இசை வாழ்க்கை 76: மெட்டு விரிந்த இசையினிலே – எஸ் வி வேணுகோபாலன்
எழுபத்து ஐந்தாவது கட்டுரை மிகுந்த நெகிழ்ச்சி அடையும் வண்ணம் வரவேற்பு பெற்றது. எல்லோருக்கும் நிறையவே நன்றி சொல்ல வேண்டியவனாகிறேன்.
புதுகை பூபாளம் பிரகதீஸ்வரன் மூலம் எண் கிடைக்கப் பெற்று அனுப்பிய கட்டுரை நாதஸ்வரக் கலைஞர் பார்த்திபன் அவர்களுக்குப் போய்ச் சேர்ந்தது. ‘அற்புதம்… நன்றி அய்யா’ என்று பதில் வந்தது. அடுத்த நாள் கடலூரில் வசித்து வரும் அவரை அழைத்துப் பேசுகையில் மிகவும் தன்னடக்கத்தோடு உரையாடினார். இத்தகைய கலைஞர்களுக்கு அடுத்தடுத்த நிகழ்ச்சிகளுக்கு வாய்ப்பு கிடைக்கப் பெறுவதுதான் அவர்களுக்கான உண்மையான பாராட்டு.
கட்டுரையை அடுத்து நாதஸ்வர இசைக்கலைஞர் ஜெயபிரகாஷ் அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். தனது நெகிழ்ச்சியைக் குரல் வழி பதிவு செய்து அனுப்பி இருந்தார். பின்னர் அழைத்தும் பேசினார். பள்ளி மாணவர்களுக்கு காற்றுக் கருவிகள் வாசிப்பு பற்றிய ஆர்வம் தூண்டும் இரண்டு நாள் முகாம் நடத்தி, பள்ளிக்கூட மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறோம், இந்த கருவிகள் அடுத்தடுத்த தலைமுறைகள் பாதுகாத்து எடுத்துச் செல்ல வேண்டிய சமூக சொத்து என்றார்.
தோழர் பிரகதீஸ்வரன், ‘காதலின் பொன் வீதியில்’ பாடலை முன்பெல்லாம் வேகமாகக் கடந்து போனவர், பின்பொரு கச்சேரியில் யாரோ பாடும்போது கேட்டு ரசித்தவர், இப்போது மேலும் நெருக்கமாக உணர்வதாகக் குறிப்பிட்டார் . கட்டுரையில் பார்த்திபன் பற்றிய குறிப்புகளைக் கொண்டாடிய அவர், ‘பொதுவாக விஸ்தார வாசிப்பு தான் நாதஸ்வரத்தில் கொண்டாடிக் கேட்பது. அந்தக் கலைஞர்களும் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை இன்புற வைப்பதும் அதில் தான்! ஆனால், பார்த்திபன் வாசிப்பில், மூச்சுக் காற்றைக் கட்டுக்குள் வைத்துக் கட்டுப்பாட்டோடு வெளிப்படுத்திக் கட்டுடையாமல் குழையக் குழைய வாசிக்கும் நேர்த்தி தான் அபாரம்’ என்றார்.
நண்பர் மோகன சுப்பிரமணியன் இலேசில் கருத்து சொல்லும் தோழரில்லை – உள்ளத்தைத் தொடவேண்டும் எந்தப் படைப்பும்! ஒரு நாள் கடந்தபின் வந்த அவரது அழைப்பில் ஒலித்தது குரல் அல்ல, இசை, சமூகக் கரிசனமிக்க இதயத்தின் பரவச இசை. இந்தக் கட்டுரை என்னென்னவோ செய்கிறது என்னை, இந்தத் தொடரை நிறுத்த உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று ஓங்கி ஒலித்த முரட்டுப் பாச மழையின் ஓசை!
தொண்ணூறு வயது கடந்தும் இடையறாது சமூகப் பங்களிப்பு ஆற்றிவரும் கல்வியாளர் எஸ் எஸ் ராஜகோபாலன் அவர்கள், ‘படித்துக் கொண்டே இருக்கலாம். (கட்டுரை) கரும்பா, அதனின்று எடுத்துக் கிடைத்த கருப்பஞ் சாறா என்று ஐயுறும் வண்ணம் உள்ளது’ என்று எழுதியதோடு, கட்டுரையைத் தனது நட்பு வட்டத்திற்கும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
‘குழந்தைகள் தங்களுக்கு வாய்த்த நொறுக்குத் தீனியை வைத்து வைத்து சாப்பிடுவார்களே, அப்படி எடுத்து எடுத்து வாசிக்கத் தோன்றுகிறது 75வது கட்டுரையை’ என்று எழுதி இருக்கிறார் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியும் கவிஞருமான ஏ எம் சாந்தி.
