நூல் அறிமுகம்: சம்பத்ஜியின் ‘முரல் நீங்கிய புறா – புதியமாதவி

நூல் அறிமுகம்: சம்பத்ஜியின் ‘முரல் நீங்கிய புறா – புதியமாதவி




கவிதை மாடத்தில் முரல் புறா
புறாக்களுக்கும் மனிதனுக்குமான தொடர்பு மிகப் பழமையானது. மனிதன் சமூகமாக வாழ ஆரம்பித்தக் காலத்தில் அவன் தன்னோடு வளர்த்த முதல் பறவை இனம் புறா. அதனால் தான் 4000 ஆண்டுகளுக்கும் மேலாக புறாவோடு மனித இனமும் ஒரே கூட்டில் வாழ்ந்திருப்பதாக கணக்கிடுகிறார்கள்.. பகலில் சூரியனையும் இரவில் நட்சட்திரங்களையும் கொண்டு எல்லைகளற்ற ஆகாயத்தில் திசைகளை சரியாக அடையாளம் காணும் திறமை கொண்டவை புறாக்கள். அத்துடன் ஆண் – பெண் உறவில்

புணர்ச்சிக்கு மதிப்பும் மரியாதையும் கொடுப்பதும் புறாக்கள்தான். முட்டை இடுவது மட்டுமே பெண் புறாவாக இருந்தாலும் அடை காப்பதில் ஆண் புறாவும் சம பங்களிப்பு கொடுக்கும். புறாக்களின் இயல்புகள் தனித்துவமானவை. நயத்தக்க நாகரிகமிக்கவை.

ஆண்புறா தான் விரும்பும் பெண் புறாவை சேர்வதற்கு அழைக்கும்
குரலை “முரல்’ என்று நற்றிணை சொல்கிறது.

வண்ண புறவின் செம் கால் சேவல்
வீழ் துணை பயிரும் கையறு முரல் குரல் – நற் 71/8,9

புறாக்களின் முரல் தனித்துவமானது, பெண் மீதான வல்லாங்குகள் கொண்டதல்ல, பெண்ணை அது சக உயிரியாக மதிக்கிறது. பெண்ணுடலை இரண்டாம் பாலினமாக வரையறுத்திருக்கும் மத பீடங்களை தன் குரல்வளைக்குள் அடைத்துவிடும் , அதன் பின் சூழும் நிசப்தத்தைக் கொரித்தபடி கழுத்தை சாய்த்துக்கொள்ளும். இறை நம்பிக்கைகள் மத பீடங்களாக மாறி , மதங்கள் தங்கள் அதிகாரத்தை பக்தி என்ற பெயரில் விற்பனை செய்யும் நிருவனங்களாகிவிட்டன. ஆனால் புறாக்கள் மதமற்ற இறைமையில் உயிர்வாழ்கின்றன. புறாக்களோடு வாழ்ந்தாலும் மனிதனுக்கு புறாவின் குணாதிசயங்கள் எதுவும் வந்துவிடவில்லை. ஆண் பெண் உறவு முதல் அதிகார விளிம்பு வரை முரல் நீங்கிய புறாக்களிடமிருந்தும்

முரல் எழுப்பும் புறாக்களிடமிருந்தும் மனிதன் எதையுமே
கற்றுக்கொள்ளவில்லை. !

“மசூதியின் மாடங்களில்

தேவாலய மணித்திடலில்

ஆலய விதானங்களில்

தன் முரலை குரல்வளைக்குள்

அடைத்து நிசப்தத்தை கொரித்தபடி

சாய்கழுத்தில்

மதமற்ற இறைமையை

இரையெடுத்துக் கொண்டிருக்கின்றன

முரல் நீங்கிய புறாக்கள்.

(பக் 138)

“மதமற்ற இறைமையை இரையெடுத்து” என்ற வரிகளில் கவிதை ஒரு
தத்துவவெளிக்குள் மின்னலெனப் பாய்கிறது.

“காமத்தின் மீதொரு காலும்

காதலின் மீதொரு காலும்

பிணைத்த படி “

(பக் 77) உடன்பாட்டுதுயர் மட்டுமல்ல,

சம்பதிஜியின் கவிதைகள் இந்த இரண்டிலும் இணைந்து பயணிக்கின்றன. அப்பயணத்தில் நிறுவனமயமான குடும்பம் முதல் கோவில்வரை பெண்ணோடு இயங்கினாலும் பெண்ணுடலை விலக்கி வைப்பதில் தப்பித்தலுக்கான சகல வழிகளையும் கண்டுபிடிக்கின்றன.

“தூமைப் பாசியில் நீந்தி

வழுக்கி விழுந்த

வாழ்வெங்கும் கழுவ

தீராப் பிசுபிசுப்பு.

எத்துனை கழுவியும் உலரா பிசுபிசுப்பை

அயர்ச்சியில் கைவிட்டேன்.

தாமதமாய்

அறிய நேர்ந்தது

அது தப்பித்தலுக்கான முன்தீர்மானமென்று.

(பக் 140)

காலம் கடந்து வரும் உடல்மொழியை வாசலில் பசிய சாணத்தில் சொருகிய பூசணிப்பூ கனவுகள் அறுபட கனவு ஏடாக மட்டுமே தேங்கிவிடுகிறது வாழ்க்கை.

யாரும் வருவதில்லை, யாரும் போவதில்லை, யாரும் திறப்பதில்லை, ஆனாலும் இருக்கிறது வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஆழ்புதைவில் இன்னொரு முகம். அந்த ரகசியம் ரகசியமாக இருப்பதையே உன்னதங்கள் என்று கொண்டாடும் வாழ்க்கையை கவிஞரின் முரல் அங்ககத்துடன்

கடந்து செல்கிறது.

“புழங்கவில்லை எனினும்

விரும்பத்தக்க

பின்கதவு”

(பக் 54)

இதையே இன்னொரு கவிதையில் நினைவறைச்சுடராக

“உள்ளும் புறமும்

ஒருசேரத்

தாழிட முடிவதில்லை.

விரும்பத்தக்கதாய் இல்லை

எனக்கான உள்ளறைகள்”

(பக் 112)
*
ஆண்டாளின் கண்ணனை இதுவரை யாரும் கற்பிக்காத இன்னொரு
காட்சியினூடாக நிறுத்தி “அன்றலர்ந்த ஆண்டாளின் “ பசலை துடைக்கிறது
முரல் புறா.

அவனும் கண்ணன் தான். கண்ணன்கள் காலம் தோறும் ஆண்டாள்களின் பசலைத் துடைப்பதில்லை. காரணம் கண்ணன் காணமுடியாத உலகம்

ஆண்டாள்களுடையது. பிறவி இருளில் சிக்கிக்கொண்ட கண்ணன்

பிறவிப்பெருங்கடல் நீந்தவும் அவன் காயப்படும்போதெல்லாம்

“கைலாகு கொடுத்து கடைந்தேற்றவும் வருபவள் எப்போதும்

ஆண்டாளாகவே இருக்கிறாள் . மற்றவர்கள் கடந்து செல்கிறார்கள்.

யுகாந்திர வேட்கையோடு இருப்பவள் அவள். ஒரு கணத்தில் யுகங்களின்

பசலையைத் துடைத்துவிடும் ஆண்டாளாக பாற்கடலை வசப்படுத்திவிடுகிறாள். முரல் நீங்கும் இத்தருணத்தில் கண்ணனும் இதுவரை கடக்க முடியாத கோபியர்களின் உலகத்தைக் கடந்துவிடுகிறான். அத்தனையும் ஆண்டாளின் கைலாகு கொடுத்த கடைத்தேற்றல். “இருளாண்டாள் “ கவிதையில் தான் ஆண்டாள் இத்துனை அதிசயங்களையும் செய்கிறாள். இக்கவிதை கண்ணிழந்த ஒருவன், தார்ச்சாலையை கடக்கும் காட்சியின் ஊடாக எந்திரமயமான சூழலுக்கு நடுவில் ஒரு பெண்மனம் செய்யும் கருணையின் செயலாக – புறக்காட்சியில் விரிகிறது, ஆனால், கவிதை பயணிப்பது ஆண்டாளின் யுகாந்திர வேட்கை பயணத்தில் பசலைப் பாடினியின் கைலாகு கொடுத்து கண்ணனையும் கரைசேர்த்த பெண்ணியப் பெருவெளியாக விரிகிறது. மரபின் தொன்மங்களையும் படிமங்களையும் கொண்டு கவிதை பல்வேறு தளங்களில் தன்னை எழுதிக்கொள்கிறது.

“மெழுகுப்பூத்த விழிகளால்

பேரூழியை இசைத்துக் களைப்புற

தனது புல்லாங்குழலைத்

தளர்த்தினான் கண்ணன்.…. பிறவியிருள் குடைந்து

ஊழித்திசை அழைப்பில்

உத்தேசத்தில்

கடந்து கொண்டிருந்தான் வாழ்வை

இருளோடியாய்.

யுகாந்திர வேட்கையோடு

தனித்த மென்னொளியில்

ஒளிர்ந்துகொண்டிருந்தவள்

உன்னித்தெழுந்த தடமுலைகளதிர

வழியும் பசலையை

துப்பட்டாவால் துடைத்தவாறே

சிதறிய கருணைகளை

அள்ளிக் கையளித்து

கைலாகில் கடைதேற்றுகிறாள் கண்ணனை.

பசலைப்பாடினி

அன்றலர்ந்த ஆண்டாள்.

(பக் 52, 53)

ஆணில் சரிபாதியாக பெண் இருக்கிறாள் என்பதை அடையாளப்படுத்தும்போது ஆண் முதன்மையானவனாக முன்னிறுத்தப்படுகிறான். அதாவது அடையாளங்கள் அனைத்தும் ஆண்வழி மட்டுமே அடையாளப்படுத்தப்படுகின்றன. மாதொருபாகன் என்றே அழைக்கிறோம். அர்த்தநாரீஸ்வரன் தான் அடையாளமே தவிர அர்த்த நாரீஸ்வரி அல்ல. மொழிக்கிடங்குகள் நம் சிந்தனையை ஓர்மையை வெல்லும் இடமிது. அதனால்தான் மொழி எப்போதுமே ஆண்மைய சிந்தனையின் வெளிப்பாடு என்று பெண்ணியப்பெருவெளி அதைக் கட்டுடைக்கிறது. இந்த வெளியில் சம்பத்ஜியின் “பாகமுகி” பெயரிலும் கவிதை வடிவத்திலும் வரிகளிலும் கருத்தியல் ஓட்ட த்திலும் பெரும்
வெடிப்பை ஏற்படுத்திய கவிதைவெளியாக இருக்கிறது.

“பாகமுகி” என்று பெண்ணை மையப்படுத்தி வரும் அடையாளமாக வாசிப்புக்கு வசப்படும்போது ஏனோ “மாதொரு பாகமெனில் உனது பிழையிலும் பாகமாவேன்” என்ற வரிகளில் வரும் “மாதொரு பாகன்”

நெருடலாகிவிடுகிறது. “ நஞ்சுண்ணலும் இறைமையின் ஒற்றைத்துயர்,…
நாம் ஏராளமான மன்னித்தல்களை முன் கூட்டியே பகிர்ந்துள்ளோம்”
சரிதான். (பாகமுகி.. பக் 126)

நீருறவு பெண்ணானது வியப்பில்லை. அவள் ஆழ்துளைக்கிணறானதும் வியப்பில்லை. ஆழ்துளைக்கிணறின் புறச்செயல்பாடுகள் அனைத்தும் பெண்மீதான சமூகத்தின் வன் கொடுமைகளாக கவிதை விரிவதும் தண்ணீரைச் சுமந்தலையும் சமூகம் நத்தையாக ஊர்ந்து கொண்டிருப்பதும் சம்பத்ஜியின் கவிதைதுளிகளின் பிரக்ஞைப் பூர்வமான சமூக மனிதனின் ஈரத்துளிகள்.

வண்ணதாசன் சொல்லி இருப்பது போல சம்பதிஜி யின் கவிதைமொழி சுயம்புவானது. தமிழ் படைப்புலகின் முரலோசைக்கு வாழ்த்துகள்.

