கவிதைச் சந்நதம் 33 – நா.வே.அருள்
நாகரீகமென்றால் என்ன? – தந்தை பெரியார்
தோழர்களே! இனி அடுத்தபடியாக நிகழ்ச்சிக்குறிப்பில் கண்டுள்ள விஷயம். அக்கிராசனர் முடிவுரை எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நான் அனேக கேள்விகளுக்குச் சரியான பதில் சொல்லுவேன் என்று எனக்கு முன்பு பேசிய நண்பர் கூறினார். நான் எப்பொழுதும் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தயாராயிருக்கிறேன். ஆனால் எல்லாக் கேள்விகளுக்கும் சரியான – முடிவான பதில் சொல்லக் கூடிய சகலகலாவல்லவனென்று எண்ணி விடாதீர்கள். நான் சொல்லும் அபிப்பிராயம் தான் முடிவானதென்றோ, அதுவே முடிந்த ஆராய்ச்சியின் சரியான கருத்து என்றோ, நீங்கள் கருதக் கூடாது.
விவகாரம், நியாயம் என்ற இரண்டு வார்த்தைகளையும் உபயோகப் படுத்தும் விதத்தை சரியாக உணர்ந்து கொள்ளும்படி கோருகிறேன்.
நியாயம் வேறு, விவகாரம் வேறு
நியாயம் வேறு-விவகாரம் என்பதும் வேறு. விவகாரம் என்பது வலுத்தவன் ஆதிக் கத்தையும், தந்திர சூக்ஷிகளையும், பணச் செல்வாக்கையும் பொருத்து முடிவு பெற்றுவிடும். ஒருவன் தன்னிடம் சக்தி இல்லாத காரணத்தால்-பேசும் திறமை, எடுத்துக்காட்டும் அனுபோகம் ஆகியவை இல்லாத காரணத்தால்-ஒரு விஷயத்தைப் பற்றி வாதித்துத் தோல்வியுற்று விட்டால் அது நியாயம் கண்டு பிடித்தாகிவிடுமா? அது போல் உங்கள் வாய் அடங்கும்படி நான் பதில் சொல்லி விட்டதாலேயே நான் சொன்னது சரி என்று சொல்லிவிட முடியாது. உங்களுக்கு எடுத்துச் சொல்லி மெய்ப்பிக்க முடியாததாலேயே நான் சொன்னது தப்பு என்றும் சொல்லிவிட முடியாது. ஆதலால் எனக்குத் தெரிந்த பதில் சொல்லுகிறேன். அதை ஆராய்ச்சி செய்து பிறகு ஒரு தக்க முடிவுக்கு வாருங்கள்.
இன்றைய தினம் இங்கு பேச எடுத்துக் கொண்ட விஷயம், “இந்தியாவின் தற்கால நாகரீகம்” என்பதாகும். இது ஒரு கூடாத விஷயமல்ல. மிக்க ருசிகரமானதும் விரிந்த பொருள்களைக் கொண்டதுமான நல்ல விஷயத்தையே நீங்கள் இங்கு பேச எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
“நாகரீகம்” என்கின்ற வார்த்தைக்குப் பொருளே பிடியில் சிக்காத ஒரு விஷயமாகும். ஒவ்வொருவரும் ‘நாகரீகம்’ என்பதற்கு ஒரு தனிப் பொருள் கூறி வருகிறார்கள். கண்ணோட்டம் என்கிற தலைப்பின் கீழ் குறளில் நாகரீகம் என்கிற வார்த்தை வள்ளுவரால் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறதாக நான் 10, 20 வருஷங்களுக்கு முன்பு பார்த்ததாக ஞாபகம். அது தாக்ஷண்ணியம், அடிமை என்கிற பொருளில் உபயோகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் எனக்கு ஞாபகம். நாகரீகம் என்கிற வார்த்தைக்கு எந்தக் கருத்தை வைத்துக் கொண்டு பேசினாலும் மக்கள் சமூகம், நடை, உடை, ஆகாரம் மற்றும் எல்லா பாவனை களிலும் பெரிதும் மாறுபட்டிருக்கிறது. எந்த ஆதாரத்தினால் தான் இவைகள் வேறுபட்டிருக்கிறதென்று கூறமுடியாது. எப்படியோ எல்லாம் மாறுதலில் தான் போய்க்கொண்டிருக்கிறது.
நம்முடைய பெண்கள் முன்பு முழங்கைக்குக் கீழும் இரவிக்கை அணிந்து வந்தார்கள். பின்பு மேலேறியது. மறுபடி கீழே இறங்கியது. இப்பொழுது மறுபடியும் மேலேயே போய்க் கொண்டிருக்கிறது. மேல் நாட்டு ஸ்திரிகளும்-தெருக்களில் தெருக் கூட்டு வது போன்ற ஆடைகளை முன்பு அணிந்து வந்தார்கள். அந்த காலத்தில் துணிகளைத் தூக்கிப் பிடித்துக் கொள்ள பணம் படைத்தவர்கள் ஆள்களை நியமித்துக் கொண்டிருந்தார்கள். அது அக்கால நாகரீகம். இப்பொழுதோ என்றால் ஆடை விஷயத்தில் மேல் நாட்டுப் பெண்களும் எல்லாம் சுருக்கிக் கொண்டு விட்டார்கள். அதை நாம் இப்பொழுது நாகரீகமென்று தான் கருதுகிறோம். நாம் இவைகளைப்பற்றி எல்லாம் பேசும் பொழுதும் யோசிக்கும் பொழுதும் எந்தவித பற்றுதலும் இல்லாமல் அதாவது ஜாதி, மதம், தேசம் என்பன போன்ற பற்றுகளை விட்டு விட்டு சுயேச்சையாக சீர்தூக்கிப் பார்த்தால் தான் விஷயங்கள் நன்றாகத் தெரிந்து கொள்ளலாம். அதன் உண்மையும் அப்பொழுதுதான் விளங்கும்.
ஒரு காலத்தில் சாம்பலைப் பூசிக் கொண்டு சிவ சிவா என்று ஜெபிப்பது தான் யோக்கியமாகக் கருதப்பட்டது. இன்றைய கால தேச வர்த்த மானங்கள் மேல் சொன்ன விஷயத்தை கேலி செய்கிறது. புருஷன் பெண்ஜாதி என்கிற இரு சாரர்களை எடுத்துக் கொண்டாலும், முன்பு ‘கல் என்றாலும் கணவன்’, ‘புல் என்றாலும் புருஷன்’ என்று மதித்து ‘அடுப்பூதுவதே ஒரே கடமை’யென்று நடந்து வந்த பெண்களைப் பற்றி பெரிதும் மதித்து வந்தார்கள். ஆனால் இன்றோ புருஷனிடம் மனைவியானவள் நான் உனக்கு வேலைக்காரியா? அடிமைப்பட்ட மாடா? ஜாக்கிரதையாயிருந்தால் சரி, இல்லாவிட்டால் எனக்கும் சம அந்தஸ்தும் சம உரிமையும் சர்வ சுதந்திரமும் உண்டு என்று கர்ஜனை செய்யும் பெண்களையே நாகரீகம் வாய்ந்தவர்களென்று கருதுகிறோம்.
முன்பு புராணத்தைப் பற்றியும் மதத்தைப் பற்றியும் பேசுவது தான் வித்வத் தன்மையாக இருந்தது. ஆனால் அது இன்று குப்பையாகி பரிகசிக்கத் தக்கதாக ஆகிவிட்டது.
புத்திக்கும் அறிவிற்கும் பொருத்தமில்லாத முரட்டுப் பிடிவாதத்தில் முன்பு நம்பிக்கையிருந்ததை சிலாகித்துப் பேசி னோம். ஆனால் இன்றைய தினம் பிரத்தியக்ஷமாக எதையும் எடுத்துக் காட்டித் தெளிவுபடுத்துவதையும்-விஞ்ஞானம் போன்றதான அறிவியக்க நூல்களைக் கற்றுணர்ந்த வல்லுணர்களையுமே நாம் பெரிதும் மதித்து வருகின்றோம். நாகரீகம் என்பது நிலைமைக்கும் தேசத்திற்கும்-காலப் போக்கிற்கும் தக்கவாறு விளங்குகிறது. காலதேச வர்த்தமான-வழக்கத்தையேயொட்டி “நாகரீகம்” காணப்படுகிறது. காலப்போக்கானது எந்த தேக்கத்தையும் உண்டாக்குவதில்லை. ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றவும்-புரட்சி ஏற்படவும் செய்கிறது. மீசை, தலைமயிர் இவைகளைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டுப் பேசினீர் கள். எது நாகரீகமென்று கருதுகின்றோமோ அது பெருத்த அஜீர்ணத்துக்கு வந்துவிடுகிறது. மீண்டும் அந்த நிலைமையானது மாறிக்கொண்டு போகத்தான் செய்கின்றது. ஒரு விஷயமானது வாய் சாமர்த்தியத்தினால் செலவாணியாகிவிடும். அது மெய்யோ-பொய்யோ சரியோ-தப்போ எப்படியும் இருக்கலாம். நாம் ஏன் எதற்காக உழைத்துப் பாடுபடவேண்டும்? பகுத்தறிவு படைத்த நாம் பாடுபட்டுத்தான் ஆகவேண்டுமா? நாகரீகம் என்பது சதா உழைத்துத் தான் உண்ண வேண்டுமா? என்கிற கேள்விகள் எழுந்து மக்கள் சமூகம் கஷ்டம் தியாகமின்றி நலம்பெற முயற்சிக்கலாம். இது நாகரீகமாக கருதப்பட்டு பயன் அடைந்தாலும் அடையலாம்.
இன்றைய அரசியல் விஷயத்தில் இராட்டை சம்பந்தப்பட்டிருக்கிறது. இது ஆயிர வருஷங்களுக்கு முன்பு ஏற்பட்டு நாகரீகமாக பாவிக்கப் பட்டி ருந்தது. பின்பு குப்பையில் தள்ளப்பட்டது. பிறகு மீண்டும் அது வெளிப் படுத்தப்பட்டு அதற்குக் கொஞ்சம் மதிப்புக் கொடுக்கப்பட்டு இராட்டை சுற்றுவதும்-தக்ளி நூல் நூற்பதும் நாகரீகமாகக் கருதப்பட்டது. ஆனாலும் அதுவும் ஒழிந்து போயிற்று என்றே சொல்லலாம். இவைகளையெல்லாம் எந்தவிதமான (தேசம், மதம், ஜாதி) பற்றுதலுமில்லாத பொதுமனிதன், பொது நோக்கோடு கவனித்தால் உண்மை விளங்காமல் போகாது. நாம் ஓர்காலத்தில் தேசம், தேசீயம்-தேசப்பற்று என்பதை நாகரீக மாகக் கருதி வந்திருக்கிறோம். ஆனால் இன்றோ அவைகளையெல்லாம் உதறித் தள்ளி மனித ஜீவகாருண்யம் உலக சகோதரத்துவம் மக்கள்அபிமானம் என்று கருதுவதையே பெரிதும் நாகரீகமாகக் கருத முன் வந்துவிட்டோம்.