தோழர் தனபால் மகள் பாரதி முற்றிலும் ரசனைக்கு ஆட்பட்டிருக்கும் ஓர் உற்சாக தளத்தில் இருந்து அழைத்துப் பேசியது மறக்க முடியாதது. அத்தனை ஆனந்தக் களிப்பும் குதூகலமும் அவரது குரலில்!
மின் ஆற்றல் எந்திர ஆற்றல் ஆகிறது. மின்னாற்றல் ஒளியாற்றல், ஒலி ஆற்றலாக உருப்பெறுகிறது என்றெல்லாம் அறிவியல் பாடத்தில் இளவயதில் படித்திருக்கிறோம். இசையைக் காட்சிப்படுத்தவோ, காட்சியை வாசிக்க வைக்கவோ, வாசிப்பை இசையாக உணரவோ இயலுமா தெரியவில்லை. ஆனால், இசையார்வம் கொண்டவர்களுக்கு இசை குறித்த வாசிப்பு, செவிகளில் இசையாக ஒலிக்கும் மொழி பெயர்ப்பு எப்படி நிகழ்கிறது!
கம்ப ராமாயணச் செய்யுளில் இந்த வரி மிகவும் பேசப்படுவது: ‘எடுத்தது கண்டனர், இற்றது கேட்டார்’. இராமன் வில்லைக் கையில் எடுத்ததை அவையில் உள்ளோர் பார்க்கின்றனர், அது முறிக்கப்படும் ஓசையைக் காதில் கேட்கின்றனர்! இது அந்த செயல்பாட்டின் வேகத்திற்கான குறிப்பு மட்டுமன்று. ஒரு காட்சியின் அழகியல்! இதைப் போலவே தான், மேடைகளில் இசைக்கலைஞர்கள் தங்களது இசைக்கருவியை எடுப்பதைக் காண்கிறோம். அதனிலிருந்தும் பெருகும் இசையைக் கேட்கிறோம்.
ஒரு பறவையின் சிறகடிப்பை இசையால் படம்பிடிக்க முடியும் என்பதை பி சுசீலாவை வைத்துக் கேட்க வைத்தனர் மெல்லிசை மன்னர்கள். எழுத்தாளர் மு சுயம்புலிங்கம் அவர்களது சிறுகதை ஒன்றில் கவண் எறிந்து குருவியைப் பிடிக்கத் துரத்துபவனுக்கு அந்தப் பறவை எப்படி சவால் விடுத்து வெவ்வேறு இடமாகப் பறந்து போய்க் கொண்டே இருக்கிறது என்பதை அமர்க்களமாகக் கொண்டுவந்திருப்பார். போக்கு காட்டிக்கொண்டே செல்லும் அந்தக் குருவி போய் உட்காரும் இடமான கொல்லைப்புறம் ஒன்றில் குளித்துக் கொண்டிருக்கும் பெண் தன்னெதிரே தென்படும் அவனைத் தவறாகப் புரிந்து கொண்டு அடித்து விரட்டத் துரத்தவும் வந்த வழியே தலை தெறிக்க ஓடுவான் அவன், குருவியோ அசையாமல் ஒரு மரக்கிளையில் இருந்தபடி அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் என்று முடியும் கதை. சொக்க வைத்துச் சிக்க வைக்கும் குருவியை முன்னிலைப்படுத்தி அந்தக் குறிப்பிட்ட படத்திற்கான காதல் பாடலைக் கவிஞர் கண்ணதாசன் எப்படி பல்லவியில் எடுத்தார் என்பது எண்ணியெண்ணி இன்புற வைப்பது.
புதிய பறவை திரைப்படத்தின் முதல் ஒலிப்பதிவே ‘சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து’ பாடல் தானாம்! காதல் உணர்வுகளைக் கண்களாலேயே கடத்திவிட முடியும். வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல்லாத இடம் அது என்பார் வள்ளுவர். தான் நோக்குங்கால் நிலம் நோக்கி, நோக்காத போது தான் நோக்கி மெல்லச் சிரிக்கும் காதலியை அறிமுகம் செய்பவரும் அவரே.
