நூல் அறிமுகம்: மு.ஆனந்தனின் கைரதி 377 மாறிய பாலினரின் மாறாத வலிகள் – பிச்சுமணி
நூல் : கைரதி 377 (மாறிய பாலினரின் மாறாத வலிகள்)
ஆசிரியர் : மு.ஆனந்தன்
விலை : ரூ.₹110
பக்கங்கள் – 120
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]
கைரதி377. வெறுமனே படித்து கடக்கும் கதைகள் இல்லை. சொந்த மண்ணிலே அகதிகளாக இல்லை.. இல்லை.. சொந்த தாய் தந்தையாலே உறவுகளாலே நிராகரிக்க பட்ட, பொது சமூகத்தால் சக மனிதாரக ஏற்றுக்கொள்ள தயங்கும், ‘பாலின அடையாள சுதந்திரத்தை வேண்டி வாழும் மனிதர்களின்’ வலி மிகுந்த வாழ்க்கை வரலாறு.
“கேள்விகளை உருவாக்கியே பழக்கப்பட்ட அதிகார மூளை ஒரு உண்மையான கேள்வியை எதிர்க்கொள்ளும்போது முகத்தில் கடுகடுப்பை கடன் வாங்கியாவது பூசிக் கொள்ளும்”
இந்த அதிகார மூளை மற்றும் ஆதிக்கமூளைகள் என்பது அரசு உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு மட்டும் அல்ல சக மனிதர்களின் உள்ளுணர்வை புரிந்துக் கொள்ளாத அல்லது சில மனிதர்களை இந்த பூமிக்கு அப்பாற்பட்டவர்களாக கருதும் மூளையும் அப்படிப்பட்டது தான்.
ஒரு அரசு பேரூந்தில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் இருவர் இருக்கும் சீட்டில் தனியாக அமர்ந்திருந்தான். பேரூந்தில் அவனிருந்த சீட்டில் மட்டுமே இடமிருந்தது .40 வயது மதிக்கத்தக்க ஒருவர் அந்த சீட்டில் அமர போனார். அவரின் தோற்றம் அவரை ஒரு திருநங்கை என பேரூந்தில் இருந்த அனைவராலும் ஊகிக்க முடிந்தது. அந்த மாணவன் அருகில் திருநங்கை அமர்ந்தவுடன்.. ஏய் எங்க வந்து உட்காருத என்று ஆவேசமாக எழுந்தான் மாணவன். பஸ்ஸில் இருந்த அனேகம் பேர்கள் கேலி சிரிப்புடன் அந்த திருநங்கை அமர்ந்தது தப்பு என்ற தோணியில் அந்த திருநங்கை மீது தனது ஆதிக்க பார்வை செலுத்தினர். நடத்துநர் ஒரு படி மேலே போய் உங்களுக்கு ரெம்ப கொழுப்பு கூடிப் போச்சு என்று வாய்விட்டே நக்கலடித்தார்.
அந்த திருநங்கை நான் டிக்கெட் எடுத்து இருக்கேன்.. இடம் இருந்துச்சு அதான் உட்கார்ந்தேன் இதிலென்ன தப்பு? என்று தனது கரகரப்பான குரலில் சொன்னவுடன் அதுவரை கேலியும் கிண்டலுமாக இருந்த முகங்கள் அவளின் கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் கடுகடுப்பை முகத்தில் அப்பிக்கொண்டு நடத்துநர் சொன்னதை உதட்டில் முனுமுனுத்தார்கள். இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு மேல் இருக்கும்.
கைரதி377 ‘இதரர்கள்’ கதையை படித்ததும் இந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. அந்த பேரூந்தில் திருநங்கைக்கு பக்கம் நின்று பேசா மடந்தை யாக நானிருந்தேன் என்ற குற்றவுணர்வு இன்னும் என்னை விட்டு போகவில்லை. என்னை போல் இந்த கதைகளை படிக்கும் ஒவ்வொருவரும் ஒரு நிகழ்வு நினைவுக்கு வரலாம்.
பொதுச் சமூகம் ‘கைரதி’களை தம்மோடு இணைத்துக் கொள்ள தவறி இருக்கிறது என்பதை உணர்த்தலாம்.
மாற்றுத் திறனாளிகள் கர்ப்பிணி பெண்கள் மற்றும் வயதானவர்கள் ஏன் நாய் பூனை என அனைத்து உயிரினங்கள் மீதும் மனிதாபிமான அடிப்படையில் அணுகி இரக்கம் காட்டும் பொதுச் சமூகம். திருநங்கை திருநம்பி மீது அனுதாபம் காட்ட மறுப்பதோடு அவர்களை கேலிச் சொற்கள் மூலம் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு கொஞ்சமும் தயங்காமல் ஒதுக்கி வைக்கிறது.
