இந்திய வேளாண் கடனும் விவசாயிகளின் தற்கொலைகளும் கட்டுரை – முனைவர் பு.அன்பழகன்
வேளாண்மைத்துறை இந்தியப் பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பினைச் செய்கிறது. வேளாண் பயிர் செய்யும் பணிகள் தொடங்குவதிலிருந்து அவற்றை சந்தை படுத்தும்வரை செலவிடப் பணம் தேவைப்படுகிறது. இந்திய விவசாயிகளில் பெருமளவிற்குச் சிறு, குறு, நடுத்தர விவசாயிகள் ஆவார்கள். இவர்கள் பயிர் தொழிலுக்குத் தேவையான குறுகிய, நடுத்தர, நீண்டகாலக் கடனைப் பல்வேறு ஆதாரங்கள் வாயிலாகப் பெறுகின்றனர். இந்திய விவசாயிகள் தங்களின் பணத்தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ள நிறுவன (Institutional) மற்றும் நிறுவனமல்லா (Non-Instituional) நிதி அமைப்புகளிடமிருந்து கடன் பெறுகின்றனர். நிறுவனமல்லாக் கடன்களை முறைசாராக் கடன் எனவும் அழைக்கலாம். முறைசாராக் கடன்களை நிலச் சுவான்தாரர்கள், நிதி வணிகர்கள், தரகு முகவர்கள் போன்றவர்களிடமிருந்து பெறுகின்றனர். முறைசாராக் கடனின் வட்டி வீதம் 36 விழுக்காடு வரை உள்ளது. இதனால் விவசாயிகள் கடன் பொறியில் (Debt trap) வீழ்ந்துவிடுகின்றனர் (கடன் பொறி என்பது பழைய கடனைத் திருப்பி செலுத்துவதற்காகப் புதிய கடனை வாங்கத் துண்டும் நிலையாகும்). இந்த விவசாயிகளின் துயரினைப் புரிந்துகொண்ட அரசு பல்வேறு முயற்சிகளைக் கடந்த காலங்களில் தொடர்ந்து திட்டங்களைக் கொண்டுவந்துள்ளது. முறைசார் கடனை (நிறுவனக் கடனை முறைசார் கடன் எனவும் அழைக்கப்படுகிறது) அளிக்கக் கூட்டுறவு வங்கிகள், வணிக வங்கிகள், வட்டார வளர்ச்சி வங்கிகள் என விவசாயிகளுக்குக் குறுகியகால, நடுத்தர, நீண்ட காலக் கடன்களை வழங்க வழிவகைகளை உருவாக்கித் தந்துள்ளது. 1951ஆம் ஆண்டு விவசாயிகளின் முறைசார் கடன் 10.2 விழுக்காடாகவும், 89.1 விழுக்காடு முறைசாராக் கடனாகவும் இருந்தது. 1966ல் பசுமைப் புரட்சி நடைமுறைப்படுத்தப்பட்டபோது நவீன முறை விவசாயம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் விவசாய இடுபொருட்களான விதை, உரம், பூச்சிக்கொல்லி போன்றவை வாங்கவும், இயந்திரங்களைப் பயன்படுத்தவும் அதிக அளவிற்குப் பணம் தேவைப்பட்டது. 1969ல் 14 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது. இதற்கான ஒரு முக்கிய நோக்கம் வேளாண் வளர்ச்சிக்குத் தங்குதடையின்றி கடன் வழங்குவதாகும். 1970ல் வங்கிகள் இல்லாத பகுதிகளில் வங்கிக் கிளைகள் துவக்கப்பட்டது. இதனால் முறைசார்க் கடன் 1971ல் 32 விழுக்காடாக அதிகரித்தது. 1980ல் மேலும் 6 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது. இதனால் வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. 1991ல் இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. 1991ல் முதல் நரசிம்மம் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் வங்கி நடவடிக்கையில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது. எனவே விவசாயக் கடன் அதிகரித்தது. 