கவிதை நூல் : முரல் நீங்கிய புறா
கவிஞர் : சம்பத்ஜி
விலை ரூ 120.
பக்கம் 144,
வெளியீடு: புது எழுத்து
புத்தகம் வாங்க: 24332924

Kumaragru Kavithaigal குமரகுரு கவிதைகள்

குமரகுரு கவிதைகள்

புறாக்கள் மீன் உண்பதில்லை
அவை கடலுக்குப் பக்கத்தில்
தானியங்களைப் பொறுக்குவதில் மும்முரமாய் இருக்கின்றன
அவற்றுக்கு மீனின் சுவை இன்னும் தெரியவில்லை,
மேலும் புறாக்களுக்கு நீரில் நனைதல்
மீது ஒவ்வாமை வேறு.

என் நினைவுக் கடலில் உங்களைப் பற்றியவொரு சொல் நீந்திக் கொண்டிருக்கிறது
அந்தச் சொல்லைக் கொத்தியெடுத்துக் கொடுக்க ஒரு புறாவைத்தான் அனுப்பியிருக்கிறேன்!!

கடலின் நடுவில் ஒரு டீசல் படகில்
பறக்காத புறா ஒன்று
குச்சியில் நெருப்பின் மேல்
சுழன்றபடி இருப்பதைக் கண்டு
எனக்கு ஆச்சர்யமில்லை
என்னிடம் அந்த சொல்லைத் தேடிக் கண்டிபிடிக்கத் தேவையான அளவு
புறாக்கள் இருக்கின்றன!!

இதோ பாருங்கள்
முட்டைகளின் மீதமர்ந்து
எனக்கான புறாக்களை உற்பத்தியும்
செய்து கொடுக்கின்றன!!

ஆனால்,
நான் என் நினைவில்
நீந்தும் அந்த ஒரு சொல்லை
எப்போதும் கண்டுபிடித்து தந்திடவே முடியாத
புறாக்களைத்தான் நம்பியிருக்க
வேண்டியிருப்பதைப் பற்றி
எப்போதும கவலை கொள்வதேயில்லை!!

இந்தத் தேடலின் போதை
தேன் கூட்டைப் போல
சேர்ப்பதில்தான் சுகம்!!

இன்னொருவனின் கனவில்
நான் எப்படி இருப்பேன்?
என் கனவில் அவன்
என்னைப் போல் இருக்கிறான்?
எங்களின் நான்கு கண்களிலும்
ஒரே கனவு வருமா?
இல்லை, எங்களின் கனவுகளில்
நாங்கள் சந்தித்து கொள்வோமா?
அல்லது,
அந்த கனவுகள் வெவ்வேறாயிருந்து
நான் ஒரு கனவில் அவனையும்
அவன் ஒரு கனவில் என்னையும்
கொன்றுவிட்டால்?
அதற்கு பின்
எங்களால் கனவில் சந்திக்கவே முடியாதா?

மரணத்தை நெருங்கிவிட்டவனின்
கண் முன் நிழலாடித் தெரியும் வாழ்விலிருந்து
ஒரு கைப்பிடி கண்ணாடித் துகள்கள்
வண்ணமாய் பொழிகின்றன!!
காற்றையிழுத்து
காற்றையிழுத்து
அவனைக் கோர்த்து வாழ வைத்த
உடலினுள் பதற்றத்தை ஏற்படுத்தும்
அந்த கடைசி நொடிகளின்
துடிதுடிப்பில்
எம்பியெம்பி விழுகிறது அவன் உடல்
அவனின் நிறைவேறாத ஆசைகளைப்
பற்றி அப்போது நினைத்தவனின்
விழியோரம் சின்னதாய் துளிர்த்த கண்ணீரின் சாரமே
அவன் வாழ்வு!!

Pangai Thamizhan's Poems 5 பாங்கைத் தமிழனின் கவிதைகள் 5

பாங்கைத் தமிழனின் கவிதைகள்

வா மீட்டெடுப்போம்!
************************
தேர்தல் நல்ல தேர்தல்-தலைவனை தேர்வு செய்யும் தேர்தல்!
வெற்றித் தோல்வி யென்று-நமக்கு
விளங்க வைக்கும் தேர்தல்!

நோக்கம் நல்ல நோக்கம்-மக்கள்
உயர்வுக்கான நோக்கம்;
நல்ல மனிதன் கண்டு-அவனை
தலைவனாக்கும் தேர்தல்!

இல்லை இந்தத் தன்மை – இப்போ
இழிவு நிறைந்தத் தேர்தல்!
உண்மை மறைந்த நிலைமை- மக்கள்
உள்ளம் கள்ளம் தேர்தல்!

சாதி சமயப் போக்கு-இப்போ
சதிகள் நிறைந்தத் தேர்தல்!
பொய்யும் புரட்டும் நிறைந்த-தீய
தன்மை கொண்டத் தேர்தல்!

காசு என்ற பேச்சே-எங்கும்
கலங்கமானத் தேர்தல்!
உறவை முறித்தத் தேர்தல்-மக்கள்
மாக்களானத் தேர்தல்!

ஆசை கொண்டப் பேய்கள்-அலையும்
அறிவு கெட்டப் பேய்கள்;
மக்கள் வாழ்க்கை முறையை-மயக்கி
மண்ணில் புதைத்தத் தேர்தல்!

மீட்டெடுக்க வேண்டும்-மக்கள்
மீண்டும் இணைய வேண்டும்!
சாதி சமயப் பேயை-மக்கள்
சாகடிக்க வேண்டும்!
தூய்மை உள்ளத்தோடு-நாட்டை
தூக்கி நிறுத்த வேண்டும்!

புறா
******
நண்பன்தான்!
இடுக்கண் களைந்தவன்தான்;
இன்றுவரை….
இன்னும்!

என்னிடம்
நட்பை பாராட்டும் நீ
என்னிடம்
நல்லவனாக இருக்கும் நீ
எனக்கு உதவி செய்யும் நீ
நண்பன்தான்!

ஆயிரம் வருத்தங்கள்
ஆயிரம் அவமானங்கள்
ஆயிரமாயிரம் இழப்புகள்
ஏற்பட்டிருக்கலாம்!

இந்த
பூ வோடு சேர்ந்த நாராக
நீ
மணக்க வேண்டும்தானே!

இந்த
சமாதானப் புறாவோடு
சேர்ந்த
நீ
எப்படி
வள்ளூரின் உள்ளம்
கொண்டாய்?

அமைதிக்காகவே
அற்பணிக்கப்பட்ட
தேசத்தின் தோழனே….

கத்தியை
கக்கத்தில் வைத்திருந்தாயோ?
எத்தனை முகங்கள்
நண்பனே உனக்கு?

ஹிட்லர் எனும்
பேயை விரட்டிய
காளி தேவியா
இப்போது
கருணை மீறுவது?

பேரழிவைத் தடுத்த
பெருந்தகையா
இன்று
பேராபத்திற்கு
வழி வகுப்பது?

ரஷ்யா என்றால்
ரட்சகன் என்று
இருக்கின்றோம்!

ரஷ்யா என்றால்
உலகத்திற்கு ரக்க்ஷாபந்தம்
கட்டுவாய் என
இருக்கின்றோம்!

கோபம் இருந்தால்
வா
கூடி பேசலாம்!
குறைகளிருந்தால்
நிறைவு காணலாம்
வா…..

எங்கள்
சமாதான மாமா நேருவின்
கோட்டில் இருந்த
ரோஜா மலரை
இன்னும்
பத்திரப் படுத்தி வைத்துள்ளோம்!
வாங்கிக்கொள் நண்பனே!

நேரு பறக்க விட்ட
சமாதானப் புறாக்களிட்ட
முட்டைகளை
அடைகாத்து வைத்து
முட்டைகளிலிருந்து
வெளிவந்த புறா குஞ்சுகளை
பாதுகாத்து வைத்துள்ளோம்;
தேவைப்படும் என்பதற்காக!

வா….
எங்கள் பால்ய சிநேகிதனே
இருவரும்
சேர்ந்தே பறக்க விடுவோம்
அந்த
சமாதானப் புறாக்களை!

உலகம் நோக்கி….
இப்போது
உக்ரைன் நோக்கி!

ஒண்ட வந்தப்பேயே…!
**************************
ஓட ஓட அடித்தீரோ
ஒதுங்கினாலும் அடித்தீரோ
பாடைத் தூக்க மட்டும் வந்து
பல்லிளித்து நின்றீரோ?
கடைகள் கன்னி எல்லாம் உங்கள்
கைவசமாய்ப் போச்சே போச்சே;
கழனிக்காடு எல்லாம் உங்கள்
கட்டுப்பாட்டில் நின்னுப் போச்சே!

கல்விக்கூடமெல்லாம் உங்கள்
கடையை போலே ஆச்சே ஆச்சே;
கவுர்மென்ட்டு கடைநிலை மட்டும்
கருணைக் கொடை ஆச்சே ஆச்சே!

நாங்கள் தின்னும் சோற்றை ஒருநாள்
நாங்கள் உறங்கும் இடத்தில் ஒருநாள்
நாங்கள் வசிக்கும் குடிசையில் ஒருநாள்
நாங்களுழைக்கும் உழைப்பை ஒருநாள்;

நாங்கள் உடுத்தும் உடுப்பை ஒருநாள்
நாங்கள் வாழும் வாழ்வை ஒருநாள்
வாழ்ந்து பாரும் வாழ்க்கை தெரியும்
வாழ்வில் எங்கள் வலியும் புரியும்!

அண்டை நாட்டில் இருந்தா வந்தோம்
ஆகாயத்தில் இருந்தா வந்தோம்
பாரதத்தின் மண்ணில் தானே
பாவி நாங்கள் பிறந்தே வந்தோம்!

ஒண்ட வந்தப்பேயும் பிசாசும்
உடையவரை ஒதுக்கி வைத்தே
உண்ண சோற்றில் மண்ணைப்போட்டு
உதைத்து எம்மை துறத்தலாச்சே!

வீரஞ்சூரன் என்றே சொல்லி
வீணர்களை சேர்த்தே வைத்து
உழைக்கும் வர்க்க வயிற்றில் அடித்தே
உலவுதய்யோ! உயர்ந்தோரென்றே!

விடியும் விடியும் ஒருநாள் எங்கள்
கைகள் உயரும் வருமே நன்னாள்
வாழ்க்கை தன்னை வாழ்வோம் யாமும்
வணங்கிடுவாய் நீயும் வந்தே!

**************************
இந்த
அழகு உலகம் காண
அவ்வளவு நம்பிக்கைக்
கொண்டப் பிறப்பு!

அம்மாவின் மடி தவழ்ந்து
அப்பாவின் தோள் அமர்ந்து
ஆடி பாடி மகிழ்ந்து கற்று
உண்டு உறங்கி
கதைத்து காதலித்து….

அணு அணுவாய்
ருசிக்க வேண்டிய வாழ்க்கை!
முன்னே பிறந்தவரோ
பேயாக நின்று
இரத்தம் குடித்தால்…

இனி
எந்தப் பிறவியும் வேண்டாம்
சாமி!
ஓ….
சாமி இல்லையென்றோர்தான்
சரியானவரோ?

Karkavi Poems கார்கவியின் கவிதைகள்

கார்கவியின் கவிதைகள்




வெண்புறா
**************
மாதம்
நான்கு முறை
ஓயாது நீருற்று
புரட்டுகிறார்
இல்லத்தை
மூத்த பெண்மணி

வாசலில்
கோலமிட
கோவத்தில் நீரை
சலிப்புகளுடன்
அள்ளி விசுறுகிறாள்
புதுப்பெண்மணி…

வெளியே கிளம்பும்
வேளையில்
நந்தி போல்
முன் நின்று வழியனுப்பும்
அம்மை….

எல்லாம் கண்பட
பிள்ளைகளை சகமாக
விளையாட வைத்து
மூடிய கதவை
திறக்க நேரம் பார்த்து
இழுத்துப் போர்த்திய

வெண்பட்டினை
வண்ணம் படாது
வலம் வருகிறாள்
எதிர்வீட்டு வெண்புறா…
மிச்சம்
கொட்டிக்கொண்டே
பூசாரியின்
பட்டு சாத்தலையும்
தீபாரதனையையும்
ஏற்கிறது
முக்கூட்டில் அமர்ந்த
முதன்மை கடவுள்….

