கவிதைச் சந்நதம் 25 நா.வே.அருள்

கவிதைச் சந்நதம் 25 நா.வே.அருள்




                                                                                                                                                    ஒரு புதிய திசைக்காட்டிக் கருவி
                                                                                                                                                       *******************************************

தேர்ந்த கவிதையைப் படிக்கையில் கவிஞரின் திறன் தெரிந்துவிடும்.  பொங்கல் கவிதை என்று கொஞ்சம் தண்ணீர், கொஞ்சம் பால், கொஞ்சம் முந்திரி என்று பானையில் போட்டு சூரியனைக் கும்பிட்டுச் சூடேற்றுவதா?  அடுப்பு நெருப்பு அறியாது பொங்கல் சுவை. ஆனால் பொங்கலைச் சுவைக்கிற போது வாசகனின் கண்களை முகர  வைத்து விடுகிறது….. பொங்கலுக்குள் ஊறியிருக்கும் மண்ணின் மணம்.

கவிஞனின் கவிதைத் தாளும் ஒரு பொங்கல் பானைதான்.  அதனுள் வார்த்தைகள் முந்திரிகளைப்போல ஊறி விடுகின்றன.  ஒரு விண்டு விண்டி வாயில் சுண்டுகிறபோதே கவிதையின் சுவையில் கண்கள் செருகும்.

பொங்கலின்  சுவை அரிசியிலா?   முந்திரியிலா?  பாலிலா?  எதில் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?  அதற்கென்று சூத்திரம் கிடையாது.  ஆனால் சுவையின் கலவை ஒரு சூட்சுமம்.  கவிதையிலும் அப்படித்தான்.  சுவை எதில் இருக்கிறது?  வார்த்தையிலா?    படிமத்திலா?   அந்தக் கவிதைக் கென்றே அமைந்த இசை யொழுங்கிலா?  கவிதை  வீணையில் வார்த்தைத்  தந்திகள்  கட்டப்பட்டிருக்கும் இறுக்கத்திலா?   ஆனால் ஒரு கவிஞன் கவிதையின் சுவையை ஏதோ ஒரு வகையில் எங்கோ பொதிந்து வைக்கிறான்.

மார்கழி மொட்டு, மார்கழி மணம், மார்கழிப் பழம், மார்கழிக் கொடி, மார்கழி மலர், மார்கழிப் பிஞ்சுகள் என ஒரு தாவரத்தையே கவிதையாக ஆவணப் படுத்திவிடுகிறான்.  கடைசியில் அந்த கவிதைக் கொடியைத் தனது கவிதைத் திரைச் சீலையில் ஒரு பெண்ணாகச் சித்திரம் தீட்டிவிடுகிறான்.  மாதங்களில் அவள் மார்கழி  இவரது கவிதையில் மொட்டாக மாறுகிறது.   பின்பு அது  வே தையாக மலர்கிறது. புன்னகை பொங்கலாகி விடுகிறது.

மளிகைக் கடையில் இரும்புச் சாமான்களைப் பொட்டலம் கட்டிக் கொடுப்பதைப் போல இந்தக் கவிதையில் ஒரு கனமான பொருளை அநாயசமாக அள்ளித் தருகிறார்.  பொட்டலத்தின் எடை  தாங்காமல் உள்ளே இருப்பதை மெல்ல அவிழ்த்துப் பார்க்கிறோம்…

“நடைபாதைக் குளிரில் தாயின் கிழிந்த சேலைக்குள்
முடங்கிக் கிடக்கின்றது ஒரு
மார்கழி மொட்டு!”

தாயின் கிழிந்த சேலையைக் கண்டு கவிதையின் மார்பகம் கசிகிறது.  அந்தத் தாயின் அணைப்பிற்குள் குளிரில் முடங்கிக் கிடக்கும் ஒரு மொட்டுக்காக மார்கழி தனது பனியை நெருப்பின் புகையாக மாற்ற நெஞ்சம் துடிக்கிறது மார்கழி மாதம்.

ஒரு கிராமத்தின் அதிகாலை ஒலிபெருக்கியில் பக்தி வெள்ளம்  பாய்ந்துகொண்டிருக்கிறது.  கோலம் போடும் பெண்களின் செவிகளில் மௌனமான  கோலாகலமாய் அந்த ஒலி.  செவியின் ஒலி மூக்கின் மணமாகிறது.  இது கவிதையின் ரசவாதம்.

“துயிலும் பாவையரை எழுப்புகிறது
கோவில் கோபுர ஒலிபெருக்கியிலிருந்து வீசும்
மார்கழி மணம்!”

