இயற்பியலால் இன்னும் தீர்க்கப்படாத பிரச்சனை
பெர்ஜினின் “தேநீரில் கலந்திருக்கும் இயற்பியல்”
இயற்பியல் நோபல் பரிசு 2022 – இரண்டாம் குவாண்டம் புரட்சி – ஜோசப் பிரபாகர்
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அறிவியல் கோட்பாடுகளில் ஒன்று குவாண்டம் இயற்பியல். இது ஒரு வினோதமான அறிவியல் கோட்பாடு. இக்கோட்பாட்டின் பல கருத்துக்கள், விதிகள் நமது பொதுப் புரிதலுக்கு (common sense) எதிராக இருக்கின்றன. 1910-ல் உருப்பெறத் தொடங்கிய இக்கோட்பாடு 1930-களில ஓரளவு முழுமையடைந்தது. இதுவரை 20-க்கும் மேற்பட்ட நோபல் பரிசுகளை இத்துறையைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் பெற்றுள்ளனர்.
அந்த வரிசையில் 2022 ஆம் ஆண்டின் இயற்பியல் நோபல் பரிசு குவாண்டம் இயற்பியல் சார்ந்த “குவாண்டம் பிணைப்பு (quantum entanglement)” குறித்த ஆராய்ச்சிக்காக அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் கிளாசர் (John Clauser), பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆலன் அஸ்பே (Alain Aspect) மற்றும் ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த ஆண்டன் செய்லிங்கர் (Anton Zeilinger) ஆகிய மூவருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வாராய்ச்சியானது வெறுமனே கோட்பாட்டு ரீதியான ஆராய்ச்சியாக மட்டுமல்லாமல் நடைமுறையில் நிறைய பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.
குவாண்டம் இயற்பியல் என்றால் என்ன?
குவாண்டம் பிணைப்பை பற்றி அறிந்து கொள்வதற்கு முன் குவாண்டம் இயற்பியல் பற்றி சுருக்கமாக தெரிந்து கொள்வது அவசியம்.
ஒரு பந்தை நாம் தூக்கி எறிந்தால் அது உயர பறந்து எந்த இடத்தில் விழும், எந்த நேரத்தில் விழும் என நியூட்டன் விதிகளை கொண்டு கண்டுபிடிக்கலாம். அதே போல் கோள்களின் இயக்கங்களையும் நியூட்டன் விதிகள் மூலம் விளக்க முடியும். பொதுவாக கூற வேண்டுமென்றால் நாம் வாழும் பிரபஞ்சத்தில் கண்ணால் காணக்கூடிய பெரிய பொருட்களின் இயக்கத்தை நியூட்டனின் விதிகள் தெளிவாக விளக்குகிறது.
17-ஆம் நூற்றாண்டில் கலீலியோ, கெப்ளர் மற்றும் கோபர் நிகஸ் ஆகியோரது கண்டுபிடிப்புகளை ஒன்றிணைத்து நியூட்டன் தனது இயக்கவியல் விதிகளை உருவாக்கினார். இதைத்தான் நாம் நியூட்டனின் விதிகள் என்றும் கூறுகிறோம்.
17ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்து இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை “நியூட்டன் விதிகள் என்றென்றைக்கும் மாறாதது; உலகில் உள்ள அனைத்து பொருட்களின் இயக்கத்தையும் இந்த விதிகளை கொண்டே விளக்கி விட முடியும்” என்று அறிவியல் அறிஞர்கள் நினைத்து வந்தனர்.
1890-களின் இறுதியில் ஜே.ஜே தாம்சன் எலக்ட்ரானைக் கண்டுபிடித்தார். 1900-களில் ரூதர்போர்டு அணுக்கோட்பாட்டை உருவாக்கினார். அதன் படி அணுவின் மையப் பகுதியில் உட்கருவும், அதனை சுற்றி எலக்ட்ரான்கள் சுற்றி வருகிறது என்றும் கூறினார். ஆனால் பல்வேறு ஆய்வு முடிவுகளை, இந்த ரூதர்போர்டு அணு மாதிரி அல்லது நியூட்டன் விதிகள் மூலம் விளக்க முடியவில்லை. எனவே அணுக்கள், அதனுள் இருக்கும் எலக்ட்ரான்கள், புரோட்டான்கள் மற்றும் நியுட்ரான்களின் இயக்கத்தை விளக்க புதிய இயற்பியல் கோட்பாடு தேவைப்பட்டது.
இந்நேரத்தில் எர்வின் ஸ்ரோடிங்கர், ஹெய்சென்பெர்க், மேக்ஸ் பார்ன், நீல்ஸ் போர், டிராக் போன்ற பல அறிஞர்கள் சேர்ந்து உருவாக்கியது தான் இந்த குவாண்டம் இயற்பியல் கோட்பாடு. இக்கோட்பாடு எலக்ட்ரான்கள், புரோட்டான்கள், நியுட்ரான்கள், அணுக்கள், மூலக்கூறுகள் ஆகியவைகளின் இயக்கத்தை தெளிவாக விளக்குகிறது.
எதிர்கால இயக்கத்தை கணிக்க முடியாத கோட்பாடு
குவாண்டம் கோட்பாடானது நியூட்டன் விதிகளிலிருந்து பல்வேறு வகையில் வேறுபட்டது. நியூட்டனின் விதிகளானது ஒரு பொருளின் நிகழ்கால இயக்கம் பற்றி தெரிந்தால் அப்பொருளின் எதிர்கால இயக்கத்தை துல்லியமாக கணிக்கக்கூடியது. அதாவது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு பொருள் எந்த இடத்தில் இருக்கிறது, என்ன திசைவேகத்தில் செல்கிறது, அதன் மீது செயல்படும் விசை என்ன என்பது தெரியுமென்றால், இன்னும் நூறு வருடம் கழித்து கூட அப்பொருளின் இருப்பிடம் மற்றும் திசைவேகம் ஆகியவற்றை நியூட்டன் விதிகளால் கணிக்க முடியும். இந்தத் தன்மையை இயற்பியலில் ‘அறுதியீட்டுவாதம்’ (determinism) என்கிறோம். ஒரு பொருளின் எதிர்கால இயக்கத்தை துல்லியமாக கணிக்கக்கூடியது இந்தக் கோட்பாடு (deterministic theory). இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு: நியூட்டனின் விதிகளைப் பயன்படுத்தித்தான் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் நிகழும் நாட்களைக் நாம் கணிக்கின்றோம்.
ஆனால் குவாண்டம் இயற்பியலை பொருத்தவரையில் ஒரு எலக்ட்ரான் ஒரு குறிப்பிட்ட கணத்தில் எங்கிருக்கிறது என்று தெரிந்தால் கூட அடுத்த கணத்தில் அதே எலக்ட்ரான் எங்கிருக்கும் என்று சொல்ல முடியாது. மாறாக அடுத்த கணத்தில் இங்கிருப்பதற்கோ அல்லது அங்கிருப்பதற்கோ சாத்தியம் என்ன அல்லது நிகழ்தகவு என்ன என்று மட்டுமே சொல்லும். எடுத்துக்காட்டாக ஒரு ரூபாய் நாணயத்தை சுண்டி விட்டால் தலை விழுமா அல்லது பூ விழுமா என்று முன்பே சொல்ல முடியாது. தலை விழுவதற்கு அல்லது பூ விழுவதற்கு என்ன நிகழ்தகவு என்று மட்டுமே கூற முடியும். அதே போல் தான் குவாண்டம் இயற்பியலும். ஒரு நிகழ்வு நடப்பதற்கு என்ன நிகழ்தகவு என்று மட்டுமே கூறும்.
அடிப்படையில் குவாண்டம் இயற்பியல் நிகழ்தகவை அடிப்படையாகக் கொண்ட கோட்பாடு. ஸ்ரோடிங்கர் சமன்பாடு அல்லது டிராக் சமன்பாடுதான் குவாண்டம் இயற்பியலில் அடிப்படை. நியூட்டன் சமன்பாடுகளை கணிதரீதியாக தீர்ப்பதன் மூலம் நாம் கண்ணால் காணும் பொருட்களின் இயக்கத்தை புரிந்து கொள்வது போல் ஸ்ரோடிங்கர் சமன்பாடு அல்லது டிராக் சமன்பாடுகளை கணித ரீதியாக தீர்ப்பதன் மூலமே நாம் அணுக்களின் உலகத்தை புரிந்து கொள்ள முடியும்.
மேலே சொன்ன ஒரு ரூபாய் நாணயம் சுண்டி விடப்படும் எடுத்துக்காட்டில் நம்மால் முன் கூட்டியே தலை விழுமா அல்லது பூ விழுமா என கூற முடியாததற்கு காரணம் அந்த ஒரு ரூபாய் நாணயத்தின் இயக்கத்தை விளக்கக்கூடிய நியூட்டன் சமன்பாடுகளை நடைமுறையில் கணித ரீதியாக தீர்ப்பது கடினம். ஆனால் நாம் சிறந்த கேமராக்களை வைத்து ஒரு ரூபாய் நாணயத்தை சுண்டி விட்ட பிறகு அது ஒவ்வொரு நொடியும் எப்படி மேலே செல்கிறது, காற்று அதன் இயக்கத்தை எவ்வாறு பாதிக்கிறது, புவி ஈர்ப்பு விசை எப்படி அதன் மீது செயல்படுகிறது என்று தெரிந்து கொண்டால் கண்டிப்பாக நியூட்டன் விதிகளை பயன்படுத்தி பூ விழுமா அல்லது தலை விழுமா என்று முன்னமே கோட்பாட்டு ரீதியாக கூற முடியும். ஆனால் நடைமுறையில் இது கொஞ்சம் கடினம் அல்லது நேரம் பிடிக்கும் வேலை என்பதால் நமது வசதிக்காக நிகழ்தகவை பயன்படுத்தி தலை விழுவதற்கு 50% என்றும் பூ விழுவதற்கு 50% என்றும் கூறுகிறோம்.
ஆனால் குவாண்டம் இயற்பியலில் நிகழ்தகவை பயன்படுத்துவதற்கான காரணம் வேறு. நமது இயலாமையோ அல்லது கணித ரீதியாக கடினமாக இருப்பதோ அல்லது தொழில் நுட்ப ரீதியாக சிறந்த கருவிகள் இல்லாததோ அல்ல. அடிப்படையிலேயே அணுக்களின் உலகம் சீரற்ற தன்மையில் (random nature) இயங்குகிறது. மிகச்சிறந்த கருவிகளை வைத்து நாம் எலக்ட்ரானின் இயக்கத்தை கண்காணித்தால் கூட அடுத்த நொடி எது எங்கே செல்லும் என்று நம்மால் கூற முடியாது. எனவே தான் இங்கு நிகழ்தகவு பயன்படுத்தப்படுகிறது. இதுதான் ஐன்ஸ்டீனுக்கு மிக நெருடலாக இருந்தது. அதெப்படி கோட்பாட்டு ரீதியாகக்கூட அணுக்களின் இயக்கத்தை கணிக்கமுடியாதா? அறிவியல் கோட்பாடு என்பது ஒரு பொருளின் நிகழ்கால இயக்கம் பற்றி தெரிந்தால் எதிர்காலத்தை கணிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். இது நடக்கவும் சாத்தியம், அது நடக்கவும் சாத்தியம் எனக்கூறினால் அது சரியான அறிவியல் கோட்பாடே அல்ல என்று அவர் கருதினார். “கடவுள் ஒன்றும் தாயக்கட்டை விளையாடுபவரல்ல (God does not play dice)” என்பது குவாண்டம் இயற்பியல் குறித்த அவரது பிரபலமான கூற்று.
ஹைசன்பெர்க் தத்துவம்
குவாண்டம் இயற்பியலின் அடுத்த வினோதத்தன்மை ஒரே நேரத்தில் எலக்ட்ரானின் இருப்பிடத்தையும், அதன் திசைவேகத்தையும் துல்லியமாக தெரிந்து கொள்ள முடியாது என்று கூறுகிறது. எலக்ட்ரான் எங்கிருக்கிறது என்று துல்லியமாக தெரிந்தால் அதன் திசைவேகத்தை துல்லியமாக தெரிந்து கொள்ள முடியாது. ஒருவேளை எலக்ட்ரானின் திசைவேகம் துல்லியமாக தெரிந்தால் அதன் இருப்பிடம் எங்கு இருக்கிறது என்று துல்லியமாக தெரிந்து கொள்ள முடியாது. குவாண்டம் இயற்பியலில் இதை ஹைசன்பர்க் தத்துவம் என்கிறோம். இங்கு “துல்லியமாக” என்ற சொல்லை நாம் கவனிக்க வேண்டும். ஒரே நேரத்தில் எலக்ட்ரானின் இருப்பிடத்தையும், திசைவேகத்தையும் நாம் துல்லியமாகத்தான் தெரிந்து கொள்ள முடியாதே தவிர நாம் தெரிந்து கொள்ளலாம். அதாவது கொஞ்சம் பிழையோடுதான் தெரிந்து கொள்ள முடியும். அதே போல் ஒரு குவாண்டம் துகளின் ஆற்றலையும், அது எந்த நேரத்தில் அந்த ஆற்றலை பெற்றிருக்கிறது என்பதனையும் துல்லியமாக கூற முடியாது. கொஞ்சம் பிழையோடுதான் தெரிந்து கொள்ள முடியும்.
இதற்கு காரணம் நமது இயலாமையாலோ அல்லது மேம்பட்ட அளவிடும் சாதனங்கள் இல்லாததாலோ அல்ல. அதுதான் இல்லை. இயற்கையிலேயே அணுக்களின் உலகத்தில் சில பண்புகளின் மதிப்புகளை ஒரே நேரத்தில் துல்லியமாக தெரிந்து கொள்ள முடியாது என்று குவாண்டம் இயற்பியல் கூறுகிறது. மற்றபடி ஒரே நேரத்தில் ஒரே ஒரு பண்பின் மதிப்பை துல்லியமாக தெரிந்து கொள்வதில் அதாவது அளவிடுவதில் எந்த சிக்கலும் இல்லை.
இது எலக்ட்ரானுக்கு மட்டுமல்ல புரோட்டான்கள், நியுட்ரான்கள், அணுக்கள் மற்றும் மூலக்கூறுகள் என அனைத்துக்கும் பொருந்தும். ஆனால் நியூட்டனின் கோட்பாட்டில் அப்படி இல்லை. இந்த நொடியில் நிலா எங்கு இருக்கிறது, என்ன திசை வேகத்தில் செல்கிறது, என்ன ஆற்றல் பெற்றிருக்கிறது என அனைத்து இயற்பியல் பண்புகளையும் என்று துல்லியமாகக் கூற முடியும். நடைமுறையில் கடினமாக இருந்தால் கூட குறைந்தபட்சம் கோட்பாட்டு ரீதியாக நியூட்டன் விதிகளால் இதைக் கூற முடியும். ஆனால் குவாண்டம் இயற்பியல் கோட்பாட்டு ரீதியாகவே சில பண்புகளின் மதிப்புகளை துல்லியமாக ஒரே நேரத்தில் தெரிந்து கொள்ள முடியாது முடியாது எனக் கூறுகிறது.
துகள் மற்றும் அலை இரட்டைப்பண்பு
குவாண்டம் இயற்பியலில் அடுத்த வினோதத்தன்மை: அணுக்கள், எலக்ட்ரான்கள், புரோட்டான்கள், மூலக்கூறுகள் சில நேரங்களில் துகள் பண்பை வெளிப்படுத்தும். சில நேரங்களில் அலைப் பண்பை வெளிப்படுத்தும். இதை டிப்ராய் என்பவர் முதன்முதலில் கோட்பாட்டு ரீதியாக கூறினார். பின்னாளில் பரிசோதனையில் நிரூபிக்கப்பட்டது.
ஆனால் நாம் கண்ணால் காணும் பொருட்கள் துகள் பண்பை மட்டுமே கொண்டிருக்கிறது. நியூட்டனின் கோட்பாடும் இதைத்தான் கூறுகிறது. எலக்ட்ரானின் அலைப்பண்பை அடிப்படையாக வைத்துத்தான் எலக்ட்ரான் நுண்ணோக்கி செயல்படுகிறது. குவாண்டம் துகள்களின் இந்த இரட்டைப்பண்பு தொழில்நுட்ப உலகில் பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.
ரியலிசம் என்ற எதார்த்தவாதம்
குவாண்டம் இயற்பியலின் அடுத்த வினோதத்தன்மை கொஞ்சம் ஏற்றுக்கொள்ள கடினமானது. ஆனால் இந்த வருட இயற்பியல் நோபல் பரிசுக்கும் இதற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
ஒரு பொருளுக்கு பல்வேறு இயற்பியல் பண்புகள் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட கணத்தில் அதன் இருப்பிடம், திசை வேகம், ஆற்றல், உந்தம், கோண உந்தம் என பல்வேறு பண்புகள் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக ஒரு பந்தை நாம் உயரே தூக்கி எறிவோம். ஒவ்வொரு நொடியும் அதன் நிலை அல்லது இருப்பிடம் மாறிக்கொண்டே இருக்கும். அதாவது ஒவ்வொரு நொடியும் அதன் எண்மதிப்பு மாறிக்கொண்டே இருக்கும். வேகத்தின் மதிப்பு முதலில் குறைந்து ஒரு குறிப்பிட்ட உயரத்தில் சுழியாகி பின் கீழ்நோக்கி விழும்போது அதிகரிக்கும். போலவே, அதன் இயக்க ஆற்றலின் மதிப்பும் தொடர்ந்து மாறுகிறது.
பந்தின் இந்த இயற்பியல் பண்புகளின் மதிப்புகளை ஒரு குறிப்பிட்ட கணத்தில் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அதற்குரிய அளவிடும் கருவியை வைத்து அளவிட்டால் அந்த பண்பின் மதிப்பு தெரிந்து விடும். அல்லது நியூட்டன் சமன்பாடுகளை கணித ரீதியாக தீர்ப்பதன் மூலம் அப்பண்புகளின் மதிப்புகளை கணக்கிடலாம்.
எடுத்துக்காட்டாக பைக்கில் செல்லும் ஒருவரின் வேகத்தை கண்டறிய டிராபிக் போலீஸ்காரர் ரேடார் கருவியைப் பயன்படுத்துகிறார். கருவியை பைக்கை நோக்கி பிடித்தால் போதும். ரேடாரிலிருந்து செல்லும் ரேடியோ அலைகள் பைக்கின் மீது பட்டு எதிரொலிக்கின்றன. அப்படி எதிரொலிக்கப்பட்ட ரேடியோ அலைகளை மீண்டும் அக்கருவியில் வந்து மோதும்போது, பைக் செல்லும் வேகத்தை அளவிடலாம். இங்கு போலீஸ்காரர் அளவிட்டாலும் அல்லது அளவிடவில்லை என்றாலும், பைக்கின் வேகம் அந்த நொடியில் ஒரு குறிப்பிட்ட மதிப்பை பெற்றுள்ளது. அளவிடுதல் என்பதனைப் பொருத்து அப்பண்பின் மதிப்பு அமைவதில்லை.
