kavithai: kuralatravargalin kuralaai - u.krishnamoorthi கவிதை: குரலற்றவர்களின் குரலாய்...- உ.கிருஷ்ணமூர்த்தி

கவிதை: குரலற்றவர்களின் குரலாய்…- உ.கிருஷ்ணமூர்த்தி

வாய்ப்பேச இயலாதோரின் அன்றாடப் பாடுகளுக்காய்க் கத்துகிறேன். வாய்ப்பேச வாய்ப்பிருந்தும் வலுவான குரலற்றவர்களுக்காய்க் கத்துகிறேன். வாய்ப்பேச்சில் வம்பளக்கும் வீணர்களின் கூச்சல்களை முறியடிக்கக் கத்துகிறேன். வாய்ப்பேச்சில் தேனொழுகி வரலாறு திரிக்கும் வஞ்சகர்களுக்காய்க் கத்துகிறேன். மெல்லிசைக் கேட்டே பழகிய காதுகள் வாய்த்தவன் ஈயம் காய்ச்சி ஊற்றப்பட்ட…
“இன்னொரு தோள்” கவிதை – ஐ.தர்மசிங்

“இன்னொரு தோள்” கவிதை – ஐ.தர்மசிங்




தாயின் அரவணைப்பு தவறிய
தொட்டில் பருவம்

பள்ளிப் பருவத்தில் அறிமுகமான
இளைய பசி

வறுமையால் விட்டு விலகிய
இனிய கல்வி

மூளைச்சலவையால் இளமையைத் தின்னும்
தீவிரவாதம்

பெண்குழந்தை பெற்றவளிடம்
தொடரும் பதற்றம்

படுக்கையில் விழுந்தவனின்
வாழ்வின் மிச்சம்

குழந்தை இல்லாதவளைக் கிழிக்கும்
சொற்களின் கூர்மை

வீரனையும் எளிதாக வீழ்த்தும்
ராஜ போதை

இல்லறத்தில் சந்தோசத்தை
விழுங்கும் சந்தேகம்

பாலியல் தொழிலாளியை நேசமாய்
நெருங்கும் இரவு

சுயநலவாதிகளிடம் அகப்பட்ட
நேர்மையற்ற ஆன்மீகம்

அடிமைகளைப் பிரசவிக்கும் அதிகாரத்தின்
நவீன அவதாரம்

மிருகத்தை விட மனிதனை
மலிவாக்கும் மதபேதம்

தீட்டை திருவாக்கும் உள்ளங்களால்
சாகாத சாதீயம்

சமத்துவத்தை ஊனமாக்கும் அரசியலின்
பிரிவினை வாதம்

நிழலாய்த் தொடர்ந்து
மனங்களை முடமாக்கும் மூடநம்பிக்கை

மூடிய வாசலை இன்னும் திறக்கும்
திருவோட்டின் அதிசயம்

வன்புணர்வால் கடவுள் சந்நிதியில்
படிந்துவரும் கறை

ஒருதலைக் காதலாய்
ஒவ்வொரு தோளிலும்
யாருமற்றுப் பயணிக்கிறது

புதிய வடிவங்களில்
ஏதேனும் ஒரு பார சிலுவை

ஆன்மாக்களின் தேடலில்
பிரதானமாய்
இன்னொரு தோள்…

ஐ.தர்மசிங்
நாகர்கோவில்…

கோவை ஆனந்தனின் கவிதைகள்

கோவை ஆனந்தனின் கவிதைகள்




உன் தூரிகை நானாக
**************************
நீ தூரிகையை கையிலெடுக்கும் போதெல்லாம்-உன்
தூரிகை நானாகிறேன்…

போகுமிடமெல்லாம்  அரங்கேறும் அவலங்களைச்
சித்திரமாக்க…

புரையோடிய ஊழலையும்
கரைபுரளும் லஞ்சத்தையும்
வேரோடு களைந்தெறிய
கறுப்பு வர்ணங்களைத் தொட்டு
காணும் இடமெங்கும் வரைந்த சித்திரங்களால்….

