New plan to save the earth Article by Sajeev Kumar புவியைக் காக்க புதிய திட்டம் - சஜீவ் குமார்

புவியைக் காக்க புதிய திட்டம் – சஜீவ் குமார்




பிடல் காஸ்ட்ரோ ஒருமுறை பத்திரிக்கையாளரிடம் கேட்டார்,”நீங்கள் சோசலிசத்தின் தோல்வி பற்றி கேட்கிறீர்கள், ஆனால் முதலாளித்துவத்தின் வெற்றியை உங்களால் கூற இயலுமா?”.

ஏற்கனவே நெருக்கடியிலிருந்து மீள முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்த முதலாளித்துவம் இன்று கோவிட் பெருந்தொற்று காரணம் மேலும் சிக்கி சின்னாபின்னமாகி உள்ளது. உலகில் உள்ள மாந்தர்களில் 237 கோடி பேர் உணவுக்கு திண்டாடும் நிலையில் உள்ளனர். இவர்கள் வளர்ச்சி இல்லாத நாட்டு மக்கள் மட்டுமல்ல வளர்ந்த நாடுகளில் உள்ளவர்களும் அடங்குவர்.(கட்டுரையாளர்)

நிலைமை இப்படி இருக்க உலகளாவிய பல்பரிமாண வறுமைக் குறியீடு என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (UNDP) அக்டோபர் 2021 ல் ஒரு அறிக்கையை வெளியிட்டது, அது பெரும்பாலானோர் கவனத்தை ஈர்க்காமலேயே போனது. அதில் இனம், சாதி, பாலினம் ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளின் முகமூடி அவிழ்த்தல் என்ற உப தலைப்பில் கூறப்பட்டுள்ளது மிகுந்த கவனத்திற்குரியது. இன்று சர்வதேச வறுமைக்கோடு என்பதைவிட (அதாவது ஒருநாள் 1.90 அமேரிக்க டாலர் வருவாய்) இந்த பல்பரிமாண வறுமை அளவீடு என்பது துல்லியமானது.

உடல் நலம் (ஊட்டச்சத்து, சிசு மரணம்), கல்வி (பள்ளி செல்லும் காலம், பள்ளி வருகை), வாழ்க்கைத் தரம் (சமையல் எரிவாயு பயன்பாடு, சுகாதாரம், தண்ணீர், மின்சாரம், வீடு, சொத்து) ஆகிய 3 அச்சுகளில் 10 குறிகாட்டிகள் மூலம் பல்பரிமாண வறுமை அளவிடப்படுகிறது. 109 நாடுகளில் 590 கோடி மக்களின் வாழ்வியல் சூழலிலிருந்து பல்பரிமாண வறுமை பற்றிய ஆய்வை இந்த குழு மேற்கொண்டது. அதில் அவர்கள் கண்டறிந்தது உலகில் 130 கோடி பேர் (ஐந்தில் ஒருவர்) பல்பரிமாண வறுமையில் வாழ்கின்றனர்.

* அதில் 64.4  கோடி அதாவது ஏறக்குறைய பாதி பேர் 18 வயதுக்கும் குறைவான குழந்தைகள்.
* அதில் 85% பேர் சகாரா கீழ்மை (sub-Sahara) ஆப்பிரிக்காவில் உள்ளனர்.
* 100 கோடி பேர் சுவாசக் கோளாறு உண்டாக்கும் விறகு போன்றவை பயன்படுத்தி சமைக்கின்றனர், சுகாதாரமற்ற கழிப்பிடம் மற்றும் தரமற்ற வீடுகளிளை பயன்படுத்துகின்றனர்.
* 56.8 கோடி பேர் குடிநீருக்காக 30 நிமிடங்களுக்கு மேல் நடக்க வேண்டியுள்ளது.
* பல்பரிமாண வறுமை கொண்ட 78.8 கோடி பேர் உள்ள குடும்பங்களில் குறைந்தது ஒருவராவது ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவராக இருக்கின்றனர்.
* இத்தகைய வறுமையில் வாழ்பவர்களில் கிட்டத்தட்ட  66% பேர் வாழும் குடும்பங்களில் ஒருவர் கூட குறைந்தது 6 வருடங்கள் கல்விச்சாலை செல்லாதவர்களாக உள்ளனர்.
* 67.8 கோடி பேருக்கு மின்சார வசதி இல்லை.
* 55 கோடி பேருக்கு  வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி, கணிப்பொறி, விலங்கு பூட்டிய வண்டி, மிதிவண்டி, மோட்டார் சைக்கிள் மற்றும் குளிர்சாதன பெட்டி போன்ற எட்டு வகை சொத்தில் ஏழும் இல்லாதவர்களாக உள்ளனர்.