1991ல் மொத்த விவசாயக் கடனில் 65 விழுக்காடு முறைசார்க் கடனாக இருந்தது. மீண்டும் 1998ல் இரண்டாவது நரசிம்மம் குழுவின் பரிந்துரையின்படி வங்கித் துறையில் பல்வேறு மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டது. இதன்படி வங்கிகளுக்கான அதிகாரங்கள் நீக்குப்போக்குடன் செயல்பட அனுமதித்தது. வங்கிகள் துவங்க உரிமம் தேவை என்பது நீக்கப்பட்டது, இழப்பில் செயல்பட்டுவந்த வங்கிக் கிளைகள் மூடப்பட்டது, வட்டி வீத கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டது, கடன் இலக்கு குறைக்கப்பட்டது. 1975ல் 5598ஆக இருந்த வங்கிக் கிளைகள் 1991ல் 11344ஆக அதிகரித்தது. இதனால் வேளாண்மைக்கான கடன் அதிகரிக்கத் தொடங்கியது. ஆனால் 1991-2001ஆண்டுகளுக்கிடையே 28.67 விழுக்காடு மட்டுமே வங்கிகளின் கிளைகள் அதிகரித்தது. பெருமளவிற்கு வங்கிக் கிளைகள் கிராமப்புறங்களில் குறைந்தது. கடந்த 10ஆண்டுகளில் தனியார் வங்கிகள் அனுமதிக்கப்பட்டதால் தற்போது (மார்ச் 2021ல்) 1.22 லட்சம் (பொது, தனியார் வங்கிகள்) வங்கிக் கிளைகள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது (www.rbi.org.in). வங்கிகள் கடன் வழங்க முன்னுரிமைத் துறைகளுக்கு வழங்கும் நடைமுறை உள்ளது.
1969ல் 14 விழுக்காடாக இருந்த முன்னுரிமைத் துறைக்கான கடன் பங்கானது 2002ல் 34.8 விழுக்காடாக அதிகரித்தது. இதனால் வேளாண் துறை பெருமளவிற்குப் பயனடைந்தது. அதேசமயம் வேளாண் துறையின் முறைசாராக் கடனின் பங்கு 4 விழுக்காட்டுப் புள்ளிகள் 1991 – 2002ஆம் ஆண்டுகளுக்கிடையே அதிகரித்தது. இம் முறைசாராக் கடனில் பெருமளவிற்கு நிதி வணிகர்களிடமிருந்து பெறப்பட்டதாகும். வங்கி விரிவாக்கம் குறைந்தது. முன்னுரிமைத் துறைகளுக்கான கடன் அளவு குறைந்தது போன்றவை இதற்கான காரணங்களாகச் சுட்டப்படுகிறது. 2001க்கு பின்பு கிராமப்புறங்களில் வங்கி கிளைகள் விரிவாக்கம். முன்னுரிமைத் துறைகளுக்கான கடன் அதிகரிப்பு போன்ற காரணங்களினால் மீண்டும் முறைசார் வேளாண் கடன்கள் 2002ல் 61.1 விழுக்காடாக இருந்தது 2013ல் 64 விழுக்காடாக அதிகரித்தது, 2015ல் இது 72 விழுக்காடாக மேலும் உயர்ந்தது ஆனாலும் நான்கில் ஒரு பங்கிற்குமேல் முறைசாராக் கடன் பெறப்பட்டிருந்தது (Ahubhm Sehal 2021). வங்கித்துறையில் கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட சீர்திருத்தங்களின் விளைவாக இந்திய விவசாயிகள் சரியான வட்டி வீதத்தில் முறைசார்க் கடன்களைப் பெற்றுள்ளனர். அதே சமயம் பெரும்பகுதியான சிறு குறு விவசாயிகள் முறைசார் கடனை அணுகமுடியாத நிலை தொடர்ந்து நீடிக்கிறது.
Mjhuk;: Ashok Gulati and Ritika Juneja (2019): “Agricultural Credit System in India: Evaluation, Effectiveness and Innovations.” ZEF, Working Paper series 184, Centre for Development Research University of Bonn.
