கார்கவியின் கவிதைகள்

கார்கவியின் கவிதைகள்




சித்திரைப் பெருவிழா
***************************
வருடா வருடம் வந்து செல்கிறது
பலர் திறந்த கதவுகளில்
சந்தோசமும் இந்நாளும்……
வந்தவர் போனவரெல்லாம்
பார்த்துக் குதுகலிக்கும் வண்ணத்தில்
வடிவமைக்கப் பட்டிருந்தாள் அந்த அம்மன்
யாருக்கு என்ன வேண்டுதலோ
எல்லாம் வரிசையாக அர்ச்சகரிடம்
பரிந்துரைக்கப்பட்ட நிலையில்
பத்து ருபாயும் நூறு ருபாயுமாய்
வைத்துச் சொல்லப்படுகிறது.
பலநூறு கிலோமீட்டரில்
இருந்து வந்தவரின் கோரிக்கைகள்
இடுப்பில் பிள்ளை வைத்து
இராட்டினம் பார்த்தவளுக்கு
பக்கத்தில் கையேந்தும்
பிள்ளையின் உருவம் தெரியவில்லை
அந்த திருவிழா பெருவெளியில்
கரகாட்டம் ஒருபக்கம்
ஒயிலாட்டம் மறுபக்கம்
சிலம்பாட்டம் ஆரவாரம்
அந்த தெய்வீகப் பொங்கலுக்காக
வறுமை ஆடிய ஆட்டத்தை
அந்தத் திருவிழாவின் பொழுது
காணாதது வருத்தம் தான்……
கூடியிருந்த திருவிழாக் கூட்டத்தில்
தள்ளுவண்டி பலூன்காரனிடம்
நிரம்பி இருந்தன
நல்லமனம் கொண்ட
காற்று நிரம்பிய பலூன்கள்….
பட்டை தீட்டிய கத்திகளில்
பளீரெனத் தெரிகிறது இருப்பவரின்
பணமும் இல்லாதவனின் குணமும்……
இனிப்புகள் எல்லாம் விலைபோனால்
இனிதாகிவிடும் அவர்களின் அந்நாள்.
எங்கோ பிறந்தவன்
வேறெங்கோ வாக்கப்பட்டு
சென்றவள் என அனைவரும்
கூடும் நேரத்தில்
வந்து வளைந்து நிற்கின்றன
போன வருட பழிக்குப்பழி பாவங்கள்……..
இத்தனையும்
நிறைந்து வழியும் திருவிழாவில்
எல்லாம் நல்லது என நினைத்தவனிடம்
ஒளியூட்டி அமைதி வழங்குகிறது
அருளுடன் சேர்ந்த அந்த சிறு தீப ஒளி………
*******************************************

ஒரு மாட்டிற்கு ஒரு சூடு என்பர்..
மனிதனாகிப் போனதால்
கண்டுக்கொள்ள தயங்குகிறோம் நாம்……

அப்பாவின் பேச்சுகளில் எல்லாம்
சலிப்பூட்டும் மகனுக்கு
இறுதிச்சடங்கில் மயிரே போனாலும்
சரி என்ற எண்ணம் தானாக பிறக்கிறது
அவரின் இறுதி ஊர்வலத்தில்……

வெற்றியை நீ பெற
திறமையை கொடுப்பதற்கு முன்
நேரத்தைக் கொடு
வெற்றி உன்னிடமே….

ஒரு தேயிலை கோப்பையில்
வாய் வைத்த நிலைக்கு
நகர்ந்து அமரும் மனிதர்கள் மத்தியில்
நகராமல் தாங்கி நிற்கிறது
வேற்றுமை பார்த்தவர்களையும் சேர்த்து
அந்த புனித மரம்….

கவிஞர் சே. கார்கவி