உழவுக்கு வெந்நீர்! கவிதை – கோவி.பால.முருகு

உழவுக்கு வெந்நீர்! கவிதை – கோவி.பால.முருகு




உழவுக்கு வெந்நீரை
ஊற்றுகின்றான்-கார்ப்பரேட்
உரம்பெறவே தண்ணீரைப்
பாய்ச்சு கின்றான்!
நிழலுக்குள் நெருப்(பு) அள்ளி
வீசுகின்றான்-கார்ப்பரேட்
நிலைத்திடவே நிழமல்தந்து
போற்று கின்றான்!

சேற்றிலே நிற்போனைத்
துரத்துகின்றான்-கார்ப்பரேட்
செழித்திடவே அவன்காலை
நக்குகின்றான்!
சோற்றிலே நஞ்சினைக்
கலக்குகின்றான்-கார்ப்பரேட்
சோம்பேறி வாழ்வுபெற
போற்றுகின்றான்!

கஞ்சிக்கு உழைப்போனைக்
கலங்க வைப்பான்!-கார்ப்பரேட்
கால்பிடித்து அரியணையில்
அமர வைப்பான்!
கிஞ்சித்தும் உழுவோனைக்
கருத மாட்டான்-கார்ப்பரேட்
கீழிருக்கும் வஞ்சகத்தை
உணர மாட்டான்!

பொன்முட்டை இடும்வாத்தை
அறுத்துப் பார்ப்பான்-கார்ப்பரேட்
பொல்லாதக் குழு வாழ
விருந்துவைப்பான்!
கண்குத்தி உழுவோனைக்
குருட னாக்கி-கார்ப்பரேட்
கண்ணுக்கு விருந்திட்டு
மகிழு கின்றான்!

– கோவி.பால.முருகு