இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 71 – சுகந்தி நாடார்
ஒவ்வோரு நாடும் தங்கள் வானெல்லைகளுக்குள் பயணப்படும் அலைவரிசைகளை நிர்மாணிக்கின்றன. அமெரிக்காவில் நான்கு அலைவரிசைகள் அலைபேசி வழி தொலைத்தொடர்புக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 2 GSM bands, 2 UMTS bands, and 3 LTE bands என்று 3 வித அலைவரிசைகள் நுகர்வோர் தொலைத் தொடர்பிற்காகப் பயன்படுத்தபடுகிறது. இந்தியாவில் இன்னும் முதல் தலைமுறை அலைபேசிகளிலிருந்து 4ஆம் தலைமுறை அலைபேசிகள் வரை பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் நான்கு அலைவரிசைகள் தொலைத் தொடர்பிற்கான உரிமம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு அலைவரிசைகளில், பயணப்படும் தரவுகளின் அளவு அதிகரித்துக் கொண்டே போவதால் அமெரிக்கத் தொலைபேசி நிறுவனங்கள் 3ம் தலைமுறை பயன்படுத்தும் அலைபேசிகளை முற்றிலுமாக முடக்க முடிவு செய்துவிட்டன.
வயதானவர்களையும் அடிமட்ட வருமானம் பெறுபவர்களையும் இம்மாற்றம் தாக்கும் என்பது குறிப்பிடதக்கது. அது மட்டுமல்ல பல மருத்துவ சாதனங்கள் உதவி செய்யாது. இந்த ஒரு சிறு நடவடிக்கை எத்தனைப் பெரிய தொழில்நுட்ப ஏற்றத் தாழ்வை அமெரிக்காவில் உருவாக்கப் போகின்றதோ? ஏற்கனவே குறைந்த வருமானம் உடையவர்களிடம் அதிகமாகத் திறன்பேசிகள் இல்லை. இவர்களில் 41% மக்களிடம் broadband இணைய வசதிக் கிடையாது. அமெரிக்க நகரில் வாழும் மக்களிடம் ஒவ்வோருவருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட கணினிக் கருவிகளும் திறன்பேசிகளும் இருக்கும்போது அமெரிக்க அடிமட்ட மக்களில் 40% க்கு திறன்பேசியோ, மடிக்கணினியோ அல்லது மேசைக் கணினியோக் கிடையாது. இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களும் ஆசிரியர்களும் அரசுபள்ளிகளில் கிடைக்கும் சாதனங்களைப் பயன்படுத்துகின்றனர்.
நேற்று வந்த செய்திகளின் படி அமெரிக்க வான் துறை ஆணையம் 5G தொழில்நுட்பம் விமானப் பயணங்களுக்கு ஊறு விளைவிக்க கூடும் என்று கருதுகின்றனர். அமெரிக்க வான் துறை ஆணையமும் அமெரிக்கத் தொலைத் தொடர்பு ஆணயமும் இந்த மாற்றத்தால் வரும் பலச் சிக்கல்களை ஆராய்ந்து வருகின்றனர். விமானங்கள் எந்த தூரத்தில் பறக்கின்றன என்று ஆராய்ந்து அறியும் கருவிகளும் 5G பயணிக்கும் தரவுகளும் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கும் அதற்கு எப்படித் தீர்வு காணலாம் என்று இரு ஆணைய நிருவாகமும் தொலைத் தொடர்ப்பு நிறுவனங்களுடன் பேசி வருகின்றன.
நம் வயிறு 73.9338 மிலி அளவுத் திரவத்தைத் தான் தான் கொள்ளும் திட உணவு எனும் போது 946.353 கிராம். இந்த உணவை நம் உலகில் உற்பத்தி செய்து பசிப்பிணியை போக்கக் கூடிய விளைநிலங்கள் இல்லை. பூமியின் அளவும் வயிற்றின் அளவையும் ஒரு போதும் மாற்ற முடியாது. அதனால் ஏதோ ஒரு வகையில் உலகை வாட்டும் பசிப்பிணிக்கு தீர்வு கண்டுபிடிக்க முடியும்.
ஆனால் ஒரு மனித மூளையின் சிந்தனைக்கு ஒரு அளவு கோல் உண்டா? அதே போல இன்று வானம் பரந்து கிடக்கின்றது. இப்போது அதுதான் நமக்கு அள்ள அள்ளக் கொடுக்கும் அமுத சுரபி. அதனால் இலவசமாக கிடைக்கும் இவை இரண்டையும் இணைத்து திறம்பட வேலை செய்ய வைப்பது நாகரீகத்தின் முக்கியக் கூறாக மாறி வருகிறது. இன்றைய திறன்பேசிகள் மூலம் மனித சிந்தனைகள் வானிலில் எலக்ட்ரான்களாக வலம் வந்து கொண்டே இருக்கின்றன. (எதிர்மின்மம்) அவை எழுத்துக்களாக, ஒலியாக ஒளியாக வலம் வந்து கொண்டே இருக்கின்றன.
