏற்ப சம்பளம் உயர்த்தப்படவில்லை என்று வருத்தமும் தெரிவித்தார்கள்.

காந்தியப் பொருளாதார, கல்வியியல் சிந்தனையாளரான ஜே.சி.குமரப்பா, இராஜாஜியின் இந்தத்திட்டம், காந்தியடிகளின் ஆதாரக் கல்வித் திட்டத்திலிருந்து விலகிச் செல்வதாகத் தெரிவித்தார். தேர்ந்த கைவினைஞர்கள் நல்ல ஆசிரியராக இருப்பதில்லை என்றும் குமரப்பா குறிப்பிட்டார். ஆனால், கல்வியாளர்கள் டாக்டர் ஜாகிர் ஹுசைன், டி.வி.ஜி.பால் ஆகியோரும், இந்து மத அறிஞர் கே.எஸ்.ராமசாமி சாஸ்திரி போன்றவர்களும் இராஜாஜியின் திட்டத்தை ஆதரித்தனர்.

இத்திட்டம் குறித்து, ஆலோசனை வழங்க அரசால் நியமனம் செய்யப்பட்ட காந்திய அறிஞர் ஜி. ராமச்சந்திரன், ‘மாற்றியமைக்கப்பட்ட தொடக்க கல்வித் திட்டம்: பார்வைகளும், பரிந்துரைகளும்’ என்ற தலைப்பில் நீண்ட அறிக்கை ஒன்றை அரசிடம் வழங்கினார். இந்த அறிக்கையில், இத்திட்டத்தைப்பற்றி மக்களிடம் முதலில் குழப்பமே நிலவியது என்றும், விளக்கிக் கூறிய பின் மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்றும் கூறுகிறார்.

வேலைப்பளுவைக் குறைத்துக்கொள்ள ஆசிரியர் செய்த சதியே இந்தப் பாதி நாள் வகுப்புகள் திட்டம் என மக்கள் நினைத்தனர் என இத்திட்டத்தின் ஆதரவாளரான ஜி. ராமச்சந்திரனால் எழுதப்பட்டிருந்தாலும், இத்திட்டம் மேலிருந்து கீழ் திணிக்கப்படும் திட்டம்தான் என்பது அறிக்கையில் வெள்ளிடை மலை போல தெரிகிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், எது சிறப்பானது என்பது இராஜாஜிக்குத் தெரியும் என்பதே ஜி.ராமச்சந்திரனின் எண்ணம் என்று முடிக்கிறார் வீரராகவன்.

வி.கே.ஜான், சி.பா. ஆதித்தனார், ரங்கையா ஆகியோர் இத்திட்டம் சர்வதேச குழந்தை உரிமைப் பிரகடனங்களுக்கு எதிராக இருக்கிறது என்று தெரிவித்தனர். இந்தத் திட்டம் திடீரென அமல்படுத்தப்பட்ட முறை, காங்கிரஸ் கட்சிக்குள்ளேயோ, அரசு அதிகாரிகளிடமோ விவாதிக்காமல் நடைமுறைப்படுத்தப்பட்ட முறை, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் இருந்தமை பிரச்சினைகளை அதிகமாக்கின. மக்கள் மத்தியில் திட்டம் மீதான அவநம்பிக்கையும், எதிர்க்கருத்துகளும் பல்கிப் பெருக காரணங்களாகின்றன. எதிர்ப்பை இராஜாஜி எதிர்கொண்ட விதம், அண்மையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் அரசு, மாற்றி மாற்றிக்காரணம் சொல்லிய நிலையை ஒத்திருந்தது.

எதிர்ப்பு மிகுதியானதும் 1953 ஆகஸ்டு 20 அன்று அரசு, மகாராஷ்டிர கல்வியாளர் பேராசிரியர் ஆர்.வி.பாருலேக்கர் தலைமையில் குழு ஒன்றை அமைத்து, இந்த மாற்றியமைக்கப்பட்ட தொடக்கக் கல்வித் திட்டத்தை ஆராயச் சொன்னது. மூன்று உறுப்பினர்களைக் கொண்டது அக்குழு. ஏ.கோவிந்தசாமி நாயக்கர், இந்தக்குழுவில் ஏன் தமிழ்நாட்டிலிருந்து எந்தக்கல்வியாளரும் இடம்பெறவில்லை என்று கேள்வி எழுப்பினார். பாருலேக்கர் குழு பின்வரும் முடிவுகளைக் கண்டடைந்தது. மூன்று மணி நேர பள்ளிப்படிப்பு போதுமானது. மாணவர் ஆசிரியர் விகிதத்தை 30:1லிருந்து 50:1க்கும்உயர்த்தவேண்டும்.பள்ளிக்கு வெளியிலான கைவினைப் பயிற்சிக்குக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கான ஊதியத்தை உயர்த்த வேண்டும். நகர்ப்புறங்களுக்கும் புதிய கல்வித் திட்டத்தை விரிவாக்க வேண்டும்.கைவினைப் பயிற்சியாளர்களுக்கு மதிப்பூதியம் வழங்க வேண்டும் என்பன அம்முடிவுகள். நிதித்துறை பற்றாக்குறையினால் தான் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது என்று அரசு சொன்னதைக் கவனத்தில் கொள்ளாமல், மேலும் நிதி ஒதுக்க வேண்டும் என்று இக்குழு பரிந்துரைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்கிறார் வீரராகவன். .

பாருலேக்கர் குழு அறிக்கை, சட்டப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டவுடன் பிரச்சினை தீவிரம் எடுக்கத் தொடங்கியது. எனினும் அரசாங்கம், பாருலேக்கர் குழு பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டு, புதிய கல்வி திட்டத்தை நகரங்களுக்கும் விரிவாக்க உத்தரவிட்டது.

திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பைத் தெரிவித்தன. குலக்கல்வித் திட்டம் என்றும், வர்ணாஸ்ரம கல்வித் திட்டம் என்றும் இத்திட்டத்தை அழைத்த பெரியார், பார்ப்பனர் அல்லாதவருக்கு எதிராக இராஜாஜி கொண்டுவந்த பல நடவடிக்கைகளைப் பட்டியலிட்டார். கல்விக்கான கூடுதல் வரியைக் குறைத்தது; 60 மாணவர்களுக்குக் குறைவாகப் படித்த உயர்நிலைப் பள்ளிகளை மூடியது; வனக்கல்லூரியை மூடியது; ஆயிரக்கணக்கான தொடக்கப்பள்ளிகளை மூடியது; கிறிஸ்துவத்துக்கு மாறிய தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகையை நிறுத்தியது ஆகியவை சாதிய அமைப்பை ஆதரிக்கும் மனம் கொண்ட இராஜாஜியின் பார்ப்பனரல்லாதவர்களுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெரியார் இந்தத் திட்டத்தையும் அவற்றுள் ஒன்றாகத்தான் பார்த்தார்.

