யார் அதிகம் பாவம் செய்தவர்கள்? சிறுகதை – மரு உடலியங்கியல் பாலா

யார் அதிகம் பாவம் செய்தவர்கள்? சிறுகதை – மரு உடலியங்கியல் பாலா




“அம்மா! நான் உனக்கு செஞ்ச பாவத்த எல்லாம் மன்னிச்சிடுமா! என்ன காப்பாத்துமா!” என மூளை கட்டியால் பீடிக்கப்பட்டு , தான் பிழைத்து எழுவோமா? எனும் பெரும் வினாவுடன் போராடும் “ஈஸ்வர்” தன் தாயிடம் பாவ மன்னிப்பு கோரிய வண்ணம், தினமும் தன் மனைவியுடன் பெற்ற தாயாம் “சின்னம்மா பாட்டியை” 108முறை வலம் வந்து வேண்டி வணங்கி நிற்கிறான்.

மருமகள் மோகுவும் கண்ணீர் சிந்தியபடி”என்ன மன்னிச்சி மடிப்பிச்சை போடுங்க அத்த!” என வேண்ட…

அந்த தாயோ அழுது அரற்றி “உங்களுக்கு ஒண்ணும் ஆகாது! கண்ணுங்களா! நான் கோவத்துல குடுத்த சாபம் எதுவும் சத்தியமா பலிக்கவே பலிக்காது! கோழி மிதிச்சி குஞ்சி சாகாதுடா ராசா! தீவுனூர் புள்ளியாரப்பா! மொளச்சூர் ஐநாரப்பா! ஈசுபரா! ஈசுபரி!
என் குழந்தை உயிரை காப்பாத்து! இந்த முண்டச்சி உயிரை எடுத்துக்கிட்டு என் புள்ளைய நல்லாக்கிடு! நைனா நீ நூறு வருசம், ராசா மாரி வாழ்வடா! நீ இல்லன்னா எனுக்கு யாருடா கொள்ளி போடுவாங்க!” என தான் கோபத்தில் விட்ட மொத்த சாபனைகளையும் அழுதவாறே திரும்பப் பெறுகிறாள் அந்த தாய்!

ஏன் அந்த குடும்பத்தில் இத்தனை சோகம்,… இந்த சிறுகதையில் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்!

சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில், அருங்குணம் எனும் குக்கிராமத்தில், ஐந்து அண்ணன்மார்களுடன் கடைக்குட்டியாய்ப் பிறந்தாள்
“சின்னம்மா பாட்டி”. அக்கால வழக்கப்படி பூப்பெய்துவதற்கு முன்னரே, தன் ஒன்பதாவது வயதிலேயே, திண்டிவனம் தாண்டி
“நைனார்பாளயம்” எனும் பட்டிகாட்டு கிராமத்தை சேர்ந்த “துரை” என்பவருக்கு பால்யவிவாகம் செய்துவைக்கப்பட்டார். துரைக்கும் சின்னம்மாவுக்கும், 12வயது வித்தியாசம்!

அக்காலகட்டத்தில் கடும்பஞ்சம் நிலவியதால், அவர்கள் பஞ்சம் பிழைக்க “மதரஸா” பட்டணம் வந்து, கடும் ஏழ்மையில் துன்பப்பட்டு, ஒருவாறு, தெருத்தெருவாக கிருஷ்ணாயில் (மண்ணெண்ணெய்) விற்கும் கடினமான தொழிலை மேற்கொண்டு, பீட்டர்ஸ் தெருவில் ஒண்டுக் குடித்தனம் அமைத்தனர்., மணமாகி 18 ஆண்டுகள் கழித்து, தவமாய் தவமிருந்து, “மயிலை கபாலீஸ்வரர்” அருளால், ஆண்மகவு பெற்று “ஈஸ்வரன்” என பெயரிட்டு, அந்த வறுமையிலும், செம்மையாய் செல்லமாய் வளர்த்துவர, 10ஆண்டுகள் கழித்து ஒரு பெண்ணும் அவளுக்குப் பிறக்கிறது!

கணவனுக்குத் துணையாக,வீட்டுச் செலவை ஈடுகட்ட வேர்க்கடலை உரிப்பது, மந்தார இலை தைப்பது …போன்ற சிறு சிறு தொழில்கள் செய்து மூன்று வேளையும் பட்டினியின்றி குடும்பம் ஓட உதவினாள் சின்னம்மா!

அந்த கஷ்ட ஜீவனத்திலும், பிள்ளையை, பணம் கட்டி புகழ்பெற்ற பள்ளியில் சேர்த்து, ஃபோர்த் ஃபார்ம் (9வது வகுப்பு) வரை படிக்க வைத்தனர். அக்காலத்தில் அது இன்றைய பி. ஏ படிப்புக்கு சமம்! மகனுக்கு 18வயது, நெருங்கியதும், திருமணம் செய்ய முடிவு செய்து பெண் தேடுகின்றனர். நீண்ட அலசலுக்கு பிறகு “யானைகவுனி”எனும் ஊரை சேர்ந்த, “சொக்கன்” என்பவர் மகள் “மோகு” என்பவளை, தங்கள் பூர்வீக சொத்தான சொற்ப நிலபுலன்களை விற்று திருமணம் முடிக்கின்றனர்.

அப்போதுதான் சிக்கல் துவங்குகிறது. மோகுவின் அப்பா இரண்டு வீடுகளுக்கு சொந்தக்காரர், ஆனாலும் சொத்தின் மீது ஏகப்பட்ட
கடன் சுமையால் பாதிக்கப்பட்டு, நொடிந்து போன, வாழ்ந்து கெட்டவர் ! அவரால், அப்போது மகளுக்கு சரியான சீர் செனத்தி செய்ய முடியாத நிலை! அதனால்தான் என்னமோ, அவர் “அன்னாடம் காய்ச்சி” மாப்பிள்ளைக்கு பெண் கொடுத்தார் போலும்!

மணமகன் சிகப்பாக அழகாக இருந்ததால் மோகு அவரை விரும்பி மணம் செய்து கொள்ள, வழக்கம் போல் மாமியார் மருமகள் பிரச்சினை ஆரம்பித்தது . மோகு வசதியான வீட்டு பெண் என்பதால் அந்த புதிய குடும்பச் சூழ்நிலைக்கு மாற இயலாமல் துன்பித்து, “ராங்கிக்காரி” எனும் அவப்பெயருக்கு ஆளானாள்! மாமியாருக்கும் மருமகளுக்கும், நாளொரு சண்டை ,பொழுதொரு யுத்தம் என வீடு நிம்மதி இழக்கிறது. மாமியாரின் சொந்தங்கள் அவளை, மலடி பட்டம் வேறு சூட்டி, இழிவு படுத்தி ஆபாச வசவுகள் பேசி, சித்ரவதை செய்கின்றனர்

துயரம் தாங்காது மோகு தூக்கு மாட்டி தற்கொலை செய்ய முயன்று, உயிர் பிழைக்கிறாள்! ஈஸ்வர் தன் பங்குக்கு வாழ்க்கையே
வெறுத்துப்போய் பாழும் கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்று, சிலபல காயங்களுடன் காப்பாற்றப்படுகிறார்!
அந்த இளசுகளின் மணவாழ்க்கை, சின்னம்மாவின் சில்மிஷத்தாலும் சில்லாவலிதனத்தாலும், தகாத வார்த்தை பிரயோகத்தாலும் சின்னாபின்னமாகிறது. இந்த கவலை தாங்காது, உத்தமர்களான மோகுவின் தந்தையும், ஈஸ்வரின் தந்தையும், அடுத்தடுத்து இறைவன் அடி சேர்கின்றனர்!

அதிர்ஷ்ட வசத்தால் ஈஸ்வருக்கு, அரசு ரேஷன் கடையில் வேலையும் கிடைத்து, அவர்கள் வழங்கிய குவாட்டர்சும் கிடைக்கிறது!,
தன் மனைவியின் “அதிர்ஷ்டமே” இதற்கு மூலக்காரணம் என முழுமையாக நம்பிய ஈஸ்வர், தாயைத் தவிக்க விட்டு தனிக்குடித்தனம் செல்கின்றான்!

இப்போது மருமகள் கை ஓங்கியதால், மாமியாரை கொடுமை செய்ய துவங்குகிறாள் மோகு! சின்னம்மாவுக்கு நல்ல உடல் ஆரோக்கியம் இருந்ததால், அவள் உறவினர் வீட்டில் தங்கி “சுண்டல்” விற்று ,வீட்டுவேலை செய்து பிழைப்பை ஓட்டுகிறார்!

