டெலிகாம் துறையில் கூட்டுக்களவாணிகள் கொள்ளையடிக்க அனுமதி – தமிழில்: ச.வீரமணி
சமீபத்தில் ஒன்றிய அமைச்சகம், வோடபோன்-ஐடியா நிறுவனம் அரசாங்கத்திற்கு அளிக்கவேண்டிய தொகையில் ஒரு பகுதியை பங்குமூலதனமாக மாற்றியிருப்பதாக அறிவித்திருப்பது, அரசாங்கம் டெலிகாம் துறையில் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் கூட்டுக்களவாணி முதலாளிகளுக்கு சலுகை அளித்திருக்கும் மற்றொரு நடவடிக்கையாகும். அரசாங்கத்திற்கு, வோடபோன்-ஐடியா நிறுவனம் இருநூறாயிரம் கோடி ரூபாய்கள் (two hundred thousand crores) கொடுக்க வேண்டியிருந்தது. அதனைக் குறைக்கும் விதத்தில் அவற்றின் 35.8 சதவீதப் பங்குகளை அரசாங்கம் எடுத்துக்கொள்வதாகக்கூறி, மீதமுள்ள தொகையை அந்நிறுவனம் அடுத்த நான்கு ஆண்டுகளில் கட்டினால் போதும் என்றும் கூறியிருக்கிறது.
ஆயினும் இப்போதும்கூட இந்நிறுவனம் வோடபோன் மற்றும் ஐடியா என்னும் இரு தனியார் நிறுவனங்களின் கைகளில்தான் இருந்துவரும். அதற்குத் தகுந்தாற்போல் பங்குதாரர்களின் ஒப்பந்தத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. ஆயினும் இந்நிறுவனத்தைத் தூக்கிப்பிடிப்பது அரசாங்கமும், பொதுத்துறை வங்கிகளும்தான். இவைதான் அந்நிறுவனத்தின் அதிக அளவிலான பங்குகளைப் பெற்றிருக்கின்றன.
நவீன தாராளமயக் கொள்கைகளின்படி நம் உள்கட்டமைப்புவசதிகளைத் தனியாரிடம் அளித்திருப்பதன் மூலம் டெலிகாம் துறை சிறப்பாக வளர்ந்திருப்பதாகக் கூறிக்கொண்டிருந்த நிலையில் இப்போது ஏன் இத்தகைய பரிதாபநிலைக்கு நாம் வந்திருக்கிறோம்? மின்சாரத்துறை, நிலக்கரித்துறை மற்றும் இதர உள்கட்டமைப்புத் திட்டங்கள் எல்லாம் பொதுத்துறை வங்கிகளிடம் கடன்கள் பெற்றுவிட்டுத் திருப்பித்தராமல் வங்கிகளின் செயல்படா சொத்துக்களை ஊதிப்பெரிதாக்கியதை நாம் பார்த்தோம். இதற்கு விலக்காக அப்போது டெலிகாம் துறை மட்டுமே இருந்து வந்தது. ஆனால், இப்போது, ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் மட்டுமே டெலிகாம் துறையில் வலுவாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதற்கிடையில், பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அது தன்னுடைய உள்கட்டமைப்பு வசதிகளை விரிவாக்கிக்கொள்வதற்காக கோரிய கடன்கள் மற்றும் மூலதனப் பங்குகள் அதற்கு அளிக்கப்படாமல் அரசாங்கத்தால் அது காலவரையின்றி இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
டெலிகாம் துறை தொடர்ந்து பல ஊழல்களுக்கு ஆளாகி வந்திருக்கிறது. முதலில் 1994 ஏலத்தில் உரிமங்களைக் கையாள்வதில் நடந்த “சுக்ராம் ஊழல்”. சுக்ராமின் படுக்கையறையில் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள் எடுக்கப்பட்டன. அடுத்து 1998இல் வாஜ்பாய் அரசாங்கத்தில் பிரமோத் மகாஜன், அடித்த கொள்ளை. இப்போதுள்ள நெருக்கடிக்கெல்லாம் இதுதான் தொடக்கமாகும். ஏனெனில் டெலிகாம் துறையில் செயல்படும் தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு நட்டம் ஏற்பட்டால் அரசாங்கம் அதனை ஈடுசெய்திடும் என்று அவை நம்புகின்றன. டெலிகாம் நிறுவனங்கள் வங்கிகளிடமிருந்து கடன்கள் வாங்கி, தங்களை விரிவுபடுத்திக் கொள்கின்றன. அதேசமயத்தில் அவை அரசாங்கத்திற்கு அளிக்கவேண்டிய வருவாய் பங்கினை அளிப்பதில்லை.
இவ்வாறு அவை அரசாங்கத்திற்கு, கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளாக கொடுக்காது குவித்து வைத்துள்ள தொகையின் வட்டியே அவை கொடுக்க வேண்டிய தொகையில் நான்கில் மூன்று பங்காக அதிகரித்திருக்கிறது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின்போது உச்சநீதிமன்றம் 2019இல்அளித்திட்ட தீர்ப்பில் தனியார் நிறுவனங்களின் வாதங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவேதான் இப்போது தனியார் டெலிகாம் நிறுவனங்களில், குறிப்பாக வோடபோன்-ஐடியா நிறுவனத்தில், இப்படித் திடீரென்று நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.
உள்கட்டமைப்பு சேவைகளில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள் மூழ்கினால் அதனால் உடனடியாக அவதிக்குள்ளாவது அதன் வாடிக்கையாளர்களாகும். வோடபோன்-ஐடியா நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, அதன் 270 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு மற்றுமொரு பிரச்சனையைக் கொண்டுவந்திருக்கிறது. அநேகமாக அடுத்த சில ஆண்டுகளில் அந்நிறுவனம் காணாமல் போய்விடும். அதன்பின்னர் எஞ்சியிருக்கும் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் என்பவை ஜியோ மற்றும் ஏர்டெல் மட்டுமே. இவ்வாறு மிகவும் கேந்திரமான துறையான டெலிகாம் துறையானது இவ்விரு தனியார் நிறுவனத்திடமும் ஒப்படைக்கப்பட்டால் நாட்டிற்கு ஏற்படக்கூடி மோசமான விளைவுகள் குறித்து அனுபவமற்ற திட்ட வல்லுநர்களும் நன்கு அறிவார்கள். எனவே இதனைத் தடுத்திட ஒரே வழி, பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் வலுப்படுத்தப்பட வேண்டும் அல்லது வோடபோன்-ஐடியா நிறுவனத்தை முற்றிலுமாக பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைத்து அதனை முழுமையான பொதுத்துறை நிறுவனமாக மாற்றிட வேண்டும்.
(ஜனவரி 19, 2022)
நன்றி:பீப்பிள்ஸ் டெமாக்ரசி