கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 8 : கேரளத்தின் முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கமும், கவிழ்ப்பும் ! – இரா. சிந்தன்
1957 ஆம் ஆண்டு, இந்தியாவில் கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி, தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது. இது உலகம் முழுவதுமே கவனத்தை ஈர்க்கும் நிகழ்வாக மாறியது. இந்த வெற்றிக்கு பின் 1958 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஐந்தாவது அகில இந்திய மாநாடு அமிர்தசரசில் கூடியது.
1952 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற வாக்குகள் 62 லட்சம் மட்டுமே. 1957 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் கட்சி பெற்ற வாக்குகள் 12 கோடியாக இருந்தது.
பீகார், உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் கட்சிக்கு மக்கள் பிரதிநிதிகள் வந்தார்கள். எனவே நாட்டின் அனைத்து சட்டமன்றங்களிலும் பிரதிநிதிகளைக் கொண்ட கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சி மாறியது. சென்ற மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ‘புரட்சிகர எதிர்க்கட்சி’ என்ற நிலைப்பாடு நல்ல பலனைக் கொடுத்தது.
கவனமான மதிப்பீடுகள்
- தென் மாநிலங்களில் ஆந்திராவிலும், தமிழ்நாட்டிலும் கட்சி சிறு பின்னடைவுகளை எதிர்கொண்டபோதிலும், கேரளத்தில் ஆட்சி அமைக்க முடிந்தது மிக முக்கியமான சாதனையாகும். இருப்பினும் கேரளத்தில் கிடைத்த வெற்றியைப் பற்றி, தோழர் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் மிகவும் கவனமான மதிப்பீடுகளை முன்வைக்கிறார்.
- இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி தலைமையேற்றது என்ற போதிலும், நாட்டில் பெரும்பான்மை மக்களுடைய ஆதரவைப் பெறுவது சாத்தியமாகவில்லை. 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 48% மட்டுமே காங்கிரஸ்கட்சி பெற்றிருந்தது.
- இப்போதைய கேரள மாநிலத்திற்கு உட்பட்ட பகுதிகளான திருவாங்கூர், கொச்சி மற்றும் மலபாரில் காங்கிரஸ் கட்சியினால் பெரும்பான்மை பெற முடியவில்லை. அதே சமயம் இந்தப் பகுதியில் தொழிலாளர்களும், விவசாயிகளும் கம்யூனிஸ்ட்இயக்கத்தின் பின் நின்றார்கள்.
- கேரள மாநில பகுதிகளில் தேசிய இயக்கத்தின் முகமாக கம்யூனிஸ்ட் தலைவர்களேஇருந்தார்கள்.
- விவசாயிகள் பிரச்சனைகளையும், மலையாள தேசிய இன பிரச்சனைகளையும்அறிவியல் பார்வையோடு முன்னெடுத்த காரணத்தால், கம்யூனிஸ்ட் கட்சி,கேரளத்தை ஒரு மாநிலமாக அமைக்கும் போராட்டத்தில் முன்னணியில் நின்றது.
- இருப்பினும் கூட, கம்யூனிஸ்ட் கட்சி பெற்றிருந்த மக்கள் ஆதரவும் ஒரு சிறுபான்மையான அளவிற்கே இருந்தது என்பதை அவர் பதிவு செய்கிறார். கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற வாக்குகள் 40% ஆகும். ஆனால் தேர்தல் முறையின் கரணமாக, இந்த வாக்குகளைக் கொண்டே அதனால் 52% இடங்களில் வெற்றிபெற முடிந்தது.
‘மத்தியில் காங்கிரசின் சிறுபான்மை அரசு வந்ததைப் போலவே கேரள மாநிலத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறுபான்மை அரசு ஆட்சிக்குவந்தது’ என்றுதான் இ.எம்.எஸ் குறிப்பிடுகிறார். அதுவே சரியான மதிப்பீடும் கூட.
ஆட்சியை தொடர முடியுமா?
இந்திய ஆளும் வர்க்கங்கள் மேற்சொன்ன வெற்றியை எளிதாக எடுத்துக்கொள்ளவில்லை. 1959 ஆம் ஆண்டில் ஜூலை மாதத்தில், கரள மாநில அரசாங்கம், அரசமைப்பின் 365 வது பிரிவினை பயன்படுத்தி கலைக்கப்பட்டது.