இந்தியாவின் அட்டவணையிடப்பட்ட வணிக வங்கிகள் வேளாண் கடனாக மொத்தக் கடன் அளவில் 1970ல் 9 விழுக்காடு அளித்திருந்தது. இது தொடர்ச்சியாக அதிகரித்து 1990ல் 15.9 விழுக்காடாக உயர்ந்தது, ஆனால் 2000ல் 9.9 விழுக்காடாகக் குறைந்தது. அடுத்து வந்த ஆண்டுகளில் இக்கடன் உயரத் தொடங்கியது, 2016ல் இக்கடன் 13.2 விழுக்காடாக உயர்ந்தது. மொத்தக் கடனில் தொழில்துறைக்கு அதிக அளவில் (1970ல் 61.2 விழுக்காடு, 2016ல் 39.4 விழுக்காடு) அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது (Shromona Gangulylk et al 2021). தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியான NABARD (2018) கணக்கீட்டின்படி 2015-16ல் 61 விழுக்காடு விவசாயக் குடும்பங்கள் முறைசார்க் கடனைப் பெற்றுள்ளதாகவும். 30 விழுக்காடு முறைசாராக் கடனையும் 9 விழுக்காடு முறைசார் மற்றும் முறைசாராக் கடனைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கிறது. நிஹாரிகா பாண்டே et al (2021) நடத்திய ஆய்வில் கோவிட் பெருந்தொற்று காலங்களில் வேளாண் கடன் 2020ல் சம்பா சாகுபடி காலத்தில் எடுத்த கணக்கெடுப்பின்படி மொத்த விவசாயிகளில் 63 விழுக்காட்டினர் கடன் பெற்றவர்களாக இருந்தனர். இதில் 35 விழுக்காட்டினர் முறைசார்க் கடனும், 22 விழுக்காட்டினர் முறைசாராக் கடனும், இவ்விரண்டையும் 9 விழுக்காட்டினர் பெற்றிருந்தனர் என கணிக்கப்பட்டது. இம் முறைசாராக் கடன் அதிக அளவில் நிதி வணிகர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விவசாயக் கடனின் அதிகரிப்பு பருவகாலத்தை சார்ந்துள்ளது. பருவமழை தொடங்கியவுடன் விவசாய நடைமுறைகள் உடனடியாக தொடங்கப்படவேண்டிய கட்டாயம் விவசாயிகளுக்கு உள்ளது. பருவம் தவறி பயிர்செய்வது எதிர்பார்க்கிற விளைச்சலைத் தராது. எனவே இதற்கானச் செலவுகளை எதிர்கொள்ள முறைசார் கடனைப் பெறுவதற்கு அதிக நடைமுறைகளும், காலவிரயமும் உள்ளதால் முறைசாராக் கடனைப் பெற விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். உடனடியாகப் பயிர் வேலைகளைத் துவக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால் அதிகப்படியான வட்டியையும் கருத்தில் கொள்ளாமல் முறைசாராக் கடனைப் பெறுகின்றனர். பல்வேறு காரணங்களினால் விவசாய உற்பத்தியில் இழப்பு அல்லது விளைபொருள்களுக்கான விலையின் வீழ்ச்சி போன்றவையினால் விவசாய வருமானம் குறைய நேரிட்டால் கடனைத் திரும்பச் செலுத்த இயலாமல் போகிறது. இது விவசாயிகளின் தற்கொலைக்கான முதன்மைக் காரணமாக உருவெடுக்கிறது. 1990களில் தொடங்கிய விவசாயிகளின் தற்கொலை இன்றுவரை தொடர்ந்துகொண்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு அன்மையில் ஒன்றிய அரசினால் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் (PM-Kisan Samman Nidhi)