நம்முடிடைய அவசர உலகத்தில் நம் எண்ண அலைகள் ஒலியை விட, ஒளியை விட வேகமாக மற்றவர்களை அடைய வேண்டியச் சூழ்நிலையில் உள்ளோம். ஒலி ஒளி ஏன் நம் சிந்தனையை விட வேகமாக இந்த எதிர்மின்மத் தரவுகள் நம்மை விடாமல் தொடர்ச்சியாகத் தாக்கிக் கொண்டே இருக்கின்றன. நம் சிந்தனையின் வேகத்தைவிட அதிகமாக நம்மைத் தரவுகள் சூழ்ந்தால் தானே நம்மால் விழிப்புணர்வோடு செயலாற்ற முடியாது. திறன் பேசிகள் கொடுக்கும் மதிமயக்கத்தில் நமக்கு நாமே புதைகுழி தூண்டுகின்றோமோ என்ற அச்சம் ஏற்படத்தான் செய்கின்றது.
இப்படி வரும் தரவுகள் வேகவேகமாக பயணிக்க வான் வழி- பறக்கும் விமானங்களுக்குப் போக்குவரத்து சிக்கல் ஏற்படுமோ? அல்லது தரவுகளின் போக்குவரத்தில் சிக்கல்கள் ஏற்படுமோ?
இலாப நோக்கோடு நிறுனங்கள் செயல்பட செயல்பட தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வுகள் பெருகிக்கொண்டே போகின்றன. உலகமே இப்படிப்பட்ட நிறுவனங்களின் கையில்தான் இருக்கின்றது என்று தெரிகின்றது. அதற்கு சான்றாக உலகிலேயே புகழ்பெற்ற பங்கு மேலாண்மையை நாம் பார்க்கலாம். உலகில் உள்ள ஒவ்வோரு நாடும் தங்களின் குடிமக்களின் ஓய்வூதியத்தைப் பெருக்க பங்கு சந்தைகளில் முதலீடு செய்கின்றன. அப்படி செய்த முதலீட்டில் உலகிலேயே முன்ணனியில் இருப்பது நார்வே நாடு அந்த நாட்டின் முக்கியமான ஓய்வூதிய நிதிமேலாண்மை உலகில் உள்ள 69 நாடுகளில் உள்ள 10,000 நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யபட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் செயல்கள் தான் எதிர்கால பொருளாதாரத்தை ஆளப்போகின்றன.
தங்கள் இலாப நோக்கைச்செல்லும் நிறுவனங்கள் நுகர்வோருக்கு ஊக்கம் கொடுக்குமா அல்லது ஒரு தனிமனிதன் தன்னிறைவு பெற உதவி செய்யுமா?
இங்கே கண்டிப்பாக இன்றையக் கணினித் தொழில்நுட்பத்திற்கு எதிராக கருத்துக்களுக்கு இடமில்லை. நம்முடைய வாழ்க்கை முறையின் பின்ணனியைக் கொஞ்சம் அலசிப் பார்க்கின்றேன் அவ்வளவுதான். கணினியுகத்தாலும் திறன்பேசிகளின் வளர்ச்சியாலும் கண்டிப்பாக உலகம் பல பயன்களைப் பெற்றுள்ளது. இந்தப் பேரிடர் காலத்தில் நாம் அனைவரும் இதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தோம். ஆனால் இப்படிப்பட்ட அனுபவங்கள் மறுக்கப்பட்ட ஒரு சமுதாயம் இருக்கத்தானே செய்கின்றது? இந்த சமுதாயத்தைப் பற்றிய கவலை இந்நிறுவனங்களுக்கு வருமா என்பது தெரியாது. ஆனால் அப்படி ஒரு சமுதாயமாக நாம் இருந்து விடக்கூடாது, அப்படிப்பட்ட சமுதாயம் உருவாக ஒரு தடைக்கல்லாக நாம் இருக்க வேண்டும். அதற்குக் கல்வியில் மாற்றங்களும் கல்வியின் பரிணாம வளர்ச்சியும் கண்டிப்பாகத் தேவை.