அவள(தி)ல்காரம்
**********************
அவள்
தூரமாய் நின்று
முனு முனுத்துக் கொண்டுதான்
இருக்கிறாள்…
தேன் தடவிய இதழாயினும்
சொற்கள் கொஞ்சம்
காதலின் நீலநிறம் தான்
இருப்பினும்
பார்த்து இரசித்துக்கொண்டுதான்
இருக்கிறேன்…
சொற்கள் வேறென்ன வண்ணம் பெறும் என்று..
இதற்கு பெயர்
என்ன வென்று சொல்லிவிட முடியும்..
” எனது குதிரைத்திறன் கொண்ட சொற்களின் மொத்த வாட் அவளான பொழுது
அவள் முறைத்து செல்லும் போது காதோரம் தொங்கல் தனை உரசி செல்லும் பட்டாம்பூச்சி மட்டும் தான் நான்…”

வெயிட்டிங் லிஸ்ட்
**********************
நன்றாக படித்தவனும்
நாலு டிகிரி முடித்தவளும்
கொட்டிய முடி கொண்டவனும்
கூந்தலுக்கு தினம் ஒருமணி நேரம் ஒதுக்குபவளும்
கூட்டாஞ்சோறு உண்டவளும்
உச்சிவெயில் குடும்பத்தை
வியர்வையாய் சிந்தியவனும்
விலை போகாத காய்கறிகள் போல
நெடுங்காலமாக
உறங்கிக் கொண்டிருக்கின்றனர்
வண்ண உடையில்
அடித்த பவுடர்,
சீவிய தலைமுடியின் வகுடு மாறாமல்
அழிந்து கொண்டே வரும்
புகைப்படங்களின் வரிசையில்
வெற்றிலை குதப்பிய
வாயில் அந்த நூறு பொய்களை முனுமுனுக்கும்
தரகர்களின்
அக்குல் அணைப்பு
பைக்குள்ளே
மூச்சுத்திணறிக் கொண்டிருக்கும்
அந்த வெயிட்டிங் லிஸ்ட் வெள்ளந்திகள்…..!

Maragatha Pura ShortStory By Thanges மரகதப்புறா சிறுகதை - தங்கேஸ்

மரகதப்புறா சிறுகதை – தங்கேஸ்




தோடுடைய செவியன்கள் போல காலையிலேயே பள்ளிச்சுற்றுச் சுவரின்  மீது கூட்டமாக வந்து அமர்ந்திருந்தன  கொண்டை வளர்த்தான் குருவிகள். தூரத்திலிருந்து பார்க்கும் போது  தயிர்ப் பானையின் உள் பக்கத்தை வெளியே இழுத்து  கவிழ்த்தி வைத்தது போல வெள்ளை வெளேர் என்று தொப்பையும் தொந்தியுமாக   அமர்ந்திருந்தன.  தலையுச்சியில்  முளைத்திருந்த அழகு கருங்கொண்டையை  அவைகள்   இடமும் வலமும் ஆட்டியபடியே அபிநயிக்கும் போது   கண்களுக்கு   மிகச் செல்லங்களாக  மாறி  காட்சி தந்தன. உச்சிக்  கருங் கொண்டையைப் பார்த்தால் பிளவுபட்ட  அலகு போல்  விரிந்திருக்கும்..

சாதாரணமாகப் பார்த்தால் குருவி வாயைத் திறந்தபடி வானத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது போலத்தான் தெரியும். சற்று கூர்ந்து கவனித்தால் தான் அது அலகு அல்ல அதன் ஸ்பெசல் கொண்டை என்று கண்டுபிடிக்க முடியும். கழுத்துக்கும் கீழே பக்கவாட்டில் புசுபுசுவென்று வளர்ந்திருக்கும் தாடைமுடிகளுக்கருகில்  காதோரம் ஒரு முழு ரூபாய் நாணயத்தை மதுரை மீனாட்சி குங்குமத்தில் குழைத்து பொட்டிட்டது போல அப்பியிருக்கும் அடர் குங்குமச் சிவப்பு.  அதற்கு  பவளத் தோடு மாட்டி விட்டது போல அப்படி  பாந்தமாக பொருந்திப்போனது. நாளெல்லாம் குழந்தையை வேடிக்கை பார்ப்பதைப்போல இந்தக் குருவிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கலாமே என்று தோன்றிய போது  பள்ளியின்   முதல் மணி ஒலித்தது.

யோவான் எப்பொழுதும் காலை மணியடிக்கும் நேரத்தைத் தவற விடமாட்டார் என்பது  எல்லோருக்குமே நன்றாகத் தெரியும் . முதலில் மாணவிகள்  ஒவ்வொருவராக உள்ளே வர ஆரம்பித்தனர்.  சீருடை அணிந்து அதற்கும் மேலே வெம்மையுடை தரித்து தலைக்கு  ஸ்கார்ப் கட்டிக்கொண்டு மெல்லிய குரலில் காட்டுக் கிளிகளைப் போலபேசியபடியே உள்ளே வந்து கொண்டிருந்தது இந்த மேகமலையின்  காலை நேரத்தை. மேலும் இனிமையாக்கியது.

மாணவர்கள் வழக்கம்  போல  செந்தில் கடையின் வாசலிருந்து முதலில் தலையை வெளியே  எட்டிப்பார்த்து வாசலில் ஆசிரியர்கள் யாரும் இல்லையென்று உறுதி செய்த பின்னர் ஒவ்வொருவராக நத்தை ஊர்வது போல உள்ளே ஊர்ந்து வரத் தொடங்கினர்கள்.

சசிக்கு  முன்பும் பின்பும் இரண்டு மாணவர்கள் தோளோடு  உரசிய வண்ணம் வந்து கொண்டிருந்தனர்..  அவனின் சொற்ப புத்தகங்களும் நோட்டுக்களும் நிறைந்த அழுக்கடைந்த புத்தகப் பையை   வரும் போதே அவன் கவுதம் தோளில் மாட்டிவிட்டு  ஹாயாக கைகளை வீசியபடி நடந்து வந்து  கொண்டிருந்தான்.

சட்டென்று  நான் அவனைப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தன்  உள்ளுணர்வில்  கவனித்தவன்  பதட்டப்படாமல்  வண்ண வண்ணக் கயிறுகள் கட்டியிருந்த தனது வலது முழங்கையை பேண்ட் பாக்கெட்டுக்குள் திணித்துக்கொண்டான். காதில் மாட்டியிருந்த தோடு மட்டும் தனியாக ஆடிக்கொண்டிருந்தது.

‘ டேய் ஹெச் எம் நிக்கிறாருடா ‘

 ‘’குட் மார்னிங் சார் ‘’

‘’ குட் மார்னிங் ‘’  என்றபடி தலையசைத்தேன்

வேகமாக நடந்து சென்றவன் வகுப்பறைக்குள் நுழையும் போதே தன் சேட்டையை ஆரம்பித்து விட்டான். வாசலில் நின்று கொண்டிருந்த ஆறாம் வகுப்பு மாணவி ரேஷ்மாவின் தலையில் ஒரு கொட்டு கொட்டிவிட்டு அவசரமாக உள்ளே  சென்றான்

அச் சிறு பெண் ‘’ அம்மா ‘ என்று அலறினாள்

பி.டி சார் திரும்பி, ‘’ என்னம்மா ? ‘ என்று கேட்டார் .

அவள் சுற்றும் முற்றும் திரும்பி திரும்பி பார்த்தாள். ம்ஹ்ம் …  அவன் ஆள் அங்கே இருந்தால் தானே ?

‘’ இது அந்தப்பயலோட வேலையாத்தான் இருக்கும் ‘’ என்றபடியே  பிசிக்ஸ் சார் என் அருகில் வந்து நின்றார். அவர் தான் பள்ளியின் உதவி தலைமையாசிரியர்.

‘’ சார் இது பரவாயில்லை நேத்து லஞ்ச் இண்டர்வெல்ல வகுப்புக்குள்ள என்ன பண்ணான் தெரியுமா ?

‘’ சொல்லுங்க சார் ‘’என்றேன்

லெவன்த் சி  மஹிதாவை அப்படியே காதைப் பிடிச்சு முயல்குட்டியை  இழுத்துட்டுப்போற மாதிரி உள்ளே இழுத்துட்டுப் போறான் ‘’

‘’ ஏன் அப்பவே முதுகுல ரெண்டு போடு போடவேண்டியதுதான  ‘’ என்றபடி பி.டி சார் எங்கள் அருகில் வந்து நின்றார்.

‘’ பி டி  சார்! விடிஞ்சு ரொம்ப நேரம் ஆச்சு. இன்னும் தூக்க கலக்கத்துல பேசுறமாதிரியே பேசிக்கிட்டிருக்க கூடாது. போன மாசம் இந்த விவகாரத்துல என்ன நடந்தது தெரியும்ல உங்களுக்கு ?  என்றபடியே எங்களோடு வந்து சேர்ந்து கொண்டார்  அழகு  சார். கணித ஆசிரியர்.

‘’ சரி கதையைச் சொல்லுங்க ‘’

“கரப்பான் பூச்சி கணக்கா தலைமுடிய வெட்டிக்கிட்டு  கை  கால் எல்லாம் கலர் கலர் கயிறா  கட்டிக்கிட்டு  இவன் ஒரு நாள் காலையில வந்து நிக்கிறான்” 

“ சரி “

“ஆனா அன்னிக்கு திடீர்னு பிசிக்ஸ் சார்க்கு என்னாச்சுன்னு தெரியலை.  கடமையுணர்ச்சியில அவனக் கூப்பிட்டு முதுகுல   ரெண்டு தட்டு தட்டிட்டாரு.  பெறகு தான் மேட்டரே” என்றார் .

 “பெறகு  ?”

‘’  மறு நாள்    காலையில நாங்க பள்ளிக்கூடத்துக்கு வாறோம். எங்களை மிரட்டுறதுக்கு ரவுடியை கூப்பிட்டுகிட்டு வந்துட்டு வாசல்ல நிக்கிறான் சார்.

” ம்ம் ‘’

‘ அதுவும் யாரைன்னு நெனக்கிறீங்க  ? மேல மெட்டுலயிருந்து மேற்படி சாராய வியாபாரியை ‘’

‘’ அய்யய்யோ, இது எனக்குத் தெரியாதே ‘’ என்றார் பி.டி சார் பதறிப்போய்.

‘’ அன்னிக்கு பெரிய  கூத்து போங்க!  நாம அவனைப் பள்ளிக் கூடத்துக்குள்ள நுழையாதடான்னா சொன்னா அவன் நம்மள உள்ள நுழைய  விடாம நின்னுகிட்டுருக்கான்‘’

 “அய்யய்யோ”

‘’ என்னடா இது குரங்கெல்லாம் நம்ம பள்ளிக்கூடத்துப் பக்கம்  கெடையாதே, எல்லாம்  கர்ட்டனா எஸ்டேட்டுக்கு கீழ தான இருக்குன்னு நான் நெனெச்சேன்”

‘’அதுக்குப் பெறகு  ‘’

‘’ பெறகென்னஅந்த ரவுடி  நம்ம சாருக்கு அட்வைஸ் மழையாப் பொழியுறான்‘’

“எப்பிடி ?”