வாய்மையெனும் வெளிச்சத்தைத்தேடி  இன்னும் அலைகிறேன்
ஊழலின் பிடியிலிருக்கும்  வறுமையெனும் பிணிபோக்க….

உன்னிரு விரல்களால்
விடைகொடு நீதிதேவதையே
உன் தூரிகை நானாக….

பூவாசம்
**********
பூக்களின்வாசம் வீசும் வழித்தடத்தில்
தனிமையில் பயணிக்குமொரு நாளில்
கைகள் நிறைய பூக்கள் பறித்து
வாசத்தை நாசிவழியே நுகர்ந்து
நுரையீரலிலுள்ள அசுத்தங்களத்தனையும்
வெளியேற்றிச் சுத்தமாக்கி
அக்கம்பக்கம் சுற்றிலும் பார்த்து
காவலாளியில்லாத வேளையில்
மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து
தன்னைத்தானே உலர்த்தி
துருப்பேறி  நகரும்போதெல்லாம்
கிரீச்சிடும் கம்பிவலைக் கதவுகளை  விலக்கி நுழைகிறேன்
முள்வேலிகளாலான பூந்தோட்டத்திற்குள்…

பூத்துக் குலுங்கும்  சோலைவனத்துக்குள்
எனக்குமுன்னே முன்கதவுகளை திறக்காமல்
இரகசியமாய் நுழைந்து களவாடும் கூட்டமொன்றை
விழிகள் விரித்துக்கண்டேன்
கண்காணாத காட்சிகளாய்…

கண்ணுக்கெட்டிய தூரம்வரை
பசுஞ்செடிகளின் பூக்களில் அமர்ந்தெழும் தேனீக்கள்
துளி துளிகளாய்ச்  சேகரித்த பூந்தேனைச் சுமந்து
போர்விமானங்களைப்போல
சிறகுகளிலிருந்து வெளிப்படும் ரீங்காரஓசையுடன்
பறக்கின்றன திசையெங்கும்….

கொத்துக்கொலைகளாய்க் கைகளில் சேகரித்து  வெளியேறி நுகர்கிறேன்
கையிலிருந்த பூக்களின் வாசத்தை…

பூக்களின்இதழ்களுக்குள் ஒளிந்திருந்த தேனீயொன்று
சிறகுகள் விரித்து பறந்தது வேறொரு சோலைவனத்தைத் தேடி…

–கோவை ஆனந்தன்
கிணத்துக்கடவு
மொழிபெயர்ப்புக் கவிதை – நா.வே.அருள்

மொழிபெயர்ப்புக் கவிதை – நா.வே.அருள்




The Oppressionists
**********************
Art
what do the art
suppressors
care about art
they jump on bandwagons
wallow in press clips
& stink up the planet
with their
pornographic oppression
Art
what do they care about art
they go from being
contemporary baby kissers to
old time corrupt politicians
to self-appointed censorship clerks
who won’t support art
but will support war
poverty
lung cancer
racism
colonialism
and toxic sludge
that’s their morality
that’s their religious conviction
that’s their protection of the public
& contribution to family entertainment
what do they care about art
–Jayne Cortez

கலை

கலையை ஒடுக்குபவர்கள்
கலையைப் பற்றி ஏன்
கவலைப் படப் போகிறார்கள்?

அவர்கள் அணிவகுப்பில் குதிக்கின்றனர்
பத்திரிகைச் செய்திகளில் உருள்கிறார்கள்
அவர்களின் ஆபாசமான ஒடுக்குமுறைமூலம்
பூமியையே
துர்நாற்றம் வீச வைக்கிறார்கள்.
கலையை ஒடுக்குபவர்கள்
கலையைப் பற்றி ஏன்
கவலைப் படப் போகிறார்கள்?

