நூல் அறிமுகம்: லஷ்மி சரவணகுமாரின் “ரெண்டாம் ஆட்டம்” – இரா யேசுதாஸ்
விகடன் பிரசுர 2022 விற்பனையில் 4ம் இடம்…
மதுரையின் மறுபக்கத்தை விவரிக்கும் திரில்லர் நாவல் போன்ற ரவுடியிசத்தை மட்டுமே அலசும் நூல்.
இந்த நூலில் இடம் பெற்றுள்ள பல சம்பவங்கள்.. கதாபாத்திரங்கள் மதுரையில் நிகழ்ந்த… நிகழ்ந்து கொண்டிருக்கின்ற உண்மை அரசியல் ரவுடியிச நிகழ்வுகளை விவரிப்பதாக உள்ளது.
கள்ளச்சாராய பாக்கெட்டு விற்பனை, பார் ,கஞ்சா பாக்கெட் விற்பனை, கூலிக்காக கொலைகள், பெண் வியாபாரம், அரசியல் கட்சிகளுக்கு ஆள் சப்ளை, அரசியல் வன்முறைகள், பிக்பாக்கெட், ரவுடி கோஷ்டிகளுக்கு இடையே தொடர்ந்துகொண்டே இருக்கும் பழி தீர்க்கும் கொலை படலங்கள், இதில் காவல்துறையின் கைங்கரியம்.. வழக்கம் போல பெண்ணாடல்கள் ,பெண்ணாசை போர்வையில் நிகழ்த்தப்படும் அழித்தொழிப்புகள்… வன்மம் …ஆசை .. அதிகாரப்போட்டி.. கந்துவட்டிக்காக நடத்தப்படும் மேலாதிக்க நிலை.. மாமூல் வாங்க… எல்லை குறித்து செயல்படுவது.. ரவுடிகளுக்கு இடையே கடைபிடிக்கப்படும் தொழில் நேர்மை- சத்திய கட்டுப்பாடுகள்?!… புலி வாலை பிடித்த கதையாய் வாரிசுகளை காப்பாற்ற முடியாமல் திணறும் ரவுடிகளின் பெற்றோர்… வறட்டு கௌரவத்திற்காக உயிரை துச்சமாக மதித்து வெட்டப்பட்டும்.. குத்தப்பட்டும் எழும் மரண ஓலங்கள்( நல்லவேளை துப்பாக்கி கலாச்சாரம் நூலில் வரவில்லை) வாழ்வின் ஒவ்வொரு நொடியும் மரண பயத்துடன் வலம் வரும் தாதாக்கள்.. வெற்று உதார் விட்டு சாவதும்… மௌனமாகவே இருந்து சாணக்கியத்தனத்துடன் வஞ்சம் தீர்ப்பதும் ….என ஏராளமான கதாபாத்திரங்கள் … இறுதியில் செல்வமும் ஜெகதியும் மட்டுமே மிஞ்சுகிறார்கள்.
திரைப்படங்களை பார்த்துவிட்டு இவர்கள் செய்கிறார்களா …. இவர்களைப் பார்த்துவிட்டு திரைப்படங்கள் எடுக்கப்படுகிறதா .. என்ற அளவிற்கு விறுவிறுப்பான அதே மாதிரியான காட்சிகள் நூல் முழுக்க……
பலி…வலி… வேதனை… ரத்த வாடைக்கவிச்சி… தலையை வெட்டி சீவி எடுத்துக்கொண்டு சர்வ சாதாரணமாக செல்வது.. சிறை வாழ்க்கை… கறி விருந்து.. குடும்ப விழா.. கடவுள் வழிபாடு என்று தொடர்கின்ற கொலை.. கொலை .. கொலை என நீள்கிறது இரண்டாம் ஆட்டம் ( சினிமாவின் இரண்டாவது ஷோ முடிந்த பிறகு நடத்தப்படும் கொலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன)
இந்நூலை படித்துவிட்டு யாரைப் பார்த்தாலும் அவருடைய பின்னணி பற்றி யோசிக்கத் தோன்றுகிறது.. அரசியல் ஆதரவின்றி இவை சாத்தியமில்லை.. அரசியல்வாதிகள்- ரவுடிகளுக்கு இடையேயான உறவும் பாசமும் நூல் முழுதும் விரவி கிடைக்கின்றது.
ரவுடிகள் வாழும் தனி உலகத்தை விலாவாரியாக விளக்குகிறது ரெண்டாம் ஆட்டம்….
நூல் : ரெண்டாம் ஆட்டம்
ஆசிரியர் : லஷ்மி சரவணகுமார்
விலை : ரூ.₹650
வெளியீடு : விகடன் பிரசுரம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]
நூல் அறிமுகம்: அ. இருதயராஜ் சே.ச. ’மெளனம் கலைக்கும் ஜெய் பீம்’ – மயிலை பாலு
ஆவண வரலாற்றில் நிச்சயம் இந்நூல் நிலைக்கும்
வெள்ளித்திரையில் நிழல் உருவங்கள் தான் பேசுகின்றன, அழுகின்றன, சிரிக்கின்றன, கொதிக்கின்றன, போராடுகின்றன ……..
இருப்பினும் இந்த நிழல்கள் நிஜமாகி நமது மனங்களுக்குள்- சிந்தனைக்குள் இறக்கிவைக்கின்ற ரசவாதத்தை ஒரு சில திரைக்கலைஞர்கள் குழுவே வெற்றிகரமாக செய்கிறது
இத்தகைய குழுவாக ஜெய் பீம் திரைப்படத்தை உருவாக்கிய குழு விளங்குகிறது. இருளர் பழங்குடி மக்களின் அன்றாடப்பாடுகளில் ஒரு துளியை எடுத்துக்கொண்டு அதுவும் மெய்யாகவே நடந்ததை எடுத்துக்கொண்டு கலைப்படைப்பாக்கப்பட்டிருப்பது எளிய செயல் அல்ல
சமூகத்தை உற்று நோக்கி ஊடுருவி ஒவ்வொன்றையும் அலசி பகுப்பாய்வு செய்து எண்ணத்தில் பதியமிட்ட உரம் கொண்டால் மட்டுமே இது போன்ற கலைப்படைப்பை உருவாக்க முடியும். அந்த வகையில் ஜெய் பீம் திரைப்படம் மக்களின் மனசாட்சியை உலுக்கியிருக்கிறது . இந்தியாவில் மட்டுமல்ல சீனா போன்ற வெளிநாடுகளிலும் இந்தத் திரைப்படம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இளைத்தவர்கள் என்றால் காவல் துறை எப்படி நடந்துகொள்கிறது? சிறையில் அடைத்து சித்ரவதை செய்கிறது. கொலையே செய்துவிட்டு மூடி மறைக்க முயற்சி செய்கிறது . மனிதாபிமானமும் மனசாட்சியும் காக்கி சட்டை போட்டவுடன் காணாமல் போகின்றன (ஒரு சிலர் விதிவிலக்காக உள்ளனர் ) என்பதையெல்லாம் சினிமாத்தனம் இல்லாமல் மிகைப்படுத்தாமல் காட்சிப் படுத்தியிருப்பதே படத்தின் வெற்றி .
இப்படிப்பட்ட வெற்றிப் படங்களை பார்த்தோமா பாராட்டினோமா அத்துடன் கடமை முடிந்தது என்பதுதான் பொதுவான செயல்பாடு. ஆனால் தனது தனித்துவ செயல்பாட்டை அ. இருதயராஜ் வெளிப்படுத்தி இருக்கிறார். ‘மௌனம் கலைக்கும் ஜெய்பீம் – உரையாடல்கள் / விவாதங்கள்/ கேள்விகள் ‘ என நூலாக்கி ஆவணப்படுத்தியிருக்கிறார் . ‘ இந்த முயற்சி ஒரு புது வரவு ‘ என்று அணிந்துரையில் கவிஞர் சுகிர்தராணி கூறியிருப்பது மிகச்சரியானது.
கலைப்படைப்பையும் அதன் நோக்கத்தையும் புறவயமாக (objective ) பார்க்காமல் அகவய (subjective ) நிலையில் பார்த்து எரிச்சலடையும் தொட்டால் சிணுங்கி போக்கு இப்போது ஆதிக்கரித்துவிட்டது. அது சாதியாக, கட்சியாக, மதமாக வெளிப்படுகிறது. அதுதான் ஜெய் பீம் படத்திற்கும் நேர்ந்துள்ளது .
இது சார்ந்த விமர்சனங்களை, கண்டனங்களை பா.ம..க முன்வைத்த போதும், அதற்கு வன்னியர் என்ற போர்வையையைப் போர்த்திய போதும் தொலைகட்சி நடிகர் அருண் குமார் ராஜன் அதனை நிராகரித்திருப்பது வர்வேற்கத்தக்கது. ‘நானும் வன்னியர்தான்’ என்று கூறி சுயசாதி மறுத்து நியாயத்தின் பக்கம் நின்றிருக்கிறார். இதனை ஆவணப்படுத்தியிருப்பது காலத்திற்கும் கல்வெட்டாய் நிலைத்து நிற்கும்.
” ஏன் இந்தப் புத்தகம் ?” என்று படிப்பு ஆர்வத்தைத் தூண்டும் தலைப்புடன் தொடங்கி, ‘ ஜெய் பீம் படத்தின் வெற்றியும் , கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களும்’ என்று சமூகப் பார்வையை வெளிப்படுத்தும் தலைப்பு ஈறாக செறிவுடன் நூல் அமைந்துள்ளது.
அக்னிசட்டி காட்சியை நீக்கி அந்த இடத்தில் சரஸ்வதி படம் வைத்தால், அது இந்தக் கடவுள் என எச். ராஜா வரிந்துகட்டுகிறார். என்னடா இது அரசியல்!
