அணுசக்தி ஒப்பந்தமும் அடைந்த பலன்களும் (இடதுசாரிகள் வைத்த வாதம்)
பிரபிர் புர்காயஸ்தா
2008-2009 ஆண்டுகளில் அன்றைய ஐமு அரசாங்கம் அமெரிக்காவுடன் ஏற்படுத்திய அணுசக்தி ஒப்பந்தம் குறித்து இடதுசாரி கட்சிகள் வைத்த வாதம் என்னவென்றால். நமக்குத் தேவையான மின்சாரத்தின் ஒரு பகுதியை அணுசக்தியின் மூலம் தயாரிக்கமுடியும் என்றே வைத்துக் கொண்டாலும் உள்நாட்டிலேயே அதற்கான திறன்கள் உள்ளன; மேலும் அமெரிக்க மற்றும் மேலை நாட்டு ஒப்பந்தங்கள் மிக அதிக செலவு பிடிக்கக்கூடியவை; நாடு விடுதலை அடைந்ததிலிருந்து மிகுந்த பற்றுடன் காப்பாற்றிய சுய சார்பு எனும் வியூகம் பலவீனப்படும் என்பதே.
இன்றைக்கு என்ன நிலைமை?
இந்த ஒப்பந்தத்தை அடுத்து, நம் நாட்டின்மீது அமெரிக்கா விதித்திருந்த அணு ஆயுத பரவல் தடை நீக்கப்பட்டது. இதன் மூலம் அமெரிக்க நிறுவனங்களான ஜிஇ (general electricals), வெஸ்டிங் ஹவுஸ் (westing house), பிரெஞ்சு நிறுவனம் அரேவா (Areva) ஆகியவை நமக்கு 18 அணு ஆலைகளை அளிப்பதென முடிவு செய்யப்பட்டது. இதில் ஒன்றுகூட ஒப்பந்த நிலையைக் கூட எட்டவில்லை. அப்புறம் எங்கிருந்து மின்சாரம் தயாரிக்கும் நிலையை அடைவது? இன்று நாம் மின்தட்டுப்பாட்டையும் அடிக்கடி ஏற்படும் மின் வெட்டுகளையும் முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டோம் என்பது உண்மைதான். ஆனால் அணு சக்தி ஒப்பந்தத்தினால் அல்ல.
இந்த மூன்று நிறுவனங்களின் இன்றைய நிலை என்ன?
வெஸ்டிங் ஹவுஸ் 2017இல் திவாலாகிவிட்டது. ஜிஇ தனது அணு உலைப் பிரிவை ஹிடாச்சிக்கு விற்றுவிட்டது. அது பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகி பெரிய அணு உலைகளைக் கட்டுவதில் விருப்பம் இல்லாமல் உள்ளது. அரேவாவும் திவாலாகி பிரெஞ்சு அரசாங்க நிறுவனத்துடன் (EDF) இணைக்கப்பட்டுவிட்டது. இப்போது இந்தியாவில் அணு உலைகள் நம் சொந்த தொழில் நுட்பம் அல்லது ரசிய ரோசாட்டம் நிறுவனத்தின் உதவியுடன் மட்டுமே கட்டப்படுகின்றன.
இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தத்தின்போது இந்திய அரசாங்கமும் அணுசக்தி பொறுப்பிலிருந்த அதிகாரிகளும் பல படாடோப திட்டங்களை அறிவித்தார்கள். 2031க்குள் 63000மெகாவாட்; அதில் 40000 மெகாவாட் பன்னாட்டு ஒப்பந்தங்கள் மூலம் என்றெல்லாம் பேசப்பட்டது. அன்றைக்கே இடதுசாரிகள் இது சாத்தியமில்லை; அதன் செலவு கட்டுபடியாகதது என்பதையும் சுட்டிக்காட்டினார்கள். இன்றைக்கு ஒரு ஆலைகூட கட்டப்படவில்லை. ஏன்? இந்த ஆலைகளை நடத்தும் எந்த நிறுவனமும் அதன் வானளாவிய செலவுகளால் அழிந்துவிடும்.
