சமகால நடப்புகளில் மார்க்சியம் – 10 – என்.குணசேகரன்

சமகால நடப்புகளில் மார்க்சியம் – 10 – என்.குணசேகரன்டார்வின் மீதான வெறுப்பு ஏன் ?

அறிவியலுக்கு ஒவ்வாத, பகுத்தறிவை முடமாக்குகிற பாடத்திட்டங்களை புகுத்துவதும்,அறிவியலையும் பகுத்தறிவையும் வளர்க்கிற பாடங்களை அகற்றுவதும் ஒன்றிய அரசின் இந்துத்துவா நிரல். இந்த முயற்சிகள் தொடர்ந்து  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 தற்போது,தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் குழுமம் (என்சிஇஆர்டி) பல பாடங்களை நீக்கியுள்ளது.அனைத்து உயிரியல் பாடங்களுக்கும் அடிப்படையாக விளங்கும் டார்வினது பரிணாம வளர்ச்சி கோட்பாடு பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

இதனை நீக்குவதைக் கண்டித்து,1,800 விஞ்ஞானிகள் மற்றும் கல்வியாளர்கள் இந்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “பரிணாமம் பற்றிய அத்தியாயத்தை அகற்றுவது விஞ்ஞான பகுத்தறிவு மற்றும் பகுத்தறிவு சிந்தனையின் கொள்கைகளுக்கு எதிரானது” என்று குறிப்பிட்டிருந்தனர்.இதனை நீக்குவதால் மாணவர்கள் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய புரிதல் ஏற்படுத்திக் கொள்வதில் பாதிப்பு ஏற்படும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

 அப்படிப்பட்ட புரிதல் ஏற்படக் கூடாது என்பதே அரசின் நோக்கம்.இளம் தலைமுறை உலகத்தைப் பற்றியும் இயற்கை மற்றும் உயிரினங்களின் இயக்கம் பற்றியும் அறிந்து கொள்வதை தடுக்க வேண்டும்;இயற்கை மற்றும் உயிரினங்களின் இயக்கம் அனைத்தும் மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டது என்ற  கண்ணோட்டத்துடன் அறிவுத் தேடலை  இளம் தலைமுறை கைவிட வேண்டும்.இந்த நோக்கத்தின் அடிப்படையில்தான் இந்த பாடத்திட்டங்கள் அகற்றப்பட்டுள்ளன.இது மூடநம்பிக்கைகள் நிறைந்த, வளர்ச்சி குன்றிய ஒரு சமூகமாக எதிர்கால இந்தியா உருமாறுவதற்கு இட்டுச் செல்லும்.

டார்வின் எதிர்ப்பாளராகத் தமிழக ஆளுநர்

 டார்வின் பாடம் நீக்கப்பட்டது திடீரென்று நிகழ்ந்தது அல்ல. ஏற்கனவே மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் சத்திய பால் சிங் டார்வின் கோட்பாடுகள் தவறானவை என்று விமர்சித்து வந்தார்.டார்வின் எதிர்ப்பாளர் வரிசையில் தமிழக ஆளுநரும் உண்டு.

 தமிழக ஆளுநர் மார்க்சியத்தை அவதூறு செய்து பேசிய அதே உரையில் டார்வின் கோட்பாடுகளும் இந்தியாவை சீரழித்து விட்டதாக பேசினார்.”ஒருவர் பிழைக்க வேண்டுமானால் வலுவாக இருக்க வேண்டும்; கபடத்தனமாகவும், தந்திரமாகவும் இருக்க வேண்டும்” என்று டார்வின் சொன்னதாக ஆளுநர் பேசினார்.வலியது வாழும், தக்கனத் தப்பி பிழைக்கும் என்று டார்வின் சொன்னதாக ஆளுநர் குறிப்பிட்டார். இந்த அடிப்படையில் பலவீனமானவர்களும், ஏழைகளும் வாழத் தகுதியற்றவர்கள் என்பது டார்வின் கருத்து என ஆளுநர் பேசினார். பரிணாம வளர்ச்சி, இயற்கைத் தேர்வு உள்ளிட்ட டார்வின் கோட்பாடுகளை  மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசியுள்ளார்.