“ பய போலிசுக்குப் போகணும்னு சொன்னான் சார்  நாந்தேன், வாடா சார்க எல்லாம் நம்ம சார்க தான் சொன்னா கேட்டுக்கிருவாங்கன்னு சொல்லி கில்லி இங்க கூப்பிட்டு வந்திருக்கேன், பார்த்து நடந்துக்கோங்கன்னு சொல்லிட்டுப் போறான்‘’

‘’ லச்சையை கெடுத்துட்டான் போல இருக்கே ’’

‘’ சார் இப்பிடித்தான் போனவாரம் எங்க பார்த்தாலும் பீடி வாடை அடிக்குதேன்னு  திடீர்ன்னு பசங்களோட ஸ்கூல் பேக்கை செக் பண்ணோம்  அப்ப இவன் பேக்குக்குள்ள என்ன இருந்ததுன்னு பிசிக்ஸ் சாரை கேளுங்க ‘’

பிசிக்ஸ் சார் தொடர்ந்தார்: ‘’ ம் என்ன இருக்கும் ?  பீடி சிகரெட்டு தீப்பெட்டி  … என்னடா இதுன்னு கேட்டோம் . சார்  காலையில எங்கப்பா வாங்கிட்டு வரச் சொன்னாரு, மறந்து போயி அப்படியே பைக்குள்ள வச்சுட்டு வந்துட்டேன்னு சொல்றான். ‘’

‘’கர்மம்  நல்ல அப்பன், நல்ல மகன் சார் ‘’

‘’ சார்  இவனப் பொறுத்தவரைக்கும் அவுங்க அப்பா பீடி சிகரெட்டு வாங்கிட்டு வரச் சொல்லலைன்னாக் கூட இவன் வாங்கிட்டுத்தான் வருவான். இண்டர்வெல்ல லஞ்ச் டைம்லயெல்லாம் அத அப்படியே எடுத்துக்கிட்டு நைஸா தேயிலை காட்டுக்குள்ள ஒதுங்கிடுவான் ‘’

‘’ அது கூட பரவாயில்லை.  வேற என்னென்ன பேக்குக்குளள்ள இருந்துச்சுன்னு கேளுங்க  ‘’

‘’சொல்லுங்க சார் சொன்னாத்தான எங்களுக்குத் தெரியும். நீங்களா சிரிச்சா எப்பிடி? ‘’

‘’ ரெண்டு மெக்டோவல் பாட்டிலுக …ம்ம்  பதறாதீங்க   எம்ப்டி பாட்டிலுங்க தான். என்னடான்னு கேட்டோம் சார். வாட்டர் கேன் வாங்க காசில்லை.  கஷ்டம் அதனால தான் இதுலயே தண்ணீர்  கொண்டு வாரேன்னு,  முகத்தை அப்பாவி மாதிரி வச்சிக்கிட்டு சொல்றான் ‘’

“அவ்வளவு தானா.. இல்ல வேற எதுவும் உள்ள இருந்ததா?”

“இல்லாம என்ன,  சில  குடும்ப கட்டுப்பாட்டு சாதனங்களை பைக்குள்ளயே தனியா ஒரு கேட்ரிஜ்ல போட்டு வெச்சிருந்தான். அது தான் ஹைலைட். சார் பயந்து போய் நடுங்கிட்டாரு.”

“ஏன் சார் பார்த்துட்டு நீங்க ஒண்ணுமே கேட்கலையா?”

“எனக்கெதுக்கு அது ?”

“சார் ! அவன் அத ஏன் பள்ளிக்கூடத்துக்கு கொண்டு வந்தான்னு நீங்க எதுவுமே கேட்கலையா?”

“கேட்டேன் சார், அதுக்கு என்ன பதில் சொன்னான் தெரியுமா ?”

“சொல்லுங்க…”

“ஸ்கூலுக்கு வர்ற வழியில மரத்தடியில அது ஓரு பாக்கெட் மாதிரி கிடந்தது சார்… அது என்னன்னு தெரியாமலேயே எடுத்திட்டு  வந்திட்டேன்னு அப்பாவி மாதிரி சொல்றான்..”

முதல் பாட வேளைக்கான மணி ஒலித்தது. அனைவரும் கலைந்து போக ஆரம்பித்தனர்

மாணவர்கள் அனைவரும் வகுப்பறைக்குள் ஓடினார்கள்.

யோவான் மாணவர்களின் வருகைப்பதிவேட்டை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு அறையாக சென்று கொண்டிருந்தார்.

காலை வெய்யில்  தூவானம் ஏரியில் பச்சைப் பட்டுத்துகிலை உதறி விரித்தது  போல படர்ந்து பரந்து கொண்டிருந்தது. தூரத்தில் காலை  சூரிய வெளிச்சத்தில்  இரைச்சல் பாறைக்கருகில் வெள்ளி அலைகள் கெண்டை   மீன்களைப் போலத் துள்ளி விளையாடி கொண்டிருந்தன. கம்பன் சொன்ன “அலகிலா விளையாட்டு ”இது தான் போலும்.

சுற்றுலாப் பயணிகள் ஒவ்வொருவராக சாலைக்கு வர  ஆரம்பித்திருந்தனர். தடுப்புக்கம்பிகளின் மீது சாய்ந்து கொண்டு  விதம் விதமாக சாயல்களில்  புகைப்படங்களை  மொபைல் போனில் அள்ளிக் கொண்டிருந்தனர்.

தூவானம்  போகிற புதர் மேட்டில் ஓரு யானை குடும்பம், தம்பதி சம்மேதரராய் இரண்டு குட்டிகளுடன் ஈத்தை குருத்தை ஒடித்து ஒடித்து தின்று கொண்டிருப்பதை இங்கிருந்தே மாணவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை விரட்டுகிற பாவனையில் ஆசிரியர்களும் ஆசிரியைகளும் அவர்களின் அருகில் சென்று தாங்களும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

சிரிப்பும் பேச்சும் கேலியும் கிண்டலும் வேடிக்கை பார்ப்பதுமாக காலை பாடவேளைகள்  கரைந்து போயின  சுற்றுலாப்  பயணிகள் கேமரா செல்போன் சகிதமாக அங்கே குவிந்து விட்டார்கள். மதிய உணவு இடைவேளையில்  அநேகமாக எல்லா ஆசிரியர்களும் மாணவர்களும் சென்று யானையோடு செல்பி எடுத்துவிட்டு வந்துவிட்டார்கள்.

மதியம் இரண்டாவது பாடவேளை முடிந்ததும்  லெவன்த் சி க்கு  உடற்கல்வி பாடவேளை .மாணவர்கள் அனைவரும் வகுப்பறையை விட்டு வெளியே வந்து விளையாட்டு மைதானத்திற்குள் நுழைந்து விட்டார்கள்.

கையில் கிடைத்த பொருட்களை வைத்துக்கொண்டு ஆளாளுக்கு ஒவ்வொரு விளையாட்டாக விளையாட ஆரம்பித்து விட்டனர்.  கைப்பந்து ஒரு குழுவும் எறிபந்து மற்றொருகுழுவும் உற்சாகமாக விளையாண்டு கொண்டிருக்க  இன்னொரு குழுவோ காய்ந்த தேங்காய் மட்டையில் ரப்பர் பந்தை வைத்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். சசிதான் அதற்கு கேப்டன் போல வழி  நடத்திக் கொண்டிருந்தான். நேரெதிரே கொடிக்கம்பத்திற்கு அருகே உள்ள மேடையில் மாணவிகள்  கேரம்போர்டை வைத்து மென்மையாக பேசியபடி விளையாடிக் கொண்டிருந்தனர்.

அடுத்ததாக பந்து மாணவிகள் பக்கத்தில் தான் வந்து விழும் என்று  நான்  நினைத்து முடிப்பதற்குள் பந்து வந்து கேரம்போர்டின் நடுமையத்தில்  திடுமென்று குதித்தது. கேரம் போர்டில் இருந்த காயின்ஸ் எல்லாம் சிட்டுக்குருவிகளாகக் காற்றில் பறக்க , சற்று முன் கொட்டி வைத்திருந்த கேரம் பவுடர் மாணவிகள்  முகத்தில்  வந்து மொத்தமாக அப்பிக் கொண்டது. 

அவர்கள் தங்கள் முகத்தை துடைத்துக் கொண்டே  “” இங்க பாருங்க   சார்””  என்று என்னைப் பார்க்க , நான் சசியை அழைத்துக் கேட்க வேண்டும் என்று நினைப்பதற்கும்  முன்பே, லெவன்த் சி மருது பாண்டி நைசாக  என் அருகில் வந்து என் முழங்கையை சுரண்டிக் கொண்டு நின்றான்.

“என்னடா?” என்றேன்

“சார் சசி ஸ்கூல் பேக்ல இருந்து  குருவி சத்தம் கேட்குது  என்றான் ”

“என்னடா சொல்ற ?”

“ஆமா சார் காலையில இருந்தே கேட்டுக்கிட்டே தான் இருக்கு என்னன்னு கேட்டா சொல்ல மாட்டேங்குறான் சார்” .

மருது சொன்னால் சரியாகத்தான் இருக்கும் ஏனென்றால்  அவன் ஆசிரியர்களுக்கு நம்பகமான ஆள். மாணவர்களைப் பற்றி ஏதாவது தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இவனைப் போன்ற  ஆட்களைத் தான் நாங்கள்   கைக்குள்  வைத்துக் கொள்வோம்.

அதற்குள்  பி.டி சார் அருகில் வந்து “அவன்  பேக்கை எடுத்துட்டு  வாடா! உள்ள என்ன இருக்குன்னு பார்க்கலாம்” என்றார்.

சத்தமில்லாமல்  அவன் பேக்கை எடுத்துக் கொண்டு வந்து தந்தான் மருது.

அதற்குள் பெண் ஆசிரியைகள் இரண்டு மூன்று பேர்கள் அங்கே வந்து  சேர்ந்து கொண்டார்கள் .

“ எடுறா அதை வெளியே ” என்றார்

மருது பைக்குள் கையை விட்டு இழுக்க அந்த பச்சை உயிரி அவன் கையோடு வந்தது.

மரகத வண்ணச் சிறகுகள். செஞ்சாந்து கழுத்து. அதில் கோதுமை மாவை துவி விட்டது போல ஒரு ஆங்காங்கே ஒரு  மினு மினுப்பு. அடியில் சிவந்து நுனியில்  வெளுத்து சற்று மஞ்சள் பூசிய மிளகாய்ப்பழ அலகு.குறு குறுவென்று பார்க்கும் நீலமணிக்கண்கள்,

“ அழகு”  என்றார்கள் யாரோ

மரகதச் சிறகுகளுக்கும் கீழே சிப்பிக் காளான் நிறத்தில் அடுக்கடுக்கான கீழடுக்கு  சிறகுகள். அதே வண்ணத்தில் நீட்டிக்கொண்டிருக்கும் நீண்ட வால். கழுத்துக்கும் கீழே  ஊதாப்பூவின் மீது  இலேசாக செந்துருக்கம் பூசியது போல மினு மினுக்கும் தாடை . செல்லமாகக் குலுங்கும்  தொப்பை வயிறு .

“வாடா குட்டி” என்று பார்த்தவுடன் முகத்தோடு எடுத்து ஒத்திக் கொண்டார்கள் பயாலஜி டீச்சர் . 

“ குட்டி… குட்டிச் செல்லம் பயந்துட்டியாடா”என்று இறகை தடவிக் கொடுத்தார்கள்.    குளிரில் நடுங்கும் அப்பாவி சிசுவைப்   போல அது அவர்களின் மார்போடு கதகதப்பாக ஒட்டிக் கொண்டது.

“இங்க குடுங்க டீச்சர் ” என்று பி.டி சார் அதை வாங்கி உள்ளங்கைகளில் ஏந்திக் கொண்டார்.

“நல்ல வெயிட் இருக்குது” என்றார்

“ ரொம்ப குட்டியா இருக்கே ”

“இது  தான் மரகதப் புறாவா ?”

“ சார் இதப் பஞ்சவர்ணக்கிளின்னும்  இங்க சொல்லுவாங்க”

“அப்படியா ?”

எகனாமிக்ஸ் டீச்சர் அதன் சிறகுகளை தடவி விட்டுக் கொண்டே, “இதுதான் எமரால்டு  டோவ்,  இது இணையைப் பிரிஞ்சா உயிர் வாழாதுன்னு சொல்வாங்க” என்றார்.