அறுதி எண்ணிக்கை பார்க்கும்போது UNDP அறிக்கையில் உள்ளது குறைவாக தோன்றலாம். உதாரணம் உலக வங்கி 2019-ல் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் உலக மக்கள் தொகையில் 90% பேருக்கு மின்சார வசதி உள்ளது. (அதாவது அன்றைய மக்கட்தொகை படி 76.7 கோடி பேருக்கு மின் வசதி இல்லை-கட்டுரையாளர்). அதேபோல 2020-ல் நடந்த ஆய்வில் 350 கோடி பேருக்கு மின் வசதி இல்லை என்கிறது. ஆனால் UNDP அறிக்கையோ 67.8 கோடி பேருக்கு மட்டுமே மின் வசதி இல்லை என்று சொல்கிறது. அறுதி எண்ணிக்கை குறைவு என்றாலும் UNDP அறிக்கை தரும் செய்தி மிகவும் அதிர்ச்சி தரக்கூடியது, அது என்னவெனில், நாள் தோறும் ஏற்றத்தாழ்வு வளர்ந்துவரும் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

முதல் முறையாக UNDP ஏற்றத்தாழ்வுகள் நுட்பமான விஷயங்களில் கவனத்தை குவித்து -இனம், சாதி படிநிலைகள் மீது வெளிச்சம் பாய்ச்சியுள்ளது. சமத்துவமற்ற சமூக அடுக்குகள், மரபுவழி வந்த பண்டைய பழமைவாத பாரம்பரியம் போன்ற மனித சுயமரியாதையை தாக்குதலுக்கு உள்ளாக்கும் மோசமான விஷயங்கள் வேறு எதுவும் இருக்க முடியாது. 41 நாடுகளிலிருந்து பெறப்பட்ட தரவுகள் அடிப்படையில் பல்பரிமாண வறுமை என்பது சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்களை மிக மோசமாக பாதிக்கிறது என்று UNDP அறிக்கை கூறுகிறது. உதாரணமாக இந்தியாவில் பட்டியல் சாதி/ பட்டியல் இன மக்களை வறுமை மற்றும் பாகுபாடு அதிகமாக பாதிக்கிறது, அது அவர்களின் ஏழ்மையை மேலும் பூதாகரமாக்குகிறது.