தனக்குள் ஊறும் உணர்வுகளை நேரடியாகச் சொல்லாமல் வேறு யார் யாருக்கோ நிகழ்வதாக அடுக்கிக் கொண்டே போகும் சுவாரசியமான காதல் பல்லவி தான் சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து! ஒரு ஜோடி காதல் குருவிகளின் அந்தரங்க பரிபாஷையில் தொடங்குகிறது பாடல். அதை விரிந்த செவ்வானம் ரசித்துக் கடலில் போய்க் கலக்கும் உணர்வுகளாக விரிகிறது வயலின் இசை. அதன் இன்பத்தில் துள்ளும் தாளக்கட்டில் மலராக விரியும் மொட்டில் வண்டு வந்து மூழ்கவும், அதை அந்தக் காட்டுவெளி முழுக்கக் கொண்டு சேர்க்க மூங்கிலில் காற்று மோதிக் கிளர்த்துகிறது காதலின் புல்லாங்குழல் இசையை!
பறவைகளின் அழகு அவற்றின் பறத்தல் மட்டுமல்ல, ஒயிலாக அவை தங்களுக்கு உகந்த திசையில் ஒரு வட்டமடித்துத் தரையை நோக்கி வேகமாகக் கீழ் நோக்கி வருவதுபோல் வந்து மீண்டும் மேலெழும்பித் தங்களது தேர்வில் ஒரு மரக்கிளையில், வீட்டு மேற்கூரையில், தானியங்கள் உலர்த்தி இருக்கும் கட்டாந்தரையில் அல்லது மொட்டை மாடியில் இறங்கும் அழகு அத்தனை ரசமானது.
இந்தக் காட்சியின்பத்தின் இசை அனுபவமாக இந்தப் பாடலை வழங்கி இருப்பது மெல்லிசை மன்னர்களின் அபார மேதைமை. அருமையான தாளக்கட்டில் மிதந்து மிதந்து பறக்கின்றது பி சுசீலாவின் குரல். சரணத்திற்குப் போகையில், உயரத்தை எட்டும் கிறக்கத்தில் ஒரு கொண்டாட்ட ஹம்மிங்… சரணத்தின் நிறைவுத் தரையிறக்கத்தில் குதூகலமாக ஒரு ‘ஹோய்’ ! குருவிகள் ஒயிலாகத் தலையை ஒடித்து ஒடித்துத் திரும்பிப் பார்க்கும் அழகை, ஒவ்வொரு வரியிலும் வார்த்தைகளின் சங்கதிகளில் கொண்டு வந்திருப்பார் சுசீலா.
சிட்டுக்குருவி…என்ற முதல் சொல்லிலேயே ஒரு கதை சொல்லி போல் அத்தனை இழைத்துத் தொடங்குகிறார் சுசீலா. ‘முத்தம் கொடுத்துச் சேர்ந்திடக் கண்டேனே’ என்பதில் நெருக்கமான மனிதருக்கு மிகவும் நெருக்கமான அனுபவக் கடத்தலாக ஒலிக்கிறது. செவ்வானம் என்பது ஒற்றைச் சொல், ஆனால் வானம் என்பது அகன்று பரந்து விரிந்திருப்பது. ஆகவே, அந்தச் செவ்வானத்தை அத்தனை நகாசு வேலைகள் செய்து இசைக்கிறார் அவர். ‘மொட்டு விரிந்த மலரினிலே’ என்ற வரியில் தலைப்படும் வேகமும், ‘வண்டு மூழ்கிடக் கண்டேனே’ என்பதில் அந்த மூழ்கிட என்ற சொல்லில் நம்மை மூழ்கடிக்கும் இலாவகமும் அற்புதமாய் ஒலிக்க, ‘மூங்கிலிலே காற்று வந்து மோதிடக் கண்டேனே’ என்பதை அடுத்து வரும் அந்த ‘ஹோய்’ தான் தரையிறங்கல் !