பயாலஜி டீச்சர் “ ஆமாப்பா இதோட பயலாஜிக்கல் பேர்கூட கால்கோபாப்ஸ் இண்டிகான்னு சொல்லுவாங்க ” என்றார்

அது சாரின்  உள்ளங்கைகளில் பயந்து போய்  நடுங்கிக் கொண்டேயிருந்தது பார்ப்பதற்கு அழுவது போல இருந்தது

“ அழுகுது சார் ”

“ காட்டுக்குள்ள திரியுறத  இப்படி பைக்குள்ள போட்டு பூட்டி வச்சா, அழுகாம என்னடா செய்யும். ஃபாரஸ்ட்காரங்க பார்த்தாங்கன்னா பதினஞ்சு வருசம் உள்ள புடிச்சுப் போட்ருவாங்க ”

“சார் இத வித்தா நல்லா காசு கிடைக்கும்”

“இப்ப என்ன கிடைக்குதுன்னு பார்ப்போம். கூப்பிடுறா இதை புடிச்சிட்டு வந்தவனை”  என்றார் பி.டி சார்.

துரத்தில்  வரும் போதே சசிக்கு விசயம் தெரிந்து விட்டது.

முகத்தை ஒரு மாதிரி அப்பாவியாக வைத்துக் கொண்டு  தயங்கி தயங்கி  பக்கத்தில் வந்து நின்றான்.

“எங்கடா புடிச்ச இத ?”

“சார் வரும் போது தேயிலைக்காட்டுக்குள்ள நொண்டிகிட்டு கிடந்தது  அதுதான் மருந்து போடலாம்னு எடுத்துட்டு வந்தேன்” என்றான்

அப்புறம் ஏண்டா எங்ககிட்ட சொல்லலை ?

“சார் பர்ஸ்ட் பீரியட் ஆரம்பிச்சது. அப்படியே படிக்கிற ஆர்வத்துல  எல்லாம் மறந்துட்டேன் ”

“ ஓஹோ அப்பிடியா சார் நான் சொல்லலை பய நல்ல படிப்பாளின்னு”

“சரி ,இதை என்ன செய்யப்போற ?”

“சார், வளர்ப்பேன் சார்”

“சரி, எவ்வளவுக்கு விப்ப ?” என்றார் மிகவும் எதேச்சையாக கேட்பது போல.

“மரகதப்புறாவுக்கு நல்ல விலை கிடைக்கும் சார் ”  வாய் தவறி சொல்லி விட்டு நாக்கை கடித்துக்கொண்டான்

“பாவம் இல்லையாடா  ?”  மூக்குக் கண்ணாடியை எடுத்து துடைத்தபடியே கேட்டார்கள் எகனாமிக்ஸ்  டீச்சர்

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அவன் விழித்துக் கொண்டிருந்த போதே நான் மரகதப்புறாவை கையில் வாங்கிக் கொண்டேன். கொக்கிக் ல்கள் அழுத்தமாக என் உள்ளங்கைகளில் பதிந்து குறு குறுப்பை உண்டு பண்ணின. எதிர்பார்த்ததை விட நல்ல  எடையோடு இருந்தது பறவை . ஒரு முறை என் உள்ளங்கைகளைத் தன் அலகுகளால் நிமிண்டிப்பார்த்துவிட்டு கழுத்தை சுழற்றி சுழற்றி  பிறாக்கு பார்த்துக் கொண்டு நின்றது.

ஆறாம் வகுப்பு  ரேஷ்மா அங்கே அனிச்சையாக வந்து “ அய்யோ பாவம்,  குட்டி,  விட்றலாம் ” என்று சிறகைத் தடவியபடி சொன்னாள்.

“  இதோட மூக்கில சின்ன காயம்  இருக்குது சார் ”என்றான் ஜாபர்

உற்றுப் பார்த்தபோது அதன் மூக்கில் ஒரு சிறிய சிவப்புத் தீற்றல் தெரிந்தது.

திருவிழாவில் தொலைந்து போன பச்சைக்குழந்தை மாதிரி கண்ணீரும் கம்பலையுமாக  மலங்க மலங்க விழித்துக் கொண்டு நின்றது எல்லோர் மனதையும் கரைத்தது. எல்லோரும் வைத்த கண்  வாங்காமல் அதையே பார்த்துக்  கொண்டு நின்றார்கள்.

“ இந்தாடா” என்றபடி அந்தக் கிளிப்பச்சையை  நான் அவன் கையில் கொடுத்தேன்.

அதை எதிர்பார்க்கவேயில்லை அவன் . வாங்கும் போது அவன் கைகள் இலேசாக நடுங்கினதை உணர்ந்தேன்.  அவன் கைகளுக்குள்  சென்றதும் அது இலகுவாகத் தன்னை  அங்கே அமர்த்திக் கொண்டது. சிறிது நேர அமைதி தாங்கொண்ணாததாக இருந்தது.

“வாங்க  எல்லோரும் போகலாம் அவன் அதை என்ன செய்யனுமோ செஞ்சிகிறட்டும்” என்றேன் நான்.

நாங்கள் எல்லோரும்  கிளம்ப ஆயத்தமானபோதும் அவன் எதுவுமே பேசாமல் அந்தப் பறவையை கைகளில் வைத்து பார்த்தபடியே இருந்தான். நாங்கள் ஒரு எட்டு கூட வைத்திருக்கவில்லை. அதற்குள்  என்ன  நினைத்தானோ    மெல்லப் படிக்கட்டுகளின் வழியாக இறங்கி விளையாட்டு மைதானத்திற்குள் சென்றான்.

 பச்சை பசும் புற்கள் செழித்து வளர்ந்திருந்த அந்த மைதானமெங்கும் பச்சை மௌனம் பரவிக்கிடந்தது. எதிர்பாராத ஒரு கணத்தில் வலது கையை மேலே உயர்த்தி கீழே இறக்கி அதை வேகமாக தலைக்கு மேலாக உயர்த்தினான். அந்தப்பறவைக்கு   முதலில்  இந்த திடீர் சீர்குலைவைப் புரிந்து கொள்ள முடியவில்லை . பதட்டத்தில் தன் பிடிமானத்திற்காக அவனது உள்ளங்கைகளை தன் கொக்கிக் கால்களால் நன்றாக அழுத்தியபடியே  விழுந்து விடாமல் இருக்க படபடவென்று அவன் உள்ளங்கைக்குள்ளேயே சிறகடித்தபடியே இருந்தது.

இப்போது மாணவர்கள் அவர்களை அறியாமலேயே  ஹோவென்று பெருங்குரலெடுத்து கூச்சலிட்டபடி  கைதட்டி உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவன் இரண்டாவது முறையும் அது போலவே செய்த போது காற்றில் தத்தித் தத்தி சிறகடிக்க ஆரம்பித்தது. சிறிது தூரம் கூட  பறந்திருக்காது .அதற்குள்  காம்பவுண்ட் சுவருக்கருகில் நின்ற  சிறிய கொய்யா  மரத்தடியின் மடியில் பொத்தென்று விழுந்தது.   மாணவர்கள் மறுபடியும் ஹோவென்று பெருங்குரல் எழுப்பினார்கள். அதற்குள் அது   எழுந்து   மெல்லச் சிறகடித்து சற்று தொய்வாகப் பறந்து பின்னர் சட்டென்று  விரைவாகி  சவுக்கு மரங்களின் ஊடாகப் பறந்து பறந்து ஒரு பச்சைப்புள்ளியாக தூவானத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.

சசி எதுவுமே பேசாமல்   வெறும் உள்ளங்கையை  ஏந்திய நிலையிலேயே அப்படியே  அசைவற்று  நின்று கொண்டிருந்தான்.  மாலை நேரப் பொன் மஞ்சள் புற்களின் மீது பட்டு எதிரொலித்துக்கொண்டிருந்தது..  ஒரு கணம் அவன் நெற்றியிலும் அந்த இளம் பச்சை வெய்யில் படர்ந்து போனது.

Manipura short story by Kavitha pazhanivel கவிதா பழனிவேலின் மணிப்புறா சிறுகதை

மணிப்புறா சிறுகதை – கவிதா பழனிவேல்



“இன்னும் ரெண்டு மைல் தான் இருக்கு ஆத்தா ஆஸ்பத்திரி, கொஞ்சம் பொறுத்துக்கோ” என்றாள் பெரியாத்தா.

“டேய், முருகா, மாட்டை இழுத்துப் பிடிச்சு வேகமா ஓட்டுடா, புள்ள இடுப்பு வலியில துடிக்கிறா ”

மாட்டு வண்டி ஓட்டும் முருகன் பெரியாத்தாவின் பேரன். தன் தோளில் போட்டிருந்த துண்டை எடுத்து முகத்தைத் துடைத்தான்.

“ஹாய் ஹாய் ” என்று தன் கையில் இருந்த குச்சியை வைத்து மாட்டை அடித்து வேகமா ஓட்டினான். சற்று வேகத்தில் வண்டி போக, பெரியாத்தா பவுனின் தலையை அவள் மடி மீது வைத்துக்கொண்டு, முந்தானையில் தன் முகத்தை துடைத்து இடுப்பில் சொருகினாள்.

“அம்மா பவுனு நம்ம குலதெய்வம் பெரியாண்டவ உன்னை கைவிடமாட்டா” என்றாள் பெரியாத்தா.

பவுனு, “ஐயோ பெரியாத்தா” என்றவள் அழ ஆரம்பித்தாள். தலையை பிடித்துக்கொண்டு, இடுப்பு வலியைப் பொறுத்துக் கொண்டு பெரியாத்தாவின் கைகளை பிடித்து படுத்திருந்தவள் அண்ணாந்து வானத்தைப் பார்த்தாள். மின்னிய நட்சத்திரங்கள் அவளுக்குள் ஆயிரம் கேள்விகளைக் கேட்டது

கடலூர் மாவட்டம், டி.புதுப்பாளையம் என்ற கிராமத்தில் பிறந்தவர் ராஜபாண்டியன். சிறுவயதிலிருந்தே கஷ்டப்பட்டு முன்னேறியவர், ஊர்த் தலைவர், சாதி வெறி பிடித்தவர், வாழ்ந்தாலும் கௌரவத்தோடு வாழணும் என்று நினைப்பவர் .

ஊருக்கு வெளியே உள்ள தனது பத்து ஏக்கர் தோப்பில் வீடு கட்டி விவசாயம் செய்து வருபவரின் மொத்த சொத்துக்கும் சொந்தக்காரி அவரின் ஒரே மகளான பவுனம்மாள். டிவிஎஸ் – எக்ஸ்எல் – ல் பவுன் வலம் வருவதை பார்த்து பெருமிதம் கொள்வார் ராஜபாண்டியன்.

அன்று ஊர் திருவிழா களைகட்டியது சாலையின் இருபுறமும் கொம்புகளில் டியூப்லைட் கட்டி வைத்திருந்தனர். ஆங்காங்கே மின் விளக்கினால் அம்மனின் உருவம் ஜொலித்தது. வாணவேடிக்கையும் குழந்தைகள் பலூன்களை வைத்துக்கொண்டு விளையாடுவதிலும் நிறைந்திருந்தது. மூன்று நாள் கூத்து, அன்று கடைசி நாள், சிவன் பார்வதியின் கதை. மக்கள் மிதமான கூட்டத்துடன் இருந்தனர் .

“தில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனே “கலைஞன் படத்தில் வரும் இந்த பாடல் தெருவெங்கும் ஒலித்துக்கொண்டிருந்தது.

தன் தோழிகளுடன் அன்றிரவு தன் அம்மாவிடம் சொல்லிவிட்டு கூத்து பார்க்கிறதுக்கு வந்தாள் பவுனு. டாலர் போட்ட செயின், காதில் ஜிமிக்கி கம்மல், இரட்டை ஜடை மல்லிப்பூவோடு, வெள்ளை தாவணியில் மணிப்புறா போல் இருந்தால், வெள்ளி கொலுசு கால்களில் சங்கீதம் பாடியது.

“என்னடா முருகா” என்றாள் பவுனு.

ராஜபாண்டியனின் பக்கத்துத் தோப்புக்காரரும், சொந்தக்காரரும் ஆன ஆறுமுகத்தின் மகன்தான் இந்த முருகன். ராஜபாண்டியனின் அந்தஸ்துக்கு ஈடானவர்கள்.

சிவப்பு நிற கட்டம் போட்ட சட்டை வெள்ளை வேட்டியும் கட்டியிருந்தான். முருகன் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக வாட்டசாட்டமாக இருப்பான்.