5 வது மாநாடு நடைபெற்ற காலத்திலேயே கல்வி மசோதாவிற்கு எதிராகவும் விவசாய உறவுகள் மசோதாவிற்கும் எதிரான போராட்டங்களை தூண்டிவிடும் வேலையை காங்கிரஸ் கட்சி தொடங்கிவிட்டிருந்தது. பின்நாட்களில் அது முஸ்லிம் லீக், கிறித்துவ குருமார்கள் மற்றும் மேல்தட்டு சாதி தலைவர்களோடு இணைந்து ‘விமோசன சமரமாக’ (விடுதலைப் போராட்டமாக) முன்னெடுக்கப்பட்டது.
முதலாளித்துவ – நிலவுடைமை அமைப்பிற்குள்ளாக ஒரு மாநில ஆட்சியை தொடர்ந்து நடத்துவதை ஆளும் வர்க்கங்கள் அனுமதித்திடுமா ? என்ற கேள்வி அப்போது கட்சிக்குள் தொடர்ந்து விவாதப் பொருளாக இருந்தது.
‘அசாதாரண மாநாடு’ என்று அழைக்கப்படும் ஐந்தாவது மாநாட்டில் கட்சியின் அமைப்பு விதிகளை மேம்படுத்துவது பற்றி கூடுதலாக விவாதிக்கப்பட்டது. உலக அளவில் சீன கம்யூனிஸ்ட் கட்சியும், சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சியும் நேருவைப் பற்றி முற்போக்கான மதிப்பீட்டை எடுத்தன. அதனை பயன்படுத்திக்கொண்டு, உள்நாட்டில் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கையை முடிவு செய்வதற்கு ‘திருத்தல்வாதிகள்’ முயற்சித்தார்கள். இந்த திருத்தல்வாத போக்குகள் தொடர்ந்தது, பின்நாட்களின் கட்சி பிளவிற்கு வழிவகுத்தன.
இ.எம்.எஸ் வெளிப்படுத்தும் கவலை
கேரள சூழல் பற்றிய ஒரு தீர்மானம் அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும், கேரளாவில் நடந்துவரும் மாற்றங்களை அந்த மாநாடு சரியாக உள்வாங்கிடவில்லை. இதுபற்றி தோழர் இ.எம்.எஸ் கவலையுடன் இவ்வாறு பதிவு செய்கிறார், “”ஐந்தாவது மாநாடு இதில் எதைப்பற்றியும் விவாதிக்கவில்லை. மாநாட்டின் முடிவுகளில் மிக முக்கியமானது கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் ஒரு மறுப்பு அறிவிப்பை மட்டும் வெளியிடுவது என்பதுதான். அதாவது இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி அமைதியான வழிமுறைகளையே மேற்கொள்ளும் என்றும் ஒரே கட்சியின் தலைமையை ஏற்படுத்தாது என்றும் அறிவிப்பதாக முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவின் பின்னணியில் கம்யூனிசத்தை நிலைநாட்டின அமைதியான சோசலிச புரட்சி என்ற சமூக ஜனநாயக நிலைப்பாடு இருந்தது வெளிப்படை”
‘சோசலிசத்தை நோக்கிய பயணம் அமைதியான முறையில் இருக்க வேண்டும். அதே போல கட்சி ஏற்படுத்த விரும்புகிற அரசியல் அமைப்பில், ஒரே கட்சியின் தலைமை என்ற நிலைமைக்கு இடமில்லை’ ஆகிய கருத்துக்கள் சரியானவையே ஆனால் கேரளத்தில் கம்யூனிஸ்டுகள் தலைமையிலான மாநில ஆட்சியை ஸ்தம்பிக்கச் செய்யும் ஆளும் வர்க்கத்தின் அக்கிரமான முயற்சிகளை பற்றி கவனம் செலுத்த முடியாததற்கு திருத்தல்வாதப் போக்கே ஒரு காரணமாகும்.
