நந்தகுமாரின் கவிதைகள்
சாலை ஓரப் பூக்கள்
************************
புலரும் காலை
புது வெயிலில்
சாலை ஓரம் பூக்கும் பூக்களே!
யாரும் காணா
நேரத்தில் இமை போல்
இதழ்களை விரிக்கிறாய்!
மகரந்தம் வீசி, மனதைக்
கொள்ளை கொள்கிறாய்.
தென்னையில் அமர்ந்து
இசைக்கும், கரு வண்ண
குயிலின் கூவலுக்கு,
தென்றலோடு அசைந்து
ஆடிடும் வண்ணப் பூக்களே!
கரங்கள் தீண்டும்,
பேய் காற்று தீண்டும்,
வண்டினங்கள் கூடும்,
மழைத்துளிகள் படரும்,
ஆனாலும், ஏனோ!
உந்தன் வாசம் போகாது
ஏன் பிறந்தாயோ?
அதுவும், இங்கு
ஏன் மலர்ந்தாயோ?
சாலையில் விழுந்து
சக்கரங்களில் மடிந்தாய்!
ஓ…..சாலை ஓரப் பூக்களே!
மகரந்த மாலை வேளையில்,
உன் நிறத்தைக் கதிரவன்
பிரகாசிக்கும் செவ்வானமாய்.
மாலை வேளைக் காட்சி
****************************
வான் உயர்ந்த தென்னை மரங்கள்
வளைவு நெளிவு இல்லாமல் ஒரு சீராய்.
தென்றல் காற்றில் தென்னங் கீற்றுகள்
தெம்மாங்கு பாட்டிசைக்கும் அசைந்தாடி,
மாலை வெயில் மறையும் காட்சி கண்டு
மாய விழிகள் மயக்கம் கொள்ளும்.
கருங்காக்கை இரை கொண்டு வந்தபின்,
காக்கைக் குஞ்சுகளின் அறைகூவல் அடங்கும்.
சிவப்பு வண்ணம் பூசிய செவ்வானமாய்,
சுடரொளி பரப்பி, கதிரவன் புறத்தே சாயும்.
வெண்ணிற புறாக்களின் படைக் கூட்டம்
களைப்பால், தென்னங் கீற்றில் அமர,
மாலை நேர மன்னவனின் செவ்வொளி
மாடப் புறாக்களில் பரவியதைக் கண்டு,
தென்னை தீப்பற்றியதோவென அஞ்சி கரைந்து,
தங்கக் குஞ்சுகளைக் காக்க விரைந்ததுவோ!
ஒரு தீயணைப்பு வீரன் போல்……
– ந. நந்தகுமார்
9360395196