ஒரு இயற்பியல் பண்பினை அளவிட்டாலும் அல்லது அளவிடாவிட்டாலும் ஒரு குறிப்பிட்ட கணத்தில் அதற்கு ஒரு குறிப்பிட்ட எண்மதிப்பு இருக்கிறது. பொது அறிவுள்ள அனைவரும் இதை ஏற்றுக் கொள்வர். இந்தத் தன்மையை இயற்பியலில் “ரியலிசம் (realism) அல்லது எதார்த்த வாதம்” என்று அழைக்கிறோம்.
இந்த இருத்தலியல் கருத்தின்படி, ஒரு பண்பிற்கான எண்மதிப்பு சுழியாக (may be zero) இருக்கலாம். அல்லது நேர்க்குறி மதிப்பாக இருக்கலாம் (may be positive value). அல்லது எதிர்க்குறி மதிப்பாக இருக்கலாம் (may be negative value). ஆனால் குவாண்டம் இயற்பியல் இந்த ரியலிசம் அல்லது எதார்த்த வாதத்தை மறுக்கிறது.
குவாண்டம் இயற்பியல்படி அணுக்களின் உலகத்தில் இருக்கும் பொருளின் பண்பை நாம் அளவிடும் வரை அப்பண்புக்கான எண்மதிப்பு (value of the property) என்ற ஒன்று இல்லை. அளவிடும்போதுதான் அப்பண்புக்கான எண்மதிப்பு உருவாகிறது. அதாவது அளவிடும் செயல்தான் அப்பண்புக்கான மதிப்பை உருவாக்குகிறது.
எலக்ட்ரானின் திசைவேகத்தை நாம் அளவிடும் கருவியை வைத்து அளவிடும் போது மட்டுமே அந்தப்பண்புக்கான எண்மதிப்பு ஒன்று உருவாகிறது. அதுவரை அப்பண்புக்கான மதிப்பு என்ற ஒன்று இல்லை. எலக்ட்ரானின் இருப்பிடத்தை நாம் அளவிடும் போதுதான் அது ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருப்பதாக காட்டுகிறது. அதற்கு முன்புவரை அது எங்கிருந்தது என்ற கேள்விக்கு அர்த்தமில்லை. அதாவது அது எங்குமில்லை.
இது நியூட்டனின் இயற்பியலுக்கு நேர்மாறாக இருக்கிறது. அதுவரை ரியலிசம் அல்லது எதார்த்த வாதம் என்பது அறிவியல் கோட்பாட்டின் அடிப்படைத்தன்மை என்று அனைவரும் நம்பி வந்தனர். ஆனால் குவாண்டம் இயற்பியல் இந்த தத்துவப் பார்வையை மறுக்கிறது.
குவாண்டம் இயற்பியலின் இந்தக்கருத்து நாம் இதுவரை நம்பி வந்த தர்க்கத்திற்கு எதிராக இருக்கிறது. குவாண்டம் இயற்பியல் உருவான காலத்திலும் இந்த கருத்து மிகக்கடுமையாக விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இதை மிகக்கடுமையாக எதிர்த்தார். அவர் வேடிக்கையாக “நாம் வானத்தை பார்க்கிறோமோ இல்லையோ நிலா வானத்தில் ஏதோ ஒரு இடத்தில் இருந்துதானே ஆக வேண்டும்” என்று கேட்டார்.
ஆனால் குவாண்டம் இயற்பியல்படி “நாம் கண்ணாலோ அல்லது தொலைநோக்கியாலோ வானத்தை நோக்கி பார்க்கும் போது மட்டுமே நிலா ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருப்பதாகக் தெரிகிறது. நாம் பார்க்கும் வரை நிலா வானத்தில் எங்கும் இல்லை”. இதைக் கேட்பதற்கு கொஞ்சம் பைத்தியக்காரத்தனமாக தெரியலாம். ஆனால் அதுதான் குவாண்டம் இயற்பியல்.
இப்படி பல்வேறு வகைகளில் இக்கோட்பாடு முன்னுக்குப்பின் முரணாக கூறினாலும் நாம் ஒன்றை மறந்துவிடக்கூடாது. இன்று நாம் வைத்திருக்கும் பல்வேறு தொழில்நுட்ப சாதனங்கள் அனைத்தும் குவாண்டம் இயற்பியலின் பங்களிப்பாகும்.
ஏன் குவாண்டம் இயற்பியலின் பல்வேறு கருத்துக்கள் நமக்கு விநோதமாக இருக்கிறது அல்லது பொது அறிவிற்கு (common sense) எதிராகத் தோன்றுகிறது?
மனித இனமானது 3000 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பொருட்களோடு உறவாடி நாகரீக அறிவு அல்லது பொதுப்புரிதல் அல்லது தர்க்க அறிவு என்ற ஒன்றை உருவாக்கி இருக்கிறது. நீர், நிலம் கடல், காற்று, மழை, காடு, மலை, நிலா, சூரியன், விண்மீன்கள் என கண்ணால் காணக்கூடிய, தொட்டு உணரக்கூடிய பொருட்களோடு உறவாடி அதன் பண்புகளை, இயக்கத்தை பல்லாயிரம் ஆண்டுகளாக பார்த்துப் பார்த்து இந்த தர்க்க அறிவானது மனித இனத்திற்கு உருவாகி இருக்கிறது. இந்த தர்க்க அறிவை வைத்து அணுக்களின் இயக்கத்தை, அணுக்களின் உலகத்தை புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்.
ஆனால் அடிப்படையிலேயே நமது மூளையில் இருக்கும் இந்த தர்க்க அறிவு அணுக்களோடோ எலக்ட்ரான்களோடோ பழகி உருவானதல்ல.. எனவே அணுக்களோ, எலக்ட்ரானோ, புரோட்டானோ நமது தர்க்க அறிவுக்கு ஏற்ற மாதிரி நடந்து கொள்ள வேண்டும் என்று எப்படி நாம் எதிர்பார்க்க முடியும்? இதனால்தான் குவாண்டம் கோட்பாடு நமக்கு பல வகைகளில் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கின்றது.
இ.பி.ஆர் முரண்பாடு (EPR Paradox)
குவாண்டம் கோட்பாடு ரியலிசத்திற்கு எதிராக இருப்பதால் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இது ஒரு முழுமையான அறிவியல் கோட்பாடு என்று ஏற்றுக்கொள்ள மறுத்தார். தனது கருத்துக்கு வலு சேர்க்க போடோல்ஸ்கி (Podolsky) மற்றும் ரோசன் (Rosen) ஆகியோருடன் ஒன்று சேர்ந்து கூட்டாக ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை 1935இல் வெளியிட்டார்.
இதை ஆங்கிலத்தில் Einstein-Podolsky-Rosen Paradox சுருக்கமாக EPR Paradox என்று அழைக்கப்படுகிறது. இந்த வருட நோபல் பரிசின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் இ.பி.ஆர். ஆராய்ச்சிக்கட்டுரையின் சாராம்சத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
குவாண்டம் பிணைப்பு மற்றும் எலக்ட்ரான் ஸ்பின்
குவாண்டம் துகள்களின் (அணுக்கள், எலக்ட்ரான்கள், புரோட்டான்கள், நியுட்ரான்கள், மூலக்கூறுகள்) இயக்கம் பற்றிய நிகழ்தகவை விளக்குவதற்கு அலைச்சார்பு (wave function) என்ற கணிதவியல் மாறி (variable) பயன்படுத்தப்படுகிறது. இந்த அலைச்சார்பின் மதிப்புகளை பெற நாம் ஸ்ரோடிங்கர் சமன்பாட்டை அல்லது டிராக் சமன்பாட்டை தீர்வு காண வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குவாண்டம் துகளின் ஒரு குறிப்பிட்ட இயற்பியல் பண்பின் மதிப்பை தெரிந்து கொள்ள வேண்டுமானால் அதன் அலைச்சார்பைப் பயன்படுத்தி அந்த குறிப்பிட்ட மதிப்பை பெற என்ன நிகழ்தகவு என்று கண்டறிய முடியும். எளிதாக புரிந்து கொள்ள எலக்ட்ரானை எடுத்துக்கொள்வோம். பொதுவாக ஒரு எலக்ட்ரானின் நிலையைக் குறிப்பிட ஒரு அலைச்சார்பு தேவை. இரு எலக்ட்ரான்களின் நிலையைக் குறிக்க இரண்டு அலைச்சார்புகள் தேவை.
ஆனால் ஒரு சில நேரங்களில் இரண்டு எலக்ட்ரான்கள் ஒரு விதமான பிணைப்பில் இருந்தால் இரண்டின் நிலையை விளக்க ஒரே ஒரு அலைச் சார்பு மட்டுமே போதும். இந்த பிணைப்பு “குவாண்டம் பிணைப்பு (Quantum entanglement)” என்றழைக்கப்படுகிறது. பிணைப்பு என்றதும் இரு எலக்ட்ரான்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டிருக்கின்றது என்று அர்த்தம் அல்ல. இங்கே குவாண்டம் பிணைப்பு என்பது இரு எலக்ட்ரான்களின் பண்புகளின் பிணைப்பு.
எலக்ட்ரான்களுக்கு நிறை, மின்னூட்டம் போன்ற அடிப்படை உள்ளார்ந்த பண்புகள் (intrinsic properties) இருக்கின்றன. அதோடு “ஸ்பின் (spin)” என்ற உள்ளார்ந்த கோண உந்தப்பண்பும் (intrinsic angular momentum) எலக்ட்ரான்களுக்கு இருக்கிறது. இப்பண்பு 1930களில் முதன்முதலாக கண்டறியப்பட்டது. நிறை, மின்னூட்டம் போன்ற பண்புகள் எண் அளவுகள் மட்டுமே. அதாவது இப்பண்புகளை குறிக்க கணித ரீதியாக எண் மட்டும் போதுமானது. ஆனால் இந்த “ஸ்பின்” பண்பு ஒரு திசை அளவு ஆகும். எண் மற்றும் திசை இரண்டுமே தேவை. ஸ்பின் திசையை அளக்க நாம் காந்தபுலத்தை பயன்படுத்த வேண்டும்.
ஒரு ரூபாய் நாணயத்துக்கு பூ, தலை என்ற இரண்டு சாத்தியக்கூறுகள் உள்ளது போல் எலக்ட்ரானின் ஸ்பின் பண்புக்கு இரண்டு சாத்தியமான திசைகள் உள்ளது. எடுத்துக்காட்டாக காந்த புலத்தை மேல் நோக்கிய திசையில் வைத்து எலக்ட்ரானை இந்த காந்தப்புல பகுதியில் செலுத்தினால் அதன் ஸ்பின் திசையானது காந்தபுலத்திசைக்கு இணையாக மேல் நோக்கி இருக்கும் அல்லது காந்தப்புலத்திசைக்கு எதிர்த்திசையில் கீழ்நோக்கி இருக்கும். இந்த இரண்டு சாத்தியங்கள்தான்.
ஒரு வேளை காந்தபுலத்தை வலப்புற திசையில் செலுத்தினால் எலக்ட்ரானின் ஸ்பின் திசை வலப்புறமாக இருக்கும் அல்லது இடப்புறமாக இருக்கும். எப்போதும் எலக்ட்ரானின் ஸ்பின் திசையானது நாம் காந்த புலத்தை எந்த திசையில் வைக்கிறோமோ அத்திசைக்கு இணைதிசையில் இருக்கும். அல்லது அதன் எதிர்த்திசையில் இருக்கும்.
நாம் ஏற்கனவே பார்த்தது போல் குவாண்டம் இயற்பியல் எலக்ட்ரானின் ஸ்பின் திசை காந்தபுலத்தின் திசைக்கு இணையான திசையில் இருக்குமா அல்லது அதன் எதிர்த்திசையில் இருக்குமா என்று முன்கூட்டியே கூறாது. அதாவது அந்த கேள்வியே குவாண்டம் இயற்பியல் படி அர்த்தமற்றது. மாறாக நாம் காந்தபுலத்தை ஒரு குறிப்பிட்ட திசையில் வைத்து எலக்ட்ரானின் ஸ்பின் திசையை அளவிட்டால், காந்தபுலத்திற்கு இணையான திசையில் ஸ்பின் இருப்பதற்கு என்ன நிகழ்தகவு அல்லது அதற்கு எதிர்த்திசையில் ஸ்பின் இருப்பதற்கு என்ன நிகழ்தகவு என்று மட்டுமே கூறும்.
இப்போது குவாண்டம் பிணைப்பில் உள்ள இரு எலக்ட்ரான்களை எடுத்துக் கொள்வோம். அதில் ஒரு எலக்ட்ரானை பூமியிலும், இன்னொரு எலக்ட்ரானை வியாழன் கிரகத்திலும் வைத்துள்ளதாக கருதுவோம். இப்போது பூமியில் உள்ள எலக்ட்ரானின் ஸ்பின் திசையை அளக்கும்போது அது மேல் நோக்கி இருப்பதாகக்காட்டினால், அதே நொடியில் வியாழன் கோளில் உள்ள எலக்ட்ரானின் ஸ்பின் திசையானது கண்டிப்பாக கீழ்நோக்கித்தான் இருக்கும். ஒரு வேளை பூமியில் உள்ள எலக்ட்ரானின் ஸ்பின் திசை கீழ் நோக்கி இருப்பதாக நாம் கண்டறிந்தால் அதே நொடியில் வியாழன் கோளில் இருக்கும் இன்னொரு எலக்ட்ரானின் ஸ்பின் திசை மேல் நோக்கித்தான் இருக்கும். இதுதான் குவாண்டம் பிணைப்பு. அதாவது பண்புகளின் பிணைப்பு.
குவாண்டம் பிணைப்பிலுள்ள இரு எலக்ட்ரான்களில் ஒரு எலக்ட்ரானின் ஸ்பின் திசை தெரிந்தால் இன்னொரு எலக்ட்ரானின் ஸ்பின் திசையை நாம் அளக்காமலேயே தெரிந்து கொள்ள முடியும். அது எவ்வளவு தொலைவில் இருந்தாலும் சரி.
ஆனால் இங்கேதான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது.
பூமியில் இருக்கும் எலக்ட்ரானின் ஸ்பின் திசையை நாம் அளவிடும் கருவியை வைத்து கண்டுபிடிக்கும் போது நமக்கு தெரிய வரும் திசை எப்படி வியாழன் கிரகத்தில் உள்ள எலக்ட்ரானுக்கு அதே நொடியில் எப்படி தெரிய வருகிறது?
ஏனென்றால் ஐன்ஸ்டீன் சார்பியல் தத்துவத்தின்படி எந்த ஒரு தகவலும் ஒளியின் வேகத்தை தாண்டி பயணிக்க முடியாது. பூமியின் இருக்கும் எலக்ட்ரானின் ஸ்பின் திசை குறித்த தகவல் ஒளியின் வேகத்தில் பரவினால் கூட சார்பியல் கோட்பாடுபடி வியாழன் கோளை அடைய குறைந்தபட்சம் சில நொடிகளாவது ஆகும். ஆனால் வியாழன் கிரகத்திலுள்ள எலக்ட்ரான் பூமியின் உள்ள எலக்ட்ரானின் ஸ்பின் திசையை நாம் அளக்கும்போது என்ன திசை காட்டியது என்று அதே நொடியே தெரிந்து கொண்டால் மட்டுமே அதற்கேற்றார்போல் தனது ஸ்பின் திசையை மாற்றிக்கொள்ள முடியும்.
இது ஐன்ஸ்டீன் எழுப்பிய முதல் கேள்வி. ஏனென்றால் இந்த உடனடி தகவல் பரிமாற்றம் ஐன்ஸ்டீன் சார்பியல் கோட்பாட்டின் படி சாத்தியமே இல்லை.
அவர் எழுப்பிய இரண்டாவது கேள்வி பூமியில் இருக்கும் எலக்ட்ரானின் ஸ்பின் திசையை நாம் அளவிடுவதற்கு முன் அது எந்த திசையில் இருந்தது என்ற கேள்விக்கு குவாண்டம் இயற்பியல் சொன்ன பதில் அவருக்கு இன்னும் அதிருப்தியை உண்டாக்கியது.
குவாண்டம் இயற்பியல்படி ஸ்பின் திசையை அளவிடுவற்கு முன் எலக்ட்ரான் ஸ்பின் பண்பானது மேல் நோக்கியும் இருக்கும், கீழ் நோக்கியும் இருக்கும். அதாவது இரண்டும் சேர்ந்த கலவை. அதெப்படி சாத்தியம்? ஒன்று மேல் நோக்கி இருக்க வேண்டும் அல்லது கீழ் நோக்கி இருக்க வேண்டும். மனிதன் ஒன்று உயிரோடு இருக்கலாம் அல்லது இறந்து விடலாம். ஆனால் ஒரே நேரத்தில் உயிரோடும், இறந்தும் இருக்க முடியாதல்லவா!! ஒரே நேரத்தில் ஏதாவது ஒன்றுதானே இருக்க முடியும். நமது காமன் சென்சும் மிக ஆழமாக இந்த கருத்தை நம்புகிறது. ஆனால் குவாண்டம் உலகம் நமது காமன் சென்ஸ் படி நடக்க எந்த தேவையும் இல்லையல்லவா. ஒரு தடவை நீல்ஸ் போர் இவ்வாறு கூறினார் “யாரேனும் குவாண்டம் இயற்பியலை படிக்கும்போது முதலில் அதிர்ச்சியடையவில்லை என்றால் ஒரு வேளை அவருக்கு குவாண்டம் இயற்பியல் புரியாமல் இருக்கலாம்”
ஐன்ஸ்டீன் கண்ணால் காணக்கூடிய பொருளாக இருந்தாலும் சரி, அணுக்கள் உலகமாக இருந்தாலும் சரி எல்லாமும் எதார்த்தவாத பண்பை கொண்டிருக்க வேண்டும். நாம் பார்க்கிறோமோ இல்லையோ, அளவிடுகிறோமோ இல்லையோ ஒரு பொருளுக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பண்புக்கான துல்லிய மதிப்பு ஒன்று “இருந்தாக வேண்டும்” என்று ஆழமாக நம்பினார். பொருளுக்கான புறவய எதார்த்தம் (objective reality) நம்மை சார்ந்து இருக்க முடியாது. அது ஒவ்வொரு பொருளுக்கான உள்ளார்ந்த பண்பு. ஆனால் குவாண்டம் இயற்பியல் புறவய எதார்த்தம் என்ற ஒன்று இல்லை, நாம் ஒரு குவாண்டம் துகளின் பண்பை அளவிடும்போதுதான் அதற்கு ஒரு புறவய எதார்த்தத்தை உருவாக்குகிறோம் (observing act creates the reality) என்று கூறுகிறது. இதை ஐன்ஸ்டீனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்த சிக்கலை தீர்க்க ஐன்ஸ்டீன் இன்னொரு மாற்று கருத்தை முன் வைத்தார். அதாவது எலக்ட்ரான்கள் குவாண்டம் பிணைப்பில் உருவாகும்போது அந்த எலக்ட்ரான்களின் ஸ்பின் திசை தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. இப்போது இந்த இரு எலக்ட்ரான்களில் ஒன்றை பூமியிலும் இன்னொன்றை வியாழன் கிரகத்திலும் வைத்துவிட்டு ஒரு குறிப்பிட்ட கணத்தில் பூமியில் இருக்கும் எலக்ட்ரானின் ஸ்பின் திசையை அளவிட்டால் என்ன திசை காட்ட வேண்டும் என்று எலக்ட்ரானுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கிறது. அதே போல் வியாழன் கோளில் இருக்கும் எலக்ட்ரானிலும் இந்த தகவல் இருக்கிறது. இந்த தகவல் படி தான் இவ்விரு எலக்ட்ரான்களும் தனது ஸ்பின் திசையை ஒன்றுக்கேற்றார் போல் இன்னொன்று மாற்றிக்காட்டுகிறது என்று ஐன்ஸ்டீன் கூறினார்.