சட்டென்று திரும்பிய முருகன், “என்னடி கொழுப்பா? சும்மா இருக்க மாட்ட பொம்பள புள்ளைங்க அமைதியா இருந்தா தாண்டி நல்லது உன்ன மாதிரி திமிர் புடிச்சு சுத்த கூடாது “என்று தன் குரலை உயர்த்திச் சொன்னான்.

“ரொம்ப கத்தாத டா முருகா, இன்னைக்கு என்ன வேலை வெட்டி இல்லையா, கூத்து பாக்க வந்துட்ட, பெரியாத்தா எங்க போச்சு? உன்ன சும்மா விட்டு இருக்காதே, பொய் சொல்லிட்டுத் தானே வந்திருக்க” என்றாள் பவுனு.

“ஆமாண்டி, பொய் சொல்லிட்டுத் தாண்டி வந்தேன், இப்ப என்னடி உனக்கு அதுல வந்தியா கூத்து பார்த்தியா போயிட்டே இரு, சும்மா வம்பு இழுக்காத ” இளம் காளை போல் சீறினான் முருகன்.

“இருடா, வீட்டுக்கு போய் பெரியாத்தாகிட்ட ம்ம…செம்ம கச்சேரி இருக்கு” கோபத்துடன் பவுனு சொல்லி முடிப்பதற்குள், “அம்மா தாயே ஆள விடு, உனக்கு ஒரு கும்பிடு, உன் திமிருக்கு ஒரு கும்பிடு” என்றான் முருகன்.

பருவ வயதில் இருக்கும் முருகனும், பவுனும் ஒருவருக்கொருவர் மனதளவில் விரும்பினர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

பெரியாத்தா “வயசு என்ன ஆச்சு பொறுப்பில்லாமல் எப்ப பார்த்தாலும் சண்டை போட்டுக்கிட்டே இருக்கிறீங்க “என்று ஏசுவாள். இவர்களுக்கு பஞ்சாயத்து பண்ணுவதிலேயே பெரியாத்தாவுக்கு பொழுது போய்விடும்.

உறவுமுறையில் பெரியாத்தாவுக்கு பவுனும் பேத்தி முறை வருவாள். ஒருவகையில் முருகன் பவுனுக்கு மாமன் முறை வேண்டும். திமிர் பிடித்தவள் ஆச்சே எப்பவுமே முருகனை மாமா என்று அழைத்ததில்லை பவுனு.

ஒருவழியாக திருவிழா முடிந்தது நல்லபடியாக.

காலையில் டவுன் வரைக்கும் போயிருந்த ராஜபாண்டியன் இரவு வீடு வந்து சேர்ந்தார்.. பம்புசெட்டில் குளித்து முடித்து வந்தவர் ‘”ஆத்தா பவுனு சோறு போடுமா, ரொம்ப பசிக்குது” என்றார். .

அன்று அவருக்குப்பிடித்த பலாபழத்தை பூண்டு, உப்பு, காரம் சேர்த்து சமைத்து வைத்திருந்தாள் .

சாப்பிட்டு முடித்த ராஜபாண்டியன் ” நாளைக்கு மலையிலுள்ள முந்திரித் தோப்புக்கு வேலையாட்களை வரச் சொல்லி இருக்கேன். தோப்புல வேலை இருக்கதனால நானும் உன் அம்மாவும் தோப்புக்கு போய்விடுவோம். நாளைக்கு கொஞ்சம் வீட்டு வேலைகளை எல்லாம் பார்த்துக்கோ ஆத்தா ” என்றார்

“சரிப்பா “என்ற பவுனு தூங்கச் சென்றாள்.

ராஜபாண்டியனின் மனைவி வள்ளியம்மாள் பேச்சை ஆரம்பித்தாள் .

“சுந்தரேசனுக்கு பவுன பரிசம் போட நாளான்னிக்கு வரதா அண்ணன் ஆள் விட்டு தகவல் சொல்லி அனுப்பி இருக்கு, நீங்க என்ன சொல்றீங்க” என்றாள்

“அவங்களும் கேட்டுகிட்டே தான் இருக்காங்க தள்ளிப்போட வேண்டாம். ம்ம்ம்….கட்டி வெச்சுடுவோம்” என்றான் ராஜபாண்டியன்.

இரவின் போர்வை அடர்த்தியாக இருந்தது. பக்கத்து ஊரான திருமாணிக்குழி வாமனபுரீஸ்வர் கோயில் வாசலில் வண்டி நின்றது.

பவுனின் நிலைமையைப் பார்த்த பெரியாத்தா “இனிமேல் வண்டியில் போவது முடியாத காரியம் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை உதவி கேட்போம் “என்றாள்.

பக்கத்து ஊர்க்காரர் என்ற வித்தியாசம் பார்க்காமல் தங்கள் வீட்டுப் பெண் போல் அவளுக்கு உதவி செய்வதற்கு வந்தார்கள். கோயில் பக்கத்தில் உள்ள வீட்டின் திண்ணையில் அவளைப் படுக்க வைத்தான் முருகன். பிரசவத்திற்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார்கள்.

திண்ணையில் படுத்திருந்த பவுனு, மீண்டும் நட்சத்திரங்கள் கேட்ட கேள்விக்கு விடை தேடச் சென்றாள்.

பவுனு விடிந்து எழுந்து பார்க்கையில் வெறிச்சோடி இருந்தது வீடு.

எழுந்தவள் குளித்து முடித்து வீட்டை சுத்தம் செய்து சோறு பொங்கி எல்லா வேலையும் சீக்கிரமாகவே முடித்தாள்.

முருகனின் தோப்பில் இருக்கும் பன்னீர்ரோஜாக்களை அப்பப்போ யாருக்கும் தெரியாமல் பறிப்பது அவளின் வழக்கமாகவே இருந்தது. அது அவளுக்கு மட்டும் தெரிந்த ரகசியம். அப்படி ஒரு நாளில். அவன் தோப்புக்கு அவள் செல்லும் பொழுது அங்கு உள்ள பம்புசெட்டு தண்ணீர்த் தொட்டி அருகில் உட்கார்ந்து குளித்துக்கொண்டிருந்தான் முருகன்.

பவுனு திருவிழா அன்று நடந்த சம்பவத்தை மனதில் நினைத்துக்கொண்டு முருகனின் முதுகில் விளையாட்டாகத் தன் கால் விரல்களால் எட்டி உதைத்துவிட்டு மறைந்தாள்.

சற்றும் எதிர்ப்பாக்காத முருகன் தட்டுத்தடுமாறி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து விட்டான். வாயிலும் மூக்கிலும் தண்ணீர் புகுந்து கொண்டது “லொக்கு லொக்கு” என்று இரும்பினான்.

எழுந்தவன் கோவத்தின் உச்சியில் இருந்தான் அவளை விடுவதாக இல்லை

“ஐயோ முருகா “என்ற குரல் அலறியது

அவளின் குரலைப் போன்றே தோன்றியது அவனுக்கு.

தண்ணீர்த் தொட்டியின் மேல்புறத்துக்கு வந்தவன் இடுப்பில் இருந்த துண்டை இன்னும் இறுக்கமாகக் கட்டியவன் எட்டிப்பார்த்தான். மறைந்தவள் அடுப்பெரிக்க நேற்று வேலையாட்கள் வெட்டி வந்த கருவேலம் முள்ளின் மீது விழுந்திருந்தாள். அவளின் தாவணி அவளைவிட்டுவிட்டு தூரத்தில் சென்று இருந்தது.

சிறிது தயக்கத்தோடு அருகில் போனான் முருகன் “பவுனு கையைக் கொடு நான் தூக்குறேன்” என்றான்.

பவுனு, “யாராச்சும் பார்த்தா தப்பா ஆயிடும் முருகா, நீ போ நான் எப்படி ஆச்சும் எழுந்துக்கிறேன் ” என்றாள்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல பவுனு, நீ கையைக் குடு, முதல்ல முள்ளு குத்தி ரத்தம் போகுது பாரு ” என்றான் முருகன்.

அவனின் ஆணைப்படி எதைப்பற்றியும் யோசிக்காமல் தன் கையை அவனிடம் நீட்டினாள்.

அவன் அவளின் கையைப் பிடித்துத் தூக்க பக்கத்தில் போனான். அவனின் மூச்சு காற்று அவள் மீது படுவதை அவள் உணர்ந்தாள். அவளின் கண்கள் அவனின் மார்பகத்தை நோட்டமிட்டது. நாணத்தால் தலை குனிந்தாள். அவனும் அதைப் பார்த்தும் பார்க்காதது போல் இருந்தான். அவனின் ஈர தலையில் இருந்து சொட்டிய நீர் அவள் நெஞ்சை நனைத்தது, தூக்கியவன் கல் தடுக்கி, கீழே இருவரும் விழுந்தனர். அவளின் நெற்றிக் குங்குமம் அவனின் மார்பைத் திலகமிட்டது. இருவரும் வியர்வையின் மழையில் நனைந்தனர்.

“என்னடா முருகா இவ்வளவு நேரமா எங்க போயிருந்த? மதியம் சாப்பிடக் கூட வரல, கொஞ்சம் சோறு சாப்பிடு ” என்று கூப்பிட்ட பெரியாத்தாவுக்கு பதில் சொல்லாமல் பாய் விரித்து குப்புறப் படுத்துக் கொண்டான் முருகன் .

பெரியாத்தா தொடர்ந்தாள்.

“தாய் இல்லாத பிள்ளைனு செல்லம் குடுத்து வளர்த்தது தப்பாப் போச்சு” என்றவள் மிச்ச மீதி இருந்த சோற்றில் தண்ணீரை ஊற்றி மூடி வைத்தாள். அவளும் தூங்கினாள்.

அன்று இரவு தோப்பில் வேலை முடித்து வந்த தன் தகப்பனும் தாயும் வந்தது கூட தெரியாமல் பவுனு ஆழ்ந்து தூங்கியிருந்தாள்.

“என்ன இவ்வளவு சீக்கிரமா தூங்கிட்டா? சாப்பிடாம சோறு, குழம்பு எல்லாம் அப்படியே இருக்கு” என்றாள் வள்ளியம்மாள். போர்வையை எடுத்துத் தன் மகளுக்குப் போர்த்தினார் ராஜபாண்டியன். .

நாளை தன் மகளுக்கு முக்கியமான நாள் என்று விடிய விடிய ராஜபாண்டியனும், வள்ளியம்மாளும் நினைத்தது போல வேலையாட்களை வைத்து வீட்டை அலங்கரித்தனர்.

“பவுனு பவுனு” என்றாள் வள்ளியம்மாள்.

கண்விழித்துப் பார்த்தவளுக்குக் காத்திருந்தது பேரதிர்ச்சி. கண் சிமிட்டி முடிப்பதற்குள் அரங்கேறியது அவளின் திருமணம் சுந்தரேசனுடன்.

அவளில்லாமல் ஏது வாழ்க்கை என்று உயிர் அற்றவனாய்க் கால்கள் போன பாதையில் போனான் முருகன்.

அதற்கப்புறம் யாரும் அவனைப் பார்க்கவில்லை.

சுந்தரேசனுக்கு குடிப் பழக்கம் இருப்பதை மறைத்திருந்தனர். குடித்துவிட்டுப் பலநாள் வீட்டுக்கே வருவதில்லை.

நடைப்பிணமாக இருந்த பவுனுக்குள் ஓர் உயிர் எட்டிப் பார்த்தது… அதிர்ந்து போனாள், நம்ப முடியவில்லை அவளால்.

அய்யனார் கோவில் திருவிழா நெருங்கியது

வள்ளியம்மாள் அய்யனாருக்காக நேர்ந்துவிட்ட கிடாய் மாமரத்தின் நிழலில் கட்டி வைத்தார்.

தன் மகள் மருமகனின் வருகைக்காக காத்திருந்தார். மாபெரும் துயரம் நடக்கப்போகிறது என்று கூட தெரியாமல் ராஜபாண்டியன் தன் குடும்பத்தோடு திருவிழாவுக்கு கிடாவுடன் சென்றிருந்தார்.