சினிமாவும் ஊடகமும் அவர்களை பாலியல் தொழிலாளிகளாக கையெந்தும் பிச்சைக்காரர்களாக மனிதசமூகத்திற்கு அப்பாற்பட்டவர்களாகவே காட்ட முனைந்திருக்கிறது.
மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்து நான் படித்த முதல் புத்தகம் வாடாமல்லிதான்.
1990 களில் எழுத்தாளர் சு.சமுத்திரம் அவர்கள் வாடாமல்லி நாவல் எழுதுவதற்கு முன் அவர்கள் வாழ்க்கை மையப்படுத்தி சிறுகதை ஒன்றை எழுதி ஒரு பத்திரிகைக்கு அனுப்ப.. அந்த பத்திரிகை அதை பிரசுரிக்க தயங்கி பிரசுரிக்காமலே சாக்கு போக்கு சொன்னார்களாம். அவர்கள் பற்றி செக்ஸ் சம்பந்தமான கதைகளை பிரசுரித்து பழக்கப்பட்ட பத்திரிகைகளுக்கு அவர்கள் வாழ்க்கை கதையை பதிவு செய்ய தயங்கினார்கள் என்பதை சு.சமுத்திரம் அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார். எப்படியாவது அவர்களை பற்றி இலக்கிய உலகில் பதிவு செய்திட எண்ணி வாடாமல்லி நாவலை எழுதியாகவும் குறிப்பிட்டிருப்பார்
தமிழ் இலக்கிய உலகில் மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்து படைப்புகள் குறைவுதான்.இந்த நூலின் முன்னுரையில் தோழர் பிரியாபாபு அவர்கள் குறிப்பிட்டதுபோல் பெண் இலக்கியங்கள் தலித் இலக்கியங்கள் ஏன் இப்பொழுது குழந்தைகள் இலக்கியங்கள் பேசப்படும் அளவிற்கு கூட திருநர் இலக்கியம் பேசப்படவில்லை என்ற வருத்தத்தை கைரதி போக்கி இருக்கிறது.
ஆண்னை போல் பெண்ணுக்கு வன்மை, கோபம், ஆளும் திறன், உண்டென்பதை ஆண்கள் ஒத்துக் கொள்ள வேண்டும் என்று பெரியார் சொன்னதை போல்..
ஆண்களை போல் பெண்களை போல்.. மாறிய பாலினதவர்களுக்கும் ஆசை, கோபம், மானம், வீரம், காதல், சுயமரியாதை, உண்டென்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். அதை இந்த புத்தகம் படிக்கும் யாவரும் உணர்வர்.
மொத்த 11 கதைகள். ஆனால் ஒவ்வொரு கதையும் ஊடே சென்று நம்மை நாம் காணலாம். இந்த சமூகத்தில் நாம் கைரதிகளை எப்படி அணுகினோம் அவர்களின் வலியை எப்படி புரிந்துக் கொண்டோம். அவர்கள் வாழ்வு இப்படியும் இருக்குமா? அவர்களை அந்நியபடுத்தும் நமது மனிதநேயம் எத்தகையது? என்று நம்மை உலுக்கலாம்
தன் மானம் காக்க சுள்ளி தீயில் வெந்த ஓலையக்காவின் வைராக்கிய நெருப்பு கைரதியின் நெஞ்சிலும் அணையாமல் இருக்கிறது.
இதரர்கள் கதையில் கைரதிகிருஷணன் மூலம் விண்ணப்பங்களில் சிறப்பு பாலினம் என்று குறிப்பிடாததை மட்டுமல்லாமல்.. நீங்கள் அலியா?ஹிஜராவா யூனக்கா? என்ற கேள்வியை எழுப்பி அதற்கு நூலாசிரியர், கைரதிகிருஷ்ணன் மூலம் தரும் பதில்கள் கதைமாந்தர்களை மட்டும் அல்ல கதை வாசிக்க வாசகரையும் உறையவைக்கும்.
கூடுதலாய் ஒரு நாப்கின். பெண்ணாய் உணரும் கைரதி,வெளிபடுத்த முடியாத ஏக்கங்களின் வெளிபாடு. கதையில் வரும் பூர்வீகா முகத்தில் பூசப்பட்ட போலி கற்பிதங்கள் துடைத்துப் செல்லும் தருணத்தில் கதை படிப்பவர்கள் பூர்வீகா மாறிவிடுவார்கள்.