எவ்வளவு போர்த்தினாலும் கிழவன் போர்த்தியிருக்கும் கிழிந்த போர்வைக்குள் எப்படியோ நுழைந்துவிடுகிறது இரவெல்லாம் துணையிருக்கும் இருமல்!
“திண்ணையில் முக்காடு போட்டபடி
முட்டிகள் இரண்டும் முகவாய்த் தாடையில் இடிக்க
தொடர் இருமலில் பின்னணி இசை சேர்க்கிறது
மார்கழி பழம்!”

தீட்டிய மார்கழிச் சித்திரத்தின் சிந்திய  வண்ணங்களாக அங்கங்கும் தீமூட்டிக் குளிர் காய்ந்து கொண்டிருக்கும் சிறுவர்கள்.
“சுள்ளிகளையும் ஓலைகளையும் தீமூட்டி
சுற்றிலும் அமர்ந்து குளிர் காய்கின்றன
மார்கழிப் பிஞ்சுகள்!”

மார்கழித் திரைச் சீலையில் இத்தனை ஓவியங்களையும் தீட்டிய ஒருத்தி ஒன்றும் தெரியாத பாவனையில் இரவின் ஒரு ஓரத்தில்  உட்கார்ந்து கொண்டிருக்கிறாள்.  அவள்தான் தை  மங்கை என்று அறிமுகப்படுத்துகிறான் கவிஞன்.
“மார்கழிப்பனியைச் சிறிது சிறிதாய்ச் சேகரித்து
மகிழ்ச்சி கலந்து செய்த பால்பனிக்குழைவைப்
பொங்கல் நன்னாளில் உங்களுக்குத் தர
எப்போது விடியுமெனக் காத்திருக்கிறாள்
தை மங்கை!”Poetry Sannatham Kavithai Thodar (Series 24) By Poet Na. Ve. Arul. Book Day, Bharathi Puthakalayam கவிதைச் சந்நதம் 24 நா.வே.அருள் . அன்பழகன்

இனி முழுக் கவிதை…

நடைபாதைக் குளிரில் தாயின் கிழிந்த சேலைக்குள்
முடங்கிக் கிடக்கின்றது ஒரு
மார்கழி மொட்டு!

துயிலும் பாவையரை எழுப்புகிறது
கோவில் கோபுர ஒலிபெருக்கியிலிருந்து வீசும்
மார்கழி மணம்!

திண்ணையில் முக்காடு போட்டபடி
முட்டிகள் இரண்டும் முகவாய்த் தாடையில் இடிக்க
தொடர் இருமலில் பின்னணி இசை சேர்க்கிறது
மார்கழி பழம்!

குளித்து வண்ண உடை உடுத்தி
வாசல் தெளித்துக் கோலமிட்டு ஈரத் தலையோடு
கோலம் போடுகின்றது ஒரு
மார்கழிக் கொடி!

ஏற்கனவே மணமானவனை
மாலையிட்டு மணாளனாக்கிக் கொள்ள
பாசுரம் பாடுகின்றது ஒரு
மார்கழி மலர்!

சுள்ளிகளையும் ஓலைகளையும் தீமூட்டி
சுற்றிலும் அமர்ந்து குளிர் காய்கின்றன
மார்கழிப் பிஞ்சுகள்!

மார்கழிப்பனியைச் சிறிது சிறிதாய்ச் சேகரித்து
மகிழ்ச்சி கலந்து செய்த பால்பனிக்குழைவைப்
பொங்கல் நன்னாளில் உங்களுக்குத் தர
எப்போது விடியுமெனக் காத்திருக்கிறாள்
தை மங்கை!

ஒரு கவிதை காட்டில் பயணம் செய்து கொண்டேயிருந்து திடீரென வளைந்து ஒரு புதிய சாலைக்குள் நுழைவது மாதிரி தனது கடைசி வரிகளில் புதிய திருப்பத்தை அமைத்திருக்கிறான் கவிஞன்.

காட்டையே துவம்சம் செய்துவிடுகிற ஒரு பெரிய மிருகம் ஒரு கயிற்றுக்குக் கட்டுப்பட்டுக் கிடக்கிறது.
“முட்டித் தள்ளி  முட்டித் தள்ளி
மரத்தையே சாய்த்துவிடும்
பலம் கொண்ட யானையை
மரத்திலலேயே
கட்டிவைத்திருக்கிறீர்கள்
அதுவும் சாதுவாக இருக்கிறது”

என்ன காரணமாக இருக்கும்?  இவ்வளவு பிரம்மாண்டமான உருவத்தின் காதுகளுக்குள் ஓர் எறும்பு நுழைந்து மரணத்தைத் தந்து விடுகிறதே எப்படி?   அது சரி. அதற்குள் எப்படி நுழைந்தது பயம் என்னும் எறும்பு?
“ஒரு சிறு குச்சியைக் காட்டி
அதனை மிரட்டுகிறீர்கள்
அச்சத்துடன் உங்களிடம்
அடங்கிப் போகிறது”