ஈஸ்வருக்கு நல்ல சம்பளம் மற்றும் அரசு வசதிகள் கிடைத்ததால், அவர் ஒரு வீட்டை விலைக்கு வாங்குகிறார்!, மனைவிக்கு சீதனமாக மற்றொரு வீடும் கிடைக்கிறது! வசதியாக அவர்கள் வாழ துவங்குகின்றனர்!

மாமியாரை, மருமகள் பழிவாங்க துவங்குகிறார். மகனின், ஆதரவு பாசம் பற்று , என அனைத்தும் இழந்து பரிதவிக்கிறாள் சின்னம்மா! ஊரார் பஞ்சாயத்து பேசியதால், மாதா மாதம் ஒரு சொற்ப தொகையை மகன் தாய்க்கு வழங்குகிறான்! காலம் ஓடுகிறது! ஈஸ்வர் தன் மூத்த மகனுக்கு “ஜாம் ஜாம்” என, ஊரே வியக்கும் வண்ணம் திருமணம் செய்கிறார். ஆனால் தாயோ உதாசீன படுத்தப்பட்டு, உரிய மரியாதை இன்றி அவமானப் படுத்தப்படுகிறாள்!

ஈஸ்வர் ,50வயது நிரம்புகையில், தாயின் சாபமோ என்னவோ தெரியவில்லை, மூளையில் கட்டி வந்து, துன்பப்பட ஆன்றோர்கள் யோசனைப்படி தன் தாயை வலம் வந்து மன்னிப்பு கேட்டு மன்றாடுகிறார்! ஆனாலும், கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்! ஆண்டவர் பாவக்கணக்கில் இருந்து எவராலும் தப்ப முடியாது, என நிரூபணம் ஆகும் வகையில், நோயால் தீரா துயருற்று, ஒரிரு மாதங்களில் “இறப்பு” எனும் விடுதலை பெறுகிறார்! அடுத்த ஆண்டே கணவன் பிரிவு தாங்காமல் மோகுவும் கணவனிடம் போய் சேர்ந்துவிடுகிறாள்..

இறுதியில் சின்னம்மா பாட்டி பேரன்களிடம் தஞ்சம் அடைந்து, அவர்களுக்கு குற்றேவல் செய்து, சிலபல ஆண்டுகள் கழித்து மாண்டு போகிறாள்! பிள்ளையை பாடுபட்டு வளர்த்து, காப்பாற்றி காடு கழனி விற்று படிக்க வைத்து திருமணம் செய்து வைத்த போதிலும்,
தன் மருமகளை, மாமியார் என்ற ஸ்தானத்தில் இருந்துகொண்டு ஏனோ தன் தீய குணத்தால் அதீத கொடுமை செய்த சின்னமா பாட்டி,..!

என்னதான் கொடுமை செய்து இருந்தாலும்,.. தன் கணவரை பெற்ற முதியவள் அவள், என்பதை நினைத்து பார்த்து, அவள் செய்த கொடுமைகளை மறந்து மன்னித்து அரவணைத்து செல்லாமல் , பழிக்கு பழி வாங்கிய மருமகள்!

தன்னை பெற்று வளர்த்து ஆளாக்கி, திருமணம் செய்வித்த தாயின்,நன்றி மறந்து, “மனைவி சொல்லே மந்திரம்”என தாயை விலக்கி வைத்து, அவமதித்து, துன்பப்படுத்தி, அவள் சாபனைக்கு ஆளான மகன்.

இந்த மூவரில் யார் அதிகம் பாவம் செய்தவர்கள்?
என்ற முடிவான தீர்ப்பை இதை படித்து முடிக்கும் வாசகர்களாகிய உங்கள் வசமே சமர்ப்பிக்கிறேன்!

-மரு உடலியங்கியல் பாலா

பட்டினி கிடக்கும் மக்கள் இருக்கிறார்கள் கட்டுரை – தமிழில் கி.ரமேஷ்

பட்டினி கிடக்கும் மக்கள் இருக்கிறார்கள் கட்டுரை – தமிழில் கி.ரமேஷ்




பட்டினி கிடக்கும் மக்கள் இருக்கிறார்கள். பட்டினி கிடக்கும் மக்கள் இருக்கிறார்கள் – 26ஆவது செய்திக் கடிதம் (2022)
விஜய் பிரசாத்


C:\Users\Administrator\Downloads\unnamed.jpg

சலௌவா ரௌடா சௌகேர் (லெபனான்), கோரஸ், 1948

அன்பு நண்பர்களே,

ட்ரைகாண்டினண்டல்: சமூக ஆய்வுக்கான நிறுவனத்திலிருந்து வாழ்த்துகள்.

ஐ.நா.சர்வதேசக் குழந்தைகள் அவசர நிதி (UNICEF)யானது, உலகளாவிய உணவு நெருக்கடியால் கிழித்தெறியப்பட்டுள்ள பதினைந்து நாடுகளில் ஒவ்வொரு நிமிடமும் ஒரு குழந்தை பட்டினியில் தள்ளப்படுவதாகக் கூறுகிறது.  இந்தப் பதினைந்து நாடுகளில் பன்னிரண்டு நாடுகள் ஆப்பிரிக்காவில் (பர்கினோ ஃபாசோவிலிருந்து சூடான் வரை) உள்ளன, ஒன்று கரீபியனில் (ஹைதி) உள்ளது, இரண்டு ஆசியாவில் (ஆஃப்கானிஸ்தானும், ஏமனும்) உள்ளன.  முடிவே இல்லாத போர்கள் இந்த நாடுகளிலுள்ள அரசு நிறுவனங்களை உயர்ந்து வரும் கடன், வேலையின்மை நெருக்கடிகள், பணவீக்கம், வறுமை ஆகிய நெருக்கடிகளை சமாளிக்க முடியாத நிலைக்குத் தள்ளியுள்ளன.  அதில் தற்போது ஆப்பிரிக்காவின் சஹேல் பகுதியைச் சேர்ந்த இரண்டு நாடுகள் (குறிப்பாக மாலியும், நைகரும்) சேர்கின்றன. அங்கு பட்டினியின் நிலைமை ஏறத்தாழ கட்டுப்பாட்டை மீறிச் சென்று விட்டது. இந்த நிலைமை போதாதென்றோ என்னவோ, கடந்த வாரம் ஆஃப்கானிஸ்தானை ஒரு பூகம்பம் தாக்கி, ஆயிரம் மக்களுக்கு மேல் கொன்று விட்டது.  இது ஏற்கனவே 93% மக்கள் பட்டினியில் வீழ்ந்து விட்ட நிலையில் இன்னொரு அடி.

நெருக்கடியால் தாக்கப்பட்டுள்ள இந்த நாடுகளில் அரசுகள் மற்றும் ஐ.நா. உலக உணவுத் திட்டத்திலிருந்து உணவு உதவி வரும். இந்த நாடுகளில் இருக்கும் லட்சக்கணக்கான மக்கள் ஐ.நா. அமைப்புகளிலிருந்து வரும் உதவியை நம்பியே இருக்கிறார்கள். உலக உணவுத் திட்டமானது உடனடியாகப் பயன்படுத்தக்கூடிய உணவை வழங்கும். அது எண்ணை, நிலக்கடலை, பால் பவுடர், சர்க்கரை, தாவர எண்ணை, வைட்டமின்கள் அடங்கியது. அடுத்த ஆறு மாதங்களில் இவற்றின் விலைவாசி 16% உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவேதான் ஜூன் 20 அன்று, தனது ரேஷனை 50% குறைக்கப் போவதாக அறிவித்தது. இந்த ரேஷன் குறைப்பானது, கிழக்கு ஆப்பிரிக்காவில் ஒவ்வொரு நான்கு அகதிகளில் மூவரை பாதிக்கும். அங்கு சுமார் 50 லட்சம் அகதிகள் வசிக்கிறார்கள். ”குழந்தைகளை வீணடிக்கும் தீவிர நிலைமைகள் தீப்பற்றும் நிலைமை இருப்பதை இப்போது நாங்கள் காண்கிறோம்” என்கிறார் யூனிசெஃப்பின் செயல் இயக்குனர் கேதரின் ரசல்.