திருநங்கை நலவாரியத்தில் உதவித்தொகை பெற கைரதி அனுபவிக்கும் கொடூர வலியை சொல்லும் கதை ஜாட்ளா.
இயற்கை உபாதைகளை கழிக்கக் கூட விடாமல் இந்த சமூகம் திருநங்கைகளை என்ன படுத்துகிறது என்பதை சொல்லும் அடையாளங்களில் அவஸ்தை.
சட்டபூர்வமாக வதைக்கும் 377 ஆம் பிரிவின் கீழ் கைரதி கதை என சிறப்பு பாலினத்தவரின் வாழ்க்கை ரணங்களை அழுத்தமா சொல்லுகிறது.
அழகன் என்கிற போர்க்குதிரை,மாத்தாராணி கிளினிக் போன்ற கதைகள் கைரதிகளுக்கு பொது சமூகம் மீதான நம்பிக்கையுட்டும் கதைகள்
இலா. இது முற்றிலும் மாறுபட்ட கதை சிலநாட்கள் கைரதனாகவும் சில நாட்கள் கைரதியாகவும் வாழும் சூழலை பற்றியது. இந்த கதை சொல்லப்படும் விதமும் கதைகளமும் ஆச்சரியப்படவைத்திருக்கிறது.
அதே போல நஸ்ரியா ஒரு வேஷக்காரி கதையும் ஆணாக வாழ்வை விரும்பும் கைரதனின் வாழ்க்கை.
தோழர் மு.ஆனந்தன் அவர்கள் பேசாப்பொருளை பேச துணிந்திருக்கிறார் என்பதை தாண்டி இது தொடர்ந்து சமூகத்தில் பேசும் பொருளாக வேண்டும் என்பதை ஒவ்வொரு கதையும் நமக்கு உணர்த்துகிறது.
மூன்றாம் பாலினத்தவர்கள் பற்றி அழுத்தமாக பதிவு அதே நேரத்தில் அவர் கதை மாந்தர்கள் கதைக்களம் என எல்லாவற்றையும் அடையாளம் காட்டி இருக்கிறார்.
சிறப்பு பாலினத்தவரின் மீதான நிராகரிக்கும் பார்வைக்கு சாதி மதம் இனம் மொழி என வேறுபாடுகள் எதுவும் கிடையாது.
“நான் எல்லா மதங்களும் பாவமன்னிப்பு வழங்குகிறேன் இனிமேலாவது மதங்கள் பெண்களை சமமாக நடத்தட்டும்” என்று கைரதியா மாறிய கென்னடியின் குரல் இரட்டை விடுதலைக்கு அடித்தளமிடுகிறது.
ஒரு நல்ல படைப்பு சக மனிதர்களின் வலியை எழுத்தின் மூலம் கடத்தி விட வேண்டும் அதே சமயத்தில் அவர்களின் உரிமைகளையும் பேசவேண்டும். கைரதி377 அதை செய்திருக்கிறது.
இந்த சிறுகதைகள் தொகுப்பின் மூலம் தோழர் மு.ஆனந்தன் மனதுக்கு நெருக்கமாகவிட்டார். உங்கள் கைகளை இறுக்கப் பற்றி கொள்கிறேன். அன்பும் வாழ்த்தும் தோழர்.
– பிச்சுமணி
ஷேன் வார்னே கவிதை – பிச்சுமணி
அப்போது கிரிக்ககெட்டில்
அவ்வளவு ஆர்வம்.
இந்தியா பெரும் போர் புரிந்து
வெற்றி தோல்வி கொள்வதாய்
எண்ணம்.
அது ஆஸ்திரேலியா-இந்தியா போட்டி
முதன் முதலில்
உன் பெயரைக் கேட்ட போது
உன்னை எவ்வளவு
பெரிய வில்லனாக அடையாளமானாயென
இன்னும் என் நினைவில் இருக்கிறது.
ஆனால் உன் விளையாட்டு
என்னை ஈர்த்தது
உன் சுழற் பந்துவீச்சில்
சிக்கிக்கொண்ட பலரில்
நானும் ஒருவனானேன்.
இந்தியா விளையாண்டால் மட்டும்
கிரிக்கெட் பார்த்த நான்
நீ விளையாடும் கிரிக்கெட்டின்
ரசிகனானேன்.
காலச் சுழற்சியில்
கிரிக்கெட் எனக்கு
பள்ளிக் காலத்தில் புத்தகத்தில்
ஒளித்து வைத்திருக்கும்
மயிலிறகானது..
இன்று..
உன் பெயரும் புகைப்படங்களும்
இணையத்தில் உலாவுகின்றன
மரணம் ஒரு சுழற்பந்தாகி
நீ மரித்த செய்தியை
என் மனசு ஏற்க மறுக்கிறது.
