அஞ்சலகம் மீதான காதல் கவிதை – சத்யா சம்பத்

அஞ்சலகம் மீதான காதல் கவிதை – சத்யா சம்பத்




16 வயதில் என் மாமன் பட்டாளத்து பாபு மேல் காதல்,
18 வயதில் திருமணத்தில் வளர்ந்தது,
இப்போது அஞ்சலகம் மீதும் படர்ந்துள்ளது ஏனெனில்!
மாதம் ஒரு முறை மாமன் அனுப்பும் அன்பைச் சுமந்து வருவதால்!
அஞ்சலகத்தின் ஒட்டடை என் மனதை பதைக்க வைக்கும்
மாமன் அன்பில் தூசு விழுமோ என்று!
மாதம் ஒருமுறை அஞ்சலகத்தைச் சுத்தம் செய்ய வைத்தது என் காதல்!
மாமன் அனுப்பும் மணியாடரில் அலுக்கு படியுமோ என்று!
வருடம் ஒரு முறை அஞ்சலகத்தை வெள்ளை அடிக்க வைத்தது என் காதல் !
தினம் கேட்கும் போஸ்ட் மேனின் மணி ஓசைக்கு
எண்ணெய் போட வைத்தது என் காதல்!
என் மகள் மீதான பொன்மகள் திட்டம் வளர்ந்து கைகொடுக்க
விஜயதசமியை அஞ்சலகத்தில் சிறப்பிக்க வைத்தது என் காதல்!
ஆர்.டி யில் குருவியைப் போல் சேர்த்ததைக் கொண்டு
பல நகைக்கு உரிமைகாரியாக்கியது என் காதல்!
அலைப்பேசி, இணைய வழி என்று பல வழிகள் வந்தாலும்
என் மாமனின் கடுதாசி,
மணியாடருக்கு ஈடாகாது.
அதற்கான காத்திருப்பு, தவிப்பு, காதல் என
எதையும் தருவதில்லை இன்றைய வழிமுறைகள்.
அஞ்சலகத்தில் கேட்கும் முத்திரை ஓசையும்,
போஸ்ட்மேனின் மணி ஓசையும்
நம் வீடு நெருங்க நெருங்க
காதலின் ஆழம் புரியும்!
மனம் பதைத்து மெய்சிலிர்க்கும்
அஞ்சலகம் மீதான காதல்!!!!

– சத்யா சம்பத்

Enakkendru Eppadi Urakkam Varum Poem By Athiran Jeeva எனக்கின்று எப்படி உறக்கம் வரும்? கவிதை - ஆதிரன் ஜீவா

எனக்கின்று எப்படி உறக்கம் வரும்? கவிதை – ஆதிரன் ஜீவா




உடை தானே!
அவள் விரும்பும்படி
கொண்ட நம்பிக்கைப்படி உடுத்தட்டுமே!
எனக்கென்ன வந்தது?

ஏட்டிக்குப் போட்டியென
காவித் துண்டணிந்து எதிர்ப்பைக் காட்டியதும்
கூட்டுப் புழுவாக வீட்டிற்குள்
அடங்கி இருப்பாள் என முட்டாளாய் இருந்துவிட்டேன்.

பர்தா அணிந்து
பைக்கில் அவள் பறந்தது கண்டு,
காவித் துண்டுகளும் ஆரஞ்சுத் தொப்பிகளும்
எல்லோருக்கும் வழங்கப்பட்டன…

தனியாய் மாட்டிக் கொண்ட ஆட்டுக் குட்டியைக்
குதறக் காத்திருந்த
வெறிநாய் கூட்டத்தில்
நானும் ஒருவனானேன்…

ஆடல்ல, நான் சிங்கமென
காட்டி விட்டாள்;
பாடம் புகட்டி விட்டாள்..

என் மதப் பண்டிகை மட்டும்
பள்ளியில் கொண்டாடப் பட்டபோது,
தபால் ஆபீஸ் பிள்ளையார் வங்கிப் பிள்ளையார் முளைத்த போது,
புதிய திட்டங்களை வேத பூஜையுடன் தொடங்கியபோது,
அமைதிகாத்தானே என் சகோதரன்!

அவள் உடை; அவள் உரிமை
போராடட்டும் என விட்டிருக்க வேண்டும்…
இல்லையெனில்
கல்விக் கட்டண உயர்வு,
நுழைவுத் தேர்வு,
உதவித்தொகை நிறுத்தி வைப்பு என
இன்னும் இணைத்திருக்க வேண்டும்.

நான் அறியேன்…
பின்னொரு நாள் நிகழ்த்த இருக்கும்
வன்முறை ஆட்டத்திற்கான
ஒத்திகை தான் இது என்று…

நான் அறியேன்…
எனக்கு வழங்கப்பட்ட
காவித் துண்டுகளும் ஆரஞ்சு தொப்பிகளும்
ஹரித்துவார் மாநாட்டில்
‘ஆர்டர்’ செய்யப்பட்டவை என்று…

நான் அறியேன்…
என் சொந்த சகோதரர்களை வெறுப்பதற்கான நியாயங்கள் தான்
மதப்பற்று என்பதை…
எனக்கின்று எப்படி உறக்கம் வரும்?