உண்மையில் தக்கனத் தப்பி பிழைக்கும் என்ற சொற்றொடர் டார்வின் சொன்னது அல்ல. டார்வின் கோட்பாட்டை மாற்றி அமைத்து ஹெர்பர்ட் ஸ்பென்சர் என்பவரால் சொல்லப்பட்ட கருத்து. இயற்கை சூழலுக்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொண்ட உயிரினத்தை இயற்கை தொடர்ந்து இனப்பெருக்கம் செய்திட வாய்ப்பை ஏற்படுத்துகிறது என்பது டார்வின் கருத்து.

ஆனால் இதைத் திருத்தி சொத்தைக் குவிக்கிற திறமையும் வழிமுறையும் பரம்பரையாக தொடர்கிறது  என்று கூறி இதில் தகுதி உடையவர்கள் சொத்து உடையவர்களாக இருப்பது நியதி என்கிற வகையில் ஸ்பென்சர் கூறினார். இந்த சொற்றொடரை டார்வின் பெயரால் எடுத்துக் கூறி டார்வின் தத்துவமும் இந்தியாவை சிதைத்து விட்டதாக ஆளுநர் கூறுகிறார்.

 டார்வினின் கருத்துக்கள் மிகப் புரட்சிகரமானவை.இயற்கைக்கு ஒரு வரலாறு உண்டு. உயிரினங்கள் உயிர் வாழ்வதும் ,மாற்றத்திற்கு உள்ளாவதும் ,பிறகு மறைந்து போவதும் இடையறாமல் நிகழ்ந்து வருகின்றன. இவையெல்லாம் இயற்கை நிகழ்வுபோக்குகள். டார்வினின் இந்த கருத்துக்கள் மார்க்சிய சோசியலிச சிந்தனைக்கு உரமூட்டுகிற கருத்துக்கள். உயிரினம் பிறந்து,வாழ்ந்து, வளர்ந்து,மறைவது போன்றே  முதலாளித்துவ வரலாறும் உள்ளது.