ஒருகாலத்தில் நாகரீகமாக கருதி வந்ததை இன்று நாம் பரிகசித்து வருகிறோம். ஒரு மனிதன் தான் நாயக்கன், முதலி, வைணவன், சைவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் பாராட்டிக்கொண்டு ஒவ்வொரு வரும் தாங்கள் அதிக மேல் சாதிக்காரனாவதற்குச் சைவ-வைணவப் போக்கைப் பற்றிக் கொண்டு பூணூலையும் நாமத்தையும் போட்டுத் தங்கள் மதத்தையும் சிலாகித்துப் பிதற்றிக் கொண்டும் வந்தான். ஆனால் இன்றைய தினம் இவைகளையெல்லாம் புத்திகெட்ட தனமென்றும், முற்போக்குக்கு முரணான தென்றும் கூறி வெகுவாகக் கண்டனம் செய்து வருகிறோம். ஒரு காலத்தில் தனித் தனித் தத்துவம் நாகரீகமாகக் கருதப்பட்டது. உதாரணமாக ஒரு தனித்தனி ஜாதி நன்மையும்-தேச நன்மையும் சிலாக்கியமாகக் கருதப் பட்டது. ஆனால் ஒரு ஜாதியின் அனுகூலம் பிற ஜாதியானுக்குப் பாதகம் என்பதையும் ஒரு தேச நன்மை மற்றொரு தேசத்திற்கு பொல்லாங்கு என்பதையும் நாம் இன்று நன்கு உணர ஆரம்பித்துவிட்டோம்.
தோழர்களே! நான் குறிப்பாக ஒரு விஷயத்தைப் பற்றி வற்புறுத்தி இங்கு கூற விரும்புகிறேன். அதாவது நாம் அனுபவ முதிர்ச்சியால் அறிவு ஆராய்ச்சியால் நாம் முற்போக்காகிக் கொண்டு வருகிறோம் என்பதேயாம். நாம் எல்லா மனிதர்களையும் அறிவின் உணர்ச்சியால் ஆழ்ந்து கவனிக் கிறோம். உதாரணமாக வியாபாரிகளை-மக்கள் சமூகத்தின் நலனைக் கொடுத்து லாபமடையும் கோஷ்டியைச் சேர்ந்தவர்களென்றும், லேவா தேவிக்காரர்களை-மனித சமூக நாசகர்த்தாக்களென்றும் மத ஆதிக்கங் கொண்ட வர்க்கத்தினர்களையும்-மனித சமூக விரோதிகளென்றும் கண்டிக் கின்றோம்.
பெண்கள் எப்படி பெல்ட் கட்டாமல் சேலை கட்டுகிறார்கள்?
நாகரீகம் என்பது பிடிபடாத ஓர் விஷயமென்று முன்பே கூறினேன். நம்நாட்டு பெண்கள் எப்படி பெல்ட் கட்டாமல் சீலைகட்டுகிறார் களென்றும் அது இடுப்பில் எவ்வாறு தங்கியிருக்கிறதென்றும், தலைக்கு ஊசி இல்லாமல் பெண்கள் எவ்வாறு மயிர்களை சேர்த்து முடிந்துகொள்ளு கிறார்களென்றும், நாம் சாப்பாட்டுக்கு தினம் ஒரு இலை எப்படி சிலவு செய்கிறோம், என்ன மகத்தான நஷ்டமென்றும், மேனாட்டார் ஆச்சரியப் பட்டு நம்மவர்களை கேட்பவரையும் கேட்டிருக்கிறோம். ஒவ்வொருவரும் அவர்களின் செய்கையை சரியாக உணராததினால் சிலதை ஆச்சரியமாக கருத நேரிடுகிறது. நம்மிடையேயுள்ள சாதி அபிமானம் சொந்தகார அபிமானம், பாஷா அபிமானம், தேசாபிமானம் எல்லாம் தொலையவேண்டும். இல்லாவிட்டால் எந்த நல்ல விஷயத்திலும் நாம் முடிவு காணுவது சரியாக ஆகிவிடாது. காந்தியார் மேனாட்டில் முழங்கால் துண்டோடு-போதிய ஆடை யின்றி போன பெருமையைப் பற்றி ஒரு நண்பர் குறிப்பிட்டார். இது எவ்வளவு தூரம் புத்திசாலித்தனமானதாகும் சௌகரியத்திற்காவும்- நன்மைக்காவும் அங்கு அதிக ஆடைகளை பந்தோபஸ்துக்காக அணிந்து கொள்ளாமல் பிடிவாதத்தோடு-கேவலம் இந்திய தர்மம் என்ற வெறும் எண்ணத்திற்காக குளிரில் விரைத்துபோக இங்கிலாந்து வாசம் செய்தது எவ்வளவு தூரம் நியாயமான செய்கையாகும்?
முயற்சி மெய்வருத்தக் கூலி தரும்
புதிய எண்ணங்களும் புதிய எழுச்சிகளும்-புதிய காரியங்களும் நிகழுகின்றன. நீங்களும் காலப்போக்கின் உயரிய பலனை வீணாக்காது பகுத்தறிவை மேற்போட்டுக்கொண்டு ஜனசமுதாய நன்மையை தேடி பாடு பட முன்வாருங்கள். உங்களுடைய முயற்சிக்கு எல்லாம் வெற்றியே உண்டு. வெறும் கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தவர்களும்கூட தங்களுடைய போக்கை மாற்றிக்கொண்டு முயற்சி மெய்வருத்தகூலி தரும் என்றுசொல்லி வருகிறார்கள். ஆகவே தோழர்களே! நீங்கள் தன் நம்பிக்கைகொண்டுமக்களின் விடுதலைக்கு சரியான வழிகளில் பகுத்தறிவை அடிப்படை யாகக்கொண்டு போராட வாருங்கள்.
(தந்தை பெரியார் ஆற்றிய உரையை ‘குடியரசு’ இதழிலிருந்து எடுத்து அனுப்பியிருப்பது ச.வீரமணி)
தந்தை பெரியார் – ச. வீரமணி
தந்தை பெரியார் – மாபெரும் புரட்சியாளர் இந்தியாவில் மக்கள் அனுபவித்து வந்த துன்பங்களிலிருந்து மக்களைக் காப்பாற்றப் பல தலைவர்கள் தோன்றினார்கள். அவர்களில் தந்தை பெரியார் என்று அன்புடன் அழைக்கப்படும் பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் கொள்கைகள் மிக உயர்ந்தவை, உண்மையானவை, சுயநலமற்றவை, ஆண் – பெண் சமத்துவம் குறித்து அந்தக் காலத்திலேயே குரல் கொடுத்தவர். ஆதலினால்தான் 1938 நவம்பர் 13 அன்று சென்னையில் கூடிய தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் அவரைப் பெரியார் என்றழைத்துத் தீர்மானம் நிறைவேற்றினார்கள். அப்போது முதல் ஈ.வெ.ராமசாமி அவர்கள் தந்தை பெரியார் என அழைக்கப்படலானார்.
தந்தை பெரியார், உண்மையையே அடிப்படையாகக் கொண்டு சிந்தித்தார். உண்மைக்குப் புறம்பானவற்றை வெறுத்தார். உள்ளும் புறமும் ஒன்றாக வாழ்ந்தார். தன்னையே முன்நிறுத்திப் போராடினார். வெற்றி பெற்றார். அவர் போராட்டங்களால் கல்வி அறிவில்லாத மக்கள் கல்விக் கண் பெற்றார்கள். அரசு வேலைவாய்ப்பு அறியாத மக்கள், வேலைவாய்ப்பைப் பெற்றார்கள். அரசியல் அதிகாரம் பெறாதிருந்தோர் அரசியல் அதிகாரம் பெற்றார்கள். தம் கொள்கை தாம் உயிர் வாழ்ந்த காலத்திலேயே வெற்றி பெற்றதைக் கண்டு அகமகிழ்ந்தார்.
பெரியார் சொன்ன கொள்கைகள் என்ன? உலக மக்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். உலக சொத்துக்கள், இன்ப துன்பங்கள் எல்லாம் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த எல்லா மக்களுக்கும் பொதுவானது. ஒவ்வொருவரும் அவர்களது சக்திக்கு ஏற்றபடி உழைக்க வேண்டும். உள்ளதை ஒவ்வொருவரும் அவர்களுடைய தேவைக்குத் தகுந்தபடி அனுபவிக்கலாம். இந்தக் கொள்கைகள் நிறைவேறுவதற்காகவே தந்தை பெரியார் வாழ்நாளெல்லாம் உழைத்தார். அவரது கொள்கைகள் தனிமனித வாழ்வுக்கு உயிர்மூச்சு போன்றது. குடும்ப வாழ்வுக்கு வழிகாட்டும் அடிப்படையான நெறிமுறைகள் ஆகும். சமுதாய வாழ்வுக்கு, ஒரு நாட்டின் வாழ்வுக்கு, மனிதகுலம் முழுமைக்கும் பயன் செய்பவை ஆகும்.
`மனிதனது மதிக்க முடியாத உடைமைகளில் சிறந்தது அவனது வாழ்வாகும். அவன் ஒரு தடவைதான் வாழ முடியும். காலமெல்லாம் குறிக்கோளில்லாமல் பாழாக்கிவிட்டேனென்ற வருத்தம் வதைப்பதற்கு வாய்ப்பு அளிக்காத வகையில் அவன் சீராக வாழ வேண்டும். அற்பனாக வாழ்ந்து இழிவு தேடினேன் என்ற அவமானம் உள்ளத்தை எரிப்பதற்கு இடம் இல்லாத வகையில் அவன் நேராக வாழ வேண்டும். உலகத்தின் தலைசிறந்த லட்சியத்துக்காக, மனிதகுலத்தின் விடுதலைப் போராட்டம் என்ற பொன்னான மார்க்கத்துக்காக, நான் என் வாழ்வு முழுவதையும், சக்தி அனைத்தையும் அர்ப்பணித்தேன் என்று இறக்கும்பொழுது கூறும் உரிமை பெறும் வகையில் அவன் வாழ வேண்டும். திடீர் நோயோ, சோக விபத்தோ வாழ்வுக்கு வெடி வைக்கக்கூடுமாதலால், மனிதன் தன் வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்“ என்று நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கிய் தன்னுடைய வீரம் விளைந்தது என்னும் நாவலில் குறிப்பிட்டார். இதையே திருவள்ளுவர் தன்னுடைய திருக்குறளில் ‘‘நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ்வுலகு’’ என்றார். ஆம், பிறந்த ஒரு மனிதன் எந்த நிமிடம் இறப்பான் என்று தெரியாது. எனவே அவன் தன் வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே அதன் பொருள். அந்த வகையில் தன் வாழ்நாள் முழுதும் மனிதகுல மேம்பாட்டிற்காக வாழ்ந்திட்ட பெரியோரில் தந்தை பெரியார் குறிப்பிடத்தக்கவராவார்.