மரங்களைப் பெயர்த்துத் தள்ளிப் பசியாற வேண்டிய மாபெரும் மிருகம் நமது பசிக்குப் பழம் பறித்துப் போடுகிறது.
“உயரக் கிளையிலிருந்து
எட்டாப் பழங்களை
உங்கள் பசிதீரப்
பறித்துப் போடுகிறது
நீங்களும் சாப்பிட்டுவிட்டு
ஏப்பம் விடுகிறீர்கள்”

ஒரு கவளச் சோற்றுக்காகக் காட்டுச் சக்கரவர்த்தி ஒரு காட்டையே கப்பம்  கட்டுகிறது.  தூக்கிப் போட்டு மிதிக்க முடிந்த தும்பிக்கையால் தடவிக் கொடுக்கிறது.
“உங்களுக்காக நாள் முழுவதும்
பெரிய பெரிய மரக்கட்டைகளைத்
தூக்கிச் சுமக்கிறது

நாளைக்கும் உங்களுக்காக
கடுமையாய் உழைத்திட
கவளச் சோற்றைப்
பெரிய மனதோடு
வழங்குகிறீர்கள்.

அதனை நன்றியோடு
விழுங்கி விட்டுத்
தும்பிக்கையால் உங்களைத்
தடவிக் கொடுக்கிறது”

கூண்டில் கிளிகளை அடைக்கிற கொடுமைக்கார மனிதன் யானைக்கு முகபடாம் போர்த்தி முட்டாளாக்கியதாய் நினைக்கிறான்.   அங்குசத்தால் அடக்கிவிட்டுத் தன் அகங்காரத்தால் அடக்கிவிட்டதாகப் பெருமை கொள்கிறான்.  அங்குசத்தை மூடியிருக்கும் அன்பென்னும் கண்ணுக்குத் தெரியாத புழுவைப் பார்த்து  ஒரு நிலத்து மீனைப் போல ஏமாந்துவிடுகிறது யானை.
“நாள் கிழமை வந்தால்
முகபடாம் போர்த்தி
அழகு பார்க்கிறீர்கள்
உண்மை அன்பென்றெண்ணி
அதுவும் ஏமாந்து போகிறது”

இதுவரையிலும் யானையின் வரைபடத்தைக் காட்டிய கவிதை இனி கண்டடைகிற உருவம் வேறொன்றாய் மாற்றுகிறான் கவிஞன்.  அவனது திசைக்காட்டிக் கருவியில் திடீரெனத் தெற்கு வடக்காகிறது; வடக்கு தெற்காகிறது.

ஏன் யானை கட்டுப்படுகிறது?  கட்டுப்படுகிற யானையைப் பற்றிச் சொல்லி வந்த கவிஞனின் பார்வையில் இப்போது தட்டுப் படுவது யார்?  கவிஞன் நம்மை யோசிக்கச் சொல்கிறான்.  எப்படி யோசிக்க வேண்டும் என்று சொல்கிற வரியில் விடையையும் விட்டுச் செல்கிறான்.  ஒரு தேர்ந்த கவிஞனின்  திசைக்காட்டிக் கருவியில் இப்போது தெரிவது ஒரு புதிய திசை!
“உங்கள் கையால் கட்டிய
தளையினால் தான் அது
அடங்கிப் போகிறது என
நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்

“அந்த தளையினை
அறுத்தெறிந்து செல்ல அதற்கு
எவ்வளவு நேரம் ஆகும் என்பதை
நீங்கள் யோசித்ததில்லை

“யோசிக்கத் துவங்குங்கள் இன்றே
உங்கள் கட்டிலில் படுத்தபடி
உங்கள் மனைவியின் தலையை
அன்பாய்க் கோதியபடி!”

இனி முழுக் கவிதை

முட்டித் தள்ளி  முட்டித் தள்ளி
மரத்தையே சாய்த்துவிடும்
பலம் கொண்ட யானையை
மரத்திலலேயே
கட்டிவைத்திருக்கிறீர்கள்
அதுவும் சாதுவாக இருக்கிறது

ஒரு சிறு குச்சியைக் காட்டி
அதனை மிரட்டுகிறீர்கள்
அச்சத்துடன் உங்களிடம்
அடங்கிப் போகிறது

உயரக் கிளையிலிருந்து
எட்டாப் பழங்களை
உங்கள் பசிதீரப்
பறித்துப் போடுகிறது
நீங்களும் சாப்பிட்டுவிட்டு
ஏப்பம் விடுகிறீர்கள்