கிராமப்புறத்தின் சமூக பொருளாதார படிநிலைகளை நிலைநிறுத்துவதற்கே இத்திட்டம் கொண்டு வரப்பட்டது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியது. சோசலிச கட்சியும் இத்திட்டத்தைக் கண்டித்து தீர்மானம் இயற்றியது. ஆளும் கட்சிக்குள்ளேயே கருத்து வேறுபாடு இருந்தது. ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் இத்திட்டம் நடைமுறை சாத்தியமற்றது என்று தெரிவித்தார். இத்திட்டத்தை எதிர்த்தாலும் காமராசர் வெளிப்படையாக ஏதும் சொல்லவில்லை. எதிர்ப்புகளைப் பார்த்த இராஜாஜி பல சமரச நடவடிக்கைகளை மேற்கொண்டார். பள்ளிக்கு வெளியில் கைவினைகள் கற்பதை வேண்டாம் என்றால் விட்டு விடலாம் என்றார். இப்போது இருப்பதைவிட அதிக மாணவர்கள் எழுத்தறிவு பெற வேண்டும் என்பதே இத்திட்டத்தைத் தான் கொண்டு வந்ததன் நோக்கம் என்று இராஜாஜி குறிப்பிட்டார். இரா.கிருஷ்ணமூர்த்தி, தன் கல்கி பத்திரிகையில், இராஜாஜியின் திட்டத்திற்குப் பெருமளவில் ஆதரவு பிரச்சாரம் செய்தார். புதிய கல்வித் திட்டம், தற்சார்பு கொண்ட, தன்னம்பிக்கை கொண்ட குடிமக்களை உருவாக்கும் என எழுதினார். ஏட்டுக்கல்வியைக் குறைசொல்லி, உடலுழைப்பே அமெரிக்காவைச் சிறப்பாக்கியது என வாதிட்டார். ஆபிரகாம் லிங்கன், ஒரு மரம் வெட்டுபவர்; கிருஷ்ணர் மாடு மேய்ப்பவர்; திருவள்ளுவர் ஒரு நெசவாளர்; வேதாந்த தேசிகர் செருப்பு தைப்பவர் எனக்குறிப்பிட்டு உடலுழைப்பின் மேன்மையை எடுத்துக்காட்டினார்.

தொடக்கக் கல்வியில் மாற்றங்கள் கொண்டு வருவது குறித்து சட்டப்பேரவையில் ஏன் முன்பே தெரிவிக்கப்படவில்லை, விவாதிக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் கேட்டதற்கு இராஜாஜி, ஏற்கனவே தான் அமல்படுத்திய மதுவிலக்கு, கோயில் நுழைவு ஆகிய முடிவுகளைச் சட்டப்பேரவையில் தெரிவிக்காமல்தான் கொண்டு வந்ததாகப் பதில் தெரிவித்தார். ராமானுஜரும், சங்கரரும் தங்களது தத்துவங்களை வெளியிடும் முன்பு யாரிடமாவது ஆலோசனை கேட்டார்களா எனக் கோபமாக இராஜாஜி கேட்டார். புத்திசாலித்தனமான இந்த பதில், ஜனநாயகத்துக்கு பொருத்தமானதாக இல்லை என முன்னுரையில் பதிவிடுகிறார் ஆ.இரா.வேங்கடாசலபதி.

மாணவர்-ஆசிரியர் விகிதம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பை அறிந்த ஆசிரியர்கள் தங்கள் வேலையை இழக்க நேரிடும் என அச்சம் தெரிவித்ததையடுத்து ஒரு ஆசிரியர் கூட வேலையை இழக்க மாட்டார்கள் என்று இராஜாஜி உறுதி அளித்தார். எப்படிப்பட்ட எதிர்ப்புகள் வந்தாலும், இத்திட்டத்தைச் செயல்படுத்தியே தீருவது என இராஜாஜி உறுதி கொண்டிருந்தார். தன் சொந்தத் திட்டமாக இதைக் கருதினார்.

இத்திட்டத்திற்கு எதிர்ப்பு நாளாக 1953 ஆம் ஆண்டு ஜூன் 21ம் தேதியைத் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் அறிவித்தன. அரசினர் தோட்டத்தை நோக்கி, திராவிடர் கழகம் பிரம்மாண்டமான பேரணி நடத்தியது. திராவிட முன்னேற்றக் கழகம், முதலமைச்சர் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தை முன்னெடுத்தது. 1953 ஜூலை 15 அன்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இத்திட்டம் பற்றி கேள்வி எழுப்பினர்.ஆந்திர மாநில உருவாக்கச் சட்டம் விவாதிக்கப்பட்ட பிறகே கல்வித்திட்டம் பற்றிய விவாதம் எடுத்துக்கொள்ளப்படும் என இராஜாஜி சொல்லிவிட்டார். சட்டமன்ற கூட்டத்தொடரின் இறுதியில் இத்திட்டம் குறித்த அரசின் தீர்மானம் விவாதிக்கப்பட்டது. அறிஞர்கள் அடங்கிய குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட வேண்டும், அதுவரை திட்டத்தைச் செயல்படுத்துவது நிறுத்தி வைக்க வேண்டும் என்ற தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியைச் சேர்ந்த கே.ஆர்.விஸ்வநாதனின் திருத்த தீர்மானம் வெற்றி பெற்றது. அரசுத்தரப்புத் தீர்மானம் தோல்வியுற்றதால், தார்மீக ரீதியில் இராஜாஜியின் ராஜினாமாவை எதிர்க்கட்சிகள் கோரின. ஆனால், இராஜாஜி ஒப்புக்கொள்ளவில்லை.

புதிய ஆந்திர மாநிலம் அமைப்பதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன், 1953 ஆம் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி ஆந்திர மாநிலம் அமைக்கப்பட்டது. அதனால் சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வசதியான பெரும்பான்மை வந்துவிட்டது. ஆனால், அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சியில் இராஜாஜிக்கு எதிர்ப்பும் வலுக்கத் தொடங்கியது. வரதராஜுலு நாயுடு, காமராஜரின் நெருங்கிய சகாவான கே.டி.கோசல்ராம் ஆகியோர் இராஜாஜிக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தினர். இராஜாஜி, முதலமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து ஒலிக்கத் தொடங்கியது. கே.டி.கோசல்ராம், இராஜாஜியின் ஆட்சியை, ‘பேயாட்சி’ என்று விமர்சித்தார்.

கல்வித் துறைக்கான மானியக் கோரிக்கை மீது பேசுகையில் இராஜாஜி,‘சாதிகள், சமூகங்கள் குறித்த உணர்ச்சிகள் இந்த மாநிலத்தில் அதிகமாக இருப்பது நம்முடைய துரதிர்ஷ்டம்.மாற்றியமைக்கப்பட்ட தொடக்கப்பள்ளிக் கல்வித் திட்டம், ஒரு அரசியல் விஷயமாக மாறி, மதப்பூசலாக,சாதிப்பூசலாக உருவாகிவிட்டது. இப்படி விஷயங்களைத் தவறாக சித்திரிப்பது சிலருக்கு வாடிக்கையாகிவிட்டது’ என்றார். இராஜாஜி பதவி விலக வேண்டும் என்ற போராட்டம், எதிர்க்கட்சிகளால் முதலில் தொடங்கப்பட்டது. இரண்டாவது காங்கிரசுக்கு உள்ளேயேயும் எதிர்ப்பு எழுந்தது. இரண்டு நிலைகளிலும் சாதியவாதமே வெடிமருந்தாகப் பயன்படுத்தப்பட்டது என்று வீரராகவன் எழுதுகிறார். காலம் காலமாய் கல்வி மறுக்கப்பட்ட மக்களுக்கு, விடுதலைக்குப்பிறகும் கல்வி மறுக்கப்படுவதையும், சொந்த சாதி வேலைகளையே தொடர்ந்து செய்து வரவும் இராஜாஜியின் திட்டம் நிர்ப்பந்திப்பதை வீரராகவன் குறிப்பிடவில்லை.

பாருலேக்கர் குழு அளித்த ஆதரவான பரிந்துரைகளுடன் திருப்தி அடையாத இராஜாஜி அரசு, மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் கருத்தையும் கேட்டது. வாரியம் புதிய கல்வித் திட்டம் பெரும்பாலான குழந்தைகளுக்குக் கல்வியை கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஒரு வரவேற்கத்தக்க திட்டம் என்று பாராட்டியது. ஆனால், பிற்பகலில் மாணவர்கள் பள்ளிக்கு வெளியே கைவினைத்தொழில்கள் கற்பதைத் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தது. எனினும், முழுநேர பள்ளிக் கல்வியே குழந்தைகளுக்குத் தேவையானது என்று மத்திய கல்வி ஆலோசனை வாரியம் முடிவாகத் தெரிவித்துவிட்டது.