பல்பரிமாண வறுமைக்கு உள்ளாகும் 6-ல் 5 பேர் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள். 2010 புள்ளிவிவரப்படி ஒவ்வொரு வருடமும் மருத்துவ செலவு காரணமாக 6.3 கோடி இந்தியர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளப்படுகின்றனர் (அதாவது ஒரு நொடிக்கு 2  இந்தியர்). பெருந்தொற்று காலத்தில் இந்த எண்ணிக்கை கூடியிருக்க வாய்ப்பு உள்ளது ஆனால் சரியான தகவுகள் சேகரிப்பது கடினமானதாக உள்ளது. பட்டியல் சாதி பட்டியல் இன மக்கள் பெரும்பாலும் மருத்துவ சுகாதார கட்டமைப்புகளுக்கு வெளியே உள்ளதால் பெருந்தொற்று இச்சமூகங்களுக்கு பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்ற வருடம் இலத்தின் அமேரிக்கா நாடுகளின் பொலிவாரியன் கூட்டமைப்பு மற்றும் மக்களின் வர்த்தக ஒப்பந்தம் (ALBA- TCP) ஆகியவற்றின் பொதுச்செயலாளர் சாச்சா லோரண்டியின் வேண்டுகோளுக்கிணங்க, முக்கண்டம் (Tricontinental) சமூக ஆய்வு  நிறுவனம் மற்றும் காரகாசின்(வெனிசுலா) சைமன் போலிவார் நிறுவனம்  மற்றும் உலகளாவிய 26 ஆய்வு நிறுவனங்கள் உதவியுடன் சமகால நெருக்கடிகளைப் பற்றி சர்வதேச கலந்துரையாடலை துவங்கப்பட்டது. அதன் விளைவுதான் “புவியை காக்க ஒரு திட்டம்”.

இரண்டு வகையான உரைகள், ஒன்று,  உலக பொருளாதார  மன்றம் முதல் அனைவர்நலம் உள்ளடக்கிய முதலாளித்துவ சபை வரை உள்ள பிற்போக்கு தாராளவாத அறிவு ஜிவிகள், மற்றொன்று, தொழிற்சங்க கோரிக்கைகள், இடதுசாரி அரசியல் கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்கள் ஆகியவற்றின் உரைகளை கூர்மையாக ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் பின்னதில் இருந்து எடுத்த தகவல்கள் முன்னதின் குறைபாடுகளை புரிந்துகொள்ள உதவியது. உதாரணம், பழைமைவாத, தாராளவாத உரைகள் பெருந்தொற்று காலத்தில்  முதலாளித்துவத்தை தூக்கி நிறுத்த வளர்ந்த நாடுகளின் வங்கிகள் 16 டிரில்லியன் ( 16 லட்சம் கோடி) அமேரிக்க டாலர்களை பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலவிடாமல் நிதி துறை நிறுவனங்களையும் தொழில் நிறுவனங்களையும் காப்பாற்ற பயன்படுத்தியுள்ளதை கண்டுகொள்வதில்லை. இந்த நிதி மிகச்சிறப்பான பொது சுகாதாரத்துக்காகவோ அல்லது படிம எரிபொருளுக்கு மாற்றான மாசு அற்ற பசுமை ஆற்றல்களை உருவாக்கும் முதலீடுகளுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம். 

இந்த திட்டம் ‘ஜனநாயகமும் உலக அமைப்பும்’ என்பதில் துவங்கி “டிஜிட்டல் உலகம்” வரை 12 முக்கிய அம்சங்களை விவாதிக்கிறது. அதில் கல்வி பற்றிய பகுதியின் பரிந்துரைகள் பின்வருமாறு உள்ளது.