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் 1 டிசம்பர் 2018ல் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 நிதி உதவி அளிப்பதற்காகத் துவக்கப்பட்டது. ஒன்றிய அரசு இதற்கான நிதி உதவியினை முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறது. விவசாயிகளுக்கு நிதியுதவியினை நேரடியாகவே வழங்கப்படுகிறது. இத்திட்டம் மூலம் விவசாயிகள் வேளாண் பயிர் வேலைகளைப் பருவ காலங்களில் தொடங்கப்படும்போது எதிர்கொள்ளும் நிதி பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதற்கு உதவுகிறது. ஓவ்வெரு ஆண்டும் சம்பா, குறுவை, கோடை பயிர்களைப் பயிரிடத் தொடங்கும்போது பருவத்திற்கு ரூ.2000 வீதம் விவசாயிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் விதை, உரம், பூச்சிக்கொல்லி, தொழிலாளர் கூலி போன்ற அடிப்படைச் செலவுகள் செய்ய இந்த நிதி உதவி பயன்படும். இந்த திட்டத்தினால் மார்ச் 2022 முடிய 11.78 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர், ரூ.1.82 லட்சம் கோடி இதுவரை (பிப்ரவரி 2022) நிதி உதவியாக அளிக்கப்பட்டுள்ளது (GoI 2022). உத்திரப் பிரதேச மாநிலத்தில் உச்ச அளவாக 22.9 விழுக்காடு இந்திய அளவில் இத் திட்டத்தில் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இந்த திட்டத்தினால் இரண்டுவிதமான நன்மைகளை விவசாயிகள் பெறமுடியும், 1. வருமான உதவியினைப் பெறுதல் 2. வங்கிகளில் குறுகிய, நீண்டகாலக் கடன்களைப் பெறமுடியும். இத்திட்டத்தில் விவசாயிகளின் பங்கேற்பு மிகவும் குறைந்த அளவில் உள்ளது. இதற்கு அடிப்படைக் காரணம், ஆதர் அட்டை, வங்கிக்கணக்கு, நிலத்தின் உரிமையாளர் பெயர் போன்றவை ஒத்துப்போவதில்லை. அதிக அளவிற்கான விண்ணப்பங்கள் ஆண்டுதோறும் பெறப்படுகிறது ஆனால் அவற்றைப் பரிசீலனைச் செய்ய போதுமானப் பணியாளர்கள் இல்லை. இந்த திட்டம் நில உரிமையாளர்களை மட்டுமே கணக்கில் கொள்ளப்படுவதால் குத்தகைதாரர்களுக்கு, கிராமப்புற கூலி விவசாயத் தொழிலாளர்களுக்கு, கிராமப்புற ஏழை குடும்பங்களுக்கு இது பொருந்தாது. இந்தியாவில் நாடு முழுவதும் குத்தகைக்குப் பயிரிடும் முறை பரவலாகப் பின்பற்றப்படுகிறது. இவர்கள் உண்மையான உழுபவர்களாக இருந்தும் இவர்கள் இந்த திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தில் நிதி தொகை பயனாளர்களுக்குச் சென்றடையக் காலதாமதம் ஏற்படுகிறது. இதற்கு அடிப்படையான காரணம் சரியாக பதிவுசெய்யப்படாதது, பெயர்கள் ஒத்துப்போவதது போன்றவை ஆகும். ரூ.6000 ஆண்டுக்கு நிதி உதவி அளிப்பது விவசாயக் குடும்ப வருவாயில் 6.43 விழுக்காடாக உள்ளது. சிறு குறு விவசாயிகள் அதிகமாக இந்த திட்டத்தினால் பயனடைகின்றனர். இது போன்ற திட்டங்கள் பல மாநில அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது (தெலுங்கானாவில் ரித்துபந்து என்ற திட்டம் 10 மே 2018லிருந்து ரூ.10000 ஒவ்வொரு விவசாயக் குடும்பங்களுக்கும் நிதி உதவியாகச் செயல்படுத்தப்படுகிறது, ஆந்திரப் பிரதேசத்தில் ரிதுபரோசா 15 அக்டோபர் 2019லிருந்து ஒவ்வொரு விவசாயக் குடும்பத்திற்கும் ரூ.13500 நிதி உதவி அளிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது, ஒடிசாவில் காலியா என்ற திட்டம் டிசம்பர் 2018லிருந்து ஒவ்வொரு விவசாயக் குடும்பத்திற்கும் ரூ.10000 நிதி உதவி அளிக்கப்படுகிறது, மேற்கு வங்காளத்தில் விவசாயிகளின் நண்பன் என்ற திட்டம் வழியாக 1 ஜனவரி 2019ல் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் ரூ.5000 நிதி உதவி வழங்கப்படுகிறது, சத்தீஸ்கர் மாநிலத்தில் ராஜிவ் காந்தி கிஷன் நியாய என்ற திட்டம் 3 மார்ச் 2020ல் ரூ.1000 – ரூ.13000வரை ஒவ்வொரு விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கப்படுகிறது) (Kavitha et al 2021).