குடும்பங்களால் கட்டமைக்கப்பட்டிருந்த கிராமம் முழுவதுமே ஒரு பல்தொழில்நுட்ப பயிலகம் என்பது இராஜாஜியின் கருத்து. ஆனால், வாரியம், பள்ளிக்கூடமே சமூக கூடமாக இருக்கிறது என்றது. உண்மையில், இராஜாஜியின் கல்வித்திட்டத்தை மத்திய கல்வி ஆலோசனை வாரியம் நிராகரித்து விட்டது என்றே சொல்லலாம் என்கிறார் வீரராகவன்.

உடல்நிலையைக் காரணம் காட்டி, இராஜாஜி, 1954 ஏப்ரல் 13ஆம் தேதி முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். ஏப்ரல் 1954இல் காமராஜர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். புதிய அரசு பதவி ஏற்றவுடன் இக்கல்வித் திட்டம் கைவிடப்பட்டது என்று அறிவிக்கப்பட்டது. இராஜாஜி, தனது திட்டம் அரசால் கைவிடப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்தார்.

இராஜாஜி, காந்தியடிகள் ஆகியோரின் பேரனாகிய கோபாலகிருஷ்ண காந்தி இந்த நூலுக்கு முன்னுரை எழுதியுள்ளார். அதில் அவர், ஒரு பழமை விரும்பி ஒருதலைப்பட்சமாக கொண்டுவந்த திட்டமே, இந்தப் புதிய தொடக்கக்கல்வித்திட்டம் என்கிறார். ‘மற்றவர்களின் மதிப்பீட்டை விட தனது மதிப்பீடுதான் வலிமையானது என்று எண்ணும் இராஜாஜி போன்ற சிலரிடம் விளங்கும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட நேர்மையும் நோக்கமும் கூட கொடுங்கோன்மை தன்மையுடையது ஆகிவிடுகின்றன’ என்கிறார் அவர். இராஜாஜியிடம் மற்றவர்களின் கருத்துக்கு இடம் அளியுங்கள் என்று யாராவது சொல்லியிருக்க வேண்டும். அப்படிச் சொல்லி, அவர் அதைக் கேட்டிருந்தால், குலக்கல்வித் திட்டம் என்று அழைக்கப்பட்ட இந்த திட்டத்தின் போக்கும் இராஜாஜியுடைய அரசியல் வாழ்க்கையுமே வேறு திசையில் போயிருக்கும். அவர் அப்படிக் கேட்டிருந்தால், யாராவது அவரிடம் சொல்லி இருப்பார்கள், ‘புத்தகங்கள் அடிப்படையிலான கற்றல்தான் பள்ளியின் மையச்செயல்பாடு’ என்று. இரண்டாவது தொழிற்பாடமாகக் குலத்தொழிலுக்குப் பதிலாக கைராட்டை, வேளாண் கருவிகள் செய்தல் என எந்த வளர்ச்சித் தொழிலையும் வைத்துக் கொள்ளலாம் என அவர்கள் ஆலோசனை சொல்லி இருப்பார்கள். பிற்பகலில் நேரம் கழிக்க, விளையாட்டு என்ற ஒன்றும் இருக்கிறது அல்லவா என்று கோபாலகிருஷ்ண காந்தி கேட்கிறார். ஆனால், இராஜாஜி கேட்டாரா? செவிமடுத்தாரா? தான்தான் சிறந்தவர் என்று அவர் தன்னை நினைத்துக் கொண்டார். அத்துடன் முடிந்தது கதை என்கிறார் கோபாலகிருஷ்ண காந்தி.

காமராசரின் எல்லோருக்கும் கல்வி.

அரசியலமைப்பின் வழிகாட்டு நெறிகளின்படி, தொடக்கக் கல்வியைச் சீரமைக்க ஆலோசனை வழங்குவதற்காக டாக்டர் ராம. அழகப்பச் செட்டியார் தலைமையில் ஒரு குழுவை காமராஜர் அரசு அமைத்தது. அக்குழு பின்வரும் பரிந்துரைகளை அளித்தது.

300க்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட அனைத்து கிராமங்களிலும் பள்ளிகள் அமைக்கப்பட வேண்டும். பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டம் வழங்க வேண்டும். இதற்கான செலவில் உள்ளூர் மக்களும் ஒரு பங்கை அளிக்க வேண்டும்.வேளாண் வேலைகளுக்கு ஏற்ற வகையில் பள்ளி வேலைநாட்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.ஓராசிரியர் பள்ளிகள் தொடர வேண்டும். அதே சமயத்தில், அவற்றில் மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே இருக்க வேண்டும்.

விரயங்களைக் குறைப்பது பற்றி எந்தவிதமான உருப்படியான பரிந்துரைகளையும் இந்த குழு அளிக்கவில்லை என வீரராகவன் வருந்துகிறார். மதிய உணவு திட்டம் விரயங்களைக் குறைக்கும் என குழு நம்பியது. பாடத்திட்டத்தில் எந்த மாற்றத்தையும் இது பரிந்துரைக்கவில்லை. ஆனால், ஆசிரியர்களின் சம்பளத்தை உயர்த்த பரிந்துரைத்தது என்பதை வீரராகவன் குறிப்பிடுகிறார்.

அழகப்பச் செட்டியார் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்ட காமராசரின் அரசு தொடக்க கல்விக்கு முன்னுரிமை அளித்து செயல்பட ஆரம்பித்தது. 12வயது வரையிலோ அல்லது ஐந்தாம் வகுப்பு முடிக்கும் வரையிலோ பள்ளியிலிருந்து இடைநிற்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த நடவடிக்கைகளால் லட்சக்கணக்கான மாணவர்கள் பள்ளியில் சேர்ந்தனர். ஆயிரக்கணக்கில் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். சமூக, பொருளாதார தடைகளை நீக்க, பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அனைத்து குழந்தைகளுக்கும் தொடக்க கல்வி இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டது. எல்லாவற்றிற்கும் சிகரமாக இலவச மதிய உணவுத் திட்டம் அமைந்தது.

கல்வியில் ஏற்பட்ட இந்த முன்னேற்றம் தமிழகத்தில் மட்டும் நடந்த ஒன்றல்ல என்கிறார் வீரராகவன். அது, முதல் மூன்று ஐந்தாண்டு திட்டக் காலகட்டத்தில் இந்திய அளவில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் ஒருபகுதியே என்கிறார். மத்திய அரசு நிதியைக் கொண்டு, தேசிய கல்விக் கொள்கையைத் தீவிரமாக அமல்படுத்தியது ஒன்றுதான் காமராசரின் பங்களிப்பு என்று அதற்கான பாராட்டை மட்டும் வீரராகவன் அளிக்கிறார்.

ஆய்வின் முடிவுரையில், வீரராகவன் பின்வரும் கருத்துக்களை முன்வைக்கிறார். சுதந்திரத்திற்கு பிறகு, ஐந்தாண்டுகள் கடந்த பிறகும் அனைவருக்கும் அடிப்படை கல்வி என்பது கனவாகவே இருந்தது. இராஜாஜிக்கு நிறுவன கல்வி முறையில் நம்பிக்கை இல்லை. அவரது தனிப்பட்ட கருத்துக்களும், அரசியல் சட்டத்தின் வழிகாட்டு நெறிகளும் இணைந்தே அவரை பாதி நாள் பள்ளி கல்வித் திட்டத்தைச் செயல்படுத்த வைத்தது என்கிறார் வீரராகவன்.