மிகுந்த ஆரவாரத்துடன் திருவிழா நடந்து கொண்டிருந்தது. ஊர் ஜனங்கள் அங்கு கூடியிருந்தார்கள். ராஜபாண்டியன் அய்யனாருக்கு நேர்ந்துவிட்ட கிடாயை காவு கொடுத்தார். ஊர் மக்களுக்கு சமைத்துப் பந்தி பரிமாறப்பட்டது .

அன்று கோவில் பக்கத்தில் ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. ராஜபாண்டியனும் உடனிருந்த ஊர்மக்கள் சில பேர் என்ன என்று பார்க்கையில் அனைவரும் உறைந்து போயினர். சாராயம் குடித்துவிட்டு சாராயகாரனிடம் ஏற்பட்ட கைகலப்பில் சுந்தரேசன் ரத்தவெள்ளத்தில் கிடந்தான். ஒருத்தன் பவுனின் தலைமுடியைப் பிடித்துப் பனைஓலையால் அடித்துக் கொண்டிருந்தான். ரத்தம் பீறிட்டு ஓடியது.

“குடிகாரப் பய குடிச்சதுக்குக் காசு தராம போதாக்குறைக்கு இவ என் சாராயப் பானையை உடைச்சா இதா நடக்கும்”என்றபடி அவளின் சேலயைப்பிடித்து இழுத்தான். இதைப் பார்த்த ராஜபாண்டியன் அவனைப் போட்டுப் புரட்டி எடுத்தார் .

சண்டை முற்றியது. சாதி பிரச்சனையாக மாறியது. ஆயிரம் பேருக்கு மத்தியில் சாராயம் காய்ச்சுபவனும் அவனின் கூட்டமும் சேர்ந்து வாழைமரத்தை சாய்ப்பது போல் ராஜபாண்டியனை வெட்டி சாய்த்தனர். ஊர் முழுக்க போலீஸ் பந்தோபஸ்து முன்று நாள் தொடர்ந்து நீடித்தது…..குற்றம் புரிந்தவர்கள் சிறைக்குச் சென்றார்கள்.

பவுனு கர்ப்பமாக இருப்பதால் ஈமச் சடங்குகளை உறவினர்கள் பார்த்துக்கொண்டனர்.

“இவ கருத்தரிச்ச நேரம் பெத்தவனையும் முழுங்கிட்டா, நம்ம சுந்தரேசனையும் காவு வாங்கிட்டா, இதற்குமேல் அவ இங்கு இருந்தால் என் தாலிக்கு ஆபத்து வந்திடும் ….அவளை அவ பொறந்த வீட்டுகே அனுப்பிவிடுங்க” என்றாள் சுந்தரேசனின் தாயார்.

கனத்த மனதோடு பவுனைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பிவிட்டார் வள்ளியம்மாளின் அண்ணன்.

தன் தாய்க்குத் துணையாக பிறந்த வீட்டிலேயே இருந்துவிட்டாள் பவுனு.

மாதங்கள் கடந்தன, முருகனை அந்த கணம் பார்த்ததோடு சரி, அதற்கப்புறம் அவனைப் பார்க்கவில்லை பவுனு.

ஒரு கணம் முருகனைப் பார்த்து விட மாட்டோமா, மனதில் எழுந்த விஷயங்களை அவனிடம் சொல்ல மாட்டோமா என்று தவித்துக் கொண்டே இருந்தாள் பவுனு.

குமரேசனும், பெரியாத்தாவும் அப்பப்போ பவுனுக்குத் தேவையானவற்றை செய்து முடிப்பர்.

தன் மகளின் நிலையை கண்ட வள்ளியம்மாள் அவளின் வாழ்க்கைக்குத் தன்னால் ஏதும் செய்ய முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் நோயுற்று இறந்து போனார் .

பவுனு, “நா எத தொலைச்ச, ஆம எதையோ நா தொலைச்சிட்ட யார்கிட்ட நா அழுவ இப்ப எனக்கு யாருமே இல்லையே எங்க தேடுவே என் மன பாரத்தை யார்கிட்ட இறக்கி வைப்பேன்.. கடவுளே என்ன உங்கிட்ட கூப்பிட்டுக்கோ, என்னால தாங்க முடியல” என்று அழுதாள்.

என்றோ அவளை விட்டு தூர சென்ற தாவணி மீண்டும் அவளை நோக்கி வந்தது. முருகனும் வந்தான்.

பவனு ” என்ன விட்டு ஏன்டா போன முருகா, ஏன்டா போன ? ” என்று அவனின் சட்டையைப் பிடித்துக்கொண்டு அழுதாள்.

மணிப்புறா போலிருந்த தன் காதல் இன்று வெள்ளை காகிதமாய் இருப்பதைக் கண்டு நொந்து போனான்.

பவுனின் சத்தத்தை கேட்டு வந்த பெரியாத்தா முருகனை பார்த்து அதிர்ந்து மௌனமானாள்.

வந்த உறவையும், வரப்போகிற உறவையும் நினைத்து முதல்முறையாக மகிழ்ந்தாள் பவுனு.

இடுப்பு வலியால் துடித்த பவுனை அங்கு இருந்த மாட்டு வண்டியில் முருகன் படுக்கவைத்தான். பெரியாத்தா உடன் இருந்தார்.

வண்டி புறப்பட்டது.

திண்ணையில் படுத்திருந்த பவுனுக்கு வலி அதிகமானது. குழந்தையின் அழுகுரல் கேட்டு பெரியாத்தாவும், முருகனும் மகிழ்ந்தனர்.

“என் பக்கத்துல வா முருகா” என்றழைத்தாள். பவுனு அருகில் வந்தவனின் கையைப் பிடித்து “நா ஒரு நாள் கூட சுந்தரேசனுக்கு பொண்டாட்டியா இருந்ததுல்ல முருகா” என்றாள்.

தலையில் அடித்துக்கொண்ட முருகன் அவளின் கால்களைப்பிடித்து அழுதான்

“நம்ம புள்ள முருகா ” என்றாள் பவுனு.

குழந்தை முருகனின் கைவிரல்களைப் பிடித்துக்கொண்டிருந்தது,

கடைசியாக முருகனின் கையைப்பிடித்து முத்தமிட்டாள் ,”என் மனசு இப்போ லேசா இருக்கு”என்றவள் புன்னகைத்தாள்.

நட்சத்திரங்களோடு நட்சத்திரமாய் கலந்தாள் அவனின் மணிப்புறா.

*********************

Nilgiri Wood Pigeon Name Telling Birds Series Article by V Kirubhanandhini. Book Day Website is Branch of Bharathi Puthakayalam.

பெயர் சொல்லும் பறவைகள் 9 – நீலகிரி காட்டுப்புறா | முனைவர். வெ. கிருபாநந்தினி



காலநிலை மாற்றத்தால் அழிந்துபோகும் பறவைகள் 

“ரெட் அலெர்ட்” – இயற்கை சீற்றத்தினால் ஏற்படும் புயல், மழை, வெள்ளம் போன்ற  பேரிடர் காலங்களில் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் செய்திகளில் எச்சரிக்கை செய்தியாக அறிவித்திருப்பதைக் கேட்டிருப்போம். சமீபத்தில் கொரானா நோய் தோற்று ஏற்பட்ட பொழுதும் பரவலாகவே கேட்டோம். ஆனால் கடந்த வாரம் உலக மொத்தமும் உள்ள “மனிதர்களுக்கும் ரெட் அலெர்ட்” என்று பருவநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழு (IPCC). எச்சரிக்கை விடுத்துள்ளது

ஆங்காங்கே ஏதோ ஒரு பேரிடரினால்  மனிதனின் பல உயிர்கள் பாதிப்புக்குள்ளாயின. ஆனால் தற்போது அனைத்து பேரிடர்களும் ஒரே நேரத்தில் நிகழப் போகிறது. வெப்ப அலைகள், அதிக மழை மற்றும் வறட்சி என மிகப் பரவலாகவும் தீவிரமாகவும் மாறும் என்று  ஐபிசிசியின் சமீபத்திய அறிக்கை கூறுகிறது. இதன் பாதிப்பை நீங்களே கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.

காரணம் என்ன..?

இத்தனை பேரிடர் நிகழ்வுக்கும் பூமியில் வெப்பம் அதிகரிப்பது தான் காரணம். சென்ற நூற்றாண்டில் புவியின் மேற்பரப்பு வெப்பநிலை 0.74 °C (1.33 °F) கூடியிருக்கிறது. இருபத்தொன்றாம் நூற்றாண்டில் புவி மேற்பரப்பு வெப்பநிலை மேலும் 1.1 தொடக்கம் 6.4 °C வரை (2.0 – 11.5 °F) கூடலாம் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன. கூடிவரும் புவி வெப்பநிலையால் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டத்தை உயரச் செய்து  வளமிக்க நிலங்களையும், உயிரினங்களின் வாழ்வையும் தலைகீழாக மாற்றப்போகிறது.

அதில் தமிழ் நாட்டில் பல்லுயிர் வளம் மிக்க  மேற்குத் தொடர்ச்சி மலையையும் விட்டு வைக்கப் போவதில்லை என்கிறார்கள். மேற்குத்தொடர்ச்சிமலையில் சுமார் 5000 வகை பூக்கும் தாவரங்களும், 139 வகை பாலூட்டிகளும், 508 வகை பறவைகளும், 176 வகை இருவாழ்விகளும் உள்ளன. ஆனால் தற்போது இந்த எண்ணிக்கையிலிருந்து பல உயிரினங்கள் அழிந்துவிட்டன, இப்போதும் அழிந்து கொண்டே தான் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக நீலகிரி காட்டுப்புறாவைப் பார்ப்போம்.

ஏற்கானவே 13 வகை புறாக்கள் அழிந்தேவிட்டன,  சில வகை புறாக்கள் அருகி வரும் நிலையில் உள்ளன.  அதில் ஒன்று தான் நீலகிரி காட்டுப் புறா.

இதன் ஆங்கிலப்பெயர் : Nilgiri wood – Pigeon

அறிவியல் பெயர் : கொலம்பா எல்பிஸ்டோனி  (Columba elphinstonii)  (Sykes, 1833)

 Nilgiri Wood Pigeon Name Telling Birds Series Article by V Kirubhanandhini. Book Day Website is Branch of Bharathi Puthakayalam.
நீலகிரி காட்டுப் புறா – Nilgiri Wood Pigeon (படம்-https://ebird.org/species/niwpig1)

நீலகிரி காட்டுப் புறா (Nilgiri Wood Pigeon) என்பது மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் ஒருவகை புறா ஆகும். குறிப்பாக நீலகிரி மலையில் காணப்படுவதால் இதற்கு இப்படியொரு பெயர் வந்திருக்கலாம். இது பசுமை மாறாக் காடுகளில் உள்ள பழங்களைத் தேடி உண்டு வாழ்கிறது. அவ்வப்போது தரையில் உள்ள உதிர்ந்த பழங்களைப் பொறுக்கவும் சிறு நத்தைகளைப் பிடித்துத் தின்னவும் தரையில் இறங்குகிறது.

நாவல், நெல்லி, இடலை எண்ணெய் (Olive oil), அத்தி போன்ற மொத்தம் 19 வகையான தாவர இனங்களிலிருந்து பழங்கள், பூக்கள் இலை மொட்டுகள் ஆகியவற்றை உணவாக உட்கொள்கின்றன.

உணவுச்சங்கிலி

கால நிலை மாற்றத்தால் பூக்கும் தாவரங்களும், அதனைச் சார்ந்து வாழும் பூச்சிகளும், பறவைகளும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. ஒரு உயிரினத்தின் அழிவிற்கு உணவு தான் முக்கிய காரணம் என்று அனைவரும் தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் அனைத்து உயிரினங்களையும் ஒன்றோடு ஒன்று இணைக்கும் உணவுச்சங்கிலி பற்றி முழுமையாகப் புரிந்து கொண்டிருக்கிறோமா என்று பார்த்தால்…இல்லை என்றே கூறத்தோன்றுகிறது. இப்படிப் புரிந்து கொள்ளாததின் விளைவு தான்  இன்றைக்கு நாம் இறுதிக் கட்டத்தை  நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.