விவசாயக் கடன் வாங்கும் குடும்பங்களின் மொத்தத்தில் மூன்றில் இரண்டு பங்கு முறைசார்க் கடனாகப் பெறப்படுகிறது (2018-19ல்). குறிப்பாகப் பெரிய நில உடைமையாளர்கள் 80 விழுக்காடுவரை முறைசார்க் கடனாகப் பெறுகின்றனர் ஆனால் சிறிய நில உடைமையாளர்கள் 28 விழுக்காடுவரை முறைசார்க் கடனைப் பெறுகின்றனர். பெறுகின்ற மொத்தக் கடனில் மூன்றில் ஒரு பங்கு பயிர் தொழிலைச் செய்யவும், ஐந்தில் ஒரு பங்கு நுகர்வுச் செலவிற்கும், 5 விழுக்காடு திருமணம், சடங்குகள், கல்வி, மருத்துவம் போன்ற செலவுகளை மேற்கொள்கின்றனர் (Kavitha et al 2021). விவசாயக் கடனுக்கும், வேளாண் உற்பத்திக்கும், விவசாயிகளின் தற்கொலைகளுக்கும் நெருங்கியத் தொடர்புள்ளது. விவசாயிகளின் தற்கொலையினால் தனிப்பட்ட குடும்பம் மட்டுமல்ல இந்தியப் பொருளாதாரமும் அதிக அளவில் பாதிப்பிற்கு உள்ளாகிறது.
விவசாயிகள் தற்கொலை
இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை அதிக அளவில் கடந்த 25 ஆண்டுகளாகக் காணப்படுகிறது. விவசாயத் தற்கொலை என்பது விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலிகள் இரண்டையும் சேர்த்தது என்கிறது தேசியக் குற்றப் பதிவு பணியாக்கம் (National Crime Records Bureau – NCRB). விவசாயிகள் தற்கொலைக்கு அடிப்படைக் காரணம் கடன் திரட்சியாகும் (Debt Accumulation). பசுமைப் புரட்சிக்குப்பின் வேளாண்மையில் இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அன்மைக் காலங்களாகப் பல்வேறு காரணங்களை முன்னிருத்தி வேளாண் தொழிலிருந்து அதிக அளவிற்கு விவசாயிகள் வெளியேறி மாற்று வேலைகளுக்கு (வேளாண் சாரா) செல்வதால், தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. மேலும் வேளாண்மைக்குப் பயன்படுத்தும் கால்நடைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவருவதால் உழவு உள்ளிட்டப் பணிகளுக்கு இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இயந்திரம் பயன்படுத்துவதால் (குறிப்பாக நெல் கோதுமை போன்ற பயிர்களுக்கு) மொத்த உற்பத்திச் செலவில் 5 விழுக்காடு அளவிற்குக் குறைகிறது என்பது ஆய்வில் தெரிகிறது. வேளாண் இயந்திரங்கள் அனைத்து விவசாயிகளும் வைத்திருப்பதில்லை. குறு சிறு விவசாயிகள் வாடகைக்கு இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர் பெரிய மற்றும் நடுத்தர விவசாயிகள் இயந்திரங்களைச் சொந்தமாகக் கடனில் வாங்குகின்றனர். இக்காரணங்களினால் விவசாயக் கடனளவு அதிகரிக்கிறது (Avinash Kishore et al 2022).
