மறைந்த நாடுகளும் அதன் தபால்தலைகளும் கட்டுரை – அருண்குமார் நரசிம்மன்
மறைந்த நாடுகளும் அதன் தபால்தலைகளும்
இந்திய சமஸ்தானமான ஆல்வார் தபால் சேவை மற்றும் அதன் தபால்தலைகள்
உலகில் பல நாடுகள் தங்கள்உள்நாட்டு பயன்பாட்டிற்கும் வெளிநாடுகளுக்கு தபால்களை அனுப்புவதற்கு தபால்தலைகளை வெளியிட்டு பயன்படுத்திவந்தன ஆனால் ஏதோ காரணங்களால் அந்த நாடுகள் வேறேதேனும் நாடுகளுடன் இணைத்திருக்கும் அல்லது தனி நாடெனும் அந்தஸ்தை இழந்திருக்கும்.
தபால்தலை சேகரிப்போர் இப்படிப்பட்ட நாடுகளை மறைந்த நாடுகள் அல்லது காணாமல் போன நாடுகள் என்று அழைப்பார்கள். இந்தியாவில் இது போன்று மறைந்த நாடுகள் சில உள்ளன, அதில் ஒன்றுதான் ஆல்வார்.
இந்த நாடு இந்தியாவின் வடமேற்கில் உள்ள ராஜ்புதானாவில் (தற்போதுள்ள ராஜஸ்தான் மாநிலம்) ஒரு சமஸ்தானமாக இருந்தது. இந்த நாட்டை ஆண்ட மன்னர்களுக்கும் அவர்களின் குடிமக்களுக்கும் நல்உறவு இருந்ததாக தெரியவில்லை, ஆனால் ஆங்கிலேயர்களுடன் இணக்கமாக இருந்துள்ளார்கள் என்பது இந்திய நாட்டின் சரித்திரத்தை படிக்கும்போது நாம் தெரிந்துகொள்ளலாம்.
ஆல்வார் நாட்டை பற்றி நாம்மேலும் தெரிந்துகொள்ள சரித்திரத்தின் பக்கங்களை புரட்டி பார்க்கும்போது இந்த நாடு ஒரு மிகப்பெரிய சுற்றுசுவர் மற்றும் அகழியால் சூழப்பட்டிருந்ததும் ஒரு கூம்பு வடிவ மலையின் நடுவில் ஒரு கோட்டை இருந்ததும் தெரியவருகிறது.
ஆல்வார் 1775 ஆம் ஆண்டில் ஆல்வார் சமஸ்தானத்தின் தலைநகராக மாற்றப்பட்டது. இதில் 14ஆம் நூற்றாண்டின் தரங் சுல்தானின் கல்லறை மற்றும் பல பழங்கால மசூதிகள் உள்ளன. அழகிய சிலிசேர் ஏரியை ஒட்டியுள்ள இந்த நாட்டின் அரண்மனை, இந்தி, சமஸ்கிருதம் மற்றும் பாரசீக கையெழுத்துப் பிரதிகளின் நூலகத்தையும், ராஜஸ்தானி மற்றும் முகலாய சிறு ஓவியங்களின் தொகுப்பையும் கொண்ட அருங்காட்சியகத்தைக்கொண்டுள்ளது.
இந்த நாட்டை 1874-1892 வரை ஆட்சி செய்து வந்த மன்னர் மங்கள் சிங் பிரபாகர் 1877ஆம் ஆண்டு முதல் தபால் தலையை வெளியிட்டார். ஆல்வார் நாட்டிற்கு ஒரே வடிவமைப்பிலான நான்கு வெவ்வேறு தபால் தலைகள் வெளியிடப்பட்டன. இந்த வடிவமைப்பில் கந்த்ஜார் என்று அழைக்கப்படும் ஆல்வார் குத்துவாளின் படம் தபால்தலையின் நடுவில் இடம்பெற்றிருந்தது. இந்த குத்துவாள் ஒரு தனித்துவமான வடிவமைப்பில் செய்யப்பட்டது, இதை அழுத்தும் போது, கத்திகள் கத்தரிக்கோல் போல் திறந்து எதிரியின் உடலுக்குள் மிகப்பெரிய சேதத்தை செய்யவல்லது.
முதன்முதலில் பிப்ரவரி 1877இல் ஆல்வாரின் தபால்தலை வெளியிடப்பட்டதாக கூறப்பட்டாலும் செப்டம்பர் 1876இல் அவை வெளியிடப்பட்டிருக்கலாம் என சிலர் கருதுகின்றனர். 1902 ஜூலை மாதம் 1ஆம் நாள் பிரிட்டிஷ் இம்பீரியல் அரசால் ஆல்வாரின் அஞ்சல் சேவையை தங்களின் அரசின் ஆளுமைக்கு கீழ் கொண்டு வரும் வரை அது ஆல்வார் மன்னரின் கட்டுப்பாட்டிலிருந்து அந்த நாட்டின் தபால் உபயோப்படுத்தப்பட்டாக சொல்லப்படுகிறது.
இந்த தபால்தலைகள் ஆல்வார் நாட்டில் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. 18 மார்ச் 1948 அன்று, இந்த சமஸ்தானம் அதன் அருகில் உள்ள மற்ற மூன்று சமஸ்தானங்களான பாரத்பூர், தோல்பூர் மற்றும் கரௌலி ஆகியவற்றுடன் ஒன்றிணைக்கப்பட்டது. இந்த சமஸ்தானங்கள் இந்திய நாட்டுடன் 1949ஆம்ஆண்டு மே 15ஆம் தேதி மற்ற சில சமஸ்தானங்கள் மற்றும் அஜ்மீர் பிரதேசத்துடன் இணைக்கப்பட்டு இன்றைய இந்திய மாநிலமான ராஜஸ்தானை உருவாக்கியது.
– அருண்குமார் நரசிம்மன்