ஒளித்து வைத்த மயிலிறகை
லேசாகத் தடவிப் பார்க்கிறேன்.
தை மகளே வா.. தைரியம் தா.. கவிதை – பிச்சுமணி
திங்களில் மூத்தவளே
மகிழ்ச்சியின் மகளே வா..
எங்கும் துன்பமில்லா
பொங்கும் இன்பம் தா..
உழவரின் உறவே..
உழைப்பாளி தோழனே வா..
எல்லொருக்கும் எல்லாமென
நிலையான நிலையை தா..
தினமும் பிறக்கும்
ஆகாயத்தின் தலைவனே வா..
பூமித்தொண்டர்கள் வாழ்வில்
தேய்பிறையில்லா கனவை தா..
நில மகளுக்கு பாலூட்டும்
மழைத் தாயே வா..
எளியவர் வாழ்வில் ஒளியூட்டும்
வழிகள் பல தா..
முப்பால் மொழியின்
முகவரியே வா..
உழைப்பால் இயங்குமெல்லாம்
பொதுவாய் தா..
கூடி வாழ கோடித் தந்த
இயற்கையே வா..
கேடில் வாழும்சாதி ஒழிய
நன்றியை ஏற்று நம்பிக்கை தா..
ஒரு நாள் நான் இறந்திருந்தேன் கவிதை – பிச்சுமணி
கடந்த காலத்திற்கும்
இதுவரை நிகழா காலத்திற்கும்
என்னை அவ்வப்போது
அழைத்துச் செல்லும் கனவென்னும்
டைம் மெஷின்..
ஒருநாள்
நான் இறந்த தேதிக்கு
அழைத்து சென்றது
நேற்றும் இன்றும்
என் விருப்பப்படி நடக்காத
சம்பவங்களை மாற்றியமைக்க
தினசரி என்னை அழைத்து செல்லும்
டைம் மெஷின்.
இப்போது நான் எதிர்பார்க்காத
என் இறுதிநாளுக்கு
அழைத்துச் சென்றிருக்கிறது
நான் எப்போதாவது
ஆசைப்பட்டு வருங்கால நாள்களில்
எனக்கான நாள்கள் இதுவென்று
அகமகிழ்ந்து வாழ்ந்து
நிகழ்காலக் காயங்களை
டைம் மெஷின் மூலம்
மழுங்கடித்திருக்கிறேன்.
ஆனால்
இப்போது இறுதிநாளுக்கு வந்திருக்கிறது..
நான் இறந்தது
துக்கமாக கருதாமல்
எனது கண்ணீர் அஞ்சலி போஸ்டரில்
நான் சிரித்துக்கொண்டிருந்தேன்.
நான் ஆடாமல்
அசையாமல் இருக்க
கை கால்களை கட்டி வைத்திருந்தார்கள் எதையும் பார்க்காமலிருக்க
எனது கண்களையும் மூடியிருந்தார்கள்.
நான் தோல்வியடையும் போதெல்லாம்
உனக்கெல்லாம் இது தேவையா யென்று
உதாசீனபடுத்தியவர்கள்
எனக்கான ஆறுதல் வார்த்தைகளை
தேடிக் கொண்டிருந்தார்கள்
என்னைத் தேடி வந்தவர்கள்
சொல்ல வார்த்தைகள் இருந்தும்
மௌனமாகினர்
சிலர் கண்களில் கண்ணீர்த் துளிகள்
சிலர் கண்களில் ஏமாற்றம்
சிலர் கண்களில் எதிர்பார்ப்பு
சிலர் கண்களில் ஏளனம்
சிலர் கண்களில் சம்பிரதாயம்
சிலர் கண்களில்
சாவுக்கு வந்த கடமையுணர்வு
சிலர் கண்களில் அடுத்த நிகழ்ச்சிக்குச் செல்லும் அட்டவணை
சிலர் கண்களில் அன்றைய தேவையின் ஊதியம்
நேரம் ஆக.. ஆக..
எனது பெயர்
எல்லோரும் மறந்தும் போய்
பூத உடலனாது.
நான் இறந்திருப்பது
எனக்கு தெரியுமென
அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை.
இப்போது நிகழ்வனவற்றிலிருந்து!. கவிதை – பிச்சு மணி
அடுக்கடுக்காய்
கட்டங்கள் வரைந்து
அழுகிய பொய்களை
அக் கட்டங்களில் நிரப்பி
கொள்வாரை திரட்டி
கொடுஞ்செயலை கொண்டாடி
வதைக்கும் வஞ்சகமதியாளரை
வானுயர புகழ்ந்து
மலம் மணக்குமென்று
மலர் நாறுமென்று
ஒவ்வாத கருத்துகளை
ஊடக திரையில் உளரிடும்
மனுதாசர்கள்..