ஜனநாயக விரோதமாகத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை வீரராகவன் ஒப்புக்கொள்கிறார். இராஜாஜி கல்வித்துறையின் எதிர்ப்புகளைப் புறந்தள்ளியது; சட்டமன்ற தீர்மானத்தை மதிக்காதது எல்லாம் சேர்ந்து, திட்டத்தின் தோல்விக்குக் காரணங்களாயின என்கிறார். இராஜாஜியின் கல்வித் திட்டத்தை, ஒடுக்கப்பட்ட பாட்டாளி மக்களுக்கு எதிரானதாக வீரராகவன் கருதவில்லை. திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் மக்களின் மனத்தில் சந்தேக விதைகளை விதைத்து, அச்ச உணர்வை வளர்த்ததாலேயே கல்வித் திட்டத்துக்கு மக்களிடம் எதிர்ப்பு அதிகரித்ததாக வீரராகவன் கருதுகிறார். இராஜாஜியின் திட்டத்தை நாட்டுக்குத் தேவையான எந்த ஒரு புரட்சிகரமான திட்டமும் பதிலீடு செய்யவில்லை என்பதே வீரராகவனின் முடிவு. காமராசர் ஆட்சியில் தொடக்கக்கல்வி பெருமளவில் வளர்ச்சி பெற்றாலும், விரயங்களும், தேக்கங்களும், அனைவருக்கும் கல்வி என்ற கனவை ஈடேறாமல் செய்தன என்கிறார் வீரராகவன். பின்னர், சில ஆண்டுகள் கழித்து அரசு முறைசாரா கல்வி என்ற திட்டத்தை அமல்படுத்தியது என்பது, இராஜாஜியின் இக்கல்வித் திட்டத்தை வேறு பெயரில் மறைமுகமாக அமல்படுத்துவதற்குச் சமம் என்கிறார். அரசும், உள்ளாட்சி நிர்வாகங்களும் ஏழைகளுக்கும், உரிமையற்றோருக்கும் கொடுத்த இலவச தாய்மொழிவழிக் கல்வி தரம் குறைந்ததாக இருந்தது. அதேவேளையில், சிறிய அளவிலான பணக்கார, மேல்தட்டு வர்க்க பிள்ளைகள், தனியார் ஆங்கில வழிக்கல்வி பள்ளிகள் மூலம்,மேன்மையான கல்வியைப் பெற்றார்கள் என வீரராகவன் குறிப்பிடுகிறார். இதனால், ஏழைகளின் குழந்தைகள் எதையுமே கற்காமலேயே பள்ளியை விட்டு நின்று விட்டனர் என்று முடிக்கிறார் வீரராகவன். பலவித அரசு ஆவணங்களையும், அறிக்கைகளையும் படித்து, இந்த ஆய்வேட்டை எழுதியுள்ள வீரராகவன், அரசு வழங்கிய தமிழ்வழிக் கல்வி பற்றிய எதிர்மறையான முடிவுகளை அடைய தான் கண்ட எந்தவித ஆதாரங்களையும் நமக்குத் தரவில்லை.

சாதியப் படிநிலைகளால் ஆன இந்திய சமூகத்தில் வாழும் ஒவ்வொருவரையும் நனவிலி நிலையில் சாதி வழிநடத்துகிறது. சமத்துவம் பேசும் மார்க்சிய அரசியல் தத்துவங்களைப் படித்து, பாடங்கள் எடுக்கக் கூடிய ஒரு படித்தவர் கூட, தனது மேல்சாதி அபிமானங்களிலிருந்து விடுபட முடியவில்லையோ என்பதையே இந்த ஆய்வுநூல் நமக்கு உணர்த்துகிறது.

Pngai Thamizhan's Poems பாங்கைத் தமிழனின் கவிதைகள்

பாங்கைத் தமிழனின் கவிதைகள்




‘பரம்பரை’
*************
காய் கனியில்
கண்டறிந்து…
காய்க்கும் விதையை
பூக்கா செய்தார்!
பூவா விதையை
காயாய் செய்தார்!
குட்டிகள் போட்டதை
மலடாக்கினர்!

மலட்டு விலங்கினை
மாதாவாக்கினர்!
உயிரென ஒன்றை
உசுப்பேத்தியே…
உடைத்தார் உடைத்தார்
படைத்தவன் விதியை!
மரபணு மாற்றம்
என்றதை அழைத்து….

உலகினை அதிலே
மயங்கிட வைத்தார்!
தத்தரிகிட தித்தோம்
தத்தரிகிட தித்தோம்;
தந்தனத்தோம் தந்தனத்தோம்
தாளம் மாற்றி
மேளம் அடித்தார்!
மரபணு உடைக்கும்
மதியாளர் சொல்வீர்….

மனிதர் தம்மின் மரபணுவதிலே
மதங்கள் தெரிந்ததா?
சாதிகள் தெரிந்ததா?
ஏழையர் மரபணு
ஏய்த்தவன் மரபணு
ஏதும் தெரிந்தால்
எம்மிடம் கூறும்!
கொற்றப் பரம்பரை
வீரப் பரம்பரை

அடிமைப் பரம்பரை
அணுக்களில் உண்டா?
மரபணு மாற்றும்
மா மேதைகாள்
மாநிலம் அறிய
மறைக்காமல் சொல்லும்!

‘குயிலோசை கேட்போம்’!
********************************
இங்கிருந்து தொடங்கு
சாதியை
சமயத்தை
உணவை
பழக்க வழக்கத்தை
ஒன்றெனச்செய்!

காசு பணத்தை
சொத்து பத்தை
ஒரே அளவீடாக்கு!
நிலம் நீரை
சமமாக்கு !
குப்பை அள்ளுவதை
கோயிலில் அள்ளுவதை
சமப் படுத்து!

இப்போது வா…
எந்த மொழி குயில்மொழியோ…..
அதன் குரலோசையை
ஒன்றாகக் கேட்போம்!

‘இதுதான் தலையெழுத்தோ? ‘
************************************
மாபெரும் கற்பனைக் கதையான
மகா பாரத பீஷ்மனின்
அம்புப் படுக்கைக்காக
அழுது கொண்டிருப்போர்
இருக்கும் வரை….
பசித் தீயின்
படுக்கையில்
மடிந்து கொண்டிருப்போர்
மடிந்து கொண்டுதான்
இருக்க வேண்டும்…
இந்த நாட்டில்!

இன்றும்….
பாஞ்சாலிகளின்
துகில் உரிப்புக்காக
துடித்துக் கொண்டிருப்போர்
இருக்கும் வரை…
எங்கள்
இந்திய ஏழைச் சகோதரிகளின்
மானத்தைக் காக்க
எந்த
கலியுகக் கண்ணனும்
பிறந்த பாடில்லை!

எந்த சாமியும் வந்து
எனக்கு
கோடி கோடியாய்க் கொட்டி
கோட்டை நிகர்
கோயில் கட்டிக்கொடுங்களென்று
கோரிக்கை வைக்காத முன்பே….
ஆட்டை போடுவதற்காக
ஆலயங்கள் அமைப்போர்
இருக்கும் வரை….
அரையாடை பக்கிரிகளை
அடையாளம் காண்போர்
வரப் போவதில்லை!

மதம் பிடித்தோர்களால்
தேசம் ஆளப்படும் வரை
மண்ணள்ளிப்
போட்டுக்கொள்ள வேண்டியதுதான்
தேசத்தின் தலையில்!

‘வலி’
***********
அதெல்லாம் ஒன்றும் பெரியதாகக்
காயப்படுத்தி விடவில்லை….
பழகிவிட்டது.

தொடாமல் இருப்பது
தொட்டுக் கொடுப்பதை
தூர வைக்கச் சொல்வது
வீட்டிற்கு வெளியே நிற்க வைத்து
பேசி அனுப்பி விடுவது…
அவனுங்களுக்கென்ன
அரசாங்கத்துப் பிள்ளைகள் என்று
அர்ச்சனை செய்வது;

கேட்டுக் கேட்டு
திரும்பக் கேட்டு விட்டால்
திமிரப் பார்த்தியா?
என்று
கும்பல் சேர்வது!
எல்லாமும் கடந்து
வந்தாகி விட்டது!
அடுத்தவருக்கு
முற்பட்டோர்… பிற்பட்டோரென்ற….
தூரத்தைத் தாண்டுவது மட்டுமே…
தாண்டி வரக்கூடியத் தடை!

இல்லாமை
கல்லாமை
அறியாமை
தெரியாமை
வறுமை
தீட்டு
அய்யோ…..அம்மாடி
தாண்டவே முடியாதத்
தடைகள்… தடைகள்… தடைகள்!