வயலின் இசையிலும் குழலின் இன்பத்திலும் ஹம்மிங் மிதத்தலிலும் பிறக்கும் சரணத்தில் ‘பறந்து செல்ல நினைத்துவிட்டேன் எனக்கும் சிறகில்லையே…’ என்பதில் பறவையின் போக்கு காட்டல் எப்படி வெளிப்படுகிறது! ‘பழக வந்தேன் தழுவ வந்தேன்’ என்ற சொற்களுக்குத் தான் எத்தனை ஒய்யாரம் வாய்க்கிறது… ‘பறவை துணையில்லையே’ என்பதில் எத்தனை தூண்டுதலுக்கான குறிப்பு ஒலிக்கிறது! ‘எடுத்துச் சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே’ என்பதில், வார்த்தை என்கிற வார்த்தைக்கு எத்தனை சங்கதிகள்…’என்னென்னவோ நினைவிருந்தும்’ என்பதில் அந்த என்னென்னவோ நம்மை என்னென்னவோ நினைவுகளில் ஆழ்த்தி விடுகிறது. ‘நாணம் விடவில்லையே’ என்பது சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டு ஒரு பாசாங்குத் தனமான புகார் என்பது அந்தக் காதலின் மதிப்பை மேலும் கூட்டுகிறது. பிறகு வரும் ‘ஹோய்’ தான் இப்போதும் தரையிறங்கல்.
இரண்டாம் சரணத்திலும் அதே வயலின், குழலிசை, ஹம்மிங் என்று வானில் பறக்கத் தொடங்கும் குரலில், ‘ஒரு பொழுது மலராகக் கொடியில் இருந்தேனா’ என்பதிலேயே ஒரு தேனைச் சுரக்க வைக்கும் கவிஞர் கண்ணதாசன், ‘ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா’ என்பதில் இரண்டாவது பருகுதலுக்கான இன்பத்தையும் சுவைக்க வைக்கிறார். ‘இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா’ என்பதில் சுசீலாவின் குரல் இதமானகாற்று தாலாட்டும் கிளையில் ஊஞ்சலாடும் குருவியாக இசைக்கிறது. ‘இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா’ என்பது காதலின்பத்தின் அடுத்த கட்டம், இப்போது வரும் ‘ஹோய்’ இன்னும் சுகமான தரையிறங்கல்.
சுசீலா எங்கே தொடங்குவார், எந்த இடத்தில் சரியாக தபேலாவின் தாளக்கட்டு தொடங்கும், எங்கே துள்ளலோசை பிறக்கும். எங்கெல்லாம் பாடலின் வளைவுகளுக்கும், தாவுதலுக்கும், தரையிறக்கத்திற்கும் ஒட்டுறவாகத் தாள லயம் ஒலிக்கும் என்பது கூடுதல் இன்பம். சிவாஜி கணேசன், சரோஜா தேவி நடிப்பு பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.
மனிதர்களுக்குப் பறவைகள் மீதுள்ள காதல் அவற்றின் சுதந்திரத்தின் மீதான ஆர்வமாக இருக்கக் கூடும். சிறை பிடிக்கவும் சிறைப் பட்டிருக்கவும் வேட்கை உள்ளோர் பறவைகளை ரசிப்பது நம் வாழ்க்கை முரண். ‘என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்’ என்றானே மகாகவி? ‘ஆள்’ என்கிற சொல்லே அடிமைத் தனத்தின் மிச்ச சொச்சம் என்கிறார் ஆய்வாளர் ஆ சிவசுப்பிரமணியன். திருப்பாவை பாசுரங்களில் இருந்தும் (உமக்கே நாம் ஆட் செய்வோம்), தேவாரத்தில் இருந்தும் (ஆளாய் இனி அல்லேன்) வெவ்வேறு தமிழ் இலக்கியங்களில் இருந்தும் அவர் மேற்கோள் காட்டி எழுதி இருப்பதை அவரது ‘தமிழகத்தில் அடிமை முறை’ புத்தகத்தில் காண முடியும்.
அன்புக்கும் இசைக்கும் ‘ஆட்பட்டு’ இருப்பது சிறப்பான விஷயம் தான். இசையில் கலப்பது உள்ளபடியே ஒரு சுதந்திர உணர்வு. இசை ஒரு காந்த விசை என்பதால் அந்தத் திசை நோக்கிய மனத்தின் தேடல் ஒரு விடுதலை உணர்வும் கூட.
(இசைத்தட்டு சுழலும் ……)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: sv.venu@gmail.com