Posted inPoetry
பெருந்தேவி – சூர்யமித்திரன்
பெருந்தேவி
~~~~~~~~~~
கட்டிய கணவனுக்கு
பெத்தது
ரெண்டு ரெண்டு.
அறுபதுகளிலே
மீன்காரியுடன்
நீச்சுவாசம்~அங்கேயே
தங்கல் வாசம்.
என் தாத்தனை
அந்த நாளிலேயே
தூக்கிப்போட்டுட்டு
ராவ் பகதூர் வீட்டில்
பத்துபாத்திரம்
சகவாசம்.
செல்வம்..என்ற
உதறும்
வெத்திலை வாசக்குரலில்
மவராசான்னு
சேர்த்தணைத்த
பச்சைகுத்தின
கைகளில் பாசம்
முளைத்தது.
நாளைக்கு
ஆடி அமாவாசை.
நினைவுதெரிந்து
உனக்கு யாரும்
எள்ளுந்தண்ணி
தர்ப்பைப்புல்லில்
வார்த்ததில்லை.
நான்மட்டும்
பெருந்தேவிப்பாட்டியின்
புகையிலை வெத்திலை
பாக்கு வாசத்தின் இதழால்
குளித்த
எனது கன்னங்களில்
உன்னை
மோப்பம் பிடித்து
தேடுகிறேன்.