குழந்தைக்கு முத்தங்களிடும்
தற்காலத்தவர்களிலிருந்து
பழங்கால ஊழல் அரசியல்வாதிகள்
சுயமாக நியமித்துக் கொண்ட தணிக்கை எழுத்தர்கள் வரையிலும்
அவர்கள் இருக்கிறார்கள்
கலையை ஆதரிக்காதவர்கள்
ஆனால் போர்
வறுமை
நுரையீரல் புற்றுநோய்
இனவெறி
காலனித்துவம்
நச்சு கசடு
ஆகியவற்றை ஆதரிப்பவர்கள்.

அது அவர்களின் ஒழுக்கம்
அது அவர்களின் மத நம்பிக்கை
அது அவர்களின் பொதுஜனப் பாதுகாப்பு
மற்றும் குடும்பப் பொழுதுபோக்கிற்கான
அவர்களின் பங்களிப்பு
கலை மீது அவர்களுக்கு என்ன அக்கறை இருக்கிறது?

–ஜேனி கோர்ட்டஸ்
தமிழில் நா.வே.அருள்

வறுமை கவிதை – வெ.நரேஷ்

வறுமை கவிதை – வெ.நரேஷ்




வா என் அருமை வறுமையோ வா
என்னைத் தீண்டிச் செல்ல வா

உன்ன உணவும்
உடுத்த உடையும் இல்லை வா
இருக்க இடமும் இல்லை
உன் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள வா

கல்வியும் இல்லை
கனவுகளும் இல்லை
என்னை மீண்டும் மீண்டும்
தீண்டிச் செல்ல வா

என் வருமையைப் பற்றி
வாய்விட்டுப் பேச வயசும் இல்லை
வளர்ந்தபின் கேட்டால் அதிகார தொல்லை வா

சாலை ஓரம் உறங்குகிறேன் விடிவதற்குள் வா
விழித்துக்கொண்டால் சந்திப்போம்…

-வெ.நேரேஷ்

சிவந்த பழம்…..!!!!! கவிதை – கவிஞர்: ச.சக்தி

சிவந்த பழம்…..!!!!! கவிதை – கவிஞர்: ச.சக்தி




பேருந்து நிலைய
நுழைவு வாயிலில்
கொய்யாக்கா
கொய்யாயென
கூவி பழம் விற்கும்
அம்மாவின் மனம்
காயென வெம்பி அழுகிப்போயிருக்கிறது
பாரம் தாங்காத
கிளையாகிய
தன் குடும்பத்தின் வறுமை.

கூடையை
இடுப்பில்
சுமந்து கொண்டு
பேருந்து பேருந்தாக
ஏறி இறங்கி
விற்ற பணத்தில்
தன் மகனுக்காக
வாங்கிய
சைக்கிளில்
தினந்தோறும்
மிதிபடுகிறது
அம்மாவின் உழைப்பு,

இரண்டு
ரூபாய்க்கு
ஒரு கொய்யாப்பழமென்று
கூவி விற்கும்
அம்மாவின் கண்களுக்குள்
கணக்கு நோட்டு
நான்கு ரூபாயென
தன் மகன் கூறிய
சொற்கள்
சாலையெங்கும்
சிதறிக்கிடக்கிறது
அழுகிப்போன மகனின் ஆசைகள்,

வியாபாரத்திற்கு
போன அம்மா,
வீடு வந்து
சேரும் முன்னே
சேதியொன்று
வந்து சேர்ந்தது
அடையாளம் தெரியாத
வாகனமொன்றில்
அடிப்பட்டு
இறந்துவிட்டாளென்று
வீடெங்கும்
வெளிச்சம் மிதக்க
வறுமை இருட்டு
கழுத்தை நெரிக்கிறது ,

கனவில்
வந்த அவ்வைக்கு
கொய்யாகாயை பரிசளிக்கும் அம்மாவின்
குரல் வளையை
நெரிக்கிறது
வயிற்றில்
ஆடும் பசிக் கொடி