1879 செப்டம்பர் 17 அன்று தமிழகத்தில் ஈரோடு என்னும் நகரில் பிறந்த, தந்தை பெரியார், 1973 டிசம்பர் 24 அன்று சென்னையில் உயிர்நீத்தார். அவர் வாழ்ந்த காலம் 94 ஆண்டுகள் 3 மாதங்கள் 7 நாட்கள். அதாவது 34 ஆயிரத்து 433 நாட்கள். இப்போதிருப்பது போல வசதியான போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலேயே சுமார் 8600 நாட்கள் சுற்றுப்பயணத்திலேயே செலவு செய்தார். சுமார் 13 லட்சத்து 12 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்தார். அந்தப் பயணத்தில் அவர் பங்கு கொண்ட நிகழ்ச்சிகள் பத்தாயிரத்து எழுநூறு ஆகும். அவற்றில் அவர் கருத்துரைகள் ஆற்றிய நேரம் சுமார் 21 ஆயிரத்து 400 மணி நேரமாகும். இந்தச் சொற்பொழிவை ஒலிநாடாவில் பதிவு செய்து, அது ஒலிபரப்பப்பட்டால் இரண்டு ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் இரவு பகலாகத் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும். இவருக்கு முன்னர் வேறெந்தத் தத்துவ ஞானியும் இவ்வளவு நீண்ட நாட்கள் மக்களிடையே சொற்பொழிவு ஆற்றியதில்லை எனலாம். அதனால்தான் யுனெஸ்கோ என்னும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் கீழ் உள்ள கல்வி அறிவியல் மற்றும் பண்பாட்டு மன்றம், ‘‘பெரியார் புதிய உலகத்தின் தீர்க்கதரிசி, தென்கிழக்கு ஆசியக் கண்டத்தின் சாக்ரடீஸ், சமுதாய சீர்திருத்த இயக்கத்தின் தந்தை! அறியாமை, மூட நம்பிக்கை, அர்த்தமற்ற வழக்கங்கள், ஆதாரமற்ற நடப்புகள் ஆகியவற்றின் கடும் எதிரி’ என்று 1970 ஜூன் 27 அன்று பட்டயம் வழங்கியது. இதுபோல் வேறெவருக்கும் பட்டயம் வழங்கப்பட்டதில்லை.
‘‘மனிதன் எவனும் தானாகவே பிறக்கவில்லை, ஆகவே அவன் தனக்காகவும் பிறக்கவில்லை. மனித வாழ்க்கை என்பது மக்கள் சமுதாயத்துக்குத் தொண்டு செய்வதேயாகும். தொண்டு செய்யாத மனித வாழ்வு என்பது மிருக வாழ்க்கைக்குச் சமமானதேயாகும்’’ என்று அறுதியிட்டு உறுதிபடக் கூறினார்.
தமிழ் மக்களிடையே சுயமரியாதை உணர்வுகளை விதைக்க வேண்டும், சுயமரியாதை உணர்வுகளை வளர்க்க வேண்டும் என்ற கருத்தில் ஈ.வெ.ரா. ‘குடிஅரசு’ என்னும் வாரப் பத்திரிகையைத் தொடங்கினார். இவரது அச்சகத்து, ‘உண்மை விளக்கம் அச்சகம்’ எனப் பெயரிட்டார். ‘‘மக்களுக்குள் சுயமரியாதையும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளர வேண்டும். உயர்வு – தாழ்வு என்னும் உணர்ச்சியே, நமது நாட்டில் வளர்ந்து வரும் சாதிச்சண்டை என்னும் நெருப்புக்கு நெய்யாக இருப்பதால் இவ்வுணர்ச்சி ஒழிந்து அனைத்துயிர்களும் ஒன்றென்று எண்ணும் உண்மை அறிவு மக்களிடம் வளர வேண்டும்’’ என்ற நோக்கங்களை குடிஅரசு அடிப்படையாகக் கொண்டிருந்தது. பெரியார் துவக்கி வைத்த சுயமரியாதை இயக்கம் சொல்வது என்ன? சமூக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு – தாழ்வும் இருக்கக் கூடாது. மனித சமூகம் பொருளாதாரத் தன்மையில் ஏழை – பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல் எல்லாப் பொருளும் பூமியும் எல்லாருக்கும் சரிசமமாக இருத்தல் வேண்டும்.
மக்கள் சமூகத்தில் ஆணுக்கும் – பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல் சகல துறைகளிலும் சமத்துவம் இருக்க வேண்டும். மனித சமூகத்தில் சாதி – மதம் – தேசம் – வருணம் – கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமூக ஒற்றுமையே நிலவ வேண்டும். உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் உயர்வு தாழ்வு இல்லாமல் சமூகத்தின் தேவைகளுக்கு, சகல மனிதர்களும் பாடுபட்டு அவற்றின் பயனைச் சரிசமமாக அனுபவிக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் எவற்றுக்கும் எவ்விதத்துக்கும் அடிமையாகாமல் அவரவர் அறிவு, ஆராய்ச்சி, காட்சி, உணர்ச்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்க சர்வ சுதந்திரம் இருக்க வேண்டும். பெரியாரின் இந்தக் கொள்கைகளே அவர் நடத்திய ஒவ்வொரு போராட்டத்துக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் அடிப்படையாகும்.
சுயமரியாதை இயக்கத்திற்காக தந்தை பெரியார், ‘ரிவோல்ட்’ என்னும் ஆங்கில இதழையும் நடத்தி வந்தார். ரிவோல்ட் என்ற ஆங்கில வார்த்தைக்குக் கட்டுப்பாட்டைத் தகர்த்தல் என்று பொருள். மனித இயற்கைக்கும் அறிவுக்கும் முரணான கட்டுப்பாட்டைத் தகர்ப்பதும் உலகமும் அதன் இன்பமும் எல்லாருக்கும் பொது என்பதும் அதன் நோக்கங்களாக இருந்தன. மக்கள் யாவரும் சமம் என்ற கொள்கையை மனச்சாட்சிப்படி சாத்தியமான வழிகளில் பிரச்சாரம் செய்வதே இப்பத்திரிகையின் நோக்கம் என்று பெரியார் பிரகடனம் செய்தார்.குடியரசு இதழை ஆங்கிலேயர் ஆட்சி 1933ஆம் ஆண்டில் தடை செய்தது. அப்போது அதற்கு மாற்றாக நவம்பர் 20ஆம் நாளன்று ‘புரட்சி’ என்னும் வார ஏட்டினைத் தொடங்கினார். அதன் முதல் இதழில் பெரியார், ‘‘குடிஅரசை ஒழிக்கச் செய்த முயற்சியில் புரட்சி தோன்ற வேண்டியதாயிற்று. உண்மையிலேயே பாமர மக்களின் அதாவது பெரும்பான்மையான மக்களின் ஆட்சியாகிய குடிஅரசுக்கு உலகில் இடமில்லையானால் கண்டிப்பாய் புரட்சி தோன்றியேதான் ஆகவேண்டும்.
அந்த ஐதீகப்படியே புரட்சி தோன்றியிருப்பதால், புரட்சியில் பற்றுள்ள மக்கள் யாவரும் புரட்சியை வரவேற்பார்கள். பாடுபட்டு ஊரானுக்குப் போட்டுவிட்டுப் பட்டினியாகவும், சமூக வாழ்வில் தாழ்மையாகவும் வாழும் மக்களின் ஆதரவையே ‘புரட்சி’ எதிர்பார்த்து நிற்கிறது. வெள்ளை முதலாளிகளை ஒழித்துக் கருப்பு முதலாளிகளைக் காக்கும் வேலைக்காக இன்று ‘புரட்சி’ வெளிவரவில்லை. அல்லது வெள்ளை ஆட்சியை ஒழித்துக் கருப்பு ஆட்சியை ஏற்படுத்த ‘புரட்சி’ தோன்றவில்லை. அதுபோலவே இந்து மதத்தை ஒழித்து, இஸ்லாம், கிறிஸ்து மதத்தைப் பரப்ப ‘புரட்சி’ தோன்றவில்லை. ‘சகல முதலாளி வர்க்கமும், சகல சமயங்களும் அடியோடு அழிந்து மக்கள் யாவரும் சுயமரியாதையுடன் ஆண் – பெண் அடங்கலும் சர்வ சமத்துவமாய் வாழச் செய்ய வேண்டும் என்பதற்காகப் ‘புரட்சி’ தோன்றியிருக்கிறது எனக் குறிப்பிட்டிருந்தார்.
பின்னர் ‘புரட்சி’ ஏடும் நிறுத்தப்பட்டு, ‘பகுத்தறிவு’ வார ஏட்டைத் துவக்கினார். இதன் முதல் இதழில், ‘‘மனித சமூகத்தால் மவுடீகத்தால் ஏற்பட்ட துரபிமானங்களை கடவுள், சாதி, மதம், தேசம், நான், எனது என்பன போன்ற அபிமானங்கள் அறவே ஒழித்து, மனித சமூக ஜீவாபிமானத்தையும், ஒற்றுமையையும், பிரதானமாய்க் கருதி உழைத்து வரும் என்றும், ‘பகுத்தறிவு’ மனித ஜீவாபிமானத்திற்கு மக்களை நடத்திச் செல்லுமேயொழிய எக்காரணம் கொண்டும், மக்கள் பின் நடந்து செல்லும்படியான அடிமை வாழ்வில் உயிர் வாழாது’’ என்றும் பெரியார் குறிப்பிட்டிருந்தார். பின்னர், 1935ஆம் ஆண்டு ஜூன் முதல்நாள் ‘விடுதலை’ தொடங்கப்பட்டு இன்றளவும் நடந்து வருகிறது. இவ்விதழின் முதல் இதழில் பெரியார், ‘இப்பத்திரிகை நீடுழி வாழ்ந்து பாமர மக்களுக்கும், பண்டிதர்களுக்கும் பயன்பட்டு உலகமக்களுக்கு உண்மை விடுதலையைக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
தன் வாழ்நாள் முழுதும் மக்கள் மேம்பாட்டிற்காகப் பல்வேறு இதழ்களையும், இயக்கங்களையும் கண்டவர் தந்தை பெரியார். அவர் தன்னைப்பற்றிக் கூறுகையில், ‘‘நான் ஒரு பூரணப் பகுத்தறிவுவாதி. எனக்கு மனிதப்பற்றைத் தவிர வேறு நாட்டுப்பற்றோ, மொழிப் பற்றோ, இனப்பற்றோ கிடையாது. ஓர் உண்மையான பகுத்தறிவு வாதிக்கு மனிதப் பற்றைத் தவிர வேறெந்தப் பற்றும் இருக்கவும் கூடாது’’ என்றார். இவ்வாறு ஓர் உன்னத மனிதாபிமானியாக, ஓர் உன்னத உலகக் குடிமகனாக மாபெரும் புரட்சியாளராக வாழ்ந்திட்ட தந்தை பெரியார் அவர்களை தமிழ்கூறும் நல்லுலகம் மட்டும் அல்ல, உலகமே என்றென்றும் நினைவு கூரும்.