C:\Users\Administrator\Downloads\unnamed (1).jpg

ஊசோ இகோனு (நைஜீரியா), நாடற்ற மக்கள், ஒரு கூட்டம், 1982

உணவுப் பொருள் விலையேற்றம் பட்டினி கிடப்போரின் அதிகரிப்புடன் தொடர்புடையது என்பது தெளிவு. இது உக்ரைன் மோதலால் மேலும் அதிகரித்துள்ளது. பார்லி, சோளம், பலாப்பழம், சூரியகாந்தி விதை, சூரியகாந்தி எண்ணை, கோதுமை, உரம் ஆகியவற்றை மிக அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடுகள் ரஷ்யாவும், உக்ரைனும் ஆகும். உலக அளவில் உணவுப் பொருள் விலையில் போர் பேரழிவை உண்டாக்கியுள்ளது என்றாலும், அதுதான் விலையேற்றத்துக்குக் காரணம் என்று பார்ப்பது தவறானது. உலக உணவுப் பொருள் விலையேற்றமானது இருபது ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. 2021 இல் அது கீழ்க்கண்டவை உட்படப் பல காரணங்களால் கைமீறிச் சென்றது:

1) பெருந்தொற்றுக் காலத்தில், நாடுகளுக்குள்ளும், அவற்றின் எல்லைகளிலும் இருந்த கடுமையான ஊரடங்குகள் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நகர்வுக்குக் கடுமையான தடைகளை ஏற்படுத்தின. இப்போது அகதிகள், அடைக்கலம் கேட்டு வருவோர் உள்ளிட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் விவசாய உற்பத்தியில் முக்கியமான பங்கை வகிக்கிறார்கள். அகதிகளுக்கு எதிரான மனப்பான்மையும், ஊரடங்குகளும் நீண்ட காலப் பிரச்சனையை பெரும் பண்ணைகளில் ஏற்படுத்தி விட்டன.

2) கோவிட் 19 பெருந்தொற்றின் விளைவாக விநியோகச் சங்கிலி உடைந்து விட்டது. உலக உற்பத்தியில் பெரும் அளவின் மையமான சீனா பூஜ்யத் தொற்றுக் கொள்கையைக் கடைப்பிடித்ததால், சர்வதேச கப்பல் போக்குவரத்தில் தொடர் பிரச்சனையை உருவாக்கியது.  துறைமுகங்கள் மூடப்பட்டு, மாதக்கணக்கில் கப்பல்கள் கடலிலேயே இருந்தன. சர்வதேச கப்பல் போக்குவரத்தும், உரம், உணவு உள்ளிட்ட தொழில் உற்பத்தி சாதாரண நிலைக்கு வருவது மிகவும் மந்தமாக நடந்தது. உணவு விநியோகச் சங்கிலியானது ஏற்பாட்டுப் பிரச்சனையாலும், உணவு பதப்படுத்தும் இடங்களில் ஊழியர்கள் குறைவாகக் கிடைத்ததாலும் மோசமானது.

3) உணவு முறையில் தீவிரமான காலநிலைகள் பெரிய பங்கை வகித்துள்ளன. கடந்த பத்தாண்டுகளில், வறட்சி, வெள்ளம், கடுமையான புயல் ஆகியவற்றால் 80லிருந்து 90% இயற்கைப் பேரழிவுகள் நிகழ்ந்துள்ளன. அதே நேரத்தில் கடந்த நாற்பது ஆண்டுகளில், இந்தப் பூமியானது ஒவ்வொரு ஆண்டும், வறட்சியாலும், பாலைவனமாதலாலும் ஒரு கோடியே இருபது லட்சம் நன்செய் நிலத்தை இழந்துள்ளது; இந்தக் காலத்தில் நில அரிப்பாலும், மாசுபாட்டாலும் நாம் மூன்றில் ஒரு பங்கு விவசாய நிலத்தை இழந்துள்ளோம்.

4) கடந்த நாற்பது ஆண்டுகளில், உலக அசைவ உணவு நுகர்வு (பெரும்பாலும் கோழி) நாடக பாணியில் அதிகரித்தது.  ‘உச்சகட்ட இறைச்சி நுகர்வை’ எட்டி விட்டோம் என்று சில அறிகுறிகள்  காட்டினாலும், அது தொடர்ந்து உயர்கிறது. மிகப்பெரும் சுற்றுச்சூழல் தாக்கத்தை இறைச்சி உற்பத்தி உருவாக்குகிறது: விவசாயத்தின் மொத்த வெளிப்பாட்டில் 57% இறைச்சியிலிருந்து வருகிறது. (உலக கலோரி விநியோகத்தில் இறைச்சி வெறும் 18%ஐயே வழங்கினாலும்) பூமியின் விவசாய நிலத்தில் 77%த்தை கால்நடை உற்பத்தி எடுத்துக் கொள்கிறது.

C:\Users\Administrator\Downloads\unnamed (2).jpg

யோலண்டா வால்டிஸ் ரெமெண்டெரியா (மெக்சிகோ) (பன்முகத்தன்மை), 2009

உலக உணவுச் சந்தையானது உக்ரைன் மோதலுக்கு முன்பாகவே நெருக்கடியில் இருந்தது. நோய்த்தொற்றுக் காலத்தில் விலைவாசியானது பல நாடுகள் முன்பு பாத்திராத அளவுக்கு உயர்ந்தது. எனினும், போரானது ஏற்கனவே பலவீனப்பட்டுப் போன இந்த உணவு முறையை ஏறத்தாழ நொறுக்கி விட்டது. இதில் மிகவும் குறிப்பிடத்தக்க பிரச்சனை உலக உரச் சந்தை. அது பெருந்தொற்றுக் காலத்தில் மீட்சியில் இருந்தது, ஆனால் இப்போது நெருக்கடியில் உள்ளது: ரஷ்யாவும் உக்ரைனும் நைட்ரஜன், பாஸ்பரஸ் உரங்களில் 28%த்தையும், உலக ஏற்றுமதியில் பொட்டாஷில் 40%

 ஏற்றுமதி செய்கின்றன. மேலும் ரஷ்யா உலக அம்மோனியம் நைட்ரேட்டில் 48%ஐயும், உலக யூரியாவில் 11%ஐயும் ஏற்றுமதி செய்கிறது.  விவசயிகளும், விவசாய நிறுவனங்களும் உயிரியல் உரத்துக்கு மாற விரும்பினால் தவிர, விவசாய நிபுணர்கள் உரத்தைப் பயன்படுத்துவதைக் குறைத்தால் மகசூல் கடுமையாகக் குறையும். உணவுச் சந்தையில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதால், பல நாடுகள் தமது ஏற்றுமதியில் கட்டுப்பாடுகளை வித்து விட்டன. இது உணவு உற்பத்தியில் தன்னிறைவு இல்லாத நாடுகளில் உணவு நெருக்கடியை மேலும் அதிகரித்து விட்டது.

உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைவது குறித்து நிறைய உரையாடினாலும், செயல்பாடு பெரிய அளவில் இல்லை என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. 21ஆம் நூற்றாண்டின் இறுதியில், உலகில் 141 நாடுகள் உணவு உற்பத்தியில் தன்னிறைவுடன் இருக்காது எனவும், உலகில் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டிருக்கும் 15.6 பில்லியன் மக்களில் 9.8 பில்லியன் மக்களுக்குத் தேவையான சத்துணவு கிடைக்காது என்றும் கூறப்படுகிறது. உலக நாடுகளில் 14%தான் தன்னிறைவுடன் இருக்கும். ரஷ்யா, தாய்லாந்து, கிழக்கு ஐரோப்பா அகியவை உலகின் தானிய உற்பத்தியில் முன்னணி வகிக்கும். இத்தகைய இருண்ட முன்கணிப்பானது, நாம் உலக உணவு முறையை விரைவாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது; ட்ரைகாண்டினண்டல் வெளியிட்டுள்ள ‘பூமியைக் காக்க ஒரு திட்டம்’ என்ற கட்டுரையில் தேவையான கோரிக்கைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

சுருக்கமாக, ஐநாவின் பொதுச்செயலாளர் அண்டோனியோ குடிரெஸ் உக்ரைன் மோதலும், ரஷ்யாவுக்கெதிரான தடைகளும் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு உலகச் சந்தையில் உணவு, உரத்தின் முக்கிய உற்பத்தியாளர்களான அந்நாடுகள் உற்பத்தியைத் தொடங்க வேண்டுமென்று தெளிவுபடுத்தியுள்ளார். 