அரசனை நம்பி
அணு உலைகள் இறக்குமதி செய்யப்படும் என்கிற நம்பிக்கையில் நமது சுயேச்சையான அணுசக்தி திட்டங்களும் தாமதப்படுத்தப்பட்டன. ஒப்பந்த செய்யப்பட்டு கடந்த 12 வருடங்களில் உள்நாட்டில் கட்டப்பட்ட 220MW சக்தி கொண்ட இரண்டு அணு உலைகளும் ரசிய வடிவமைப்பில் இரண்டு 1000MW உலைகளும் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. ஆக இறக்குமதியாகும் என்று கருதப்பட்ட 40000MWஇல் அமெரிக்காவிலிருந்தோ மற்ற மேலை நாடுகளிலிருந்தோ எதுவுமே வரவில்லை.
ஏன் வரவில்லை?
இந்திய அரசாங்கம் இரண்டு தவறான கணக்கீடுகளை கொண்டிருந்தது.
- அமெரிக்க அணுசக்தி தொழில்துறையின் ஆற்றல் குறித்த மிகை மதிப்பீடு.
- நம் நாட்டின் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம் மற்றும் அணுசக்திக் கழகம் திறன் மிக்கதில்லை என்ற கருத்து.
அமெரிக்காவில் திரீ மைல் தீவில் (Three Mile Island accident) நடைபெற்ற அணு விபத்துதான் அமெரிக்காவில் அணுசக்தி மதிப்பிழந்ததற்குக் காரணம் என்கிற தவறான எண்ணம் உள்ளது. உண்மையில் அமெரிக்க அணுசக்தி நிறுவனங்கள் கட்டுமானங்களைக் குறித்த நேரத்தில் முடிக்க இயலாமை மற்றும் திட்ட மதிப்பீடை விட கடுமையான செலவு உயர்வு ஆகியவற்றால்தான் மின்பகிர்மான நிறுவனங்களின் ஆதரவை இழந்தன. மேலும் 80களில் இயற்கை எரிவாயு மலிவாகக் கிடைக்கத் தொடங்கியதால் பெரும்பாலான மின் உற்பத்தி நிலையங்கள் புதிய ஆலைகளுக்கு இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தத் தொடங்கின. மின் உறபத்தியில் கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்காக வாக்களிக்கப்பட்ட ‘அணுசக்தி மறுமலர்ச்சி’ வரவேயில்லை. ஒரு பக்கம் இயற்கை எரி வாயு போன்ற புதிப்பிக்கத்தக்க எரிபொருளின் செலவு தொடர்ச்சியாகக் குறைந்து கொண்டே போனது. இன்னொரு பக்கம் அணுசக்தியின் பிணியான செலவும் காலமும் கூடிக்கொண்டே போனது.
அணுசக்தியின் எதிர்காலம்
எம்ஐடி (MIT) குழு ஒன்று ‘கார்பன் நெருக்கடி சூழ் உலகத்தில் அணுசக்தியின் எதிர்காலம்’ என்கிற ஆய்வு ஒன்றை இரண்டு ஆண்டு காலம் நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அது அணுசக்திக்கு முடிவுரை எழுதுவதாக உள்ளது.
‘அமெரிக்க, மேலைநாட்டு நிறுவனங்கள் பெரும் அணு உலைகளை கட்டும் ஆற்றலை இழந்துவிட்டன. அணுசக்தியின் பொற்காலத்தில் அதில் ஈடுபட்டிருந்த அணு இயற்பியலாளர்களும் பொறியாளர்களும் ஓய்வு பெற்றுவிட்டனர் அல்லது காலமாகிவிட்டனர். இன்னும் பழங்காலப் பெயர்ப்பலகையை தாங்கி நிற்கும் அந்த நிறுவனங்களுக்கு அப்படிப்பட்ட பெரும் உலைகளைக் காட்டும் நினைவாற்றல் இல்லை.’