இரண்டு சிந்தனைகள்

முதலாளித்துவமும் நிரந்தரமானதல்ல. சில நூற்றாண்டுக்கால அதன் இருப்பும், வளர்ச்சியும் நிச்சயமாக முடிவுக்கு வரும். இன்றைக்கு அது சந்திக்கும் ஏராளமான முரண்பாடுகள்,நெருக்கடிகள், முதலாளித்துவத்தால் சுரண்டப்படுகிற உழைப்பாளி வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டங்கள் காரணமாக அது வீழ்ச்சி அடையும். குறிப்பிட்ட காலத்தில் அது தோன்றியது ;அதேபோன்று ஒரு நாள் அது மறையும்.
டார்வின் தனது “உயிரினங்களின் தோற்றம்” நூலை எழுதிய காலத்திலேயே மார்க்சும், எங்கல்சும் இயக்கவியல் வரலாற்றுப் பொருள்முதல்வாத தத்துவத்தை உருவாக்கி இருந்தனர்.டார்வின் கண்டுபிடிப்புகள் அதற்கு வலு சேர்த்தன. இந்த இரண்டு சிந்தனைகளும் மனித ஆற்றலை மாற்றத்திற்குப் பயன்படுத்துவதற்கான உந்துதலை அளிக்கின்றன. ஒன்று, இயற்கையைப் பற்றிய அறிவியலாகவும் மற்றொன்று சமூகத்தைப் பற்றிய அறிவியலாகவும் முன்னிற்கின்றன.இரண்டும் இன்றைய மனிதச் சமூகத்திற்கும், இளம் தலைமுறைக்கும் அவசியமான சிந்தனைகள்
டார்வின் நூல் வெளியானவுடன் மார்க்ஸும் எங்கெல்சும் அந்நூலைப் பெரு மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். ஜெர்மானிய சோசியலிஸ்ட் பெர்டினாண்ட் லேசல்லேவிற்கு எழுதிய கடிதத்தில் மார்க்ஸ் குறிப்பிடுகிறார்:
“டார்வின் நூல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அது எனது நோக்கத்திற்கு ஏற்றதாக உள்ளது.இயற்கை அறிவியலின் அடிப்படையை அது விளக்குகிற போது வரலாற்று ரீதியான வர்க்கப் போராட்டம் என்ற கருத்துக்கும் அது அடிப்படையை வழங்குகிறது….”
மார்க்சியத்திற்கும் டார்வின் கோட்பாடுகளுக்கும் நெருக்கமான பிணைப்பு இருப்பதால்தான் மார்க்ஸ் மறைவின்போது ஏங்கல்ஸ் தனது உரையில் டார்வின் பற்றிக் குறிப்பிட்டார். இயற்கையின் வளர்ச்சி விதிகளை டார்வின் கண்டுபிடித்தது போலவே மனித வரலாற்றின் வளர்ச்சி விதிகளை மார்க்ஸ் கண்டுபிடித்தார் என்று அவர்க் குறிப்பிடுகிறார். ஒரு சேர, மார்க்ஸையும் டார்வினையும் மத்திய பாஜக அரசும், தமிழக ஆளுநர்ப் போன்றவர்களும் எதிர்ப்பதற்கு இதுவே காரணம்.
இன்று இந்திய மக்கள் மத்தியில் மதம் சார்ந்த அடையாளத்தை அழுத்தமாக வளர்ப்பதற்குப் பகுத்தறிவும் அறிவியல் சிந்தனையும் தடையாக இருக்கிறது. சிறுபான்மை எதிர்ப்பு வாதத்தைக் கருவியாகக் கொண்டு இந்து மத அடையாளத்தைச் சிந்தனையில் ஆழமாகப் பதிய வைக்க முயற்சிக்கின்றனர். அதனை அடிப்படையாக வைத்து, பல தகாத வழிகளில் வாக்கு வங்கியை வளர்த்துக் கொண்டு அரசியல் அதிகாரத்தை முழுமையாகக் கைப்பற்றுவது இந்துத்துவவாதிகளின் நோக்கம்.
அதற்குத் தடையாக இருக்கிற எல்லாத் தத்துவங்களையும் தகர்த்திட அவர்கள் முயற்சிக்கிறார்கள்.ஆனால் டார்வின் கோட்பாடுகளான இயற்கைத் தேர்வு , பரிணாம வளர்ச்சி இல்லாமல் நவீன மருத்துவம் உள்ளிட்ட புதிய கண்டுபிடிப்புகளில் முன்னேற்றம் ஏற்படாது.
அதேபோன்று பெரும்பகுதி உழைக்கும் மக்களை அடிமைத்தனத்திற்கும், சுரண்டலுக்கும் ஆளாக்கி வருகிற முதலாளித்துவத்தை அகற்றி,மனித வரலாறு, சோசலிசத்தை நோக்கிப் பயணப்படுவதற்கு மார்க்சியப் பாதையைத் தவிர வேறு பாதை இல்லை!
                                ( தொடரும்)
Do social media like Facebook interfere in political discussions? Article in tamil translated by Era Ramanan முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் அரசியல் விவாதங்களில் தலையிடுகின்றனவா தமிழில் இரா. இரமணன்

முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் அரசியல் விவாதங்களில் தலையிடுகின்றனவா? – தமிழில்: இரா. இரமணன்தலையிடுவது மட்டுமல்ல அதிலும் சில அரசியல் சக்திகள் பக்கமாகவும் சில அரசியல் சக்திகளுக்கு எதிராகவும் செயல்படுகின்றன. எடுத்துக்காட்டாக கடந்த ஆண்டு மேற்கு ஆசியாவில் காசா போர் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த போது ‘அல்அக்சா’ (#Al Aqsa)) என்கிற ஹேஷ்டேகை இன்ஸ்டாகிராம் -அதன் உரிமையாளர் முகநூல் – தடை செய்தது. ‘அல்அக்சா’ என்பது ஜெருசலம் நகரிலுள்ள மசூதி. இஸ்லாமியர்களின் புனித தலம். அதை ‘அல் அக்சா தியாகிகள் படை‘ என்கிற தீவிரவாத அமைப்பு என தவறாக தங்களுடைய அல்கோரிதம் புரிந்து கொண்டதால் நீக்கியதாகக் கூறி மன்னிப்பு கேட்டது.
அரபு மொழி பேசுபவர்களுக்கு இது முகநூலின் மற்றுமொரு அரசியல் அடக்குமுறையே. இது போன்று பல முறை நடந்துள்ளது. முகநூலில் சர்வ சாதரணமாக புழங்கும் மொழிகளில் அரபியும் ஒன்று. இது போல் தவறு நடந்துவிட்டதாக முகநூல் அடிக்கடி வெளிப்படையான மன்னிப்பு கேட்டுள்ளது.

