Dharmasingh's Poems. தர்மசிங்கின் கவிதைகள்

தர்மசிங்கின் கவிதைகள்




” மகரந்தங்கள் ”
தடுக்கி விழுந்த போது
மருந்து தடவ
அப்போதெல்லாம்
சில விரல்கள் இருந்தன

சொல்லடி பட்ட போது
வார்த்தைகளால் ஒத்தடம் தர
அப்போதெல்லாம்
இரு நாவுகள் இருந்தன

தாளமுடியாத
பாரம் அழுத்திய போதெல்லாம்
கை கொடுத்து இறக்கி வைக்க
இரு கரங்கள் இருந்தன

இப்போது
எனது ஆற்றாமைகளுக்கு
நான் தான்
ஆறுதல் சொல்லிக் கொள்கிறேன்
இப்போது
எனது காயங்களுக்கு
நான் தான்
மருந்து பூசிக் கொள்கிறேன்

எனக்கான வாழ்வைத் தானே
வாழ ஆசைப்படுகிறேன்
அதை பேராசை என்று சொல்ல முடியுமா?
ஊசியால் குத்தினால் தாங்கலாம்
வேல்கம்பை நுழைக்க முனைகிறாயே காலமே

மகரந்தங்களைச் சுமக்கும்
வலிமை பெற்றது
பட்டாம்பூச்சி என்பதற்காக
மூட்டையாக மகரந்தங்களை
முதுகில் ஏற்ற நினைத்தால்?…

” உதடுகள் ”
பசித்திருக்கும் பிள்ளை
முதலில் உற்று நோக்குவது
அன்னையின்
உதடுகளைத் தான்

படியேறும் விருந்தினர்
முதலில் பார்ப்பது
உறவுகளின்
உதடுகளைத் தான்

எதிர்பாராமல்
சந்திக்கும் நண்பன்
முதலில் நோக்குவது
சக நண்பனின்
உதடுகளைத் தான்

வயோதிகத்தில் உழலும்
பெற்றோர் முதலில்
உன்னிப்பாக கவனிப்பது
மகனின்
உதடுகளைத் தான்

நோயில் திணறும்
உடல் நலமிழந்தவன்
முதலில் எதிர் நோக்குவது
மருத்துவரின்
உதடுகளைத்தான்

ஆகாச மயக்கங்களில்
திளைத்துக் கிடந்தாலும்
ஒரு மழலை பிரிக்கும்
உதடுகள் முன்னால்
உலகமே தோற்றுப்போகும்

அன்னிய மனங்களை நமதாக்க
முகப்பூச்சுகள் தேவையில்லை
களங்கமற்ற
ஒரு புன்னகை போதும்…