இது போன்ற அற்பர்களின் பதிவைப் படித்துவிட்டு “திருமணம் செய்து கொண்டால் மனைவி மூலம் மிரட்டுவார்களோ என்பதற்காக ஒத்திவைத்து 39 வயதில் திருமணம் செய்து கொண்டேன் ” என்று கூறும் மார்க்சியவாதி கோவிந்தனின் பதிவுக்குத் தலைவணங்கத் தோன்றுகிறது.
இலக்கியத்துறையில் பெண் விடுதலைப் போராளி சூடாமணியைப் பிற மொழிகளுக்குக் கொண்டு செல்லும் கடமையை நீதியரசர் சந்துருவும் அவரது இணையா பேராசிரியர் பாரதியும் செய்துகொண்டிருக்கிறார்கள். இப்போது திரைத்துறையில் இருளர் சமூகத்திற்கு நீதி கேட்கும் போராட்டத்தை கதைக்களமாக்கி சந்துரு முத்திரை பதித்துள்ளார்.
‘ஜெய் பீம் ‘ வெறும் படமல்ல ; கடந்த காலத்துக்கு உயிர் தந்து நிகழ்காலத்திற்கும் எதிகாலத்திற்கும் பாடமாக விளங்கும் என்ற தொலை நோக்கோடு நூலின் ஒவ்வொரு பகுதியும் மணி மணியாகக் கோர்க்கப்பட்டுள்ளது .
திரைப்பட இயக்குனர் த. செ . ஞானவேல், நாயக பிம்பத்தை ஒதுக்கிவைத்துவிட்டு வழக்கறிஞர் சந்துருவாகவே வாழ்ந்திருக்கும் சூர்யா உள்ளிட்ட குழுவினருக்கு திரையுலக வரலாற்றில் தனித்துவமான இடமிருக்கும். அதே அளவுக்கு இந்நூலாசிரியர் அ . இருதயராஜ் அவர்களுக்கும் ஜெய் பீம் குறித்த ஆய்வு ஆவணப் பதிவுத்துறையில் நிச்சயம் ஓர் இடமிருக்கும்.
“கத்தி எடுத்து ஒருவனைக் குத்தினால் தான் வன்முறை என்பதல்ல….. கண்ணெதிரே நடக்கின்ற கொடூரத்தைக் கண்டும் காணாமல் மெளனமாக இருப்பதும் ஒருவன் முறை தான் ” என செல்வானாம் பதிப்பகக் கருது ஒவ்வொருவர் இதயத்திலும் பட வேண்டிய காலத்தின் கட்டாயமாகும்.
– மயிலை பாலு
நூல் : மெளனம் கலைக்கும் ஜெய் பீம் உரையாடல்கள் | விவாதங்கள் | கேள்விகள்
ஆசிரியர் : அ. இருதயராஜ் சே.ச
வெளியீடு : செவ்வானம்
விலை : ரூ. 200/-
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]
திரைவிமர்சனம்: THE EXPERIMENT – சிரஞ்சீவி இராஜமோகன்
DAS EXPERIMENT – THE EXPERIMENT – OLIVER HIRSCHBIEGEL – 2001
GERMAN DRAMA THRILLER
வேலை இல்லாத இளைஞர்கள் அல்லது பார்ட் டைம் வேலை தேடுவோருக்கு ஒரு அறிய வாய்ப்பு ஒரு அறிவியல் ஆய்விற்கு 20 இளைஞர்கள் தேவை , 2 வாரம் வேலை, நல்ல சம்பளம் சன்மானம் வழங்கப்படும் – பேப்பரில் விளம்பரம் பார்த்து விண்ணப்பிக்கலாம் என்று யோசிக்கும் கதாநாயகன். கதாநாயகன் டாக்ஸி டிரைவர். அந்த அறிவியல் ஆய்விற்கு தன்னை விண்ணப்பித்து கொள்கிறார். தன்னுடன் சேர்ந்த 20 இளைஞர்களுடன் நேர்முக்க தேர்வு நாள் அன்று. முதலிலேயே கெடுபிடி அதிகமாக உள்ளது. இது ஒரு அறிவியல் ஆய்வு என்றாலும் கூட உங்களுடைய மன பலமும் உடல் பலமும் சற்று அழுத்தமாக ஆராயப்படும் ஆய்வு ஆரம்பித்த பின்னர் பாதியில் வெளியில் செல்ல அனுமதி இல்லை விருப்பமில்லாதவர்கள் இப்போதே விலகிக் கொள்ளலாம் என்று ஒரு பணிப்பெண் நேர்முகத் தேர்வின் முதல் கட்டமாக அனைவரையும் எச்சரிக்கிறாள். அறிவியல் ஆய்வுதானே பார்த்துக் கொள்ளலாம் என்றும் அனைவரும் இளைஞர்கள் என்பதாலும் எந்தவித சலனமும் இன்றி விளையாட்டாக தைரியமாக ஆய்விற்கு 20 இளைஞர்களும் தங்களை உட்புகுத்திக் கொள்கிறார்கள்.
அடிப்படை உடல்நல மனநலக் கூறுகள் பரிசோதிக்கப்படுகின்றன. பின்பு ஆய்விற்கு தலைமையான சைக்காலஜிக்கல் டாக்டர் 20 இளைஞர்களையும் இரண்டு பிரிவாக தனித்தனியே பிரியும்படி சொல்கிறார். இருவருக்கும் அதாவது இரண்டு பிரிவினருக்கும் தனித்தனியே சீருடை வழங்கப்படுகிறது 10 பேர் ஜெயில் கைதிகள் 10 பேர் அவர்களைபாதுகாக்கும் போலீஸ் அதிகாரிகள். அனைவரும் சந்தோஷமாக விளையாட்டுத்தனமாக ஜெயில் கைதிகளுக்கான சீருடையையும் போலீஸ்காரர்களுக்கான சீருடைகளையும் அணிந்து ஆட்டம் போட்டுக் கொண்டு பாட்டு பாடிக்கொண்டு விளையாடிக் கொண்டு உள்ளே செல்கின்றனர். உள்ளே சென்ற பின்பு அனைவருக்கும் சிறு சிறு டாஸ்க்கள் சொல்லப்படுகின்றன இந்த பத்து ஜெயில் கைதிகளையும் ஒழுக்கமாக அமைதியாக கூச்சல் இன்றி பார்த்துக் கொள்வதே போலீஸ்காரர்களின் வேலை. எக்காரணம் கொண்டு அடிதடியில் யாரும் இறங்க கூடாது அப்படி வன்முறையில் ஈடுபட்டால் அந்த கணமே அவர்கள் விளையாட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். சுருக்கமாக சொல்லப்போனால் நமது பிக் பாஸ் விளையாட்டு போல் தான் ஆரம்பிக்கிறது.
போட்டியின் முதல் நாள் அன்று அனைவருக்கும் பாட்டு பாடுவது விளையாடுவது போன்ற சிறுசிறு டாஸ்க் கொடுக்கப்படுகின்றன போலீஸ்காரர்களும் விளையாட்டாக அதட்டி அங்கே போ இங்கே போ என்று கட்டளையிட்டு அமைதியை நிலைநாட்டுகின்றனர். என்னதான் அறிவியல் ஆய்வு மற்றும் விளையாட்டாக இருந்தாலும் போலீஸ்காரர்களுக்கு உரித்தான சிறிய தலைக்கனம் இந்த பத்து போலீசாரர்களிடையே லேசாக தெரிகிறது அதேபோல் ஜெயில் கைதிகளுக்கும் தாழ்வு மனப்பான்மை ஆங்காங்கே தோற்றுவிக்கிறது. கதாநாயகன் விளையாட்டாக போலீஸ்காரர்கள் சொல்வதை அவ்வப்போது மீறுவதும் விளையாடுவதும் அவர்களை கேலி செய்வதுமாய் இருக்கிறார். கொடுக்கப்பட்ட உணவு பண்டங்களை வீணடிக்காமல் சாப்பிட வேண்டும் என்பது அனைவருக்கும் உண்டான பொது கட்டளை. ஒருவருக்கு பசும்பால் பிடிக்காது எனவே அவர்களுக்கு பதில் கதாநாயகன் அதனை பருகுவது போலீசார்களிடையே எரிச்சலை உண்டாக்கி மோதல் ஆரம்பிக்கிறது.