மனிதம் மறுக்கும்
துர் பிடித்த ஆயுதங்களை
கூர் தீட்டி அலைபாயும்
இளம் மனதில் நிலைநாட்ட
துடியாய் துடிக்கிறார்கள்.
மனித பிறப்பின்
உண்மையை அறிந்த..
மருத்துவம் படித்த அரசியல்வாதி
அக்னி சட்டியை
இனக் கருப்பை யென்று
காலண்டரை காட்டி
மனிதமென்னு குளத்தில்
கல்லெறிந்து பார்க்கிறார்.
எளிய மக்களின்
இறை நம்பிக்கையை
மதமென்னும் கோடாரியால் பிளந்து
விருந்தோம்பல் விரும்பும்
விளிம்பு நிலை மக்களிடையே
விரோத நிலை விதைத்து
மனிதத்தை புதைக்க
அலையாய் அலைகிறார்கள்.
துயருற்றவர்கள் வாழ்வு
துளியேனும் மாறாமல் இருக்க.
குடி பெருமை அகந்தை
யார் பசியை போக்கும்?
பட்ட காலிலேயே பட்டு
பரிதவிக்கும் பாட்டாளிக்கு
ஒரு காயம் ஆற
மறு காயம் தருகிறது
அரசதிகாரம்
வலுத்தவன் வாழ
உழைப்பவன் தாழ.. என்னும்
நிலைதான் தொடர
எல்லாம் இயங்குது
வெவ்வேறு பெயரோடு.
திரை விமர்சனம்: கிரேட் இந்தியன் கிச்சன் – பிச்சுமணி
என்ன வேலை செய்யிறிங்க?
பெயிண்டர்.
உங்கள் மனைவி?
வீட்ல சும்மாதான் இருக்கிறாள்.
பெயிண்டர் இடத்தில் எந்த வேலையும் போட்டுக் கொள்ளுங்கள். ஆனால் அநேக ஆண்களின் பதில் இதுவாகத்தான் இருக்கும்.
என்ன வேலை பார்க்குறீங்க?
ஆசிரியர்.
உங்கள் மனைவி?
House wife. Sorry.. இல்லத்தரசி.
நீங்க என்ன வேலை செய்யிறிங்க?
இஞ்சினியர்.
உங்கள் மனைவி ?
ஆசிரியர்.
உங்களுக்கு சமைக்க தெரியுமா?
தெரியாது.
உங்க வீட்டில் யார் சமையல் செய்வார்?
எனது மனைவி தான்.
சார் உங்களுக்கு சமைக்க தெரியுமா?
தெரியும்.
சமையல் பாத்திரங்களை யார் கழுவுவார்கள்?
எனது மனைவி தான்.
சும்மா தான் இருக்கிறாள், ஹவுஸ் ஒய்ப், சமைக்க தெரியாது, மனைவி தான் பாத்திரம் கழுவுவாள்.. இப்படியான வார்த்தைகள்.. எவ்வளவு பெரிய வன்முறையான வார்த்தைகள் என்பதை சொல்லும் படம்தான் “தி கிரேட் இண்டியன் கிச்சன்”.
கதாநாயகி திருமணத்தோடு படம் தொடங்குகிறது. சமைப்பது.. பாத்திரம் கழுவுதல்.. சமைப்பது.. பாத்திரம் கழுவுதல் என்று அடுப்படி காட்சிகள் அதிகமாக இருந்தாலும்.. சமூகத்தில் ஆணாதிக்க வெறியையும் சோம்பேறிதனத்தையும் தோலுரித்து செவ்விடில் அடித்தால் போல் நமக்கு காட்டுகிறது இந்த படம்.
குக்கர் சோறு வேண்டாம்.. மிக்சியில் அரைக்கவேண்டாம்.. கடுங்காப்பி இப்படிதான் வேணும்… வாசிங்மிஷினில் துணி துவைத்தால் பிடிக்காது.. இப்படி சொந்த வீட்டில் ஆர்டர்கள் போட்டு.. சுகம் களித்து உடல்நலம் பேணும் சோத்து அமுக்கிகளாகிய நாம் கண்டிப்பாக இந்த படத்தை பார்க்க வேண்டும்.
மாதவிடாய் நாள்களில் பெண்கள்படும்பாடு கொடூரமானது. எவ்வளவு எளிதாக நாம் அவர்களின் மீது வன்முறைய கட்டவிழ்த்து விடுகிறோம் அந்த நாள்களில்.
