Veli Short Story by Poongatru Dhansekar Synopsis 78 Written by Ramachandra Vaidyanath. பூங்காற்று தனசேகரின் வெளி சிறுகதை - ராமச்சந்திர வைத்தியநாத்

சிறுகதைச் சுருக்கம் 78: பூங்காற்று தனசேகரின் வெளி சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்




உண்மையைச் சொல்லும் பாசாங்கு இல்லா சிறுகதைப் படைப்பாளி

வெளி
                                          பூங்காற்று தனசேகர்

அதனை குடிசையென்றோ, விளம்பரப் பலகையினால் மூடப்பட்ட பெரிய பாத்திரம் என்றோ எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளலாம்.  ஆனால் அதற்குள்தான் அண்ணல் காந்தி நகரின் கதாநாயகியான பன்னிரண்டு வயது சுகுமாரியும், அவளின் அம்மா லட்சுமியும் வசித்து வருகிறார்கள். 

கூவத்தின் கரையில் பட்டா இல்லாமல், வாடகை இல்லாமல் இது போல முப்பது நாற்பது குடிசைகள் தோன்றி பல்லாண்டுகளாக  அமைந்திருப்பது வந்து போகும் அரசுகளின் சாதனைகளில் தலையானது.

கணவன் இறந்த பிறகு பத்து வருடங்களாக சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பழ வியாபாரம் செய்வதில் லட்சுமியும் சுகுமாரியும் இரைப்பை காத்து வருகிறார்கள்.  லட்சுமி கூடையில் பழங்களை அடுக்கத் தொடங்கினாள்.  சுகுமாரி பழைய சோறிருந்த பாத்திரத்தில் கை நுழைப்பதை முகம் சுருங்கியபடி பார்த்த லட்சுமி…

“இன்னாடி இது புது பயக்கம். காலையிலேர்ந்து பார்க்கறேன், கக்கூஸ் போகாமலேயே தண்ணிவூத்தின. இப்ப அப்படியே சாப்பிடவும் குந்திகினே. வவுறு சரியில்லையா?” என்று கேட்டாள்.

இதற்கு சுகுமாரி பதிலேதும் சொல்லவில்லை.  மர்மமாய் புன்னகைத்து வைத்தாள்.  இன்று அவள் வழக்கம் போல மின்சார ரயில் பாதைக்கு அருகில் திறந்த வெளியில் ரயில் சத்தத்திற்கு பயந்தபடி கக்கூஸ் போகப் போவதில்லை என்பதை அவளின் அம்மா அறியமாட்டாள்.

அக்குடிசைக்கூட்ட பெண்கள் பகல் இரவு பாகுபாடின்றி அவசரத்திற்கு ஒதுங்குமிடம் ரயில் பாதையோரம்தான்.  தூரத்தில் ரயில்கள் வரும் சத்தம் கேட்டுவிட்டால், அத்தனையையும் அடக்கிக் கொண்டு சேலையை தளரவிட்டு, எழுந்து நின்று தலையைக் குனிந்து கொள்வார்கள்.  ரயில் கடந்தபிறகுதான் அமர முடியும்,  வேண்டும்.  சிறு பிள்ளைகள் விதிவிலக்கு.  உட்கார்ந்தே இருக்கலாம்.

வயது பன்னிரண்டு ஆகிவிட்டதனால் சமீபகாலமாக சுகுமாரியும் எழுந்து நிற்கத் தொடங்கியிருந்தாள்.  பாவாடையை தளரவிட்டு தலைகுனிந்து மலமடக்கி எழுந்து நின்று கொண்டிருக்கும் இந்தியத் தாயின் ஆத்மாவின் அவசரம் பற்றி ரயிலில் செல்பவர்கள் எப்படி அறிவார்கள்?  தம்மைக் கடக்கும் ரயிலில் செல்லும் அனைவரும் கண் பார்வை இழக்க வேண்டும் என்று மகாராணி சுகுமாரி விடுகின்ற சாபங்களும் கலிகாலமாதலால் பலிக்க மாட்டேன் என்கிறது. 