ஒரு கொய்யா பழத்தை
நான்கு கீறுகளாய்ப்
பிளந்து ஒவ்வொரு
பிள்ளைக்குமாக பகிர்ந்தளிக்கும்
அம்மாவின் அடிவயிற்றில்
ஆணி அடித்தது போல் விளைந்திருக்கின்றன

பசியெடுக்காத
அட்சய கொடி
குடல் பின்னல்கள் ,

கவிஞர் : ச.சக்தி
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,

கோவை ஆனந்தனின் கவிதைகள்

கோவை ஆனந்தனின் கவிதைகள்




தூரிகை
***********
நீ தூரிகையைக் கையிலெடுக்கும் போதெல்லாம்
உன்
தூரிகை நானாகிறேன்…
போகுமிடமெல்லாம் அரங்கேறும் அவலங்களைச்
சித்திரமாக்க…

புரையோடிய ஊழலையும்
கரைபுரளும் லஞ்சத்தையும்
வேரோடு களைந்தெறிய
கறுப்பு வர்ணங்களைத் தொட்டு
காணும் இடமெங்கும் வரைந்த சித்திரங்களால்….

வாய்மையெனும் வெளிச்சத்தைத்தேடி இன்னும் அலைகிறேன்
ஊழலின் பிடியிலிருக்கும் வறுமையெனும் பிணிபோக்க….

உன்னிரு விரல்களால்
விடைகொடு நீதிதேவதையே
உன் தூரிகை நானாக….

நிலைக்கண்ணாடி
**********************
நீ நின்று ரசித்த
உன்னழகை
உன்அறை நிலைக்கண்ணாடியும்
அதைவிட்டு நீ நகர்ந்தபின்
சிலநிமிடங்கள்
கதவுகளோடு கண்ணை
மூடி ரசிக்கிறது…

அவசரமாய்க் கேசத்தை சரிசெய்து
முகப்பசைகளைப்பூசி ஒப்பனைகள் செய்து
கடந்துசெல்லும் யாரும்
உன்னிப்பாய்க் கவனிக்கவில்லை
இதுவும் உன்நினைவில் இருப்பதை…

பாதரசங்கள் பூசிய கண்ணாடியின் மீது
இதுவரை ஒட்டவேயில்லை-
உன் அட்டைப்பொட்டுகளையும் விரல் தாரைகளையும் தவிர
உன்னைப்போன்றொரு உருவம்…

எதிரில் நின்றவரின் உருவத்தை மிகைப்படுத்தாமலும்
மீதம் வைக்காமலும் காட்சிபடுத்திய கண்ணாடி
ஏமாற்றத்துடன்
நீ

விட்டுச்சென்ற உன்னழகின்
சாயலில்
இன்னொரு பிம்பத்தை பதிவுசெய்ய
இன்னும் உறங்காமல் விழித்தே கிடக்கிறது…

சந்தனவிறகுகள்
********************
மலையின் கொடையில் செழித்த சந்தனமே
மரங்களில் தனக்கென

தனிமதிப்பை தக்கவைத்ததால்
மனிதனும் இதைப்பார்த்து கொண்டானொரு வியப்பு

வாசனையால் கொள்ளையடித்த சந்தன விருட்சங்களை
கோடாரிகளால் சிதைக்கும்போதெல்லாம் குதூகலிக்கிறது மனிதமனம்

பசிபோக்கும் அடுப்புகள் எதற்கும் எளிதில்கிடைக்காத
சந்தனவிறகுகள் உரசும்போதெல்லாம் வாசம் மாறாததால்
அதிசயப்பிறவியோவென!
அறிந்தவர் எவரும் வெறுப்பதில்லை

பசிக்காக சேகரித்த விறகுகள் வீதியில்போனதால்
வனத்தினை அழிப்பதாய் தண்டனை வனவாசிகளுக்கு