கதாநாயகி மாதவிடாய் நாள்களில் உதவிக்காக ஒரு பெண்மணி வருவார் படத்தில்..
“எவ்வளவு பெரிய வீடு இந்த வீட்டை சுத்தம் செய்வது பெரும் கஷ்டம்தான்.. நான் குடுத்துவைச்சவ எங்க வீடு இரண்டு சிறிய அறைகள்தான்” பெண் சமூகத்தின் கொடும் வலிய பரிதாபம் கலந்த மன உளைச்சலோடு பதிவு செய்வார்.
கதாநாயகியின் கணவர் கதாபாத்திரமும் மாமனார் கதாபாத்திரமும் ரெம்ப நடிக்காமல் வாழ்ந்தது போலவே இருக்கும். அந்த கதாபாத்திரத்திரங்களில் நமது அப்பாவாகவோ அண்ணாகவோ நீங்களாகவோ நானாகவோ.. பொருத்திப்பார்த்தால். அது படமாக இருக்காது நிசமான நமது மிருகத்தனமான வாழ்க்கையா இருக்கும்.
படத்தில் வரும் பெண்குழந்தை நம் மனதில் கண்டிப்பாக நிற்கும். தீட்டு புனிதம் புடலங்காய் என எதுவும் வசப்படதா அந்த குழந்தை கதாநாயகி மீது அன்பு செலுத்தும் ஒவ்வொரு கட்சியும் அருமை. அதிலும் வயதான பெண் ஒருத்தி கதாநாயகி மாதவிடாய் வந்து தனி அறையில் இருக்கும் போது.. மெத்தையில் படுக்காதே.. இந்தா பாய் என்று தரையில் போட்டு இருக்க சொல்லி கணவனும் மாமனாரும் ஐயப்பசாமிக்கு மாலை போட்டு இருக்கிறார்கள் அவர்கள் முன் வந்துவிடாதே,. சொல்லி செல்லுவாள். ஆனால் பெண் குழந்தை (ஐயப்பனுக்கு மாலை போட்டிருக்கும்) கதாநாயகிக்கு அன்போடு சாப்பிட ஒன்றை கொடுத்து விட்டு செல்லும் காட்சி.. அன்புக்கும் சமத்துவத்துக்கும் முன்னால் தீட்டு புனிதம் எதுவும் இல்லை என சொல்கிறது.
கீழே விழுந்த தன் கணவனை.. மாதவிடாய் நாளில் கதாநாயகி காப்பாற்ற தூக்கியதால்.. பரிகாரம் செய்யும் கணவன். மறுநாள் காப்பி கேக்கும் போது.. கழிவுநீரை தந்து அதிர்ச்சி அடையவைக்கிறாள். கோபத்தோடு கிச்சனுக்குள் வரும் கணவன், மாமனார்.. முகத்தில் மீது கழிவுநீரை ஊற்றுகிறாள்.. நிச்சயம் அந்த கழிவுநீர் படம் பார்க்கும் அத்தனை ஆண்கள் முகத்திலும் படிந்திருக்கும்.
கோவத்தில் தன் தாய்வீடு நோக்கி வந்து கதாநாயகி.. வீட்டில் அமர்ந்து இருப்பாள் அவளது தம்பி வெளியே இருந்து உள்ளே வரும் போதே…
அம்மா தண்ணீ குடு.. என்பான்.
அம்மா தன் இளைய மகளை தண்ணீரை எடுத்து வரச்சொல்லுவாள்..
கதாநாயகிக்கு கோவம் வந்துவிடும்…
தங்கைய பார்த்து தண்ணீய நீ எடுத்துக் கொடுக்காதே..
டேய்.. நீ போய் தண்ணீ எடுத்து குடிடா.
ஒட்டு மொத்த படத்தின் தீர்வை இந்த கடைசி காட்சி சொல்லி விடும்.
மீண்டும் சொல்லுகிறேன்.
குக்கர் சோறு வேண்டாம்.. மிக்சியில் அரைக்கவேண்டாம்.. கடுங்காப்பி இப்படிதான் வேணும்…வாசிங்மிஷினில் துணி துவைத்தால் பிடிக்காது.. இப்படி சொந்த வீட்டில்ஆர்டர்கள் போட்டு.. சுகம் களித்து உடல்நலம் பேணும் சோத்து அமுக்கிகளாகிய நாம் கண்டிப்பாக இந்த படத்தை பார்க்க வேண்டும்.
மலையாள படம். கண்டிப்பாக அனைத்து மொழிகளிலும் வர வேண்டும். அரைகுறை மலையாளம்தான் நான். ஆனால் எளிதாக புரிகிறது. இப்படம் பார்க்க மொழி தேவை இல்லை.