எந்த நேரத்தில் எந்த ஸ்பின் திசையை காட்ட வேண்டும் என்ற தகவல் எலக்ட்ரானுக்குள் மறைந்திருக்கிறது. இந்த தகவலை குவாண்டம் கோட்பாட்டால் தெரிந்து கொள்ள முடியவில்லை என்றார். எனவே குவாண்டம் இயற்பியல் ஒரு முழுமை பெறாத கோட்பாடு என்று இ.பி.ஆர். கட்டுரையில் கூறினார்.
ஐன்ஸ்டீனின் இந்த புதிய கருத்து “மறைமாறிக் கோட்பாடு (hidden variable theory)” என்றழைக்கப்படுகிறது. இந்தக் கோட்பாட்டின் படி ஒவ்வொரு பொருளுக்கும் புறவய எதார்த்தம் என்ற ஒன்று உண்டு. ஆனால் ஒவ்வொரு பொருளுக்கும் இருக்கும் பண்புகளின் மதிப்பு அப்பொருளுக்கென்று உள்ள மறைமாறியை (hidden variable) சார்ந்து உள்ளது. இந்த மறைமாறியை குவாண்டம் கோட்பாடால் கணித ரீதியாக கண்டறிய முடியவில்லை என்பது அவரது நிலைப்பாடு.
இ.பி.ஆர். கட்டுரையை ஐன்ஸ்டீன் வெளியிட்ட போது இயற்பியல் உலகில் பெரும் அதிர்வலைகளை அது ஏற்படுத்தியது. நாளிதழ்கள் கூட “ஐன்ஸ்டீன் குவாண்டம் இயற்பியலை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறார்” என்று எழுதின. கீழே உள்ள படம் நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் 1935 ஆம் ஆண்டு மே மாதம் 4 தேதி வந்த முதல் பக்கம்.
ஐன்ஸ்டீன் சொல்வது சரியா அல்லது குவாண்டம் இயற்பியல் சொல்வது சரியா என்று எப்படி தெரிந்து கொள்வது? ஆய்வக பரிசோதனைதான் ஒரே வழி. ஆனால் அதிலும் ஒரு நடைமுறைச் சிக்கல் இருக்கிறது.
குவாண்டம் இயற்பியல் ஒரு முடிவும், மறைமாறிக் கோட்பாடு இன்னொரு முடிவும் சொன்னால் நாம் ஆய்வக பரிசோதனை செய்து முடிவு எதற்கு சாதகமாக இருக்கிறதோ அந்தக் கோட்பாடுதான் சரி என்று சொல்லி விடலாம். ஆனால் குவாண்டம் இயற்பியலும், மறைமாறிக் கோட்பாடும் ஒரே முடிவைத்தான் இரு வேறு வகைகளில் விளக்குகின்றன. இந்த இரு வேறு விளக்கங்களில் எந்த விளக்கம் சரி என்று எப்படி முடிவெடுப்பது?
கிட்டத்தட்ட இது ஒரு தத்துவார்த்த பிரச்சினையாக தெரிந்ததால் இப்பிரச்சினையை அப்போது யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. மாறாக குவாண்டம் இயற்பியலை பயன்படுத்தி நடைமுறை பயன்பாட்டு ஆராய்ச்சிகள் நிறைய நடைபெற்று டிரான்சிஸ்டர், லேசர் போன்ற பல்வேறு தொழில்நுட்ப சாதனங்கள் உருவாக்கப்பட்டன.
பெல் தேற்றம் (Bell’s theorem)
கிட்டத்தட்ட 30 வருடம் கழித்து அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜான் பெல் என்ற இயற்பியல் அறிஞர் ஐன்ஸ்டீன் குவாண்டம் இயற்பியல் குறித்து எழுப்பிய தத்துவார்த்த பிரச்சனை குறித்து தீவிரமாக சிந்தித்தார்.
1964 இல் அவர் குவாண்டம் இயற்பியலின் விளக்கம் சரியா அல்லது ஐன்ஸ்டீன் சொல்லும் விளக்கம் சரியா என்று கண்டுபிடிக்க ஒரு அற்புதமான கணக்கியல் தொடர்பை உருவாக்கினார். இது பெல் சமத்துவமின்மை தொடர்பு (Bell’s inequality) அல்லது பெல் தேற்றம் என்றழைக்கப்படுகிறது.
இந்த தேற்றத்தின் படி குவாண்டம் பிணைப்பில் உள்ள இரு எலக்ட்ரான்களை நாம் பரிசோதனைக்கு உட்படுத்தினால் வரும் எண் இரண்டுக்கும் கீழே இருந்தால் ஐன்ஸ்டீனின் மறைமாறிக் கோட்பாடு சொல்வது சரி. இரண்டுக்கும் மேல் இருந்தால் குவாண்டம் இயற்பியல் சொல்வது சரி. அதாவது பெல் தேற்றத்தை வைத்து அணுக்களின் உலகம் பற்றிய குவாண்டம் இயற்பியலின் விளக்கம் சரியா அல்லது ஐன்ஸ்டீன் சொல்லும் விளக்கம் சரியா என்று முடிவெடுக்க முடியும்.
இப்போது அடுத்த சவால். பெல் தேற்றத்தை பயன்படுத்துவற்கு ஏற்ற ஆய்வக பரிசோதனையை உருவாக்க வேண்டும். இங்குதான் இந்த வருடம் நோபல் பரிசு வாங்கிய மூவரில் ஒருவரான ஜான் கிளாசர் வருகிறார். 1969 இல் கிளாசர், ப்ரீட்மென் மற்றும் அவரது ஆராய்ச்சிக்குழு இணைந்து பெல் தேற்றத்தை பயன்படுத்துவதற்கான புதிய ஆய்வக பரிசோதனையை உருவாக்கினர்.
இந்த ஆய்வில் குவாண்டம் பிணைப்பில் உள்ள இரு எலக்ட்ரான்களுக்கு பதில் குவாண்டம் பிணைப்பில் உள்ள இரு போட்டான்களை அவர்கள் எடுத்துக் கொண்டனர். (ஒளி என்பது போட்டான்கள் எனப்படும் ஆற்றல் துகள்கள் என ஐன்ஸ்டீன் 1905 இல் நிறுவியிருந்தார். நீல நிற ஒளி என்பது நீல போட்டான்களின் தொகுப்பு. சிகப்பு நிற ஒளி என்பது சிகப்பு போட்டான்களின் தொகுப்பு. அகச்சிவப்புக்கதிர்கள் என்பது அகச்சிவப்பு போட்டான்களின் தொகுப்பு) எலக்ட்ரானுக்கு ஸ்பின் என்ற பண்பு இருப்பது போல் போட்டானுக்கு துருவப்பண்பு (polarization) என்ற உள்ளார்ந்த பண்பு இருக்கிறது. இதுவும் திசை அளவு கொண்ட ஒரு பண்பு. எலக்ட்ரானின் ஸ்பின் திசையை கண்டறிய காந்தப்புலம் பயன்படுத்தப்படுவது போல் போட்டானின் துருவ திசையைக் கண்டறிய போலராய்டு என்ற கருவியைப் பயன்படுத்த வேண்டும்.
குவாண்டம் இயற்பியலின் முதல் தத்துவார்த்த வெற்றி
கால்சியம் அணுவை கிளர்ச்சி அடையச் செய்தால், அதிலிருந்து வெளிவரும் போட்டான்கள் குவாண்டம் பிணைப்பில் இருக்கும். கிளாசர், இப்போட்டான்களை எதிரெதிர் திசையில் அனுப்பி அதன் துருவத்திசையை இரு போலராய்டுகளை வைத்து அளவிட்டார்.
இந்த ஆய்வு முடிவுகளை பெல் தேற்றத்தில் பயன்படுத்திய போது வந்த எண் இரண்டுக்கும் மேல் இருந்தது. இது யாரும் எதிர்பாராதது. அப்படி என்றால் குவாண்டம் இயற்பியல் சொல்வது தான் சரியென்றானது.
பின்னாளில் கிளாசர் நகைச்சுவையாக “நான் ஐன்ஸ்டீன் சொல்வதுதான் சரி என நிரூபிக்க முயன்றேன். ஆனால் என்னுடைய பரிசோதனையே ஐன்ஸ்டீனைத் தவறு என்று நிரூபித்து விட்டதே” என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார். தத்துவார்த்த ரீதியாக குவாண்டம் இயற்பியலுக்கு இது ஒரு மிகப்பெரிய வெற்றி.
ஆனாலும் கிளாசர் பரிசோதனையில் சில ஓட்டைகள் (loop holes) இருந்தது. அது என்னவென்றால் குவாண்டம் பிணைப்பு போட்டான்கள் அதன் மூலத்திலிருந்து வெளிவரும் முன்பே போலராய்டு கருவிகள் குறிப்பிட்ட திசையில் வைக்கப்பட்டிருந்தது. ஒருவேளை போட்டான்கள் உருவாகும்போதே தூரத்தில் வைக்கப்பட்டிருந்த போலராய்டுகளின் திசை பற்றிய தகவல் போட்டான்களுக்கு தெரிந்திருந்தால் கூட அந்த திசைக்கு ஏற்ப போட்டான்கள் தனது துருவத்திசையை மாற்றிக் காட்டலாம் அல்லவா. இதை வைத்து குவாண்டம் இயற்பியல் சரி என்று எப்படி முடிவெடுக்க முடியும்?
இக்கருத்தை உடைக்க வேண்டும் என்றால் குவாண்டம் இணைப்பு போட்டான்கள் மூலத்திலிருந்து புறப்பட்ட பிறகு போலராய்டுகளை வந்தடைவதற்குள் போலராய்டுகளின் திசையை மாற்றி அமைக்க வேண்டும். அப்போது கண்டிப்பாக போட்டான்களுக்கு போலராய்டுகளின் திசை முன்கூட்டியே தெரிய வாய்ப்பிருக்காது. ஆனால் போட்டான்கள் வினாடிக்கு மூன்று லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பயணிப்பதால் போலராய்டுகளின் திசையை மிக மிகக்குறுகிய நேரத்தில் மாற்ற வேண்டும். இவ்வளவு குறைந்த நேரத்தில் போலராய்டுகளின் திசையை மாற்றக்கூடிய தொழில்நுட்பம் அப்போது இல்லை.
ஆலன் அஸ்பேவின் திறமை
10 ஆண்டுகளுக்கு கழித்து பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆலன் அஸ்பே இந்த சவாலில் 1982 இல் வெற்றி கொண்டார். அவர் உருவாக்கிய கருவியானது போட்டான்கள் அதன் மூலத்திலிருந்து புறப்பட்டு போலராய்டை வந்தடைவதற்குள் போலராய்டு கருவியின் திசை கன்னாபின்னாவென்று மாற்றி வைத்தது. இதன் மூலம் போட்டான்கள் புறப்படும் போது ஒருவேளை போலராய்டுகளின் திசை அவைகளுக்கு தெரிந்திருந்தால் கூட அப்போட்டான்கள் போலராய்டுக்கு வருவதற்குள் போலராய்டுகளின் திசை மாறிவிடுகிறது.
இந்த தகவல் போட்டானுக்கு செல்ல வேண்டுமென்றால் ஒளியின் வேகத்தை விட அதி வேகத்தில் சென்றாக வேண்டும். அது மறைமாறிக் கோட்பாட்டின்படி சாத்தியமில்லை. இவ்வாறு அஸ்பே செய்த பரிசோதனையின் முடிவுகளும் பெல் தேற்றத்தின்படி இரண்டிற்கும் மேல்தான் வந்தது. குவாண்டம் இயற்பியல் மறுபடியும் வெற்றி பெற்றது.
கிளாசரின் பரிசோதனையில் இருந்த ஓட்டை அஸ்பேயின் பரிசோதனை மூலம் சரி செய்யப்பட்டது. கிளாசர் பரிசோதனையில் இருந்த இன்னொரு குறை அவர் கால்சியம் அணுவை கிளர்ச்சி அடையச் செய்ய ஹைட்ரஜன் ஆர்க் விளக்கை பயன்படுத்தினார். இதன் மூலம் அதிக எண்ணிக்கையில் போட்டான்கள் வெளி வராது. குறைவான எண்ணிக்கையுள்ள போட்டான்களை ஆய்வு செய்து நாம் எவ்வாறு ஒரு கோட்பாடு சரியா தவறா என்று முடிவெடுப்பது? என்று அறிஞர்கள் கேள்வி எழுப்பினர்.
அஸ்பே இந்த பிரச்சினையை தீர்க்க லேசர் ஒளியை பயன்படுத்தி கால்சியம் அணுவை கிளர்ச்சி அடையச் செய்தார். லேசர் மிக அதிக எண்ணிக்கையிலான போட்டான்களை உருவாக்கும் திறன் கொண்டது. இதன் மூலம் கிளாசரின் பரிசோதனையில் உள்ள குறைகளை நீக்கினார்.
ஆண்டன் செய்லிங்கர் பங்களிப்பு
அடுத்த கேள்வி அஸ்பேயின் பரிசோதனையில் கன்னாபின்னாவென்று (random change) போலராய்டு திசையை மாற்றினார் என்று பார்த்தோம் அல்லவா? எப்படி கன்னா பின்னாவென்று மாற்றினார்? இதை கணிதத்தில் ரேண்டம் எண் உருவாக்கம் மூலம் செய்தார்.
ரேண்டம் எண் உருவாக்கத்தில் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு எண் வரும். ஒரு எண்ணுக்கும் அடுத்து வரும் எண்ணுக்கும் எந்த தொடர்பும் இருக்காது. இந்த ரேண்டம் எண்களை உருவாக்க ஒரு கணித மென்நிரல் (software program) பயன்படுத்தப்பட்டது. நாம் இந்த மென்நிரல் மாதிரியை கண்டுபிடித்து விட்டால் அடுத்த நொடி என்ன எண் வரும் என்று முன்கூட்டியே சொல்லி விடலாம். ஆனால் அப்படி கண்டுபிடிப்பது எளிதல்ல.
ஆனால் போட்டான்களுக்கு இந்த கணித மாதிரி நிரல் ரகசியம் தெரிந்திருந்தால் ஒவ்வொரு நொடியும் போலராய்டுகளின் திசை எவ்வாறு மாறும் என்ற தகவல் அதனுள் மறைந்திருக்கும். இந்த மறைமாறியின் தகவல்படி போட்டான்கள் துருவ திசையை மாற்றிக்காட்டினால் கூட பெல் தேற்றத்தில் இரண்டுக்கும் மேல் வருவதற்கு வாய்ப்புள்ளது. இப்படி அஸ்பேயின் பரிசோதனையிலும் குறை கண்டுபிடித்தனர்.
இந்த குறையை மூன்றாவது நோபல் அறிஞரான ஆண்டன் செய்லிங்கர்தான் 1990 ஆம் ஆண்டுகளில் சரி செய்தார். அதாவது இரண்டு வெவ்வேறு திசைகளின் இருக்கும் கேலக்ஸிகளில் இருந்து வரும் போட்டான்களை வைத்து போலராய்டுகளின் திசையை மாற்றினார். கேலக்ஸிகளில் இருந்து வரும் போட்டான்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே புறப்பட்டு இருக்கும். எனவே இந்த பரிசோதனையில் உருவாக்கப்படும் குவாண்டம் பிணைப்பு போட்டான்களுக்கு கேலக்சியிலிருந்து வரும் போட்டான்கள் என்ன மாதிரியான நிலையில் வருகின்றது என்று கணிப்பதற்கு வாய்ப்பில்லை.
செய்லிங்கரின் இந்த பரிசோதனையிலும் பெல் தேற்றத்தின் படி வந்த எண் இரண்டுக்குமேல் இருந்தது. எனவே மிகத்தெளிவாக குவாண்டம் இயற்பியல்தான் சரி. அது கொடுக்கும் விளக்கம் தான் சரி என்ற முடிவுக்கு வந்தார்கள்.
ஆண்டன் செய்லிங்கர் பின்னாளில் குவாண்டம் பிணைப்பை நடைமுறை பயன்பாட்டுக்கும் கொண்டு வந்தார். இன்று நாம் பேசும் குவாண்டம் டெலிபோர்ட்டேஷன் (quantum teleportation), குவாண்டம் கம்ப்யூட்டர் (quantum computer) போன்ற கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரர் இவர்தான். இதைப் பற்றி பிறகு பின்னால் பார்ப்போம்.
ஆண்டன் செய்லிங்கர் பரிசோதனையில் ஓரிரு குறைகள் இருந்தன. அதாவது மூலத்திலிருந்து நிறைய போட்டான்கள் வெளிவந்தாலும் வெளிப்படும் எல்லாப் போட்டான்களும் போலராய்டுகளின் பின்னால் இருக்கும் உணர்கருவியால் (detectors) உணர முடியவில்லை. நூறு போட்டான்கள் வந்தடைந்தால் அதில் 20 அல்லது 30 போட்டான்கள் மட்டுமே உணர்கருவியால் உணரப்பட்டது. மீதி சிதைந்து விட்டது. இந்த 30 போட்டான்களை மட்டும் வைத்து பெல் தேற்றத்தை கணக்கீடு செய்ய முடியுமா? ஒரு வேளை சிதைந்த போட்டான்கள் மறைமாறிக் கோட்பாடு கணிப்பது படி இருக்கலாம் அல்லவா என்ற கேள்வி எழுந்தது.
இதைத் தடுக்க வேண்டும் என்றால் மிகமிக துல்லியமான உணர்கருவியை வடிவமைக்க வேண்டும். 2015 முதல் 2017 வரை நான்கு வெவ்வேறு ஆய்வகங்களில் துல்லியமான உணர்கருவிகள் பயன்படுத்தி ஆய்வுகள் செய்யப்பட்டன. ஆண்டன் செய்லிங்கரும் அதில் ஒரு குழுவில் இருந்தார்.
இந்த ஆய்வில் 1200 மீட்டர் தொலைவில் உள்ள இரு வைரத்தை எடுத்துக் கொண்டனர் ஒவ்வொரு வைரத்திலும் ஒரு கார்பன் அணுவை நீக்கி அந்த வெற்றிடத்தில் குவாண்டம் இணைப்பில் உள்ள ஒரு எலக்ட்ரானை வைத்தனர். அதே போல் இன்னொரு வைரத்தில் உள்ள கார்பன் வெற்றிடத்தில் இன்னொரு எலக்ட்ரானை வைத்து மறுபடியும் ஆராய்ச்சி மேற்கொண்டனர். இந்த ஆராய்ச்சி முடிவும் குவாண்டம் இயற்பியலுக்கு சாதமாகத்தான் வந்தது.