கதாநாயகனை வன்மையாக கண்டித்து தண்டனை கொடுக்க வேண்டும் என்று போலீஸ்காரர்கள் பேசி கொள்கின்றனர். அடிதடி வன்முறை கூடாது என்பதை மனதில் வைத்து கொள்ளுங்கள் என்பதை அவர்களில் ஒருவர் ஆணித்தனமாக கூறுகிறார். இந்த சலசலப்புகள் அனைத்தும் அங்கங்கே தனியாக பொருத்தப்பட்ட கேமராக்களில் கண்காணிக்கப்பட்டு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பணிப்பெண்ணை ஆய்வை தொடர்ந்து நடத்துமாறும் சிறிய வேலை நிமித்தமாக தலைமை அதிகாரி வெளிய சென்றுள்ளதாகவும் போலீஸ் காரர்களுக்கு தகவல் வருகிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கதாநாயகனை வன்முறைக்கு உட்படுத்துகின்றனர் போலீஸ்காரர்கள் அடிபட்ட கதாநாயகனுக்கு உதவி செய்யும் பொது கைதிகளில் ஒருவர் உண்மையான போலீஸ் எனவும் மாறுவேடத்தில் இந்த ஆய்வினை அரசாங்கத்திற்கு எடுத்து சென்று தடுக்க வந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
ஜெயில் கைதிகளில் ஒருவரான உண்மையான போலீஸ் தவிர மற்ற அனைவருக்கும் மன நோய் உண்டாகிறது வீட்டை குழந்தைகளை காதலியை நினைத்து ஹாலுசினேஷன் பிடிக்கிறது. போலீஸ் வேடமணிந்தோர் குடித்துவிட்டு பண்ணும் அட்டூழியங்கள் ஜெயில் கைதிகளை கோபமூட்டி அவர்களை எதிர்க்க வைக்கிறது அனைவரின் மனமும் பித்து பிடித்தது போல் வன்முறைக்கு தூண்டப்படுகிறது. பணிப்பெண்ணை பாலியல் உறவுக்கு உட்படுத்தும் அளவிற்கு போலீஸ்காரர்களின் மனநிலை பாதிக்கப்பட்டு விடுகிறது. கைதிகளில் ஒருவர் உயிரை விடும் அவலம் ஏற்படுகிறது. இதற்குப் பிறகு தலைமை அதிகாரி வந்தாரா கதாநாயகனின் காதலி கதாநாயகனை தேடி வந்தாளா அவர்கள் இந்த அறிவியல் ஆய்வை அரசாங்கத்திடம் தெரிவித்தார்களா எப்படி தப்பித்தார்கள் என்பது படத்தை நீங்கள் பார்க்கும் போது உங்களுக்கு என்னால் ஆன பரிசு.
சிறு குழந்தைகள் இதயம் பலவீனமானவர்கள் இந்த படத்தை பார்ப்பதை தவிர்க்கவும் நன்றி.
கதையின் பலம் : விறுவிறுப்பு
பலவீனம் : சற்றே மனதை உருக்குலைக்க செய்யும் காட்சிகள், அடல்ட் கன்டென்ட்ஸ்
மேலும் இது போன்ற வித்தியாசமான திரைக்கதை உள்ள திரைப்படங்களை எனக்கு பகிரவும் இந்த திரைப்பட விமர்சனம் எவ்வாறு இருந்தது என்பதை விமர்சிக்க விரும்புகிறேன் என்னுடைய அலைபேசி எண்களையும் பகிர்ந்து உள்ளேன் நன்றி.
சிரஞ்சீவி இராஜமோகன்
கும்பகோணம்
[email protected]
9789604577
7708002140
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணை ஆணைய அறிக்கை – நிராயுதபாணியாகளாக இருந்த பொதுமக்களுக்கு எதிராக கொடூரமான குற்றங்களை இழைத்த காவல்துறை உயரதிகாரிகள் – தமிழில்: தா.சந்திரகுரு
இளங்கோவன் ராஜசேகரன்
ஃப்ரண்ட்லைன்
2022 ஆகஸ்ட் 19
நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் 2022 மே 18 அன்று சமர்ப்பிக்கப்பட்ட விசாரணை ஆணைய அறிக்கையில் இடம் பெற்றுள்ள, ஃப்ரண்ட்லைனுக்குக் கிடைத்த பகுதிகளிலிருந்து:
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் நோக்கி 2018 மே 22 அன்று பேரணியாகச் சென்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்களை விரட்டியடித்த காவல்துறையினர்
தொழிற்சாலையால் உருவாகும் மாசுபாட்டிற்கு எதிராக, தமிழ்நாட்டின் துறைமுக நகரமான தூத்துக்குடியில் 2018ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் விசாரணை மேற்கொண்டது. பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட அந்த துப்பாக்கிச்சூட்டை காவல்துறை மேற்கொண்ட மிக மோசமான செயல் என்று ஆணையம் விவரித்துள்ளது.
2018 மே 22, 23 ஆகிய நாட்களில் காவல்துறையால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்து அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆணையத்தின் இறுதி அறிக்கையில் ‘அதை மிகவும் கேவலமான செயல் என்று குறிப்பிடுவதற்கு ஆணையத்திடம் தயக்கம் எதுவுமில்லை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த துப்பாக்கிச்சூட்டில் ஸ்னோலின் ஜாக்சன் என்ற பதினெட்டு வயது பள்ளி மாணவி உட்பட பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மற்றும் பலர் குண்டு காயங்களுக்கு உள்ளாகினர். துப்பாக்கிச்சூட்டில் ஏற்பட்ட காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
2018 மே 22 அன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள் மீது சாதாரண உடையில் இருந்த காவலர் நடத்திய துப்பாக்கிச் சூடு
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதாகக் கூறி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்குச் சொந்தமான தாமிர உருக்காலைக்கு எதிராக அப்பகுதியில் வசித்து வந்தவர்கள் நூறு நாட்களாக அமைதியுடன் நடத்தி வந்த போராட்டம் வரலாறு காணாத வன்முறையில் முடிவடைந்தது. தடுத்து நிறுத்தப்பட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் காவல்துறையின் அடக்குமுறைக்கு உள்ளாகினர்; காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். 2018 மே 23 முதல் மே 28 வரை தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக அந்த மாவட்டத்தில் இணைய வசதிகள் முழுமையாக முடக்கப்பட்டன.
நூறாவது நாள் போராட்டத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பேரணியின் மீது அதீத வன்முறையைப் பயன்படுத்தினார்கள் என்றும், தங்களுக்குள் அவர்கள் ஒருங்கிணைப்புடன் செயல்படவில்லை என்றும் காவல்துறை உயரதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மீது துப்பாக்கிச்சூடு குறித்த விசாரணையை மேற்கொண்ட சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் குற்றம் சாட்டியுள்ளார். அத்தகைய குற்றத்தை இழைத்த அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கைகள் மற்றும் துறைரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.
ஐந்து தொகுதிகளாக மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் உள்ள முக்கிய பகுதிகள் ஃப்ரண்ட்லைனுக்கு பிரத்யேகமாகக் கிடைத்துள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் 2022 மே 18 அன்று சமர்ப்பிக்கப்பட்ட விசாரணை அறிக்கையில் உள்ள குறிப்பிட்ட பிரிவுகளில், நிராயுதபாணியாக இருந்த பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்காக அதிகாரப்பூர்வ இயந்திரம், காவல்துறை மீது மிகத் தெளிவான கண்டனம் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை ஆணையத்தின் அறிக்கையானது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் மாநில சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று 1952ஆம் ஆண்டு விசாரணை ஆணைய சட்டப் பிரிவு 3(4) குறிப்பிடுகிறது.
ஆணையம் மேற்கொண்ட விரிவான பகுப்பாய்வு
தமிழ்நாடு மாநிலம் இதுவரையிலும் கண்டிராத மிக மோசமான காவல்துறை நடவடிக்கைகளில் ஒன்றாக நடைபெற்ற அந்தச் சம்பவத்தை மிக உன்னிப்பாக மறுகட்டமைத்து, கொந்தளிப்பான அந்தப் பிரச்சனை குறித்து விசாரணை ஆணையம் மிகவும் விரிவான, முழுமையான ஆய்வை மேற்கொண்டது. வன்முறையில் ஈடுபட்ட கும்பலை அடக்குவதற்காக காவல்துறை துப்பாக்கிச் சூட்டை மேற்கொள்ள வேண்டியிருந்தது என்று தெரிவித்த அப்போதைய அதிமுக அரசின் கூற்றுகளை நிராகரித்த அருணா ஜெகதீசன் ‘போர்க்குணத்துடன் இருந்த போராட்டக்காரர்களின் கூட்டத்தைக் கையாளும் வகையிலேயே அந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்று அரசு கூறுவதை நிறுவுவதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். போராட்டக்காரர்களிடமிருந்து எந்தவொரு தூண்டுதலும் இல்லாமலேயே காவல்துறை அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
2018 ஜூன் 4 அன்று தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரித்த விசாரணை ஆணையத் தலைவர் நீதிபதி அருணா ஜெகதீசன்
‘தப்பியோடிய போராட்டக்காரர்கள் மீதே காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும் விசாரணை ஆணைய அறிக்கையில் ‘தங்களிடமிருந்து வெகு தொலைவில் இருந்த போராட்டக்காரர்களை காவல்துறையினர் மறைவிடங்களில் இருந்து சுட்ட நிகழ்வுகளும் அப்போது நடந்துள்ளன’ என்றும் கூறப்பட்டுள்ளது. எங்கிருந்து, எந்த திசையில் இருந்து தோட்டாக்கள் வருகின்றன என்பதைப் போராட்டக்காரர்கள் அறிந்திராத காரணத்தாலேயே அங்கே நிலவிய ஒட்டுமொத்த குழப்பம் மற்றும் அழிவு, மரணம் போன்றவை நடந்தேறின என்று விசாரணை ஆணைய அறிக்கை தெளிவுபடுத்திக் கூறுகிறது.
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த முதல் துப்பாக்கிச் சூட்டில் ஐந்து போராட்டக்காரர்கள் உயிரிழந்த நிலையில், ஆட்சியர் வளாகத்தில் உள்ள ஹெரிடேஜ் பூங்காவிற்குள் மறைந்திருந்து பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டனர் என்று அறிக்கை கூறுகிறது.
2018 மே 22 அன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்குச் சொந்தமான தாமிர உருக்காலைக்கு எதிராக நடைபெற்ற நூறாவது நாள் போராட்டம் வரலாறு காணாத வன்முறையில் முடிந்தது
அப்போதைய ஆளுங்கட்சியான அதிமுகவை மிகவும் மோசமாகச் சங்கடத்திற்குள்ளாக்கிய அந்தச் சம்பவம் குறித்து மிகவும் மோசமான திருப்பத்தை அளிக்கும் வகையில் இருக்கின்ற அந்த அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. விதிகளைப் பின்பற்றாததைக் காரணம் காட்டி வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் உத்தரவின் அடிப்படையில் மே 28 அன்று அன்றைய அரசு அந்த ஆலையை மூடியது. பொதுமக்களின் துயரத்திற்கு காரணமானவர்கள் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று 2021 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக உறுதியளித்திருந்தது.
மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை
குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் காவல்துறை உயரதிகாரிகள்
அந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு காவல்துறை உயரதிகாரிகள் சிலரை விசாரணை ஆணையம் பொறுப்பேற்க வைத்துள்ளது. அப்போதைய தென்மண்டலக் காவல்துறை ஐஜி ஷைலேஷ் குமார் யாதவ் – தற்போது காவல்துறை கூடுதல் டிஜிபி (காவலர் நலன்); திருநெல்வேலி பகுதி துணைக் காவல் கண்காணிப்பாளர் கபில்குமார் சி.சரத்கர் – தற்போது சென்னை நகர கூடுதல் காவல் ஆணையர்; தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் பி.மகேந்திரன் – தற்போது சென்னை துணை ஆணையர் (நிர்வாகம்); காவல்துறை துணை கண்காணிப்பாளர் (தூத்துக்குடி) லிங்கத்திருமாறன்; மூன்று காவல் ஆய்வாளர்கள், இரண்டு துணை ஆய்வாளர்கள், தலைமைக்காவலர் ஒருவர் மற்றும் ஏழு காவலர்கள் அவர்களில் அடங்குவர்.
அந்த அதிகாரிகள் ‘நிச்சயமாக வரம்பை மீறியிருக்கிறார்கள்’ என்று குறிப்பிட்டுக் காட்டியிருக்கும் ஆணைய அறிக்கை அந்தக் காவல்துறை அதிகாரிகள் மீது துறைரீதியான பணிகளைப் புறக்கணிக்கணித்ததற்காக குற்றவியல் நடவடிக்கையைத் தொடங்குவதற்கான பாரபட்சம் எதுவுமற்ற நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளது.
தன்னுடைய பொறுப்பைத் தட்டிக் கழித்தது, ஒட்டுமொத்த அலட்சியம், தவறான முடிவுகளை மேற்கொண்டது போன்ற காரணங்களுக்காக தற்போது ஹைதராபாத்தில் உள்ள தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தில் இருக்கின்ற, அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் மீது தனிப்பட்ட முறையில் விசாரணை அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. மே 22 அன்று ஒட்டுமொத்த நகரமும் முற்றுகையிடப்பட்டிருந்த வேளையில், தூத்துக்குடியில் உள்ள தலைமை அலுவலகத்தில் தங்கியிருப்பதற்குப் பதிலாக மாவட்ட ஆட்சியர் நூறு கிலோமீட்டர் தொலைவில் கோவில்பட்டியில் இருந்துள்ளார். துறைரீதியான நடவடிக்கையை அவர் மீது அரசு மேற்கொள்ள வேண்டுமென்று ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
பாய்ந்த குண்டுகள் குறித்த (பாலிஸ்டிக்ஸ்) அறிக்கை
காவல்துறை நடவடிக்கையில் இருந்த மற்றுமொரு அம்சத்தை விசாரணைக்குழு ஆய்வு மேற்கொண்ட பாய்ந்த குண்டுகள் குறித்த பாலிஸ்டிக்ஸ் அறிக்கை வெளிப்படுத்திக் காட்டியுள்ளது. ‘துப்பாக்கிச் சூடு நீண்ட தூரத்தில் இருந்து (ஆயுதங்களைக் கொண்டு) நடத்தப்பட்டிருக்கிறது, குறுகிய தூரத்திலிருந்து அல்ல’ என்று குறிப்பிட்டு குருவிகளைப் போல போராட்டக்காரர்கள் எவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பதை அந்த அறிக்கை விவரித்துள்ளது (துப்பாக்கி கொண்டு நசுக்கப்பட்ட போராட்டம் – Gunning down a protest, ஃப்ரண்ட்லைன், 2018 ஜூன் 22).
பாலிஸ்டிக்ஸ் அறிக்கையில் இருக்கின்ற ‘நீண்ட தூரத்திலிருந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு’ என்ற கூற்றுடன் பிரேத பரிசோதனை அறிக்கைகள், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களிடமிருந்த காயங்கள் பற்றிய ஆய்வுகள் ஒத்துப் போகின்றன. காவல்துறை தப்பியோடிய பொதுமக்கள் மீது எவ்வாறு துப்பாக்கிச் சூட்டை நடத்தியது என்பதை துப்பாக்கிச் சூட்டால் ஏற்பட்ட காயங்களின் தன்மையிலிருந்து ஆணையம் ஊகித்தறிந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் உடலில் தோட்டாக்கள் நுழைந்து, வெளியேறிய இடங்கள் தோட்டாக்கள் மண்டை ஓட்டின் பின்புறத்திலிருந்து நுழைந்து முகத்தின் முன்பகுதி வழியாக வெளியேறியிருப்பதைக் காட்டுகின்றன. தங்களை எது தாக்கியது என்பதுகூடத் தெரியாமலேயே பாதிக்கப்பட்டவர்கள் இறந்து போயினர் என்பது இப்போது நிரூபணமான உண்மையாகி இருக்கிறது. இறந்து போன பதின்மூன்று பேரில் ஸ்னோலின் ஜாக்சன் உட்பட ஆறு பேர் பின்னால் இருந்து சுடப்பட்டே இறந்து போயிருக்கின்றனர் என்று 2019 மார்ச் 13 ஃப்ரண்ட்லைன் பதிப்பில் வெளியான ‘வெளிப்படுத்திக் காட்டும் அறிக்கை’ (Revealing Report) என்ற கட்டுரை கூறுகிறது.
காவல்துறை நிலையியற் கட்டளைகள் (பிஎஸ்ஓ) அல்லது அத்தகைய சூழ்நிலைகளுக்கென்று வகுக்கப்பட்டுள்ள ‘செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத செயல்கள்’ போன்றவற்றை காவல்துறை பின்பற்றவில்லை என்று ஆணைய அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. பிஎஸ்ஓவில் உள்ளவாறு எச்சரிக்கைகள், கண்ணீர்ப்புகை அல்லது தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்துதல், தடியடி அல்லது எச்சரிக்கும் வகையில் வானத்தை நோக்கிச் சுடுதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் காவல்துறையால் மேற்கொள்ளப்படவில்லை (காவல்துறை நிலையியற் கட்டளைகளை மீறுதல் – Violation of Police Standing Order, ஃப்ரண்ட்லைன், 2018 ஜூன் 6).
ஆதாரமற்ற கூற்றுகள்
பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட அறிக்கைகள், ஆதாரங்கள் மூலம் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த விரிவான ஆய்வுகளிலிருந்து கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதாலேயே காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது என்பதாக அப்போதைய மாநில அரசாங்கத்தின் கூற்றை உறுதிப்படுத்துவதற்கான எந்தவொரு ஆதாரமும் ஆணையத்திற்குக் கிடைக்கவில்லை.
மே 22 பேரணியில் பங்கேற்றவர்கள் நிராயுதபாணிகளாக இருந்ததையும், கற்களை வீசுவதில் மட்டுமே அவர்கள் ஈடுபட்டிருந்தனர் என்பதையும் சுட்டிக் காட்டுகிற ஆணைய அறிக்கை காவல்துறையினரின் உயிர் அல்லது உடலுக்கு உடனடி அச்சுறுத்தலாக எதுவும் நடக்கவில்லை என்று குறிப்பிடுகிறது.
ஆணைய அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: ‘மோசமாக காயம் அடைந்த மணிகண்டன் என்பவரைத் தவிர எந்தவொரு காவல்துறையினருக்கும் மரணத்தை ஏற்படுத்தும் வகையிலான காயங்களோ அல்லது வேறுவிதமான மோசமான காயங்களோ ஏற்பட்டிருக்கவில்லை. காவல்துறையினர் காயம் அடைந்தனர் என்று காவல்துறையால் கூறப்படுகின்ற அனைத்து நிகழ்வுகளிலும் காயங்கள் மிகச் சிறியவையாகவே இருந்துள்ளன. சிறிய அளவிலான வீக்கம் அல்லது உள்காயத்தைத் தவிர வேறு எந்த காயமும் காணப்படவில்லை’.
‘ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிச் சென்ற போராட்டக்காரர்களைத் தடுப்பதற்கான வாய்ப்பு காவல்துறையிடம் இருந்தது. ஆனாலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒவ்வொரு கட்டத்திலும் நிலைமையை அவர்கள் திறமையின்றி கையாண்டவிதம் செயல்படுவதில் சிரமத்தை ஏற்படுத்தியது’ என்று அந்த அறிக்கை கூறுகிறது.
தூத்துக்குடியில் 2018 மே 22 அன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போராட்டக்காரர்களால் எரிக்கப்பட்ட வாகனங்கள்
காவல்துறையினரால் போராட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை அறிந்ததும் அங்கே திரண்டிருந்தவர்கள் கோபத்துடன் எதிர்வினையாற்றினர். ஆத்திரத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அவர்கள் எரித்தனர். உடனடியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதற்குப் பதிலாக அந்தக் கூட்டத்தைக் கட்டுப்படுத்த உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாத ஆயுதங்களை, வழிமுறைகளைக் காவல்துறை பயன்படுத்தியிருக்க வேண்டும். துப்பாக்கிச்சூட்டின் போது இடுப்பு, முழங்கால்களுக்குக் கீழே குறிவைத்து காவல்துறையினர் சுடவில்லை என்று அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. அவ்வாறு சுடுவது மிகவும் சிறப்பான தடுப்பு நடவடிக்கையாக இருந்திருக்கும். ஆனால் நகரின் பல்வேறு இடங்களில் கூடியிருந்த மக்களை நோக்கி காவல்துறையினர் கண்மூடித்தனமாகவே துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்திக் காட்டியிருந்தனர்.