C:\Users\Administrator\Downloads\unnamed (3).jpg
உணவு மற்றும் சத்துணவு மேலாண்மை மற்றும் பாதுகாப்பு (ரெடே பென்சான்) பற்றிய பிரேசிலிய ஆய்வு வலைப்பின்னல் சமீபத்தில் நடத்திய ஆய்வானது, 60% பிரேசிலியக் குடும்பங்களிடம் தேவையான உணவு இல்லை என்பதை கவலையுடன் பதிவு செய்துள்ளது.  2 கோடி 12 லட்சம் மக்கட்தொகை கொண்ட நாட்டில் உண்ண எதுவுமில்லாதவர்களின் எண்ணிக்கை 2020க்குப் பின் 1.9 லட்சத்திலிருந்து 33.1 லட்சமாக உயர்ந்துள்ளது. அரசு தேர்ந்தெடுத்த பொருளாதாரக் கொள்கைகளும், பெருந்தொற்றை மிக மோசமாகக் கையாண்டதும் நம் நாட்டில் இன்னும் அதிகமாக அவப்பெயருடன் கூடிய சமத்துவமின்மைக்கு இட்டுச் சென்றது’ என ரெடே பென்சானின் ஒரு மருத்துவப் பெருந்தொற்று நிபுணரான ஆனா மரியா செகால் கூறுகிறார்.  ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்புதான் ஐ.நா.வானது பட்டினியையும், வறுமையையும் நாடக பாணியில் குறைத்த பிரேசிலின் ஃபோம் ஜீரோவையும், போல்சா ஃபாமிலியா திட்டங்களையும் ஆதரித்தது. முன்னாள் அதிபர்கள் லூலா டி சில்வா
(2003-10), டில்மா ரூசூஃப் (2011-16) ஆகியோரின் தலைமையில்  பிரேசில் ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைந்தது. ஆனால் அதைத் தொடர்ந்து மிக்கேல் டெமர் (2016-18), ஜேர் பொல்சொனாரோ (2019 முதல் இப்போது வரை) ஆகியோரின் ஆட்சியில் கிடைத்த பலன்கள் இழக்கப்பட்டு பிரேசில் பழைய பட்டினி நிலைக்குப் பின்னடைவைச் சந்தித்து விட்டது. கவிஞரும், பாடகருமான சொலானோ ட்ரிண்டாட் பாடுகிறார், ‘டெம் ஜெண்டே காம் ஃபோமே” (பட்டினியுடன் மக்கள் இருக்கிறார்கள்)

பட்டினி கிடக்கும் மக்கள் இருக்கிறார்கள்

பட்டினி கிடக்கும் மக்கள் இருக்கிறார்கள்

பட்டினி கிடக்கும் மக்கள் இருக்கிறார்கள்

பட்டினியுடன் மக்கள் இருந்தால்

உண்ண அவர்களுக்கு எதாவது கொடுங்கள்

பட்டினியுடன் மக்கள் இருந்தால்

உண்ண அவர்களுக்கு எதாவது கொடுங்கள்

பட்டினியுடன் மக்கள் இருந்தால்

உண்ண அவர்களுக்கு எதாவது கொடுங்கள்

அன்புடன்

விஜய்

தமிழில்: கி.ரமேஷ்

நூல் அறிமுகம் : விஜயா மு. வேலாயுதத்தின் ‘இதயம் தொட்ட இலக்கியவாதிகள்’ (வாசிப்பு என்னும் வரம் கட்டுரை) – பாவண்ணன்

நூல் அறிமுகம் : விஜயா மு. வேலாயுதத்தின் ‘இதயம் தொட்ட இலக்கியவாதிகள்’ (வாசிப்பு என்னும் வரம் கட்டுரை) – பாவண்ணன்



வாசிப்பு என்னும் வரம்
பாவண்ணன்

மதுரைக்கு அருகில் மேலூருக்கு அருகிலிருக்கும் உலநாதபுரம் என்னும் சிற்றூரில் பிறந்து வளர்ந்தவர் வேலாயுதம். வறுமை சூழ்ந்த அந்தக் காலத்து வாழ்க்கை அவரை பள்ளியிறுதிவரைக்கும் மட்டுமே படிப்பதற்கு அனுமதித்தது. படிப்பைத் தொடரமுடியாவிட்டாலும் மனம் தளராமல் வெவ்வேறு கடைகளில் சிப்பந்தியாகப் பணிபுரிந்து வாழ்க்கையின் சவால்களை எதிர்கொண்டார். பணிவாய்ப்புகள் அவரை கோவைக்குக் குடிபெயரவைத்தன. பணிகள் வழியாகக் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் சொந்தமாக குறைந்த முதலீட்டில் பல்பொருள் அங்காடியொன்றைத் திறந்தார். விற்பனைப்பொருட்களுக்கு இடையில் கடையின் ஓரமாக அலமாரித்தட்டுகளில் புத்தகங்களையும் அடுக்கி விற்கத் தொடங்கினார். மேலும் சில ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகங்களை மட்டுமே கடைமுழுதும் நிரப்பி விற்பனைசெய்யும் விற்பனையாளராக மாறினார். நாளடைவில் எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிடும் சிறந்த பதிப்பாசிரியராக உயர்ந்தார். எழுத்தாளர்களோடும் வாசகர்களோடும் அவருக்கு வாய்த்த நட்பையும் நெருக்கத்தையும் பயன்படுத்திக்கொண்டு ஆண்டுதோறும் வாசகர் திருவிழாக்களை நடத்தினார். வெவ்வேறு ஆளுமைகளின் பெயரால் விருதுகளை நிறுவி ஆண்டுதோறும் திருவிழாவைப்போல நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து மிகச்சிறந்த படைப்பாளிகளுக்கு விருது வழங்கிப் பாராட்டினார்.

புத்தக வாசிப்பு மீது அவர் கொண்டிருந்த பற்றுதான் அவருடைய வற்றாத ஊக்கத்துக்கான ஒரே காரணம். ஒரு கட்டுரையில் வேலாயுதம் தன் பள்ளிக்கூட அனுபவத்தைப்பற்றி நினைவுகூரும் தருணத்தில், வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்லும்போது சாலையில் போகும் மாட்டுவண்டி பின்னாலேயே யாரோ ஒரு மாணவர் டமாரம், அணில், ஜில்ஜில் என அக்காலத்தில் வெளிவந்த ஏதோ ஒரு சிறுவர் இதழைப் பிரித்து வாய்விட்டு படிக்க, மற்றவர்கள் அதைக் காதுகொடுத்துக் கேட்டபடி செல்லும் காட்சியை விவரிக்கிறார். வாசிப்பு இன்பத்தின் விசைக்கு ஆட்பட்டுவிட்ட பால்யகால அனுபவம் வேலாயுதத்துக்கு ஒரு வரம் போல அமைந்துவிட்டது. அந்த அனுபவத்தின் எல்லையை இன்றளவும் சிறுகச்சிறுக விரிவாக்கியபடியே நடைபோடுகிறார் வேலாயுதம். அவருடைய ஆர்வமும் வாசிப்புப்பழக்கமும் பெருகியபடியே உள்ளன.

தன் வாசகப்பயணத்தில் அவருக்குக் கிடைத்த அனுபவத்துளிகளில் சிலவற்றை ‘இதயம் தொட்ட இலக்கியவாதிகள்’ என்னும் புத்தகம் வழியாக வேலாயுதம் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். மு.வரதராசனார், கு.அழகிரிசாமி, கண்ணதாசன், ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி, கவிஞர் மீரா, சுஜாதா, அப்துல் ரகுமான், விஜயபாஸ்கரன், வானதி திருநாவுக்கரசு, நா.மகாலிங்கம், பழனியப்ப செட்டியார் என அவர் தம் வாழ்நாளில் சந்தித்த பன்னிரண்டு ஆளுமைகளைப்பற்றியும் தாம் பார்க்க விரும்பிய முன்னோடி ஆளுமையான சக்தி.வை.கோவிந்தன் பற்றியும் எழுதிய நினைவலைகளின் தொகுப்பாக இப்புத்தகம் மலர்ந்துள்ளது.