உங்களுக்காக நாள் முழுவதும்
பெரிய பெரிய மரக்கட்டைகளைத்
தூக்கிச் சுமக்கிறது
நாளைக்கும் உங்களுக்காக
கடுமையாய் உழைத்திட
கவளச் சோற்றைப்
பெரிய மனதோடு
வழங்குகிறீர்கள்

அதனை நன்றியோடு
விழுங்கி விட்டுத்
தும்பிக்கையால் உங்களைத்
தடவிக் கொடுக்கிறது

நாள் கிழமை வந்தால்
முகபடாம் போர்த்தி
அழகு பார்க்கிறீர்கள்
உண்மை அன்பென்றெண்ணி
அதுவும் ஏமாந்து போகிறது

உங்கள் கையால் கட்டிய
தளையினால் தான் அது
அடங்கிப் போகிறது என
நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்

அந்த தளையினை
அறுத்தெறிந்து செல்ல அதற்கு
எவ்வளவு நேரம் ஆகும் என்பதை
நீங்கள் யோசித்ததில்லை

யோசிக்கத் துவங்குங்கள் இன்றே
உங்கள் கட்டிலில் படுத்தபடி
உங்கள் மனைவியின் தலையை
அன்பாய்க் கோதியபடி!

Ram Periyasami's Pidivathangkalil tholainthu vidugirai Poetry Sannatham Kavithai Thodar (Series 24) By Poet Na. Ve. Arul. Book Day, Bharathi Puthakalayam

கவிதைச் சந்நதம் 24 – நா.வே.அருள்



கவிதை உலகத்திற்கு நல்ல காலம். காதலீ….. என்று விளித்துத் தொடங்கிய பழைய காலம் ஒரு பழைய பேப்பர் கடையில் தேய்ந்த பொருளைப்போலப் போடப்பட்டுவிட்டது. இளைஞர்களின் டிஜிட்டல் பேனாக்கள் இன்ஸ்டாக்ராம் காலத்திற்கு ஏற்றபடி புதிய புதிய பூக்களைப் பூக்கத் தொடங்கிவிட்டன.

கவிதை உதிரத்தின் பூ. அவ்வளவு புதுமையாக – ஃபிரஷ்ஷாக – இருக்க வேண்டும் அது. கவிதையின் மணம் நாசிக்கு இதுவரை முகர்ந்திராத மணத்தைத் தந்தாக வேண்டும்.

“ஒரு நிகழ்ச்சியை விவரிக்க எண்ணும்போது அதற்கு இதுவரை இல்லாத ஒரு சொல்லைப் பயன்படுத்த நாம் விரும்புகிறோம். ஏனெனில், நாம் அனுபவித்த அந்த நிகழ்ச்சி அதுவரை அனுபவித்த ஒன்றாக இருப்பது இல்லை. அனுபவத்தைச் சொற்களுக்குக் கொண்டு வருகையில் அந்தச் சொற்களுக்கும், அனுபவித்த நிகழ்ச்சிக்கும் இடையே ஓர் உறவு தோன்றும். இந்த உறவுதான் “பொருளின் பொருள்”. (மா.அரங்கநாதனின் “பொருளின் பொருள் கவிதை”).

இந்த பொருளில், ராம் பெரியசாமியின் இந்தக் கவிதை ஒரு புதிய கவிதைப் பூ!
“பிடிவாதங்களில் தொலைந்து விடுகிறாய்”.

சட்டென்று கவிதை நம் மனதில் தீப்பற்ற வைக்கிறது. கவிஞனின் காகிதத்தில் ஏற்கெனவே தீவைத்திருப்பவள் அவளது காதலி. கவிஞனோ கவிதையில் தீவைக்கத் தொடங்கிவிட்டான்.

“ஒரு பழைய கண்ணாடியில்
என் முகம் பார்த்துக் கொள்கிறேன்
ஒவ்வொரு நாளைக்குமான நாட்குறிப்புகள்
என் முகத்தில் ரேகைகளாய் ஆழமாய் பதிந்திருக்கின்றன ..”

ஒரு பழைய கண்ணாடியில் முகம் பார்ப்பது எவ்வளவு சுவாரசியம்! ஒரு பழைய கண்ணாடியில்தான் கண்ணாடியின் முகமும் தெரிந்துவிடும். ஒவ்வொரு நாளைக்குமான நாட்குறிப்புகள் ரேகைகளாகிவிடுகின்றனவாம். ரசம் போன காதலனின் வரைபடத்தை ஒரு பழைய கண்ணாடி காட்டிக் கொடுத்துவிடுகிறது. ஆனால் கவிஞனோ தனது காதல் ரேகைகளைக் கண்டுபிடித்துவிடுகிறான். அதுவும் காதலின் புதிய கவிதை ரேகை! காணாமல் போன காதல் நதியும் கண்ணாடியில் தெரிந்துவிடுமல்லவா?