2013ல் தெலுங்கானாவில் 89 விழுக்காடு விவசாயிகள் கடன் தொல்லையினால் தற்கொலை செய்துகொண்டனர். கர்நாடகாவில் இதே காரணத்திற்காக 77 விழுக்காடு விவசாயிகளும், மகாராஷ்டிராவில் 56 விழுக்காடும், மத்தியப் பிரதேசத்தில் 46 விழுக்காட்டினரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்தியாவில் மொத்த விவசாயத் தற்கொலையில் கடனின் காரணமாக 52 விழுக்காட்டினர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தொடர்ந்து பயிர்த் தொழிலில் வருமான இழப்பு, நுகர்ச்சிக்காக் கடன் வாங்குவதால் போன்றவற்றால் கடனில் விழ நேரிடுகிறது. இதனால் அதிக கடன் திரட்சியினால் தற்கொலை முடிவிற்கு விவசாயிகள் தள்ளப்படுகின்றனர். சுக்பூல் சிங், மஞ்சீத் கவுர் மற்றும் கிங்ரா (2021) ஆகியோர் பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகளின் தற்கொலைகள் பற்றி ஆய்வு செய்தனர். இவ் ஆய்வின்படி 2000-2018ஆம் ஆண்டுகளுக்கிடையே 79 விழுக்காடு விவசாயிகள் கடன் தொல்லையினால் தற்கொலை செய்துகொண்டனர் என்றும், 21 விழுக்காடு விவசாயிகள் பிற சமூக பொருளாதாரக் காரணங்களுக்காகத் தற்கொலை செய்துகொண்டனர் எனவும் கண்டறிந்தனர். மேலும் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளில் 82.6 விழுக்காட்டினர் தாழ்த்தப்பட்டோர் என்றும், 65.85 விழுக்காட்டினர் பூச்சி மருந்து உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், மொத்த தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளில் 92.63 விழுக்காடு முறைசாராக் கடன்களை நிதி வணிகர்கள், நிலச்சுவான்தாரர்கள், நண்பர்கள், உறவினர்கள் போன்றோரிடம் கடன் பெற்றவர்கள் ஆவார்கள். தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளில் 63.84 விழுக்காட்டினர் கல்வியறிவு அற்றவர்களாக இருந்தனர், 85 விழுக்காட்டினர் 18லிருந்து 50 வயதுக்குள் இருந்தனர். இவ்வாய்வின் ஒரு முக்கிய வெளிப்பாடு பாதி அளவிற்கான (49.66 விழுக்காடு) தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பங்களில் விவசாயி தற்கொலை செய்துகொண்டபின் வருமானம் ஈட்டும் நபர்கள் யாரும் இல்லை என்பதாகும். பஞ்சாப் அரசின் நேரடி நிதி உதவி மூலம் 95 விழுக்காடு விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது (Avinash Kishore et al 2022).
விவசாயத் தற்கொலை இந்தியாவில் முதன்முதலில் 1960களிலும் 1970களிலும் தமிழ்நாட்டில் காணப்பட்டது. 1990களில் இந்தியாவில் பல மாநிலங்களில் இந்த நிகழ்வுகள் ஏற்படத்துவங்கியது. குறிப்பாக ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப் மாநிலங்களில் விவசாயிகளின் தற்கொலை உச்ச அளவாக அறியப்படுகிறது. இம் மாநிலங்களின் விவசாயிகளின் தற்கொலை இந்தியாவின் மொத்த விவசாயிகளின் தற்கொலையில்; 90 விழுக்காடாக உள்ளது. இதிலும் குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள விதர்பா பகுதியில் தற்கொலைகள் அதிக அளவில் காணப்பட்டது. 2014ல் சராசரியாக ஒரு நாளைக்கு 15 விவசாயிகள் தற்கொலை நிகழ்ந்தது இது 2015ல் 21 தற்கொலைகளாக அதிகரித்தது (Sukhpal Singh et al 2021). 2020ல் மொத்தம் 10677 விவசாயத் தற்கொலைகள் நடந்துள்ளது இது 2019விட அதிகமாக (10281) உள்ளது. தேசியக் குற்றப் பதிவு பணியாக்கம் புள்ளி விவரத்தின்படி 1995-2019 ஆண்டுகளுக்கிடையே மொத்தம் 3,58,164 விவசாயத் தற்கொலைகள் நடந்துள்ளது. இவ்விரு ஆண்டுகளில் நடந்த நாட்டின் மொத்த தற்கொலைகளில் விவசாயத் தற்கொலைகள் 12.53 விழுக்காடாக உள்ளது. 1995ல் நாட்டின் மொத்த தற்கொலையில் விவசாயத் தற்கொலைகள் 13.43 விழுக்காடாக இருந்தது 2004ல் 16.3 விழுக்காடாக அதிகரித்தது இது 2019ல் 7.61 விழுக்காடாகக் குறைந்துள்ளது. விவசாயத் தற்கொலை வீதம் (1 லட்சம் மக்கள் தொகைக்கு) 1995ல் 5.3ஆக இருந்தது 2001ல் 7.1ஆக அதிகரித்தது இது 2011ல் 5.3ஆக மீண்டும் குறைந்தது, 2018ல் இது மேலும் குறைந்து 3.6ஆக இருந்தது (Sthanu R Nair 2022)
1990களில் இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலை அதிக அளவில் நிகழந்தது. 2010-2016ஆம் ஆண்டுகளுகிடையே நடந்த தற்கொலைகள் 2000-2010ஆம் ஆண்டுகளுக்கிடையே நடைபெற்ற தற்கொலைகளைவிட மூன்று மடங்கு அதிகமாக இருந்தது. 1990களின் கடைசியில் விவசாயிகளின் தற்கொலையினைத் தடுக்க நிவாரண தொகுப்பு வழங்கப்பட்டது.Mjhuk;: GoI (2021): “Accidental Death and Suicides in India 2020,” National Crime Record Board, Government of India.
