பிஎம் ஸ்ரீ பள்ளிகள் தேசிய கல்விக் கொள்கையின் சோதனை எலிகள் – பொ.இராஜமாணிக்கம்
(PM ScHools for Rising India: PM SHRI)
ஒன்றிய அரசு ஆதரவில் சுமார் 14500 பிஎம் ஸ்ரீ பள்ளிகள் (முன்னேறும் இந்தியாவுக்கான பிரதமரின் பள்ளிகள்) என்ற பெயரில் பிரதமர் அறிவித்ததற்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
வழக்கம் போல எல்லாத் திட்டதிற்கும் சம்ஸ்கிருதத்தில் பெயர் வைப்பது போல ( கல்விக் கொள்கையால் உருவாக்கபப்ட்ட பிற திட்டங்கள்: தீக்ஷஷா , ஸ்வயம்) இந்தத் திட்டத்திற்கு வைக்கப்பட்டுள்ள பெயர் என்பதும் ஸ்ரீ என்ற சமஸ்கிருதப் பெயர் ஆகும். அதன் பின்னர் ஆங்கிலத்தில் விரிவாக்கி பெயர் வைத்திருக்கிறார்கள்.
இந்த புதிய திட்டம் தற்போது மத்திய / மாநில / யூனியன் பிரதேச அரசுகள் / உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில் தெரிவு செய்யப்பட உள்ளன. ஒன்றியத்திற்கு / நகராட்சிக்கு இரண்டு பள்ளிகள் என தேர்வு செய்யபப்டும். இதில் ஒன்று ஆரம்ப / நடுநிலைப்பள்ளி மற்றொன்று உயர்நிலை/ மேநிலைப்பள்ளி என வரையறுக்கப்படுள்ளது.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதயா வித்யாலயா பள்ளிகள், சமக்ரா சிக்ஷா ஆகியவற்றுக்கு தற்போதுள்ள நிர்வாக கட்டமைப்பின் மூலம் பிஎம் ஸ்ரீபள்ளிகள் திட்டம் அமல்படுத்தப்படும். தேவைப்பட்டால் குறிப்பிட்ட திட்ட அடிப்படையில் மற்ற தன்னாட்சி அமைப்புகள் ஈடுபடுத்தப்படும்.
இந்தப் பள்ளிகளுக்கு மொத்தச் செலவு ரூ.27,360 கோடியாக இருக்கும். இதில் 2022-23 முதல் 2026-27 வரையிலான ஐந்து ஆண்டு காலத்திற்கு மத்திய அரசின் பங்கு ரூ.18,128 கோடியாக இருக்கும். தேசிய கல்விக்கொள்கை 2020ன் அனைத்து அம்சங்களையும் அமுல்படுத்தும் பள்ளிகளாக பிஎம் ஸ்ரீ பள்ளிகள், முன்மாதிரியாகச் செயல்படும்.18 லட்சம் மாணவர்களுக்கு மேல் நேரடியாகவும் இதனைச் சுற்றியுள்ள பள்ளிகளின் ஆலோசனை வழிகாட்டுதல் மூலம் மேலும் பல பள்ளி மாணவர்கள் பயன்பெறுவர் எனக் கூறப்படுகிறது.
முக்கிய பத்துக் கட்டளைகள்:
1) தேசியக் கல்விக் கொள்கை-2020 ஐ அமுல்படுத்திக் காட்ட வேண்டும்.
2) மாணவர்களின் சேர்க்கை கற்றல் மேம்பாடு ஆகியவற்றின் பதிவு செய்யப்பட வேண்டும்.
3) நடுநிலை மானவர் 21ம் நூற்றாண்டின் திறன்களுக்கு தயார்ப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். உயர்நிலை மாணவர் ஏதேனும் ஒரு திறனோடு வெளி வர வேண்டும்.
4) விளையாட்டு, கலை, தகவல் தொழில்நுட்ப தொடர்புத் திறன் வழங்கப்பட்டு இருக்க வேண்டும்.
5) நிலைத்தகு பசுமைப் பள்ளியாக இருக்க வேண்டும்.
6) இப்பள்ளி ஒவ்வொன்றும் உயர்கல்வி நிலையத்தின் வழிகாட்டுதலுக்கு இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
7) அருகில் உள்ள தொழிலுற்பத்தி நிறுவனத்துடன் தொடர்பு கொண்டிருக்க வேண்டும்.
8) நன் மனோ நிலை வேலை வாய்ப்பிற்கான ஆலோசனைகள் வழஙகபப்ட வேண்டும்.
9) ஒவ்வொரு மாணவனும் இந்திய பாரம்பரியம் அறிவு ஆகிய வேர்களோடு இணைக்கப்பட்டு பாரத நாட்டின் நாகரீகம் சார்ந்த மாண்புகள் வளர்க்கப்பட வேண்டும். எல்லோரையும் உள்ளடக்கிய சமத்துவ வேற்றுமையில் ஒற்றுமைக் குணம், சேவை மனப்பான்மை, ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற முழக்கத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லும் உத்வேகம் வேண்டும்.