‘நிரூபணமான தோல்வி’
காவல்துறை அதிகாரிகளை முறையாக ஒழுங்கமைப்பதிலும், தேவையான உத்தரவுகளைத் திறம்பட வழங்குவதிலும் காவல்துறை உயரதிகாரிகளிடம் நிரூபணமான தோல்வியே காணப்பட்டது என்று விசாரணை ஆணையம் கூறுகிறது.
நகரத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூடு பற்றி காவல்துறை மூத்த அதிகாரியான ஐஜி ஷைலேஷ் குமார் யாதவ் முழுமையாக அறிந்திருக்கவில்லை என்று ஆணைய அறிக்கை குறிப்பிடுகிறது. டிஐஜி கபில்குமார் சி.சர்கார், டிஎஸ்பி லிங்கத்திருமாறன் ஆகியோரால் ஆட்சியர் அலுவலகம் அருகே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது குறித்து ஐஜிக்கு தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதேபோல் காவல் ஆய்வாளர் திருமலையின் அறிவுறுத்தலின் பேரில் துணை ஆய்வாளர் ரெனஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது குறித்தும் ஐஜிக்கு தகவல் அளிக்கப்படவில்லை.
கொலைகார சுடலைக்கண்ணு
உயரதிகாரிகளிடையே இவ்வாறாக ஒருங்கிணைப்பு எதுவும் இல்லாதிருந்தது குழப்பத்தை மேலும் அதிகப்படுத்தவே செய்தது. காவல்துறை மேற்கொண்ட சட்டத்திற்கு புறம்பான சாகசங்களை மேற்கோள் காட்டுவதற்கு சுடலைக்கண்ணு என்ற காவலரைத் தனிமைப்படுத்தி குறிவைத்து சுட்ட ‘ஏஸ்-ஷூட்டர்’ என்று அவரை ஆணையம் அழைக்கிறது.
மே 22 அன்று நீண்ட தூரத்திற்குச் சுடக்கூடிய, தானாக குண்டுகளை ஏற்றிக் கொள்ளும் துப்பாக்கியை (SLR) நகரம் முழுவதும் மிகுந்த விருப்பத்துடன், உற்சாகத்துடன் சுமந்து சென்ற ஒரே காவலராக சுடலைக்கண்ணு இருந்தார் என்று அறிக்கை கூறுகிறது. அந்த துப்பாக்கியைக் கொண்டு ஆட்சியர் அலுவலகம், மூன்றாம் மைல், இந்திய உணவுக் கழக (எஃப்சிஐ) ரவுண்டானா, திரேஷ்புரம் போன்ற இடங்களில் அவர் பதினேழு சுற்றுகள் சுட்டதில் பலர் உயிரிழந்தனர்.
ஐஜி (மதுரை ரேஞ்ச்), டிஐஜி (திருநெல்வேலி) ஆகிய இருவருமே தமிழர்கள் இல்லை. அந்தப் பகுதியின் மொழி, நிலப்பரப்புக்கு புதியவர்களாக இருந்த அவர்கள் இருவரும் ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கும்பலைக் கட்டுப்படுத்துவதற்காக போராடிக் கொண்டிருந்த நிலையில், இந்திய உணவுக்கழக குடோனில் இரண்டு பேர் சுடலைக்கண்ணுவுடன் இருந்த தூத்துக்குடி எஸ்பி மகேந்திரன், பக்கத்து திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அருண் சக்தி குமார் ஆகியோரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பின்னர் திரேஷ்புரத்தில் பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் பலியானார். அந்த இரண்டு அதிகாரிகளும் தங்களுடைய நடமாட்டம், செயல்பாடுகள் குறித்து ஐஜி உள்ளிட்ட பிற மூத்த அதிகாரிகளுக்கு தகவல் எதுவும் அளிக்கவில்லை.
அடுத்த நாள் – மே 23 அன்று அண்ணாநகருக்குச் சென்ற எஸ்பி மகேந்திரன் முந்தைய நாள் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்காக எதிர்ப்புத் தெரிவித்த இளைஞர்கள் கூட்டத்தின் கோபத்தை எதிர்கொண்டார். அதனைத் தொடர்ந்து அங்கே நடந்த கல்வீச்சில் காவல்துறை அதிகாரி ஒருவரின் இடது காலில் ரத்தக்காயம் ஏற்பட்டது. சூழ்நிலையை உணர்வுப்பூர்வமாக கையாளுவதற்குப் பதிலாக அந்த எஸ்பி துப்பாக்கி வைத்திருந்த தன்னுடைய உதவியாளர் ஸ்டாலினிடமிருந்த கைத்துப்பாக்கியை எடுத்து ஒன்பது சுற்று துப்பாக்கிச் சூடு நடத்தினார். அதன் விளைவாக இருபத்தைந்து வயது இளைஞர் ஒருவரின் மரணம் நிகழ்ந்தது. மற்றும் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
காவல்துறை ஐஜியே குற்றங்களுக்கான காரணம்
அமைதியைச் சீர்குலைக்கக் கூடிய சாத்தியக்கூறுகளுடனான நிகழ்வுகள் மே 22 அன்று நடைபெறலாம் என்பதாக வலுவாகப் பரிந்துரைக்கப்பட்ட உள்ளீடுகளை உளவுத்துறை பெற்றிருந்தது. ஆயினும் அவற்றை எதிர்கொள்வதற்கான தகுந்த உத்திகளை உருவாக்கத் தவறியதற்கு ஐஜியே காரணம் என்று ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் நடந்த ஆரம்பகட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் இறந்த பிறகு, காவல்துறைக்கு எதிராக வன்முறை நடந்து விடும் என்ற பயம் காரணமாகவே ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திட ஐஜி உத்தரவிட்டார் என்று அந்த அறிக்கை கூறுகிறது. மீண்டும் அங்கே வரவழைக்கப்பட்ட சுடலைக்கண்ணு மற்றொரு காவலர் சொர்ணமணியுடன் சேர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அந்த இடத்தில் மேலும் மூவர் கொல்லப்பட்டனர்.
விசாரணை ஆணையத்தின் கண்டுபிடிப்புகள் தூண்டுதல் எதுவும் இல்லாமலேயே காவல்துறையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தினர் என்று பரிந்துரைக்கின்றன. ‘காவல்துறை அத்துமீறி நடந்து கொண்டது என்ற முடிவிற்கு வருவது தவிர்க்கவே முடியாததாகிறது. ஒட்டுமொத்த உண்மைகள், சூழ்நிலைகளின் தன்மையைக் கொண்டு பார்க்கும் போது, தங்களுடைய தனிப்பட்ட பாதுகாப்பிற்கான உரிமையைப் பயன்படுத்திக் கொண்டு காவல்துறை அவ்வாறு செயல்பட்டது என்று கூற முடியவில்லை. உண்மையில் காவல்துறையும் அவ்வாறாகச் சொல்லவில்லை’ என்றே அறிக்கை கூறுகிறது.
செயலில் இறங்கிடாத ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் நிலைமையைக் கையாண்ட விதம் குறித்து வேதனை தெரிவித்துள்ள ஆணையம், ஆட்சியர் ஆரம்பத்திலிருந்தே அலட்சியத்துடன் இருந்ததாகவே தோன்றுகிறது என்று குறிப்பிடுகிறது. மே 22க்கு முன்பாக நடைபெற்ற அமைதிக்குழுக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையேற்கவில்லை. அந்தக் கூட்டத்தை தீவிரமாகக் கருத்தில் எடுத்துக் கொண்டு அதை துணை ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் கையாளுவதை மாவட்ட ஆட்சியர் தவிர்த்திருப்பாரேயானால் அந்தப் பிரச்சனை இதுபோன்று தோல்வியில் முடிந்திருக்காது. அந்த நேரத்தில் தன்னுடைய முகாம் அலுவலகத்தில்தான் ஆட்சியர் இருந்துள்ளார் என்பதையும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மே 22 அன்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டக்காரர்களின் திட்டம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று ஆட்சியர் ஆணையத்திடம் தெரிவித்துள்ளார். மேலும் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை ஐஜி, டிஐஜி அல்லது எஸ்பி என்று யாருமே தன்னிடம் பகிர்ந்து கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். ஆனால் ஊரில் நிலவிய பதற்றத்தைத் தணிப்பதற்காக மற்றொரு அமைதிக் கூட்டத்தை மாவட்ட ஆட்சியரான அவர் வெகுவிரைவாகக் கூட்டியிருந்திருக்க வேண்டும் என்று கூறி அவரது கோரிக்கையை ஆணையம் முற்றாக நிராகரித்துள்ளது.
அருணா ஜெகதீசன் ஆணையத்தின் முன்பு ஆஜரான மாவட்ட முன்னாள் ஆட்சியர் வெங்கடேஷ்
தடை உத்தரவுகள்
தூத்துக்குடி நகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 144-ன் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்று எஸ்பி மகேந்திரன் வலியுறுத்தினார். ஆயினும் ஆட்சியர் அந்தச் சட்டப் பிரிவை தூத்துக்குடி சிப்காட், தெற்கு காவல் நிலைய எல்லைகளுக்குட்பட்ட சில பகுதிகளுக்கு மட்டும் என்று முந்தைய நாள் இரவில்தான் அமல்படுத்தினார்.