ஆனால் இது சரியான முறையில் நடைமுறைப்படுத்தவில்லை. எனவே விவசாயிகளின் தற்கொலைகளை இது தடுக்கத் தவறிவிட்டது. அதே சமயம் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களும், வேளாண் பொருள்களுக்குத் தகுந்த விலை கிடைக்காததாலும், விவசாய இடுபொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்ததும் விவசாயிகளின் தற்கொலைகள் தொடர்ந்து நடைபெறக் காரணமாக அமைந்தது. 2006ல் விவசாயிகளுக்கான புனர்வாழ்வு தொகுப்பு அதிக அளவில் விவசாயிகள் தற்கொலை நடந்த மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. 2008ல் வேளாண் கடன் துடைப்பு மற்றும் கடன் நிவாரண திட்டம் (ADWDRS) துவக்கப்பட்டு கடன் வழங்கப்பட்டது. ஆனால் இதுவும் தேவைப்படுபவர்களுக்குக் கடன் அளிக்கவில்லை. பிரதம மந்திரி ஃபசல் பீமா யோஜனா 2016ல் துவக்கப்பட்டு விவசாயிகளுக்குக் காப்பீட்டு மூலம் பயிர் இழப்பீட்டு நிவாரணம் வழங்கப்பட்டது. ஆனால் 2016 நவம்பரில் பணமதிப்பீட்டு இழப்பு கொண்டுவரப்பட்டதால் உயர் மதிப்புடைய பணமான ரூ.500, ரூ.1000 செல்லாமல் போனது. இந்த காலகட்டம் விவசாயிகளின் குறுவை பருவப் பயிர்செய்யும் நேரம் என்பதால் விவசாயிகள் பெரும் இன்னலுக்கு ஆளானார்கள். இதனைத் தொடர்ந்து சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு 2017ல் நடைமுறைப்படுத்தப்பட்டது இதன் விளைவு விவசாய இடுபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது. 2019ல் உருவான கோவிட் பெருந்தொற்றினால் பல மாநிலங்களில் விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவியது, விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டதால் வேளாண் பொருட்கள் சந்தை படுத்த இயலாமல் போனது இதனால் விவசாயிகள் பெரும் இழப்பிற்கு உள்ளானார்கள். 2020ல் கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் மத்தியில் பெரிய எதிர்ப்பினை உருவாக்கியது. குறைந்தபட்ச ஆதார விலையினை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டம் சுமார் ஓர் ஆண்டிற்கு நடத்தப்பட்டதால் 2021ல் இந்த சட்டங்கள் ஒன்றிய அரசினால் திரும்பப் பெறப்பட்டது. தற்போது (2022ல்) உக்ரைன்-ரஷ்ய போரினால் உணவு, எரிபொருள் தட்டுப்பாட்டினால் உணவு பணவீக்கம் அதி அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனைக் காரணம் காட்டி கோதுமை ஏற்றுமதியினை ஒன்றிய அரசு தடைசெய்துள்ளது.
