Nigazh Ulagam Book By Prabanjan Bookreview By Vijiravi நூல் விமர்சனம்: பிரபஞ்சனின் நிகழ் உலகம் - விஜி ரவி

நூல் விமர்சனம்: பிரபஞ்சனின் நிகழ் உலகம் – விஜி ரவி




மனித மனங்களின் நுட்பமான உணர்வுகளை, மனிதநேயத்தின் மகத்துவத்தை தன் கதாபாத்திரங்களின் மூலம் அழகாக படம் பிடித்து காட்டுபவர் பிரபஞ்சன். நிகழ்உலகம் தொகுப்பில் “மனுஷி” சிறுகதையில் ஒரு பசுமாட்டின் உணர்வுகளை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

‘பசு அழகாகவே இருந்தது. பெரிதும் வெள்ளை. திட்டுத்திட்டாக ஆரஞ்ச் வர்ணம். பெரிய நாவல் பழம் போன்ற கண்கள். கண்களைச் சுற்றி கருமை… மையிட்டது போல.’ புது இடம் புதிய சூழ்நிலையில் மனம் ஒன்றாமல் இரவு முழுவதும் கால் மாற்றி கால் மாற்றி ‘அம்மா’ என கத்திக் கொண்டே இருந்தது. தொழுவத்தில் தன் தாயோடும், சகோதரக் கன்றுகளோடும் ஒன்றாக வளர்ந்ததை வேறொரு வீட்டில் திடீரென கட்டிப் போட்டதை அந்த கன்றால் தாங்க முடியவில்லை. மிருகமானாலும் அதற்கும் உணர்வுகள் உண்டு என்பதை அழகாக விளக்கியுள்ளார்.

அறுபத்தி ஏழு வயதான அந்த வீட்டின் மூத்த பெண்மணி தான் பசுவை கவனித்துக்கொள்வார். தண்ணீர் காட்டுவது தீனி போடுவது, வாரம் ஒருமுறை குளிப்பாட்டுவது, மஞ்சள் குங்குமம் இட்டு அழகு பார்ப்பது என. …. ஒருமுறை அவர் வெளியூர் சென்றிருந்த இரண்டு நாட்களும் சரியாக சாப்பிடாமல் கோபத்துடன் பிள்ளைகளை முட்ட வந்தது. ஊர் திரும்பிய மனுஷி அதை அணைத்துத் தடவிக் கொடுத்த பின்புதான் அதன் ஆவேசம் அடங்கிற்று. அந்த அம்மாளின் கண்களில் இருந்து நீர் வழிந்து ஓடியது. அவர்கள் இருவரின் பாசப்பிணைப்பைப் பார்த்து குடும்பமே அதிசயித்தது. ஆனால், அந்தப் பாசக்கார அம்மாவே பசுவை விட்டு விலக ஆரம்பித்தாள் அது காளை கன்று ஈன்றதும். அவளின் பாராமுகம் பசுவை வதைத்தது. அவளின் போக்கு வீட்டில் உள்ளவர்களை வெறுப்படையச் செய்தது. இப்படி ஒரு ராட்சஸத்தனமா என்று நினைக்க வைத்தது. கடைசியில் மாட்டை விற்றதும் அந்த அம்மாள் கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தாள். ‘என்ன இருந்தாலும் அவளும் மனுஷி தானே…?’ என கதை முடியும்.