“காலம் ஒரு எந்திரம்
பழுதடைகிற அன்புகளை
சுவற்றில் கிறுக்கியோ
எழுதித் தீர்த்தோ
ஆசுவாசம் கொள்கிறது என் எழுதுகோல்…”

கால எந்திரம் என்கிற ஒரு கவிதையை எழுதியிருக்கும் என்னை இந்தச் சொற்சேர்க்கை சொக்க வைத்துவிடுகிறது. இந்தக் கவிஞனோ லாவகமாகக் காலத்தையே எந்திரமாக்கிவிடுகிறான். எதுவொன்று எந்திரமானாலும் இதயத்தனம் இல்லாமல் போய்விடும். எந்திரத்தனமான காலத்தை காதல் நினைவுகளுடன் எப்படிக் கடந்து செல்வது? அதனால் கவிஞன் என்ன செய்கிறான்? சுவற்றில் கிறுக்கியோ, எழுதித் தீர்த்தோ ஆசுவாசம் கொள்கிறான். எதையெல்லாம் எழுதித் தீர்க்கிறான்? பழுதடைகிற அன்புகளை!….பழுதடைகிற அன்புகளைப் பார்க்க வேண்டும் என்றால் இதய மெக்கானிக் ஷாப்புகளுக்குத்தான் போக வேண்டும். இதய பழுதுபார்க்கும் கடை சில நேரங்களில் சுவராக இருக்கிறது. சில நேரங்களில் தாளாக இருக்கிறது. ரிப்பேர் அதாவது பழுதுபார்க்கிற வேலை கவிதையாக இருக்கிறது. பழுதடைகிற அன்புகளை. கழிப்பறைச் சுவர்களில் எழுதிவைக்கிற நபர்களில் எத்தனைபேர் காதலர்களோ? யார் கண்டார்கள்?

“மரத்தின் மீது வாஞ்சையோடு ஊறும் ஓரிரை எறும்பால்
பாரங்களில்லை
பறவை தன் உலகை சுருக்கி கிளையில் அமர்வதைப் போல
உன் தோளில் சாய்கிறேன் …”

ஓரிரை எறும்பு! கொல்கிறான் கவிஞன். வார்த்தைதான் அவனுக்குக் கிடைத்த வாள். இரை சுமந்த எறும்பு மரத்திற்குப் பாரமா? என்று கேட்கிற கவிஞன் சொல்லாமல் சொல்கிறான்…. உன் நினைவென்னும் இரை சுமந்த நானும் உனக்குப் பாரமில்லைதானே? அதனால்… “உன் தோளில் சாய்கிறேன். ” அதுவும் எப்படியாம்?….உலகைச் சுருக்கிக் கிளையில் அமரும் ஒரு பறவையைப்போல… எனவேதான் இவனால் தான் எழுதிய நாட்குறிப்புகள் அனைத்தையும் காதலியின் ஒற்றைப் பெயராகச் சுருக்கிவிட முடிகிறது. இப்படிப்பட்ட காதலனைத் தோள் சாய வேண்டாம் என்று எந்தக் காதலியால் சொல்ல முடியும்?

“ஒரு கைப்பிடிக் கனாக்களிடம்
உன்னை ஒப்படைத்துவிட்டேன்
மரணமென்பது உயிர் பிரிவதிலிருந்து மட்டும் தொடங்குவதில்லை
என்னிலிருந்து நீ
பிரிவதாலும் நிகழும் …”

“காதலியே உன் கடைசி முத்தத்தை என் கல்லறைக்குக் கொண்டுவா” என்று மேத்தா எழுதிய போது புத்தம் புதுசாக இருந்த அந்த எழுதுமுறை இன்றைக்குப் பழசாகிவிட்டது. அதே விஷயம்தான்…. பழைய தோடுதனைப் போட்டு புதிய கம்மல் செய்வதுபோல செய்கிறான் கவிஞன். மரணம் என்பது நீ பிரிவதாலும் நிகழும். காதலியைக் கைப்பிடிக் கனாக்களிடம் ஒப்படைத்துவிடுகிறான். இனி, நான் ராம் பெரியசாமியை உங்களிடம் ஒப்படைத்து விடுகிறேன்.

இனி முழுக் கவிதை…..
பிடிவாதங்களில் தொலைந்து விடுகிறாய்
ஒரு பழைய கண்ணாடியில்
என் முகம் பார்த்துக் கொள்கிறேன்
ஒவ்வொரு நாளைக்குமான நாட்குறிப்புகள்
என் முகத்தில் ரேகைகளாய் ஆழமாய் பதிந்திருக்கின்றன …
காலம் ஒரு எந்திரம்
பழுதடைகிற அன்புகளை
சுவற்றில் கிறுக்கியோ
எழுதித் தீர்த்தோ
ஆசுவாசம் கொள்கிறது என் எழுதுகோல்…
மரத்தின் மீது வாஞ்சையோடு ஊறும் ஓரிரை எறும்பால்
பாரங்களில்லை
பறவை தன் உலகை சுருக்கி கிளையில் அமர்வதைப் போல
உன் தோளில் சாய்கிறேன் …
ஒரு கைப்பிடிக் கனாக்களிடம்
உன்னை ஒப்படைத்துவிட்டேன்
மரணமென்பது உயிர் பிரிவதிலிருந்து மட்டும் தொடங்குவதில்லை
என்னிலிருந்து நீ
பிரிவதாலும் நிகழும் …

Mounan Yathriga (மௌனன் யாத்ரீகா) Poetry Sannatham Kavithai Thodar (Series 23) By Poet Na. Ve. Arul. Book Day, Bharathi Puthakalayam

கவிதைச் சந்நதம் 23 – நா.வே.அருள்



கவிதை உடும்புமௌனன் யாத்ரீகா

இது வரலாற்று உடும்பு. இதன் உடம்புக்குள் காட்டின் எலும்புகள். மென்மை, மிருது என்கிற வார்த்தைகள் மனிதன் காலப்போக்கில் தனது நாக்கில் கண்டெடுத்த போலி அல்லது பாசாங்கு நாகரிகத்தனத்தின் புதையல் வார்த்தைகள். இந்தக் கவிதையில் ஆவி பறக்கப் பறக்க ஆதி மனிதனின் வாழ்வியல் கவிச்சி.

ஆதிகாலம் வேட்டை என்பது இரையோடு சம்பந்தப்பட்டது. நவீன காலத்திலோ வியாபாரத்தோடு தொடர்பாகிவிட்டது. கவிஞன் உடும்பின் உடம்பு விலாசத்தைக் காட்டின் நெடியுடன் கவிதையாய் எழுதுகிறான்…. “முரட்டுக் கொடிகள் சுற்றிக் கொண்ட காய்ந்த மரத்துண்டு”. வேறு வரிகளிலும் எழுதிக் காட்டுகிறான்….“பச்சைக் காடுகள் விதைக்கப்பட்ட உடும்பின் கண்கள்”.

காலம் கணந்தோறும் வேட்டையை நடத்திக் கொண்டிருக்கிறது. ஒன்றை உண்டு ஒன்று வாழ்கிற உலக நியதி. ஒளியைக் கூட விழுங்கிவிடுகிற கருந்துளையின் கதை அறிவோம். ஜீவராசிகளிலேயே சிந்தனை வேட்டை நடத்துபவன் மனிதன்தான். மனிதனின் கண் உடும்பின் மேல். உடும்பின் கண்களோ நீலப்பறவை தங்கும் வங்கின் மேல். அது நுழைந்தவுடன் கவிதையில் ஒரு ஒலிக் காட்சி….“முட்டைகள் நொறுங்கும் சத்தம்”. நகுலனின் சாவின் முட்டையைப் பார்த்திருக்கிறது தமிழ்க் கவிதையுலகம். இந்தக் கவிஞனோ நீலப் பறவையின் முட்டையைப் பச்சை அண்டம் என்கிறான்.

“காட்டின் சகல இடங்களுக்கும் போகும்
ஒரு முதிர்ந்த விலங்கின் கண்களில்
நமக்கு முந்தைய தலைமுறையின்
பாதத் தடங்கள் நிச்சயம் இருக்கும்”

மனிதனின் வரலாறு விலங்கோடு சம்பந்தப்பட்டது. இந்த இடத்தில்தான் கவிதை இடப் பெயர்ச்சி நடத்துகிறது. உடும்பின் வரலாறு மனித வரலாற்றின் குறியீடாகிறது. கால்தடங்களையே காண மறுப்பது மக்களின் இயல்பு; கண்களில் கால்தடம் காண்பது கவிஞனின் வேலை! பிடுங்கிய கண்களில் இடுங்கிய தடங்கள். அவை கண்கள் அல்ல; காலத்தின் உண்டியல்கள்! அதில் குறைந்தது ஆயிரம் தடங்களின் அடையாளங்கள்.

இங்கு தொடங்குகிறது கவிதையின் டுவிஸ்ட்….
”இறந்த கண்கள் வேண்டாம்
உயிருடன் பிடிப்போம்
இந்தக் காட்டில் நம் வரலாறு மறைந்துள்ளது
முந்நூறாண்டுகள் வாழ்ந்த ஓர் உடும்புக்கு
நம் சரித்திரம் தெரியும்”

இது விலங்குகள் பிடிக்கிற வேட்டையல்ல. மனிதர்களுக்குக் காட்டின் கதைசொல்லும் கவிதையின் வேட்டை. வேட்டை ஒரு சாக்கு. துரத்திப் பிடிப்பதெல்லாம் ஒரு துயரம் மிகுந்த இழந்த காட்டின் இதயத்தை! வேட்டையில் இழந்த காட்டை வெற்றிகொள்ள உயிருடன் உடும்பைப் பிடிக்கிற உன்மத்த வெறி.

கவிதையின் டுவிஸ்ட் ஒரு கொண்டை ஊசி வளைவைப்போல சாகசம் புரியத் தொடங்குகிறது. வேட்டையில் பிடிக்கப்பட்ட மனிதர்கள் அடைக்கப்பட்ட கூண்டுகளை அடையாளம் காட்டுகிறான் கவிஞன்.

“சரித்திரத்தைத் தெரிந்து கொள் எந்தையே
உன் ஈட்டியைப் பிடுங்கிக் கொண்டு
ஜல்லி அள்ளும் கருவியை
உனக்குக் கொடுக்கப் போகிறார்கள்”

சினிமா முடிந்ததும் ஒரு காட்சியை (ஃபிரீஸ்) செய்வது போல – உறைய வைப்பதைப் போல – கவிதை முடிந்துவிட்டாலும் இரண்டு வரிகள் கவிதையை மனதில் உறைய வைத்துவிடுகின்றன….

“வரலாற்றுப் புகழ் மிக்க உடும்பு
அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தது.”

உடும்பின் பார்வையில் தெரிகிறது இழந்தவர்களின் துயர வரலாறு. வாசிக்க முடிந்தவர்கள் வாசித்துக் கொள்ளலாம். வரலாறு முக்கியம் அமைச்சரே என்பது வெறும் நகைச்சுவை வசனம் அல்ல…. அது வாழ்க்கையின் மீட்சி. உடும்பின் மூலமாக நம் முன்னோர்கள் நம்மை எச்சரிக்கிறார்கள். புரிந்து கொண்டால் பூமி நமக்குச் சொந்தம். இல்லையெனில் நாமே நமக்குச் சொந்தமில்லை.

மௌனன் யாத்ரீகா: கேள்விகளுக்கான பதில்கள்.

இனி முழுக் கவிதை.

வரலாற்றுப் புகழ் மிக்க உடும்பு

”முரட்டுக் கொடிகள் சுற்றிக் கொண்ட
காய்ந்த மரத்துண்டைப்போல்
உறுதியான வால்
நீலப் பறவைப் பதுங்கும் வங்கில்
நுழைவதைப் பார்த்தேன்

பச்சைக் காடுகள் விதைக்கப்பட்ட உடும்பின் கண்களை
அது எட்டிப் பார்க்கும்போது காண வேண்டும்
அகவன் மகனே!
உன் உண்டி வில்லை சுருட்டி வை”

“எலே மலைராசா…
நாட்டுக்குள் போய் வந்த காட்டாளா
முட்டைகள் நொறுங்கும் சத்தம் கேட்கிறது பார்
இந்நேரம் அதன் பிளந்த நாவின் நுனியில்
பச்சை அண்டத்தின் ருசி வழியும்
இன்று நம் அட்டிலில்
கூடுதல் மிளகை அரைப்பாள் நம் கிழத்தி’

“எச்சிலூறும் அந்த நத்தையை
ஓட்டுக்குள் கொஞ்சம் இழுக்கிறாயா?
காட்டின் சகல இடங்களுக்கும் போகும்
ஒரு முதிர்ந்த விலங்கின் கண்களில்
நமக்கு முந்தைய தலைமுறையின்
பாதத் தடங்கள் நிச்சயம் இருக்கும்
எனக்கதைக் காட்டு சிறுமலை நாடா ”

“என் ஈட்டியின் கூர்முனையால்
அதன் கழுத்துச்சதை அறுந்தால்
இரண்டு கண்களையும் பிடுங்கி
உன்னிடம் தந்துவிடுகிறேன்
அதற்குள் ஆயிரம் தடங்களாவது இருக்கும் ”

”இறந்த கண்கள் வேண்டாம்
உயிருடன் பிடிப்போம்
இந்தக் காட்டில் நம் வரலாறு மறைந்துள்ளது
முந்நூறாண்டுகள் வாழ்ந்த ஓர் உடும்புக்கு
நம் சரித்திரம் தெரியும்

சரித்திரத்தைத் தெரிந்து கொள் எந்தையே
உன் ஈட்டியைப் பிடுங்கிக் கொண்டு
ஜல்லி அள்ளும் கருவியை
உனக்குக் கொடுக்கப் போகிறார்கள்”

வரலாற்றுப் புகழ் மிக்க உடும்பு
அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தது.