குவாண்டம் இயற்பியல் எல்லா வித பரிசோதனைகளிலும் வெற்றி பெற்றுவிட்டது. இதன் மூலம் 1935இல் ஐன்ஸ்டீன் எழுப்பிய கேள்விக்கு சரியான பதிலை தந்துவிட்டனர். அணுக்களின் உலகம் பற்றி குவாண்டம் இயற்பியல் கொடுக்கும் விளக்கங்கள் தான் சரியானது; ஐன்ஸ்டினின் விளக்கங்கள் அல்லது அவரது மறைமாறிக் கோட்பாடு தவறு என்று தெள்ளத்தெளிவாக நிரூபணம் ஆனது. பெல் தேற்றத்தில் ஆரம்பித்த இந்த பரிசோதனைப் பயணம் பல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் வித்திட்டது ஆண்டன் செய்லிங்கர் இதில் மிக மிக முக்கியமானவர்.
குவாண்டம் தகவல் கடத்தல் அல்லது குவாண்டம் டெலிபொர்ட்டேஷன்
செய்லிங்கர் 1997 ஆம் ஆண்டு இரு போட்டான்களுக்கு இடையே உள்ள பிணைப்பை மூன்றாவது போட்டானுக்கு பரிமாற்றம் செய்தார். குவாண்டம் தகவல்களை ஒரு போட்டானில் இருந்து இன்னொரு போட்டோனுக்கு பரிமாற்றம் செய்யும் இந்த முறையை குவாண்டம் டெலி பொலிர்ட்டேஷன் (Quantum teleportation) என்று அழைக்கின்றனர்.
இதன் சிறப்பம்சம் என்னவென்றால் நாம் இதுவரை தகவல்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல வெண்டுமென்றால் ஒரு பொருளை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் அல்லது தகவல் கொண்டு செல்லும் போட்டான்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இப்படி போட்டான்கள் செல்லும்போது வழியில் சிதைந்து விடும் வாய்ப்பு இருக்கிறது. இது போல பல நடை முறை சிக்கல்கள் இருக்கின்றன.
ஆனால் இந்த குவாண்டம் டெலிபோர்ட்டேஷன் மூலம் எந்த பொருளையோ அல்லது போட்டானையோ எங்கும் நகர்த்த தேவையில்லை. ஒரு போட்டானில் உள்ள தகவல் குவாண்டம் பிணைப்பில் உள்ள இன்னொரு போட்டானுக்கு தகவல்களை குவாண்டம் பிணைப்பின் காரணமாக கடத்துகிறது. இது தகவல் தொழில் உலகில் மிகப்பெரிய புரட்சி ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மிக விரைவில் குவாண்டம் இன்டர்நெட் (Quantum internet), குவாண்டம் நெட்வொர்க் (Quantum network) என அனைத்தும் இந்த குவாண்டம் பிணைப்பு (Quantum entanglement) பண்பை பயன்படுத்தி உருவாக்கப்பட போகின்றன.
குவாண்டம் சாவி தொழில்நுட்பம்
இன்னொரு மிக முக்கியமான பயன்பாடு குவாண்டம் மறை குறையீட்டியல் (Quantum Cryptography). இதை குவாண்டம் சாவி விநியோகம் (Quantum Key Distribution) அல்லது QKD தொழில்நுட்பம் என்றும் அழைக்கிறார்கள்.
இப்போது நாம் google pay, paytm என பணப்பரிமாற்றங்களை ஆன்லைன் மூலம் அனுப்புகிறோம். வங்கிப்பரிவர்த்தனைகளும் ஆன்லைனில் மூலமே நிறைய நடைபெறுகிறது. ஒரு நாட்டின் ராணுவத்தகவல்கள் மிக மிக ரகசியமாக பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. தகவல் அனுப்புகிற ஒருவர் அத்தகவலோடு ரகசிய சாவி அதாவது மிகப்பெரிய இலக்க ரகசிய குறியீட்டு எண்ணையும் சேர்த்து அனுப்புவார். அதே குறியீட்டு ரகசிய எண்ணை தகவல் பெறுபவர் கொடுத்தால் மட்டுமே அந்த தகவல்களை படிக்க முடியும்.
சைபர் திருடர்கள் யாரேனும் இந்த ரகசிய சாவி எண்ணை தெரிந்து கொண்டால் மிக எளிதாக தகவல்களை திருடி விடலாம். இரகசிய எண் யாராலும் திருட முடியாத அளவுக்கு இருக்க வேண்டும். அதற்காக பணப்பரிவர்த்தனை நிறுவனங்கள் ரகசிய எண் உருவாக்கத்தை மிக சிரத்தை எடுத்து செய்கிறார்கள். இந்த ரகசிய எண்ணை உருவாக்குவது கணித நிரல் தான். ஒரு வங்கியின் பணப்பரிமாற்ற ரகசிய குறியீட்டு எண் கணித நிரலை ஒருவேளை யாரேனும் கண்டுபிடித்து விட்டால் அடுத்த ஒரு மணி நேரத்தில் அடுத்த சில நொடிகளிலேயே அவ்வங்கியின் பணப்பரிவர்த்தனையை அங்கிருந்து திருடிவிடலாம்.
எனவே ரகசிய எண்ணை உருவாக்குவது மிக மிக பாதுகாப்பாக யாராலும் கண்டுபிடிக்க முடியாததாக இருக்க வேண்டும். இதிலும் இந்த ரேண்டம் நம்பர் உருவாக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ரேண்டம் எண் உண்மையிலேயே சீரற்ற அல்லது ஒழுங்கற்ற தன்மையில் யாராலும் அடுத்த என்ன எண் வரும் என கணிக்க முடியாததாக இருக்க வேண்டும். என்னதான் கணித நிரல் சிறந்த வகையில் ரேண்டம் எண்களை உருவாக்கினாலும் இந்த கணித நிரலை ஒரு மனிதர்தான் உருவாக்குவார். சைபர் திருடர்கள் எப்படியாவது இந்த கணித நிரலின் அடிப்படை விதிகளை கண்டுபிடித்து விட எப்போதும் வாய்ப்பிருக்கிறது.
இந்த சிக்கலை குவாண்டம் உலகம் மிக எளிதாக தீர்க்கிறது. குவாண்டம் துகள்களின் மிக முக்கிய பண்பு யாரேனும் குவாண்டம் துகள்களின் பண்புகளை அளவிட முயன்றால் அது அளவிடும் செயலால் பாதிக்கப்படும். எடுத்துக்காட்டாக எலக்ட்ரானின் ஸ்பின் திசையை கண்டறிய நாம் அளவிடும் கருவியை பயன்படுத்தினால் அதன் குவாண்டம் நிலை மாறும். அளவிடும் செயல் குவாண்டம் துகள்களை பாதிக்கிறது. இந்த பண்பை இங்கு பயன்படுத்துகிறார்கள்.
நாம் அனுப்ப வேண்டிய தகவல்களை குவாண்டம் சாவியோடு (இரகசிய எண்) சேர்த்து அனுப்பும்போது யாரேனும் இந்த ரகசிய எண்ணை திருட நினைத்து இடை மறித்தால் குவாண்டம் சாவியானது மாறிவிடும். இதுவரை இருந்த தொழில்நுட்பத்தில் ரகசிய எண்ணை திருடியது யாருக்கும் உடனே தெரியாது. மிக மிக தாமதமாகத்தான் தெரிய வரும். அதற்குள் பல தகவல்கள் திருடப்பட்டு விடும். ஆனால் குவாண்டம் சாவி தொழில்நுட்பத்தில் சாவியை இடைமறித்தாலே அதன் ரகசிய எண் மாறிவிடுவதால் யாரேனும் தகவல்களை திருட முயன்றால் உடனடியாக நமக்கு தெரிந்து விடும். இது குவாண்டம் உலகம் நமக்கு கொடுத்த பயன்.
அணுக்களின் உலகம் முழுக்க முழுக்க சீரற்ற அல்லது ஒழுங்கற்ற தன்மையில் உள்ளதால் குவாண்டம் பிணைப்பு எலக்ட்ரான்களை அல்லது குவாண்டம் பிணைப்பு போட்டான்களை வைத்து ரேண்டம் எண்களை உருவாக்கினால் யாராலும் கண்டுபிடிக்க முடியாது. ரேண்டம் எண்கள் உருவாக்கத்தில் இது வரை கணித சூத்திரங்கள் உள்ள மென்பொருள் நிரல்தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் முதல்முறையாக இயற்கையின் பண்பை நாம் இங்கு பயன்படுத்துகிறோம். இதன் மூலம் உருவாகும் எண்தான் உண்மையிலேயே ரேண்டம் எண்.
2018 இல் NIST ஆய்வகத்தில் 1124 இலக்கங்கள் கொண்ட மிகச்சிறந்த ரேண்டம் எண்ணை குவாண்டம் பிணைப்பு பண்புகளை பயன்படுத்தி வெறும் பத்து நிமிடத்தில் உருவாக்கினர். இதே மாதிரியான ரேண்டம் எண்ணை கணித நிரல் வைத்து உருவாக்க வேண்டும் என்றால் பல ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பல்வேறு நாடுகள் குவாண்டம் சாவி தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த வருடம் பிப்ரவரி மாதம் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம்(DRDO) மற்றும் இந்திய தொழில்நுட்ப நிறுவனம்-டெல்லி (IIT- Delhi) இரண்டும் இணைந்து குவாண்டம் சாவி தொழில்நுட்பத்தை நூறு கி.மீ தொலைவில் உள்ள இரு பகுதிகளுக்கு நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டனர். மிக விரைவில் இந்த குவாண்டம் சாவி தொழில்நுட்பம் எல்லா இடங்களிலும் நடைமுறைக்கு வரப்போகிறது.
1935 இல் ஐன்ஸ்டீன் எழுப்பிய தத்துவார்த்த பிரச்சினை ஜான் பெல்லால் கணித தேற்றமாக மாற்றப்பட்டு பின்னாளில் கிளாசர், அஸ்பே மற்றும் செய்லிங்கரால் ஆய்வக பரிசோதனையாக மாற்றப்பட்டு பல்வேறு நடைமுறை பயன்பாட்டுக்கு வழி திறந்து விட்டது. அதைத்தாண்டி அணுக்களின் உலகம் பற்றிய சரியான புரிதலை நாம் பெற்றிருக்கிறோம்.
ஐன்ஸ்டீன் சார்பியல் தத்துவத்தை வைத்து வெளியும் காலமும் ஒன்றோடொன்று பிணைந்தது என்பது அறிவியல் உலகில் எவ்வாறு புரட்சியை ஏற்படுத்தியதோ அதே போல் “அணுக்கள் உலகத்தில் புற வய எதார்த்தம் என்ற ஒன்று இல்லை. அளவிடும் செயல்தான் அதை உருவாக்குகிறது.” என்ற குவாண்டம் கோட்பாடும் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த தத்துவார்த்த அறிவியல் புரிதல். இரண்டிலுமே ஐன்ஸ்டீன் தொட்ர்புபட்டிருக்கிறார் என்பது சுவையான தகவல்.
முதல் குவாண்டம் புரட்சி 1940களில் நிகழ்ந்தது. குவாண்டம் இயற்பியல் வந்தவுடன் ட்ரான்சிஸ்டர், லேசர், கம்ப்யூட்டர், நானோ தொழில்நுட்பம் என பல்வேறு தொழில்நுட்பங்கள் நமது மனித வாழ்க்கையை பல்வேறு விதங்களில் மாற்றியமைத்தது. இப்போது இரண்டாவது குவாண்டம் புரட்சி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தகவல் தொழில்நுட்ப உலகில், கணிப்பொறி உலகில் இந்த இரண்டாவது புரட்சி பல்வேறு பாய்ச்சல்களை உருவாக்கும் என்பதில் யாருக்கும் ஐயமில்லை.
கட்டுரையாளர் ஜோசப் பிரபாகர் இயற்பியல் பேராசிரியர். முந்தைய ஆண்டுகளின் நோபல் பரிசு குறித்த இவரது கட்டுரைகள் இந்த தளத்தில் இருக்கின்றன. இக்கட்டுரை குறித்த கருத்துகளுக்கு [email protected]
சண்டே கிளாஸ் – அறிவியலில் ஒரு சமூக நீதியின் கதை – ஜோசப் பிரபாகர்
தனி மரம் தோப்பாகாது என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இந்தக் கதை தனி மரம் தோப்பானது மட்டுமல்ல ஒரு பெரும் காடான கதை. அந்த தனிமரத்தின் பெயர் என்ன? அவர் பெயர் எஸ்.வி.எம் சத்யநாராயணா. பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியர்.
இந்த மனிதர் சத்தமில்லாமல் ஒரு கல்விப் புரட்சியை செய்து இருக்கிறார். ஆம். மிகக்கடினம் என்று சொல்லப்படுகிற முதுகலை, இளங்கலை இயற்பியல் சார்ந்த பாடங்களை முதுகலை, இளங்கலை இயற்பியல் முடித்த ஏழை மாணவர்களுக்கு, சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இருபத்து ஐந்து வருடங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் இலவசமாக சொல்லிக்கொடுத்து கொண்டிருக்கிறார். இந்த வகுப்பு சண்டே கிளாஸ் (Sunday class) என்று மாணவர்களால் அன்போடு அழைக்கப்படுகிறது. அதாவது ஞாயிறு இயற்பியல் வகுப்பு. 1996-ஆம் வருடம் சத்ய நாராயணா அவர்கள் கல்பாக்கம் அணுமின் ஆராய்ச்சி நிலையத்தில் முனைவர் (பி.எச்.டி) மாணவராக இருந்த போது சென்னை பல்கலைக்கழகத்தின் நியுக்ளியர் பிசிக்ஸ் துறையில் உள்ள ஒரு கருத்தரங்க அறையில் (seminar hall) இந்த வகுப்பை ஆரம்பித்தார். இன்றும் அதே செமினார் ஹாலில் இவ்வகுப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. 1996 ஆம் வருடம் சத்ய நாராயணாவுக்கு வயது 25. இன்று அவருக்கு வயது ஐம்பது. இதை வகுப்பு என்று சொல்வதை விட ஒரு அறிவியல் இயக்கம் என்றுதான் சொல்லவேண்டும். சண்டே கிளாசைப்பற்றி கடந்த காலங்களில் ஆங்கில இந்து பத்திரிக்கை, புதிய தலைமுறை கல்வி, அவுட்லுக் போன்ற பத்திரிக்கைகளில் கட்டுரைகள் வந்திருக்கிறது.
பேராசிரியர். சத்ய நாராயாணா ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூர் மாவட்டத்தின் உப்பளப்பாடு என்ற கிராமத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். அவர் தந்தை அந்த ஊரில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கம்பவுண்டராக வேலை பார்த்தவர். சத்ய நாராயாணா தனது இளங்கலை இயற்பியலை அருகில் உள்ள கல்லூரியில் படித்து விட்டு முதுகலை இயற்பியல் மைசூரில் உள்ள ஒருங்கிணைந்த அறிவியல் – கல்வியியல்(Regional institute of Education) கல்லூரியில் படித்து முடித்தார். முனைவர் பட்ட படிப்பிற்கு அவர் கல்பாக்கம் அணுமின் ஆராய்ச்சி நிலையத்தில் சேர்ந்தார். அப்போது அவருக்கு ஏன் இப்படியொரு வகுப்பு ஆரம்பிக்கவேண்டும் என்று தோன்றியது?
இந்தியாவை பொறுத்த வரை IIT(Indian Institute of Technology), IMSc(Institute of Mathematical Sciences ), IISc(Indian Institute of Science), TIFR(Tata Institute of Fundamental research), IISER (Indian Institute of Science education and Research) போன்ற அறிவியல் உயர்கல்வி நிறுவனங்களில் மாதம் ரூ.32,000/ உதவித்தொகையோடு முனைவர் பட்ட ஆராய்ச்சி படிக்க வேண்டும் என்றால் முதுகலை இயற்பியல் படித்த முடித்த பிறகு நெட்(NET) தேர்வோ அல்லது கேட்(GATE) தேர்வோ தேர்ச்சி பெற வேண்டும். ஆனால் தமிழக மாணவர்கள் இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது குதிரைக்கொம்பாக இருந்து வந்தது. ஒவ்வொரு வருடமும் ஒட்டு மொத்த தமிழகத்திலிருந்தும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள். இதற்கு காரணம் பெரும்பாலான கல்லூரிகளில் பி.எஸ்.சி அல்லது எம்.எஸ்.சி இயற்பியல் பட்டப்படிப்பில் வெறுமனே கோட்பாடுகளை மட்டுமே சொல்லிக்கொடுப்பார்கள். ஆனால் நெட்,கேட் தேர்வுகள் முழுக்க முழுக்க கோட்பாடுகளை பயன்படுத்தி கணக்குகளை தீர்க்கும் முறையில் வினாக்கள் கேட்கப்படும். மனப்பாட முறையில் படித்த மாணவர்களுக்கு இம்மாதிரியான கணக்குகளை தீர்ப்பது, இம்மாதிரியான தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது மிகப்பெரிய சவாலாக இருந்து வந்தது.
இந்தச்சூழலில் 1993 ஆம் வருடம் கல்பாக்கம் அணுமின் ஆராய்ச்சி நிலையத்தில் சத்ய நாராயாணா அவர்கள் பி.எச்.டி மாணவராக சேர்ந்தார். கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வருடா வருடம் கோடை காலத்தில் கிராமத்து சூழலில் எம்.எஸ்.சி இயற்பியல் முதல் வருடம் படிக்கும் மாணவர்களுக்கு இயற்பியல் முகாம் ஒன்று நடத்துவார்கள். இதன் பெயர் STIP (summer training program in Physics). இதன் நோக்கம் வசதி வாய்ப்பற்ற சூழலில் படித்த மாணவர்களுக்கு இயற்பியலில் இருக்கும் பல்வேறு ஆராய்ச்சி வாய்ப்புகளையும், விஞ்ஞானிகளையும் அறிமுகப்படுத்துவார்கள். கிட்டத்தட்ட ஒரு மாதம் நடக்கும். இதில் அப்போது கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஆராய்ச்சி மாணவராக இருந்த சத்ய நாராயாணா அவர்களும் பாடம் நடத்துவார். இவரின் பாடம் நடத்தும் திறன், இயற்பியல் கணக்குகளைத் தீர்க்கும் திறனைக் கண்டு 1996 ஆம் வருடம் STIP பயிற்சிக்கு வந்த மாணவர்கள், சத்ய நாராயணாவை சென்னையில் தொடர்ந்து இயற்பியல் வகுப்பு எடுக்க கேட்டிருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் இவ்வகுப்பு அண்ணா பல்கலைக்கழத்தில் ஆரம்பிக்கப்பட்டு நடந்து வந்திருக்கிறது. ஒரு சில மாதங்களுக்குப்பிறகு சில காரணங்களால் இவ்வகுப்பை அண்ணா பல்கலைக்கழகத்தின் தொடர முடியா சூழ்நிலை வந்த போது அந்நேரத்தில் சென்னை பல்கலைக்கழகத்தின் நியூக்ளியர் பிசிக்ஸ் துறையின் தலைவர் பி.ஆர்.எஸ். சுப்பிரமணியம் அத்துறையின் இருக்கும் செமினார் ஹாலில் சண்டே கிளாசை எடுக்க அனுமதி கொடுத்திருக்கிறார். இப்படித்தான் இந்த சண்டே கிளாஸ் பயணம் ஆரம்பமானது. அந்த STIP இல் கலந்து கொண்டு சத்ய நாராயணாவை சென்னைக்கு அழைத்த அன்றைய STIP மாணவர்களில் ஒருவரான சுதாகர் இன்று IIT மெட்ராசில் இயற்பியல் துறை பேராசிரியர்.