தடைபடும் இனப்பெருக்கம்

Nilgiri Wood Pigeon Name Telling Birds Series Article by V Kirubhanandhini. Book Day Website is Branch of Bharathi Puthakayalam.
Nilgiri Wood Pigeon – Wikipedia

புறாக்கள் கால்சியம் சத்துக்கள் அதிகரித்து முட்டை ஓட்டிற்கு வலிமை சேர்க்கவும், அதன் குஞ்சுகளுக்கான புரதச் சத்து அதிகமுள்ள பூச்சிகளை ஊட்டவும்  மழைக் காலம் தொடங்குவதற்கு முன்னரே  இனப்பெருக்கம் செய்யும். மார்ச் முதல் ஜூலை வரை பசும் சோலைகளில் உள்ள மரங்களில் குச்சிகளால் தட்டுப்போலக் கூட்டமைந்து ஒரே ஒரு முட்டையிடும். ஆனால் அதுவும் காலநிலை மாற்றத்தாலும், பூக்கும் தாவரங்களின் இயல்பு நிலை பாதிக்கப்படுவதாலும் அவைகளின் இனப்பெருக்கமும் பாதிக்கப்பட்டு வருகிறது.  அடர்ந்த மரக்கிளைகள் இல்லாததால் அதன் கூடுகள் வெளிப்படையாகத் தெரிவதாலும், உணவுச்சங்கிலியின் அடுத்த நிலையில் உள்ள வேட்டையாடும் பறவைகளுக்கும், பாம்புகளுக்கும் அது  உணவாகிறது. வருடத்தில் ஒரு முறை ஒரே ஒரு முட்டையிடும் நிலையில் உள்ள இதன் எண்ணிக்கை  தற்போது 2500-9999 மட்டுமே உள்ளன.

வெப்பத்தினால் கால நிலை மாற்றம் ஏற்பட்டு மழைக்காலங்கள் மாறுகின்றன. இதனால் விவசாயத்தில் பயிர் சுழற்சி முறையை  மக்கள் மாற்றி வருகின்றனர். ரப்பர், எண்ணெய் பனை, தேநீர் மற்றும் காபி போன்ற பணப்பயிர்  செய்யப்படுவதால் இந்த நிலத்துக்கான மரங்கள் அழிக்கப்படுகின்றன.  மேற்குத் தொடர்ச்சியான மகாராஷ்டிரா, கோவா  மற்றும் கர்நாடக வனப்பகுதிகளில் சுரங்கத்தொழில் நடைபெறுவதால் அதிகளவில் மரங்கள் வெட்டப்படுகின்றன. அதனால் இப்பறவையின் வாழ்விடங்கள் அழிந்து, உணவுக்கும், இனப் பெருக்கத்திற்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது.

பல ஆராய்ச்சி கட்டுரைகளில் 1961 முதல் 1997  வரை 67%  மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மரங்களை அழித்து விட்டோம் என்றும், இது நீலகிரி காட்டுப் புறாவிற்கு மிகப்பெரிய சிக்கல் எனவும்  ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கள ஆய்வுகள்

பருவநிலை மாற்றத்தால் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய 2010ல்   மாதவ் காட்கில் குழுவும், அதனைத் தொடர்ந்து  2012 ல் கஸ்தூரிரங்கன் குழுவும் அமைக்கப்பட்டு. இதன் மூலம் சில கட்டுப்பாடுகள் நடைமுறைப் படுத்தப்பட்டன. இருப்பினும் மேற்கூறிய பிரச்சனைகள் தொடர்வதால் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு அதிகரித்து பூமியின் வெப்பநிலையும் தற்போது அதிகரிக்கிறது. இன்று வரை மனிதர்களால் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மாறாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

நாமே நம் சொந்த நிலைகளைப் பற்றி சிறிதளவு கூட கண்டுகொள்ளாததின் விளைவு இன்று இந்த நிலைமையில் வந்து நிற்கிறோம். ஆனால் ஸ்காட்டிஷ் அரசியல்வாதி மற்றும் வரலாற்று ஆசிரியருமான  அவர்கள் ஹான் மவுண்ட்ஸ்டார்ட் எல்பின்ஸ்டோன் (6 அக்டோபர் 1779 – 20 நவம்பர் 1859) முழுவதுமாக தெரிந்து கொண்டு இந்திய வரலாற்றைப் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.  அவர் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்துடன் தொடர்புடையவர். பின்னர் அவர் பம்பாயின் (இப்போது மும்பை) ஆளுநரானார், அங்கு அவர் இந்திய மக்களுக்காகப் பல கல்வி நிறுவனங்களைத் திறந்தார்.

Nilgiri Wood Pigeon Name Telling Birds Series Article by V Kirubhanandhini. Book Day Website is Branch of Bharathi Puthakayalam.
Mountstuart Elphinstone (படம் – https://en.wikipedia.org/wiki/Mountstuart_Elphinstone)

வங்காளச் சிவில் அதிகார வர்க்கத்தில் 1795 இல்  வேலையை ஏற்றுப் பிறகு, 1804 இல் நாகபுரியிலும், 1811 இல் பூனாவிலும் சுதானிகராகா நியமிக்கப்பட்டார். மும்பையின் 1819 முதல் 1827 வரை  துணைநிலை ஆளுநர் (lieutenant governer) பதவியில் திறம்பட செயலாற்றினார். அக்காலத்தில் இவர் எல்பின்சுடன் சட்டத்தை (Elphinstone code) வகுத்தார். இவர் இந்தியாவில் அரசாங்கக் கல்வி வளர்ச்சியை நன்கு திட்டமிட்டு வளர்த்தார். இந்தியர் இவரைப் பாராட்டி, இவர் பெயரால்  ஒரு கல்லூரியை நிறுவினர். ஐரோப்பியர் இவரது உருவச்சிலையை மும்பையில் அமைத்தனர். 1829 இல் இவர் இங்கிலாந்து திரும்பினர். இவர் எழுதிய இந்திய வரலாறு சிறந்த ஆவண நூல்களாகக் கருதப்படுகிறது. இவர் பெயரால் ஆஸ்திரேலியா நாட்டில் ஒரு நகரம் உருவாக்கப்பட்டது. இலண்டனில் புனிதர் பவுல் தேவாலயத்தில் (St Paul’s Cathedral) ஒரு சிலை இவருக்கு வைத்துள்ளனர். இவருடைய வரலாற்று குறிப்புகளில் சில எறிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. ஆதலால்  இப்பறவைக்கும் மரியாதை நிமித்தமாக Elphinstone என்று இவருடைய பெயரை வைத்துள்ளனர்.

Nilgiri Wood Pigeon Name Telling Birds Series Article by V Kirubhanandhini. Book Day Website is Branch of Bharathi Puthakayalam.மேலும் கால நிலை மாற்றம் பற்றி 15 வயதே ஆன க்ரெட்டா துன்பெர்க் என்ற ஸ்வீடன் நாட்டு பள்ளி மாணவி 2018 ஆம் ஆண்டு  ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்ற மாநாட்டில் பேசினார். அதற்காக இன்று வரை அவரை விமர்சித்து வருகின்றோம்.

இந்த கொடுமையான சூழலில் தான் மனிதர்களின் இயற்கைக்கு மாறான செயல்பாடுகளினால் 2010 ல் 0.8 டிகிரி செல்ஸியஸிலிருந்து  2019 ல்  1.3°C ஆகா அதிகரித்துள்ளது. 2021 முதல் 2041 வரை 1.5°C ஆகா உயரும் என தற்போதைய ஆறாவது அறிக்கையில் எச்சரிக்கின்றனர்.

இந்த எச்சரிக்கையை திடீரென்று சொல்லி விடவில்லை, பல வருடங்களாக அறிவுறுத்தி வந்தனர் ஆராய்ச்சியாளர்கள்.  இந்த புறாவை போன்றே அழிந்த, அழியும் நிலையில் உள்ள பறவைகளும், வலசைப் பறவைகளும் நமக்கு பிற்காலத்தில் வரும் மிகப்பெரிய ஆபத்துகளை முன் கூட்டியே அறிகுறிகளாக தெரியப்படுத்தின. நாம் தான் அதை உணர்ந்து செவிசாய்க்க மறுத்து விட்டோம்.  தற்போது மொத்த உலகமும் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாகவே ஆய்வாளர்கள் மீண்டும் எச்சரித்துள்ளனர். இனிமேலாவது புரிந்து செயல்படுவோமா?

இல்லை விரைந்து நம்மை இழப்போமா..?

காலநிலை மாற்றத்தால் கண்ணுக்குத் தெரியாத கோடிக்கணக்கான பல்லுயிர் வளமிக்க நுண்ணுயிர்களையும் இழந்து வருகிறோம்.

இயற்கையோடு இணைந்துவாழ போர்க்கால நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசர அவசியம் என்பதை அனைவரும் உணர்ந்து நடப்பதே இதற்கு தீர்வாக அமையலாம்.

தரவுகள்

  1. Somasundaram, S., & Vijayan, L. (2010). Foraging ecology of the globally threatened Nilgiri Wood Pigeon (Columba elphinstonii) in the Western Ghats, India. Chin. Birds, 1, 9-21.
  2. CG, K., MN, R., & BN, S. (2016). Bird Diversity Across Different Vegetation Types in Kodagu, Central Western Ghats, India.

  3. Pramanik, M., Paudel, U., Mondal, B., Chakraborti, S., & Deb, P. (2018). Predicting climate change impacts on the distribution of the threatened Garcinia indica in the Western Ghats, India. Climate Risk Management, 19, 94-105.

  4. https://en.wikipedia.org/wiki/Mountstuart_Elphinstone

 

  • IPCC – The Intergovernmental Panel on Climate Change
  • பசுமைக்குடில் விளைவு – வளிமண்டலத்தில் உள்ள வெப்பக் கதிர் வீச்சைக் உறிஞ்சி, பின்வெளியேற்றும் போது ஏற்படும் விளைவே பைங்குடில் விளைவு.
  • பைங்குடில் வளிமங்கள்- நீராவி, காபனீரொக்சைட்டு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, ஓசோன், மற்றும் க்ளோரோ ஃப்ளூரோ கார்பன்கள் ஆகியவையாகும்.
  • ஓசோன் படலம் (Ozone layer) – ஒப்பீட்டளவில் உயர் செறிவுகளையுடைய ஓசோனைக் (O3) கொண்ட பூமியின் வளிமண்டலத்தில் உள்ள ஒரு படலம் ஆகும். இது சூரியனில் இருந்து வரும்உயிரியல் ரீதியாகத் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் (UV) கதிர்களை உட்கிரகிக்கிறது.

முனைவர். வெ. கிருபாநந்தினி
பறவைகள் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: [email protected]

முந்தைய தொடரை வாசிக்க: 

பெயர் சொல்லும் பறவைகள் – முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 2: ரிச்சார்டு நெட்டைக்காலி – முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 3: பச்சைக்கிளி – முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 4 (Green Cheeked Parakeet) – முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 5 – லோட்டன் தேன்சிட்டு (Loten’s Sunbird) | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 6 – செட்டிகதிர்க்குருவி | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 7 – Yellow-eyed Pigeon | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 8 – Jerdon’s Nghtjar (பக்கி) | முனைவர். வெ. கிருபாநந்தினி

Yellow-eyed Pigeon Name Telling Birds Series Article by V Kirubhanandhini. Book Day Website is Branch of Bharathi Puthakayalam.

பெயர் சொல்லும் பறவைகள் 7 – Yellow-eyed Pigeon | முனைவர். வெ. கிருபாநந்தினி

ஒரு புறாவுக்கு அக்கப்போறா! சமாதானதின் அடையாளமாக நேரு மாமா பறக்க விடும் வெள்ளை நிற புறாவைப் படங்களில் பார்த்திருப்போம். பின்பு பண்டைய காலங்களில் தூது  அனுப்பியதாகக் கதைகளில் நாம் அனைவருமே கேள்விப் பட்டிருப்போம். மாடப்புறாவைப் பல பேர் வீடுகளில் தற்போது வளர்த்து …