எந்த
மவராசனோ
அவன்
காந்தியோ…. நேரோ….
பீமாராவோ…. காம
ராசனோ
ராமசாமியோ….
கோடி புண்ணியமடா சாமி!
உங்கள் குலம் தழைக்கட்டும்!

சட்டம் வகுத்தது உச்சம்
அதனை
திட்டமாக்கியதும் உச்சம்!
சாமிங்கடா நீங்கள்!!

ஒரே வகுப்பு
ஒரே வாத்தியார்
ஒரே பாடத் திட்டம்
ஒரே தேர்வு முறை….
சாதியின் அடையாளமற்ற
விடைத்தாள்!
முன்னப் பின்ன மதிப்பெண்!

பத்துல….
ஒன்றோ…. ரெண்டோ…
குமாஸ்தா…. காவலன்… ஏவலன்….
அரசாங்கத்தில் அனுமதி!
அப்பாடா….
ஏதோ பசி போக்கிக்கொள்ள
ஒரு வழி!

அப்பனுக்கு….
ஆத்தாவுக்கு….
தாத்தா பாட்டிக்கு
மாமன் மச்சானுக்கு
அக்காள் தங்கை அத்தைக்கு
அண்ணன் தம்பிக்கு
சித்தப்பன் பெரியப்பனுக்கு
சந்தோசம்ங்றதை விட….
சப்போர்ட் கிடைக்குமாம்!

“ஏன்டா?
எங்கள் சோற்றில்
மண்ணள்ளிப்போட்டேன்னு”
கன்னத்தில் அறைந்திருந்தால் கூட
காயம் பெருசா இருக்காது!

தலைமுறையின்
முதல் கவர்மென்ட் குமாஸ்தா
வேலையில் சேருவதற்கான
என்னோடப் படிப்புச் சான்றையும்….
ஜாதிச் சான்றையும்
சோதிக்கும்போது….

நான் வேலையில் சேரும்
அலுவலக ஆபிஸரின்
முகத்தைப் பார்க்கணுமே….
ப்ப்ப்பா………
ஆயிரமாயிரம் கருந்தேள்
கொட்டிய
வலி……
இன்னும் வலிக்குது சாமி!

‘கைத்தடி’
*************
உடலது தளரும் போது
உள்ளத்தின் வலிமை குன்றும்;
உள்ளமும் உடலும் சோர்ந்தால்
உறுதியில் உடைசல் தோன்றும்

எண்ணத்தில் வலிமை கொண்டும்
இயல்பது தளரும் நாளே
முதுமைதான் வந்த போது
இயலாமை இயல்பு தானே!

மூப்புக்குத் துணை யென்றாலும்
மூர்க்கரை விரட்ட எண்ணி
காந்தியார் கையில் கொண்டார்
கைத்தடிக் காலாய் கொண்டார்!

பெரியாரின் கையில் தானே
பெருந்தடி கையில் கொண்டார்
பேய்களாம் மூடர்க் கூட்டம்
பிய்த்திட எண்ணம் கொண்டார்!

பெரியோர்கள் கையில் தானே
பேசின கைத் தடிகள்;
சிறியோர்கள் கூட்ட மாக
சேர்த்ததும் கைத் தடியே!

இயலாமை கொண்டோ ரெல்லாம்
எடுத்தனர் ஆளுக் கொன்றாய்
இதைமக்கள் புரிந்துக் கொண்டால்
எடுத்தவர் தடுக்கி வீழ்வார்!

சாதியை கையில் தடியாய்
சமயத்தை கையில் தடியாய்
கட்சியை கையில் தடியாய்
கைகொண்டார் கை இல்லாதோர்!

வாழ்க்கையில் வலிமை குன்றி
வந்திட்டக் காலந் தன்னில்
கைத்தடி ஊன்று கோ(கா) லாய்
உதவிடும் துணையாய் நின்று!

உழைப்பினால் உடைந்து போனோர்
ஊன்றியே நிற்றல் வேண்டி
கைத்தடி எடுத்தல் ஒன்றும்
கடுங்குற்றம் இல்லை இல்லை!

ஊரினை வளைத்துக் கொண்டோன்
உட்கார்ந்து உண்போன் எல்லாம்
சாதிகள் சமயம் தன்னை
சதிசெய்ய எடுக்க வேண்டாம்!

ஊன்றுகோல் உள்நோக் கத்தை
உலுத்தர்கள் அறிய மாட்டார்;
கைத்தடி போலே மக்கள்
கையிலே சிக்க வேண்டாம்!

Kavithai Thamizhanin Kavithaigal கவிதைத்தமிழனின் கவிதைகள்

கவிதைத்தமிழனின் கவிதைகள்




புத்தகம் என்னும் தோழன்
******************************
காலத்தைப் படம் பிடித்துக்
காட்சிகளாய்த் திரை யிடுவான்…!
வரலாற்று நிகழ்வை யெல்லாம்
வரிவடிவில் உரை வடிப்பான்…!

கற்கால வாழ்வைக் கூடக்
கண்முன்னே விரிய வைப்பான்…!
அறிவியலை,உளவியலை
அழகாகப் புரிய வைப்பான்…!

அறிவை மிகுத்து நம்மை
அனுதினம் உயர வைப்பான்…!
ஆழ்மனதில் இடம்பிடித்து
அறிவுரைகள் பல வுரைப்பான்…!

வாசித்து அகமகிழ்ந்தால்
வசந்தத்தை அவன் அளிப்பான்…!
நேசித்து நட்புகொண்டால்
நேர்வழியில் நடத்திச் செல்வான்…!

நிலையான புகழை நோக்கி
நிச்சயமாய் வினை புரிவான்..!
கனவுகளைத் துரத்திப் பிடிக்க
கட்டாயம் துணை புரிவான்…!

மனிதத்தை நாளும் உயர்த்தும்,
மகத்தான நமது நண்பன்…!
புத்துலகைப் படைக்க விரும்பும்
புத்தகமே நமது தோழன்…!

பெரியாரைப் புரிந்து கொள்வோம்
****************************************
அடிமைப்படுத்தி வாழ நினைக்கும்
அறிவிலாரைச் சீண்டியவர்….!
அறிவு கொண்டு அனைத்தையுமே
சிந்திக்கத் தூண்டியவர்….!

எப்போதும் கேள்வி கேட்கும்
ஈரோட்டுக் காரரிவர்…!
இலவசத்தில் இருக்கும் சூழ்ச்சி
எடுத்துச் சொன்ன வீரரிவர்….!

காடு, கரை நடந்து சென்று
கதர் ஆடை விற்றிட்டவர்…!
வேடுவன் போல் இலக்கு நோக்கி
வெற்றி கொள்ள வித்திட்டவர்….!

சனாதனத்தின் குரல்கள் மீது
கேள்விக்கணைகள் வீசியவர்…!
சாமானியன் நலன் விரும்பி
சமத்துவத்தைப் பேசியவர்….!

திராவிடத்தின் பெருமை பேசும்
திராணி மிக்க தலைவரிவர்….!
இராப் பகலாய்த் தமிழருக்கு

இதயம் தந்த தந்தையவர்
தன்மானம் வேண்டும் என்று
தமிழறிவில் வேர் இட்டவர்…..!
தரம்தாழ்ந்த வசைகள் மீது
தடிகொண்டே போரிட்டவர்….!

தன் தோப்பு மரங்களையே
தயங்காமல் வெட்டியவர்….!
கள்ளுக் கெதிராய் மக்களிடம்
போர் முரசு கொட்டியவர்.!

தீர்க்கமாக முடிவு எடுக்கும்
திராணியுள்ள தீரரிவர்…!
தீண்டாமை கொடுமைக் கெதிராய்
திக்கெட்டும் முழங்கியவர்….!

பெருந்தொலைவு நடந்து சென்று
பேருரைகள் ஆற்றியவர்…!
பெண்கள் நாட்டின் கண்களென்றே
பெண்ணியத்தைப் போற்றியவர்…!

