அஞ்சலகம் கவிதை – சாந்தி சரவணன்

அஞ்சலகம் கவிதை – சாந்தி சரவணன்




எனக்கு உன் மீது காதல்!
ஏன்?

“அம்மா போஸ்ட்”
“சார் தபால்”
“மணி ஆர்டர்”
“சார் தந்தி”
இந்த சொல்லாடல்கள்
என்னுள் உணர்ச்சிகளை தூண்டியதே
ஆதலால் உன் மீது காதலா?

” தேர்ச்சி அடைந்துள்ளீர்”
என தேனான செய்தி தந்ததாயே
ஆதலால் உன் மீது காதலா?

விடுதி மேலாளர் ஒவ்வொரு பெயர் படிக்கும் போது
நமக்கு கடிதம் வந்துள்ளதா?
என என் மனம் ஏங்குமே!
ஆதலால் உன் மீது காதலா?

எழுதுகோல் கொண்டு கிறுக்கி கிறுக்கி
நாளடைவில்
முத்து முத்தாக எனது கையெழுத்து
பரிமாணம் அடைந்ததே
ஆதலால் உன் மீது காதலா?

அன்புள்ள அப்பா அம்மாவிற்கு
அன்பு சீத்திக்கு
அன்புள்ள தாத்தா பாட்டிக்கு
அன்பு கணவருக்கு
அன்பே ஆருயிரே
என உள்ளத்தின் உணர்வுகளை துவக்கத்திலேயே சொல்லிவிடுவாயே
ஆதலால் உன் மீது காதலா?

“பொண்ணு பிடிச்சிருக்கு”
என ஒற்றை வரியில்
என் வாழ்க்கையை சுமந்து வந்தாயே
ஆதலால் உன் மீது காதலா?

“கிளம்பி வா” என இணையரின் அன்பை ஏந்தி வந்தாயே
ஆதலால் உன் மீது காதலா?

மறைந்த அப்பாவின் கடிதத்தில்
வாழும் உயிராய்
இன்றும் நீ இருப்பதால்
உன் மீது காதலா?

பொங்கல் வாழ்த்து,
புத்தாண்டு வாழ்த்து
தீபாவளி வாழ்த்து,
என எனது மகிழ்ச்சியை
சுமந்து செல்வாயே
ஆதலால் உன் மீது காதலா?

ஸ்டாம்ப் கலெக்ஷன்
என தலைவர்களை
நான் அறிந்து கொள்ள செய்தாயே
ஆதலால் உன் மீது காதலா?

கட் சேவை, குறுஞ்செய்தி, இன்ஸ்டாகிராம்
டிவிட்டர், வாட்ஸ்அப், முகநூல்
என நொடியில் தகவல்களை பரிமாறி கொண்டாலும்
காத்திருந்து நீ கொண்டு வந்த கடிதம் போல் இல்லை என்பதால்
உன் மீது காதலா?

ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல
எத்தனை எத்தனை திட்டங்கள்
காடு மேடு கடந்து வந்து எங்களிடம் சேர்ந்தாயே
ஆதலால் உன் மேல் காதலா?

சிக்னல் இல்லை என ஒரு போதும்
நீ சொன்னதில்லை
என்பதால் உன் மீது காதலா?

எத்தனை எத்தனையோ காரணங்கள்
குவிந்துகிடக்கு அஞ்கலகமே
உன் மீது காதல் கொள்ள!

உன் காதலியாக இருப்பதில்
நான் கர்வம் கொள்கிறேன்!

திருமதி. சாந்தி சரவணன்
Mob:9884467730