நூல் அறிமுகம் : பிரேமின் “நந்தன் நடந்த நான்காம் பாதை” – அன்புச்செல்வன்

நூல் அறிமுகம் : பிரேமின் “நந்தன் நடந்த நான்காம் பாதை” – அன்புச்செல்வன்




நீண்ட நாட்களுக்குப் பிறகு வாசித்த கலகப் பிரதி. வறண்ட சொல்லாடலில் இல்லாமலும், கோணங்கி போல் சுருள் மொழியின்றியும், அதே சமயம் கவித்துவம் குன்றா சொற்செட்டுடனும் பிரதி கதையாடுகிறது. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு அனுபவம், வெவ்வேறு தளம். பொன்னியின் செல்வனை ஆகச் சிறந்த தமிழ் இலக்கியப் பிரதிகளில் ஒன்றாகக் குறிப்பிட்டுக் கொண்டாடும் தன்மை குறித்த எள்ளல் விரவிக் கிடக்கும் கதை ‘பொன்னியின் செல்வம்’. முகலாய செம்மலருக்கும் கூடல் நகர் கயல்விழிக்கும் (மீனாட்சி) நடக்கும் ஒருபால் முயக்கத்தை அவரவர் வளர்க்கும் கிளிகள் வழி சொல்லிச் செல்வது ‘இரட்டைக் கிளிகள் எழுதிய காவியம்’.

கூட்டுப் புணர்வு, பால்திரிபுறும் நிலை முதலிய ‘சமூக அதிர்ச்சி’ சொல்லாடலைத் தமிழ் தொன்ம கதையாடல் வழி அற்புதமாகப் பேசிச் செல்கிறது “யோகினி கோட்டம்”. பெண்ணாக உணரும் ஆணை, ஆண் தன்மையை உணரச் செய்வதோடு அவரது பெண்மையையும் அங்கீகரித்து கடைசியில் சமூகம் அவருக்கு அளித்த கொடுந் தண்டனையிலிருந்து தப்பிக்க அவரையே கொலை செய்து விடுதலை அளித்த பெண் எழுத்தாளர்/நாடக நடிகை பற்றிய விவரிப்பு கதை “அல்குல் அடவி என்கிற காதல் கானகம்”. நக்சல்கள்/மாவோயிஸ்டுகள் என்று அடையாளப்படுத்தப்படுகிற பகுதியிலிருந்து வந்த பழங்குடி ஆய்வு மாணவி தனது அரசியல் தேர்வு எதுவாக இருக்கவேண்டும் என்று உணரும்போது அதிகாரம் அவரை என்ன செய்கிறது என்று முகத்தில் அறைகிறது “தண்டகாரண்யத்திற்குள் ஒரு ஒற்றையடிப்பாதை”. தீவிர இடதுசாரியம், மாற்று அரசியல் பேசிய எழுத்தாளர்களின் பிற்கால கருத்தியல் சீரழிவு பற்றி உள்ளார்ந்த நகைச்சுவையுடன் கதையாடுகிறது “விருப்பக் குறிகள்” (‘இளநி வேதிகா’ என்று கதையில் வரும் எழுத்தாளர் சாரு நிவேதிதா இல்லைதானே பிரேம்).

“நந்தன் நடந்த நான்காம் பாதை” கதை தொகுப்பின் சிறந்த வெளிப்பாடாக நான் கருதுகிறேன். தற்போதைய இந்தியாவின் ஆபத்தான இந்துத்துவம், வைதீகம், சனாதனம் போன்றவற்றை ரோகித் வெமூலா தற்கொலை, கல்புர்கி, தபோல்கர், பன்சாரே கொலைகள், முஸாபர்நகர் இசுலாமியர் மீதான படுகொலை தாக்குதல்கள், தலைநகர் பல்கலைக்கழகத்தில் எழுந்து வரும் மாற்று அரசியல் போக்கினை அழிக்க முற்படும் ஆதிக்க சக்திகள், தலித்தாக உணரும் தருணம், அடையாளச் சிக்கல் போன்ற பல விசயங்களைப் பேசி கபாலி, உபாலி, நந்தன் வழி செல்கிறது பிரதி. சங்கமித்ரையின் மகன் இளையராஜா வைதீகத்தால் எரிக்கப்பட்ட நந்தனின் மறைக்கப்பட்ட இசை வல்லமை குறித்துப் படமெடுக்க முனைவது குறியீட்டின் உச்சம். பிரேமுக்கு அன்பு முத்தங்கள். LGBT, தலித்தியம், மதச்சார்பின்மை, தீவிர இடதுசாரியம், தமிழ் தேசியம், அமைப்பு சாரா உதிரி தொழிலாளர் வர்க்கம் என அனைத்து கதைகளும் ஒடுக்கப்பட்ட/விளிம்பு நிலை/சமூகப் புறக்கணிப்புக்களானவர்களைப் பேசும் பிரதி. தற்போதைய இந்தியச் சூழலில் புதிய வேகத்துடன் அனைத்துத் துறைகளிலும் கட்டமைக்கப்பட்டு வரும் நவ_இந்துத்துவம், வைதீக மறு உருவாக்கம், சாதீய பெருமிதம், பன்மைத்துவத்தை அழிக்க முனையும் ஒற்றை அடையாளம் போன்றவற்றுக்கு எதிரான மாற்று அரசியல் கலக இலக்கியப் பிரதியாக வாசிக்கிறேன் இக்கதைகளை.

– அன்புச்செல்வன்

நூல் : 
ஆசிரியர் : 
பதிப்பகம் : எதிர் வெளியீடு
விலை : ₹160.00
96, நியூ ஸ்கீம் ரோடு,
பொள்ளாச்சி
642 002.
தொடர்பு எண் : 99425 11302