  1. பொதுப்பள்ளி மூலம் கல்வி தனியார்மயமாவதையும், கல்வி சரக்காக மாறுவதையும் தடுத்தல்.
  2. கல்வியாளர்களை கல்வி நிறுவனங்களின் நிர்வாக பொறுப்பில் அமர்ந்துதல்.
  3. அடித்தட்டு மக்களை பயிற்சி மூலம் ஆசிரியர்களாக உத்திரவாதப்படுத்துதல்.
  4. மின்சார இணைப்பு மற்றும் எண்மின் (digital) இடைவெளிகளை நிரப்புதல்.
  5. பொதுத்துறை மூலம் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் அதிவேக இணைய வசதிகளை உருவாக்குதல்.
  6. பள்ளிக்குழந்தைகளுக்கு கல்வியின் அனைத்து கூறுகள் மற்றும் கல்விக்கு அப்பாற்பட்ட செயல்முறைகள் ஆகியவற்றுக்கான வாய்ப்பு உருவாக்குதல்.
  7. மாணவர்கள் உயர்கல்விகளில் முடிவெடுக்கும் செயல்முறைகளில் பங்கேற்க வழிகள் உருவாக்குதல்.
  8. கல்வியை வாழ்நாள் முழுதும் பெறவேண்டிய வாய்ப்பை வாழ்க்கையின் அனைத்து நிலையில் உள்ள மனிதர்களும் பெற ஏற்பாடு செய்தல். அதன் மூலம் கல்வி என்பது வேலைவாய்ப்பு பெறுவதற்கு என்பது மாறி அது அறிவு மற்றும் சமூகத்தின் நீடித்த வளர்ச்சியை உருவாக்கும் சமூகக் கட்டுமானத்துக்கு உறுதுணையாவதாக இருக்கவேண்டும்.
  9. அனைத்து வயதுள்ள தொழிலாளர்களும் அவரவர் துறையில் உள்ள உயர்கல்வி மற்றும் தொழில் கல்விக்கு மானியம் அளித்தல்.
  10. உயர்கல்வி உள்ளிட்ட அனைத்து கல்வியும் அவரவர் பேசு மொழியில் பயில்வதற்கான வாய்ப்புகளை மொழிபெயர்ப்பு மூலம் பெறுவதற்கு அரசாங்கம் உத்திரவாதப்படுத்துதல்.
  11. தொழில், விவசாயம் மற்றும் சேவை துறைக்கு தேவைப்படும் கூட்டுறவு மேலாண்மை கல்வி நிலையங்களை நிறுவுதல்.

 “புவியைக் காக்கும் திட்டம்” என்பது  1945ல் ஐ.நா. சாசனம் ஏற்படுத்திய கோட்பாடு காரணமாக, இதுவரை 193 நாடுகள் கையெழுத்திட்ட, அனைத்து நாடுகளும் கட்டுப்படவேண்டிய நிபந்தனையும் கொண்டதன் அடிப்படையில் உருவானதாகும். இந்த திட்டம் உருவானதன் நோக்கம் இதை விவாதப்பொருளாக்கி விரிவாக்க வேண்டும் என்பதே. இந்த திட்டம் நிகழ்காலத்தை விமர்சிப்பது மட்டுமன்றி எதிர்கால சமூகத்தை நிகழ்காலத்தில் கட்டமைபதற்கான முயற்சியும் ஆகும்.

(தோழர் விஜய் பிரசாத் டிரைகாண்டினண்டல் தளத்தில் எழுதிய கட்டுரையை தழுவி எழுதப்பட்டது)

Multidisciplinary Poverty Index published by the Federal Government Finance Commission Article in tamil translated by Era Ramanan ஒன்றிய அரசின் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள பன்முக ஏழ்மைக் குறியீடு - தமிழில்: இரா. இரமணன்

ஒன்றிய அரசின் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள பன்முக ஏழ்மைக் குறியீடு – தமிழில்: இரா. இரமணன்




அண்மையில் ஒன்றிய அரசின் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள பன்முக ஏழ்மைக் குறியீட்டில் (NITI Aayog’s first Multidimensional Poverty Index (MPI) report) கேரளா, தமிழ்நாடு ,பஞ்சாப் போன்ற முற்போக்கான மாநிலங்கள் சிறப்பான இடத்தில் இருப்பதும் பிஜேபி ஆளும் மாநிலங்களான பீகார், உ.பி, ம.பி போன்ற மாநிலங்கள் பின்தங்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கதுதான். இடதுசாரிகள் ஆளும் கேரளா மாநிலம் முதல் இடத்தில் இருப்பது பாராட்டத்தக்கது. எனினும் இந்தக் குறியீடு தயாரிக்கபப்ட்ட விதத்தைப் பார்த்தால் உண்மையான நிலவரம் இன்னமும் மோசமாக இருக்கும் என்று தெரிகிறது. இது குறித்து டிரை கான்டினெண்டல்(Tricontinental) என்கிற சர்வதேச நிறுவனத்தை சேர்ந்த ஆய்வாளர் சுபன் டென்னிஸ் என்பவரின் கருத்துகள் நாம் கவனிக்கத்தக்கவை.