1996 க்கு பிறகு நியுக்ளியர் பிசிக்ஸ் துறைக்கு பல்வேறு துறைத்தலைவர்கள் மாறிவிட்டார்கள். ஆனால் யார் துறைத் தலைவராக வந்தாலும் சண்டே கிளாசுக்கு செமினார் ஹாலை மனமுவந்து அளித்தார்கள். இந்த வகையில் 25 வருடம் இந்த வகுப்பு தொடர்ச்சியாக நடைபெற இந்தத்துறையின் பெருந்தன்மையும் மிக முக்கிய காரணம்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை பத்து மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை இந்த வகுப்பு நடக்கும். காலையில் ஒரு சிறிய தேநீர் இடைவேளை. மதியம் ஒரு மணி நேரம் உணவு இடைவேளை. மூன்று மணி போல் இன்னொரு தேநீர் இடைவேளை. இந்த சண்டே கிளாசில் எல்லாதரப்பட்ட மாணவர்களும் வந்து படித்தார்கள். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள கல்லூரிகள் குறிப்பாக அரசு கலை அறிவியல் கல்லூரிகள். பெரும்பாலும் அவர்கள் ஏழை மாணவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள். தன்னந்தனி ஆளாக பாடம் நடத்தி வந்தார். மாரத்தான் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது இயற்பியல் மாரத்தான். ஒரு நாளைக்கு 6 மணி நேரம் தொடர்ந்து பாடம் நடத்துவது எவ்வளவு கடினமானது. அதுவும் கடினமான அடிப்படை இயற்பியல் கோட்பாடுகளை, அதைச் சார்ந்த கணக்கீடுகளை நடத்துவார். கிட்டத்தட்ட பல வருடங்கள் தொடர்ந்து செய்து வந்திருக்கிறார்
1996 முதல் இன்று வரை எண்ணற்ற மாணவர்கள் இந்த வகுப்பில் இயற்பியல் கற்று இந்தியாவின் பல்வேறு உயர்கல்வி ஆராய்ச்சி நிலையங்களில் ஆராய்ச்சியாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். பல்கலைக்கழகங்களிலும், தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளிலும் பேராசிரியர்களாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
சண்டே கிளாசின் முதல் பேட்ச் 1996 இலிருந்து 2001 வரை சொல்லலாம். 1996 லிருந்து 1997 வரை படித்த சுதாகர் சந்திரன் இன்று ஐ.ஐ.டி சென்னையில் இயற்பியல் பேராசிரியர். 1998 லிருந்து 2000 வரை பயின்ற தங்க துரை இன்று பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். ராமச்சந்திரன் மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில் மூத்த விஞ்ஞானி. மேலே குறிப்பிட்ட அனைவருமே நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள். 1999 லிருந்து 2000 வரை படித்த பொன்முருகன் இன்று திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர். அவர் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை இயற்பியல் படித்தவர். அக்கல்லூரியிலிருந்து நெட் தேர்வில் வெற்றி பெற்ற முதல் மாணவர். ரஞ்சித் ராமதுரை இன்று ஐ.ஐ.டி ஹைதாராபாத்தில் பேராசிரியர். சித்ரா மற்றும் பிரபு இருவரும் இன்று சென்னையில் அறிவியல் ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள்.
இங்கே நாம் இன்னொரு எதார்த்தத்தை உணர வேண்டும். இன்று தமிழகத்தின் பெரும்பாலான கல்லூரிகளில் எம்.எஸ்சி இயற்பியல் படித்து முடித்து வெளிவரும் மாணவர் இந்த தேர்வை எழுதி வெற்றி கொள்வது என்பது மிகக்கடினம். இந்த தேர்வை வெற்றி கொள்ள வேண்டுமென்றால் கிட்டத்தட்ட 60 அல்லது 70 ஆயிரத்துக்கும் மேல் செலவு செய்து டெல்லியோ அல்லது ஹைதராபாத்தோ சென்று கோச்சிங் எடுக்க வேண்டும். ஏழை மாணவர்களால் இவ்வளவு செலவு செய்து கோச்சிங் சென்டருக்கு செல்ல முடியாது. இந்த தேர்வை வெற்றி கொள்ள இயற்பியல் கோட்பாடுகளை பயன்படுத்தி கணக்குகளை தீர்க்கும் திறன் (problem solving skills) நன்றாக இருக்க வேண்டும். சண்டே கிளாஸ் மிக அற்புதமாக இந்தத் திறனை வளர்க்கிறது.
2002 லிருந்து 2007 வரை அடுத்த தலைமுறை மாணவர்கள் சண்டே கிளாஸில் பங்கு பெற்றார்கள். விஜயகுமார் இன்று டி.ஆர்.டி.ஓ வில் விஞ்ஞானி. இந்த விஜய குமார் தனது திருமணத்தில் பேராசிரியர் சத்ய நாராயாணா அவர்களின் கையால் தாலி எடுத்துக்கொடுக்கச் சொல்லி திருமணம் செய்தார். ஞாயிறு மட்டுமே இயற்பியல் சொல்லிக்கொடுக்கும் ஒரு ஆசிரியர் எந்த அளவிற்கு ஒவ்வொரு மாணவனின் மனதிலும் இடம்பிடித்திருக்கிறார் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாராணம். . விஜயகுமார் மட்டுமல்ல இன்னும் சில பேரும் இதே போல் பேராசிரியர்.சத்ய நாராயாணா அவர்கள் தாலி எடுத்துக் கொடுக்க தங்களது திருமணத்தை செய்தார்கள். இன்னும் சிலபேர் தனது முனைவர் பட்ட ஆய்வறிக்கையை பேராசிரியர். சத்ய நாராயாணா அவர்களுக்கு சமர்ப்பித்திருக்கிறார்கள். பேராசிரியர்.சத்ய நாராயாணா அவர்கள் வகுப்பறையைத்தாண்டி ஒவ்வொரு மாணவரின் வாழ்க்கையிலும் அவர்கள் சுக துக்கங்களிலும் பங்கெடுக்கும் குடும்பத்தில் ஒருவராகவே இருக்கிறார்
அன்ன லஷ்மி இன்று கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மூத்த விஞ்ஞானி. தேவ சங்கர் இன்று பொன்னேரி கல்லூரியில் இயற்பியல் உதவி பேராசிரியர். கமல பாரதி என்பவர் RRCAT (Raja Ramanna Centre for advanced technology) இந்தூரில் மூத்த ஆராய்ச்சியாளர். ப்ரீத்தி மெகர் IISc இல் முனைவர் பட்டம் முடித்துவிட்டு திருவாரூர் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக இருக்கிறார். எஸ்.அய்யப்பன் கல்பாக்கம் இந்திரா காந்தி அணுமின் ஆராய்ச்சி நிலையத்தில் முனைவர் பட்டம் முடித்து விட்டு இன்று சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர். சங்கர் சென்னையில் உள்ள புதுக்கல்லூரியில் உதவிப்பேராசிரியர். நெய்னா முகமது உடுமலைப் பேட்டை அரசு கலை அறிவியல் கல்லூரியில் உதவி பேராசிரியர். பஷீருதீன் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர். நாராயணன் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் விஞ்ஞானி. முரளி தொடர்ச்சியாக இரண்டு முறை நெட் தேர்வை பாஸ் செய்தவர். இன்று ஆந்திரா மாநிலம் கர்நூலில் உள்ள மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பேராசிரியர். ஒரு வேளை சண்டே கிளாஸ் என்ற ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் இது எதுவுமே சாத்தியப்பட்டிருக்காது. இம்மாதிரியான உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களுக்குள் மாணவர்கள் செல்ல சண்டே கிளாஸ் பாதை அமைத்துக் கொடுத்தது என்றால் அது மிகையாகாது.
மற்ற வகுப்புக்கும் இந்த சண்டே கிளாசுக்கும் உள்ள வேறுபாடு என்ன? இந்த வகுப்பில் சிலபஸ் முடிக்க வேண்டும், தேர்வு நடத்தி மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற நடைமுறை இல்லை. இயற்பியலை ஒருவன் நேசிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த வகுப்புகள் நடக்கின்றன. பேராசிரியர். சத்யாவின் இயற்பியல் வகுப்பை ஒரு தடவை கவனித்தால் போதும். இயற்பியலை வெறுப்பவர்கள் கூட இயற்பியலை காதலிக்க ஆரம்பித்து விடுவார்கள். அந்த அளவுக்கு கவர்ந்திழுக்கும். உங்களை வசியம் செய்து விடும். அவர் கரும்பலகையில் எழுதும் அழகை பார்த்துகொண்டே இருக்கலாம். எழுத்தோவியம் அது.
சண்டே கிளாஸின் மிக அடிப்படையான சிறப்பு என்ன? சண்டே கிளாஸ் உள்ளே நுழையும் ஒவ்வொரு மாணவரையும் அவரவர் நிலையிலேயே அப்படியே ஏற்றுக்கொள்கிறது. சண்டே கிளாஸ் எந்த மாணவரையும் தகுதியின் அடிப்படையிலோ, திறமையின் அடிப்படையிலோ நடத்துவதில்லை. சமூக நீதி என்பது இதுதான். இயற்பியல் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருக்கும் யார் வேண்டுமானாலும் இதில் கலந்து கொள்ளலாம். ஒரு சில மாணவர்கள் ஓரளவு இயற்பியல் தெரிந்து கொண்டு இன்னும் அதிகம் கற்றுக்கொள்ள வருவார்கள். பெரும்பாலோனார் மிக அடிப்படை நிலையிலேயே இருப்பார்கள். அவர்கள் கிட்டத்தட்ட அரிச்சுவடியிலிருந்து கற்றுக்கொள்ள ஆரம்பிப்பார்கள். இப்படி ஆரம்ப நிலையில் இருக்கும் மாணவர்களிடம் கேள்வி கேட்டால் பயந்து மறுபடியும் வகுப்புக்கு வரமாட்டார்கள். அதனால் அவர்கள் போக்கிலேயே கற்றுக்கொள்ள அனுமதிப்பதில் பேரா.
சத்யா தெளிவாக இருப்பார். எக்காரணம் கொண்டும் அப்படி வரும் மாணவர்களை தனக்கு ஒன்றும் தெரிய வில்லையே என்ற உணர்வுக்கு தள்ள மாட்டார். இப்படிப்பட்ட மாணவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டு ஆறு மாதத்தில் அனைவரின் முன்னிலையில் கூச்சமில்லாமல் கேள்வி கேட்க ஆரம்பிப்பார்கள். கல்வி முறையின் முக்கிய நோக்கமே கேள்வி கேட்கும் உணர்வை தூண்டுவதுதான். இன்று எத்தனை கல்வி நிலையங்களில் கேள்வி கேட்பதை தூண்டுகிறார்கள்?. ஆனால் சண்டே கிளாஸ் இதை நூறு சதவிகிதம் முழுமையாக செய்கிறது.
உண்மையில் இன்று இந்தியா முழுவதும் பெரிய பெரிய உயர்கல்வி ஆராய்ச்சி நிலையங்கள் தகுதி திறமை என்ற பெயரில் அடித்தட்டு மாணவர்களை ஒதுக்குகிறார்கள். ஒரு கல்விக் கூடத்தின் நோக்கமே மாணவர்களை தகுதியும் திறமையும் வளர்த்து விடுவதுதான். ஆனால் இந்நிறுவனங்களுக்குள் நுழையவே தகுதியும், திறமையும் வேண்டும் என்பது எவ்வளவு பெரிய அநீதி. ஆனால் சண்டே கிளாஸ் இப்படி தகுதி திறமை இல்லாதவர்கள் என்று சொல்லப்பட்ட மாணவர்கள் அனைவரையும் தன் நேசக்கரத்தால் வாரியணைத்து அவர்களை இயற்பியலில் சிறந்த ஆராய்ச்சியாளராகவோ அல்லது பேராசிரியர்களாகவோ மாற்றுகிறது. தகுதி திறமை இல்லை என்று சொல்லப்படும் மாணவர்களை உள்ளே விட்டால் கல்வி நிறுவனத்தின் தரம் போய்விடும் என்ற கருத்து தவறு என்று சண்டே கிளாஸ் நிரூபித்திருக்கிறது.
சண்டே கிளாஸ் என்பது வெறுமனே ஒரு கோச்சிங் வகுப்பல்ல. இயற்பியல் கோட்பாடு, அதை நடைமுறையில் பயன்படுத்தும் வழிகள் மற்றும் இயற்பியல் கணக்குகளை தீர்க்கும் முறைகள் (problem solving techniques) என அனைத்தையும் விரிவாக சொல்லிக்கொடுக்கும் வகுப்பு. கோச்சிங் வகுப்பில் படித்து நெட் தேர்வு வெற்றி பெற்ற மாணவருக்கும், சண்டே கிளாசில் படித்து நெட் தேர்வு தேர்ச்சி பெற்றவருக்கும் நிறைய வித்தியாசத்தை நீங்கள் காணலாம். உலகப்புகழ்பெற்ற கல்வியாளர் பாவ்லோ ஃபிரேயரே இன்றைக்கு இருக்கும் கல்வி முறை வங்கிக்கல்வி முறை என்று கூறுகிறார். காரணம் இக்கல்வி முறை மாணவனை ஒரு காலி பாத்திரமாகவும் அதில் ஆசிரியர் கல்வி சார்ந்த அறிவை கொட்டுகிற முறையாக இருக்கிறது. பெரும்பாலும் மனப்பாட கல்வி முறையாக இருக்கிறது. மாணவர்களின் உள்ளார்ந்த தன்மைகளை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. இதற்கு மாற்றாக “பகுப்பாய்வு உணர்வை வளர்க்கக்கூடிய கல்வி முறையை” முன்மொழிந்தார். சண்டே கிளாஸ் இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.
சமீபத்தில் சண்டே வகுப்பில் படித்து இன்று ஆராய்ச்சி நிறுவனங்களிலும், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளிலும் பணியாற்றும் முன்னாள் மாணவர்களிடம் கூகுள் பார்ம் மூலமாக தகவல் திரட்டப்பட்டது. 122 சண்டே வகுப்பு முன்னாள் மாணவர்கள் இதில் கலந்து கொண்டார்கள். அந்த தகவல் திரட்டலில் மூலம் நாம் அறிந்து கொண்டது இந்த 122 மாணவர்களில் 61% மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள். அது மட்டுமில்லாமல் இம்மாணவர்களில் 47.5 % பேர் கிராமத்தை சேர்ந்தவர்கள். 21.3% புற நகர் பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் 31.1% பேர் நகர்புற பகுதியை சேர்ந்தவர்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் இலவசமாக நடக்கும் ஒரு இயற்பியல் வகுப்பினால் எவ்வளவு பெரிய சமூக மாற்றம்.
உண்மையில் ஒரு வகுப்பறை எப்படி இருக்க வேண்டும், ஒரு கல்வி அமைப்பு எப்படி இயங்க வேண்டும் என்பதற்கு சண்டே கிளாஸ் ஒரு முன்னுதாரணம். சண்டே வகுப்பில் பயின்ற பெரும்பாலான மாணவர்கள் கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பின்தங்கிய பல்வேறு சமூகத்தை சார்ந்தவர்கள். இன்று இவர்கள் இந்தியாவின் பல்வேறு உயர்கல்வி நிலையங்களில் தலை நிமிர்ந்து தன்னம்பிக்கையோடும், சுய மரியாதையோடும் பணியாற்றுகிறார்கள் என்பதை பார்க்கும் போது இதை விட சமூக நீதி செயல்பாடு வேறென்ன இருக்க முடியும்!!!
இந்திய சமூகத்தில் அரசியல், பொருளாதாரம், சமூகம், கலாச்சாரம் என எந்த களத்தை எடுத்துக்கொண்டாலும் எந்த அளவுக்கு அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கி பிரதிநிதித்துவ படுத்துகிறோம் என்பது மிக முக்கியமானது. அதே போல் அறிவியல் துறையிலும் அனைத்து தரப்பு மக்களையும் பிரதிநிதித்துவ படுத்துவது (inclusiveness and representation) மிக மிக முக்கியமானது. உண்மையில் மற்ற துறைகளில் நடந்த மாற்றம் அறிவியல் துறையில் மிகப் பெரிய அளவில் நடக்க வில்லை. ஆனால் சண்டே கிளாஸ் அதை மிக திறம்பட செய்தது. இதைத்தான் மேலே பார்த்த புள்ளி விவரம் கூறுகிறது.
2003 ஆம் வருடம் பேரா. சத்யநாராயணா அவர்கள் பி.டி.எப் ஆராய்ச்சிக்காக (பி.டி.எப் -இயற்பியலில் முனைவர் பட்டம் முடித்து அதற்கு அடுத்த கட்ட ஆராய்ச்சி படிப்பு.) ஜெர்மனி சென்ற போது கூட அவரது மாணவர்கள் அன்னலஷ்மி, பொன்முருகன் மற்றும் கல்பாக்கம் விஞ்ஞானி பாலாஜி மூவரும் சண்டே கிளாசை தொடர்ந்து நடத்தி வந்துள்ளனர்.
இன்னும் சொல்லப்போனால் அவர் ஜெர்மனியில் இருந்த நேரத்தில் ஒவ்வொரு ஞாயிறும் 5 மணிக்குப் பிறகு ஜெர்மனியில் இருந்து போன் செய்து அன்னலஷ்மி மற்றும் பொன்முருகன் இருவரிடமும் அன்றைய சண்டே கிளாஸ் எப்படி நடந்தது என்று விசாரிப்பாராம். அந்த அளவுக்கு இந்த வகுப்பு தடைபடாமல் நடந்து வந்துள்ளது.
சில ஞாயிற்றுக்கிழமைகளில் நான்கைந்து மாணவர்கள்தான் வகுப்புக்கு வருவார்கள். அப்படியிருந்தாலும் கூட இந்த நாலைந்து பேருக்காக கல்பாக்கத்திலிருந்து சென்னைக்கு வந்து சண்டே கிளாஸ் எடுத்து விட்டு செல்வார் பேராசிரியர். சத்யா. சில வருடங்களில் ஜனவரி 1 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை வரும். அன்றைக்கும் சண்டே கிளாஸ் நடக்கும். பேராசிரியர்.சத்யா நாராயாணா வருவார். மாணவர்களும் வருவார்கள். அப்படி என்றால் இந்த வகுப்பை பேரா.சத்யா எவ்வளவு நேசிக்கிறார் அதே போல் மாணவர்கள் சண்டே கிளாசை எவ்வளவு விரும்புகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
2008 ஆம் ஆண்டு வாக்கில் சண்டே கிளாஸ் பற்றி கேள்விப்பட்ட இந்தியக் கணிதவியல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த பேராசிரியர்கள் ஜி.ராஜசேகரன் மற்றும் ஐ.ஐ.டி கான்பூரில் பணிபுரிந்து ஒய்வு பெற்ற பேராசிரியர் எச்.எஸ்.மணி இருவரும் சண்டே கிளாசிற்கு வந்து பாடம் நடத்த ஆரம்பித்தார்கள்.
