நூல் அறிமுகம்: பிரசாந்த் வே யின் ’பறக்கும் யானைகள்’ – ராகேஷ் தாரா
நூல் : பறக்கும் யானைகள்
ஆசிரியர் : பிரசாந்த் வே
விலை : ரூ. ₹40/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]
கிம் கி டுக்கின் புகழ்பெற்ற ”Spring, Summer, Fall, Winter… and Spring” படத்தில் வரும் சிறுவன் ஒரு மீனை ஒரு கல்லில் கட்டி நீந்தவிடுவான். அதைப் பார்க்கும் அவனது குரு அவன் உடலோடு ஒரு பெரிய கல்லை கட்டிவிட்டு தண்டிப்பார். இதேபோன்ற ஒரு அனுபவம் எனக்கு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது கிடைத்தது. நண்பனோடு பேசிக்கொண்டு நடந்துகொண்டிருக்கும்போது எதார்த்தமாக அருகிலிருந்த வேப்பமரத்திலிருந்து ஒரு சிறு கொழுந்தை பிய்த்து வீசீனேன். அதை எங்கிருந்தோ பார்த்த பனிரெண்டாம் வகுப்பிற்கு தாவரவியல் நடத்தும் ஆசிரியர் ஓடி வந்து என் காதைப் பிடித்து திருகினார். வலி பொறுக்காமல் நான் கத்தத் தொடங்கினேன். அப்போது அந்த ஆசிரியர் “உனக்கு வலிக்கிற மாதிரிதான அதுக்கும் வலிக்கும். எதுக்கு சும்மா அத பிடிச்சு இழுக்குற’ எனக் கூறிட்டுச் சென்றார்.
அன்றிலிருந்து எதேர்ச்சையாக ஒரு பூவை பறிக்க நேர்ந்தாலும் காதைத் திருக அந்த ஆசிரியர் தூரத்திலிருந்து ஓடி வருகிறார் என்று ஒரு கனம் திரும்பிப் பார்க்கத் தோன்றும். குழந்தைகளின் மனம் இயல்பாகவே ஒருவித குறுகுறுப்பை விரும்பும் தன்மை கொண்டது. அவர்கள் இந்த உலகத்தில் பார்க்கும் அனைத்தையும் ஆச்சரியத்தோடும் ஆர்வத்தோடும் பார்க்கக் கூடியவர்கள். எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளும் ஆர்வம் அவர்களிடம் கனம் கனம் அதிகரித்துக்கொண்டே இருக்கும். சிறிய பூச்சிகளை பார்த்தால் அவற்றை புரட்டி பார்ப்பது. பூக்களைப் பார்த்தால் அதைப் பறித்து எறிவது என அனைத்தையும் பார்த்தும் தொட்டும் உணர முற்படுகின்றன. ஆனால், எல்லாவற்றையும் அறியும் அவர்களது குறுகுறுப்பை சரியாக வழிநடத்துவது மிக அவசியமானது. அறிய முற்படும் ஆவலில் நல்லது கெட்டது என பிரித்து அவர்களுக்கு உணரத்தெரியாது.
ஒரு குழந்தையின் மனம் எப்படிச் சூழலுடன் தனது முதல் அனுபவங்களை (நல்லதாகவோ , கெட்டதாகவோ) உணர்கிறதோ அதனடிப்படையில் தான் அவர்களின் ஆளுமை கட்டமைக்கப்படும். இந்த வழிகாட்டுதலைத் தான் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கற்பிக்க நினைக்கிறார்கள். ஆனால், பெரும்பாலும் இந்த வழிகாட்டுதலை பயத்தினை அடிப்படைக் கருவியாக பயன்படுத்தியே செய்கிறார்கள். எதிர்வினையாக குழந்தைகளிடம் ஒழுக்கம் குறித்த ஒவ்வாமையே உருவாகிறது. உலகம் முழுவதும் சிறார் இலக்கியம், சிறார் சினிமா என தனி கலைவடிவங்கள் செய்ய முற்படுவது இந்த வழிப்படுத்துதலைத் தான். இவை குழந்தைகளின் கற்பனை வளத்தை வளர்க்கிறது, மக்களின் தொன்மக்கதைகளை வாய்மொழியாக கடத்துகிறது. இந்த கதைகள் குழந்தைகளை அவர்களைச் சுற்றி இருக்கும் உயிர்ச்சூழலுடன் இணக்கமாக உணரச்செய்கிறது. இன்று குழந்தைகள் தான் இருக்கும் சூழலுடன் முற்றிலும் அறுபட்டவர்களாக தனித்து இருக்கிறார்கள். தன்னைச் சுற்றி இருக்கும் உயிர்களின் இருப்பையும் மனித வாழ்வில் அனைத்துயிர்களும் ஒன்றின் நிறைவிற்கு மற்றொன்று அவசியமானவை என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டியது நம் கடமையாகிறது
ஊடகவியலாளர் பிரசாந்த்.வே எழுதியுள்ள ”பறக்கும் யானைகள்” தொகுப்பில் இடம்பெற்ற கதைகள் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உண்டான உறவை மிக எளிமையான அதே நேரத்தில் நீதியுணர்வுடம் உணர்த்தக் கூடிய கதைகள். ஒவ்வொரு உயிரும் அதனளவில் முக்கியமானது. அதற்கென்று செய்வதற்கு ஒரு பங்கு இருக்கின்றது.மேலும் இம்மாபெரும் பல்லுயிர்ச் சூழலில் தன்னலம் மட்டுமே கருதாமல் சமூகமாக ஒன்றினைந்து செயல்படுவது, மனிதனுக்கு இயல்பிலேயே இருக்ககூடிய பேராசைகள், போன்ற அடிப்படையான அறவுணர்வுகளை விலங்குகளின் வாழ்க்கைகளின் உலகில் சொல்கிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இதையெல்லாம் ஒரு ஆசிரியரின் கண்டிப்போடு செய்யவில்லை. மாறாக அவர்களின் கற்பனைகளை விரித்து அவற்றின் அனுபவங்களாக மாற்றுவது வழியாக இந்த கதைகள் அதை செய்கின்றன. அந்த வகையில் சிறார் இலக்கியத்தில் இந்தப் புத்தகம் மிகவும் முக்கியமானது.
– ராகேஷ் தாரா
நன்றி: பூவுலகின் நண்பர்கள்