Pirivu Thuyaril Poem By Vasanthadheepan பிரிவுத் துயரில் கவிதை - வசந்ததீபன்

பிரிவுத் துயரில் கவிதை – வசந்ததீபன்




(1)
திறந்து வைத்தாய்
மூட முடியவில்லை
என் இதயத்தை மூட
ஒரு உபாயம் சொல்
நடந்தவைகளை மறக்க முடியுமா?
நடப்பவைகளை அறிய முடியுமா?
நசிந்து நசிந்து நோவதைத் தவிர வேறென்னமா?
மனதுக்குள் வந்த உன்னை மறக்கமுடியவில்லை
மற்றெதையும் நினைக்க முடியவில்லை

மாறாத துக்கத்தில் உயிர் வெந்து கொண்டிருக்கிறது
பயணத்தின் நடுவில் வந்தாய்
பாதியிலே போகிறாய்
இருதயத்தில் வலியோடு
தனியாகப் போகிறேன்
மலரின் வெட்கம் ரசமானது
மனதை மெல்ல வருடுவது
கனவுகளை நெஞ்சில் குவிப்பது
உன் உள்ளக் கிடக்கையை
சொல்லித் தொலை
உன்னுள் ஊறும் வார்த்தைகளை வெளியேற்று
உடைந்து சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறேன்
பெரும் பசிக்குள் சிக்கியிருக்கிறேன்
வெளியேற வழி தெரியவில்லை
விடுவிக்க வருவாயா?
தண்டவாளங்கள் ஓடுகின்றன
நகரங்கள் இங்கும் அங்கும் அலைகின்றன
ஓய்வு ஒரு நாள் வரும்
நதியைப் பருகத் தொடங்கியது வெண்பறவை
மீன்கள் பறக்கத் துள்ளின
உருண்டு வந்த கூழாங்கல்லொன்று சிரித்தது

(2)
உன்னோடு பேசிய போது மகிழ்ச்சியாய்
நீ போனப் பிறகு தவிப்பாய்
மீண்டும் நீ வந்தபோது இனிமையாய் கழிந்தது இந்நாள்
மனசு முழுக்க நீ
குடம் நிறைய பால்
மெளனமாய் கடக்கிறது காலம்
என் வார்த்தை உன்னை சீண்டுகிறதா ?
என் கவிதை உன்னை சில்மிஷம் செய்கிறதா ?
என் கனவுகள் உன்னை விழுங்க விரட்டுகிறதா ?
முத்தத்தைக் கேட்டேன்
வெட்கத்தைத் தந்தாய்
முறிந்து போனேன்
அடடடா! தாவணி போட்ட தண்ணிலவு
அள்ளுது பேரழகு
கிள்ளிப் பார்த்துக் கொள்கிறேன்
சொல்லி விட்டுப் போனால் என்ன ?
உனக்காக காத்துக் காத்து
உடைந்து போகிறேன்.