காடுகளில் களவாடப்படும் தந்தங்களையும் பின்னுக்குதள்ளி
வனத்துறையுமறியாத பாதைகளில் பயணமான ஊர்திகளில்
இரகசியமாய் பச்சிலைகள் போர்த்தி முன்னுக்குப்போகிறது

அரசுஇலாகாக்களின் தேடுதல் வேட்டையிலிருந்து தப்பித்த
விறகுகள் அத்தனையும் மொத்தச்சந்தையில் விற்பனைக்கு

அக்னிக் குண்டத்தில் எரிந்த நெருப்பில்
கடவுளுக்கும் கோடிபிரியமோ சந்தனவாசம் கோவில்கருவறைக்குள்ளும்

ஆட்சி அதிகாரங்களில் மிதந்த தேகங்கள்கூட
சுவாசங்கள் நின்றபின் மயானத்திலும் நிரூபிக்கறது
கட்டுக்கட்டாய் அடுக்கிய விறகுச்சுமைகளில் தன்பலத்தை

விடைபெற்ற ஆளுமைகளின்
பெருமையும் புகழும்
ஆடம்பரமாய் எரியும் சந்தனவிறகுகளின் வாசத்தில்
அதிகாரத்திமிர்களும் ஆணவங்களும் எரிந்து சாம்பலாகின்றன

கைப்பிடிச்சாம்பலும் கடைசியில் கரைகிறது ஊரோரநதிக்கரையில்

கோவைஆனந்தன்
குமாரபாளையம்,
கிணத்துக்கடவு, கோவை 642109

கவிஞர் சே.கார்கவியின் கவிதைகள்

கவிஞர் சே.கார்கவியின் கவிதைகள்




நீருக்கு முளைத்த பாதங்கள்
*********************************
ஒரு சூழல் ஒருவனை முட்டாளாக மாற்றும்
அறிவாளியாக நடிக்கச் செய்யும்..
மரம் வெட்டத் துணிபவனுக்கு
அமர்ந்து வெட்ட இடம் தேடுவது முக்கியமாகிறது
கணுவோடும் தூரோடும் விளையாடும் அளவிற்கு
வயது மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது…!

ஒரு கல் எறிந்த ஆற்றில்
நீர் செல்லும் வழி எல்லாம் கல்லின் நகர்வு இருக்கத்தான் செய்கிறது
நீர் மேல் பரவளையங்களின் தடயம் முடியும் வரை…!

நிலாவை சுமந்தபடி நகரும் நீருக்கு
அவ்வப்போது இடை கிள்ளி சலசலப்பைத் தருகிறது காற்று…!

காற்றுக்காகப் பல கயிறு திரிக்கப்பட்டுப்
புல்லாங்குழல் துளைக்குள் நுழைத்து

சிறை வைக்கின்றன இராகங்கள்…!

யாருக்குத் தெரியும்
அந்த நதியும்
சிறு கல்லும்
சில் காற்றும்
மரம் உடைந்து கீழ் விழுந்த முட்டாளும்
வழி தவறி புவி விழுந்த வான் வழிப்போக்கர்கள் என்று…..!

கொஞ்ச நேரம் இரு
***********************
கொஞ்ச நேரம் இரு
மெல்ல வருட மழை வரும்
கொஞ்ச நேரம் இரு
இன்றும் நாளையும் நல்லது நடக்கும்
கொஞ்ச நேரம் இரு
உண்மையில் வந்துவிடுகிறேன்
கொஞ்ச நேரம் இரு
தூரிகையேந்தி தும்பி வரும்…..