நிதிஆயோக் தனது அறிக்கைக்கு எடுத்துக்கொண்ட சில அடிப்படைக் குறியீடுகள்.
1.ஒரு குடும்பத்தில் கை பேசியும் சைக்கிளும் இருந்தால் அந்தக் குடும்பம் ஏழ்மையின் கீழ் வராது.
2.வீட்டைப் பொறுத்த வரையில் அதன் தரை, சுவர்கள், கூரை ஆகியவை களிமண், மணல், மண் அல்லது சாணத்தால் செய்யப்படவில்லை என்றால் அது நலிந்த பிரிவில் வராது. வீட்டின் பரப்பு எடுத்துக்கொள்ளப்படவே இல்லை. வசதியாகப் போச்சு; இல்லையா?
3.குடும்பத்தின் வருமானம் ஒரு குறியீடே இல்லையாம். வங்கிக் கணக்கோ அஞ்சல் அலுவலகக் கணக்கோ இருந்தால் போதுமாம். அந்தக் கணக்குகளில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பது பிரச்சினையே இல்லை. மிகவும் வசதியாகப் போச்சு.

இந்த அறிக்கையின்படி ஒரு குடும்பத்தை ஏழ்மைப் பிரிவில் சேர்த்துக் கொள்வதற்கு நலிவுறு குறியீடு(deprivation score) 0.33 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். இந்தக் கட்டுரையாளர்(சுபன் டென்னிஸ்) வசித்து வந்த டெல்லிப் பகுதியில் தொழிலாளர் குடியிருப்புகள் அவறது குடியிருப்புக்கு அண்மையிலேயே இருந்தன. அவர்கள் எந்த அளவு நெரிசலிலும் ஏழ்மையிலும் வாழ்ந்தார்கள் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரியும்.ஆனால் நிதி ஆயோக்கின் குறியீடுகள் அடிப்படையில் அவர்கள் 0.28 அல்லது 0.20 மதிப்பெண்களுக்குள்ளேயே வருவார்கள். அதாவது ஏழ்மைக் குறியீட்டிற்கு வெளியே இருப்பார்கள். எனவே இந்த அறிக்கையின்படி டெல்லி மக்களில் 4.79% பகுதியினரே பன்முக ஏழ்மைப் பிரிவினராக இருப்பதில் ஆச்சரியமில்லை. நமது நாட்டின் ஏழ்மையின் பரப்பை வெளிக்கொணர்வதில் நிதி ஆயோக்கின் அறிக்கை எவ்வளவு குறைபாடு உடையது என்பதற்கு டெல்லி ஒரு எடுத்துக்காட்டே.

ஜேஎன்யூ பேராசிரியர் சிராஸ்ரீ தாஸ் குப்தா கூறுவது போல ‘இந்தியாவில் ஏழ்மை சீரோ என்று காட்டும்வரை அதற்குத் தகுந்தாற்போல் குறியீடுகளை மறு வரையறை செய்து கொண்டே இருப்பார்கள்.’

சோபியா என்கிற டுவிட்டர் பதிவாளர் பதிவு நெத்தியடியாக உள்ளது. ‘2011இல் திட்டக் கமிஷன் நகர்ப்புற ஏழ்மைக்கு ரூ 32/ என வரையறையாகக் கொண்டது நினைவிருக்கிறதா? நிதி ஆயோக்கின் அறிக்கையும் அதே வகை பிதற்றலே. ஆனால் இந்த முறை அது பன்முகத் தன்மையாக இருக்கிறது.’