சில இடங்களுக்கு மட்டும் என்று அதுபோன்று அமல்படுத்தப்பட்ட தடை உத்தரவு, போராட்டத்திற்கென்று அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட இடமான எஸ்ஏவி உயர்நிலைப்பள்ளி மைதானத்திற்குச் செல்லும் பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், அந்த இடத்தை சென்றடைய விடாமல் அவர்களுக்குத் தடையையும் ஏற்படுத்தியது. எனவே கூட்டம் பொறுமையிழந்தது.
ஆணையம் தன்னுடைய அறிக்கையில் இருநூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட முழு தொகுதியை, மே 22 போராட்டத்திற்கு சற்று முன்னதாக தடை உத்தரவுகளை இவ்வாறு மிக மோசமாகச் செயல்படுத்தியது, பின்னர் நடைபெற்ற சம்பவங்களில் அது ஏற்படுத்திய தாக்கம் போன்றவற்றை விளக்குவதற்காக மட்டுமே ஒதுக்கியுள்ளது.
‘மாவட்ட ஆட்சியரிடம் செயலற்ற தன்மை, மந்தம், மெத்தனம், கடமை தவறுதல் போன்ற செயல்பாடுகள் இருந்துள்ளன’ என்று ஆணையம் கூறுகிறது. சேகர் (துணை தாசில்தார், தேர்தல்கள்), கண்ணன் (கோட்ட கலால் அலுவலர்), சந்திரன் (மண்டல துணை தாசில்தார்) என்று தூத்துக்குடியைச் சேர்ந்த மூன்று சிறப்பு நிர்வாக மாஜிஸ்ட்ரேட்டுகளின் பெயரையும் ஆணையம் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுக் கூறியுள்ளது. நகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் மே 22, 23 ஆகிய நாட்களில் துப்பாக்கிச் சூட்டை நடத்துவதற்கான குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் 21ஆவது பிரிவின் கீழ் உத்தரவுகளைப் பெற்றுக் கொள்வதற்காக அவர்கள் மூவரும் காவல்துறையினரால் வரவழைத்து தேவைப்பட்ட இடங்களில் இருத்தி வைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அந்த சிறப்பு நிர்வாக மாஜிஸ்திரேட்டுகள்/துணை தாசில்தார்களுக்கு எதிராக துறைரீதியான நடவடிக்கை, சட்டத்திற்குட்பட்ட பிற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆணையம் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.
ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதை அடுத்து ஆட்சியர் வளாகத்திலும், ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் அருகில் உள்ள குடியிருப்புகளிலும் தீ வைத்த இருபது பேர் அடையாளம் காணப்படாதது குறித்தும் விசாரணை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. அவ்வாறு தீ வைத்தவர்கள் யாரென்று வீடியோ துணுக்குகளில் தெளிவாகத் தெரிவதாகவும் ஆணையம் சுட்டிக் காட்டியுள்ளது.
சிபிஐ விசாரணை
மாநில காவல்துறை அல்லது சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த வழக்கை விசாரித்த மத்திய புலனாய்வுப் பிரிவினரால் (சிபிஐ) தீ வைத்தவர்கள் யாரென்று அடையாளம் காணவே முடியவில்லை. அவர்களை அடையாளம் காணும் விவகாரத்தில் உதவி கோரி சிபிஐக்கு ஆணையம் கடிதம் எழுதியது. ஆனாலும் அந்த நடுவண் அரசு நிறுவனம் அவர்களில் யாரையும் அடையாளம் காண முடியவில்லை என்றே பதிலளித்தது. வன்முறைக்குக் காரணமானவர்கள் என்று பலர் மீது குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்துள்ள போதிலும், அந்தப் பட்டியலில் அதிகாரிகள் யாருக்கும் இடம் இருக்கவில்லை என்று ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
அதற்கு மாறாக சிபிஐ காவல்துறை மற்றும் வருவாய்த் துறைகளைச் சேர்ந்த அடையாளம் தெரியாத சில நபர்கள், பணியாளர்கள் மீது துணை முதல் தகவல் அறிக்கையைப் (FIR) பதிவு செய்தது. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இரண்டு குற்றப்பத்திரிகைகளை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. சிபிஐ விசாரணை நியாயமாக, நேர்மையாக இருக்கும் என்று ஆணையம் நம்புகிறது.
அரசு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இருபது லட்சம் ரூபாயில் இருந்து ஐம்பது லட்சம் ரூபாயாக, காயமடைந்தவர்களுக்கு பத்து லட்சம் ரூபாயாக இழப்பீட்டுத் தொகையை அதிகரித்துத் தருமாறு ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. அந்த அதிகரிப்பு ‘நிதர்சனத்திற்கு அப்பாற்பட்டதாக அல்லது அதிகமாக இருக்கவில்லை. மிகவும் யதார்த்தமாகவே இருக்கிறது’ என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் பின்னர் பலியாகிய ஜஸ்டின் செல்வா மிதேஷுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் ஆணையம் கோரியுள்ளது. அவருடைய தாயாருக்கு அரசுப் பணி வழங்கிட வேண்டும், காயமடைந்த காவலர் மணிகண்டனின் மருத்துவச் செலவை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ஆணையம் பரிந்துரைத்திருக்கிறது.
2018 மே 22 அன்று நடைபெற்ற வன்முறையில் சில ஆர்வலர்கள் குற்றம் சாட்டியதைப் போல ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கோ அல்லது அப்போதைய அரசு, நடிகர் ரஜினிகாந்த் போன்ற சிலர் குற்றம் சாட்டியிருந்ததைப் போல எந்தவொரு அமைப்பினருக்கோ தொடர்பு இருப்பதாகச் சுட்டிக்காட்டுகின்ற வகையிலே எந்தவொரு குறிப்பிட்ட ஆதாரமும் ஆணையத்திற்குக் கிடைக்கவில்லை.
நன்றி: ஃப்ரண்ட்லைன்
தமிழில்: தா.சந்திரகுரு
ஒரு போராட்டக்காரியின் வெடிச் சிரிப்பு கவிதை – கோசின்ரா
திரைவிமர்சனம்: NIGHTCRAWLER – DAN GILROY – சிரஞ்சீவி இராஜமோகன்
NIGHTCRAWLER – DAN GILROY – 2014
நைட்கிராலர் என்ற ஒரு திரைப்படத்தைப் பற்றி இந்த விமர்சனத்தில் பார்ப்போம். ஜேக்கில்லன்ஹால் என்றொரு நடிகர். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் அவருடைய கதை தேர்ந்தெடுத்தாலும் நடிப்பும் நம்ம ஊர் நடிகர் அருள்நிதி போல் இருக்கும். வித்தியாசமான கதைகளை தேடி எடுத்து நடித்து முடிப்பார்
கதைக்குள் போவோம். வேலையில்லாமல் திரிந்து கொண்டிருக்கும் ஒரு இளைஞன் தனக்கான வேலையை ஒவ்வொருவரிடம் கேட்டு கேட்டு அலுத்து போய் கிடைத்த வேலைகளை செய்து அன்றாட செலவுகளை சமாளிக்க சிரமப்படுகிறான். இடையில் ஏதோ ஒரு இடத்தில் சாலையில் வாகனங்கள் அடிப்பட்ட நிகழ்வுகளை விபத்துக்களை கேமராக்கள் மூலம் மீடியாக்கள் படம் பிடித்து அதை காசாக்குவதை தெரிந்து கொள்கிறான் தானும் அந்த தொழிலில் ஈடுபட கேமரா ஒன்றை வாங்கி அது போன்ற இடங்களுக்கு (ஆக்சிடென்ட் நடக்கும் இடங்களுக்கு) நியூஸில் பார்த்து சென்று படம் பிடிக்க முயற்சிக்கிறான். அதிலும் ஒரு சிரமம் ஏற்படுகிறது அவனுக்கு அதாவது காவல்துறையினர் பிற மீடியாக்கள் அனைவரும் வந்து சென்று படம் பிடித்து சென்ற பின்னே இவன் செல்ல நேரிடுகிறது. எப்படி காவல்துறையினரும் மீடியாக்களும் சீக்கிரமே அங்கு செல்கிறார்கள் என்பதை அலசி ஆராயும்போது அவனுக்கு சில தொழில்நுட்ப உதவிகள் தேவைப்பட்டது.
தன்னைப் போல வேலையில்லாத ஒரு இளைஞனை சந்தித்து அவனையும் தன் அசிஸ்டெண்டாக நியமித்துக் கொள்கிறான் தனக்குத் தேவையான தொழில்நுட்பக் கருவிகளை வாங்கிக் கொள்கிறான் அதாவது காவல்துறையினர் வாக்கி டாக்கில் பேசும் விஷயங்களை; ரகசிய கோடுகளை டிகோடு செய்து சம்பவ இடத்திற்கு சென்று படம் பிடிப்பது இந்த ஹேக்கிங் முறை. தொழில்நுட்பத்துடன் வெற்றி கண்டு சம்பவ இடத்திற்கு பிற மீடியாக்களுக்கு முன்னரே செல்கிறான் இருப்பினும் அவனுக்கு அதில் திருப்தி இல்லை காவல்துறையினருக்கு முன்னரே செல்ல வேண்டும் என்பதே அவனது குறிக்கோள். ஓரளவு வருமானம் வந்து கொண்டிருக்கும் நிலைமையில் தொழில்நுட்பத்தை அதிகப்படுத்துகிறான் டி காவல்துறைக்கு வரும் கம்பளைண்ட் அவற்றினை வைத்து காவல்துறைக்கு முன் நேரமே சம்பவ இடத்திற்கு செல்லும் கதாநாயகனுக்கு பல திடுக்கிடும் காட்சிகளை வீடியோவாக படம் பிடிக்க வாய்ப்பு கிடைக்கிறது.