தான் பிறந்ததிலிருந்து கேட்டுப் பழகிய சத்தம் கடந்த இரு வருடங்களாக முக்கியமாக “இனிமே எல்லாம் நீ  ரெயில் வர்றப்ப உட்கார்ந்து இருக்கக்கூடாது… எங்கள மாதிரி  எந்திரிச்சி நிக்கணும் இன்னா புர்தா” என்று அவளின் அம்மா எச்சரித்த அன்றிலிருந்து ரயில் சத்தம் அவளுக்கு எதிரியாய்  போனது.  அதிலிருந்து அவளுக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டி போன்ற மனதிற்கு பிடிக்காத சத்தங்கள் அனைத்துமே ரயில் சத்தம் போலவே கேட்கத் துவங்கியது. அது போன்ற  சத்தங்கள் கேட்டால் அதே இடத்தில் நின்று தரையைப் பார்க்கத் தொடங்கிவிடுவாள்,  அச்சத்தம் நின்றவுடன் நடப்பாள்.  அமர்வாள்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு தம்மிடம் வாடிக்கையாக பழம் வாங்கும் ஒரு சேட்டம்மா வீட்டில் சுகுமாரியை வேலைக்கு சேர்த்து விட்டாள் லட்சுமி.  சுகுமாரிக்கு சேட்டுவின் அபார்ட்மெண்ட் மூன்றாவது மாடி வீடு சொர்க்கமாகவும், மிஞ்சிய சாப்பாடு அமிர்தமாகவும் மாறிப் போனதில் ஆச்சரியம் ஏதுவுமில்லை.  அதுவும் இரண்டு படுக்கையறைகள் கொண்ட அவ்வீட்டிலிருந்த இரண்டு கக்கூஸ் சுகுமாரிக்கு பேரதிசியங்களாயின.  அவற்றைக் கழுவ மட்டுமே அவள் அனுமதிக்கப்பட்டதற்கே அத்தனை பெருமை அவளிற்கு.

சேட்டின் படுக்கை அறையிலிருக்கும் கக்கூஸ்தான் அவளின் பொறாமைப் பெற்ற திருத்தலம்.  சுகுமாரியின் கனவு கக்கூசான அது அத்தனை அழகு.  இந்த இரண்டு ஆண்டுகளாய் இத்திருத்தலமே சுகுமாரியின் இலக்கு கனவு லட்சியமெல்லாம்.  

ஆம், இன்றுதான் அவள் தன்  சபதம் தீர்க்கப் போகிறாள்.  சேட்டுவின் படுக்கையறை கக்கூஸை இன்று அவள் பயன்படுத்தப் போகிறாள். சேட்டு, சேட்டம்மா, அவளின் மாமியார்  கிழவி மூவருமே நேற்றிரவு கிளம்பி ராஜஸ்தான் போய்விட்டார்கள்.  வருவதற்கு ஒரு வாரம் ஆகும்.  

“சுகுமாரி பக்கத்து வீட்ல சாவி கொடுத்துட்டுப் போறோம்.  தெனம் காலையிலே வந்து வீட்டைத் திறந்து கூட்டிட்டு, சாமி படத்துக்கு பூவ மாத்திட்டு போ.  டி.வி போட்டு பார்த்தேன்னு  தெரிஞ்சுது அடி விழும்.”  

ரயில் பாதைகளில் ஒதுங்கும் சில நாட்களில் ரயில் வராத போதும் மாயமாய் காதில் ஒலிக்கும் ரயிலோசைக் கேட்டு எழுந்த சுகுமாரி: நள்ளிரவு தூக்கத்தில் ரயிலோசை கேட்டு பழக்க தோஷத்தில் தூக்கத்திலேயே எழுந்து நின்று அம்மாவின் கிண்டலுக்கு ஆளான சுகுமாரி: இன்று ரயில் சத்தத்தை வெட்கப்படுத்தப் போகிறாள்.  ரயிலோசை நுழைய முடியாத தாழிட்ட கக்கூஸில் ஒதுங்கப் போகிறாள். இரண்டு சந்து தள்ளியிருக்கும் சேட்டுவின் அபார்ட்மெண்டடை நோக்கி நடக்கத் துவங்கினாள்.