அக்டோபர் புரட்சியும் தந்தை பெரியாரும்: ருஷியாவின் வெற்றி
தந்தை பெரியார் ஐந்து வருட திட்டத்தின் பலன் ருஷியாவில் 1917ல் நிகழ்ந்த புரட்சிக்குப் பின்னர் அந்நாடு உலக மக்களின் கவனத்தைப் பெரிதும் தன்பால் இழுத்துக்கொண்டது. சமதர்ம நோக்கமுடைய ஆன்றோர்களும், பொருளாதார நெருக்கடியால் கஷ்டப் படும் ஏழை மக்களும் ரஷ்ய சமதர்மத் திட்டத்தின் நுண்பொருளை நன்குணர்ந்து தத்தம் நாடுகளிலும் அத்திட்டங்களைப் புகுத்தி மிகுந்த தீவிரமாய் ஒரு பக்கம் பிரச்சாரஞ் செய்துவர, ஊரார் உழைப்பில் உடல் நோவாதுண்டு வாழும் சோம்பேறிச் செல்வவான்களும் அவர்களின் தரகர்களான புரோகிதர்களும், அவர் தம் பத்திரிகைகளும் முதலாளித்துவ அரசாங்கமும் சமதர்ம உணர்ச்சியை ஒழிக்கப் பற்பல சூழ்ச்சி முறைகளையும், மிருகத்தனமான பயங்கர ஆட்சி முறையையும் கையாண்டு வருவதும் ருஷியாவைப்பற்றிப் பொய்யும் புழுகுமான வியாசங்களை உலமெங்கும் பரப்பி அந்த ஆட்சி முறையை பலவாறு குற்றஞ் சொல்லி அங்கு பட்டினியும், பஞ்சமும் நிறைந் திருக்கின்றனவென்று கூறியும் வேறு பல தீய முறைகளைக் கையாடி வரு கின்றனர். ருஷியாவின் சமதர்மக் கொள்கை ஒருபொழுதும் நடைமுறையில் சாத்தியமாகாது என்று புகன்ற ராஜ தந்திரிகளும், ருஷியாவில் தனியுடைமை யொழிந்து பொதுவுடைமை மிளிர்வதால் அங்கு மக்களின் முயற்சியும், அறிவும் குன்றி உற்பத்திகள் குறைந்து போய்விடும் என்று தர்க்க ரீதியாய் மொழிந்த பொருள் நூலாசிரியர்களும் தங்கூற்றுத் தவரொன்று தானே என்று இன்று ஒத்துக்கொள்ளும்படி செய்து விட்டதோடு ஐரோப்பிய வல்லரசுகளெல்லாம் ரஷியாவை அலட்சியம் செய்து வாழ முடியாத நிர்பந்தத்திற்குள் வந்து விட்டதென்பதை எவரும் மறுக்க முடியாது.
ரஷிய சமதர்மத் திட்டமோ இன்னும் முற்றுப் பெறவில்லை. உலக மெங்கும் சமதர்ம ஆட்சியாய் விளங்குங் காலத்திலே சமதர்ம ஆட்சியின் திட்டம் வெற்றி பெறுமென்று கூறலாம். இப்பொழுது ரஷியா உலகத்திலுள்ள முதலாளித்துவத்தோடு போரிட்டுக் கொண்டிருக்கிறதென்றே கூறவேண்டும். அப்போரில் தமது எதிரிகளை நிர்த்தாக்ஷண்யமாகத் தண்டித்து வருவதை நியாய புத்தியுள்ள எவரும் தவறென்று கூறத் துணியார். ரஷியாவில் மனிதனுக்கு சுதந்தரம் அதிகமில்லையென்று கூறப்படுகிறது. தனிமனிதனுடைய சுதந்திரத்திற்குப் போதிய இடமிருப்பதாகக் கூறப்படும் நாட்டிலுள்ள மக்களைவிட ரஷ்ய மக்களுக்கு அந்நாட்டில் அதிக சுதந்திரமும் உரிமையு மிருப்பதோடு ஜார் சக்கரவர்த்தியின் கொடிய ஆட்சியில் உண்ண உணவும், உடுக்க உடையும், ஒண்ட நிழலும், படுக்கப் பாயுமின்றி கோடானுகோடி மக்கள் தவித்து ஆயிரக்கணக்காய்-இல்லை-லட்சக்கணக்காய் பட்டினியாலும் நோயாலும் மடிந்த ரஷியா நாட்டிலே, பட்டினியென்றால் இன்ன தென்பதை எவருமறியாதபடி, நோய் என்றால் இன்னதென்பதை உணராத படியும் நாளைக்கு உணவிற்கு என்செய்வது, வியாதியால் இரண்டு நாள் படுத்துக்கொண்டால் நமது நிலையென்ன? நமது குடும்பத்தின் கதியென்ன? என்றகவலையே அறியாத மக்களாய் வாழும்படி செய்து நாடெங்கும் சாந்தியும் சமாதானமும் நிறைந்திருக்கும்படி இச் சுருங்கிய காலத்திற்குள் சோவியத் ஆட்சி செய்து உலகத்திலுள்ள எல்லா முதலாளித்துவ அரசாங்கங்களும் திடுக்கிடச் செய்து விட்டதென்பதை நன்கு அறியலாம்.
பொதுவுடமைத் தத்துவம் உலகிலேயே உற்பத்தி செய்யும் செல்வத்திலே உற்பத்தி செய்துவரும் தொழிலாளிக்கு சரிசமமான பங்கு கிடைத்திருந்தால் உலகிலே இன்று காணக்கிடக்கும் பொருளாதார நெருக்கடியும் வேலையில்லாத் திண்டாட்டமும் உண்டாயிராதென்பதே பொது உடமை இயக்கத்தினரின் எண்ணம். ரஷிய பொது உடமை முறை உலகிலுள்ள ஏனைய நாடுகளும் பின்பற்றி தொழில் உற்பத்தியை அதிகப்படுத்தினால் தொழிலாளியினுடைய உண்மையான நிலை வெளிப்பட்டுவிடும். உழைப்பதற்கென்று ஒரு வகுப்பும் அதன் பலனை அனுபவிப்பவர் என்றே மற்றொரு வகுப்புமின்றி எல்லோரும் உழைக்க வேண்டுமென்று எல்லா அரசாட்சியாரும் சட்டம் செய்து விட்டால் ஒவ்வொரு மனிதனும் ஒரு நாளைக்கு 1 மணி நேரம் உழைத்து விட்டு உலகிலே தன் உணவிற்கு வேண்டியதைச் சம்பாதித்துக் கொண்டு இன்பமாய் அமைதியோடு வாழமுடியும்.
பொதுவுடமை என்றால் என்ன? “எல்லா உயிர்ப் பிராணிகளுக்கும் பொதுவாக வுள்ள இந்த உணவுப் பிரச்சினை தீர்ந்து விட்டால் மக்கள் தங்களிடமுள்ள மனிதத் தன்மையை விருத்தி செய்து கொள்ளமுடியும். பொதுவுடமையின் நோக்கமும் இதுவே யாகும். வருமானத்தை உழைப்பாளிகள் சமமாகப் பங்கிட்டுக் கொள்வ தென்பதே இதன் பொருள். வயிற்றுப் பசிக்கு உணவுதேடுங் காலமும் தூங்கும் நேரமும் தவிர மீதமுள்ள நேரம் தன் வயிற்றுக்கும் பிறருக்கும் கட்டுப்படாது சுதந்திரமாய் வாழுங்காலம். அது மக்களெல்லோருக்கும் சம மாக இருக்க வேண்டுமென்பதே பொதுவுடமையின் உண்மையான தத்துவம்” என்று ஓரிடத்தில் பேராசிரியர் பெர்னாட்ஷா பெரிதும் வியாக்கியானம் செய் துள்ளார். இந்நிலை அடைய உலகிலுள்ள எல்லா தேசத்தினரும் பொதுவுடமைக் கொள்கையை ஒப்புக்கொண்டு நடந்தால்தான் முடியும். இந்தக் கருத்துடன் தான் இன்றைய ரஷிய ஆட்சி நடந்து வருகிறது. இந் நன்னோக்கம் வெற்றி பெற ஒவ்வொரு நாட்டிலும் எதேச்சாதிகாரமுள்ள தொழிலாளியின் பிரதிநிதிகளிருக்க வேண்டுமென்பதே சோவியத் நிபுணர்களின் கருத்தாதலின் ரஷியாவில் அவர்களுக்குத் தகுந்த தற்போதைய அரசியல் முறையை நிறுவியுள்ளார்கள். முதலாளிகளென்போர் யார்? ஐந்து வருடத்தில் தொழிலாளிகளின் உடல் நலம், அறிவு விருத்தி முதலான நலனைப் பெருக்க பெரிதும் திட்டங்கள் ஏற்படுத்தினர். அங்குள்ள உற்பத்திப் பொருள்களை எவ்விதத் தடங்கலுமின்றி சர்க்காரே பிற நாடுகளில் கொண்டு விற்பனை செய்தனர். சில தொழிலில் லாபமும், சில தொழிலில் நஷ்டமும் ஏற்பட்டாலும் சர்க்காரே முதலாளியாக இருப்பதால் நஷ்டத்தை லாபம் வரக்கூடிய பொருளிலிருந்து ஈடுசெய்து கொள்ள முடிகிறது. உற்பத்தி செலவுகளை யெல்லாம் கழித்து 100க்கு 10 அல்லது 20 பாகம் தொழிலாளிகளின் அபிவிருத்திக்காகச் செலவழித்து வருகிறார்கள்.