கண்ணதாசனைப்பற்றிய குறிப்பில் இடம்பெற்றிருக்கும் ஒரு தருணத்தைப்பற்றிய இரு பதிவுகள் மிகமுக்கியமானவை. ஒரு நிகழ்ச்சி தொடர்பாக கோவைக்கு வந்த கண்ணதாசன் விடுதியறையொன்றில் தங்கியிருக்கிறார். அப்போது அவரைச் சந்திப்பதற்காக திரைப்படத் தயாரிப்பாளரான சின்னப்பாத்தேவர் வருகிறார். தன் புத்தகங்கள் சிலவற்றை அவருக்குப் பரிசளிக்க நினைத்த கண்ணதாசன் வேலாயுதம் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு விற்பனையில் இருக்கும் தன் புத்தகங்களில் ஒவ்வொரு தலைப்பிலும் ஒரு பிரதியை எடுத்துவரும்படி கேட்கிறார். குறிப்பிட்ட நேரத்துக்குள் வேலாயுதமும் புத்தகங்களுடன் அவரைச் சென்று சந்திக்கிறார். தன் புத்தகங்களின் எண்ணிக்கையைப் பார்த்து கண்ணதாசனே மலைத்துப் போகிறார். இவ்வளவு புத்தகங்களா எழுதியிருக்கிறேன் என்று அவரே புன்னகையோடு வியப்பில் மூழ்கிவிடுகிறார். படைப்பின் விசையால் இழுத்துச் செல்லப்படும் ஒரு படைப்பாளியின் கவனம் முழுதும் எப்போதும் படைப்பு சார்ந்ததாகவே இருக்குமே தவிர, தன் சொந்த சாதனைகளைக் குறித்து ஒருபோதும் அவன் நினைத்துப் பார்ப்பதில்லை. கண்ணதாசனின் புன்னகையை வேலாயுதத்தின் சித்தரிப்பில் காணமுடிகிறது.

இன்னொரு தருணம். தன் மீது அன்பு காட்டி, தன்னோடு நெருக்கமாகப் பழகும் வேலாயுதத்துக்கு ஏதேனும் ஓர் உதவியைச் செய்யவேண்டும் என்னும் எண்ணத்தில் கண்ணதாசன், ஒருநாள் அதுவரை வெளிவராத நூலொன்றின் கையெழுத்துப் பிரதியை அவரிடம் கொடுத்து “இதைப் புத்தகமாகப் போட்டுக்கொள்ளுங்கள்” என்று சொல்கிறார். மரியாதையின் நிமித்தமாக அக்கணத்தில் அதை வாங்கிக்கொள்ளும் வேலாயுதம் அறையைவிட்டு வெளியேறும் முன்பாக அப்பிரதியை கண்ணதாசனிடமே கொடுத்துவிட்டு “உங்கள் நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டுவரும் வானதி பதிப்பகமே இதையும் வெளியிடட்டும். அதுதான் தொழில் தர்மம்” என்று சொல்லிவிட்டு வெளியேறிவிடுகிறார். இருவருமே அத்தருணத்தில் அரிய மனிதர்களாக காட்சியளிக்கிறார்கள்.

ஜெயகாந்தனைப்பற்றிய நினைவுக்குறிப்பில் அவர் ஞானபீட விருது பெற்ற தருணத்தை வேலாயுதம் எழுதியுள்ளார். சுருக்கமான அந்தச் சித்தரிப்பில் இலக்கியத்தின் வலிமை எத்தகையது என்பதை உணர்த்திவிடுகிறார். விழாவில் ஞானபீட விருதை வழங்கியவர் அன்றைய குடியரசுத்தலைவரான அபுதுல்கலாம். விருதுக்குரிய படைப்பாளியின் பெயர் படிக்கப்பட்டதும் அவர் நடந்து சென்று குடியரசுத்தலைவரிடமிருந்து விருதைப்பெற்று திரும்பிவருவதுதான் குடியரசு மாளிகையின் மரபு. ஆனால் அன்று ஜெயகாந்தன் பெயரை அறிவித்ததுமே குடியரசுத்தலைவரே ஜெயகாந்தன் அமர்ந்திருக்கும் இடத்தைத் தேடிச் சென்று மாலையணிவித்து வழங்கினார். மேலும் தன் உரையில் தன் இளமைக்காலத்தில் ஜெயகாந்தனுடைய கதைகளைப் படித்துவிட்டு மணிக்கணக்கில் நண்பர்களுடன் விவாதித்த பழைய நினைவுகளையும் குறிப்பிட்டு மகிழ்ந்தார். தில்லிக்குச் சென்று விருது பெற்றுவந்த பல எழுத்தாளர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்களுடன் உரையாடியிருக்கிறேன். நான் பார்த்தவரையில் எழுத்தாளர்களின் உறவினர்களோ நண்பர்களோ பொதுவாக அந்த விழாக்களுக்குச் செல்வதில்லை. தொலைவு, செலவு, புரியாத மொழிச்சூழல் என ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி தவிர்ப்பதைத்தான் பல இடங்களில் பார்த்திருக்கிறேன். ஆனால் ஜெயகாந்தனுக்காக நண்பர்களைத் திரட்டிக்கொண்டு வேலாயுதம் தில்லி வரைக்கும் சென்று விருது பெறும் விழாவைப் பார்த்துவிட்டுத் திரும்பிய செய்தியைப் படிக்கும்போது பெருமையாகவே இருக்கிறது. இலக்கியத்தின் மீதும் இலக்கிய ஆளுமைகள் மீதும் அவருக்குள் நிறைந்திருக்கும் பெரும்பற்றே அத்தகு ஈடுபாட்டுக்கும் விசைக்கும் காரணம்.

நா.பார்த்தசாரதியைப்பற்றிய நினைவுக்குறிப்பில் வேலாயுதம் தன் சொந்த வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியை முன்வைத்திருக்கிறார். இப்படியும் மனிதர்களா என வியப்படைய வைக்கிறது அந்த நிகழ்ச்சி. அது 1959ஆம் ஆண்டு. நா.பார்த்தசாரதி எழுதிய குறிஞ்சிமலர் தொடர்கதையாக வெளிவந்துகொண்டிருந்த நேரம் அது. குறிப்பிட்ட வாரத்தில் வெளியான பகுதியில் அரவிந்தன் என்னும் பாத்திரத்தின் மரணத்தைப்பற்றிய குறிப்பு இடம்பெற்றிருந்தது. வேலாயுதம் போலவே அவருடைய தாயாரும் புத்தகம் வாசிக்கும் வழக்கமுள்ளவர். அன்று அரவிந்தனின் மரணம் நிகழ்ந்த பகுதியைப் படித்துவிட்டு சோகத்தில் மூழ்கிவிட்டார். உணவு சமைக்கும் சிந்தனை கூட அவரிடம் எழவில்லை. அப்படியே சோகத்தில் மூழ்கியபடி பசியை மறந்து அமர்ந்துவிட்டார். மதிய சாப்பாட்டுக்காக கடையிலிருந்து வீட்டுக்கு வந்த வேலாயுதம் அம்மாவின் நிலையைப் பார்த்து புரிந்துகொண்டார். துயரமயமான அந்த வார அத்தியாயத்தை அவரும் படித்துவிட்டு, பட்டினியோடு கடைக்குத் திரும்பிச் சென்றுவிட்டார்.

நா.பார்த்தசாரதி தொடர்பான மற்றொரு நிகழ்ச்சியும் அவர் மீதான உயர்ந்த எண்ணத்தை உறுதிப்படுத்துகிறது. யாரோ ஒரு நண்பர் தன் வீட்டுக்கு அவரை விருந்துக்கு அழைத்திருக்கிறார். தனக்குத் துணையாக வேலாயுதத்தை அழைத்துக்கொண்டு அவரும் அந்த வீட்டுக்குச் சென்றிருக்கிறார். இருவருக்கும் இலைபோட்டு பரிமாறுகிறார்கள். பரிமாறுகிறவர் இருருடைய இலைகளிலும் அசைவ உணவைப் பரிமாறிவிடுகிறார். வேலாயுதம் பதற்றத்தோடு நண்பரை அழைக்கிறார். நா.பார்த்தசாரதி அமைதியாக அவரைக் கையமர்த்திவிட்டு “அசைவ உணவை அப்படியே விட்டுவிட்டு சைவ உணவை மட்டும் சாப்பிடுகிறேன். பேசிப்பேசி இதைப் பெரிதாக்கவேண்டாம்” என்று சொல்லிவிட்டு அமைதியாகச் சாப்பிடத் தொடங்கிவிடுகிறார். அசைவ உணவை கண்ணால் பார்த்தாலேயே வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக்கொண்டு செல்கிற இந்த உலகத்தில் நா.பார்த்தசாரதியின் உயர்ந்த பண்பு வியப்பளிக்கிறது.