சண்டே கிளாசுக்கு இவர்களின் பங்களிப்பு மகத்தானது. இருவருமே 80 வயதை தாண்டியவர்கள். இவர்கள் இருவரும் நோபல் பரிசு அறிஞர்களான சர்.சி.வி ராமன், சந்திர சேகரிடம் கல்வி கற்றவர்கள். இந்திய அளவில் புகழ்பெற்றவர்கள். சண்டே கிளாசுக்கு வரும் பெரும்பாலான மாணவர்கள் ஏழை மற்றும் பின்தங்கிய சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதை பார்த்ததும் தங்களது தள்ளாத வயதிலும் பல வருடங்கள் வந்து வகுப்பு எடுத்தார்கள்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரைக்கும் பேரா. ராஜ சேகரன் குவாண்டம் இயற்பியல் வகுப்பு எடுப்பார். அதற்கு அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை எச்.எஸ். மணி கணித இயற்பியல் அல்லது மின்காந்தவியல், சார்பியல் கோட்பாடு என ஏதாவது ஒரு பாடம் எடுப்பார். உலக அளவில் பிரசித்தி பெற்ற இயற்பியல் புத்தகங்களிலிருந்து கணக்குகளை நடத்துவார்கள். சண்டே கிளாஸ் பற்றி பேராசிரியர்.ராஜசேகரன் தனது சுயசரிதையில் எழுதி இருக்கிறார். ஐ.ஐ.டி யில் இளங்கலை அல்லது முதுகலை இயற்பியல் படிக்க வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கு இவ்விரு பேராசிரியர்களின் வகுப்பு ஒரு வரப்பிரசாதம்.
2009 க்கு பிறகு அடுத்து தலைமுறை மாணவர்கள் ஜோசப் பிரபாகர், ஐயப்பன், ராஜ்மோகன், திருசெந்தில், ஏழு மலை, சண்முகப்பிரியன், என பெரிய பட்டாளம் சண்டே கிளாசுக்கு வர ஆரம்பித்தது. ராஜ் மோகன் திண்டுக்கல்லிலிருந்து வாரா வாரம் சனிக்கிழமை இரவு ரயிலேறி அடுத்த நாள் காலை சென்னை வந்து அன்று முழுவதும் சண்டே கிளாஸ் கவனித்து விட்டு அன்று மாலை மறுபடியும் ரயிலேறி அடுத்த நாள் காலை திண்டுக்கல் செல்வார். இன்று ராஜ் மோகன் திண்டுக்கல் காந்திகிராம பல்கலைகழகத்தில் இயற்பியல் உதவி பேராசிரியர். ஜோசப் பிரபாகர், சண்முகப்பிரியன் இருவரும் இன்று லயோலா கல்லூரியில் இயற்பியல் உதவி பேராசிரியர்கள். திருசெந்தில் நியுட்ரினோ ஆய்வகத்தில் ஆராய்ச்சி மாணவராக இருக்கிறார்.
ஐயப்பன் திருவண்ணாமலை அரசு கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் படித்தவர். இன்று கோட்பாடு இயற்பியலில் பி.எச்.டி முடித்து மொகாலியில் உள்ள IISER உயர் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் பி.டி.எப் முடித்து இப்போது தரமணியில் உள்ள இந்திய கணித அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில்(IMSc) பி.டி.எப் ஆராய்ச்சியாளராக இருக்கிறார். கோட்பாட்டு இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒரு முதல் தலைமுறை மாணவர்கள் நுழைவதென்பது மிகபெரிய சவால். ஆனால் சண்டே கிளாசின் வந்து படித்த மாணவர்கள் கோட்பாட்டு இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனங்களில் பி.எச்.டி மாணவராகவோ அல்லது பேராசிரியர்களாகவோ இருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க சண்டே கிளாஸ் செய்த மாற்றம்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளுக்கு புதிய பாடப்புத்தகங்களை கொண்டுவந்தது. அதில் 11 மற்றும் 12 இயற்பியல் பாடப்புத்தகத்தின் உருவாக்கத்தில் சண்டே கிளாஸின் மாணவர்களான ஜோசப் பிரபாகர் மற்றும் நெய்னா முகமது இருவரும் மிக முக்கிய பங்கு ஆற்றியுள்ளார்கள். இது சண்டே கிளாசின் வெற்றி. ஒரு வகையில் சொல்லப்போனால் பள்ளிகளில் இயற்பியல் கல்வியின் தரத்தை உயர்த்த சண்டே கிளாஸ் மறைமுகமாக உதவியிருக்கிறது.
2012 க்கு பிறகு அய்யப்பன், அபுதாகிர், கிருத்திகா, மிருணாளினி, சுபஸ்ரீ, ரித்தீஷ் போன்ற அடுத்த தலைமுறை மாணவர்கள் சண்டே கிளாசில் பங்கெடுக்க ஆரம்பித்தார்கள். ஓரிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் அனைவருமே நெட், கேட் தேர்வில் தேர்ச்சி செய்து விட்டார்கள். கள்ளக்குறிச்சியை சொந்த ஊராகக்கொண்ட கொண்ட அய்யப்பன் மிக ஏழ்மையான குடும்பத்தை சார்ந்தவர். இன்று திருச்சி அருகே இருக்கும் அரசு பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியர். அபுதாகிர் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பி.எச்.டி முடித்து தேனி அருகில் இருக்கும் அரசு பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியர். மிருணாளினி கல்பாக்கம் அணுமின் ஆராய்ச்சி நிலையத்தில் பி.எச்.டி மாணவி. சுபஸ்ரீ இந்திய கணித அறிவியல் ஆய்வு நிறுவனத்தில் பி.எச்.டி மாணவி. கிருத்திகா இந்திய விமானத்துறையில் அதிகாரியாக பணியாற்றுகிறார்.
ரித்தீஷ் முதுகலை மெட்டிரியல் சயின்ஸ் படித்தவர் ஆனால் சண்டே கிளாஸ் பங்கு பெற ஆரம்பித்தவர் இன்று இயற்பியலில் பி.எச்.டி படித்துக்கொண்டிருக்கிறார். இப்படி எண்ணற்ற மாணவர்களில் வாழ்க்கையை சண்டே கிளாசும், பேராசிரியர். சத்யாவும் மாற்றியிருக்கிறார்கள். இது ஒரு சத்தமில்லா கல்வி புரட்சி. ஒரு மிகப்பெரிய கல்வி நிறுவனம் செய்ய வேண்டிய மாற்றத்தை ஒற்றை ஆளாக செய்து இருக்கிறார்.
2014 க்கு பிறகு மேற்கு வங்காளத்தில் உள்ள சாகா இயற்பியல் ஆராய்ச்சி மையத்தின் பணி புரிந்து ஒய்வு பெற்ற பேராசிரியர். கமலேஷ்கர் சண்டே கிளாசில் வகுப்பு எடுக்க ஆரம்பித்தார். அதே போல் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து ஒய்வு பெற்ற கே.பி.என் மூர்த்தியும் இங்கே சில காலம் வகுப்பு எடுத்திருக்கிறார். ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற புகழ் வாய்ந்த பேராசிரியர். எ.கே.கபூர் அவர்களும் சில காலம் இங்கே பாடம் நடத்தியிருக்கிறார் இப்படி இந்தியாவின் மிகச்சிறந்த இயற்பியல் அறிஞர்கள் தங்களது ஓய்வு காலத்தில் இந்த சண்டே வகுப்பில் இயற்பியல் கற்றுக்கொடுத்தனர்.
சண்டே கிளாஸ் சிறந்த இயற்பியல் மாணவர்களை மட்டும் உருவாக்க வில்லை. சிறந்த இயற்பியல் ஆசிரியர்களையும் உருவாக்கியிருக்கிறது. சண்டே கிளாசின் பயின்று இன்று கல்லூரி பேராசிரியராக இருப்பவர்கள் தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளில் நிறைய உரை நிகழ்த்துகிறார்கள். நெய்னா முகமது, பஷீர், தேவ சங்கர், ஜோசப் பிரபாகர், ராஜ் மோகன் என பல பேரை இதற்கு உதாராணமாக கூறலாம். பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் முதுகலை இயற்பியல் பயின்று பிறகு சண்டே கிளாஸ் வந்த ஷிர்த்திகாந்த பிரசாத் தற்போது கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அறிவியல் அதிகாரி. ஆனால் ஞாயிற்றுக்கிழமைகளில் அருகிலிருக்கும் நாகர் கோவில் சென்று அங்கு ஒரு கல்லூரியில் இலவசமாக இயற்பியல் கற்றுக்கொடுக்கிறார். சண்டே கிளாஸ் ஒரு மாணவன் மனதில் ஏற்படுத்தும் மாற்றம் இதுதான்.
பேராசிரியர். சத்யாவின் கற்பிக்கும் செயல்பாடு சண்டே கிளாசோடு மற்றும் நிற்கவில்லை. இந்த கால் நூற்றாண்டு காலத்தில் தமிழகத்தில், கேரளாவில் உள்ள எத்தனையோ கல்லூரிகள், பல்கலைக்கழகங்ளில் உரை ஆற்றியிருக்கிறார். அவரின் உரையைக்கண்டு வியந்த மாணவர்கள் பிற்காலத்தில் சண்டே கிளாசுக்கு வந்த கதைகளும் உண்டு.
.கடந்த டிசம்பர் 12 அன்று இந்த சண்டே கிளாஸின் மாணவர்கள் அனைவரும் ஒன்று கூடி சண்டே கிளாஸ் ஆரம்பித்த இருபத்தைந்தாம் வருட வெள்ளி விழாவை கொண்டாடினார்கள். கோவிட் விதிமுறைகளால் இந்நிகழ்வு ஆன்லைன்-ஆப்லைன் நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வெளி மாநிலத்தில், வெளி ஊர்களில் இருக்கும் மாணவர்கள் ஆன்லைனில் கலந்து கொண்டார்கள். ஆப்-லைன் நிகழ்வு நியூக்ளியர் பிசிக்ஸ் துறையின் அதே செமினார் ஹாலில் நடந்தது.
இந்நிகழ்வை ஆன்லைனில் நேரலையாக பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பேராசிரியர்கள் ராஜசேகரன் மற்றும் எச்.எஸ்.மணி இருவரும் ஆன்லைனில் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். பேராசிரியர். கமலேஷ்கர் நேரடியாக கலந்து கொண்டார். இந்த கொண்டாட்டத்தில் 1996 ஆம் வருட சண்டே கிளாஸ் மாணவர்களிலிருந்து இன்றைய தேதி வரை இந்த வகுப்பால் பயனடைந்த மாணவர்கள் பெரும்பாலானோர் பங்கேற்றார்கள். தங்கள் வாழ்க்கையை மாற்றிய பேராசிரியர். சத்யாவுக்கு தங்கள் நன்றியுணர்வை வெளிப்படுத்தினார்கள். ஒவ்வொருவரும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். நியூக்ளியர் பிசிக்ஸ் துறைத்தலைவர் பேராசிரியர். சத்யாவுக்கு இத்துறையின் சார்பாக நினைவுப்பரிசு வழங்கினார்.
பேராசிரியர்.சத்யா அன்றைய தினம் “25 வருட பயணம்” என்ற தலைப்பில் மிக அருமையான உரையை வழங்கினார். இந்த வகுப்பு எப்படி ஆரம்பிக்கப்பட்டது, என்னென்ன சோதனைகளை எல்லாம் கடந்து வந்தது, அதில் நான் என்ன கற்றுக்கொண்டேன் என பகிர்ந்து கொண்டார். குறிப்பாக இரண்டு கருத்துக்கள் மிக முக்கியமானது. ஒன்று “ஒரு ஆசிரியரின் மிக முக்கியமான நோக்கம் ஒரு மாணவன் மனதில் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும் (ready to learn) மனநிலையை உருவாக்குவதுதான். ஏனென்றால் ஒரு ஆசிரியரால் மாணவனுக்கு தேவையான அனைத்தையும் நடத்தி விட முடியாது. அதற்கு கால வரம்பு, நெருக்கடி காரணமாக இருக்கலாம். அல்லது மாணவனுக்கு தேவையான அனைத்து பாடங்களும் ஆசிரியருக்கு தெரியாமல் இருக்கலாம். இப்படி பல்வேறு நடைமுறை வரம்புகள் இருக்கின்றன. ஆனால் மாணவன் மனதில் கற்றுக்கொள்ள தயாராக இருக்கும் மனநிலையை ஒரு ஆசிரியர் உருவாக்கி விட்டால் அவனுக்கு தேவையானதை அவனே தேடிக் கற்றுக்கொள்வான்”
இரண்டாவது “சண்டே வகுப்புக்கு வரும் மாணவனின் சுதந்திரத்தை மதிப்பது. அதாவது வகுப்பில் சண்டே கிளாஸில் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது ஒரு மாணவனை எழுப்பி கேள்வி கேட்டால் பதில் சொன்னாலும் அவன் விருப்பம். பதில் சொல்ல வில்லை என்றாலும் அது அவன் விருப்பம் அல்லது அவன் சுதந்திரம். பதில் சொல்லவில்லை என்பதற்காக அவனை கடிந்து கொள்வதோ அல்லது மொத்த வகுப்பையும் திட்டுவதோ கூடாது. பதில் சொல்லாமல் இருப்பதும் அவனது சுதந்திரம். இதை நான் சண்டே கிளாஸில் கடைபிடித்தேன்” என்று கூறினார். இது மிக முக்கியமானது. ஏனென்றால் சண்டே கிளாசுக்கு வரும் பெரும்பாலான மாணவர்கள் ஏற்கெனவே கூறியது போல பின்தங்கிய சமூகங்களிலிருந்து வருபவர்கள். முதல் தலைமுறை பட்டதாரிகள். நிறைய மாணவர்களுக்கு ஆங்கில மொழிச் சிக்கலும் இருக்கும். இயற்பியலும் ஆழமாக புரிதலும் இருக்காது. இதற்கு காரணம் நமது நாட்டில் இருக்கும் ஏற்றத்தாழ்வு மிக்க கல்வி அமைப்பு முறை. வசதி வாய்ப்பு இருப்பவர்களுக்கு கிடைக்கக்கூடிய கல்வி வாய்ப்புகள், உயர்தர பள்ளிக்கல்வி, கல்லூரிக்கல்வி ஏழை மாணவர்களுக்கு அல்லது சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. அவர்களுக்கு கிடைத்ததோ அரசுப்பள்ளிகள், அரசு கலை அறிவியல் கல்லூரிகள்தான்.
இப்படிப்பட்ட பின்புலத்திலிருந்து வரும் மாணவர்களை கேள்வி கேட்டு அவர்களின் அறியாமையை வெளிச்சம் போட்டுக்காட்டினால் தொடர்ந்து வகுப்புக்கு வரமாட்டார்கள். அவர்களை தக்க வைக்க வேண்டும் என்றால் அவர்களை மிக சவுகரியமாக உணர வைக்க வேண்டும். உளவியல் ரீதியாக இது மிக மிக முக்கியமானது. அதைத்தான் பேராசிரியர். சத்யா இந்த சண்டே கிளாசில் செய்தார். பேராசிரியர். சத்யாவுக்கு அந்த சமூகப்புரிதல் இருந்தது. வெறும் கல்லாய் வந்த மாணவர்களை பட்டை தீட்டி வைரங்களாக ஜொலிக்க வைத்தார். சண்டே கிளாஸின் சாதனையை வெறும் தனிமனிதர்களை முன்னேற்றிய கதையாக மட்டுமே சுருக்கி பார்க்க முடியாது. காலம்காலமாக கல்வியில் ஒதுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்த மாணவர்களை இந்தியாவின் உயரிய ஆராய்ச்சி நிறுவனங்களில் உட்காரவைத்த சமூக நீதி செயல்பாடாக பார்க்க வேண்டும்.
இச்சூழ்நிலையில் அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்? சண்டே கிளாஸ் போன்ற ஒரு செயல்பாடு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேவை. கற்பித்தலில் ஆர்வம் கொண்ட பேராசிரியர்களை அடையாளம் கண்டு அருகே இருக்கும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலோ, பல்கலைக்கழகங்களிலோ சண்டே வகுப்பை போன்று அங்கங்கே அரசாங்கமே ஆரம்பிக்க வேண்டும். IAS, IPS போன்ற தேர்வுகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு பயிற்சி மையம் நடத்துவது போல அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கும் பயிற்சி நிலையங்கள் ஆரம்பிக்க வேண்டும். அறிவியல் உயர் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு செல்ல விரும்பும் மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். அண்டை மாநிலமான கேரளாவில் ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் வருடத்துக்கு மூன்று நான்கு மாணவர்கள் நெட் தேர்வோ அல்லது கேட் தேர்வோ வெற்றி பெறுகிறார்கள்.
ஆனால் தமிழகத்தில் இன்னமும் கூட மொத்த மாநிலத்துக்கும் வருடத்துக்கு பத்து பேர் கூட இத்தேர்வில் தேர்ச்சி பெறுவது இல்லை. நாடு முழுவதும் இருக்கும் 27க்கும் மேற்பட்ட அறிவியல் உயர்கல்வி ஆராய்ச்சி நிலையங்களுக்குள் ஆராய்ச்சி மாணவராக செல்ல இத்தேர்வில் தேர்ச்சி பெறுவது மிக முக்கியம். தனிமனிதராக பேராசிரியர். சத்யா செய்ததை அரசு விரிவு படுத்தி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கொண்டு சென்றால் இன்னும் பல ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பயன் தரும். அனைத்து தரப்பு மக்களின் பிரதிநிதித்துவம் என்பது அரசியல், பொருளாதார துறையில் மட்டுமல்ல அறிவியல் துறையில் முழுமையாக வரவேண்டும். அதுவே உண்மையான சமத்துவம்.
கொரானாவுக்கு முன்பு வரை சண்டே கிளாஸ் தவறாமல் நடந்து வந்தது. முழு ஊரடங்கு இருந்த நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆன்லைனில் மதியம் வரை பேராசிரியர்.சத்யா சண்டே கிளாசை எடுத்து வந்தார். தற்போது மறுபடியும் பழையபடி சூழ்நிலை சரியானதும் (2022 ஜனவரி மாதம் அல்லது பிப்ரவரி மாதம்) சண்டே கிளாஸ் தனது பயணத்தை அதே செமினார் ஹாலில் ஆரம்பிக்கப்போகிறது. பேராசிரியர்.சத்யா அடுத்த தலைமுறை மாணவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.