அதே போல ‘சினேகம்’ சிறுகதையில் கிளி ஜோசியக்கார பெரியசாமி நாயக்கருக்கும், சீட்டு எடுத்துத்தரும் கிளிக்குமிடையேயான பாசமும் அலாதியானது தான்.
‘’உந்திச்சுழி நேராகத் தொடங்கி வயிறு முழுக்க பரவி துணி பிழிவது போல குடலை முறுக்கி ஒரு உதறு உதறி நின்றது வலி. இது பசி. முந்தின நாள் மதியம் சாப்பிட்ட இரண்டு மசால் வடை, ஒரு டீயோடு சரி. அடுத்த நாள் காலை வரை பட்டினி. கடைசியில் அவருக்கு ஒரு வாடிக்கையாளர் கிடைத்து, எட்டணா பணமும் கிடைக்கிறது. அந்தப் பணத்தில் வடையும், டீயும் சாப்பிட்டு தன் பசியைப் போக்கிக் கொள்ள எண்ணுகிறார். ஆனால் பட்டினி கிடக்கும் கிளியின் நிலை மனதை வாட்ட… ஒரு டீ மட்டும் குடித்துவிட்டு கிளிக்கு வாழைப்பழம் வாங்கித் தந்து விட்டு தன் பசியைப் பொறுத்துக் கொள்கிறார்.

‘’அப்பாவின் வேஷ்டி’’ சிறுகதையில் ஒரு பட்டு வேட்டி தான் கதையின் மையமாக திகழ்கிறது. ஆசிரியரின் அழகான, விஸ்தீரமான வர்ணனையில் வேட்டியின் வழவழப்பை, தகதகப்பை, அன்னப்பட்சிகள் நிறைந்த வேட்டிக்கரையை, பச்சை கற்பூர வாசனையை, வாசகனால் தொட்டு, ரசித்து, மகிழ்ந்து, நுகர முடிகிறது. ஒரு பிஞ்சுக் குழந்தையை குளிக்க வைப்பது போல அப்பா வேஷ்டியை மென்மையாக துவைத்து அலசி காய வைக்கும் நேர்த்தி, அதை நீவி மடிக்கும் லாவண்யம், அதை உடுத்தியதும் அதிகரிக்கும் அப்பாவின் கம்பீரம் என்று கதை முழுக்க வேஷ்டியின் விவரிப்பு தான்.

அப்பா உலகைவிட்டு மறைந்த பின்பும் பெட்டிக்குள் பத்திரமாயிருக்கிறது வேஷ்டி. ஒரு பிள்ளையார் சதுர்த்தி நாளில் பெரியவனாகி அப்பாவின் வேஷ்டியைக் கட்டிக் கொள்ள வேண்டும் என்ற சிறு வயது முதல் தீராத ஆசை கொண்டிருந்த பிள்ளையின் கனவு நிறைவேறும் தருணம் வருகிறது. மகன் ஆசை ஆசையாய், மிகுந்த எதிர்பார்ப்புடன் அப்பாவின் வேஷ்டியை எடுத்துக் கட்டிக் கொள்கிறான். பல வருடங்களாக மடித்து வைத்திருந்த வேஷ்டியின் பின் மடிப்புகள் நீள நீளமாக கிழிந்து விடுகிறது. ‘’அப்பா காலத்து வேஷ்டிடா அது… உனக்கு எங்கே உழைக்கும்? போய் உன் வேஷ்டியைக் கட்டிக்கிட்டு வா’’ என்கிறாள் அம்மா. அந்த வேஷ்டிஅப்பாவிற்குத் தான் பொருத்தம். தனக்கில்லை என அவன் டெரிகாட்டன் வேட்டியைக் கட்டிக்கொண்டு பூஜையில் அமரும் போது மனசுக்குள் எங்கோ வருத்தமாக இருக்கிறது அவனுக்கு. படிக்க நமக்கும் தான்.

‘’ நிகழ் உலகம்’ ‘யாரும் படிக்காத கடிதம்’, ‘வீடு’ ‘கருப்பட்டி’ மற்றும் ‘ மனசு’ சிறுகதைகளும் வாசித்து முடித்த பின் பெரும் தாக்கத்தை மனசுக்குள் ஏற்படுத்த தவறவில்லை.

விஜி ரவி, ஈரோடு.

நூல் : நிகழ் உலகம்
ஆசிரியர் ; பிரபஞ்சன்
பதிப்பகம்; கவிதா பப்ளிகேஷன்
விலை; 70