நா.பார்த்தசாரதிக்கும் அந்தக் காலத்தில் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்கும் தொடர்புடைய ஒரு தகவலையும் நா.பா. பற்றிய பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் வேலாயுதம். எம்.ஜி.ஆர். ஒருமுறை நா.பார்த்தசாரதியை தொலைபேசியில் அழைத்து ஒரு நிகழ்ச்சியில் உரையாற்ற வருமாறு அழைக்கிறார். இருவருக்கும் இடையில் கட்சி வேறுபாடு இருக்கும்போது எப்படிப் பேசுவது என்னும் தயக்கத்தில் நா.பார்த்தசாரதி மென்மையாக அந்த வேண்டுகோளை மறுக்கிறார். நீங்கள் அரசியல் பேசவேண்டாம், இலக்கியம் பற்றிப் பேசுங்கள் என்று சொல்லி நா.பா.வை ஏற்றுக்கொள்ளும்படி செய்துவிடுகிறார் எம்.ஜி.ஆர். எதிர்பாராதவிதமாக, அந்தச் சமயத்தில்தான் நூலகங்களுக்கு வாங்கப்படும் நூல்களின் எண்ணிக்கையை அறுநூறிலிருந்து இருநூறாக குறைக்கும் ஆணை வெளியாகி, எல்லா எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் ஒருவித கசப்பில் மூழ்கியிருந்தனர். மேடையில் பேசிக்கொண்டிருந்த சமயத்தில் பேச்சோடு பேச்சாக நா.பா. அந்த ஆணையைப்பற்றி குறிப்பிட்டு அந்த ஆணை நீக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இடையில் அவரை நோக்கி கையை அசைத்து எதையோ சொல்ல எம்.ஜி.ஆர். முற்பட்ட சமயத்தில் நா.பா. அதைப் பொருட்படுத்தாமல் “நீங்கள் எதைச் சொல்வதாக இருந்தாலும் உங்கள் உரையின்போது சொல்லுங்கள். இப்போது குறுக்கிடவேண்டாம்” என்று அடக்கிவிட்டு தன் உரையைத் தொடர்ந்து நிகழ்த்திமுடித்தார். இறுதியில் உரையாற்றவந்த எம்.ஜி.ஆர். நா.பா.வின் ஆதங்கத்தைக் குறிப்பிட்டு, அந்த அறிவிப்பை ரத்து செய்யும் ஆணை பிறப்பிக்கப்பட்டுவிட்டது என்றும் அந்த ஆணையில் கையெழுத்திட்ட பிறகே கூட்டத்துக்குப் புறப்பட்டு வந்ததாகவும் தெரிவித்தார். அரசியலில் இரு துருவங்களாக இருந்தாலும் மனிதப்பண்பில் இருவரும் ஒருவரையொருவர் மதித்து நடந்த வரலாற்றுத் தருணத்துக்கு வேலாயுதம் எழுதியிருக்கும் குறிப்பு சாட்சியாக அமைந்துவிட்டது.

பதிப்பாசிரியர் பழனியப்ப செட்டியார் பற்றிய நினைவுக்குறிப்பில் அவர் பால்ய காலத்தில் படித்த பள்ளிக்கூடத்தைப்பற்றிய குறிப்பு இடம்பெற்றிருக்கிறது. அந்தப் பள்ளிக்கூடத்தை நிறுவியவர் கதிரேசன் செட்டியார். அவர் கணக்கு போடும் வேகம் கற்பனைக்கு எட்டாதது. அதிவிரைவில். கீழ்வாயிலக்கம், எண்சுவடி வாய்பாடுகளை மனப்பாடமாகச் சொல்லும் ஆற்றல் நிறைந்தவர். கதிரேசன் எண்சுவடி, கதிரேசன் வட்டிக்கணக்கு, கதிரேசன் பெருக்கல் வாய்ப்பாடு- புதிய முறை ஆகிய நூல்களை அவர் உருவாக்கினார். காந்திய வழிகளால் ஈர்க்கப்பட்டு, சுதந்திரப்போராட்டத்தில் கலந்துகொண்டவர் அவர். தாழ்த்தப்பட்டவர்கள் கல்வி பயிலும் பொருட்டு காந்தியடிகளின் பெயரைச் சூட்டி அந்தப் பாடசாலையை நிறுவினார். காந்தியின் பெயரைத் தாங்கிய பள்ளிக்கூடம் என்பதால் சமஸ்தானத்தின் உதவித்தொகை அவருக்கு மறுக்கப்பட்டது. ஆயினும் மனம் தளராத கதிரேசன் செட்டியார் தன் சொந்தப்பணத்தைக் கொண்டே பள்ளியை நடத்தினார். இந்தப் பள்ளியில் ப.ஜீவானந்தம் சிறிது காலம் ஆசிரியராகப் பணிபுரிந்தார். பழனியப்பன் படித்த பள்ளியைப்பற்றி எழுதும்போது வேலாயுதம் இத்தகு தகவல்களையும் தம் நினைவிலிருந்து சொல்கிறார். இன்று கதிரேசன் செட்டியாரை நினைவில் வைத்திருப்பவரே இல்லை. அவருடைய தியாகவாழ்க்கையைப்பற்றி எடுத்துரைக்கக்கூட யாரும் இல்லை. அவரைப்பற்றி ஏதேனும் புத்தகமோ, மலரோ வந்திருக்கிறதே என்றும்தெரியவில்லை. இப்படிப்பட்ட சூழலில் வேலாயுதத்தின் இக்குறிப்பு மிகமுக்கியமாகத் தோன்றுகிறது.

கதிரேசன் செட்டியாரிடம் மூன்றாம் வகுப்புவரை கற்றவர் பழனியப்பன். பிறகு தன் தந்தையுடன் ரங்கூனுக்குச் சென்று மூன்றாண்டுகள் கல்வி கற்றார். மீண்டும் தமிழகத்துக்கு வந்து சிதம்பரத்தில் சிறிது காலம், சென்னையில் சிறிது காலம் என படித்து பள்ளிக்கல்வியை முடித்தார். தொழில் செய்ய மகனை மலேசியாவுக்கு அனுப்ப நினைத்த தந்தையின் விருப்பத்துக்கு மாறாக தன் தாயார் கொடுத்த நாலாயிரம் ரூபாயை முதலீடு செய்து திருச்சியில் பதினெட்டு ரூபாய் வாடகையில் எழுதுபொருள் கடையைத் தொடங்கினார். நண்பர்கள் கொடுத்த ஆலோசனைக்கு இணங்கி, எழுதுபொருட்களுடன் புத்தகங்களையும் வாங்கி விற்றார். முதலில் பொது அறிவுநூல்கள், இராமாயணம், மகாபாரதம் ஆகிய நூல்களிலிருந்து தொடங்கி புதுமைப்பித்தன், வ.ரா. போன்ற பிரபலமான எழுத்தாளர்களின் புத்தகங்களையும் விற்கத் தொடங்கினார். கோனார் தமிழ் உரைநூல்கள் மிகக்குறுகிய காலத்தில் அவரை உச்சத்துக்கு அழைத்துச் சென்றன. செட்டியார் சென்னையில் புதிதாக உருவாக்கிய அலுவலகக்கட்டடத்துக்கு கோனார் மாளிகை என்று பெயர்சூட்டினார். ஐயம்பெருமாள் கோனார் தம் வீட்டுக்கு பழனியப்பா இல்லம் என்று பெயர்சூட்டினார். தம் நெஞ்சில் ஊறிய நன்றியுணர்ச்சியை இப்படி இருவரும் இருவேறு வழிகளில் புலப்படுத்தினர். பத்து பக்கங்களில் பழனியப்பன் செட்டியாரின் வாழ்க்கை வரலாற்றையே ஒரு நாவலின் சுருக்கத்தைப்போல பதிவு செய்துவிட்டார் வேலாயுதம்.

பதின்மூன்று ஆளுமைகளைப்பற்றிய நினைவலைகளைத் தொகுத்துச் செல்லும் போக்கில், இடையிடையே படிக்க நேரும் சிற்சில தகவகள் வழியாக பதினாலாவதாக மற்றொரு ஆளுமையைப்பற்றியும் நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. எளிய கடைச்சிப்பந்தியாக வாழ்க்கையைத் தொடங்கிய ஒரு சிறுவன் மெல்ல மெல்ல தன் தளராத உழைப்பாலும் வற்றாத ஊக்கத்தாலும் நேர்மையான வழியில் தமிழ் எழுத்தாளர்களும் வாசகர்களும் பாராட்டும் நட்பார்ந்த பதிப்பாசிரியராக வளர்ந்தோங்கிய வேலாயுதம் அவர்களே அந்த ஆளுமை.