ஒரு காலத்தில் பெரிய தொழில்நுட்பமாகக் கருதபட்ட தொலைக்காட்சியும், வானொலியும் இன்று நம் கைக்குள் அடங்கி விட்டது. அது மட்டுமல்ல நமது தொலைபேசியும் இதற்குள் அடக்கம். ஆனால் 2020- 30க்குள் மனித குலத்தின் நுண்ணிய விவரங்கள் அனைத்துமே தரவுகளாக மாறி கணினிக்குள் புகுந்து விடும். உள்ளங்கையில் உலகம் என்பது போய் உலகம் என்பது வெறும் புள்ளி விவரங்களாகிவிடும். இது கணினித் தொழில்நுட்பத்தின் ஒரு எச்சரிக்கையாகவும் அதே நேரத்தில் மனித குலத்தின் சாதனையாகவும் கருதப்படுகின்றது.
நாம் சாமான்யர்கள் நாம் என்ன செய்ய முடியும் என்று கண்டிப்பாய் சிந்திக்கும் காலக்கட்டம் இது. உணவு தரும் விவசாய நிலங்களைவிட அதிகமாகக் காலி வயிறுகள் தான் உலகத்தில் உள்ளன. அதே போல நம்முடைய தரவுகளின் அளவும் மனித சிந்தனையை விட வேகமாக வளர்ந்துவிடுமா? வளரவிடலாமா?
பெரிய பெரிய நிறுவனங்களோடு ஒரு சாமான்யன் என்ன செய்ய முடியும் என்ற தயக்கம் நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. டேவிடும் கோலியாத்தும் என்ற பரிசுத்த ஆகமக் கதை ஒன்று உண்டு. கெளரவர்கள் பாண்டவர் கதையும் நமக்குத் தெரியும். எந்த ஒரு நேரத்திலும் ஆக்க சக்திகளுக்கு வலிமை குறைந்து நேர்மறை செயல்பாட்டிற்கும் எதிர்மறை செயல்பாட்டிற்கும் இடையே உள்ள சமன்நிலை பாதிக்கப்படும் போது, அதிகமான எதிர்மறை ஓட்டத்தைக் கட்டுப்படுத்த சிறிதளவு நேர்மறை செயல்பாடு ஒரு சமநிலையை உருவாக்கி விடும் என்பதே இக்கதைகளின் கருத்து.
எனவே சாமான்யர்களாகிய நாம் நமது ஆக்க சக்தியை அதிகரிக்க கல்வி 4.0 கண்டிப்பாய் உறுதுணையாக இருக்கும். நாம் ஒவ்வோருவரும் உலகை மாற்றத் தேவையில்லை. நம்மில் நாமே தன்னிறைவு பெற முயற்சிக்க ஆரம்பிக்க வேண்டும்.
உலக நிலப்பரப்பில் 37.6% விவசாய நிலமாக இருந்தாலும் உலக உணவுத் தேவையில் 70% சதவிதத்தை தயாரித்துத் தரும் விவசாயிகள் அரை வயிற்றுக்கும் கால் வயிற்றுக்கும் உணவு உண்டு வாழ்கின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை கூறுகிறது. இதைக் சுட்டிக்காட்ட நமக்கு அறிக்கைகள் தேவையில்லை. நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் கண்டிப்பாகப் பார்க்கின்றோம். இந்த நிலை ஏன்? தொழில்துறை பொருளாதாரம் சார்ந்த கல்வியை நாம் முன்னிலைப்படுத்தியதால், விவசாயக்கல்வியும் விவசாயத் தன்னிறைவும் உருவாக வழி இல்லாமல் போய்விட்டது.
2030ல் எந்த அளவுக்குத் மின் எண்ணியியல் தொழில்நுட்பம் வளர்ந்து வருமோ அதே அளவு வேகத்தில் தொழில்நுட்ப ஏற்றத் தாழ்வுகள் கண்டிப்பாக இருக்கும் என்று உறுதியாகக் கூற முடியும்.
அடுத்து கல்விக்கான தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வுகள்களின் நிதர்சனத்தையும், நமக்குப் பின்வரும் தலைமுறைகள் சந்திக்க இருக்கும் சூழவியல் ஆபத்துக்களையும், இன்றைய தலைமுறையின் அடிப்படை குணாதிசியங்களும் கல்வியின் எதிர்காலப் பரிணாமத்தை முடிவு செய்யும்.
முந்தைய தொடரை வாசிக்க:
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 67(எண்ணியியல் செலவாணியின் எதிர்காலம்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 68(கல்வியில் கணினி) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 69(கல்வியின் எதிர்காலம் கணினியா?) – சுகந்தி நாடார்