10) நல்ல குணாம்சங்கள், குடிமகனுக்குரிய மதிப்பீடுகள், அடிப்படைக் கடமைகள் தேசத்தைக் கட்டமைக்கும் பொறுப்புணர்வு மிக்கவர்களாக உருவாக்குதல் வேண்டும். அனைத்து வகையான குழந்தைகள் வளர்ச்சியையும் உள்ளடக்கிய இயக்கமாக பள்ளி இயங்கும்.
சில கேள்விகள்:
1) ஏற்கனவே ஒன்றியத்திற்கு ஒரு ஆதர்ஷ் பள்ளி என்ற மாதிரிப் பள்ளிகள் 15000 பள்ளிகள் ஆரம்பிக்கப்படும் என டிச..2021ல் அறிவித்த போது தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் எதிர்ப்பு ஏற்பட்டு அது தான் தற்போது பிஎம் ஸ்ரீ பள்ளிகளாக மாற்றி பழைய கள் புதிய மொந்தை என பெயர் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது என்பதை அறியாதவர்கள் யார்?
2) பிஎம் ஸ்ரீ பள்ளிகள் என்பது தேசியக் கல்விக் கொள்கையை அமுல்படுத்த ஏற்கனவே உள்ள பள்ளிகளை தேர்ந்தெடுத்து தேசியக் கல்விக் கொள்கையை இப்பள்ளிகள் அமுல்படுத்த வேண்டும் என்று கூறுவது இக் கொள்கையை ஒன்றிய அரசு திணிக்க முயற்சி செய்கிறது என்பதாகத் தானே கொள்ள வேண்டும்? அப்படியானால் தேசியக் கல்விக் கொள்கையைச் சோதிக்கும் சோதனை எலிப்பள்ளிகளா இவைகள் என்று தானே கேட்கத் தோன்றுகிறது.
3) தேசியக் கல்விக் கொள்கை ஒன்றிய அரசின் சட்டமல்ல. தற்போதைய ஆளும் அரசின் கொள்கையாகும். ஆட்சி மாறும் போது இந்தக் கொள்கை கைவிடப்பட்டால் இந்தப் பள்ளிகளின் கதி என்ன?
4) தேசியக் கல்விக் கொள்கையை அமுல்படுத்தாவிட்டால் இப்பள்ளிகள் அம்மாநிலத்திற்கு வழங்கப்படமாட்டாது என்ற அச்சுறுத்தல் தமிழ்நாடு போன்ற மாநிலங்களை பணிய வைக்கவோ அல்லது விலக்கி வைக்கவோ தானே செய்யும். இதுவும் ஜனநாயகத்திற்கு முரணானது தானே?
5) கேந்திரிய வித்யாலயா, நவோதயப்பள்ளிகள் ஆகியன மைய அரசின் கல்வி அமைப்பின் கீழ் இயங்கி வருவதால் அப்பள்ளிகள் இத் திட்டத்தில் இணைவதில் பிரச்சினைகள் இருக்கப்போவதில்லை. ஆனால் தற்போது மாநில அரசின் கல்வித் திட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளிகள் பிஎம் ஸ்ரீ பள்ளிகளாக மாற்றப்படும் பொழுது இரு வேறுபட்ட பள்ளிகளாக மாநில அரசு நடத்த முடியுமா ?
6) நிதியில் 60% சதவீத நிதியை ஒன்றிய அரசு வழங்குவது எனக்கூறுவதால் மீதியை மாநில அரசு கொடுக்க வேண்டும் எனில் மாநில கல்வி பட்ஜெட்டில் பிற பள்ளிகளுக்கு பட்ஜெட் இழப்பு ஏற்படாதா? மாநில அரசின் சமமான அணுகுமுறைக்கு வேட்டு வைப்பது போல் இல்லையா?
7) கல்விப் பொதுப்பட்டியலில் இருக்கும் போது 40% நிதியை மாநில அரசு வழங்கும் போது மாநிலங்களை தேசியக் கல்விக் கல்விக் கொள்கையை அமுல்படுத்த நிர்பந்திப்பது மாநில உரிமையைப் பறிக்கும் செயல் அல்லவா?
8) கேந்திரிய, நவோதயா , அர்சுப் பள்ளிகள் தவிர பிற் அமைப்பின் பள்ளிகளுக்கு வழங்கப்படும் என்பது தனியார் பள்ளிகளும் இத் திட்டத்தில் இணைவதற்கு வாய்ப்புக் கொடுக்கிறதல்லவா?
9) தமிழ்நாடு அரசு ஏற்கனவே தகைசால் பள்ளிகள் (26 பள்ளிகள்), மாதிரிப்பள்ளிகள்(15 பள்ளிகள்) டெல்லி அரசின் மாதிரிப் பள்ளிகளை பின்பற்றி நடத்தத் திட்டமிட்டுள்ளது. இது திராவிட மாடல் பள்ளிகளாகச் செயல்படும் எனும் போது ஒன்றிய அரசின் ஆளும் கட்சியின் பாரதீய மாடல் பள்ளிகளை தமிழ்நாடு, டெல்லி போன்ற மாநிலங்கள் நிராகரிக்க வாய்ப்பு உள்ளது என்றால் அனைவரையும் உள்ளடக்கிய நாட்டின் வளர்ச்சி என்ற பிரதமரின் கொள்கை கேள்விக்குறியாகாதா?
பொ.இராஜமாணிக்கம்,
முன்னாள் பொதுச் செயலாளர்,
அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு