Movie Review: JaiBhim movie by A.Iruthayaraj திரைவிமர்சனம் ஜெய் பீம் - அ.இருதயராஜ் சே.ச

திரைவிமர்சனம்: குரலற்றவர்களின் குரலாக ஒலிக்கும் ஜெய்பீம் – அ.இருதயராஜ்




இந்திய அளவிலும் தமிழக அளவிலும் வெளிவந்த திரைப்படங்களில் காவல்துறை லாக்கப் மரணங்கள் பற்றி பல கதைகள் பின்னப்பட்டுள்ளன. ஆனால் சமீபத்தில் வெளிவந்த ஜெய் பீம் என்ற திரைப்படம் பலரின் ஆதரவையும் ஆரோக்கியமான விமர்சனங்களையும் பெற்றிருக்கின்றது. அது நம்முடைய எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்து இருக்கின்றது. நம்முடைய மனசாட்சியை உலுக்கியிருக்கிறது. இந்தப் படம் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இருளர் குடும்பங்களின் மீது காவல்துறை நடத்திய வன்றையையும், அத்துமீலையும் பொது மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. ஒரு பழங்குடியினர் சமூகம் நீதிமன்றம் வரை வந்து தனக்கான உரிமையையும், மறுக்கப்பட்ட நீதியையும் போராடிப் பெற்ற நிகழ்வை ஆழமாக சித்தரித்த ஒரு திரைப்படம் என்றால் அது ஜெய் பீம் தான் என்று சொல்லவேண்டும்.

இது பலவீனமானவர்களுக்கும் பலம்வாய்ந்தவர்களுக்கும் இடையே நடக்கின்ற ஒரு போராட்டம். அதிகாரம் தாங்கியோருக்கும் அதிகாரமற்றவர்களுக்குமிடையே நடக்கின்ற ஒரு மோதல். முகவரியமற்றவர்களுக்கும் முகவரியை தர மறுக்கும் அரசு இயந்திரத்திற்கும் நடக்கின்ற யுத்தம் என்று கூட சொல்லலாம். ஜெய் பீம் திரைப்படம் இருட்டிக்கப்பட்ட இருளர் பழங்குடி சமூகத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சியிருக்கிறது. வாழ்க்கையை அதன் போக்கிலேயே வாழும் இருளர் குடியிருப்பில் திடீரென்று ஒருநாள் ஒரு பூகம்பம் வெடிக்கிறது. ராஜாக்கண்ணு செங்கேணி அவருடைய குழந்தை மற்றும் உறவினர்கள் என்று சந்தோசமாக வாழும் குடும்பங்களில் காவல்துறை அத்துமீறி நுழைந்து வன்முறை நிகழ்கின்றது. என்ன நடக்கிறது என்று கூட அவர்காளல் கணிக்க முடியவில்லை.

திருட்டுப் பட்டம் சூட்டியதோடு காவல் நிலையத்தில் வைத்து உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அவர்களைத் துன்புறுத்துகின்றனர். காவல்துறையின் கட்டுப்பாடற்ற வன்முறையிலிருந்தும் தாக்குதலிளிருந்தும் எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் தவிக்கின்றனர். கர்ப்பிணி பெண் செங்கேணி தன்னந்தனியாக போராடுகின்ற ஒரு கட்டத்தில் காவல் நிலையத்தில் இருந்து கணவன் தப்பித்து விட்டார் என்று சொல்லப்பட்வுடன் அவனை தேடுகிறாள். அறிவொளி இயக்கத்தின் ஆசிரியை மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்களின் உதவியோடு கணவனைத் தேடுகின்றாள். தன்னுடைய கணவரும் உறவினர்களும் என்ன ஆனார்கள் என்ற தவிப்போடு தொடர்ந்து போராடுகிறாள். இறுதியில் சமூக அக்கறையுடன் செயல்படும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு. கே. சந்துரு அவர்களின் உதவியோடு ஆள்கொணர்வு மனு போடுகின்றாள். காணாமல்போன கணவருக்கு நீதி கிடைக்கவேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டியும் எவ்வித சமரசமுமின்றி யுத்தம் நடத்துகிறாள் என்பதே திரைப்படத்தின் ஒட்டுமொத்த கதை.

இந்த திரைப்படம் முழுவதையும் மூன்று தளங்களில் வைத்து இயக்குனர் ஞானவேல் காட்சிப்படுத்தி இருக்கிறார். இருளர் மக்களின் இயல்பான வாழ்க்கை. காவல்துறையின் அத்துமீறலும் அராஜகமும் நடக்கும் காவல் நிலையம். நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்ட போராடும் உயர் நீதிமன்றம் ஆகிய மூன்று சூழல்கள்தான் பார்வையாளர்கள் மனதில் எளிதாக பதிந்து விடுகின்றன. சென்னை உயர் நீதிமன்றத்தில் 1990-களில் நேர்மையுடனும் சமூக அக்கறையுடனும் தன்னுடையப் பணியை ஆற்றிய வழக்கறிஞர் திரு. கே. சந்துரு அவர்களின் வாழ்வில் நடந்த பல வழக்குகளில் ஒரு வழக்கை எடுத்துக் கொண்டு அதை ஒரு கதையாகப் புனைந்துள்ளனர். இதில் எந்த மிகைப்படுத்தலும் இல்லை. அதே போல எதையும் குறைவாகவும் சொல்லவில்லை. எதையும் மிகைப்படுத்தியும் சொல்லவில்லை. அவருடைய அனுமதியுடன் ஆலோசனையுடன் தான் இயக்குனர் நடிகர் சூர்யா மற்றும் படக்குழுவினர் சேர்ந்து ஒவ்வொரு தகவலையும் காட்சியாக விவரித்துள்ளனர்.

அடித்தட்டு மக்களின் பிரச்சினையை ஒரு வெகுஜன திரைப்படமாக எடுக்கின்ற போது கொஞ்சம் தவறினால் கூட அது ஆவணப்படமாக வாரியம் மாறிவிடும் ஆபத்து இருக்கிறது. அதேபோல புகழ்பெற்ற ஒரு கதாநாயகனை வைத்து படம் எடுக்கும் போது கதாநாயகனை மையப்படுத்தியதாக மாறிவிடும் விபத்தும் நிகழக்கூடும். ஆனால் இதை நன்கு அறிந்த திரு. ஞான வேல் கதையையும், கதைக்களத்தையும், போராடுகின்ற இருளர் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணையும்(செங்கேனி) இந்த படத்தின் மையமாக மாற்றியிருக்கின்றார். இந்தப் படம் இணைய வெளியில் வெளிவந்திருப்பதால் உலகமெங்கும் உள்ள மக்களை சென்றடைந்திருக்கின்றது பார்வையாளர்களின் மனசாட்சியை உலுக்கியிருக்கின்றது. பழங்குடியினர் சமூகத்தைப் பற்றி மக்களின் பொதுப் புத்தியிளுள்ள தவறான எண்ணங்களை நிச்சயமாக உடைத்திருக்கின்றது. காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை நிச்சயமாக எழுப்பும். இந்தத் திரைப்படம் குறித்து ஆழமாகச் சிந்திக்கவும் விவாதிக்கவும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம்

இயற்கையோடு இணைந்த வாழ்க்கை
இருளர்கள் ஒரு வேட்டையாடுகின்ற சமூகமாக இருந்தாலும் இயற்கையோடு ஒட்டி உறவாடுகின்ற வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள். எலி, முயல், பன்றி உடும்பு, காட்டுத்தேன் ஆகியவற்றை உணவுக்காக மட்டும் தேடி வேட்டையாடுகின்றனர். ”கொன்றால் பாவம் தின்றால் போகும்” என்பது பழமொழி. அதேபோல பறவைகளையும் பாம்புகளையும் நேசிப்பவர்களாக இருக்கின்றார்கள். முதல் காட்சியில் ராஜாகண்ணுவின் மகள் நிலத்தில் உட்கார்ந்திருக்கும் மைனா பறவைகளுக்கு நெல்லை தீனியாக இரைத்து விடுவாள். அந்த காட்சியை நாம் அழகாக பார்க்கலாம். அதேபோல ராஜாக்கண்ணு ஆளுங்கட்சி பஞ்சாயத்து தலைவர் வீட்டில் பாம்பு பிடிக்கச் செல்லும்போது அதன் மீது இறக்கப்பட்டு அதை காட்டில் கொண்டுபோய் விட்டு விடுவதாக சொல்கிறார். அதே போல இன்னொரு காட்சியில் பாம்பை பிடித்து வந்து காட்டு ஓரத்தில் விட்டபிறகு, ”நீ மனுஷங்கள விட்டு ஒத்தி இருந்தால் தான் நல்லது”, என்று கூறுவதையும் பார்க்கின்றோம். அந்த அளவுக்கு உயிரினங்கள் மீது அன்பு கொண்டவர்கள் இவர்கள்.

உடல் உழைப்பை மட்டுமே நம்பி இருக்கும் வாழ்வில் அவர்களிமுள்ள நகைச்சுவை உணர்வு, எள்ளல் மொழி, கேலி, கிண்டல் எல்லாம் அவர்களின் களைப்பைப் போக்க உதவுகின்றன. யாரையும் சிறுமைப் படுத்துகின்ற மற்றவரின் மாண்பை சிதைக்கின்ற வார்த்தைகள் அவருடைய பேச்சிலும், செயலிலும் இருக்காது. உதாரணமாக, தன்னை வற்புறுத்திய காவலர்களுக்கு கூட பாம்பு கடித்து விட்டால் அவர்ளுக்கு மருந்து கொடுத்து காப்பாற்ற முயற்சி எடுப்பவர்கள். அந்தளவுக்கு மிகவும் எளிமையான, கள்ளங்கபடமற்ற வெகுளித்தனமான மக்கள் இவர்கள். எப்போதுமே யாருக்கும் தீங்கு நினைக்காதவர்கள். தீங்கு செய்யாதவர்கள். ராஜாக்கண்ணு வேலை செய்கிற இடத்தில் நிறைய விடுகதை சொல்லிக்கொண்டே இருப்பார். அந்த விடுகதை சொல்லும் போது சரியா தவறா என்று கேட்பதும் உண்டு. எலி பிடிக்கும் போதும், செங்கல் சூளையில் வேலை செய்யும் போதும் பல வெடிகளை அவன் போட்டுக் கொண்டே இருப்பான். அது சிரிப்பையும் கலகலப்பை உண்டாக்குகின்றது.

நகைச்சுவை உணர்வுக்கு இரண்டு உதாரணங்களைச் சொல்லலாம். வயலில் மண்ணைத் தோண்டி மொசக்குட்டி எலி பிடிக்கும் போது, ”ஏன்டா எலி பிடிக்கச் சொன்னா, கிணறு தோண்டி கிட்டு இருக்க.” உடனே அவன், ”எலி இருந்தால் தானே புடிக்க முடியும்”, என்று சொன்னவுடன் எல்லோரும் அங்கு சிரிப்பார்கள். அதேபோல அறிவொளி இயக்கத்திலிருந்து வந்து மாலையில் வகுப்பு எடுக்கும் டீச்சர் வகுப்பு எடுக்கும் போது, ”ப..ட்..டா, ப..டி..” என்று எழுத்துக்கூட்டி சொல்லித் தருவார். அப்பொழுது ராஜாகண்ணு இடைமறித்து, ”டீச்சர் நாங்க எவ்வளவு தூரம் நடந்தாலும் எங்களுக்கு பட்டா கிடைக்கவில்லை. நீங்க என்னமோ பட்டா படின்னு சொல்றீங்க எனக்கு ஒண்ணுமே புரியல என்று சொன்னவுடன்” எல்லோரும் வாய்விட்டு சிரிக்கிறார்கள். இன்னொரு காட்சியில் தாசில்தார் ஆபீஸில் சான்றிதழ் கேட்டு விட்டு திரும்பும்போது மொசக்குட்டி மட்டும், ”நாம் ஒரு சாதிச் சான்றிதழ் கேட்டால் நமக்கிட்ட பத்து டாக்குமெண்ட் கேட்கிறார். பேசாம ஒரு நல்லபாம்ப புடிச்சு தாசில்தார் ஆபீஸ்ல விடலாமா? அப்புறம் பாம்பு புடிக்க நம்மல தானே கூப்பிடனும்”, என்று சொல்லும்போது சிரிப்பை வரவழைக்கிறது.
அதேபோல இயற்கையில் உள்ள தாவரங்களில் எவை மருத்துவ குணம் உள்ள செடிகள், எந்தெந்த நோய்க்கு அது பயன் தர முடியும் என்பதை செங்கேணி நேர்த்தியாக மாணவர்களுக்கு விளக்கிச் சொல்வார். ஆங்கில மருத்துவ மருந்துகள் கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே இருளர்கள் பாம்பு கடிக்கு மருந்து கொடுக்கும் மருத்துவர்களாக விளங்கினார்கள் என்பது வரலாறு. வாழக்கை வட்டச் சடங்குகளுக்கும் குல தெய்வங்களுக்கும் விழா எடுக்கும் போது, இசை இசைத்து ஆடிப் பாடி நடனமாடிக் கொண்டாடுகின்றனர் என்பதையும் இயக்குனர் சரியாக படம் பிடித்துள்ளார்.

ஏழை எளிய மக்களிடம் வானொலிப்பெட்டி எப்படி இயல்பாக உறவாடுகிறது என்பதை இயக்குனர் சரியாக காட்சிப்படுத்தி இருக்கிறார். வேலை செய்யும் இடத்தில் ”போக்கிரிக்கு போக்கிரி ராஜா” என்ற பாடலை கேட்டு மகிழ்கின்றார் செங்கேணி. அதேபோல கணவனை தேடி அலைகின்ற கவலையோடு வீட்டில் அமர்ந்திருக்கும் தருணத்தில் ”ஆழக்கடலில் தேடிய முத்து” என்ற பாடலைக் கேட்டு தன் கணவன் மீது உள்ள அன்பையும், பாசத்தையும், நேசத்தையும் வெளிப்படுத்துகின்றாள் என்பதை நாம் பார்க்கின்றோம். பறவைகளில் ஆந்தை என்ற பறவை விபத்து, ஆபத்து அல்லது சாவு வரப் போவதை சுட்டிக் காட்டுவது போல இரண்டு காட்சிகளையும் பயன்படுத்தப்பட்டிருகிறது. சொந்த வீடு கட்டும் கனவோடு கணவன்-மனைவி இருவரும் கொஞ்சிக்கொண்டிருக்கும் வேளையில், ஒரு மரத்தில் ஆந்தை அமர்ந்திருக்கும். அப்போது பெய்த மழையில் வீட்டின் சுவர் திடீரென்று இடிந்து விழுந்து விடும். வீடுகட்டும் கனவு தொலைவில் இருபதாக நாம் புரிந்து கொள்ளலாம். இன்னொரு காட்சியில் பொய் கேஸ் போட்டு போலீஸ் ராஜாக்கண்ணு வீட்டை தேடி வரும் வேளையில், ஆந்தை மரத்தில் அமர்ந்து குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருக்கும். லாக்கப் மரணம் அவனைத் தேடி வந்து விட்டது என்பதை முன்னறிவிப்பாக இக்குறியீடு பயன்படுத்தப்படுகின்றது. படத்தின் துவக்கத்தில் வெறும் இருபத்தி ஐந்து நிமிடங்களே வந்து போகின்ற இருளர்களின் இயல்பான வாழ்க்கையை சித்தரிக்கும் விதம் மிகவும் நுணுக்கமாகவும் ஆழமான ஆய்வுக்குட்பட்டும் கையாளப்பட்டிருக்கின்றது என்பது பாராட்டத்தக்கது.

இருளர்களின் அடையாளமற்ற தன்மை
ஆதிக்குடிகள் என்று அறியப்படுகின்ற இருளை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சிறு சிறு குழுக்களாக மலைகளிலும் சமவெளிப் பகுதிகளிலும் தமிழகமெங்கும் வாழ்கின்றனர். எண்ணிக்கையில் சிறு சிறு குழுக்களாக இருப்பதால் அவளுக்கு சமூக பாதுகாப்பு இல்லை. சொந்த வீடு இல்லை. முகவரி அற்றவர்களாகவும் இருக்கிறார். அவர்களுக்கு சொந்தமான வசிப்பிடங்கள் இல்லை. அரசு உதவி பெறுவதற்கு குடும்ப அட்டை இல்லை. ஓட்டுப் போடுவதற்கு வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை எதுவுமே கிடையாது. உயர்கல்வி படிக்கச் செல்வதற்கு பழங்குடியினர் என்ற சாதிச் சான்றிதழ் அவர்களுக்கு கிடைப்பதில்லை. இப்படி எதுவுமே இல்லாததால் இவர்கள் அடையாளம் அற்றவர்களாகவும், அனாதைகளாக நடத்தப்படுகின்ற எதார்த்தத்தை இயக்குனர் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

வயலில் நெல் மணிகளை காப்பாற்றுவதற்காக எலிகளை பிடிக்கும் போது, ”ஊர்த்தலைவர் உங்களையெல்லாம் ஊருக்குள்ள விட்டதே தப்பு. இருக்க இடம் கொடுத்தா இங்கேயே கிடப்பீஙகளா? என்று சாடுகின்றார். தாசில்தார் அலுவலகத்தில் சாதிச் சான்றிதழ் கேட்கின்ற பொழுது, ”நீங்களெல்லாம் படிக்கலேன்னு எவன் அழுதான்? இருளர் இன மக்கள் மலையில் இருக்கணும். இவனுக்கு பாம்பு படிக்க தெரியுமா? ரேஷன் கார்டும் இல்ல. ஆதார் அட்டையுமில்ல. எந்த ஆதாரத்தை வைத்து தான் சாதிச் சான்றிதழ் தர முடியும்?” என்று அதட்டுகிறார். ”உங்களுக்கு எந்த அடையாளமும் இல்லை” என்று சொல்லி மன உளைச்சலை ஏற்படுத்தி அனுப்புகின்றார். அதே நேரத்தில் அதே தாசில்தாருக்கு வருகின்ற ஒரு வெள்ளை சட்டை போட்ட அப்பாவையும் மகனையும் இன்முகத்தோடு வரவேற்று, நாற்காலியில் அமர வைத்து ஜாதி சான்றிதழ் குறித்து மென்மையாக பேசுகின்றார்.

இவர்களுக்கு வாக்குரிமை கேட்பதற்காக அறிவொளி அசிரியர் தேர்தல் அதிகாரியை பார்க்கும்போது, எந்தவித முகவரி இல்லாதவர்களுக்கு எப்படி வாக்காளர் அட்டை தரமுடியும் என்று கேள்வி எழுப்புகின்றார். மேலும், அந்த ஊர் தலைவர், கண்ட கண்ட சாதிக்காரனுங்க காலில் விழுந்து ”ஐயா ஓட்டு போடுங்க. அம்மா ஓட்டு போடுங்கம்மா என்று கேட்பது போதாதா என்ன? இவங்க குடிசையிலும் குனிஞ்சு குனிஞ்சு ஓட்டு கேட்கணுமா? என்று அலட்சியமாக பேசுகின்றார். இவர்கள் இங்கு வசிக்கலாம். ஆனால் எவ்வித அடையாளமும் இல்லாமல் வாழவேண்டும் என்று கூறுகின்றார்.
ராஜாகண்ணுவை நடுத்தெருவில் வைத்து அடித்து மிதித்து போலீஸ் வேனில் ஏற்றும்போது ஊர் தலைவர் சும்மா பார்த்துக் கொண்டே இருப்பார். ஊர்த் தலைவரைப் பார்த்து ராஜாக்கண்ணு கத்துவான். ஐயா நாங்கள் கொல்லையில் பல நாட்கள் வேலை செய்து இருக்கிறேன். ”நான் திருட மாட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க ஐயா”. ஆனால் அவர் எதுவுமே பேசாமல் இருப்பார். அவன் ஒரு அனாதை என்பதை அமைதியாகச் சொல்கிறா. அவரின் அமைதி வன்முறையானது.
மேலும் காவல் நிலையத்தில் காவலர்களின் அடி தாங்க முடியாமல் தவிக்கும் காட்சியைப் பார்த்து செங்கேணி கதறுகிறாள். அப்பொழுது ஊர்த் தலைவரைக் கூட்டி வந்தால் புருஷனை போலீஸ் அடிப்பதை நிறுத்தும் என்று நம்பி, ஊர்த் தலைவர் வீட்டுக்கே வந்து, ”ஐயா, நீங்க வந்து ஒரு வார்த்தை சொல்லுங்க ஐயா. போலீஸை அடிக்க வேணாம்னு மட்டும் சொல்லுங்க ஐயா” என்று சொல்வாள். அதற்கு ஊர் தலைவர், ”இந்த எட்டுக்குடி ஓட்டு போட்டு தான் நான் தலைவர் ஆனேனா? இந்த நாடோடி கழுதைக்கு பேச்சை பாரு. சீ… போ” என்று விரட்டுவார். இந்த இரண்டு தருணங்களிலும் நம்மை அடித்துக் கொன்றால் கூட கேட்பதற்கு யாருமே இல்லை என்ற உணர்வை செங்கேணி-ராஜாகண்ணு பெறுகின்றனர். இப்படி வாழ்கின்ற சூழலிலும், அரசு அலுவலங்களிலும் காவல்துறை காவல் நிலையத்திலும் மீண்டும் மீண்டும் நாம் முகவரியற்றவர்கள், அடையாளமற்றவர்கள், அனாதைகள் என்ற உணர்வை பற்றிக்கொண்டவர்களாகவே இருளர் மக்கள் வாழ்கின்றனர். இது சமூக பாதுகாப்பை அவளுக்கு வழங்குவதில்லை. எப்போதும் எதுவும் நடக்கலாம் என்ற பயத்திலும் ஒவ்வொரு நாளும் வாழ்க்கையை நகர்த்துகிறார்கள் என்பதற்கு இந்தப் படம் சாட்சி.

காவல்துறையின் அத்துமீறலும் அராஜகமும்
ஒரு காவல் நிலையத்தின் எல்லைக்குள் எந்த வீட்டில் திருடு போனாலும், காலனியில் வசிக்கும் ஒரு தலித் மீதோ அல்லது பழங்குடியினர் மீதோ பொய் வழக்கு போடுவது ஒரு எழுதப்படாத சட்டமாகவே தமிழகத்தில் இருக்கிறது. பொய்வழக்கு போடுவதோடு நிறுத்திவிடாமல் யார் மீதோ உள்ள கோபத்தை ஒன்று மறியாத அப்பாவி பழங்குடியினர் மீது காட்டுவது தான் மிகவும் கொடூரமானது. படத்தின் முதல் காட்சியிலேயே ஜெயிலில் இருந்து விடுதலையாகி பல கைதிகள் வெளியே வருவர். அப்போது ஒவ்வொருவரின் ஜாதியை கேட்டு அங்கே அவர்களை பிரிக்கின்றார்கள். தேவர், வன்னியர், முதலியார், நாயுடு, என்று சொன்னால் மதிப்புடன் ”நீ வீட்டுக்கு போ” என்று காவலர் சொல்லுகின்றார். ஆனால் நீ யார் என்று கேட்டவுடன், தாழ்ந்த குரலில் நான் ஒட்டர், குறவர், இருளர் என்று கூறும் வேளையில் நீ இப்படி வா என்று ஒதுக்குகிறார்.

ஐயா, நான் இருளர், என் மீது பொய்க் கேஸ் போட்டாங்க என்று ஒரு கைதி சொல்லும்போது, ”ஆமா நீ பெரிய பிச்சாவரம் ஜமீன் பரம்பரை. பொய் வழக்குப் போட்டாங்கன்னு கண்டுபிடிச்சிட்டான்”, என்று திட்டுகிறார். இது அவரை மீண்டும் காயப்படத்துகிறது. ஏற்கனவே நிலுவையில் உள்ள பழைய கேஸ்களை முடிப்பதற்கு இந்த பழங்குடியினரின் பெயரை பயன்படுத்துகின்றனர். ஒருவர் மீது ஒன்று அல்லது இரண்டுக்கு மேற்பட்ட வழக்குகளை போட்டு மீண்டும் உள்ளே தள்ளுவதற்கு காவல் துறையைச் சேர்ந்த காவல் உதவியாளர்கள் அங்கே ஜெயிலின் வாசலிலேயே காத்துக் கொண்டிருக்கிறார். அவர்களை பார்க்கின்றபோது பிணந்தின்னிக் கழுகு போல காட்சியளிக்கின்றார்கள். இது எல்லாம் பொய் வழக்கு என்று தெரிந்துதான் காவல்துறை செய்கின்றது. அதற்கு காவல்துறையிடம் மேலிட அதிகாரி வரை அதிகாரி முதல் கீழ்மட்டத்தில் உள்ள ஏட்டையா வரை உடந்தையாக இருக்கின்றனர்.

படத்தில் வரும் அத்தியூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி காவல் ஆணையர் பதவி உயர்வு வேண்டும். அதற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கின்றார். எனவே உள்ளூர் ஆளுங்கட்சி பஞ்சாயத்து தலைவர்கள் வீட்டில் திருடு போனதால் உண்மையான குற்றவாளி யார் என்று தெரிந்துகொண்டு அவரைக் கைது செய்யாமல், அவரோடு கைகோர்த்துக்கொண்டு பணத்தை பங்கிட்டுக் கொள்கின்றனர். அப்பாவி பழங்குடியினர் சமூகத்தின் மீது பொய் வழக்குப் போடுகிறார்கள். அதை விட கொடுமை என்னவென்றால் ராஜாக்கண்ணு எங்கே என்று தேடி அலைகின்ற பயணத்திலேயே அவனுடைய உறவினர்களையும், மனைவியையும் அடித்து உதைத்து காவல் நிலையத்தில் வைத்து கொடுமைப் படுத்துவது காவல்துறை வன்முறையின் உச்சகட்டம் என்றே சொல்லலாம். ஒரே அறையில் ஆண் பெண் எல்லோரையும் அடைத்து வைத்து ஈவு இரக்கமில்லாமல் பிரம்பால் அடிக்கின்றனர்.

காவல் நிலையத்தில் பெண்கள் என்று கூட பார்க்காமல, செங்கேணி மற்றும் ராஜாக்கண்ணுவின் அக்காவுக்கு நடக்கும் கொடூரம் பார்வையாளர்களை மிகவும் பதைபதைக்க வைக்கின்றது. ஒரு கர்ப்பிணிப் பெண் என்று கூட நினைக்காமல் அடிப்பது, கீழே தள்ளி விடுவது போலீஸ் ஸ்டேஷனில் வைத்து கொளுத்தி விடுவேன் என்று மிரட்டுவது எல்லாம் சாதாரணமாக நடக்கின்றது. வலி தாங்க முடியாமல் கதறும் ஆண்களின் மீது இரக்கப்படுகதிறாள். ஒரு கட்டத்தில், மொசக்குட்டி ”ஆம்பள வச்சிகிட்டு பொம்பளைய வீட்டுக்கு அனுப்புங்க சார்” என்று கெஞ்சிக் கேட்கின்றான். அப்போது போலீஸ் கோவப்பட்டு ”யாருடா ஆம்பள” என்று உள்ளே இருக்கின்ற பெண்ணின் பாவாடையை கழற்றிவிட்டு இங்க ”யாருடைய ஆம்பள?” என்று அதட்டி அவளோடு கூடி ஆண்மையை நிரூபிக்க வற்புறுத்தினர். ”அவள் என்னோட அக்கா..சார்” என்று ராஜாகன்னு கதறுவான். அந்த காடசி நம்முடைய நெஞ்சைப் பதபதைக்க வைத்து விடுகிறது. அரை நிர்வாணமாய் கூனிக்குறுகி கிடக்கும் அந்தப் பெண்ணுக்கு அவமானம் ஒரு புறம். அடியால் உடல்வலி இன்னொருபுறம் என்று துடிக்கிறாள்.

”ஆம்பளை” என்று சொன்னவுடனே காவலருக்கு கோவம் வருகின்றது. காவல்துறையினருக்கு பழங்குடியினர் ஆண்கள் ஆண்களாக தெரியவில்லை. யார் யாருக்கு ஆர்டர் போடுவது? யாரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என்ற கோபத்தில் மீண்டும் அடிக்கிறார். பழங்குடிகளின் ஆண்மை பற்றி பேச காவல்களுக்கு என்ன தகுதியிருக்கிறது? உண்மையில் பாக்கப் போனால், பழங்குடியின ஆண்கள் போற்றத்தக்கவர்கள். ஏனென்றால் செங்கேணி-ராஜாக்கண்ணு உறவில் ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்கின்றனர். ராஜாக்கண்ணு பெண்ணை மதிக்கின்றவன். பாசாங்கு இல்லாத அன்பையும், பாசத்தையும் மனைவியின் மீது காட்டுகிறவன். உடல் உழைப்பை மட்டுமே நம்பி இருக்கின்ற அவன், குடும்பத்தை தன்னுடைய கடின உழைப்பால் காப்பாற்றுகிறான். ”நான் திருடவில்லை” என்று அவளிடம் உண்மை பேசுகின்றான். எவ்வளவு அடித்தாலும் உண்மையை மட்டுமே பேசுகிறான். அதுதான் ஒரு ஆண்மைக்கு அடையாளம். இவர்களை அடித்தாலும் கொன்றாலும் யாரும் ஏன் என்று கூட கேட்க மாட்டார்கள் என்றுதான் போலீஸ் அவர்களைத் தாக்குகிறது. எந்தவிதமான விசாரணையும் இல்லாமல், முதல் தகவல் அறிக்கை கூட தயாரிக்காமல் திருட்டை ஒத்துக்கொள் என்று வற்புருத்துகிறார்க்ள். ராஜாக்கண்ணுவை பல இடங்களில் தேட வைத்தற்காக, கோபத்தில் அவனை பிரம்பால் அடித்தும், காலால் நெஞ்சிலே மிதித்தும் கொல்லுகின்றனர்.

வலி தாங்க முடியாமல் ராஜாக்கண்ணு காவல் நிலையத்திலேயே இறந்து விடுகின்றான். ஆனால் காவலர்கள் ஒன்றுகூடி இவர் தப்பித்து விட்டனர் என்று பொய் சொல்கின்றனர். பிறகு நீதிமன்றத்தில் வழக்கு சூடு பிடிக்கவே இவர்கள் காணாமல் போய்விட்டார்கள் என்று பொய் பொல்லிக்கொண்டு அவர்களைத் தேடுவது போல நடிக்கின்றனர். கேரள எல்லைக்குள் சென்று இருட்டப்பன் பேசுவது போல பகல் வேஷம் போடுகின்றனர். ஒரு பொய்யை மறைப்பதற்கு எத்தனை விதமான பொய்களையும் தயாரிக்கின்றனர். எவ்வளவு கொடூரமான வன்முறையை கட்டவிழ்த்து விடுவார்கள் என்பதற்கு பல காட்சிகள் இப்படத்தில் இருக்கின்றன.

ராஜாக்கண்ணுவின் கொலை ஒரு லாக்கப் மரணம் என்று தான் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படப்போகிறது என்பதை அறிந்தவுடன் காவல்துறை உயரதிகாரிகள் கவலைப்படுகின்றனர். தீர்ப்பு அரசுக்கும் காவல்துறைக்கும் எதிராகப் போனால் பெரிய அவமானம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றெல்லாம் பயப்படுகின்றனர் அதற்கும் மேலாக காவல் துறைக்கு வரும் பதவிஉயர்வு பாதிக்கப்பட்டுவிடும் என்று கவலைப்படுகிறார். சிலரின் பதவி உயர்வுக்காக பல அப்பாவி பழங்குடியினர் குடும்பங்கள் நடுத்தெருவில் நின்றாலும் பரவாயில்லை என்று ஈவிரக்கமற்று செயல்படுகின்றனர். இது தமிழகமெங்கும் இன்றைக்கும் நடைமுறையில் இருக்கின்றது என்பதையும் நாம் உணர முடியும். காவல்துறையின் அளவுகடந்த அத்துமீறலுக்கு மத்தியில் இரண்டு காவல்துறை நல்லவர்கள் போல் செயல்படுகின்றனர். ஒன்று காவல் நிலையத்தில் உள்ள ஏட்டையா. இன்னொருவர் வழக்கு பற்றி விசாரிக்கும் உயர் அதிகாரி டிஜிபி பெருமாள் சாமி. இவர்களின் இரக்கம், நேர்மை தன்மை, மனத நேயம், மனசாட்சி எல்லாம் காவல்துறையின் ஒட்டுமொத்த அத்துமீறலுக்கு முன்னால் ஒரு சிறிய துளி போல தான் தோன்றுகின்றது.

எளிய மக்களின் நேர்மையும் அறச்சினமும்
இருளர் என்று அறியப்படுகின்ற பழங்குடியினர் இயல்பிலேயே கள்ளங்கபடமற்றவர்கள். பொய் சொல்லத் தெரியாதவர்கள். எவ்வளவு இன்னல், துன்பம் ஏற்பட்டாலும் நேர்மையை இழக்காதவர்கள். இதை அழுத்தமாக படம் காட்சிப்படுத்துகிறது. தலைவர் வீட்டில் பாம்பு பிடிக்க வரும் ராஜாக்கண்ணு பீரோவுக்கு அடியில் விழுந்து கிடக்கும் ஒரு தங்கத்தை எடுத்து வெகுளித்தனமாக முதலாளி அம்மாவிடம் கொடுக்கின்றார். அதை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்ற அந்த எண்ணம் துளி கூட அவனிடம் இல்லை.

எவ்வளவு கஷ்டப்பட்டாலும் உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது. செங்கல் சூளையில் வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். ஒவ்வொரு செங்கல்லாக சேர்த்து வீடு கட்ட வேண்டும் என்ற நேர்மையான கனவில் ராஜாக்கண்ணு வாழ்கிறான். அப்படிப்பட்டவனை திருடன் என்று முத்திரை குத்தி, அடித்தே கொள்ளுகின்றனர். நடுத்தெருவில் நாயை அடித்து இழுத்துச் செல்லும்போது காவல் நிலையத்தில் அடி தாங்க முடியவில்லை என்றாலும் ”நான் திருடன் இல்லை. திருடன் என்று சொல்லாதீங்க” என்பதை நேர்மையாக சொல்லி கதறுகிறான். அதேபோல இருட்டப்பன் வேலை செய்கிற இடத்திலிருந்து காவல் துறையினரால் அடித்து இழுத்துச் செல்கின்ற பொழுது வேனில் ஏற்றி சென்ற பொழுது அங்கு உள்ள முதலாளி, ”இவன் என்னிடம் வேலை செய்கிறான். ஆனால் திருடமாட்டான்” என்று சொல்லுகிறார். இந்த காட்சிகள் அவருடைய நேர்மை தன்மையை வெளிப்படுத்துகின்றன. அடி மேல் அடி வாங்கும் பட்சத்தில் வலி தாங்க முடியாமல் மூன்று ஆண்களும் துடிக்கிறார்கள். செங்கேணி வீட்டில் சமைத்த சாப்பாட்டை காவல்நிலையத்துக்கு அருகில் வைத்து கொடுப்பாள். அப்போது இட்டப்பன் ”எங்களால போலீஸ் அடியை தாங்க முடியல. பேசாம அவங்க சொல்றது மாதிரியே திருட்ட ஒத்துகிட்டுப் போகலாம்” என்று சொல்லுவான். அதற்கு ராஜாக்கண்ணு எந்த தயக்கமும் இல்லாமல், ”இந்த காயம் எல்லாம் கொஞ்ச நாள்ல காஞ்சு போய் விடும். ஆனால் திருட்டுப் பட்டம் காலமெல்லாம் தங்கிவிடும், கொஞ்சம் பொறுத்துக்கடா” என்று சொல்லுவான். இது உண்மைக்காக நிலைத்து நிற்கும் அவனுடைய உறுதிப்பாட்டைக் காட்டுகிறது.

தீமைக்கும், அநீதிக்கும், பொய்மைக்கும் தலைவணங்காத சமரசமற்ற உறுதியான நிலைப்பாடு எளிய மக்களிடம் இன்னும் இயல்பாய் இருக்கிறது என்பதற்கு இந்தக் காட்சி ஒரு சாட்சி. நேர்மையாக இருப்பவர்கள்தான் அறச்சினத்தைத் தெளிவாக வெளிப்படுத்த முடியும் என்பதற்கு பல உதாரணங்கள் இந்த படத்தில் உள்ளன. செங்கேணி காவல் நிலையத்திற்கு முன்னால் உட்கார்ந்துகொண்டு, ”இப்படி சித்திரவதை செய்தீர்களே நீங்க நல்லா இருப்பீங்களா” என்று கதறுவாள். ஒரு கர்ப்பிணி பெண்ணின் அடிவயிற்றில் இருந்து எழும் கோபம் ஒரு அறச்சினம். ஆள்கொணர்வு மனு நீதிமன்றத்தில் ஏற்கப்பட்டு வழக்கு நடக்கின்றது. வழக்கின் போக்கில் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்கும், குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் என்ற ஒளிக்கீற்று வெளிப்படுகின்றது. குற்றவாளிக்குத் தண்டனை கிடைக்க போகும் அந்த தருணம் நெருங்கி வருகின்றது என்பதை அறிந்தவுடன், வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று பல நெருக்கடிகள் வருகின்றன.

செங்கேணி எந்த வற்புறுத்தலுக்கும் தலை வணங்காமல் துணிந்து நிற்கின்றாள். அதில் தன்னுடைய அறச்சினத்தை வெளிப்படுத்துகின்றாள். உள்ளூர் தலைவர் பழங்குடியினர் குடியிருப்பில் உள்ள மக்களை தன்னுடைய வீட்டிற்கே அழைத்து போலீசார் முன்னிலையில் மிரட்டுகிறார். ”உங்களால கோர்ட்டு, பத்திரிகையினு ஊர் மாணமே போவுது. உங்க நாலு குடிசையை கொளுத்துவதுக்கு எவ்வளவு நேரமாகும்? இருக்க இடம் கொடுத்து, பொழைக்க வேலை கொடுத்தான். திமிர் எடுத்தா அலையுறீங்க? போய் ஒழுங்கா கேஸை வாபஸ் வாங்கப் பாருங்க”, என்று அதட்டுகிறார். ஆனால் செங்கேணி அமைதியாக அங்கே நின்று கொண்டிருப்பாள். அந்த அமைதி ஒரு ஆழமான அமைதி. அறச்சினம் உள்ளத்தில் பொங்கி வரும் அமைதி என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்து அத்தியூர் காவல் நிலையத்திற்கு செங்கேணியை வரவைத்து மூன்று காவலர்கள் கேசை வாபஸ் பெறவேண்டும் என்று மிரட்டுவார்கள். எங்க வேலையே போய்விடும். நாங்க எவ்வளவு பணம் வேணாலும் தருகிறோம்” என்று கெஞ்சுவார்கள். இந்த பேப்பரில் கையெழுத்து போட்டுட்டு இங்கிருந்து போ. இல்லேன்னா இங்கிருந்து நீ போக முடியாது என்றும் மிரட்டுவார்கள். ஆனால் செங்கேணி அமைதியாக இருந்துவிட்டு, ”வக்கீல் சாரைக் கேட்காம நான் எதுவும் செய்ய மாட்டேன்” என்று உறுதியாக இருக்கின்றாள். உடனே டிஜிபி-யிடமிருந்து தொலைபேசி வரும். அந்த தொலைபேசியிலே ”செங்கேணியை போலீஸ் ஜீப்பில் கொண்டு போய் வீட்டில் விட வேண்டும்” என்ற ஆணை பிறப்பிக்கப்படுகிறது. அந்த நேரத்தில் மீண்டும் செங்கேணி அமைதியாக இருந்துவிட்டு கோபத்தோடு நடந்தே சென்று பேருந்தில் ஏறி வீட்டிற்கு செல்கிறாள். போலீஸ் ஜீப் அவளை ஏற்ற முடியாமல் பின்னால் செல்கின்றது. இது அவளுடைய அறச்சினத்தை வெளிப்படுத்துகின்றது. அதேபோல டிஜிபி அலுவலகதிற்கு செங்கேணியை அழைத்து, ”எவ்வளவு பணமும் வாங்கி தரேன். பேசாம கேஸை வாபஸ் வாங்கிட்டு போ. உங்க குழந்தைகளுக்கு படிப்பு செலவுக்கு இந்த பணம் உதவும்” என்று டிஜிபி சமரசம் பேசுகின்றார். செங்கேணி அங்கேயும் தன்னுடைய ஆழமான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகின்றார். எனக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்கு அப்பா யாருன்னு காட்டுவதற்கு என் புருஷன் என்னோட இல்லை. இப்ப நீங்க தருகின்ற பணம் என் கணவனைக் கொலை செய்தவர்கள் கொடுத்த பணமாக இருக்கும். அந்தப் பணம் எனக்கு வேண்டாம். நான் கோர்ட்டில் போராடி தோற்றேன் என்றுகூட நான் சொல்லிக்கிறேன். முடிஞ்சா, உங்களால குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுங்க” என்று நெஞ்சுறுதிவுடன் பேசுகின்றார்.

இருளர்களுக்காக குரலை உயர்த்தும் வழக்கறிஞர் கே. சந்துரு
சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் மறக்கமுடியாத வழக்கறிஞர் கே.சந்துரு அவர்கள். 1900-களில் அவர் வழக்கறிஞராக பல வழக்குகளை எடுத்து நடத்தி இருக்கின்றார். அதன் பிறகு ஒரு நீதி அரசராகவும் ஆயிரக்கணக்கான வழக்குகளை விசாரித்து ஏழை எளிய மக்களின் சார்பாக நின்று தீர்ப்பு சொல்லியிருக்கின்றார். அவரின் எல்லாத் தீர்ப்புகளுக்கும் அம்பத்காரின் சிந்தனைகள் பெரிதும் உதவியாதாக் அவரே கூறியிருக்கிறார். இதைத்தான் தா. செ. ஞானவேல் சினிமாவுக்கு கதைக்களமாக எடுத்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் வழக்கமான பார்முலாவுக்குள் சிக்கிக்கொள்ளாமல் எவ்வித சமரசமும் இன்றி கதைக்களத்தை அமைத்திருக்கிறார். கனவுப் பாட்டு, டான்ஸ, சண்டைக் காட்சி, பன்ஞ் டயலாக் என்று எதுவுயேமயில்லாமல் சினிமா எடுத்திருப்பது பாராட்டப்படவேண்யது.

அம்பேத்கார் வழியில் நின்று பல வழக்குகளில் ஏழை மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தந்த சந்துருவின் திரு. கே. சந்துரு என்ற தனி மனிதனின் புகழ் பாடாமலும், சூர்யா என்ற கதாநாயகனையும் அதிகமாக முன்னிறுத்தாமல் கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கின்றது. வழக்கறிஞராக நடிக்கின்ற நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் ஒரு புகழ் பெற்ற கதாநாயகன்தான். வழக்கமான தமிழ் சினிமாவில் அவர் அதீத பலம் கொண்டவராகத்தான் சித்தரிக்கப்படுவார். ஆனால் இந்தப் படத்தில் அவர் ஒரு வழக்கறிஞராக பல நேரங்களில் தன்னுடைய பலவீனத்தையும் இயலாமையையும் உணர்வதாக சித்தரிக்கப்படுகின்றது. எனவே அவர் தனியாக நின்று மாபெரும் பலசாலியாக போராடவில்லை. இந்திய அரசியல் சட்டத்தின் துணை, மனித உரிமைப் போராளிகளின் ஆதரவு, கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களின் தோழமை, அறிவொளி இயக்கத்தின் ஆசிரியர் இன்னும் எண்ணற்ற நபர்களின் உதவியோடுதான் செயல்படுகிறார்.

குறிப்பாக, அரசு வழக்கறிஞர் கொண்டு வருகின்ற பொய் சாட்சிகளின் மூலம் நீதிமன்றம் வழக்கை டிஸ்மிஸ் செய்ய போகிறது என்று தெரிந்தவுடன், கம்யூனிச கட்சி தோழர்களின் ஆதரவோடு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகின்றார் கே.சந்துரு. எனவே கம்யூனிச இயக்கத்தின் தோழர்களோடு இணைந்து பொது மக்களின் ஆதரவை திரட்டுவதற்காக துண்டுப்பிரசுரம் கொடுத்தல், கோசம் எழுப்பியவாறு ஊர்வலம் போதல் என்று பல முயற்சிகளை எடுக்கின்றனர். கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்கள் எப்போதுமே தலித் மக்கள் பழங்குடியினர் ஆகியோரின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுப்பவர்கள். களத்தில் நின்று பணியாற்றுபவர்கள். இந்த படத்திலும் அப்படித்தான் பொய் வழக்கில் பாதிக்கப்பட்ட ராஜாக்கண்ணு செங்கேணி குடும்பத்திற்காக நீதியை நிலை நாட்ட களத்தில் நிற்கின்றனர். அதை இந்தப் படம் சரியாகப் பதிவு செய்திருக்கிறது.

ஒரு கூட்டு முயற்சியாகத் தான் வழக்கின் நியாயத்தை படிப்படியாக நிரூபிக்க முயற்சிக்கின்றார். ஒரு கட்டத்தில் காவல் நிலையத்திலிருந்து தப்பித்து சென்றதாகச் சொல்லப்பட்ட மூன்று பேரையும் தேடும் பயணத்தில் இவரும் சேர்ந்து பயணிக்கிறார். காவல் துறையும் அரசு தலைமை வழக்கறிஞரும் சேர்ந்து புதிய சாட்சிகளை உருவாக்குகிறார்கள். இருட்டப்பன் ஒரு முறை மில் முதலாளியிடம் தொலைபேசியில் பேசியதாக நீதிமன்றத்தில் சாட்சி சொல்கின்றனர். ஏறக்குறைய வழக்கு டிஸ்மிஸ் ஆகி விடும் நிலைக்கு நீதியரசர்கள் வருகின்றார்கள். அப்போது தன்னுடைய இயலாமையை உணர்கிறார். நான் தோல்வியடையப் போகின்றேன் என்பதை உணர்ந்து சந்துரு கோபப்படுகிறார். ஏன் உண்மையை மறைச்சீங்க? இந்த கேசை நான் நடத்த மாட்டேன் என்று செங்கணி மீது கோபப்படுகிறார். இப்படி ஒரு கதாநாயகன் மீண்டும் மீண்டும் தன்னுடைய பலவீனத்தை உணர்ந்து நடிப்பது இந்த படத்தில் ஒரு வித்தியாசமான அணுகு முறையாக இருக்கின்றது. அதேபோல அறிவொளி இயக்கத்தின் டீச்சர் தோன்றும் காட்சிகளில் குறைவான நேரம் தான் காட்டப்படுவார். வழக்றிஞரோடு உரையாடுகின்ற காட்சிகளில் மிகுந்த பக்குவத்துடனும், முதிர்ச்சியுடனும் நடந்துகொள்வார்.

காரணம் செங்கேணியின் வழக்கு கொண்டிருக்கும் வலி, வழக்கின் உண்மைத்தன்மை, வழக்கு தொடுத்து போராடுகின்ற பழங்குடியினப் பெண்ணின் நீதி உணர்வு, அவளின் உரிமை குரல் அகியவை தான் முக்கியம் என்பதை படம் நமக்கு உணர்த்துகிறது. வசனமேயில்லாத அமைதி பல இடங்களில் ஆழமான ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றது. அது ஆழமான அர்த்தத்தையும் வெளிப்படுத்துகின்றது. செங்கேணி காவல்நிலையத்தில் என்ன நடந்து என்பதை டேப்பில் பதிவு செய்கின்ற வழக்கறிஞர் சந்துரு, ஒர் இடத்தில் அவர் சொல்வதைக் கேட்க முடியாமல் நிறுத்திவிட்டு எழுந்து எதிர்ப்புறம் நின்று கொண்டிருப்பார். அவர் கன்னம் சிவக்கும். கண், காது, மூக்கு எல்லாம் துடிக்கும். அந்த அமைதியான சில நிமிடங்களில் பார்வையாளர்களை அறச்சினத்தின உச்சத்திற்கே கொண்டு செல்கின்றது.

இந்த வழக்கை விசாரிக்கும் குற்றவியல் புலனாய்வு ஐஜி பெருமாள் சாமி அவனுடைய கோபத்தை அமைதியாக வெளிப்படுத்துகின்றார். பழங்குடி மக்களை ஓரிடத்தில் ஒன்றுகூட்டி காவல்துறை அவர்களுக்கு செய்த அநீதியான செயல்பாடுகளை கேட்டறிகிறார். ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தையும் காவல்துறை தங்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட கொடூரத்தையும் விவரிக்கின்றனர். கடைசியில் ஒரு சின்னப் பையன் பேசுகின்ற பொழுது பெருமாள் சாமி எழுந்து அமைதியாக தன்னுடைய கோபத்தை முகத்தில் வெளிப்படுத்துவதை நாம் பார்க்க முடிகின்றது.

இந்த படத்தில் வெளிப்படுகின்ற கூர்மையான பல வசனங்கள் பார்வையாளர்களை அதிகமாக கவர்ந்து இழுக்கின்றன. நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சந்துரு பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் கூர்மையானவை. காவல்துறை உண்மையை ஒத்துக் கொள்கின்ற பொழுது, அரசு வழக்கறிஞர் ”காவல்துறை உண்மை ஒத்துக்கொண்ட பிறது மீண்டும் ஏன் கேள்வி கேட்கிறீர்கள்?” என்று சொல்லுவார். அதற்கு சூர்யா, ”பல உண்மைகளை மறைப்பதற்குதான் ஒரு உண்மையை ஒத்துக் கொள்கிறார்கள்” என்று குரலை உயர்த்திப் பேசுவார்.

செங்கேணிக்கு நீதி கிடைக்க வேண்டுமென்பதற்காக, ”நீதிக்கு ஆதரவான வார்த்தைகளை விட, அநீதிக்கு எதிரான நீதிமன்றத்தின் மௌனம் ஆபத்தானது” என்று சொல்வார். அதேபோல பழங்குடி பெண்ணின் நியாயத்தை விளக்குகின்ற பொழுது, இருளர்களின் ஆதி வரலாறு பற்றி எடுத்துரைக்கின்றார். ”ஒரு காலத்தில் இவர்கள் வேல் ஏந்திய வீரர்களாக இருந்தனர். இப்போது கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர். அட்ரஸ் இல்லாதவர்களாக இருக்கின்றனர்” என்று கோபப்படுகின்றார். இது என்ன வரலாற்று கிளாஸ் போல இருக்கிறது என்று அரசு தலைமை வழக்கறிஞர் கிண்டலடிப்பார். ”வரலாறு தெரியாததால் தான் தமிழக அரசும், காவல்துறையும் இவர்களிடம் மிருகத்தனமாக நடந்து கொள்கின்றது.” என்று மீண்டும் குரலை உயர்த்தி பேசுவார். ”எனக்கு இலட்சக்கணக்கான பணம் வேண்டாம். கணவனை இழந்து நிற்கும் எனக்கு நீதிமன்றத்தில் நீதி வேண்டும் என்று போராடுகின்ற அவளுக்கு இந்த நீதிமன்றம் அநீதி இழைத்து விடக்கூடாது”, என்று வாதிடுகின்றார். வழக்கின் இறுதியல் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்கின்ற விதத்திலேயே தீர்வு சொல்லப்படுகின்றது. தீர்ப்பை கேட்ட உடனே செங்கேணி எதுவும் பேசாமல் தன்னுடைய மகளை அழைத்துக்கொண்டு கோர்ட்டின் வாசலில் அமர்ந்திருக்கிறார். சந்துரு அவரைத் தேடி வருகின்ற பொழுது இருவரும் கண்ணீர் மல்க சந்தித்துக் கொள்கின்றனர். பின்னணியில் பாடல் ஒலிக்கின்றது.

”மண்ணிலே ஈரம் உண்டு
முள் காட்டில் புவும் உண்டு
நம்பினால் நாளை உண்டு”
அர்த்தமுள்ள வார்த்தைகளாக இருக்கின்றன.

இறுதியாக…
ஜெய்பீம் என்ற தமிழ் திரைப்படம் ஒரு சாதாரண திரைப்படம் அல்ல. ஏதோ வழக்கமான ஒரு படத்தை பார்த்தோம், மறந்தோம் என்று கடந்து போகும் படைப்பு அல்ல. மாறாக, பாதிக்கப்பட்ட இருளர் சமூகத்திலிருந்து எழும் குரல் நீதிமன்றம் வரை வந்து ஓங்கி ஒலிக்கின்ற ஒரு குரலின் பதிவாக இருக்கின்றது. நிச்சயமாக இதை திரைப்படம் பழங்குடிகளின் வாழ்வில் ஒளி ஏற்றக்கூடியதா இருக்கும். இருளர் சமூகம் பற்றி இந்த பொது சமூகத்தின் பொது புத்தியில் உறைந்து கிடக்கின்றது தவறான எண்ணங்கள் களையப்படும் என்று நம்புகின்றேன்.

காக்கி உடை அணிந்தால் ஏழை எளிய மக்கள் மீது பொய் வழக்கு போடலாம். எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற காவல்துறையின் அராஜகத்தை அப்படியே தோலுரித்துக் காட்டுகின்றது. பாதிக்கப்பட்டவர்கள் அப்படியே முடங்கிப் போய்விடாமல் இந்திய அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கை வைத்து, கடைசி வரை போராட்டம் நடத்த முன்வரவேண்டும் என்பதையும் இது உணர்த்துகிறது. உண்மைக்காக போராடுபவர்கள், சமூக அக்கறையுடன் செயல்படும் வழக்கறிஞர்களோடு கைகோர்த்துக்கொண்டு சட்டப் போராட்டம் நடத்த வேண்டும். அதிலும் கூட்டு முயற்சியுடன் நீதிக்கான வெற்றியை நோக்கி நகர வேண்டும் என்பதை இந்த படம் சத்தமாகச் சொல்கின்றது.

ஏழைகளுக்கு கடைசி நம்பிக்கையாய் இருக்கின்ற நீதிமன்றம் அவர்களைக் கைவிட்டு விடாது என்பதற்கு ஜெய்பீம் இறுதியில் வருகின்ற தீர்ப்பு ஒரு நல்ல சாடசியாக இருக்கின்றது. இந்த படத்தின் மூலம் பழங்குடி சமூகத்தின் மீது அரசுக்கு உண்மையிலேயே அக்கறை ஏற்படும் வேண்டும். குறிப்பாக இருளர் சமூகத்திற்கு கல்வி, வேலைவாய்ப்பு, வீட்டு மனை பட்டா வழங்குவது, சாதிச் சான்றிதழ் மற்றும் இதர அரசு சான்றிதழ்கள் வழங்குவது என அனைத்தையும் தருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஏற்கனவே இவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை நீக்க வேண்டும். அதுதான் ஒரு படைப்பு கொண்ட கொண்டு வருகின்ற பங்களிப்பாகும், வெற்றியாகவும் இருக்க முடியும். ஜெய் பீம் என்றால் இருளை அகற்றும் ஒளி என்று பொருள் படும். இந்த் திரைப்படத்தின் வழியாக இருளர் சமூகத்தின் மீது நம்பிக்கை ஒளி வீசட்டும். இதனடிப்படையில், இது தமிழ் சினிமா வரலாற்றில் இன்னொரு மைக்கல்லாக இருக்கும்.

அ.இருதயராஜ் சே.ச

Movie Review: JaiBhim movie by B Shanmugam திரைவிமர்சனம் ஜெய் பீம் - பி.சண்முகம்

திரைவிமர்சனம்: ஜெய் பீம் – பி.சண்முகம்



நேற்று இரவு ஜெய்பீம் படம் பார்த்தோம். கடலூர் மத்திய சிறை வாயிலில் குறவர், இருளர், ஒட்டர் சாதியினர் ஓரமாக நிற்கச் சொல்லி மற்ற சாதியினர் அனைவரும் அனுப்பப்படுகின்றனர். இந்த முதல் காட்சியிலேயே பார்வையாளர்களை நிமிர்ந்து உட்கார வைத்து விடுகின்றார்‌ இயக்குநர். தமிழ்நாட்டில் 1952ஆம் ஆண்டே குற்றப் பரம்பரைச் சட்டம் (ct act)ரத்து செய்யப்பட்டுவிட்டது. இருப்பினும் முன்னாள் குற்றப் பரம்பரையினர் என்று வரையறுத்து திருட்டு வழக்கில் இப்பிரிவு மக்கள் மீது பொய்வழக்கு போடுவதை காவல்துறையினர் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட கதை என்பதை வெளிப்படையாக அறிவித்துள்ளனர். ஆனால் காவல்நிலையத்தில் அடித்து கொல்லப்பட்ட ராஜாக்கண்ணு குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர். முதல் தகவல் அறிக்கையிலேயே இது பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிக்காக போராடிய அவருடைய மனைவி பார்வதி இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். எனக்குத் தெரிந்த வரையில் முன்னாள் குற்றப் பரம்பரையினர் என்ற பெயரில் காவல்துறையின் ஒடுக்கு முறைக்கும் பொய்வழக்கிற்கும் அதிகமாக ஆளானவர்கள் குறவர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள்தான். எல்லா வகையிலும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள்.
ராஜாக்கண்ணுவின் லாக்கப் படுகொலை ஏன் இருளர் பழங்குடி மக்கள் மீதான ஒடுக்குமுறையாக திரைப்படமாக்கப்பட‌ வேண்டும். குறவர் பழங்குடி மக்கள் மீதான ஒடுக்குமுறையாகவே வெளிவந்திருந்தாலும் இதேபோல் படம் வெற்றி பெற்றிருக்கும்.

ஊத்தங்கரை வட்டம் எளச்சூர் கிராம் குறவர் சமூகத்தைச் சேர்ந்த கோவிந்த சாமி குடும்பம் படத்தில் காட்டப்பட்டுள்ளதைவிட பலமடங்கு காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான கொடுமைகளுக்கு உள்ளானது.

இதை நம்முடைய அமைப்புக்கள் சார்பில் நான் வெளிக்கொண்டு வந்தேன். தோழர்.பாலபாரதி இப்பிரச்சினையை சட்டமன்றத்தில் பேசினார். அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் நடந்துள்ள சம்பவங்கள் ஒரு திரைப்பட காட்சிகள் போல் உள்ளது. இருப்பினும் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடுகிறேன் என்றார். இது வாணியம்பாடி காவல் நிலையத்தில் நடந்த கொடுமை. இதில் உயிரிழப்பு மட்டும் தான் இல்லை.

ஆகவே உயிரை இழந்த ராஜாக்கண்ணுவின் குறவர் சமூகத்தின் மீதான ஒடுக்குமுறையாகவே படம் அமைந்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் இது ஒரு குறைதான்.

மூடிமறைக்கப்பட்ட படுகொலையை வெளிக்கொண்டு வந்து மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் பெரும் போராட்டங்களை நடத்தியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி. இதன் விளைவாகத்தான் ஒரு குறவர் சமூகத்தைச் சார்ந்தவர் காவலர்களால் காவல் நிலையத்தில் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் காவல்நிலைய குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை அபராதம் விதிக்கப்பட்ட முதல் வழக்கு இதுதான். ஆகவே இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மகத்தான சாதனைகளில் ஒன்று. கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிகள் காட்டப்படுகிறது என்பதனால் மட்டும் நாம் திருப்தியடைந்து விடமுடியாது. நமது கட்சியின் உழைப்பும் தியாகமும் ஒப்பிடற்கரியது. எதனாலும் அதை ஈடுகட்ட முடியாது. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.