புத்தகம் பேசுது தமுஎகச மாநாடு சிறப்பிதழிலிருந்து: கே. முத்தையா ஒரு பல்கலைக்கழகம்! – மதுக்கூர் இராமலிங்கம்

புத்தகம் பேசுது தமுஎகச மாநாடு சிறப்பிதழிலிருந்து: கே. முத்தையா ஒரு பல்கலைக்கழகம்! – மதுக்கூர் இராமலிங்கம்




தோழர் கே. முத்தையா பன்முகத்திறன் கொண்ட ஒரு பேராளுமை. பத்திரிகையாசியர், நாவலாசிரியர், நாடகாசிரியர், இலக்கியத் திறனாய்வாளர், அமைப்பாளர் என அவர் தொடாத துறைகள் இல்லை. தொட்டத் துறைகள் அத்தனையிலும் மிளிர்ந்தவர்.

அன்றைய ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம், பேராவூரணி பொன்னாங்கன்னி காடு கிராமத்தில் நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவர், பள்ளிப் படிப்பை பட்டுக்கோட்டையில் முடித்த பின்பு, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ஹானர்ஸ் பொருளாதாரப் படிப்பில் சேர்ந்தார். விடுதலைப் போராட்டம் வீறு கொண்டெழுந்த நேரமது. அண்ணாலை பல்கலைக்கழகத்தில் பொதுவுடமை இயக்கச் சிந்தனை கொண்ட மாணவர்கள் பலர் இருந்தனர். அவர்களுடன் தோழர் கே. முத்தையாவும் இணைந்தார். விடுதலைப் போராட்டத்திலும், மாணவர் போராட்டத்திலும் ஈடுபட்ட காரணத்தினால், பல்கலைக்கழக இறுதித் தேர்வை அவரால் எழுத முடியவில்லை. மாணவனாக இருக்கும்போதே கைது செய்யப்பட்டார். அதன்பின் இறுதிவரை போராட்டமே அவரது வாழ்க்கை முறையானது.

‘ஜனசக்தி’யின் பொறுப்பாசிரியராகவும், பின்னர் நீண்டகாலம் ‘தீக்கதிர்’ ஏட்டின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். ஒரு பல்கலைக்கழகத்தைப் போன்று பலநூறு பத்திரிகையாளர்களை உருவாக்கியவர் அவர். ‘செம்மலர்’ ஏட்டைத் துவக்கி முதல் ஆசிரியராக தோழர் கு. சின்னப்ப பாரதி நடத்தினார். சில மாதங்களுக்குப் பின்பு தோழர் கே. முத்தையா, ‘செம்மலர்’ ஆசிரியர் பொறுப்பையும் ஏற்றார். செம்மலரில் எழுதிவந்த எழுத்தாளர்கள் ஒன்றுகூடி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கினர். தோழர் கே. முத்தையா சங்கத்தின் பொதுச்செயலாளராகவும், தலைவராகவும், கௌரவத் தலைவராகவும் பல பத்தாண்டுகள் பணியாற்றி வழிகாட்டினார்.

‘செம்மலர்’ ஏட்டின் அவர் தொடராக எழுதிய இரண்டு நாவல்கள், ‘உலைக்களம்’, ‘விளைநிலம்’ ஆகியன ஆகும். இந்த இரண்டும் இன்றைக்கும் குறிப்பிடத்தக்க நாவல்களாக விளங்குகின்றன. தமிழகத்தின் பொதுவுடமை இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி, கருத்து மோதல்கள், களப்போராட்டங்களை அருமையான கலைவடிவத்தில் பேசும் நாவல்கள் இவை.

1948 முதல் 1962 வரையிலான பொதுவுடமை இயக்க வரலாற்றின் போக்குகளை இவ்விரண்டு நாவல்களும் துல்லியமாக படம்பிடித்துக் காட்டியவை.

‘செவ்வானம்’, ‘ஏரோட்டி மகன்’, ‘புதிய தலைமுறைகள்’ என தோழர் கே. முத்தையா எழுதிய மூன்று மேடைநாடகங்கள், தமிழகத்தில் பலமுறை அரங்கேற்றப்பட்டுள்ளன. சில இசைப்பாடல்களையும் அவர் எழுதியுள்ளார்.

இலக்கியத் திறனாய்வில், மார்க்சிய அணுகுமுறையை பின்பற்றியவர்களில் தோழர் கே. முத்தையாவுக்கு முக்கியப் பங்கு உண்டு. ‘தமிழ் இலக்கியங்கள் கூறும் வர்க்கச் சமுதாயம்’, ‘இராமாயணம்- உண்மையும் புரட்டும்’, ‘சிலப்பதிகாரம் உண்மையும் புரட்டும்’ உள்ளிட்ட ஆய்வு நூல்கள் இன்றளவும் கவனிக்கத்தக்கவையாக உள்ளன. திருக்குறள் குறித்து அவர் எழுதியுள்ள நூலும் முக்கியமான ஒன்று.

ஒரு பத்திரிகையாளராக ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ள அவர், மார்க்ஸ் எழுதிய ‘தத்துவத்தின் வறுமை’ என்ற நூலையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

ஒரு எழுத்தாளராக மட்டுமன்றி, பலநூறு எழுத்தாளர்களை உருவாக்கியவர் அவர். அதை ஒரு இயக்கமாக அவர் செய்து வந்தார். தன்னுடைய இறுதிக்காலம் வரை ஒரு கர்மயோகியைப் போல செயல்பட்ட அவரது பெருமையை ‘தீக்கதிர்’, ‘செம்மலர்’ போன்ற ஏடுகளும், ‘தமுஎகச’ போன்ற அமைப்புக்களும் இன்றளவும் எடுத்துரைக்கின்றன.

படைப்புகள்

* சிலப்பதிகாரம் உண்மையும் புரட்டும்(1981)

* இராமாயணம் ஒரு ஆய்வு(1981)

* வீர பரம்பரை

* சட்டமன்றத்தில் நாம்

* திமுக எங்கே செல்கிறது

* இதுதான் அண்ணாயிசமா?

* மார்க்சியமும் தமிழ் கலை இலக்கியங்களும்

* தத்துவத்தின் வறுமை (காரல் மார்க்ஸ்-எழுதியது-தமிழாக்கம்)

* தமிழ் இலக்கியங்கள் கூறும் வர்க்க சமுதாயம் (1968)

* தமிழ் இலக்கிய வரலாறு

நாவல்கள்

* உலைகளம் (முதல் நாவல்)

* விளைநிலம்(1989)

நாடகங்கள்

* செவ்வானம் (நாடகம்)

* புதிய தலைமுறை (நாடகம்)

* ஏரோட்டி மகன் (நாடகம் (2012)