Italian Telephone Stories (Prif Prof Pruf) Webseries 3 Written Gianni Rodari in tamil Translated by Ayesha Natarasan தொடர் 3: ஜானி ரொடாரியின் இத்தாலிய தொலைப்பேசிக் கதைகள் பிரீஃப், பிராஃப், புரூஃப் - தமிழில்: ஆயிஷா. இரா. நடராசன்

தொடர் 3: ஜானி ரொடாரியின் இத்தாலிய தொலைப்பேசிக் கதைகள் (பிரீஃப், பிராஃப், புரூஃப்) – தமிழில்: ஆயிஷா. இரா. நடராசன்



பிரீஃப், பிராஃப், புரூஃப்

அவர்கள் விதவிதமாக விளையாடுவார்கள் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டு சிறார்கள் அவர்கள் அவன்பெயர் பெலூட்டி. ஆறு வயது  2 மாதம். அவள் பெயர் மெலன். எட்டுவயது 3 மாதம்.

ஒரு நாள் அவர்கள் புதிதாக ஒரு பொம்மையை செய்தார்கள். அதை பார்த்து அதுபோலவே இன்னொரு பொம்மையை செய்தார்கள்… அன்று முழுவதும் பொம்மை செய்யும் விளையாட்டு விளையாடினார்கள்.

பிறகு ஒரு நாள் கட்டம் வட்டம் என்று ஒரு புதிய விளையாட்டை கண்டுபிடித்தார்கள். குடியிருப்பு அடுக்குமாடிகள் படிக்கட்டுகள் பாதைகள் எங்கும் சாக்கு கட்டியால் கட்டம் – வட்டம் வரைந்து தள்ளினார்கள்.

பெலூட்டியிடம் ஒரு மூங்கில் கழி இருந்தது. மெலனிடம் நான்கு தேங்காய் மூடி சில்லுகள் இருந்தன… உருவானது கழிவண்டி.. இந்த வண்டி விளையாட்டு ஒருவாரம் ஓடியது.

அப்புறம் காற்றில் எழுதும் விளையாட்டு இரண்டுவாரம் தொடர்ந்தது. மெலன் ஏதாவது ஒரு சொல்லை தனது குட்டி ஆள்காட்டி விரலால் காற்றில் எழுதுவாள்…. பெலூட்டி அதை கண்டறிந்து சத்தமாக அறிவிப்பான் முதலில் வெறும் எழுத்துக்களாக தொடங்கிய விளையாட்டு அது. பெலூட்டி வாக்கியமே எழுதுவான். அதை மெலன் வாசித்து கண்டுபிடித்து அறிவிப்பாள்.

மூன்று வாரம் ஓடிய விளையாட்டு அதைவிட வினோதமானது. அதற்குப்பெயர் ‘ நண்பர்கள்‘ விளையாட்டு  நண்பர் விளையாட்டு  பற்றி குடியிருப்பில் கூட பேசிக் கொண்டார்கள். விலங்குகளின் ஒலியை அவர்கள் பரிமாறிக்கொண்டார்கள். பெலூட்டி  மாடுமாதிரி கத்துவான். மெலன் ஆடு போன்று கத்துவாள் . அவை ஒன்றை ஒன்று எதுவும் செய்யாது. மயில்…. குயில் …. காக்கை ….. குருவி. எலி , அணில் இப்படி ஒன்றை ஒன்று கொன்று சாப்பிடாதவைதான் ‘நண்பர்கள்‘ மான்போல ஒருத்தர் கத்திட நீங்கள் புலிபோல கத்திவிட்டால் அவுட்.!  அணில் போல கீரிச்சிட்டு மற்றவர் காக்காபோல கத்தினாலும் அவுட். மூன்று வாரம்…. இருவரில் ஒருவரும் அவுட் ஆகாத நிலையில் ஆட்டம் சலித்தது.

அப்புறம் ஒருநாள், ஒரு மாதமும் கடந்து ஓடிய ஒரு விளையாட்டை அவர்கள் கண்டுபிடித்தார்கள். அந்த விளையாட்டு இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது. அது ஒரு கற்பனை விளையாட்டு.