விவசாயம் ரஷியாவில் எல்லா நிலையங்களையும் சர்க்கார் ஆதிக்கத்தில் வைத்துக்கொண்டு மக்களை ஓர் இயந்திரம் போல் பாவித்து வருகிறார்கள் என்பது தவறு. விவசாயத்திற்கு லாயக்கான பூமிகளில் சில பாகம் சர்க்கார் பண்ணைகள்; சில பாகம் பல குடியானவர்கள் கூட்டுறவாகப் பயிரிடும் பண்ணைகள்; மற்றொரு பாகம் தனி விவசாயிகள் தனியாகப் பயிரிடும் நிலம் எனப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ரஷியா, விவசாயத்தைப் போல் கைத்தொழிலையும் அபிவிருத்தி செய்ய முனைந்து வேலைசெய்து விருத்தி செய்துவருகிறது. அதன் கைத் தொழில் அபிவிருத்தியை கீழ்கண்ட புள்ளிவிபரங்களால் நன்கறியலாம். இந்திய நாடு பிற நாடுகள் இத்தகைய நோக்கங்களை கையாண்டு திட்டத்தைக் கண்டு வெற்றியடைந்து கொண்டு போகும்பொழுது இந்தியா வாளா விருக்கு மேயானால் சீக்கிரத்தில் பொருளாதார நெருக்கடி யென்னும் சூழலில் பட்டு அதோ கதியாய் விடுமென்பது நிட்சயம். சில மாதங்களுக்கு முன் ரஷியா தோழர் ஒருவர் கவி ரவிந்தரநாத் தாகூருக்கு நிருபம் ஒன்று எழுதியிருந்தாராம். அதில் சோவியத் ஆட்சியில் தொழில் முன்னேற்றமடையக் காரணம் என்னவென்று கருதுகிறீர்கள்? உங்கள் தேசம் அத்தகைய முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாயிருப்பவை எவைகள்? என்று வினாவியிருந்தார். அதற்கு கவி தாகூர் “தங்கள் நாட்டில் செல்வப் பெருக்கை தனி மனிதர்களிடமிருந்து எல்லாப் பொது மக்களுமடங்கிய சமுதாயத்திற்கு பயன்படுமாறு செய்திருப்பதுதான் உங்கள் ரஷிய நாட்டின் வெற்றிக்கு காரணம் சமுதாய விசயங்களில் முயர்ச்சியற்று எல்லாம் இறைவன் செயலென்றிருப்பதே எங்கள் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாய் இருக்கிறது” என்று பதில் எழுதியிருந்தார்.
(1933 ஜூலை 23 குடி அரசு இதழில் வெளியான கட்டுரையிலிருந்து சில பகுதிகள்)
தொகுப்பு: ச.வீரமணி
பெரியார் : ஓர் அறிதல் முறை – சு. பூபாலன்
’பெரியார்’ என்ற ஒரு மனிதர் நம்மிடமிருந்து பௌதீகமாய் மறைந்துபோய் நாற்பத்தியாறு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில்; ”தந்தை பெரியார்” என்ற இந்தச் சொல் அளவிற்கு இந்த நூற்றாண்டின் தமிழ்நில அரசியல்தளத்தில் அதிகம் வசையிடப்பட்ட, கொண்டாடப்பட்ட ஒன்று இருக்கமுடியாது. ‘பெரியார்’ என்று அரசியல் மிகைப்படுத்தும் ஈ.வெ.ராமசாமி-யின் பேச்சுக்களும் எழுத்துக்களும் வெற்றுக்கூப்பாடுகள் எந்தவொரு சிந்தனையுமற்ற அற்பங்கள். பாா்ப்பனர், பார்ப்பனியம் என குறிப்பிட்டு, வெறுப்பரசியலை உருவாக்கி வெறும் பரப்புரையாகவே வீணாகிப்போனது அவரது வாழ்வு என்ற ஒரு தரப்பின் மேற்புரிதலில், வெறும் பரப்புரையாக அரசியல் தளத்தில் மட்டுமே, இன்று விவாதிக்கப்படும் பெரியாரை, அவரது சொற்களை; சிந்தனை தளத்திற்குள் உள்வாங்கி, இன்றைய தலைமுறைகள் எப்படி உரையாடத்துவங்குவது.
தன்மையில்; பெரியாரின் எழுத்துக்கள், சொற்கள் எதுவும் நுண் வாசிப்புத் தேடல் கொண்ட மனிதர்களுக்கானதல்ல. அது ஒரு பெருந்திரளை வாசிக்கச்சொல்லி, அதன் வழியாக சிந்தனைத்தளம் தாண்டிய சமூகச்செயல்பாடாக மாற வேண்டி பயன்விளைவு நோக்கியது. அந்தளவில், பெரியாரின் எழுத்துக்களும் சொற்களும் அவற்றின் மொழிபும், உணர்ச்சித்தளத்தில் செயல்படுவை. ஆங்கில அரசுடனான அத்தனை பொறுமையான உரையாடல்களிலும் இந்திய சமூகம் ஏமாற்றப்படுவதாய் உணர்ந்த காந்தி பேசிய ”வெள்ளையனே வெளியேறு; செய் அல்லது செத்துமடி” என்பதன்ன உணர்ச்சித்தளமது. அங்கு சிந்தனைத்தேடல் கொண்ட எவர்க்கும் தேடியடைய ஒன்றுமில்லை. எனில், எது பெரியாரை நோக்கி நம்மை செலுத்துகிறது.
மானுட வரலாற்றில் முதல்முறையாக, ஒரு மனிதன் தன்னளவில், தன் சமூகவெளிக்குள் தன் சுயத்தை உணர்ந்து கொள்ளாமல் இழிந்து கிடக்கும் நிலைமீட்சிக்கு ”சுயமரியாதை இயக்கம்” (Self Respect Movement) என ஒரு சமூக இயக்கத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற பெரியாரின் சிந்தனையே, இந்திய நிலப்பரப்பிற்குள் அதுவரை, தத்துவார்த்த தளத்தில் மட்டும் பேசப்பட்டு வந்த தனிமனித ”சுயம்” (Self) என்ற ஓர் உணர்நிலையை; பெருந்திரள் மக்கள் வெளிக்குள் உரையாடும் நிலைக்கு கொண்டுவந்தது.
இங்கு மனிதன் மட்டுமல்ல, எந்தவொரு உயிரும் அதனளவில் தன் சுயத்தை உணராமல் இருக்கையிலேயே சுரண்டப்படுகிறது. தம் சுயம் வெட்டப்படுகையில் ஒவ்வொரு தனிமனிதனும், விலங்கு நிலைகொண்டு, அடிமை ஊழியத்திற்கு தள்ளப்பட்டு சுரண்டப்படுவான். குட்டியாய் கிடக்கையில் காலில் அழுத்திய சங்கிலியில் தன் சிந்தனை வெட்டப்பட்ட யானை ஆயுள் முழுக்க தன் பலமெனும் சுயத்தை மறந்து அடிமையாய்க் கிடக்கும் நிலை.
இப்படியாக சகமனிதனை தன்பிறப்பின் அடிப்படையிலேயே சுயமிழக்கச்செய்வது சனாதன வர்ணாசிரமக் கட்டமைப்பு. இந்திய நிலப்பரப்பில் ஆன்மீகமாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கும் ’வர்ணாசிரமம்’; உண்மையில், ஓர் அரசியலதிகார கட்டமைப்புக் கோட்பாடு (Authoritarian Political Ideology). எந்தவொரு அதிகாரக்கட்டமைப்பு கோட்பாடும் தன்னளவில், ஒரு தத்துவார்த்த பின்புலத்தை உருவாக்கிக்கொள்ளாமல் நிற்கமுடியாது. ஹிட்லரின் நாசிசம் நின்ற ஆரிய மேட்டிமை பெருமிதம் போன்று, அனைத்து அதிகாரக்கட்டமைப்புக் கோட்பாடும் ஒரு தத்துவார்தத்தைத் தன் இருப்பிற்குக் கட்டமைத்துக்கொள்ளும்.
இந்தப்புரிதலில், வர்ணப்படிநிலை கட்டமைப்பில் தாழ்நிலையில், ஒரு மனிதனை தன்னிலையற்று சுயத்தை அழிக்கச்செய்யும் ஒரு தத்துவார்த்த புள்ளியிலும், அதே புள்ளியில் இந்த அதிகாரக்கட்டமைப்பின் உச்சத்தில் இருக்கும் பார்ப்பனர்கள் ஒரு மானுட உயிரின் இயல்சுயம் (Normal Self) மீறிய ஒரு பெருமிதச்சுயத்தை (Superior Self) கட்டமைத்துக் கொண்டிருப்பதிலுமான, இந்த இரு முரண் சுயங்களின் (Contradictive Selves) விளைவிலேயே, இங்கு வர்ணாசிரம் என்ற சமூகச் சுரண்டல் கட்டமைப்பு தாக்குப்பிடிக்கிறது என்பதை உணர்ந்ததில் பெரியார் இந்திய நிலப்பரப்பின் தனித்த சிந்தனையாளராகிறார்.
“ஒரு தீண்டத்தகாதவனாக இருந்து கொண்டு இந்த நாட்டின் அடையமுடியா அனைத்து உயரங்களையும் அடைந்தபின்னும் இந்திய நிலப்பரப்பின் சாதியக்கட்டமைப்பு, என்னை நடுக்கம் கொள்ளச்செய்கிறது. ஏனெனில் உலகம் முழுவதும் இருக்கும் அனைத்து சுரண்டல் சமூக அமைப்புக்களும் ஒரு பௌதீகத்தன்மை கொண்டவை. இந்தியாவின் வர்ணாசிரம சுரண்டல் கட்டமைப்பு எந்த பௌதீக நிலையுமற்ற அரூப மனநிலையாக இருப்பது, அதை நெருங்கி உடைக்கமுடியா பயங்கரத்தன்மை கொண்டதாக இருக்கிறது” என்று தன் இறுதி நாட்களில் அம்பேத்கர் எழுதுகிறார்.
ஆம், வர்ணாசிரம சுரண்டல் கட்டமைப்பின் அந்த அரூப வேர் மனநிலைகளில் ஒன்று, தன் சுயத்தை உணரவே முடியாமல் அமிழ்ந்து கிடக்கும் தாழ்வுணர்ச்சி மனநிலை (Inferior Self) மற்றது தன்னை அதியுன்னதமாக உணர்ந்து நிற்கும் மீயுணர்ச்சி மனநிலை (Imperious Self). இந்த மனநிலைகளை புரிந்துகொள்ளமுடியா அரூபங்கள் என அம்பேத்கர் அஞ்சுகிறார். இல்லை; அவை நெருங்கி உணர்ந்து அடித்து உடைக்கப்படக்கூடிய பௌதீகம் கொண்டவை என கண்டுகொண்டுள்ளார் பெரியார். வர்ணாசிரம சுரண்டலின் வேர்; இந்த இருவேறு துருவத் தன்னிலைகளின் (Contradictive Selves) மனக்கட்டமைப்பு என்பதை பெரியார் சிந்தித்ததாலே அந்த இரண்டையும் உடைக்க வேண்டிய செயற்பாட்டில் இறங்குகிறார். அதற்காக பொதுச்சமூகத்தை திரட்டுகிறார்.
ஒரு பார்ப்பனிய மனம், எதன் வழியாக இந்த மீயுணர்வு சுயத்தை அடைகிறது என்பதை பெரியார் ஆராய்கிறார். அது அவர்களின் வர்ணம் (நிறம்), பொதுவில் அறிந்துகொள்ள முடியாமல் அவர்களுக்குள்ளாகவே புழங்க வைக்கப்பட்டு, பொதுச் சமூக பயன்பாட்டிற்கு சென்று விடமால் பொத்தி வைக்கப்பட்டிருந்த சமஸ்கிருத மொழி, வேத உச்சாடங்கள், ஸ்மிருதிகள், புராணகற்பனைகள், அவர்களது பொதுச்சமூகத்திலிருந்து தீண்டாமல் உள்ளடைவு செய்து கொள்ளும் தனித்த வாழ்வியல் செயற்பாடுகள் இதன் வழியாகவே ஒரு பார்ப்பனிய மனம், தன்மீயுணர்வு சுயத்தை அடைந்து தக்கவைத்துக் கொள்கிறது.