இதற்கு இரண்டு மூன்று எடுத்துக்காட்டுகளை தரலாம். வெஸ்டிங் ஹவுஸ் அமெரிக்காவில் கட்டிவரும் நான்கு உலைகளில் கரோலினாவிலுள்ள இரண்டு கைவிடப்பட்டன. எப்போது? 900 கோடி டாலர்கள் செலவிடப்பட்டபின். ஒப்பந்த தொகையைவிட மொத்த செலவு இரு மடங்கு அதிகமாகும் என்று தெரிந்தபின். கட்டுமானமும் பல வருடம் பின்தங்கி உள்ளது. ஜார்ஜியாவில் கட்டப்பட்டு வரும் இரண்டு உலைகள் அதனுடைய தொடக்க மதிப்பீட்டான 11.5பில்லியன் டாலரை விட இரண்டு மடங்கு அதிகரித்துவிட்டது. 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் முடித்திருக்கவேண்டிய அவை எப்போது முடியும் என்று தெரியவில்லை. பிரெஞ்சு அரேவாவின் நிலைமை படு மோசம். 2013 இல் முடிந்திருக்க வேண்டிய பிளமன்விலா உலை பத்து ஆண்டுகள் தாமதத்துடனும் ஆறு மடங்கு செலவினம் உயர்ந்தும் நடந்து கொண்டிருக்கிறது. எம்ஐடி-யின் ஆய்வு இன்னொன்றையும் சொல்கிறது. மேலை நாடுகளின் அணு உலைக் கட்டுமானத் தோல்விகள் ரசியா, தென்கொரியா, சீனா மற்றும் இந்தியாவில் இல்லை. அங்கே அணு உலைகளை திட்ட மதிப்பீடுகளுக்குள்ளும் குறித்த காலத்திலும் கட்ட முடிகின்றது.
பொறிக்குள் விழுந்த இந்தியா
அமெரிக்கா இந்தியாவை இந்தப் பொறிக்குள் விழ வைக்க இரண்டு பிரதான காரணங்கள். எதிர்காலமே இல்லாத,அழிவின் விளிம்பிலிருக்கும் தனது அணு தொழில்துறையை காப்பாற்ற வேண்டும். நாவில் நீர் ஊற வைக்கும் இந்திய சந்தை. குறிப்பாக ஜிஇ மற்றும் வெஸ்டிங் ஹவுஸ் இடமிருந்து விலை உயர்ந்த அணு உலைகளை இந்தியா வாங்க வைக்க முடிந்தால் என்கிற கணக்கு.
இரண்டாவது காரணம், அணுத் துறையில் தடைகளை நீக்கி இந்தியாவிற்கு இடம் கொடுப்பது போல காட்டி அதன் எதிர்கால திட்டங்களை முடக்கிவிடலாம்; அதன் கூட்டு சேராக் கொள்கையை அழித்து தனது திருதாஷ்டிர பிடிக்குள் கொண்டு வந்து விடலாம் என்பது.
1974 பொக்ரான் அணு வெடிப்பிற்குப் பிறகு நமது நாடு அமெரிக்கா விதித்த தடைகளால் அலைக்கழிக்கப்பட்டது. ஆனால் சுயேச்சையான அணு தொழில்துறையைக் கட்டினோம். இப்போது மீண்டும் மேலை நாடுகளுடன் நம்மை பிணைத்துக் கொண்டால் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தாராப்பூர் அணு உலைகளின் விஷயத்தில் நடந்தது போல தடைகள் விதிக்கப்படும். தாராப்பூர் அணு உலை நுணுக்கத்தை கற்றுக்கொள்ள பாபா அணுசக்தி மையத்திற்கும் இந்திய அணுசக்திக் கழகத்திற்கும் நீண்ட காலம் தேவைப்பட்டது.ஆனால் அதன் பலனாக இந்தியா, சுயேச்சையான மின்னணு தொழில்துறை, சிக்கலான உலோக செயல்முறைகள், தரக் கட்டுப்பாடு போன்ற பொறியியல் துறைகளை வளர்க்க முடிந்தது.
அமெரிக்காவுடன் நாம் செய்து கொண்ட அணு ஒப்பந்தத்தினால் என்ன நடந்தது? இந்திய அணுசக்தி துறையை கைப்பற்றும் நோக்கம் நிறைவேறவில்லை. ஆனால் இந்தியாவை அமெரிக்காவின் கீழ்ப்படியும் கூட்டாளியாக மாற்றுவது வெற்றி அடைத்துள்ளது போல் தெரிகிறது.
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்கிரசி – ஆகஸ்ட் 09-15
https://peoplesdemocracy.in/2021/0815_pd/looking-back-india-us-nuclear-deal