படம் இங்கிருந்து விறுவிறுப்பாக ஆரம்பிக்கிறது காவல்துறையினருக்கு முன்னமே இவன் எப்படி செல்கிறான் என்பது காவல்துறைக்கும் பிற மீடியாக்களுக்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளது அனைவரும் மூக்கின் மேல் விரல் வைத்து இவனுடைய வீடியோக்களை பார்த்து வியக்கின்றனர் நல்ல பணமும் காசும் இவனுக்கு கிடைக்கப்பெறுகிறது மேலும் கதாநாயகன் ஆரம்பத்திலிருந்து தனக்கு தேவையானது என்றால் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்வான் என்கிற மனநிலையை நம் அனைவருக்கும் இயக்குனர் உரித்தாக்கிக் கொண்டே வருகிறார் பல காட்சிகளில்.
கதாநாயகன் ஒரு கொலை நடந்த இடத்திற்கு காவல்துறைக்கும் சக மீடியாக்களுக்கும் முன்னமே சென்று படம் பிடித்து விடுகிறான் கொலை நடந்த இடங்கள் அதற்கான கருவிகள் அனைத்தையும் படம் பிடித்தது மட்டும் இல்லாமல் கொலை செய்தவர்கள் வெளியே வரும் காட்சிகளையும் படம் பிடித்து விடுகிறான் இந்த ஒரு காட்சிக்கு இந்த படத்தை பார்க்கலாம். பின்பு தனது உதவியாளர் உடன் கொலை நடந்த இடத்தையும் அதற்கான கருவிகளையும் காசாக்கி விட்டு கொலைகாரர்களைத் தத்ரூபமாக படம் பிடித்த வீடியோ கிளிப்பை மட்டும் எடிட் செய்து வைத்துக் கொள்கிறான். காவல்துறையிலிருந்து அவனுக்கு விசாரணை வருகிறது எப்படி சென்றீர்கள்? எப்படி படம் பிடித்தீர்கள் என்னவென்றெல்லாம் உண்மையை கூறாமல் நான் இதை சரியாக சென்று கொண்டிருந்தேன் அப்போது சத்தம் கேட்டது அப்படியே படம் பிடித்தேன் கொலைகாரர்களை நான் பார்க்கவில்லை என்று பொய் சொல்கிறான். பின்பு கொலைகாரர்களின் வீடியோ கிளிப்பை வைத்துக்கொண்டு அவன் காசாக்கும் விதம் நம்மை பிரமிக்க வைக்கும் இதற்குப் பின் நடக்க போகும் சுவாரசியங்கள் அனைத்தும் நீங்கள் இந்த படத்தை பார்த்ததற்கான பரிசு.
பலம் : படத்தின் வித்தியாசமான திரைக்கதை திரில்லிங் அனுபவம், மெல்லிய பின்னனி இசை.
பலவீனம் : மீடியா சம்பந்தப்பட்ட விஷயங்கள் டிஆர்பி சம்பந்தப்பட்ட விஷயங்கள் அதற்கு உண்டான வசனங்கள் சற்றே குழப்பமாகவும் புரியாமலும் அமைந்திருக்கின்றன.
மேலும் இது போன்ற வித்தியாசமான திரைக்கதை உள்ள திரைப்படங்களை எனக்கு பகிரவும் இந்த திரைப்பட விமர்சனம் எவ்வாறு இருந்தது என்பதை விமர்சிக்க விரும்புகிறேன் என்னுடைய தொலைபேசி எண்களையும் பகிர்ந்து உள்ளேன் நன்றி.
நன்றி
சிரஞ்சீவி இராஜமோகன்
கும்பகோணம்
9789604577
7708002140
நூல் அறிமுகம் : தமிழவனின் ’ஷம்பாலா ஓர் அரசியல் நாவல்’ – அன்புச்செல்வன்
நூல் : ஷம்பாலா ஓர் அரசியல் நாவல்
ஆசிரியர் : தமிழவன்
விலை : ரூ. 210/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு :044 – 24332424 /24330024/
விற்பனை : 24332934
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]
தமிழவனின் 6வது நாவல் இது. தொடக்கம் முதலே நேரடி குரலில் அரசியல் பேசுகிற பிரதி, முழுக்கக் குறியீடாகவும் வாசிக்கும் வகையில் மற்றொரு பிரதியாகவும் உருமாற்றம் கொள்கிறது.
ஒற்றைத்துவத்தை முன்னிருத்தும் அரசு அதிகாரம் மேற்கொள்ளும் பன்மய சிந்தனா ஒழிப்பு நடவடிக்கைகள் பற்றிய தொகுப்பாக அமர்நாத் என்ற கருத்தியல் செயற்பாட்டாளர் வாழ்க்கை வழி விரிகிறது. அறிவுத்தளத்தில் மாற்றுக் கருத்து கொண்டுள்ளோர் – அத்தகைய கருத்தியல்களை பிரதிகளின்வழி – சமூக ஊடகங்களின்வழி உருவாக்குவோர் – ஆகியோரை தொடர்ந்து கண்காணிப்பதன் வழியாக அறிவார்ந்த தளத்தில் ஒரு பதட்ட நிலையை உருவாக்கி அறிவை அதன்பாற்பட்ட செயலை முடக்கும் சூழல் உருவாக்கப்படுகிறது. இது நெருக்கடி நிலை பிரகடனத்தின் இன்றைய வடிவமே என நிறுவுகிறது நாவல்.
ஏன் பெரும்பான்மைக்குள் இருப்பதை ஒரு பாதுகாப்பாக ஒடுக்கப்பட்டோர் உணருகின்றனர் – தலித் என்பதை விட இந்து என்பதில் தலித் தன்னிலையானது கொள்ளும் மன உணர்வுகள் – ‘மானம்’, மத உணர்வு, சாதி பெருமிதம் ஆகியவற்றின் மூலம் ஒடுக்கப்பட்டோரை மீள பெரும்பான்மை அரசியலுக்குள் எவ்வாறு “அரசியல் நீக்கம்” செய்யப்பட்டு இழுக்கப்படுகின்றனர் – ராமர் கோவில் உள்ளிட்ட கோவில் கட்டுதல், கோவில் நிர்வாகக் கையகப்படுத்துதல் போன்றவற்றை முன்னிருத்தி புதிதாகக் கட்டமைக்கப்பட்டு வரும் வலதுசாரி பொருளாதாரம் – படிக்காத/படிப்பு வராத வேலையற்றோர் x அறிவுசார் வர்க்கம் என்ற விசித்திர முரணை (படிக்காததற்குப் படிப்பு வராததற்குக் காரணங்களைப் பகுத்துச் சொல்லும் அறிவுசார் செயற்பாட்டாளர்களை எதிரானவர்களாக முன்னிலைப்படுத்தி) கட்டமைத்து அதன் மூலம் நவீன வலதுசாரித்துவத்தை அறுவடை செய்வது – இப்படியான பல முக்கிய விவாதப் புள்ளிகளையும், கேள்விகளையும் பிரதியின் “அமர்நாத்” பகுதி எழுப்பியபடியே செல்கிறது.
மற்றொரு தளத்தில் “ஹிட்லரின்” கதைப் பகுதியானது சுவாரசியமாகவும் பகடித்தன்மையுடனும், அடியோடிய எள்ளலோடும் முழுக்கக் குறியீட்டுத்தனதுடன் கூறப்படுகிறது. இறுதியில் இந்த “ஹிட்லர்” கதையானது, அரசு மற்றும் சிந்தனை தடுப்பு காவல்துறையினரின் கண்காணிப்பு மற்றும் அழுத்தத்தின் விளைவாக அமர்நாத்தின் மனதில் எழுந்த கலகக் கதை வடிவமாக்கியிருப்பது ஈர்ப்புடைய இணைப்பு.
நவீன மோஸ்தரில் உலா வரும் சமஸ்கிருத பண்டித சாமியார் முன்வைக்கும் உலக அதிகாரக் குவி மையமான ‘ஷம்பாலா’ நோக்கிய நகர்வே அமர்நாத்தை போன்ற “இடதுசாரி தாராளவாதி”யான அவர் தோழர் சுரேஷை சிந்தனா போலீசார் கைது செய்தது..!
நடப்பியல் வாழ்விலும் வரவரராவ், ஆனந் டெல்டும்டே, கவுதம் நவ்லக்கா, உமர் காலித், ஸ்டேன் சுவாமி, அருண் ஃபெரேரா, இஸ்ரத் ஜஹான் உள்ளிட்ட பல சமூக ஆர்வலர்கள், அறிவுசார் செயற்பாட்டாளர்கள் கைதுகளும், கல்புர்கி, பன்சாரே, தபோல்கர், கவுரி லங்கேஷ் உள்ளிட்ட மாற்று அரசியல் கருத்தியல்வாதிகள்/செயற்பாட்டாளர்களின் படுகொலைகளும் நிகழும் வெறுப்புணர்வின் அரசியல் காலத்தில் வாழ்கிறோம். இந்தப் பிரதி இக்காலத்தின் வெட்டப்பட்ட ஒரு துண்டு.