கட்டுரையாளர் ஜோசப் பிரபாகர், பேராசிரியர் சத்யா நாராயணாவின் மாணவர், சண்டே வகுப்பில் மாணவராக இருந்து பிறகு சண்டே வகுப்பில் ஆசிரியராகவும் தனது பங்களிப்பை தொடர்ந்து செய்து வருகிறார். தற்போது சென்னை லயோலா கல்லூரியில் இயற்பியல் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இக்கட்டுரை குறித்த கருத்துகளை தெரிவிக்க: [email protected]
இயற்பியல் நோபல் பரிசு -2021 | ஜோசப் பிரபாகர்
அக்டோபர் மாதம் ஆரம்பித்தாலே உலகெங்கும் இருக்கும் அறிவியல் ஆர்வலர்களுக்கு உற்சாகமும் எதிர்பார்ப்பும் தொற்றிக்கொள்ளும். இந்த வருடம் இயற்பியலின் எந்தெந்த துறைகளின் கண்டுபிடிப்புகளுக்கு நோபல் பரிசு வழங்குகிறார்கள் என இயற்பியல் அறிஞர்கள் மத்தியில் பலவாறு கணிப்புகள் ஓடிக்கொண்டிருக்கும்.
2021 ஆம் வருடம் கொஞ்சம் வித்தியாசமாக ஒரு புதிய துறைக்கு அதுவும் மிக முக்கியமான துறைக்கு இயற்பியல் நோபல் பரிசு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆம் நோபல் பரிசின் ஒரு பாதி பூமியின் பருவநிலை மாற்றம் குறித்த கண்டுபிடிப்புக்கு அமெரிக்காவின் சுகுரா மனாபே மற்றும் ஜெர்மன் நாட்டை சேர்ந்த கிளாஸ் ஹாசல்மேன் என்ற இருவருக்கும், மற்றொரு பாதியானது சில பொருட்களில் உள்ள சீரற்ற அல்லது ஒழுங்கற்ற நிலையில் இயங்கும் அணுக்களின் இயற்பியல் பண்புகளை விளக்கும் கோட்பாட்டை உருவாக்கியதற்காக இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஜார்ஜியோ பரிசி என்ற இயற்பியல் அறிஞருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. சுகுரா மனாபே ஜப்பானில் பிறந்து அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தவர். ஹாசல்மான் ஜெர்மன் மாக்ஸ் பிளாங்க் காலநிலை ஆராய்ச்சித்துறையில் பணிபுரிகிறார். பரிசி இத்தாலி நாட்டின் சபியேன்சா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார்.
காலநிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சி துறைக்கு கிடைத்த முதல் இயற்பியல் நோபல் பரிசு இதுவே. இன்றைய காலகட்டத்தில் நாம் உலக வெப்பமயமாதல் பற்றி அதிகம் பேசிக் கொண்டிருக்கிறோம் ஆகஸ்ட் மாதம் ஐ.நா வெளியிட்ட IPCC அறிக்கையில் 2100 க்குள் பூமியின் சராசரி வெப்பநிலை 2 டிகிரி கூடி விடும் என எச்சரித்திருந்தது. இந்தIPCC ஆய்வறிக்கையில் கூட மனாபே மற்றும் ஹாசல்மேன் இருவரின் கோட்பாடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் சூழ்நிலையில் நோபல் பரிசானது இந்த துறைக்கு வழங்கப்பட்டுள்ளதால் கால நிலை மாற்றம் குறித்த மானிட சமூகம் விழித்தெழவேண்டிய தீவிரத்தை இது உணர்த்துகிறது.
முதலில் மனாபே மற்றும் ஹாசல்மேன் பங்களிப்பு குறித்து பார்ப்போம். சூரிய குடும்பத்தில் 8 கோள்கள் உள்ளன. ஏன் பூமியில் மட்டுமே உயிரினங்கள் இருக்கிறது? காரணம் பூமியின் காலநிலை மற்றும் வானிலையானது உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்றதாக இருக்கிறது அல்லது இருந்தது.
200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இயற்பியல் அறிஞர் ஜோசப் ஃபூரியர் சூரியனிடமிருந்துவரும் சூரிய ஒளிக்கதிர்களை பூமி எப்படி உட்கவர்கிறது, எந்தளவுக்கு பிரதிபலிக்கிறது என்று ஆராய்ந்தார். சூரியனிடமிருந்து வரும் ஒளிக்கதிர்கள் கண்ணுறு ஒளிக்கதிர்கள் (சிவப்பு, நீலம் என ஏழு நிறம்).அப்படி வரும் சூரிய ஒளியை பூமி மீண்டும் அகச்சிவப்புக் கதிர்களாக வெளியிடுகிறது.
அகச்சிவப்புக்கதிர் என்பது கண்ணுறு ஒளியை விட நீண்ட அலை நீளம் கொண்டது. பூமியால் வெளியிடப்பட்ட இந்த அகச்சிவப்புக் கதிர்களை வளிமண்டலம் தடுத்து நிறுத்தி மறுபடியும் பூமிக்கு அனுப்புகிறது என்று பூரியர் கண்டறிந்தார். இப்படி அகச்சிவப்புக் கதிர்கள் மீண்டும் திரும்பி பூமிக்கு வருவதால்தான் பூமியின் சராசரி வெப்பநிலை 15 டிகிரி அளவுக்கு இருக்கிறது. ஒருவேளை வளிமண்டலம் இல்லை என்றால் எதிரொளிக்கப்பட்ட அகச்சிவப்புக்கதிர்கள் விண்வெளிக்கு சென்று விடும். இதனால் பூமியின் சராசரி வெப்பநிலை இரவு நேரத்தில் கிட்டதட்ட மைனஸ்18 டிகிரிக்கு சென்றுவிடும். எடுத்துக்காட்டாக நிலவில் வளிமண்டலம் இல்லை. அதனால்தான் நிலவின் இரவு நேர வெப்ப நிலை மைனஸ் 50 டிகிரிக்கு கீழே செல்கிறது. வளிமண்டலம்தான் நமது பூமிக்கு வெப்பப்பாதுகாப்பு உறையாக செயல்படுகிறது. சூரிய ஒளிக்கதிர்களை உள்ளே அனுமதித்து, பூமியிலிருந்து வெளியேறும் அகச்சிவப்புக் கதிர்களை தடுத்து நிறுத்தும் வளிமண்டலத்தின் இந்த செயலைநாம் பசுங்குடில் விளைவு என்று அழைக்கிறோம்.
ஃபூரியருக்கு பிறகு பல விஞ்ஞானிகள் பூமியின் வளிமண்டலம் எந்த அளவுக்கு அகச்சிவப்புக்கதிர்களை பிரதிபலிக்கிறது, மேலும் இது கால நிலையை பாதிக்கிறதா என்று ஆராய்ந்தார்கள். இந்த ஆராய்ச்சியை1900 ஆண்டுகளில் விஞ்ஞானி அர்ஹீனியஸ் அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றார்.
ஃபூரியர் வாழ்ந்த காலத்தில் அணுக்களைப் பற்றிய அறிவு குறைவாக இருந்தது.ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டு முடியும் போது நமக்கு அணுவைப் பற்றிய அறிவும், வேதியியல் அறிவும் மேம்பட்டிருந்ததால் வளிமண்டலத்தில் என்னென்ன வாயுக்கள் இருக்கின்றன, அந்த வாயுக்கள் எந்த அளவிற்கு அகச்சிவப்புக் கதிர்களை தடுத்து நிறுத்துகின்றன என்று அர்ஹீனியஸ் ஆராய ஆரம்பித்தார். வளிமண்டலத்தில் 90% சதவிகிதத்துக்கு மேல் நைட்ரஜன், ஆக்சிஜன் வாயுக்களும், மீதமுள்ள 10% க்குள்தான் நீராவி, கார்பன்-டை-ஆக்சைடு, ஓஸோன், மீத்தேன் என பல வாயுக்கள் உள்ளன. இதில் நைட்ரஜன், ஆக்சிஜன் அகச்சிவப்புக் கதிர்களை தடுப்பதில்லை. நீராவியும், கார்பன்-டை-ஆக்சைடும் தான் அகச்சிவப்புக் கதிர்களை தடுப்பதில் மிக முக்கிய பங்குவகிக்கின்றது என்று அவர் கண்டறிந்தார்.
ஏன் கார்பன் டை ஆக்சைடும், நீராவியும் அகச்சிவப்புக் கதிர்களை தடுத்து பூமிக்கு திருப்பி அனுப்புகின்றன? ஒவ்வொரு மூலக்கூறுக்கும் ஒரு குறிப்பிட்ட இயற்கையான மின்இருமுனைத்தன்மை(dipole moment) இருக்கும். அந்த மூலக்கூறை வந்து மோதும் மின்காந்த அலையானது அந்த மின் இருமுனைத்தன்மையைமாற்றினால் அம்மூலக்கூறு அந்த மின்காந்த அலையை உட்கவர்ந்து அந்த மின்காந்த அலையின் அதிர்வெண்ணில் அதிர ஆரம்பிக்கும். இந்த அதிர்வினால் மறுபடியும் அதே அதிர்வெண் உள்ள மின்காந்த அலையை மீண்டும் வெளியிடும்.
அகச்சிவப்புக்கதிர் ஒரு மூலக்கூறின் மின்இருமுனைத்தன்மையை மாற்ற வேண்டுமென்றால் அது ஒருதனிம மூலக்கூறாக இருக்கக்கூடாது. ஆக்சிஜன் மற்றும் நைட்ரஜன் ஆகியவை ஒருதனிம மூலக்கூறுகள். அதனால் நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் மூலக்கூறுகளில் அகச்சிவப்புக்கதிர்கள் மின்இருமுனைத் தன்மை மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை.
ஆனால் கார்பன்-டை-ஆக்சைடு அல்லது நீராவி மூலக்கூறுகள் இருதனிம மூலக்கூறுகள். எனவே கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் நீராவி மூலக்கூறுகள் இரண்டிலும் அகச்சிவப்புக்கதிர்கள் அம்மூலக்கூறுகளின் மின் இருமுனைத்தன்மையை மாற்றுவதால், இவை இரண்டும் பூமி வெளியிடும் அகச்சிவப்புக்கதிர்களை உட்கவர்ந்து அதே அதிர்வெண்ணில் அதிர ஆரம்பிக்கின்றன. இந்த அதிர்வினால் மறுபடியும் அகச்சிவப்புக்கதிர்களை மீண்டும் பூமியை நோக்கி வெளியிடுகின்றன. அது மறுபடியும் பூமியை நோக்கி வருகின்றது. இதைத்தான் நாம் புரிந்து கொள்வதற்கு எளிதாக கார்பன் டை ஆக்சைடு, நீராவி போன்றவை அகச்சிவப்புக்கதிர்களை தடுத்து நிறுத்தி பூமிக்கு அனுப்புகிறது என்கிறோம். மீத்தேன் கூட இதில் பங்கெடுக்கிறது. ஆனால் அதன் பங்கு மிகக்குறைவு.
அர்ஹீனியஸ் கருத்துப்படி வளிமண்டலத்தில் இப்போது இருக்கும் கார்பன்டை ஆக்சைடு அளவு பாதியாக குறைந்தால் நமது பூமி முழுவதும் பனிக்கட்டி காலத்திற்கு(ice age)சென்று விடும். அதேபோல் கார்பன்-டை ஆக்சைடு அளவு இரட்டிப்பானால் பூமி வெப்ப நிலையானது இப்போதிருக்கும் வெப்ப நிலையை விட5 டிகிரி முதல் 6டிகிரி வரை உயர வாய்ப்பு இருப்பதாகக் கணித்தார். ஆச்சரியம் என்னவென்றால் அவர் வாழ்ந்த காலத்தில் கணினி என்பது இல்லை. ஆனாலும் அவரால் இதைக் கணிக்க முடிந்தது என்பது அவரின் புத்திக்கூர்மையை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. அவரதுஇந்தக்கண்டுபிடிப்பானது கால நிலையைப்பற்றிய ஆராய்ச்சிக்கு ஒரு புதிய பாதையைத் திறந்து விட்டது.பின்னாளில் இதே அர்ஹீனியஸ் வேதியியலில் வேறொரு கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு வாங்கினார்.
அர்ஹீனியஸுக்கு பிறகு கால நிலை பற்றிய ஆய்வின் அடுத்த கட்ட பாய்ச்சல் என்பது இந்த வருடம் நோபல் பரிசு வாங்கியசுகுரோ மனாபெவால் நிகழ்த்தப்பட்டது. ஜப்பானில் பிறந்த மனாபே 1950களில்போருக்குப் பிறகு ஆராய்ச்சிக்காக அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். பிறகு அங்கே பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், வானிலை ஆராய்ச்சியாளராகவும் பணிபுரிந்தார்.
அர்ஹீனியஸின் ஆய்வு முடிவை உள்வாங்கிய மனாபே, கூடுதலாக பூமியின் மேற்பரப்பில் வெப்ப நிலை உயர்வால் உயரே செல்லும் காற்றில் உள்ள பல வாயு மூலக்கூறுகள் எவ்வாறு புவி வெப்ப மயமாதலைக் கூட்டுகிறது என்று யோசித்தார். கணக்கிட எளிதாக அவர் புவியின் முப்பரிமாண வளிமண்டலத்தை ஒரு பரிமாண வளிமண்டலமாக(one dimensional atmosphere)கற்பனை செய்து கொண்டார். இந்த ஒரு பரிமாண வளி மண்டலத்தில் இருக்கும் காற்று மற்றும் நீராவி மூலக்கூறுகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டார். இந்த ஒரு பரிமாண வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு அளவைக் கூட்டினால் என்ன நடக்கிறது என்று கணினி உதவியோடு கணக்கிட்டு பார்த்த போது அவர் கண்டறிந்தது என்னவென்றால் கார்பன் டை ஆக்சைடு அளவு இரட்டிப்பானால் பூமியின் வெப்ப நிலை 2 டிகிரி முதல் 3 டிகிரி வரை உயரும் என்பதுதான். இது ஒரு துல்லியமான முடிவு. இதைத்தான் தற்போது வெளியான IPCC ஆய்வறிக்கையும் கூறுகிறது. இது நடந்தது 1967 இல்.கால நிலை மாற்றம் குறித்த துறையில்,1967ஆம் ஆண்டின் அவர் வெளியிட்ட ஆய்வுக்கட்டுரை ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. பிறகு 1975ஆம் வருடம் முப்பரிமாண வளிமண்டலத்துக்கும் தனது கணக்கீட்டை விரிவு படுத்தினார்.
அவரின் கண்டுபிடிப்பின்படிகார்பன் டை ஆக்சைடு அதிகரிப்பால் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கிறது. இவ்வெப்பநிலை அதிகரிப்பால் பூமி மேற்பரப்பின் உள்ள காற்றில் நீராவி மூலக்கூறுகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. கார்பன் டை ஆக்சைடைப் போலவே நீராவி மூலக்கூறுகளும் ஒரு பசுங்குடில் வாயு. இன்னும் சொல்லப்போனால்கார்பன் டை ஆக்சைடை விட நீராவி மூலக்கூறுகள்தான் மிக அதிகப்படியாக அகச்சிவப்புக் கதிர்களை தடுத்து பூமிக்கு திருப்பி அனுப்புகிறது. இப்படி இந்த இரண்டு வாயுக்களும் ஒன்று சேர்ந்து புவியின் வெப்ப நிலையை கூட்டுகிறது. அதுவும் இந்த வெப்ப நிலை உயர்வு என்பது பூமியின் மேற்பரப்பிற்குத்தான். ஆனால் வளிமண்டலத்தின் மேலடுக்குகள் குளிர்ந்து விடுகின்றன என்று கண்டறிந்தார். ஒரு வேளை சூரிய வெப்பத்தால் இவ்வெப்ப நிலை அதிகரித்திருந்தால் முழு வளிமண்டலம், பூமியின் மேற்பரப்பு அனைத்தும் ஒரே மாதிரியாக அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடப்பதில்லை. பூமியின் மேற்பரப்பில் மட்டுமே இவ்வெப்ப நிலை உயர்வு இருக்கிறது.
வளிமண்டலத்தில் உள்ள நீராவி மூலக்கூறுகள் எண்ணிக்கையை பெரிதாக நம்மால் கட்டுபடுத்த முடியாது. ஏனென்றால் அது தினந்தோறும் மாறக்கூடிய வானிலையையும், மழை அளவையும், கடல் நீரோட்டைத்தையும் பொறுத்தது. நீண்ட கால அளவில் காற்றில் இருக்கும் நீராவியின் அளவு பெரிதாக மாறுவதில்லை. அதன் தற்காலிக மாற்றங்கள் இயற்கையில் நடப்பது. ஆனால் கார்பன் டை ஆக்சைடு இயற்கை அளவை விட மனித செயல்பாடுகளான காற்று மாசுபாட்டினால் உயர்ந்து வருகின்றன. எனவே புவியின் சராசரி வெப்ப நிலையை சீராக பராமரிக்க நமக்கு இருக்கும் ஒரே வழி வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு அளவை கட்டுப்படுத்துவதுதான்.இதுதான் மனாபெயின் முக்கிய பங்களிப்பு.
அவர் காலத்தில் இருந்த கணினியின் வேகம் என்பது மிகக்குறைவு. ஒவ்வொரு கணக்கீடும் செய்து முடிக்க பல நாள் கணினியை நாம் இயக்க வேண்டும். இன்றைக்கு சில வினாடிகளில் முடியக்கூடிய கணக்கீடுகள் அன்றைக்கு நாள் கணக்கோ அல்லது மாதக்கணக்கோ ஆகியிருக்கும். இருந்தாலும் மனம் தளராமல் முயற்சி மேற்கொண்டதன் விளைவாக அவரால் இவ்வளவு துல்லியமாக கணக்கிட முடிந்தது. மனாபேவுக்கு பங்களிப்பிற்கு பிறகு உலகெங்கும் உள்ள வெப்பமானிகளின் தரவுகளையும், செயற்கைக்கோள் படங்களையும் ஆராய்ந்த பிறகு அறிவியல் உலகம் கால நிலை மாற்றம் குறித்த கோட்பாட்டு மாதிரிகள் உண்மையிலேயேஅறிவியல்பூர்வமானதுதான் என நம்ப ஆரம்பித்தது.
நோபல் பரிசு வாங்கியவுடன் மனாபெ கொடுத்த நேர்காணல் “பிரின்ஸ்டன்” பல்கலைக்கழகத்தின் யூடியுப் தளத்தில் இருக்கிறது. அறிவியலை நேசிக்கும் ஒவ்வொருவரும் அதைப்பார்க்க வேண்டும். மேலும் அவர் “Beyond Global Warming- How numerical models revealed the secrets of climate change”என்ற புத்தகமும் எழுதியிருக்கிறார். “ புவி வெப்பமயமாதலைக் குறைக்க முடியுமா? இது ஒரு சிக்கலான பிரச்சினைதானே?” என ஒரு பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு“ஆம். இது ஒரு சிக்கலான பிரச்சினைதான். ஆனால் புவி வெப்பமயமாதல் குறித்து உலகின் சில நாடுகள் செய்யும் அரசியலை விட இது மிக எளிதானதுதான்” என்று பதிலளித்துள்ளார்.