மௌனன் யாத்ரீகா

Vasanthakumaran Poetry Sannatham Kavithai Thodar (Series 22) By Poet Na. Ve. Arul. Book Day Website is Branch Of Bharathi Puthakalaym.

கவிதைச் சந்நதம் 22 – நா. வே. அருள்

குழந்தையும் தெய்வமும் ஒன்று அல்ல ******************************************* குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று நினைத்தவர்களுக்குக் குழந்தைகளின் இன்னொரு உலகம் அதிர்ச்சியைத் தரும். அப்படித்தான், “குழந்தைகள் அன்பின் அவதாரங்கள் இல்லை” என்கிற கவிஞர் அப்துல் ரகுமானின் வாசகம் என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. அவரது…
கவிதைச் சந்நதம் 21 – நா. வே. அருள்

கவிதைச் சந்நதம் 21 – நா. வே. அருள்

கேள்விகளை நீ கேட்கிறாயா? இல்லை நான் கேட்கட்டுமா? ****************************************************************** மனுசனைப் பார்த்து நாக்கைப் பிடுங்குறாப்போல நான்கு கேள்வி கேட்பது ஒரு ரகம். கடவுளைப் பார்த்து கவிதையாகக் கேள்வி கேட்கிறபோது அதில் ஒரு ரசம். எல்லாவற்றுக்கும் கடவுளை வேண்டுகிற மனிதர்கள்தான் கடவுளுக்கு வேண்டியவற்றையெல்லாம்…
Poetry Sannatham Kavithai Thodar (Series) By Na. Ve. Arul. Book Day Website is Branch Of Bharathi Puthakalaym.

கவிதைச் சந்நதம் 20 – நா. வே. அருள்

முகமற்ற காலம் ************************* முகங்கள் தொலைந்து போகின்றன. முகமூடிகள் ஆள்கின்றன. பிரச்சனை முகமூடிகளை அணியலாமா என்பதல்ல. பொருத்தமான முகமூடிகளைத் தேடிப் பிடிப்பதுதான். அணிந்து கொள்வதற்கு ஒருவனுக்கு இருந்த தயக்கத்தை இந்தச் சமூகம் சாகடித்துவிடுகிறது. சொல்லப் போனால் முகமூடி அணிந்தால்தான் உதடுகள் கோணாத…
கவிதைச் சந்நதம் 19 – நா.வே.அருள்

கவிதைச் சந்நதம் 19 – நா.வே.அருள்

கவிதை – நந்தன் கனகராஜ் -இன் “அதுவொன்றன்று” அசையும் பிம்பம் ************************** நகரத்தின் அலங்காரமான பகுதியொன்றில் ஒரு கழிவறையின் ஓவியத்தைப் போலத் தீட்டப்பட்டிருக்கிறது இந்தக் கவிதை. தார்ச்சாலையில் அடிபட்டுக் கிடக்கும் ஒரு பூனையைப்போல மனிதம் சிதைந்துகிடப்பதைக் காட்சிப்படுத்துகிறது இக்கவிதை. எழும்பூர் உயிர்க்…
கவிதைச் சந்நதம் 18 – நா.வே.அருள்

கவிதைச் சந்நதம் 18 – நா.வே.அருள்

கடவுளுடன் உரையாடல் கவிதை - குமரன் விஜி கவிஞன் தன் மனதுக்குள் விசாரணை நடத்திக் கொண்டேயிருக்கிறான். அது சுயவிசாரணை. அது ஒரு சம்பிரதாயமான சுய பரிசீலனை அல்ல. உள்ளத்தை ஊடுருவி அதிலிருந்து கழிவு கசடுகளையெல்லாம் தூர் வாரும் துர்லபமான – தூய…
கவிதைச் சந்நதம் 17 | நா.வேஅருள்

கவிதைச் சந்நதம் 17 | நா.வேஅருள்

நிறங்களின் விளையாட்டு கவிதை தேன்மொழி தாஸ் இன் “சமச்சீரற்ற சூத்திரம்” நிறங்களை வைத்து ஒரு கவிதை விளையாட்டு. கவிதையை ஒரு பட்டியலிட்ட சூத்திரம்போல் படைத்திருக்கிறார் கவிஞர். நீருக்கு நிறமடிக்கும் வேலைதான் இந்தக் கவிதைக்குள் வார்த்தைகளைத் திணித்த வித்தை. இரவின் நிறத்தை இவரால்…