(இதயம் தொட்ட இலக்கியவாதிகள். விஜயா மு.வேலாயுதம், வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர். சென்னை – 600017. விலை. ரூ.175)

கோடுகள் கவிதை – ச.சக்தி

கோடுகள் கவிதை – ச.சக்தி




இறந்த
உடல்களை
வேக வைத்துக்கொண்டிருக்கும்
தாத்தாவின்
வயிற்றில்
நெருப்பாக எரிகிறது
நெளியும் புழுவாகிய பசி,

கிழிந்த
செருப்புகளைத்
தைத்துக் கொண்டிருக்கும்
அப்பாவின் கைகளில்
நெளிய ஆரம்பிக்கிறது பலரது பாதங்களுக்கான
பாதைகள்,

தேநீர்க் கடையில்
யாரோ குடித்து
வைத்த தேநீர்க் குவளையைக்
கழுவ முற்படும்
சிறுவனின்
கண்களில்
வழிய ஆரம்பிக்கிறது
குடும்பத்தின் வறுமை,

வேகமாக சென்று
கொண்டிருந்த
இருசக்கர வாகனத்தில்
அடிப்பட்டு
இறந்து போன
அணில் குஞ்சின்

தலையில்
வரையப் பட்டிருக்கிறது
நில்,கவனி,செல் என்ற
மூன்று மந்திர கோடுகள்,

கவிஞர் ச.சக்தி ,
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,
9791742986,

தினம் ஒரு பூ கவிதை – பாங்கைத் தமிழன்

தினம் ஒரு பூ கவிதை – பாங்கைத் தமிழன்




வேண்டுகோள்தான் இது;
இறுக்காதே இன்னும்!
வலிமையற்றவர்
வாழ வேண்டும் இங்கு!

வியாபாரிகளுக்குத்தான்
வீரியமென்றால்
வியர்வை சிந்துபவனுக்கு
வீரியமும் வீரமும் விவேகமும் அதிகம்தான்!

இந்த தேசத்தில்
தேச பக்தனை
அடையாளம் தெரிந்துகொள்ளாமல் வாழ்வது
எவ்வளவு பெரிய அவலம்; அவமானம்!

இந்த மண்ணை
நேசிப்பதல்ல….
நம்புவதுதான்
பெரிய தேசபக்தி!

இந்த மண்ணே
வழி…
வாழ்வு….

பக்தி என்பதை
வேஷத்தை வைத்து
எடைபோடும் நிலை
எப்போது வந்தது
இந்த மண்ணில்?

வேஷம் போடத் தெரியாமல்
வியர்வையை மட்டுமே
இந்த மண்ணில் சிந்தும்
மண்ணுக்குச் சொந்தக்காரனின்
வேண்டுகோள்!

இடையில் வந்த
எதனை வேண்டுமானாலும்
விற்றுக்கொள்;
ஆணவம் வந்தால்
அதிக பசி வரும்தான்;
அதை இதை
எதை வேண்டுமானாலும்
பிராய்ந்து போட்டுக்கொள்;
பெரும்பசிக்காரனே!

ஆள வந்தால் மட்டுமே
அடிமட்டத்துக்காரனின்
பசியும் வலியும் தெரியும்!

ஆசைப் படுபவனும்
அள்ளிக் கொள்ள நினைப்பவனும்
வறுமைப் புத்தகத்தை
வாசிக்க முடியாதுதான்!

மீண்டும் மீண்டும்
வலியுறுத்துகிறேன்;
என்னுடைய வேண்டுகோள்
ஒன்றேவொன்றுதான்!
இடையில் வந்த
எதனை வேண்டுமானாலும்
விற்று, பசி போக்கிக்கொள்!

உனக்கு
இந்த மண்ணின்
பூர்வ குடியானவனின்

ஒரேயொரு….
இரகசியம் சொல்கிறேன்!

உலகில்
இருநூற்று முப்பதுக்கும்
மேலான
நாடுகளாம்!

எந்த நாட்டிற்கும்
இல்லாத பெருமை
என் தாயகத்திற்கு
மட்டுமே உண்டு;வியாபாரியே!
அது தெரியுமா உனக்கு?

பூ….
பூ தெரியுமா உனக்கு?
மென்மையும் செழுமையும்
வளமையும் உள்ள இடத்தில்
மட்டுமே பூக்குமே….
பூ….
அதனின் இரசியம்
சொல்கிறேன்!

உலகில் உள்ள நாடுகளில்
முன்னூற்று அறுபத்தைந்து
நாட்களிலும்
ஏதாவது ஒரு பூ
தினமும் கிடைத்துக்கொண்டே
இருக்கும் ஒரே தேசம்
என் இந்திய தேசம் மட்டுமே!

அந்த
என் தேசத்தை மட்டும்
விற்றுவிடாதே!

பாங்கைத் தமிழன்.

வெ. நரேஷ் கவிதைகள்

வெ. நரேஷ் கவிதைகள்




* உழைக்கச் சென்றவன்
உறங்க மறுத்ததால்
உதவியாய்ச் சென்ற
இடது கைகள்.

* உடைமையைச் சுமந்து
உழைப்பினைத் தொடர்ந்து
உதிரத்தை இழந்து
இறப்பினைப் பெறுபவனே
உழைப்பாளி.

* வறுமையில் வாழ்பவனை
வரவேற்றது
டீ கடை பெஞ்சு.

* அறுவடை செய்து
நெல் குவித்த பிறகு
எதிரில் நிற்பான் முதலாளி
பாதியைப் பறிமுதல் செய்ய.

* கரையோரம் வாழ்ந்து வந்தோம்
ஓட்டுக்காகக் குடிசைக்குள்
கனவுகளை விதைத்து
ஆங்காங்கே கட்டிக் கொண்டான் மாளிகையை.

* ஆள்காட்டி விரலைக் காட்டிவிட்டு
மை பூசிக்கொண்டு வருகிறார்கள்
அவர்களின் முகத்தில்.

-வெ. நரேஷ்

கார்கவியின் கவிதைகள்

கார்கவியின் கவிதைகள்




சித்திரைப் பெருவிழா
***************************
வருடா வருடம் வந்து செல்கிறது
பலர் திறந்த கதவுகளில்
சந்தோசமும் இந்நாளும்……
வந்தவர் போனவரெல்லாம்
பார்த்துக் குதுகலிக்கும் வண்ணத்தில்
வடிவமைக்கப் பட்டிருந்தாள் அந்த அம்மன்
யாருக்கு என்ன வேண்டுதலோ
எல்லாம் வரிசையாக அர்ச்சகரிடம்
பரிந்துரைக்கப்பட்ட நிலையில்
பத்து ருபாயும் நூறு ருபாயுமாய்
வைத்துச் சொல்லப்படுகிறது.
பலநூறு கிலோமீட்டரில்
இருந்து வந்தவரின் கோரிக்கைகள்
இடுப்பில் பிள்ளை வைத்து
இராட்டினம் பார்த்தவளுக்கு
பக்கத்தில் கையேந்தும்
பிள்ளையின் உருவம் தெரியவில்லை
அந்த திருவிழா பெருவெளியில்
கரகாட்டம் ஒருபக்கம்
ஒயிலாட்டம் மறுபக்கம்
சிலம்பாட்டம் ஆரவாரம்
அந்த தெய்வீகப் பொங்கலுக்காக
வறுமை ஆடிய ஆட்டத்தை
அந்தத் திருவிழாவின் பொழுது
காணாதது வருத்தம் தான்……
கூடியிருந்த திருவிழாக் கூட்டத்தில்
தள்ளுவண்டி பலூன்காரனிடம்
நிரம்பி இருந்தன
நல்லமனம் கொண்ட
காற்று நிரம்பிய பலூன்கள்….
பட்டை தீட்டிய கத்திகளில்
பளீரெனத் தெரிகிறது இருப்பவரின்
பணமும் இல்லாதவனின் குணமும்……
இனிப்புகள் எல்லாம் விலைபோனால்
இனிதாகிவிடும் அவர்களின் அந்நாள்.
எங்கோ பிறந்தவன்
வேறெங்கோ வாக்கப்பட்டு
சென்றவள் என அனைவரும்
கூடும் நேரத்தில்
வந்து வளைந்து நிற்கின்றன
போன வருட பழிக்குப்பழி பாவங்கள்……..
இத்தனையும்
நிறைந்து வழியும் திருவிழாவில்
எல்லாம் நல்லது என நினைத்தவனிடம்
ஒளியூட்டி அமைதி வழங்குகிறது
அருளுடன் சேர்ந்த அந்த சிறு தீப ஒளி………
*******************************************

ஒரு மாட்டிற்கு ஒரு சூடு என்பர்..
மனிதனாகிப் போனதால்
கண்டுக்கொள்ள தயங்குகிறோம் நாம்……

அப்பாவின் பேச்சுகளில் எல்லாம்
சலிப்பூட்டும் மகனுக்கு
இறுதிச்சடங்கில் மயிரே போனாலும்
சரி என்ற எண்ணம் தானாக பிறக்கிறது
அவரின் இறுதி ஊர்வலத்தில்……

வெற்றியை நீ பெற
திறமையை கொடுப்பதற்கு முன்
நேரத்தைக் கொடு
வெற்றி உன்னிடமே….