மாறாக, பார்ப்பனரல்லா பண்பாட்டு மனங்கள் மேற்சொன்ன அதே கூறுகளை கொண்டு, தங்கள் இயல்வாழ்நிலையின் அன்றாடங்களை, கலைகளை, படைப்புகளை, ஆன்மீக நம்பிக்கைகளை தாழ்ந்தவையாக்கிக்கொள்ளும் உணர்நிலை எய்தி, வீழ்ந்துபட்டு தங்கள் சுயத்தைப் பறிகொடுக்கின்றன.
இந்த மீயூணர்வு (Imperious), தாழ்நிலை (Inferior) என்ற முரண் சுயங்களை (Contradictive Selves), அவற்றை உணர்ந்து கொண்டுள்ள அந்தந்தத் தரப்பின் திரள் மனங்கள்(Collective Conscious) உணராதவரை, இந்திய நிலப்பரப்பின் இந்த வர்ணாசிரம சுரண்டல் கட்டமைப்பை தொடக்கூட முடியாது என பெரியார் கண்டறிந்தாலேயே, அந்த இரு முரண்சுயங்களையும் உடைத்தெரியும் சொற்களை பேசினார், எழுதினார்.
மானுடச் சமூகப் பரிணாமத்தில், ’அடிமைச்சமூகம்’ (Slavery) என்ற பண்புக்கூறு உலகம் முழுவதும் தோன்றிய ஒரு ’உழைப்புச்சுரண்டல்’ ஏற்பாடு. அது ஒரு விதத்தில் உழைப்பிலிருந்து ஒரு சிறு மக்கள் திரளை விலக்கி அமரவைத்திலிலே, மனித சமூகம் கலை இலக்கிய உருவாக்கம் நோக்கி நகரமுடிந்தது. ஆனால், உலக நிலப்பரப்பெங்கும் இந்த அடிமைசமூக முறையில்; உழைப்பை சுரண்டி பயன்படுத்தும், அனுபவிக்கும் சமூகப்படிநிலைகளில் மாற்றங்கள், மேல் கீழ்த்திருப்பங்கள் என்பவை வரலாறு நெடுகிலும் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன.
இந்தவகையில், ஒரு எளிய புரிதலிலே; இந்திய நிலப்பரப்பின் வர்ணாசிரம அதர்ம வகைப்பாடு என்பது நிரந்தரமாக உழைக்கும், அடிமைத் தொழிலாளர்களை போதுமான அளவில் எப்பொழுதும் குறைவின்றி வைத்திருக்கும் ஒரு சமூக ஏற்பாடு என்பது புரியும். இந்த ஏற்பாட்டின் பயனாளிகள், சந்தேகமே இல்லாமல் இந்த அடுக்கின் மேல் அமர்ந்திருப்பவர்கள்தான். இந்தச்சுரண்டல் அடுக்கடுக்காக பகிரப்பட்டு உச்சத்தில் முழுமையாக உட்கொள்ளப்படுகிறது. அடிமைச் சமூக வகைப்பாட்டு முறையில் இது ஓர் இயல்நிலைதான். ஆனால் இங்கு எது, இந்திய வர்ணாசிரம் சமூக அமைப்பை மிகக் கொடூரமான தாக்குகிறதென்றால்; இந்த சுரண்டலடுக்கின் மேலிருந்து கீழான படிநிலைகள்; சில நூற்றாண்டுகளல்ல, சில ஆயிரமாண்டுகள் எந்தவொரு சிறு அசைவுமின்றி இன்று வரையில் அப்படியே அசைக்கப்படமுடியாமல் தொடர்வதுதான்.
இல்லை, இந்த வர்ணாசிரம அடுக்கின் மேலிருப்பவர்கள் மிகுந்த அறிவு கொண்டவர்கள், ஒரு மரபுத்தொடர்ச்சியான கல்வி கொண்டவர்கள் என்றால்; ஏன், எப்படி… அந்தக் கல்வியும் அறிவும் அவர்களுக்கு மட்டுமானதாக ஆயிரமாண்டுகளாக உள்ளது, என்பதை சிந்திக்கும் எவரும் கேள்வி கேட்க வேண்டும். இல்லை அவர்கள் அதற்கான சூழலை உருவாக்கி தக்க வைத்துக்கொள்கிறார்கள் என்றால்; அது எவ்வாறு? அவர்களால் மட்டும் சாத்தியமாகிறது, என்பது கேட்கப்படவேண்டும். இல்லை; ஏன், அவர்கள் அந்த பிழைத்திருத்தலுக்கான அறிவை சமூகம் முழுமைக்கும் பகிர மறுக்கிறார்கள் எனபது உரையாடப்படவேண்டும்.
இங்கு பார்ப்பனியம் என்பது; தமிழக அரசியல் சிந்தனைத் தளத்தில் வெற்று பிராமண எதிர்ப்பு என்பதாக தட்டையாக புரிந்து கொள்ளப்படுகிறது. இல்லை; அது ஜெர்மனியின் நாசிசம், இத்தாலியின் பாசிசம் போன்று இந்திய நிலப்பரப்பு தன் மானுட படிமலர்சியில் கண்டறிந்த ஒரு அரசியல் சித்தாந்தம் (Political ideology). ஆம், பார்ப்பனியம் ஒரு மனவியல் கட்டமைப்பு (Psychological Phenomenon), இதன் மனவியல் கூறுகள் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதோர் என நம் அனைவருக்குள்ளும், இந்திய நிலப்பரப்பின் எல்லா மனங்களுக்குள்ளும் பரவி இருப்பதையும்; அது காலங்காலமாக தன்னைத்தானே படி எடுத்துக் கொள்வதையும் மிகத்தீவிரமாக ஆய்ந்து எழுதியிருக்கிறார் அம்பேத்கர்.
ஆம், பார்ப்பனியம் ஒரு அரசியல் கோட்பாடு; அது வெறுமனே பிராமணர்களையோ அல்லது வேறெந்தவொரு குறிப்பிட்ட சாதியையோ சார்ந்ததன்று. அது இந்திய முழுமைக்குமான ஒரு சமூக மனநிலை அமைப்பொழுங்காகி கெட்டிப்பட்டுள்ளது, அதை இந்திய நிலப்பரப்பிற்குள் எந்தவொரு தனிமனித நினைப்பாலும் விட்டுவிலகமுடியா தன்மையுடைத்ததாகிவிட்டது. இந்தச் சுரண்டலரசியல் கோட்பாட்டமைப்பை கேள்விக்குள்ளாக்க, விவாதிக்க ஒரு பெருந்திரள் சமூககட்டமைப்பு மனநிலையை உருவாக்க வேண்டும். இந்தப் பெருந்திரளை சிந்தனைத்தளத்தில் துளியேனும் சாத்தியப்படுத்தியதே பெரியாரின் வரலாற்றுப்பாத்திரம்.
வர்ணாசிரமம், கேள்விக்குள்ளாக்கப்படுவதில் அதிகம் அஞ்சுபவர்களாக பிராமணர்கள் இருக்கிறார்கள். ஏனெனில் இந்த சமூகப்படிநிலையின் உச்சப்பங்கு இந்திய வர்ணப்பிரமிடின் உச்சத்தில் அமர்ந்து இருக்கும் அவர்களுக்கே சென்று சேருகிறது. அதற்காக இயல்பிலேயே இந்தக் கோட்பாட்டமைப்பை பாதுகாத்து நீட்டித்து தக்கவைக்க, அதிகம் மெனெக்கெட வேண்டிய தேவை அவர்களுக்குள்ளது. அதற்காக அரசியல், சமூகம், ஆன்ம நம்பிக்கைகள், தொழில் துறை பொருளுற்பத்தி என அனைத்து தளத்திலும் கடுமையாக செயல்பட்டு ’பார்பனியம்’ என்ற அரசியல் கோட்பாட்டை காலந்தோறும் மீட்டுக்கொண்டிருக்கிறார்கள். இது அப்படியே தன்னியல்பில் வர்ண பாகுபாட்டின் அடுத்தடுத்த படிநிலைகளைகளால் கடத்தப்பட்டு சமூகம் முழுமைக்குமாக தக்கவைக்கப்படுகிறது. ”இந்தியாவில் சாதிகள்” என்ற கட்டுரையில், இதை சாதிகளின் போலச்செய்தல் பண்பு (Imitating phenomenon) என்பதாக அம்பேத்கர் விரிவாக ஆராய்கிறார்.
இந்த நூற்றாண்டின் தவிர்க்கமுடியா இந்திய சிந்தனையாளரான காந்தி; வர்ணசிரமம் என்ற ’சுரண்டல் அரசியல்’ எதிர்ப்பை, ஒரு கோட்பாடாக, ’தீண்டாமை ஒழிப்பு’ என வெகுமக்கள் தளத்திற்கு நகர்த்த முயற்சிக்கையிலேயே; காந்தியத்தின் வீரியத்தை உணர்ந்த ஒரு பார்ப்பனிய மனம் காந்தியை பௌதீகமாக அகற்றியது.இந்தப் பார்பனிய கோட்பாட்டமைப்பு எவ்வளவு கொடுமையானதென்றால், அதை மறுத்து வெளியேறும் எந்த தனிமனத்திற்கும் தனித்து இயங்கும் சமூக பாதுகாப்பற்ற நிலையை ஒரு சமூக உளவியலாக ஆக்கிவைத்துள்ளது. இந்த அச்சத்தின் உச்ச விளைவுகளே இன்றும் நிகழும் ஆணவக்கொலைகள். ஆம், இந்திய நிலப்பரப்பில் பார்பனியம் இன்று மிக மிக இறுக்கமான சமூக அரசியல் நிறுவனம் (Socio-political entity). அது தனக்குள் எந்த ஜனநாயக விழுமியத்தையும் (Democratic Belief) அனுமதிப்பதில்லை. இந்த ஜனநாயக மறுப்பே அதை ஒரு அழிவுக்கோட்பாடாக்குகிறது.