இவ்வாறு தொடர்ந்து பல்வேறு அரசு கொள்கைகள், இயற்கைச் சீற்றம் போன்ற காரணங்களினால் விவசாயிகள் பெருமளவிற்குப் பாதிக்கப்படுகின்றனர் இதன் விளைவு தற்போதும் விவசாயத் தற்கொலைகள் ஆண்டிற்குச் சராசரியாக 10000க்கு மேல் தொடர்ந்துகொண்டுள்ளது. இதனைத் தடுக்க அரசு வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச விலை அனைத்து விவசாய உற்பத்திப் பொருட்களுக்கும், அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க வழிவகை செய்யவேண்டும். குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யப்படும்போது வேளாண் உற்பத்திச் செலவான C2+10% உடன் எம்.எஸ்.சாமிநாதன் பரிந்துரையான 50% செலவினைக் கணக்கில் கொண்டு நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அரசு பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்து விவசாயிகளுக்கான கடன் அளித்தாலும் தற்போதும் மூன்றில்-ஒரு பங்கு விவசாயிகள் முறைசாராக் கடனைப் பெறுகின்றனர் எனவே தனியார் கடனையும், வட்டியையும் முறைப்படுத்தவேண்டும். விவசாயக் கடன்களைத் தக்க நேரத்தில் நீக்குப்போக்குடன் எளிய வழிமுறைகளைக் கையாண்டு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இதுபோன்று விவசாயிகள் பயிர் தொழிலில் அதிக இழப்பினைச் சந்திக்கின்றனர் இதனைத் தடுக்க வேளாண் ஆராய்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் (தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 விழுக்காட்டிற்குக் கீழ் ஒதுக்கப்படுகிறது).
References :
Avinash Kishore, Suriti Saini and Muzna Alvi (2022): “Assessing Direct Benefit Transfer of Agricultural Subsidies in Bihar and Odisha,” Economic and Political Weekly, Vol 57 (16), pp 36-42.
Dayandev C Talule (2021): “Sucide by Maharashtra Farmers: The Signs of Persistent Agrarian Distress,” Economic and Political Weakly, Vol 56 (51), pp 46-55.
Dipanjana Roj (2021): “Farmer Suicides in India, 1997-2013 Taking Stock of Data, Arguments and Evidence,” Economic and Political Weekly, Vol 56 (5), pp 50-60.
Economic and Political Weekly, Editorial (2021): “Government Policies Drive Farmars to Penury,” Economic and Political Weekly, Vol 56 (38), p 7.
GoI (2022): “Three Years of Pradhan Mantri Kisan Samman Nidhi (PM-KISAN) – Press Information Burea,” Ministry of Infromation and Broadcasting, March 11, 2022, Government of India.
Kavitha H N, Pramod Kumar, P Anbukkani, R R Burman and P Prakesh (2021): “Income Support Schemes: Evaluation of PM Kishan vis-à-vis State Government Scheme,” Economic and Political Weekly, Vol 56 (34), pp 13-17.
NABARD (2018): “All India Rural Finanical Inclusion Survey 2016-17,” National Bank for Agriclture and Rural Development, Mumbai.
Niharika Pandya, Divya Veluguri, Aditi Roy, Poornima Prabhakaran and Linasay M Jaacks (2021): “Economic Impact of the 2020 COVID – 19 Lockdown on Indian Farmers,” Economic and Political Weekly, Vol 56 (50), pp 31-34.
Pradynt Guha and Tiken Das (2022): “Farmer’s Suicides in India,” Economic and Political Weekly, Vol 57 (5), pp 13-16.
Shromona Ganguly Mohua Roy (2021): “Development Banks and the changing Contour of Industrial Credit in India,” Economic and Political Weekly, Vol 56 (49), pp 50-57.
Shubham Sehal (2021): “Banking Sector Reforms of 1991 and Agricultural Credit,” Economic and Political Weekly, Vol 56 (50), p 5.
Sthanu R Nair (2022): “Rethinking Agrarin Susides in India,” The Indian Express 8.4.2022.
Sukhpal Singh, Manjeet Kaur and H S Kingra (2021): “Agrarian Crisis and Agricultural Labourer Suicids in Punjab,” Economic and Political Weekly, Vol 56 (13), pp 49-56.