அந்த குடியிருப்பு கட்டிட வீடுகளில் மாடிகள் உண்டு எதிர்எதிர் மாடிகளில் வயதான இருவர் வசித்தனர். கே பிளாக் மாடியின் வெளி-மாடத்தில்  ஒரு மூதாட்டி எப்போதும் உட்கார்ந்திருப்பார். அவர் குளிர்கால கோட்-ஸ்வெட்டர் பின்னியபடியே இருப்பார். ஆனால் அவர்கள் விளையாடுவதை நிறைந்த புன்னகையோடு வேடிக்கை கபார்த்ததபடியே இருப்பார்.

அதற்கு நேர் எதிரே எஸ் –பிளாக் – வெளிமாடத்தில் ஒரு தாத்தா எப்போதும் உட்கார்ந்திருப்பார். ஒரு தடி புத்தகத்தை படித்தப்படியே இருப்பார். அவரும் அவர்கள் விளையாடுவதை கவனித்த படி இருந்தார்.

அவர்களது புதுவிளையாட்டு இருவரின் கவனத்தையும் ஈர்த்தது.

அவர்கள் ஒரு புதிய மொழியை கண்டுபிடித்து இருந்தார்கள்.

‘பிரீஃப்… பிராஃப்’ என்றாள் மெலன்

‘புரூஃப்… புரூஃப்’ என்றான் பெலூட்டி

பிறகு இருவருமாக சேர்ந்து கலகலவென்று சிரித்தார்கள்.

தாத்தா எரிச்சல் அடைந்தார்.

பாட்டி .. புன்னகைத்தார்.

‘என்ன விளையாட்டோ… ஒரே கூச்சல்’ என்று முகம் சுழித்தார் தாத்தா.

‘இது…கூட புரியவில்லையா… என்ன அழகான விளையாட்டு’ என்றார் பாட்டி.

‘அவர்கள் உளறியது… ஏதாவது புரிந்ததா’ தாத்தா குரல் உயர்ந்தது… ‘ஹீம்…’ 

’ஏன் புரியாமல்?’ – இது பாட்டி

‘என்ன புரிந்தது’? – தாத்தா விடவில்லை.

‘மெலன் சொன்னது பிரீஃப் பிராஃப்… ஆகா என்ன அழகான நாள்…. என்று அர்த்தம்.. அதற்கு புரூஃப்.. புரூஃப் என்று பெலூட்டி பதில் அளித்தது… நாளையும் இனியைமான நாளாகவே இருக்கும் என்று அர்த்தம்’ என்றார் பாட்டி. 

தாத்தா அதற்கும் முகம் சுழித்தார். அதற்குள் குழந்தைகள் ஆடுத்த பதத்திற்கு தாவின.

இம்முறை பெலூட்டி

‘பிராஸ்கி …. பிப்ரிமாஸ்கி’ என்றான் அதற்கு மெலன்

’புரூஃப்.. புராஃப்’ என்று பதில் அளித்தாள்.

இருவருமே மனம் விட்டு சிரித்தார்கள்.

தாத்தா …. கடுப்பானார்…. பாட்டியை பார்த்து ‘இதுவும் புரிந்தது என்று உளறப் போகிறாயா’ என்றார்.

‘ஏன் புரியாமல்’ என்றார் பாட்டி பிறகு தனக்கு புரிந்ததை சொல்லத்தொடங்கினார்.

‘பெலூட்டி சொன்னது பிராஸ்கி… பிப்ரிமாஸ்கி அப்படியென்றால்… இந்த உலகில் வாழ எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது என்று அர்த்தம்.

‘ஓ …. என்றார் தாத்தா கேலியாக 

‘அதற்கு மெலன் ’புரூஃப்.. புராஃப்’ என்று பதில் சொன்னாள்.  அதற்கு இந்த உலகம் மிக அழகானது என்று அர்த்தம்..’ 

‘இந்த உலகம் அழகானதா…’ என்று அப்போதும் நம்பிக்கை அற்று கேட்டார் தாத்தா.

தன் குளிர்கோட்டு பின்னலை தொடர்ந்தபடி பாட்டி பதில் சொன்னாள் ’புரூஃப்.. புராஃப்’