ஒரு தனிமனித மனத்தை சுயமிழக்கச்செய்து; தன்னியல்பில் அவனை, விளிம்பு நிலைக்கு தள்ளும் பார்ப்பனிய கோட்பாட்டின் உள்ளார்ந்த பண்பைக் கண்டறிந்த புள்ளியில் பெரியார் மிக முக்கியமான சிந்தனையாளர் ஆகிறார். இந்திய சாதியமைப்பில் வர்ண அடிப்படை, பார்ப்பனர் மேலிருந்து சத்திரியர், வைசியர், சூத்திரர், சண்டாளர் என கீழ்நோக்கி விரியும் சமூகப் பிரமீடாக வேத காலம் முதல் விளங்கிக்கொள்ளப்பட்டிருந்த, இந்திய நிலப்பரப்பின் அடிமைச்சமூக வர்ணாசிரம முறைமையை, அதன் இயங்கு நிலையை; அம்பேத்கரும் பெரியாரும் மட்டுமே, பார்ப்பனரை வேராக இருத்தி கீழிருந்து அடுக்கடுக்காக பிற வர்ணங்களை மேல்நோக்கி விரித்து சமூக விளிம்பிற்கு தள்ளும் தலைகீழ் பிரமீடாக விளக்கினார்கள். அதனாலேயே; இருவரும் தொடர்ந்து பார்பனியத்தின் மூலவேரான பிராமணர்களை நோக்கி பேசினார்கள், செயல்பட்டார்கள். இதுவே பெரியாரை வெறும் பார்ப்பன வெறுப்பாளர் என்ற தட்டைப்புரிதலுக்கு வழிவகுக்கிறது.
“முட்டாளே, நீ சூத்திரனாம் பாப்பானுக்கு பணிவிடை செய்யனுமாம் உனக்கு அறிவில்லையா, சிந்திச்சு பார்க்கமாட்டியா” என ஒரு பொது மாந்தனை நோக்கி உணர்நிலையில், அவன் சுயம் சார்ந்த கேள்விச் சொற்களில் தாழ்சுயத்தை (Inferior Self) உடைக்க முற்படுகையில்; பார்ப்பனர்களை வந்தொட்டிகள், நீங்கள் நிலமற்றவர்கள் புராணப் பொய்யையும் புரட்டையும் சொல்லி சுரண்டித்தின்பவர்கள், பாவிகள் என்ற சொற்களில் பிராமண மனங்களின் மீயுணர் சுயத்தை (Imperious Self) சிதைக்க முற்படுகிறார் பெரியார். ஏனெனில் இந்த முன் சொன்ன சூத்திர தாழ்சுயமனமூம், பின் சொன்ன பிராமண மீயுணர்மனமுமே சனாதன வர்ணாசிரம் என்ற கோட்பாட்டின் தாங்குநிலைப்புள்ளிகள். இந்த தாங்குநிலைபுள்ளிகள் அசைக்கப்படுகையில் வர்ணாசிரமம் சிதைவுறத்துவங்கும். நவீன இந்திய மனம் தேடும் அனைவருக்குமான அதிகாரப்பரவலாக்க சமூக ஜனநாயகம் (Social Democracy) இந்திய நிலப்பரப்பில் செயல்படத்துவங்கும்.
மானுடகுல படிமலர்ச்சியில் வேட்டை சமூக காலம் முதல் எந்திரங்களை சிந்திக்கச்செய்யும் இன்றைய செயற்கை நுண்ணறிவு காலத்திலும், உலகமெங்கும் ஒரு சமூகமென்பதின் அடிப்படை அலகான தனிமனித மனங்கள் மீதான உண்மையான அதிகாரம் என்பது புரோகித வர்க்கத்திடமே (Pontifex Class) இன்றும் குவிந்துள்ளது என்பதை எளிதில் உணரமுடியும். இது நவீன அமைப்பியல் கருத்தியல்களான சமூகம், அரசதிகாரம், படைத்துறை, பொருளியல் உற்பத்தி என்பவை தாண்டிய தனிமனிதன அகநிலையை கைக்கொள்ளும் அதிகாரம்.
இந்த அதிகாரம் செயல்படும் புள்ளி என்பது ஒவ்வொரு தனித்த அகத்தின் ஆதி அச்சம் சார்ந்தது. இது மனித மனங்களுக்கானது மட்டுமானதல்ல அனைத்து உயிர்களுக்குமான அச்சம். இதன் ஆழ்நிலை என்பது தன் பௌதீக இருப்பு குறித்த இயற்கை மீதான அச்சம். இந்த அச்சத்தை அதிகாரக்கைப்பற்றலுக்கு பயன்படுத்தும் தன்மையை எல்லா உயிரின சமூகங்களுக்குள்ளும் காணமுடியும். ஆனால் அதை ஒரு முறைப்படுத்திய தன்மையில் தீவிர நடைமுறையாக்கி அதிகாரக்கைப்பற்றலுக்குப் பயன்படுத்தியது, மனிதசமூகம் மட்டுமே. வேட்டைச்சமூகத்தில், அச்சம் மறுத்து இருள்குகைக்குள் சென்று திரும்பிய ஒரு மனிதனின் பௌதீக இருப்பு, அவனை; அந்தச் சமூகத்தின் மேம்பட்ட உயிரியாக்கி வணங்கத்துவங்கியதில் தோன்றியது புரோகித வர்க்கம் (Pontifex Class). இந்த வர்க்கம் வரலாறு நெடுகிலும், இந்த அச்சத்தை தன் தேவைக்கேற்ப வளர்த்தெடுத்து தன் சமூக அதிகாரத்தை தக்க வைக்கிறது. இது மானுடகுலம் முழுமைக்குமான பொதுமைத்தன்மையானாலும். உலகம் முழுதும் காலம் நெடுகிலும், இந்த புரோகித வர்க்க அதிகார கைப்பற்றல் மாறிக்கொண்டே வந்துள்ளது. இந்திய நிலப்பரப்பில் ஒரு பெரிய பரந்துபட்ட புரோகித வர்க்க சமூக அதிகாரக்க கைப்பற்றல் என்பது என்றும் மாறாத்தன்மை கொண்டதான ஒரு சிறப்பு (Peculiar) பண்பைக் கொண்டதாக உள்ளது. இதுவே மானுடவியல் நோக்கில் ஆய்வுக்குள்ளாக்க வேண்டிய மிக தீவிரமான பகுதி.
இந்திய நிலப்பரப்பின் இந்தப்புரோகித சமூக அதிகாரத்தின் மாறாத்தன்மையை சிந்தித்ததில் பெரியார் கவனிக்கப்பட வேண்டியவர். இந்த மாறாத்தன்மையை ஒரு குழப்பமாக அஞ்சாமல் அதன் உடைவு நோக்கி பேசியதில் அவர் ஒரு தெளிந்த சிந்திப்புக்கொண்ட செயற்பாட்டாளராகிறார்.
இங்கு, பார்ப்பனியம் என்பது தன்னை (Self) விட பிற (other) அனைத்தையும் மறுத்து தாழ்வாக்கி பிறனின் பௌதீக இருத்தலையே தீமை என்பதாக்கி சுரண்டி அழிக்கப்பட வேண்டியது என தானும் உணர்ந்து கொண்டு, சுற்றி இருக்கும் அனைத்து மனங்களையும் அதை நோக்கி இழுத்து சமூகம் முழுமைக்கும் எப்பொழுதும் ஒரு வெறுப்பை, ஏற்றதாழ்வை தக்கவைத்துக்கொள்ளும் பேரழிவு சிந்தாந்தம் (Destructive Ideology). இது அதிகம், இந்திய நிலப்பரப்பின் இளம் மனங்களுக்குள் திணிக்கப்படுவது புரோகிதம் வழியான பக்தி உணர்ச்சி வழியாகவே.
ஒரு நாடு, அந்த நாட்டை ஆளும் அதிகாரவர்க்கம், தனக்கான தேசிய குடிமக்களை உருவாக்க சில உணர்ச்சிகர தளங்களை உருவாக்கி அதை ஒரு இயல்வாழ்வியல் நடைமுறையாக்கி, அறியாமலே தனித்த மனங்களை கட்டுப்படுத்தி; தன் தேவைக்கேற்ப பயன்படுத்தத் துவங்கும். உதாரணம் எல்லா நாடுகளிலும் பள்ளிக்குழந்தை மனங்களில் தேசியகீதம் பாடுவதை ஒரு நடைமுறையாக்கி; தேசியம் (Nationality) மீதான நம்பிக்கை விதைத்து அந்த இளம்மனத்தை அது உணரலாமே உணர்ச்சியால் கட்டமைத்து நன்மையாகவோ தீமையாகவோ பயன்படுத்திக் கொள்வது (இந்திய தேசிய உணர்ச்சியின் நன்மை, நடைபெற்ற குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக இந்தியா முழுமையும் நிகழ்ந்த போராட்டங்கள், அதே உணர்ச்சி யின் தீமைப்பயன்பாடு அதே தேசிய உணர்ச்சிவழி ஹிந்து ராஜ்யா என முழங்கியபடி தனி மனிதர்களை தீயிட்டு கொளுத்துவது).
“இந்திய நிலப்பரப்பின் இளம் மனங்களை கட்டமைக்கும் இயல்பை; எந்தச்சலனமுமற்று சமூக அமைப்பின் அடிப்படை அலகான குடும்பத்திற்குள்ளேயே அதன் உறுப்பினர்களாலே கட்டமைக்கும் வழியை உருவாக்கிக் கொணடதிலேயே பார்ப்பனியம் இந்த மண்ணில் இன்றும் நீடிக்கிறது. ஆம், உயர்குடி என்று தங்களை நம்பிக்கொண்டிருக்கும் பிராமணர்கள் உருவாக்கும் வழிபாட்டு நடைமுறைகள் இந்திய நிலப்பரப்பின் பெருவாரி குடும்பங்களுக்குள்; உயர்வானதாக நம்பவைக்கப்படுவதில் ஒரு குழந்தையின் மனதிற்குள் பார்ப்பனியம் என்ற மனவியல் கட்டமைப்பு அதன் அரூபத்தன்மையில் விதைக்கப்படுகிறது. பிராமண வழிபாட்டு நடைமுறையில் இருக்கும் ஆடம்பர அழகியலை (Luxurious Aesthetics) உள்ளேற்றிக்கொள்ளும் ஒரு குழந்தை இயல்பிலே ஆடம்பரமற்ற எளிய இயற்கையின்பாற்பட்ட பண்பாட்டு வழிபாடுகளை ஏற்கும் உற்சாகமற்று, அதை தாழ்வுற்றதாய் நம்பிக்கொள்கிறது. இதிலிருந்து ஒரு இந்தியக் குழந்தையின் மனத்தில் மேல், கீழ் உருவாக்கப்பட்டு தன்னிலிருந்து பிறனை (Other) விலக்கும் தீண்டாமையை இயல்பாக்கிக்கொள்கிறது. இந்தக் குழந்தை மனம் முதிர முதிர இன்னும் சரிசெய்ய முடியாததாகி ஆதிக்கப்பெருமிதம் கொண்டு குற்ற உணர்வற்று பிறனை சுரண்டுதல் என்பதாக; அப்படியே அடுத்த தளத்தில் விரிந்து, ஒரு சமூக கட்டமைப்பாகி ஒரு மனிதன் தன் சக மனிதனிடம், ஓர் ஆண் ஒரு பெண்ணிடம், ஒரு சாதி இன்னொரு சாதியிடம் என எங்கும் அதிகாரம் பரவலாகும் சம உரிமை என்னும் சாத்தியப்பாட்டை இல்லாமல் ஆக்கி படிநிலை சமமின்மை (Graded inequality) மனநிலையாக விரிகிறது. இதை வர்ணாசிரமம், ஒரு தனிமனித குழந்தை மனம் உருவாக்க அடித்தளத்திலிருந்து செயல்படும் சிந்தனை அமைப்பாக (School of Thought) போலியான குடும்ப ஆன்மிக வழிபாட்டு நம்பிக்கை வழி உருவாக்கி வைத்துள்ளது. இதுவே இன்றும், சாதியத்தை இந்திய நிலப்பரப்பிற்குள் தக்கவைத்துக் கொண்டிருகிறது. இந்த சிந்தனை முறைமையை (School of Thought) உடைக்கவே; பெரியார், கடவுள் வழிபாட்டு மறுப்பை கையிலெடுக்கிறார்.