ஆனால் இது அவ்வளவு அப்பாவித்தனமான தவறு அல்ல என்கிறது முகநூலின் முன்னாள் ஊழியரும் எச்சரிக்கை மணி அடிப்பவராக மாறியுள்ளவருமான பிரான்சிஸ் ஹேகன் வெளியிட்டுள்ள ஆவணங்கள்.. இது அதன் கட்டமைப்பிலேயே உள்ள குறைபாடு என்கிறார். இது போன்ற தவறுகளின் ஆழத்தை பல ஆண்டுகளாகப் புரிந்திருந்தாலும் அதை சரி செய்வதற்கு முகநூல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இது அரபி மொழியில் மட்டும் நடக்கவில்லை. அந்த நிறுவனம் இது போன்ற மோதல் நடக்கும் பல பகுதிகளில் அந்த மொழி மற்றும் கலாச்சாரங்களைப் புரிந்து கொள்ளும் நடுவர்களை போதுமான அளவு நியமிப்பதில்லை. அதன் செயலியும் செயற்கை நுண்ணறிவு கொண்டு பல்வேறு மொழிகளில் பதிவிடப்படும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை கண்டுபிடிக்கும் திறனை வளர்க்கவில்லை. இதனால் அங்கெல்லாம் வெறுப்பை விதைக்கும் பேச்சுகளும் தீவிரவாத பிரச்சாரங்களும் பெருகுகின்றன.

முகநூலின் இரட்டை வேடத்திற்கு இன்னொரு எடுத்துக்காட்டு ஆப்கானிஸ்தானிலும் மியான்மரிலும் இந்த ஓட்டைகள், மக்களை தூண்டிவிடும் பதிவுகள் ஏராளமாக பதிவிடுவதற்கு அனுமதிக்கும் அதே வேளையில் சிரியாவிலும் பாலஸ்தீனத்திலும் பொதுவான வார்த்தைகளைக் கூட ஒட்டு மொத்தமாக தடை செய்து சாதாரண பேச்சுகளையும் நசுக்குகிறது.

உலகின் எல்லோருடைய அரசியல் கருத்துகளையும் தான் ஒரு நாள் இடையீடு செய்வோம் என்ற நோக்கத்துடன் முகநூல் செயலி அமைக்கப்படவில்லை. ஆனால் இன்று அதனுடைய அரசியல் முக்கியத்துவத்திற்கும் அதன் வசம் உள்ள வள ஆதாரங்களுக்கும் ஏற்ப பதிவுகளை ஆய்வு செய்யும் நடுவர்களை நியமிக்க ஏன் அது போதிய நிதி ஒதுக்கவில்லை என்பது வியப்பளிப்பதாக உள்ளது என்கிறார் மத்திய கிழக்கு எண்ணியல் நிறுவன இயக்குனர் எலிசா கேம்பெல்.
மியான்மரில் ரோஹிங்யா இஸ்லாமியர்களை குறிவைக்கும் வெறுப்பு பதிவுகளை பரப்புவதை தான் தடுக்கவில்லை என தன் உள் ஆவணங்களில் முகநூல் ஒத்துக்கொண்டுள்ளது.

இந்தியாவிலும் ஒரு வலதுசாரி இந்துத்துவ தேசியவாத குழு முகநூலில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பயப் பிராந்தியை கிளப்பக் கூடிய பதிவுகளை வெளியிடுவதை தடை செய்யலாமா என்று அதன் ஊழியர்கள் விவாதித்ததாக இந்த ஆவணங்கள் காட்டுகின்றன.

26.10.2021 தேதியிட்ட இந்து ஆங்கில நாளிதழ் செய்தியிலிருந்து.