இப்பிரதியை வாசித்து முடித்த நாளில், செயற்பாட்டாளர் தீஸ்தா செடல்வாட் கைது செய்யப்பட்டது ஒரு ‘துன்பியல்’ தற்செயலே..! அவ்வாறாக, “ஷம்பாலா”வுக்கான ‘விழைவு’ இந்திய அரசியல் களத்தில் உச்சத்தை நோக்கி சென்றபடி…
– அன்புச்செல்வன்
கல்(வி) நெஞ்சம் சிறுகதை – கவிஞர் சே.கார்கவி
அன்று வெள்ளிக்கிழமை காலை எழுந்த்தும் தனது இரு சக்கர வாகனத்தை அழகுற துடைத்து, அதற்கு பெட்ரோல் முதல் பிரேக் வரை அனைத்தையும் பார்த்து சோதனை செய்து வண்டியை வீட்டின் முகப்பி்ல் ஓரமாக நிறுத்துவிட்டு குளிக்க செல்ல முனைந்தான் சேகா.
குளித்து முடித்து நேராக அரைகுறை ஈரத்துடன் தனது மனது ஆழ்ந்த தெய்வத்தின் முன் சென்று நின்றான்….தனது வேண்டுதலை நிறைவேற்ற வேண்டுமென பல கோரிக்கைகளை மனப்பையில் நிரப்பியபடி கொட்டித் தீர்த்துக் கழுத்தில் தொங்கிய மணியை எடுத்துக் குங்குமமும், மஞ்சளும் தடவி பனியனை மாட்டிக் கொண்டு புறப்பட ஆரம்பித்தான்…
அன்று மிகவும் விசேசமான நாள். காலை பத்து முதல் பதினொன்ற்றை வரை உள்ள நல்ல நேரத்தை மனதில் கொண்டு புதிய ஆடைகளை அணிந்து கொண்டு, துடைத்து பளபளப்பாக்கிய தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு மிதமான வேகத்துடன் தனது வேண்டுதலுக்கான முருகன் கோயிலை நோக்கிப் புறப்பட்டான் சேகா…
சேகா படித்த பட்டதாரி..மிகுந்த ஆர்வம் தமிழில்! ஆதலால் நேரத்தினை தமிழுக்கு செலவழிப்பதன் பலனாக ஒரு புத்தகம் எழுதலாம் என இரண்டு வருடங்களாக எழுதத் தொடங்கி முடித்து இப்பொழுது தான் அதனை பதிப்பு செய்து புத்தகத்தை இணையத்தில் வெளியிட்ட கிடைத்த புத்தகத்தை நம்பிககையின் பெயரில் தனது விருப்பத் தெய்வத்திடம் ஆசி பெற கொண்டு சென்று கொண்டிருக்கிறான்….
அதிகமான வாகனங்களை க் கொண்ட சாலையின் கூட்ட நெரிசலில் போக்குவரத்து காவலரின் கையில் இவன் வாகனம் நிறுத்தப்பட்டது….
அதை எடு இதை எடு என்று அதட்டிலில் கேட்டுக் கொண்டிருந்த காவலரின் பார்வையில் வாகனத்தோடு இவனும் சிக்கினான்.
” என்னய்யா இவ்ளோ வேகமா போற, அதுவும் இவ்ளோ டிராஃபிக்ல …எடு எடு…லைசென்ஸ், ஆர்சி புக், இன்சூரன்ஸ் எடு” என்று சத்தமிட்ட காவலரிடம் அனைத்தையும் எடுத்துக் காண்பித்தான் சேகா
எவற்றையும் கண்டு திருப்தியடையாத காவலர் “சரிசரி அங்க போய் நூறுவா கொடுத்துட்டுக் கிளம்பு போ” என்று கூறினார்…
அதற்கு சேகா…”ஐயா நான் அவசரமாக செல்ல வேண்டும் …தயவு செய்து செல்ல அனுமதியுங்கள்” என்று கேட்க, “என்னய்யா நீ திரும்பத் திரும்ப சொன்னதயே சொல்ற …..ஒழுங்காப் பணத்தக் கொடுத்துட்டுக் கிளம்பு” என சற்று குரலை உயர்த்தினார்….
மீண்டும் அதையே சொல்லிக் கொண்டிருந்த அவனிடம், “என்னய்யா உன்கிட்ட பணம் இல்லையா?”என்ற காவலரிடம், “ஆமாம் ஐயா” என்று பதிலுரைத்தான் சேகா.
“காசு இல்லாத உனக்கு புது துணி , இதென்ன கைல பேக்” என்று பிடுங்கினார் காவலர். பை முழுக்க புத்தகம் நிரம்பியிருக்க, “என்னய்யா இது இவ்ளோ புத்தகம் ….ஓ..இத விக்கதான் போகுறியா…சரிசரி…நா ஒரு புக் எடுத்துக்குறன் …அத படிச்சு முடிக்கும் காட்டியும் பணத்த கொடு” என்று கூறினார் காவலர்.
அனைத்திற்கும் அமைதியாகவே இருந்தான் சேகா. நேரம் ஆகத் தொடங்கியது. காவலரும் நாற்காலி போட்டு அமர்ந்து, “ம்…தலைப்பு அருமையா இருக்கே….அடடே…கவித..கவித” என இடையிடையே புத்தகத்தை படித்து சுவாரசியமான வரிகளை அடிக்கடி துணைக் காவலரிடம் பகிர்ந்தார்.
இடையிடையே இவனையும் பார்த்து, “என்னய்யா அப்படியே நிக்கிற….ம்.எவ்வளவு நேரம் இப்படியே நிக்கிறேன்னு பாப்போம்” என்றார்.
நேரம் பத்து நிமிடங்கள் ஆனது…..அரைமணி நேரம் ஆனது….இடையிடையே தன்னை மறந்து புத்தகத்தில் நுழைந்து ஆழம் சென்றார் காவலர்.
சேகாவும் அவரைப் பார்த்தப்படியே உம்மென நின்றான். இறுதியாக படித்து முடித்த காவலர்” ஏய்யா, எவ்ளோ நெஞ்சழுத்தம்….உனக்கு!” என்று கூறினார்.
அதனூடே, “யார்யா இந்த கவிஞரு…இவ்ளோ இழகா எழுதி இருக்கார்…ரொம்ப சிறப்பாக நடைமுறை வாழ்க்கைய எழுத்தால ரொம்ப சிறப்பா சொல்ரிருக்காரே…யார்யா இவரு….நீ வேணா பாரு…இந்த புத்தகம் எல்லாம் விலை போயிடும்…அப்படி இருக்கு இந்த புக்” என்று கூறி முடித்தார்.
“என்னய்யா நா கேட்டுக்கிட்டே இருக்க…பதில் சொல்ல மாட்ற …யார்யா இந்த கவிஞர்?” என்று மீண்டும் கேட்டார்.
அதற்கு சேகா, “ஐயா அந்த கவிஞன் நான்தான் ஐயா….எனது முதல் புத்தகம்…இப்போதுதான் முடித்தேன்….அதைத்தான் கோயிலுக்கு கொண்டு செல்கிறேன் ஐயா” என்றான்.
அதுவரை தெனாவட்டு மனதில் நிறைந்த காவலர் திடுக்கிட்டாற்போல் நாற்காலி விட்டு எழுந்தார்,”என்ன சொல்றீங்க நீங்களா?” என்று குரலில் மரியாதை கூடியது. புத்தகத்தின் பின்னட்டையில் சேகாவின் புகைப்படமும் குறிப்புகளும் இருக்க அதையும் வாசித்துக் கொண்டிருந்தார் காவலர்.
“ஆம் ஐயா…நான்தான்” எனக் கூறிவிட்டுத் தனது பாக்கெட்டில் இருந்த நூறு ருபாயை காவலரிடம் கொடுத்துவிட்டு, ‘நான் வர்றேன் ஐயா’ என்று கூறி நகர முனைந்தான் சேகா.
“ஒரு நிமிடம் நில்லுங்கள், உங்கள் பணம் வேண்டாம், இந்தாங்க” என்று அந்த நூறு ரூபாய் நோட்டை அவனிடமே கொடுத்துவிட்டு, “இந்த புத்தகம் விலை என்ன சொல்லுங்கள் நானே வாங்கிக் கொள்கிறேன்” என்றார் காவலர்.
அவன் நூறு ருபாய் என்றதும், தனது பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தார் காவலர்.
அதற்கு சேகா, “வேண்டாம் ஐயா. வேறு யார் படிக்கும் முன்பாகவே எனது நூலைப் படித்து ருசித்து நூலுக்கு விமர்சனம் கொடுத்து விட்டீர். அதுமட்டுமின்றி கவிஞருக்கும் தமிழுக்கும் தாங்கள் வழங்கிய ஈடுபாடு, விருப்பத்திலேயே எனது மனது இன்பத்தில் நிறைந்த்து பணம் அவசியமன்று” என்று கூறிவிட்டு நகர்ந்தான்.
ஒரு நூல் மனிதனை எப்படியெல்லாம் மாற்றும் என அறிந்து கொண்டும், தனது நூல் ஒரு சிறப்பான நூல்தான்..தனது எழுத்துக்கள் கண்டிப்பாக அனைவருக்கும் ஒரு புது விடயத்தை கற்றுத் தரும் என்ற சந்தோசத்தில் தனது முதல் புத்தகத்தை காவலருக்கு பரிசாக வழங்கிவிட்டு இதை விட ஆனந்தம் என்னவாகிவிட போகிறது என தனது வேண்டுதல் நிறைவேறியது போல் நிம்மதியில் கல்வியில் விளைந்த நூலால் “கல் நெஞ்சத்தை” கரைத்த இன்பத்தில் வாகனத்தை தனது விருப்ப தெய்வ சன்னதியை நோக்கி செலுத்துகிறான் சேகா…..இனி எல்லாம் பச்சைக்கொடிதான்…..”எழுத்துக்கள் ஊரக் கல் நெஞ்சமும் தேயும்” என எண்ணிக்கொண்டே பயணிக்கிறான் சேகா.