இங்கு மனிதமனங்கள் பாகுபடுத்தப்படுவது பெரிய சுரண்டல் அடிமை வணிகம் (Slavery trade). இதற்காகவே, இங்கு இத்தனை சாதிப்பிரிவுகள், மேல் கீழ் மனநிலை உருவாக்கம் என கண்டறிந்ததோடு; மானுடத்தின் சரிபாதி தொகையில் இருந்துகொண்டு, மேற்சொன்ன எந்த படிநிலைகளுக்குள்ளும் வராமால் உலகின் அனைத்து படிநிலைகளுக்கும் கீழாய் தாழ்வுற்று நிறுத்தப்பட்டிருக்கும் பெண்களின் மனநிலையை தட்டி எழச்சொல்லி, இன்னும் உரக்கப்பேசி எழுதியதாலே பெரியார், ஒரு சமூகவியலறிஞராகிறார்.
தீவாய்ப்பாக, வெறும் அரசியல் பரப்புரை கருத்துருவமாக மட்டுமே ஏற்பவர் மறுப்பவர் என இருதரப்பாலும், பெரியார்; இங்கு உள்வாங்கப்பட்டுள்ளார். ஆனால் இந்தியச் சிந்தனை மரபில் இருபதாம் நூற்றாண்டின் தவிர்க்க முடியா கண்ணி பெரியார். கருப்புச்சட்டையோடும் புரளும் வெண்தாடியோடும் பெரியார் என இன்று அமர்ந்திருக்கும் அந்த உருவம் நிகர்மைச்சமூகம் (Socialistic Society) என்ற அரசியல் கருத்துருவின் இந்திய வடிவம். மானுடசமத்துவத்தையும், சமூகம் முழுமைக்குமான அதிகாரப்பரவலாக்கத்தையும் ஏற்கொள்ளும் பக்குவமற்று தான் மட்டும், தான்சார்ந்தமட்டுமென வேட்டைச் சமூக நிலையிலேயே நின்றுவிட்ட மனங்களை உள்ளூர தொந்தரவுசெய்து உரையாட அழைக்கும் பெருங்கருத்துருவம் பெரியார்.
சக மனிதனை தனக்கு இணையாக இருத்தமுடியாத, சமூகக் கீழ்மையை புரிந்து கொள்ளவே முடியாமல் இருந்த பொது மன வெளிக்குள்; அந்தக்கீழ்மை நோக்கிய சிந்தனை துளியேனும் தோன்றியதற்கு காரணமான பெரியாரின் சமரசமற்ற சமூகச்செயற்பாடுகள் இந்தியச்சமூக வரலாற்றில் மிகப்பெரும் சாதனை. இந்தப்புள்ளியில் பெரியார், சகமனிதனை தனக்கு இணையாக எண்ணும் அனைத்து மனங்களுக்கும், ஓர் ஆற்றலூட்டும் சிந்தனை.
இங்கு, புனிதப்படுத்தப்படும் எதுவும் ஒரு நிலையில் தேங்கிப்போய் அதிகாரகுவிப்பாகி வன்முறை சுரண்டலாக மாறிப்போகும். இது அனைத்து சிந்தனைகளுக்கும் காலப்போக்கில் நிகழும் சிக்கல். ஆனால், எந்த நிலையிலும் ஏற்பவரோ மறுப்பவரோ பெரியாரை, அவரது கருத்துக்களை தத்துவப்படுத்த முடியாது. ஏனெனில் பெரியாரும் அவரது கருத்துக்குகளும் தன்னியல்பில் உள்ளூர புனிதப்படுத்துதலுக்கு எதிரானவர்கள். இந்தப்பண்பே ஒரு பாய்ம நிலையில் பெரியாரை எங்கும் தேக்கமுறா தன்மையில் நீட்டித்து உரையாடவைக்கிறது.
ஏறக்குறைய காந்தியும், பெரியாரும் ஒரே காலத்தில் சமூக அரசியலுக்குள் நுழைந்தவர்கள். சற்று ஆழ்ந்து யோசிக்கையில் காந்தியும் பெரியாரும் ஒற்றைச் சமூக இலக்கை நோக்கி இரு எதிரீட்டு வழிமுறைகளில் பயணித்த ஆளுமைகள். ஆம், காந்தி ஆழமான தனிமனித ஆன்மீக தேடல் வழியான சமூகம் பண்படும் ஒரு விடுதலை என்பதாக தனிமனித தன்னகவிழிப்பு நோக்கில் சிந்திக்கிறார். பெரியாரும் அதே தனிமனித சுயம் என்ற அகவிழிப்பின் வழியான சமூக மாற்றத்தை பேசுகிறார். காந்தி ஒவ்வொரு மனிதனும் மகாத்மாவாகும் சமூகத்தை கனவு செய்கிறார். இது ஏறக்குறைய நீட்ஷேவின் அதி மனிதன் என்ற கனவிற்கு ஒப்பானது. பெரியார் அதே போன்றதொரு உன்னத சமூகத்தை ஒரு மனிதன் எளிமையாக தன் சுயத்தை உணரும் இயல்மனித நிலையிலே எட்டிவிடும் சாத்தியங்களை பேசுகிறார். இன்னும் அடுத்த நிலையில் இந்திய நிலப்பரப்பின் வரலாற்றில் மார்க்ஸிய இயக்கங்களும், காந்திய இயக்கமும், பெரியாரின் சுயமரியாதை இயக்கமுமே பெருந்திரளாய் எளிய மனிதர்களை, குறிப்பாக பெண்களை தங்கள் குடும்ப வேலிதாண்டிய பொதுவெளிக்குள் கொணர்ந்து அரசியல்மயப்படுத்திய சமூக இயக்கங்கள். மேற்சொன்ன, அந்த அதிமனிதர்களின் தொகை குறையும்போது காந்திய அரசியல் அமைப்புக்கள் தளர்ந்து சிதைவுறத்துவங்குகிறது. இயல்மனிதர்களை கொண்டியங்கும் தன்மை கொண்டதாலே மார்க்ஸிய, பெரியாரிய அரசியல் அமைப்புக்கள் எப்போதும் எளிய மனிதர்களை கொண்டு தன்னை தக்கவைத்துக்கொள்ளும் தன்மை கொண்டுதாயுள்ளது.
இன்னும் ஆழ்ந்து நோக்குகையில் காந்தியம் விழையும் அதிமனித சமூகத்தை அடையும் எளிய பாதையாக பெரியாரியம் வாய்ப்புக்கொண்டுள்ளது. ஒரு சமூகத்தின் உற்பத்தியில்,கல்வியில் அதிகாரப்பகிர்வில் அனைவருக்கு சமவாய்ப்பு எட்டப்படும் போது, அதன் உறுப்புகளான தனிமனிதர்கள் சுயத்தை உணர்ந்து கேள்விகேட்டு ஒரு உளநிறைவை எட்டி அதிமனித ஆன்ம நிலைநோக்கி இயல்பில் நகர்வார்கள். கடந்த நூற்றாண்டில் இந்த அதிகாரப்பரவலாக்கத்தின் கணிசமான பகுதியை பெரியாரிய சிந்தனைப்பின்னணிகொண்ட திராவிட இயக்க அரசுகள் தமிழகத்தில் சாத்தியப்படுத்தியுள்ளன. இதன் வழி சமூகம் முழுமைக்குமான கல்வி பரவலாகியதன் அடுத்த நகர்வாக தமிழகத்தின் ஒவ்வொரு சாதிய குழுக்களும் தமக்கான உரிமைகளை தாம் வாழும் இந்த நிலப்பரப்பின் உற்பத்தி, கல்வி, அரசதிகாரம் என அனைத்திற்குள்ளும் கோரத்துவங்கியிருப்பது பெரும் சாதனை. தற்காலநிலையின், சில துவக்ககால குழப்பங்களை கடந்து அனைத்திலும் அதிகாரம் பகிரப்பட்ட உளநிறைவு கொண்ட ஒரு ஆன்மமான காந்திய சிந்தனை சமூகத்தை, ஒரு வளர்நிலையில் இந்தப்போக்கு சாத்தியப்படுத்தும். ஏனெனில், படிநிலை சமூக அமைப்புநிலையே குற்றமனநிலை உருவாக்கத்தின் மூலம். இந்த படிநிலை சமூக அமைப்பு வீழ்கையில் குற்ற மனநிலைகள் தோன்றும் வாய்ப்புத்தேவைகள் குறைந்து காந்தியம் காண விழையும் அதிமனிதர்கள் சாத்தியமாவார்கள். இதை பெரியாரியம் நடைமுறையில் தமிழ்நிலப்பரப்பில் சாத்தியப்படுத்தும் பாதைகளை நிரூபித்துள்ளது.
என்றும் நமக்கு, காந்தியிடம் உரையாட ஒரு சாத்வீகமான ஒழுங்குடைய மனம் வேண்டும். அம்பேத்கருடன் உரையாட ஒரு தெளிந்த கற்றல் வேண்டும். மார்ஸுடனும் புத்தருடனும் உரையாட ஒரு தத்துவார்த்த சிந்திப்பு என்ற தகுதி வேண்டும். மேற்சொன்ன எந்த தகுதிப்பாடுமின்றி எளிய வெள்ளந்தியோடு, எவரும் பெரியாருடன் உரையாடி அவருடன் முரண்பட்டு, உடன்பட்டு தெளிவு கொள்ளமுடியும் என்பதாலே பெரியார்; இந்திய நிலப்பரப்பின் தனித்துவ சிந்தனையாளர் ஆகிறார்.
ஆம், பெரியார்; பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குமென்ற பேரறத்தை தன் சித்தாந்த ஆன்மமாக போதிக்கிறார். அதை வாழ்வியலாக்கும் சிந்தனைக் கட்டமைப்பை (School of Thought) உருவாக்கச்சொல்லி நம்மை தூண்டுகிறார். பெரியாரின் வழியில் நம் கனவு, இந்த நிலப்பரப்பின் மனிதர்கள் எல்லோருக்கும் சம வாய்ப்பு அளித்து பேரன்பு கொண்டியங்கும் ஒரு நிகர்மைச் சமூகம்.
——————————–
சு.பூபாலன்
மணல்மகுடி நாடக நிலம்
[email protected]