கொஞ்ச நேரம் இரு
அறுவடைக்கு மழை நின்றுவிடும்
கொஞ்ச நேரம் இரு
வறுமையில் பசி தானாக மறந்துவிடும்
கொஞ்ச நேரம் இரு
பசியை மறைக்க நட்சத்திரம் தோன்றும்
கொஞ்ச நேரம் இரு
அம்மா அப்பா வானில் வருவார்

கொஞ்ச நேரம் இரு
கூரை கிழித்து சூரியன் வருவான்
கொஞ்ச நேரம் இரு
குளிர்ச்சி பொங்க நிலா வருவாள்
கொஞ்ச நேரம் இரு
கிரகரணம் மறைந்து போகட்டும்
கொஞ்ச நேரம் இரு
புவிஈர்ப்பு பரவலாகட்டும்

கொஞ்ச நேரம் இரு
ஆதாமும் ஏவாளும் உறங்கச் செல்லட்டும்
கொஞ்ச நேரம் இரு
மலைப்பாம்பு பயமுறுத்தாமல் செல்லட்டும்
கொஞ்ச நேரம் இரு
ஆப்பிள் கண்ணுக்கு புலப்படாமல் இருக்கட்டும்
கொஞ்ச நேரம் இரு
ஏதேன் திட்டம் உறங்கிப் போகட்டும்……!

கொஞ்ச நேரம் இரு
நீண்ட நாட்களாகக் காத்திருக்கும் பக்தனுக்கும் புரியட்டும்

கொஞ்ச நேரம் இரு
பசிக்காக அழும் குழந்தைக்கும் இயற்கை
சமாதானம் சொல்லட்டும்
கொஞ்ச நேரம் இரு
மழலையின் அருகே நாய்க்குட்டி துள்ளட்டும்
கொஞ்ச நேரம் இரு
மழலையிலே மனிதம் பிறக்கட்டும்

கொஞ்ச நேரம் இரு
பார்வையில் பட்ட
அனைத்தும்
கவிதையாய் உருவெடுக்கட்டும்……

கவிஞர் சே கார்கவி

மாற்றம் கவிதை- சக்தி ராணி

மாற்றம் கவிதை- சக்தி ராணி




மறைவாய் நின்றே…
எட்டிப்பார்க்கும் குழந்தையின்
ஏக்கம்…புரிவதில்லை…
கற்பனையும்…எதிர்பார்ப்பும்
கலந்த வாழ்வில்… ஏமாற்றம்
சந்திக்கும் தினசரி வாடிக்கையாளர்…
நான் என்றே…

கடைவீதியில்…வானுயர்ந்த கட்டிடம்…
குளிரூட்டப்பட்ட…அறைகளூடே
நகரும் படிக்கட்டுடைய…நிலையில்

நம் வாழ்க்கை இங்கே..
நகரப்போவதில்லை என்றே…பார்வையில்
பதில்கள் சொன்னாலும்..

பசிக்கும் பசிக்கு…விடை தெரியாமலும்
வியாபாரம் இல்லா வாழ்வில்…தன்
வாழ்க்கையை வியாபாரமாக்கி…அமர்ந்திருந்தே

விற்பனையாகும்… ஒன்றிரண்டு
ஆடைகளில்…ஒட்டாமல் எட்டிப் பார்க்கிறது
என்…வறுமை…

சாலையோரம் கடந்து செல்பவர்களும்…
சாலையிலே வாழ்வை நகர்த்துபவர்களையும்…அன்றாடம்
பார்க்கிறேன்…இயலா வாழ்வில்…
இயன்றதை செய்தே…
வாழ்வு நடத்தும் அருமையை…

நீளா பாதையில்…நீண்ட எண்ணங்களோடு
பயணிக்கிறேன்…மேற்பார்வை பார்க்கும்
கண்கள்… கொஞ்சம் கீழ் வசிக்கும்
எங்களையும் பார்த்து செல்லுங்கள்…

எங்கள் ஏக்கங்கள்…தீராத தீயாய்…
தொடர்ந்தாலும்… தீர்க்கும் மருந்தாய்…
இளைப்பாற வையுங்கள்…இன்றியே
ஏக்கம் குறைக்க ஏற்றி வையுங்கள்…
வளமை வாழ்வை கண்ணாரக்காண…

– சக்தி ராணி