ஏகாதிபத்தியமும், கேரள அரசாங்கமும்
கேரளத்தின் நிலைமைகளைப் பற்றிய கூடுதலான கவலையை தோழர் இ.எம்.எஸ் வெளிப்படுத்தியிருப்பது முக்கியமானது. கேரளாவில் அமையப்பெற்ற மாநில ஆட்சிக்கு பல்வேறு தடங்கல்கள் இருந்தன. அதனால் முதலாளித்துவ – நிலவுடைமைக் கொள்கைகளின் வரம்பிற்கு உட்பட்டு, ஒன்றிய அரசு வகுத்த கொள்கைகளுக்குள்ளாகவே செயல்பட முடியும். ஆனாலும், கேரள அரசு பல முற்போக்கான திட்டங்களை செயல்படுத்தி, விவசாயிகள் – தொழிலாளர்களுக்கான நிவாரணங்களை சாத்தியமாக்கியது. காங்கிரஸ் அரசு, காகித அளவில் மேற்கொண்ட பல அறிவிப்புகளை, கேரள அரசாங்கம் செயல்வடிவிற்கு கொண்டுவந்தது.
உதாரணமாக, நிலக் குவியலை உடைப்பதிலும், குத்தகை விவசாயிகளுடைய நில உரிமையை உறுதி செய்வதிலும் மேற்கொண்ட நடவடிக்கைகள் நிலவுடைமையாளர்களையும், சுயநல சக்திகளையும் ஆத்திரப்படுத்தின. அதிகாரப் பரவலாக்களுக்கு முன்னோடியாக அமைந்த மாவட்ட நிர்வாக மசோதா, கல்வி மசோதா, போலீஸ் கொள்கை, கூட்டுறவுஅமைப்புகளுக்கு ஆதரவு, மாநிலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இருந்ததொழில் நிறுவனங்களுக்கு உதவி ஆகிய நடவடிக்கைகளை அந்த அரசாங்கம் மேற்கொண்டது. ஆட்சிக்கவிழ்ப்பின் மூலம், ஆளும் வர்க்கங்கள் இந்த மக்கள் நல நடவடிக்கைகளை முடக்க முயற்சித்தார்கள்.
இது ஏகாதிபத்திய சதியின் ஒரு பகுதியாகவே நடந்தது. இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக இருந்த எல்ஸ்வொர்த் பங்கர், கேரளாவில் அமையப்பெற்ற கம்யூனிஸ்ட் ஆட்சியை கவிழ்ப்பதில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ வகித்த பாத்திரம் பற்றிய ஒப்புதல் வாக்குமூலத்தை பின் நாட்களில் ஊடகங்களில் வெளிப்படுத்தினார். அதற்காக காங்கிரஸ் கட்சி உட்பட பல்வேறு சக்திகளுக்கு நிதி உள்ளிட்ட உதவிகளைச் செய்து ஆட்சிக் கவிழ்ப்பினை அமெரிக்கா மேற்கொண்டது. கொலம்பிய பல்கலைக் கழகத்தின் ஆவணங்களில் இந்த வாக்குமூலம் பதிவாகியுள்ளது.
பிற தீர்மானங்கள்
இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுவந்த பின்னடைவு, ஐந்தாண்டு திட்டங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள், முற்போக்கான கொள்கைகளை அமல்படுத்துவதற்காக செய்ய வேண்டிய போராட்டங்கள் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் வெற்றிகரமாக முன்னேறிய மக்கள் போராட்டங்கள் ஆகிய பல்வேறு விசயங்களும் விவாதிக்கப்பட்டன. கட்சிக் கிளை முதல், தேசியக் குழு வரையிலான அமைப்பு ஏற்பாடுகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
முந்தைய தொடர்களை வாசிக்க :
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 3 : பாசிச எதிர்ப்பும், தேசிய இன உரிமைகளும் ! – இரா. சிந்தன்
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 4 : குழப்பங்கள் அலையடித்த காலம் ! – இரா. சிந்தன்
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 5 : இந்தியாவின் புரட்சிப் பாதை ! – இரா. சிந்தன்
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 6 : வெளியே கடவுள், உள்ளே மிருகம் ! – இரா. சிந்தன்
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 7 : புரட்சிகர எதிர்க் கட்சியாக கம்யூனிஸ்டுகள் ! – இரா. சிந்தன்