“தீக்குள் விரலை வைத்தால்” கவிதை – சாந்தி சரவணன்
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா
உன்னைத் தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலா!
என அன்றே உயிலெழுதி வைத்துச் சென்ற
மிடுக்கு மீசைக்காரன் என் பாட்டன் பாரதியே!
நான் உன்னிடம் சொல்ல
ஒரு செய்தி கொண்டு வந்துள்ளேன்!
அதை செவி கொடுத்துக் கேள்!
தீக்குள்ளும் ஒரு இன்பமுன்டு என நீ பறைசாற்றியதைக்
கேட்க இன்றைய அவசர சமூகத்திற்கு நேரமில்லை!
நீ எழுதிய கவி உயிலை தொலைத்து விட்டு
இன்று தென்றல் தீண்டுமின்பத்தையும்
அதனுள் புதைந்துள்ள நந்தலாலாவையும்
காணாமல், அறியாமல், தத்தளிக்கிறது!
அவசர அவசரமாகப் பறந்து கொண்டே இருக்கிறது இந்த மனிதகுலம்!
தீப் பிழம்பைத் தீண்டி, சுவாசித்து நேசித்து, யாசித்தவன், நீ!
தீப் பிழம்பை மென்று அதன் வெப்பத்தை விழுங்கி
இன்பத்தை அனுபவித்தவன் நீ!
நீ அறிந்திருந்ததைக் கவி ஓவியமாக
எங்கள் தலையில் ஏற்றிச் சென்றதை மறத்துவிட்டோமே நாங்கள்!
மறந்ததைக் கல்லில் சிற்பி சிற்பத்தைச் செதுக்கி உயிர்ப்பிப்பது போல்
உன் எழுதுகோல் கொண்டு எழுத மீண்டும் பிறந்து வா பாரதி!
தொன்மையான தமிழ்மொழி “தமிழி” என்கிறது
“கீழடி அகழ்வாராய்ச்சி !
தண்ணீர் கலந்த பாலில் பாலை மட்டும் அருந்துகிறது
அன்னப் பறவை!
நல்லவற்றை மட்டுமே பார்க்கக் கற்றுக் கொள்ளும்
உளவியல் வித்தையை
எங்களுள் விதைகளாக விதைக்க
அக்கினிபிழம்பே அவசியம் வா.
திருமதி. சாந்தி சரவணன்
கைபேசி : 9884467730