ஜெய்பீம் கவிதை – பிச்சுமணி
இந்த தேசத்தின்
எதேனும் ஒரு ஊரில்
எந்த ஒரு தெருவிலும்
ஒடுக்கப்பட்ட வரின் குரலை
பாதிக்கப்பட்டவரின் சொல்லை
வலிகள் நிறைந்த வார்த்தைகளை
மனிதம் நேசித்து கேட்டு கொண்டிருப்பான்
ஒருவன்.
அவன் வேறு யாருமில்லை
அவன் பெயர் தோழர்.
உரிமை
சம உரிமை
சமூக நீதி
எதிலும் அந்த
தோழனின் கைகளில்
செங்கொடி உயர்ந்து பறக்கும்.
தேசம் காக்கும் போராட்டமோ..
தெருக்களின் பிரச்சினையோ..
இரண்டிலும் அவனிருப்பான்.
அவன் பொதுவுடமைக் காரன்.
காற்றைப்போல்
இந்திய தேசத்தில் அவன்
கலந்து பல நூற்றாண்டு
ஆகிவிட்டது.
கடுகளவோ
கடலளவோ..
கவலை பிரச்சினை
தீர்வு தேடி..
காயங்களை
நெஞ்சில் சுமந்து
புன்னகை யோடு
வணக்கம் தோழர்
சொல்லும் எளியவர்கள்
நெஞ்சில் நிறைந்து
நிற்கிறான்..
பொதுவுடமைக் காரன்.
இழக்க ஏதுமற்ற
எளியவனே
இரக்கமற்ற
அரசதிகாரத்தை
எதிர்த்து நிற்பான்
எளியவனும்
பொதுவுடைகாரனும்
வேறு வேறல்ல
உரக்க சொல்வேன்
ஜெய்பீம்
லால் சலாம்…
(2)
ஆகாயத்தில்
அசந்துறங்கும் ஆதவனை
நீர் தாளம் தட்டியெழுப்புகிறாள்
கடல் அன்னை.
(3)
ஓடிப்பிடித்து விளையாடினோம்
நானும் அலையும்
ஓய்ந்து போன கால்கள்
இளைப்பாற இடந்தேடுகிறது
ஓய்வறியா அலையோ
வா..வா.. என்கிறது…
நூல் அறிமுகம்: சம்சுதீன் ஹீராவின் மயானக்கரையின் வெளிச்சம் – பிச்சுமணி
ஆபத்து எதுவென்று அறியாத பசி உணர்வை மட்டும் வெளிக்காட்டும் அந்த பெயரற்றவனும் இம்ரானும் என்னை ஏதோ செய்கிறார்கள். எல்லாவற்றையும் செய்தியாகவோ கதையாகவோ படிக்கும் வேடிக்கை காரனா என ஒருவித கேள்வி புன்னகையுடன் என்னை உலுக்கி கொண்டு இருக்கிறார்கள்.
ஜுபேரின் வெள்ளை குர்தா என் கால் அருகில் விழுந்து கிடைப்பது போல் மனசு படம் பிடித்துக் காட்டுகிறது.. என் கால் பட்டு அது அழுக்காகி விடுமோ என்று கால்கள் பதறி குழலாடுகிறது. போனவாரம் நான் சாப்பிட பீப் பிரியாணி மெளசின் கண்களில் எனக்கு தெரிகிறது.. பாரத்மாதகிஜே, ஜெய் ஸ்ரீ ராம் சொல்லாமல் நீ எப்படி பீப்பை ருசித்தாய் என கேட்டுக்கொண்டே தொடர் தொல்லையை நிரந்தரமாக தவிர்க்க இரயிலிருந்து குதித்து என்னையும் பின்னோக்கி இழுப்பது போல் மனசு அழுத்துகிறது.
ஊரடங்கில் பசி என் உயிரை குடித்து போல் உணர்கிறேன். ஆனால் எனக்கு முன்போ பின்னரோ மரித்த இல்லை… இல்லை.. சாகடிக்க பட்ட பைசல் என்னை நோக்கும் கேள்விகளுக்கு என்னிடம் பதில்கள் இல்லை. கதைக்கு முடிவரை எழுதும் ஆற்றல் இந்திய பொதுச் சமூகத்துக்கு இருப்பதாய் தெரியவில்லை. பைசல்கள் மீது அவப்பழியை சுமத்துவதை அமைதிகாத்தே அனுமதிக்கிறது. சில மூலைகளில் எப்போதாவது எழும் என்னைப் போன்றோரின் பைசலுக்கான குரல்கள். கடலில் கரையும் பெரும்காயமாகிவிடுகிறது.