அதென்ன ஒரு ஆள்.  ஒரே ஒரு ஆளுக்கு மட்டும ஒரு கக்கூஸாம்.  சேட்டுவின்  பழக்க வழக்கங்கள் எதுவுமே சுகுமாரிக்குப் பிடிக்காது.  அதே போலத்தான் காலிங்பெல்லை சேட்டு அழுத்தினால் எளிதில் கண்டுபிடித்து விடலாம்.  ஏனெனில் கதவைத் திறக்கும் வரை அது ஒலித்துக் கொண்டே இருக்கும்.  டிங் டாங்.. டிங் டாங்.. டிங் டாங்.. என்று அது விடாமல் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.  

சேட்டுவும் சேட்டம்மாவும் அடிக்கடி வெளியே போனாலும், ஏதோவொரு நோயினால் எப்போதும் ஹாலில்  கிடக்கும் படுக்கையில் முடங்கிக் கொண்டு  டி.வி.சீரியல் பார்த்துக் கிடக்கும் சேட்டுவின் அம்மா கிழவியே சுகுமாரியின் கனவிற்குத் தடையாயிருந்தாள்.

சேட்டு அறை கக்கூஸை பயன்படுத்தாமல் தன்னைத் தடுப்பதற்காகத்தான் அக்கிழவி பிறந்திருப்பாளோ என்று சுகுமாரி நினைத்ததில் தவறொன்றுமில்லை.  ஆனால் இப்போது கிழவியும் போய்விட்டாள்.  இனி எதுதான் சுகுமாரியைத் தடுத்துவிட முடியும்?

அபார்ட்மெண்டை அடைந்தவள் பக்கத்து வீட்டில் சாவியை வாங்கினாள்.  இதயம் நொடிக்கு ஐந்து முறை துடிப்பது போலுணர்ந்தாள்.  பூமியிலேயே அவளும் சேட்டு வீட்டு கக்கூசும் மட்டுமே இருப்பது போலவும் தன் இரண்டு வருட கனவு  நிஜமானதுடன் ஏழு உலகங்களும் தம் மலக்குடலில் வந்து குடியேறப்போவதாகவும் நிஜமாகவே நம்பினாள்.

வயிறு தயார் தயார் என்றது.  அடக்கிக் கொண்டாள்.  அதற்கு முன் சில விஷயங்கள் இருக்கிறதே.  வாய் நிறைய சிரிப்புடன் சேட்டுவின் அறைக்குள் ஓடினாள்.  சேட்டு படுக்கும் குஷன் கட்டிலில் விழுந்தாள்.  தன் குட்டிப் பாவாடைக் கலைய தலைமுடி கலைய விழுந்து புரண்டாள்.

ஆம் அவள் கடைசியாக நிஜமாகவே சேட்டுவின் கக்கூசில் அமர்ந்து கக்கூஸ் போகவே தொடங்கிவிட்டாள்.  கைக்கருகிலிருந்து பைப்பில் தண்ணீர் திறந்து விட்டுக் கொண்டிருந்த பத்தாவது நொடியில் அச்சத்தம் கேட்கக் தொடங்கியது.

டிங் டாங்.. டிங் டாங்.. டிங் டாங்.. நிற்காமல் கேட்கத் துவங்கிய அச்சத்தத்தில் அவளின் அத்தனை புலன்களும் சுருங்கிக் கொள்ள … வியர்த்துப் போய் எழுந்தாள்.  இது சேட்டு காலிங்பெல் அழுத்தும் சத்தம்.  சேட்டு எப்படி? அவளுக்கு தெரியாது. ஆனால் சேட்டுதான்.

டிங் டாங்.. டிங் டாங்.. டிங் டாங்..  காலிங்பெல்லின் தொடர்ச்சத்தம் சுகுமாரியின் காதுகளில்  மெல்ல மெல்ல  க்கூகூகூ என தூரத்ததில் ரயில் வரும் சத்தமாக மாறத் துவங்க, வழக்கம் போல பாவாடையை தளரவிட்டபடி பட்டென்று எழுந்து நின்று, தரையைப் பார்க்கத் தொடங்கினாள். இனி ரயில் கடந்த சென்றபின்புதான் அவள் அமர்வாள்.

கூட்டாஞ்சோறு

பின் குறிப்பு:
தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.