ஒரு தேயிலை கோப்பையில்
வாய் வைத்த நிலைக்கு
நகர்ந்து அமரும் மனிதர்கள் மத்தியில்
நகராமல் தாங்கி நிற்கிறது
வேற்றுமை பார்த்தவர்களையும் சேர்த்து
அந்த புனித மரம்….

கவிஞர் சே. கார்கவி

சந்துருவின் கவிதை

சந்துருவின் கவிதை




இரவு வானத்தில்
நிறமற்ற தூரிகைகளால்
தங்களுக்கான வானவில்லை
அடர்ந்த கானகத்தில்
வரையத் தொடங்குகிறார்கள்
பழங்குடிகளின் குழந்தைகள்.

தார்ச்சாலையைப்போல்
தேகத்துக்கும் வாழ்வுக்குள்ளும்
பிணைந்திருக்கும்
ஒரே வண்ணத்தை
உடும்பின் தோலைப்போல்
உரிக்க முயல்கிறார்கள்

காயடிக்கப்பட்ட
மூதாதைகளின்
மூளையைப் பிளந்து
கானக அடங்கலில்
கல்வியின் குருத்து
முளைவிடத் தொடங்குகிறது.

நீலமும் வெயிலும்
நிறைத்த கூரையினடியில்
எதிர்கால விடியல்களை
உரத்து உச்சரிக்கிறார்கள்.

காட்டுக் கிழங்குகளின்
வேர்களின் ஆழத்தில் மரணித்த
கல்விக் கடவுளை உயிர்ப்பித்து
மண்சுவற்றின் மாடங்களில்
விளக்கென ஏற்றுகிறார்கள்
அரிதாய் சில ஆசிரியர்கள்.

இடிந்த பள்ளிக்கூடம் அகன்று
குட்டிச்சுவராக்கப்பட்ட
தலையெழுத்தை
மரத்தினடியிலிருந்து
மாற்றி எழுத முயல்கிறார்கள்.

பசி மேயும் வகுப்பறையில்
ஆசிரியரின் நிழலும்கூட
அவர்கள் இனி
கைப்பற்ற வேண்டிய
எதையோ  போதிக்கிறது.

ஆசீர்வதிக்கப்படாத
நிலத்திலிருந்து எழும்
மழலைகளின் பாடச் சத்தங்கள்
சாபங்களாய் உறங்கும் மூதாதைகளின்
கல்லறைகளை சாந்தப்படுத்துகிறது.

பாதியாய் உடைந்து நிற்கும்
கரும்பலகைகள்
துயரத்தின் ரேகைகளை
பெற்றோர் கைகளிலிருந்து
நிரந்தரமாய்த் துடைக்கும்
சுண்ணாம்பு வனமாய் விரிகின்றன.

திறந்த வெளிகளில்
எழுத்தாணிகளால்
காலத்தை உழுது
கல்வியின் விதைகளை
நினைவுகளில் ஊன்றுகிறார்கள்.

தமக்கான சுகங்களை
உடைந்த நாற்காலியின்
அடியில் ஒளித்து
புதர் மறைவில் சிக்கியிருக்கும்
பூர்வகுடி பூக்களுக்கு
அறிவு திருத்தி
ஆரம்ப வகுப்பெடுக்கிறாள்
ஆசிரியை ஒருத்தி.

சொற்ப நேர வகுப்பு முடியும் வரை
காத்திருக்கும் வறுமை
மீண்டும் அவர்களை
தின்னத்தொடங்கலாம்
எனினும்
பசியை எரித்து அவர்கள்
படித்தாக வேண்டும்.

சந்துரு_ஆர்சி

Kannan Poems. கண்ணனின் கவிதைகள்

கண்ணனின் கவிதைகள்




மடி
குருக்களின் உதவியாளர்
உரத்த குரலில்
கத்தியபடி வந்தார்
‘மடியாயிருக்கிறார்
ஒதுங்கி
வழிவிடுங்கோ’
உள்ளே
மூலவரும்
ஒதுங்கினார்
ஒருகணம்

வறுமையை ஒழிப்பது எப்படி?
மெய்நிகர் சந்திப்பில்
தொடுதிரை போனில்
ஆறாம் வகுப்புக்
குழந்தைகள்
ஆங்கிலத்தில்
உரையாடினார்கள்
அனைத்து ஏழைகளுக்கும்
இலவச உணவு
அனைவருக்கும் வேலை
ஏழைக் குழந்தைகளுக்கு
இலவசக் கல்வி
கோதமலை அடியில்
பண்ணையத்திலிருக்கும்
ஆறுமுகம்
குழந்தைகளுக்குத்
தெரியுமா
இக்கேள்விக்கான விடை?

கையறு நிலை
சொந்தத்தில் திருமணம்
கால்கள் தொட்டு வாழ்த்துக்கள்
வாங்கினான்
காலை உணவு முடித்து
மொய் வைத்து
வெளிவந்தோம்
வழியில்
‘பைபாஸ் காளியம்மன்’
மிகவும் சக்தி
கும்பலோடு கும்பிட்டோம்
அர்ச்சகருடன் தனியே
பேசியபின்
தர்மதரிசனம் போய்
தனிதரிசனம்
விபூதிப் பொட்டலம்
கையில் திணித்தான்
ஸ்பெஷலாக எலுமிச்சை
கல்லாவுல வைய்யி
எல்லாம் மாறுமென்றான்
தேர்ந்தெடுத்த நடிகனின்
உடல்மொழி அவனிடம்
பஸ் நிறுத்தம் வந்த பின்
‘கண்ணா, காசிருந்தாக் கொடேன்’
சட்டைப் பையில்
எடுத்த மொத்தமும்
அப்படியே நீட்டினேன்
பதட்டத்துடன்
‘இவ்வளவு எதுக்கு, ஒரு தாள் போதும்’
எடுத்த மொத்தமும்
கொடுக்க இயலாத
எனை நினைத்து வெட்கி
கண்ணில் நீர் வழிய
கைகாட்டி விடைபெற்றேன்

கொலு
படிகள் மாடிக்கு
பொம்மைகள் பரணுக்கு
படையலுக்கும்
பாடலுக்கும்
அடுத்த நவராத்திரி வரை
காத்திருக்க
ஆரம்பித்தாள்
அட்டைப் பெட்டியில்
அம்மன்

பதவி
மலையுச்சியில் ஒரு
மாமரம்
புசித்தவர்கள் சொன்னார்கள்
‘அமிர்தம்’
மலையுச்சியடைய
பலவருடங்களாகலாம்
என்றனர் சிலர்
உச்சியடையுமுன்
பணிமுடிவும் சாத்தியம்
என்றனர் பலர்
விண்ணப்பங்கள்
அதிகமானதால்
எழுத்துத் தேர்வு
இரண்டடுக்கானது
நேர் முகத்தேர்வு
கட்டாயமானது
நமக்குத்தான்
கால்வழுவில்லையோவென
கழிவிரக்கம் வந்தது
பட்டியலில் பெயர்
வருமாவென
பதற்றமாயிருந்தது
அய்யா மனதுவைத்தால்
அடுத்த வருடம்
நிச்சயம்
சுமக்கும் பொதி
போதாது
கூடுதலாக சுமந்தால்தான்
அய்யாவுக்குத் தெரியவரும்
பத்து வருடங்கள்
போனதில்
மறந்தே போனது
திடீரென ஒரு நாள்
தட்டில் வைத்து
கனி நீட்ட
இடக்கையால்
புறந்தள்ளி
சமவெளியில்
எதிர்த்திசையில்
நடைபோடும்
காத்திருந்து
சலித்துப்போய்
தளர்ந்து போன
மனசு