படுகொலைகள் வன்கொடுமைகள் மற்றும் வெறுப்புணர்வை விதைப்பதற்கும்; செய்வதற்கும் ஒரு கூட்டம் பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறது. அதுவும் என் அருகாமையில் உள்ள முருகேசன் சங்கர் பண்ணாரிகளே தேர்வு செய்கிறது.. அவர்கள் ஒருவர்க்குள் ஒருவர் ஆதிக்கம் செலுத்தி அழிந்து போகிறார்கள். ஆனால் கோவலன்ஜீகள் சலீம்கள் மீது அவப்பழியை சுமத்தி ஒரு சமூகத்தின் மீது வெறுப்புணர்வை வளர்க்கிறார்கள்.
மயானக்கரையின் வெளிச்சம்.இப்புத்தகத்தில் உள்ள கதைகள் அனைத்தும். நிகழ்கால நிகழ்வுகள்.
ஒவ்வொரு கதையும் கண்ணீர் முடிவில்லாமல் முடிக்கமுடியவில்லை. நடக்கும் அத்தனை கொடூரங்களையும் அமைதியாய் கடக்கும் பொது மனசாட்சியை கண்டிப்பாக தட்டி எழுப்பும்.
ஒரு சமூகத்தின் வலியை சொல்லி இன்னொரு சமூகத்தின் மீது வெறுப்புணர்வை தாங்கி நிற்கவில்லை. சாதாரண உழைக்கும் மீது மதத்தின் பெயரில் வெறுப்புணர்வை கட்டவிழ்த்து விடப்பட்ட காட்சிகள். வாழ்வுக்கும் சாவுக்குமிடையே சம்பாத்தியம் என்று வாழும் சுழல் மாறி எப்படி தப்பித்து உயிர் வாழ போகிறோம் என்று அச்சப்பட்டு நிற்கும் எளிய மக்களின் வாழ்நிலை.. அந்த மக்களை சொந்த வாழ்நிலத்திலேயே அகதிகாளாய் உருமாற்ற நடக்கும் கொடுமைகள்.
இந்த நாட்டில் எதோ ஒரு மூலையில் படுக்கொலையோ வன்கொடுமையோ நடக்கும் போது தன் மன அமைதியை இழந்து வருத்தப்படும் பொது சமூகத்தை.. மனிதவெறுப்புணர்வால் அச்சுறுத்தலால் தன்னை தற்காத்துக் கொள்ளும் சூழலுக்கு தள்ளி.. மதவெறி படுகொலைகளை பல்வேறு வழிகளில் அரசதிகாரம் துணைக்கொண்டு சங்கி கூட்டம் அரங்கேற்றி வரும் இந்த தருணத்தில் இப்புத்தகம் மிக அவசியமானது.
இக்கதைகள் படித்த எனக்கு தோன்றியதெல்லாம்
இந்த கதை அனைத்திலும் நாம் இருப்பது போலவும் நடக்கும் கொடூரங்களையும் அனைத்தையும் எதோ ஒரு காரணத்தால் வேடிக்கை பார்ப்பது போலவும்..மனசு உறுத்தியது.. ஆனால் தோழர் சம்சுதீன் கதையின் முடிவில் இப்படி முடித்திருப்பார்.” ஒரு பெரும் மக்கள் திரள் முகாமின் முன் கதவை உடைத்தெறிந்து உள்ளே நுழைந்தது..” ஆம் அந்த பெரும் மக்கள் திரளில் இப்புத்தகத்தை படிக்கும் நாம் இருப்போம்..
உங்களை ஆரத்தழுவி இறுக்க கைகளை பற்றிக்கொள்கிறேன் தோழர் சம்சுதீன் அவர்களே..
உங்களின் கடைசி பக்க பயோடேட்டா உங்கள் மீதான அன்பையும் மரியாதையையும் மேலும் உயர்த்தி நிற்கிறது.
உங்கள் தொழில் சுத்தியல் பிடிப்பதாயினும் உங்கள் ஆயுதம் பேனா என நிறுவித்து இருக்கிறேர்கள். எளிய மக்களின் வாழ்நிலை வலியை சொல்ல பெரும் கல்வியாளர் தேவையில்லை.. வலியை உணர்ந்தவர்கள் எழுத வரவேண்டும். நீங்க வந்திருக்கிறேர்கள் பெரும் மகிழ்ச்சி.. தொடந்து எழுதுங்கள். நன்றி.
நூல்: மயானக் கரையின் வெளிச்சம்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை:₹ 120
ஆசிரியர்: Samsu Deen Heera