மூட(ர்) பழக்க வழக்கங்களை
மூழ்கடிக்க முயன்றிட்டவர்…!
மேலோர், கீழோர் இல்லையென
வாழ்க்கை நீதி வழங்கியவர்….!

Pavalar Karumalai Thamizhazhanin Poems பாவலர் கருமலைத்தமிழாழனின் கவிதைகள்

பாவலர் கருமலைத்தமிழாழனின் கவிதைகள்




என்று முடியும் இந்தக் கொடுமை
****************************************
கயர்லாஞ்சி மகாராட்டிர மாநிலத்தில்
கயமைக்குக் காட்டாக நிற்கும் ஓர்ஊர்
வயலினிலே தினமுழைத்தே அந்த ஊரில்
வாழ்ந்திட்ட சுரேகாஓர் தலித்துப் பெண்ணாம்
உயர்தற்குக் கல்விநல்ல ஏணி என்றே
உணர்ந்ததனால் ஓரளவு கற்றி ருந்தாள்
தயக்கத்தைத் தகர்த்தெறிந்தே கணவ னோடு
தன்சாதிக் கீழ்மையினை எதிர்த்து நின்றாள் !

ஆதிக்கச் சாதிவெறி அரக்கர் தம்மின்
அடக்குமுறை கொடுமைக்குப் பதிலு ரைக்க
சாதிமாறி அம்பேத்கார் சென்ற தைப்போல்
சார்ந்திட்டாள் புத்தமத அரவ ணைப்பில்
வீதியிலே குடிசையாக இருந்த தன்னின்
வீட்டைக்கல் வீடாக்க முனைந்த போது
மோதியுயர் சாதியர்கள் தடைகள் செய்தே
மொத்தமாக வெளியேற்ற முனைந்து நின்றார் !

வீட்டிற்கு மின்சாரம் துண்டித் தார்கள்
வீட்டினிலே வளர்த்துவந்த ஆடு மாட்டை
கேட்காமல் பலர்சேர்ந்தே தடுத்த போதும்
கேள்விமுறை இல்லாமல் ஓட்டிச் சென்றார்
வீட்டோடு விவசாயம் செய்வ தற்கும்
விட்டிடாமல் கால்வாய்நீர் தடுத்து நின்றே
கூட்டாக வயலையுமே பொதுப்பா தைக்குக்
குறிவைத்தே வன்முறையால் பறித்துக் கொண்டார் !

எதிர்த்திட்ட சுரேகாவின் குடும்பந் தன்னை
எழுபதிற்கும் மேற்பட்ட கிராமத் தார்கள்
குதித்துவந்து குண்டுகட்டாய்த் தூக்கி வந்து
குரூரமாகத் தெருவினிலே நிற்க வைத்து
விதித்திட்டார் அவள்மகனைத் தங்கை யோடு
விலங்கைப்போல் உறவுகொள்ள துன்பு றுத்தி
மிதித்திட்டார் ! மறுத்ததனால் அவன்உயிர் நிலையை
மிருகம்போல் நசுக்கியுயிர்ப் பறித்துக் கொன்றார் !

இலங்கையிலே தமிழர்க்கு நடந்த போன்றே
இங்கேயும் சுரேகாவை பெற்றெ டுத்த
குலமகளைப் பகற்பொழுதில் பல்லோர் காணக்
குதறிட்டார் கூட்டாக உறவு கொண்டு
நலமாக சுயமானம் கொண்டு வாழ
நற்கனவு கண்டவளைக் குடும்பத் தோடு
நிலம்மீது பிணமாக வீழ்த்தி விட்டார்
நின்றெரியும் உயர்சாதி வெறித்தீ யாலே !

மதிகாண சந்திராயன் அனுப்பி யென்ன?
மங்கல்யான் செவ்வாய்க்கு விடுத்து மென்ன?
விதிமாற்றி வல்லரசாய் இந்தி யாவை
வியக்கின்ற படிஉயர்த்த முயன்று மென்ன?
மதிதன்னில் சாதியத்தை நீக்கி விட்டு
மனந்தன்னில் மனிதத்தைப் பதிய வைத்துப்
புதுமாற்றம் சாதியற்ற இந்தி யாவாய்ப்
புலராத வரையெந்த புகழும் வீணே !

( மகாராட்டிர மாநிலத்திலுள்ள கயர்லாஞ்சி ஊரினிலே நடந்த நெஞ்சை உருக்கும் உண்மை நிகழ்ச்சி )

தூக்கிலிட்டால் சாமோ சாதி
************************************
பெரியாரின் அயராத உழைப்பி னாலே
பெரும்மாற்றம் தமிழ்நாட்டில் வந்த போதும்
விரியாத மனந்தன்னைக் கொண்டி ருப்போர்
விட்டிடாமல் பிடித்துள்ளார் சாதி தன்னை
நெரிக்கிறது கழுத்துதனைக் காதல் செய்தோர்
நிம்மதியாய் வாழ்வதற்குச் சேர்த்தி டாமல்
செரிக்காத உணவுடலைக் கெடுத்தல் போல
செய்கிறது சாதியிந்த சமுதா யத்தை !

நகரத்தில் இருகுவளை போன தென்று
நாம்பெருமை பேசினாலும் கிராமத் துள்ளே
நகராமல் தேநீரின் கடைக ளுக்குள்
நாட்டாமை செய்கிறது இன்னும் நின்றே
முகம்மழிக்கும் நிலையத்துள் தலித்க ளுக்கே
முடிவெட்டின் கடைதன்னை உடைப்போ மென்றே
அகவெறியில் கன்னடத்தின் ஊப்ளி ஊரில்
அறிவித்தே தடுக்கின்றார் சாதி யத்தால் !

தீண்டாமை பெருங்குற்றம் என்றே சட்டம்
தீட்டியிங்கே வைத்தென்ன நாளும் நாளும்
வேண்டாத மருமகளின் கைபட் டாலே
வெறுக்கின்ற மாமியாரின் முகத்தைப் போல
காண்கின்றோம் உயர்சாதி வெறியர் செய்யும்
கலகத்தை வன்முறையை நாட்டி லெங்கும்
தூண்டுவோரை துணையாக உடன்நிற் போரைத்
தூக்கிலிட்டால் தான் இந்த சாதி சாகும் !

What is Civilization? - Thanthai Periyar. Kudiyarasu Magazine Article Gathered By Sa. Veeramani. நாகரீகமென்றால் என்ன? - தந்தை பெரியார்

நாகரீகமென்றால் என்ன? – தந்தை பெரியார்



தோழர்களே! இனி அடுத்தபடியாக நிகழ்ச்சிக்குறிப்பில் கண்டுள்ள விஷயம். அக்கிராசனர் முடிவுரை எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நான் அனேக கேள்விகளுக்குச் சரியான பதில் சொல்லுவேன் என்று எனக்கு முன்பு பேசிய நண்பர் கூறினார். நான் எப்பொழுதும் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தயாராயிருக்கிறேன். ஆனால் எல்லாக் கேள்விகளுக்கும் சரியான – முடிவான பதில் சொல்லக் கூடிய சகலகலாவல்லவனென்று எண்ணி விடாதீர்கள். நான் சொல்லும் அபிப்பிராயம் தான் முடிவானதென்றோ, அதுவே முடிந்த ஆராய்ச்சியின் சரியான கருத்து என்றோ, நீங்கள் கருதக் கூடாது.

விவகாரம், நியாயம் என்ற இரண்டு வார்த்தைகளையும் உபயோகப் படுத்தும் விதத்தை சரியாக உணர்ந்து கொள்ளும்படி கோருகிறேன்.