மனாபேவுக்குப்பிறகு கால நிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சி கணினி உதவியோடு நன்றாக வளர ஆரம்பித்தது. 1980 களில் கிளாஸ் ஹாசல்மான் இத்துறையில் நுழைகிறார். எப்படி அர்ஹீனியஸின் ஆராய்ச்சியை மனாபே அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் சென்றாரோ அதே போல் ஹாசல்மானும் மனாபேயின் ஆராய்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றார்.
அர்ஹீனியஸின் கணக்கீட்டில் மனாபே காற்று மூலக்கூறுகளின் பங்கை எவ்வாறு சேர்த்தாரோ அதே போல் ஹாசல்மான் தினந்தோறும் நடக்கும் வானிலை மாற்றங்களையும் மனாபெயின் கோட்பாட்டு மாதிரியோடு சேர்த்து பார்க்க வேண்டும் என்று யோசித்தார். இதற்கு அவர் உருவாக்கிய கோட்பாடு “ஸ்டோகாஸ்டிக்ஸ் காலநிலை மாதிரி(stochastic climate model)” ஆகும். அதாவது தினந்தோறும் நடக்கும் வானிலை மாற்றங்கள் எவ்வாறு நீண்ட காலத்தில் காலநிலை மாற்றத்திற்கு காரணமாக இருக்கிறது என்றுகண்டறிந்தார்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பிரௌனியன் இயக்கம் பற்றிய கோட்பாட்டை உள்வாங்கி அவர் தனது மாதிரியைஉருவாக்கியிருந்தார். இங்கே ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். அதாவது வானிலை என்பது இடத்திற்கு இடம், நேரத்திற்கு நேரம் மாறுபடும். நேற்று இருந்த வானிலை, இன்று இருக்காது. இன்று இருந்தது நாளைக்கு இருக்காது.அதே போல் இந்த வானிலை மாற்றத்தை முன்கூட்டியே கணிப்பது மிகக்கடினம்.
ஹாசல்மான் தனது கோட்பாட்டு மாதிரியில் தினந்தோறும் நடக்கும் வானிலை மாற்றங்களை இரைச்சலாக(noise)கருதி கணக்கீடுகளில் இணைத்து இந்த இரைச்சல்நீண்ட காலத்தில் காலநிலை மாற்றத்தை பாதிக்கிறது, கடலின் சராசரி வெப்பநிலையை எவ்வாறு பாதிக்கிறது என்று எடுத்துரைத்தார்.எளிதாக விளங்கிக்கொள்ள நமது வீட்டருகே ஓரளவு பொறுத்து போகக்கூடிய அளவுக்கு ஒரு இரைச்சல் கேட்டுக் கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். ஓரிரண்டு நாட்கள் என்றால் பரவாயில்லை. ஆனால் இதே இரைச்சல் மாதக்கணக்கில், வருடக்கணக்கில் கேட்டுக்கொண்டே இருந்தால் கண்டிப்பாக அது நமது செவியை பாதிக்கும் அல்லவா. அதே போல்தான் இந்த வானிலை மாற்றங்களும் நீண்ட கால நோக்கில் கால நிலை மாற்றத்திற்கு வழிவகுக்கிறது.
ஹாசல்மானின் இன்னொரு மிக முக்கியமான பங்களிப்பு என்பது புவி வெப்பமயமாதலில் மனிதனின் பங்கு என்ன என்பதைக் கண்டறிந்ததுதான். பூமியின் வெப்பமயமாதல் என்பது இயற்கையாகவும் நடக்கலாம். அல்லது மனிதனின் நடவடிக்கைகளாலும் நடக்கலாம். இங்கே இயற்கையாக நடப்பது என்றால் எரிமலை வெடிப்பின் மூலம் கார்பன் டை ஆக்சைடு மூலக்கூறுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, அல்லது சூரிய வெப்பம் அதிகரிப்பு. செயற்கையாக என்றால் மனிதனின் நடவடிக்கைகளில் மூலமாக (தொழிற்சாலை வெளியிடும் வாயுக்கள், வாகனங்கள் வெளியிடும் வாயுக்கள்) என கார்பன் டை ஆக்சைடு எண்ணிக்கை அதிகரிக்கலாம்.ஹாசல்மான் தனது ஸ்டோகாஸ்டிக்ஸ் கோட்பாட்டு மாதிரி மூலம் பூமியின் வெப்பநிலை அதிகரிப்பு மனிதனின் நடவடிக்கைகளால் எவ்வளவு அதிகரித்தது, இயற்கையான சீற்றங்களால் எவ்வளவு அதிகரித்தது என்று பிரித்து எடுத்து சொன்னார். இது மிகப்பெரிய சாதனை.
19ஆம் நூற்றாண்டில் இருந்து இன்று வரை கார்பன்-டை-ஆக்சைடின் அளவு பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்ததை விட40% சதவிகிதம் அதிகரித்தது என்றும் இது முழுக்க முழுக்க மனித நடவடிக்கைகளால் ஏற்பட்டது என்றும் அவர் கண்டறிந்தார்.
கீழே உள்ள படத்தில் உள்ள கருப்புக்கோடு1901 முதல் 1950 வரை உள்ள புவியின் வெப்ப நிலை மாறுபாட்டைகாட்டுகிறது.சிவப்புக் கோடு என்பது ஹாசல்மானின் ஸ்டோகாஸ்டிக்ஸ் மாதிரி மூலம் கணிக்கப்பட்ட பூமியின் வெப்ப நிலை மாற்றம். நீலக்கோடு என்பது இயற்கை சீற்றம், எரிமலை வெடிப்பு போன்றவைகளால் ஏற்பட்ட வெப்ப நிலை மாற்றம்.
(இவ்வரைபடம் நோபல் பரிசு இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது)
அவரின் கணக்கீட்டிலிருந்து ஒன்று தெளிவாக புரிந்தது. இப்புவி வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணம் இயற்கை அல்ல மனிதன்தான் என்பது. ஹாசல்மானின் இந்தக்கண்டுபிடிப்புக்கு முன்பு வரை புவிவெப்ப மயமாதலுக்கு , மனிதன் காரணமல்ல என்ற ஒரு பிரிவு, மனிதன்தான் காரணம் என்று இன்னொரு பிரிவு என அறிவியல் அறிஞர்கள் இரு வகையாக பிரிந்திருந்தார்கள். ஆனால் ஹாசல்மானின் இந்த ஆராய்ச்சி முடிவு புவி வெப்பமயமாதலுக்கு மனிதனின் நடவடிக்கைகளே மிக முக்கியமான காரணம் என்று அறிவியல் பூர்வமாக நிறுவியது. கடந்த நாற்பது ஆண்டுகளாக ஐக்கிய நாடுகள் புவி வெப்பமயமாதலுக்கு எதிராக நிறைய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்கு அறிவியல் பூர்வமான நம்பிக்கையை கொடுத்தது ஹாசல்மானின் ஆய்வுதான்.
மனாபே மற்றும் ஹாசல்மான் இருவரும் ஆராய்ச்சி முடிவுகள் கால நிலை மாற்றம் என்ற ஒரு புதிய அறிவியல் ஆராய்ச்சித்துறை உருவாக வழிவகுத்தது என்றால் மிகையாகாது.
நோபல் பரிசின் இரண்டாம் பாதி “ஸ்பின் கண்ணாடிகள்(spin glasses)” குறித்த ஆராய்ச்சிக்கு வழங்கப்பட்டது. அது என்ன “ஸ்பின் கண்ணாடிகள்”?இதைபுரிந்து கொள்வதற்கு முன்னால் நாம் தனித்தனியாக “ஸ்பின்” என்றால் என்ன? கண்ணாடி என்றால் என்ன? என்று புரிந்து கொள்வது அவசியம்.
ஒரு இரும்புத்துண்டை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் இருக்கும் இரும்பு அணுக்கள் சீரான முறையில் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் அமைந்திருக்கும். இரும்பு மட்டுமல்ல நாம் காணும் பெரும்பாலான பொருட்களில் உள்ள அணுக்கள் ஒருகுறிப்பிட்ட ஒழுங்கோடு படிக அமைப்பில் அமைந்திருக்கும். ஆனால் கண்ணாடிகளில் இருக்கும் அணுக்கள் அப்படி எந்த ஒரு ஒழுங்கமைவோடும் இருக்காது. கன்னா பின்னாவென்று ஒழுங்கற்ற நிலையில் அமைந்திருக்கும்.
“spin” ஆங்கில வார்த்தைக்கு “தற்சுழற்சி”என்று தமிழில் மொழி பெயர்க்கலாம். ஆனால் பெயருக்குஏற்றவாறு எந்த தற்சுழற்சியும் இங்கே நடப்பதில்லை. எனவே நாம் “ஸ்பின்” என்றே அழைப்போம். எலக்ட்ரானுக்கு நிறை என்பது ஒரு அடிப்படை பண்பு. அதே போல் “மின்னூட்டம்” என்பதும் ஒரு அடிப்படைப்பண்பு. அதே போல் “ஸ்பின்” என்பதும் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான், குவார்க் போன்ற துகள்களுக்கு இருக்கும் ஒரு அடிப்படைப் பண்பு.
ஒரு எலக்ட்ரானை ஈர்ப்பு புலத்தில் வைக்கும் போது அது ஈர்ப்பு விசையை உணரும். இதற்கு காரணம் எலட்ரானின் நிறை. அதே எலக்ட்ரானை மின்புலத்தில் வைக்கும்போது மின்விசையை உணரும். இதற்கு காரணம் எலட்ரானின் மின்னூட்டம்.அதே போல் எலக்ட்ரானை ஒரு காந்தப்புலத்தில் வைத்தால் காந்த விசையை உணரும். இதற்கு காரணம் எலக்ட்ரானின் “ஸ்பின்” பண்பு. நிறை, மின்னூட்டம், வெறும் எண் மதிப்புகள். ஆனால் ஸ்பின் எண்மதிப்பு மற்றும்திசை என இரண்டும் உடையது. வெளியிலிருந்து கொடுக்கப்படும் காந்தப்புலத்திற்கு ஏற்றவாறு எலக்ட்ரான் தனது ஸ்பின் திசையை மாற்றிக்கொள்ளும்.
கடையில் போய் நாம் காந்தம் வாங்குகிறோம். இந்தக் காந்தப்பண்பிற்கு காரணம் அதில் இருக்கும் எலக்ட்ரானின்“ஸ்பின்”பண்புதான்.இக்காந்தத்தில் இருக்கும்எலக்ட்ரான்களின் “ஸ்பின்” அனைத்தும் ஒரே திசையில் இருக்கும். இதனால்தான் இந்த காந்தத்தன்மை உருவாகிறது. இதற்கு “பெர்ரோ காந்தத்தன்மை” என்று பெயர்.
சில உலோகக் கலவைகள் குறிப்பாக தாமிர அணுக்களின் படிக அமைப்பில் கொஞ்சம் இரும்பு அணுக்களை வைத்தால் இந்த இரும்பு அணுக்களில் இருக்கும் ஸ்பின்ஒரே திசையில் இருக்காது. ஒவ்வொன்றும் வெவ்வேறு திசையை நோக்கி இருக்கும்.இம்மாதிரியான உலோகக்கலவைகளில் எவ்வளவுதான் வெப்ப நிலையை குறைத்தாலும் ஒவ்வொரு இரும்பு அணுவின் ஸ்பின்னும் வெவ்வேறு திசையை நோக்கியே இருக்கும். இப்படி ஒழுங்கற்ற நிலையில் கன்னா பின்னாவென்று வெவ்வேறு திசையை நோக்கி இருப்பதால்தான் இந்த உலோகக்கலவைகள் “ஸ்பின் கண்ணாடிகள்” என்று அழைக்கப்படுகின்றன.
இந்த ஸ்பின் கண்ணாடிகளில் இருக்கும் ஸ்பின் திசைகளை கணித ரீதியாக எப்படி கணிப்பது என்பது மிகப்பெரிய சவாலாக இருந்து வந்தது. 1950 களில் நோபல் பரிசு வாங்கிய பல அறிஞர்கள் இதைக் கணக்கிட முயன்றனர். ஆனால் யாருக்கும் வெற்றி கிட்ட வில்லை.
இந்த சிக்கலில் கடினத்தன்மையை புரிந்து கொள்ள மிக எளிதான உதாரணத்தை எடுத்துக்கொள்வோம்.மூன்று அணுக்களை மட்டும் முக்கோணத்தின் ஒவ்வொரு முனைப்புள்ளியிலும் வைக்க வேண்டும்.
இடது புறம் உள்ள அணுவின் ஸ்பின் மேல் நோக்கி இருந்தால், உச்சியில் இருக்கும் இரண்டாம் அணுவின் ஸ்பின் அதற்கு எதிர் திசையில் இருக்கும். இதுதான் இயற்கையான நடை முறை. அதாவது குறைந்த ஆற்றல் கொண்ட நிலை. இப்போது மூன்றாவது அணுவை (படத்தில் நீல வண்ணம்) முக்கோணத்தின் வலது முனைப்புள்ளியில் வைத்தால் அந்த அணுவின் ஸ்பின் எந்த திசையை பார்த்திருக்கும்?. மேல் நோக்கி அமைந்தால் முதல் அணுவோடு முரண்பட வேண்டும், கீழ் நோக்கி அமைந்தால் இரண்டாம் அணுவின் ஸ்பின் திசையோடு முரண்பட வேண்டும். மூன்றாவது அணுவின் ஸ்பின்னுக்கு இது ஒரு இக்கட்டான நிலை. இதை விரக்தி நிலை (frustrated state) என்று அழைக்கிறார்கள். இது எப்படிஎன்றால் ஒருவருக்கொருவர் பகைவராக இருக்கும் இரண்டு பேரிடம் நட்பு கொள்வது எந்த அளவுக்கு கடினமோ அது போலத்தான்.
மூன்றாவது அணுவின் ஸ்பின் எந்த திசையை நோக்கும் என்று கணிப்பது உண்மையிலேயே மிகப்பெரிய சவால். மூன்று அணுக்களுக்கே இந்த நிலை என்றால் நூறு அணுக்கள் உள்ள அமைப்பில் ஸ்பின் திசைகள் எவ்வாறு அமைந்திருக்கும் என்று கணிப்பது எவ்வளவு சவாலான விஷயம் என்று நினைத்துப்பாருங்கள். ஏனென்றால் ஒவ்வொரு ஸ்பின்னின் திசையும் அதைச் சுற்றியுள்ள ஸ்பின்னின் திசைக்கு ஏற்ப இருக்கும்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலில் பைக் ஓட்டுபவர்களின் நிலைதான் இந்த ஸ்பின்னின் நிலையும். ஸ்பின்னின் திசையை நாம் ஓட்டும் பைக்கின் ஹாண்டில் பார் திசையாக நினைத்துக்கொள்ளுங்கள். நமது பைக்கின் ஹாண்டில் பாரின் திசையை நமக்கு அருகில் இருக்கும் பைக் ஓட்டுபவர் எந்த திசையில் வருகிறாரோ அதற்கு ஏற்றார்போல் நாம் மாற்றுவோம். அது போல் ஒவ்வொருவரும் அவரைச் சுற்றி இருக்கும் பைக்கின் திசையை பொறுத்து தனது ஹாண்டில் பார் திசையை மாற்றுவார்கள். போக்குவரத்து நெரிசலில் ஒவ்வொரு பைக்கும் எந்த திசையில் செல்லும் என கணிப்பது எவ்வளவு கடினம். அதே போல்தான்இந்த ஸ்பின் கண்ணாடி பொருட்களில் இருக்கும் அணுக்களின் ஸ்பின் திசையை கண்டறிவது மிகக்கடினம். பல ஆண்டுகள் சவாலாக விளங்கிய இப்பிரச்சினைக்கு பரிசி ஒரு புதிய கணித உத்தியை பயன்படுத்தி தீர்வு கண்டார். அதன் பெயர் “பிரதி சீர் உடைவு(Replica Symmetry breaking)”. இதை எளிமையாக சொல்ல வேண்டுமானால்எல்லாவிதமான சாத்தியமுள்ள ஸ்பின்னின் திசைகளைக்கொண்ட பல்வேறுபிரதி அமைப்பு மாதிரிகளை செய்து ஒவ்வொரு பிரதியும் அருகிலுள்ள பிரதியோடு எந்தளவுக்கு ஒத்துப்போகிறது என்று வகைப்படுத்தி அதன் மூலம் இந்த ஸ்பின் கண்ணாடிகளின் பண்புகளை புரிந்து கொள்வது.
பரிசியின் இந்த புதிய கணித உத்தியானது பின்னாளில் மருத்துவத்துறை, நரம்பியல் துறை, செயற்கை நுண்ணறிவுஎன ஏகப்பட்ட துறைகளில் இருக்கும் சிக்கலான அமைப்புகளின் பண்புகளை விளக்க பயன்பட ஆரம்பித்தது.. ஏற்கனவே குறிப்பிட்ட போக்குவரத்து நெரிசலில் கூட இக்கணித உத்தியை பயன்படுத்தலாம்.
ஆழ்கடலில் மீன்கள் கூட்டமாகச் செல்வதைப் டிஸ்கவரி சேனலில் பார்த்திருப்போம்.ஒட்டு மொத்தமாக ஒரு ஒழுங்கில் சென்றாலும் அக்கூட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு மீனின் திசையும் அருகில் இருக்கும் மீன் செல்லும் திசையைவிட மாறுபட்டு இருக்கும். இதில் கூட பரிசியின் கணித உத்தியை பயன்படுத்தி ஒட்டு மொத்தமாக மீன்களின் செல்லும் திசையை கணிக்கலாம். இயற்கையில் இருக்கும் சிக்கலான அமைப்புகளின் சீரற்ற அல்லது ஒழுங்கற்ற நிலையில் இருக்கும் பண்புகளைப் பற்றிய ஆராய்ச்சிக்கு பரிசியின் பங்களிப்பு மிக முக்கியமானது.
இந்த வருடம் நோபல் பரிசு வாங்கிய மூவருமே மனித குலத்தின் மிகச்சிக்கலான பிரச்சினைகளைஆராய்ந்து அறிவியல்பூர்வமாக விளக்கியுள்ளார்கள். இதன் மூலம் இயற்கையை பற்றிய புரிதல் மனித குலத்திற்கு மேம்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த சிக்கலைத் தீர்க்ககூடிய வழிமுறைகளையும் அறிவியல் பூர்வமாக கூறியிருக்கிறார்கள். இது வருங்காலத்தில் ஆராய்ச்சியில் ஈடுபடப் போகும் இளைய சமுதாயத்துக்கு ஒரு கிரியா ஊக்கியாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அதே சமயம், புவி வெப்பமயமாதலைத் தடுக்க நாடுகள் தக்க நடவடிக்கையை எடுக்க மக்கள் வலியுறுத்தவும், இந்த ஆராய்ச்சிகள் நேரடி சமூகப்பயன்பாடாக இருக்கின்றது என்பதும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்.
நோபல் பரிசு இணைய தளத்தில் வெளியான இரு கட்டுரைகளைத் தழுவி எழுதப்பட்டுள்ளது.
ஜோசப் பிரபாகர், இயற்பியல் உதவி பேராசிரியர், லயோலா கல்லூரி, சென்னை
இக்கட்டுரை குறித்த கருத்துக்களை தெரிவிக்க – [email protected]