நியாயம் வேறு, விவகாரம் வேறு

நியாயம் வேறு-விவகாரம் என்பதும் வேறு. விவகாரம் என்பது வலுத்தவன் ஆதிக் கத்தையும், தந்திர சூக்ஷிகளையும், பணச் செல்வாக்கையும் பொருத்து முடிவு பெற்றுவிடும். ஒருவன் தன்னிடம் சக்தி இல்லாத காரணத்தால்-பேசும் திறமை, எடுத்துக்காட்டும் அனுபோகம் ஆகியவை இல்லாத காரணத்தால்-ஒரு விஷயத்தைப் பற்றி வாதித்துத் தோல்வியுற்று விட்டால் அது நியாயம் கண்டு பிடித்தாகிவிடுமா? அது போல் உங்கள் வாய் அடங்கும்படி நான் பதில் சொல்லி விட்டதாலேயே நான் சொன்னது சரி என்று சொல்லிவிட முடியாது. உங்களுக்கு எடுத்துச் சொல்லி மெய்ப்பிக்க முடியாததாலேயே நான் சொன்னது தப்பு என்றும் சொல்லிவிட முடியாது. ஆதலால் எனக்குத் தெரிந்த பதில் சொல்லுகிறேன். அதை ஆராய்ச்சி செய்து பிறகு ஒரு தக்க முடிவுக்கு வாருங்கள்.

இன்றைய தினம் இங்கு பேச எடுத்துக் கொண்ட விஷயம், “இந்தியாவின் தற்கால நாகரீகம்” என்பதாகும். இது ஒரு கூடாத விஷயமல்ல. மிக்க ருசிகரமானதும் விரிந்த பொருள்களைக் கொண்டதுமான நல்ல விஷயத்தையே நீங்கள் இங்கு பேச எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

“நாகரீகம்” என்கின்ற வார்த்தைக்குப் பொருளே பிடியில் சிக்காத ஒரு விஷயமாகும். ஒவ்வொருவரும் ‘நாகரீகம்’ என்பதற்கு ஒரு தனிப் பொருள் கூறி வருகிறார்கள். கண்ணோட்டம் என்கிற தலைப்பின் கீழ் குறளில் நாகரீகம் என்கிற வார்த்தை வள்ளுவரால் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறதாக நான் 10, 20 வருஷங்களுக்கு முன்பு பார்த்ததாக ஞாபகம். அது தாக்ஷண்ணியம், அடிமை என்கிற பொருளில் உபயோகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் எனக்கு ஞாபகம். நாகரீகம் என்கிற வார்த்தைக்கு எந்தக் கருத்தை வைத்துக் கொண்டு பேசினாலும் மக்கள் சமூகம், நடை, உடை, ஆகாரம் மற்றும் எல்லா பாவனை களிலும் பெரிதும் மாறுபட்டிருக்கிறது. எந்த ஆதாரத்தினால் தான் இவைகள் வேறுபட்டிருக்கிறதென்று கூறமுடியாது. எப்படியோ எல்லாம் மாறுதலில் தான் போய்க்கொண்டிருக்கிறது.

நம்முடைய பெண்கள் முன்பு முழங்கைக்குக் கீழும் இரவிக்கை அணிந்து வந்தார்கள். பின்பு மேலேறியது. மறுபடி கீழே இறங்கியது. இப்பொழுது மறுபடியும் மேலேயே போய்க் கொண்டிருக்கிறது. மேல் நாட்டு ஸ்திரிகளும்-தெருக்களில் தெருக் கூட்டு வது போன்ற ஆடைகளை முன்பு அணிந்து வந்தார்கள். அந்த காலத்தில் துணிகளைத் தூக்கிப் பிடித்துக் கொள்ள பணம் படைத்தவர்கள் ஆள்களை நியமித்துக் கொண்டிருந்தார்கள். அது அக்கால நாகரீகம். இப்பொழுதோ என்றால் ஆடை விஷயத்தில் மேல் நாட்டுப் பெண்களும் எல்லாம் சுருக்கிக் கொண்டு விட்டார்கள். அதை நாம் இப்பொழுது நாகரீகமென்று தான் கருதுகிறோம். நாம் இவைகளைப்பற்றி எல்லாம் பேசும் பொழுதும் யோசிக்கும் பொழுதும் எந்தவித பற்றுதலும் இல்லாமல் அதாவது ஜாதி, மதம், தேசம் என்பன போன்ற பற்றுகளை விட்டு விட்டு சுயேச்சையாக சீர்தூக்கிப் பார்த்தால் தான் விஷயங்கள் நன்றாகத் தெரிந்து கொள்ளலாம். அதன் உண்மையும் அப்பொழுதுதான் விளங்கும்.

What is Civilization? - Thanthai Periyar. Kudiyarasu Magazine Article Gathered By Sa. Veeramani. நாகரீகமென்றால் என்ன? - தந்தை பெரியார்

ஒரு காலத்தில் சாம்பலைப் பூசிக் கொண்டு சிவ சிவா என்று ஜெபிப்பது தான் யோக்கியமாகக் கருதப்பட்டது. இன்றைய கால தேச வர்த்த மானங்கள் மேல் சொன்ன விஷயத்தை கேலி செய்கிறது. புருஷன் பெண்ஜாதி என்கிற இரு சாரர்களை எடுத்துக் கொண்டாலும், முன்பு ‘கல் என்றாலும் கணவன்’, ‘புல் என்றாலும் புருஷன்’ என்று மதித்து ‘அடுப்பூதுவதே ஒரே கடமை’யென்று நடந்து வந்த பெண்களைப் பற்றி பெரிதும் மதித்து வந்தார்கள். ஆனால் இன்றோ புருஷனிடம் மனைவியானவள் நான் உனக்கு வேலைக்காரியா? அடிமைப்பட்ட மாடா? ஜாக்கிரதையாயிருந்தால் சரி, இல்லாவிட்டால் எனக்கும் சம அந்தஸ்தும் சம உரிமையும் சர்வ சுதந்திரமும் உண்டு என்று கர்ஜனை செய்யும் பெண்களையே நாகரீகம் வாய்ந்தவர்களென்று கருதுகிறோம்.

முன்பு புராணத்தைப் பற்றியும் மதத்தைப் பற்றியும் பேசுவது தான் வித்வத் தன்மையாக இருந்தது. ஆனால் அது இன்று குப்பையாகி பரிகசிக்கத் தக்கதாக ஆகிவிட்டது.

புத்திக்கும் அறிவிற்கும் பொருத்தமில்லாத முரட்டுப் பிடிவாதத்தில் முன்பு நம்பிக்கையிருந்ததை சிலாகித்துப் பேசி னோம். ஆனால் இன்றைய தினம் பிரத்தியக்ஷமாக எதையும் எடுத்துக் காட்டித் தெளிவுபடுத்துவதையும்-விஞ்ஞானம் போன்றதான அறிவியக்க நூல்களைக் கற்றுணர்ந்த வல்லுணர்களையுமே நாம் பெரிதும் மதித்து வருகின்றோம். நாகரீகம் என்பது நிலைமைக்கும் தேசத்திற்கும்-காலப் போக்கிற்கும் தக்கவாறு விளங்குகிறது. காலதேச வர்த்தமான-வழக்கத்தையேயொட்டி “நாகரீகம்” காணப்படுகிறது. காலப்போக்கானது எந்த தேக்கத்தையும் உண்டாக்குவதில்லை. ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றவும்-புரட்சி ஏற்படவும் செய்கிறது. மீசை, தலைமயிர் இவைகளைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டுப் பேசினீர் கள். எது நாகரீகமென்று கருதுகின்றோமோ அது பெருத்த அஜீர்ணத்துக்கு வந்துவிடுகிறது. மீண்டும் அந்த நிலைமையானது மாறிக்கொண்டு போகத்தான் செய்கின்றது. ஒரு விஷயமானது வாய் சாமர்த்தியத்தினால் செலவாணியாகிவிடும். அது மெய்யோ-பொய்யோ சரியோ-தப்போ எப்படியும் இருக்கலாம். நாம் ஏன் எதற்காக உழைத்துப் பாடுபடவேண்டும்? பகுத்தறிவு படைத்த நாம் பாடுபட்டுத்தான் ஆகவேண்டுமா? நாகரீகம் என்பது சதா உழைத்துத் தான் உண்ண வேண்டுமா? என்கிற கேள்விகள் எழுந்து மக்கள் சமூகம் கஷ்டம் தியாகமின்றி நலம்பெற முயற்சிக்கலாம். இது நாகரீகமாக கருதப்பட்டு பயன் அடைந்தாலும் அடையலாம்.

இன்றைய அரசியல் விஷயத்தில் இராட்டை சம்பந்தப்பட்டிருக்கிறது. இது ஆயிர வருஷங்களுக்கு முன்பு ஏற்பட்டு நாகரீகமாக பாவிக்கப் பட்டி ருந்தது. பின்பு குப்பையில் தள்ளப்பட்டது. பிறகு மீண்டும் அது வெளிப் படுத்தப்பட்டு அதற்குக் கொஞ்சம் மதிப்புக் கொடுக்கப்பட்டு இராட்டை சுற்றுவதும்-தக்ளி நூல் நூற்பதும் நாகரீகமாகக் கருதப்பட்டது. ஆனாலும் அதுவும் ஒழிந்து போயிற்று என்றே சொல்லலாம். இவைகளையெல்லாம் எந்தவிதமான (தேசம், மதம், ஜாதி) பற்றுதலுமில்லாத பொதுமனிதன், பொது நோக்கோடு கவனித்தால் உண்மை விளங்காமல் போகாது. நாம் ஓர்காலத்தில் தேசம், தேசீயம்-தேசப்பற்று என்பதை நாகரீக மாகக் கருதி வந்திருக்கிறோம். ஆனால் இன்றோ அவைகளையெல்லாம் உதறித் தள்ளி மனித ஜீவகாருண்யம் உலக சகோதரத்துவம் மக்கள்அபிமானம் என்று கருதுவதையே பெரிதும் நாகரீகமாகக் கருத முன் வந்துவிட்டோம்.

ஒருகாலத்தில் நாகரீகமாக கருதி வந்ததை இன்று நாம் பரிகசித்து வருகிறோம். ஒரு மனிதன் தான் நாயக்கன், முதலி, வைணவன், சைவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் பாராட்டிக்கொண்டு ஒவ்வொரு வரும் தாங்கள் அதிக மேல் சாதிக்காரனாவதற்குச் சைவ-வைணவப் போக்கைப் பற்றிக் கொண்டு பூணூலையும் நாமத்தையும் போட்டுத் தங்கள் மதத்தையும் சிலாகித்துப் பிதற்றிக் கொண்டும் வந்தான். ஆனால் இன்றைய தினம் இவைகளையெல்லாம் புத்திகெட்ட தனமென்றும், முற்போக்குக்கு முரணான தென்றும் கூறி வெகுவாகக் கண்டனம் செய்து வருகிறோம். ஒரு காலத்தில் தனித் தனித் தத்துவம் நாகரீகமாகக் கருதப்பட்டது. உதாரணமாக ஒரு தனித்தனி ஜாதி நன்மையும்-தேச நன்மையும் சிலாக்கியமாகக் கருதப் பட்டது. ஆனால் ஒரு ஜாதியின் அனுகூலம் பிற ஜாதியானுக்குப் பாதகம் என்பதையும் ஒரு தேச நன்மை மற்றொரு தேசத்திற்கு பொல்லாங்கு என்பதையும் நாம் இன்று நன்கு உணர ஆரம்பித்துவிட்டோம்.

தோழர்களே! நான் குறிப்பாக ஒரு விஷயத்தைப் பற்றி வற்புறுத்தி இங்கு கூற விரும்புகிறேன். அதாவது நாம் அனுபவ முதிர்ச்சியால் அறிவு ஆராய்ச்சியால் நாம் முற்போக்காகிக் கொண்டு வருகிறோம் என்பதேயாம். நாம் எல்லா மனிதர்களையும் அறிவின் உணர்ச்சியால் ஆழ்ந்து கவனிக் கிறோம். உதாரணமாக வியாபாரிகளை-மக்கள் சமூகத்தின் நலனைக் கொடுத்து லாபமடையும் கோஷ்டியைச் சேர்ந்தவர்களென்றும், லேவா தேவிக்காரர்களை-மனித சமூக நாசகர்த்தாக்களென்றும் மத ஆதிக்கங் கொண்ட வர்க்கத்தினர்களையும்-மனித சமூக விரோதிகளென்றும் கண்டிக் கின்றோம்.

What is Civilization? - Thanthai Periyar. Kudiyarasu Magazine Article Gathered By Sa. Veeramani. நாகரீகமென்றால் என்ன? - தந்தை பெரியார்

பெண்கள் எப்படி பெல்ட் கட்டாமல் சேலை கட்டுகிறார்கள்?

நாகரீகம் என்பது பிடிபடாத ஓர் விஷயமென்று முன்பே கூறினேன். நம்நாட்டு பெண்கள் எப்படி பெல்ட் கட்டாமல் சீலைகட்டுகிறார் களென்றும் அது இடுப்பில் எவ்வாறு தங்கியிருக்கிறதென்றும், தலைக்கு ஊசி இல்லாமல் பெண்கள் எவ்வாறு மயிர்களை சேர்த்து முடிந்துகொள்ளு கிறார்களென்றும், நாம் சாப்பாட்டுக்கு தினம் ஒரு இலை எப்படி சிலவு செய்கிறோம், என்ன மகத்தான நஷ்டமென்றும், மேனாட்டார் ஆச்சரியப் பட்டு நம்மவர்களை கேட்பவரையும் கேட்டிருக்கிறோம். ஒவ்வொருவரும் அவர்களின் செய்கையை சரியாக உணராததினால் சிலதை ஆச்சரியமாக கருத நேரிடுகிறது. நம்மிடையேயுள்ள சாதி அபிமானம் சொந்தகார அபிமானம், பாஷா அபிமானம், தேசாபிமானம் எல்லாம் தொலையவேண்டும். இல்லாவிட்டால் எந்த நல்ல விஷயத்திலும் நாம் முடிவு காணுவது சரியாக ஆகிவிடாது. காந்தியார் மேனாட்டில் முழங்கால் துண்டோடு-போதிய ஆடை யின்றி போன பெருமையைப் பற்றி ஒரு நண்பர் குறிப்பிட்டார். இது எவ்வளவு தூரம் புத்திசாலித்தனமானதாகும் சௌகரியத்திற்காவும்- நன்மைக்காவும் அங்கு அதிக ஆடைகளை பந்தோபஸ்துக்காக அணிந்து கொள்ளாமல் பிடிவாதத்தோடு-கேவலம் இந்திய தர்மம் என்ற வெறும் எண்ணத்திற்காக குளிரில் விரைத்துபோக இங்கிலாந்து வாசம் செய்தது எவ்வளவு தூரம் நியாயமான செய்கையாகும்?

முயற்சி மெய்வருத்தக் கூலி தரும்

புதிய எண்ணங்களும் புதிய எழுச்சிகளும்-புதிய காரியங்களும் நிகழுகின்றன. நீங்களும் காலப்போக்கின் உயரிய பலனை வீணாக்காது பகுத்தறிவை மேற்போட்டுக்கொண்டு ஜனசமுதாய நன்மையை தேடி பாடு பட முன்வாருங்கள். உங்களுடைய முயற்சிக்கு எல்லாம் வெற்றியே உண்டு. வெறும் கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தவர்களும்கூட தங்களுடைய போக்கை மாற்றிக்கொண்டு முயற்சி மெய்வருத்தகூலி தரும் என்றுசொல்லி வருகிறார்கள். ஆகவே தோழர்களே! நீங்கள் தன் நம்பிக்கைகொண்டுமக்களின் விடுதலைக்கு சரியான வழிகளில் பகுத்தறிவை அடிப்படை யாகக்கொண்டு போராட வாருங்கள்.

(தந்தை பெரியார் ஆற்றிய உரையை ‘குடியரசு’ இதழிலிருந்து எடுத்து அனுப்பியிருப்பது ச.வீரமணி)