பாங்கைத் தமிழனின் கவிதைகள்
போதி மாதா
****************
ஒரு முழுமையை
எப்படிஉன்னால் கொடுக்க
முடிந்தது;
ஒன்பதே மாதங்களில்?
எத்தனை ஆண்டுகள்
இன்னும்
திரிந்தே கிடக்கிறது
முழுமையடையாமல்
வாழ்க்கை!
ஒரு
உயிரின் முழுமையை விடவா
வாழ்வின் முழுமை பெரியது?
உயிர் கொடுத்து
உடல் கொடுத்து
அதற்குள்ளே
இயக்கங்களனைத்தையும்
கொடுத்து….
இந்த மண்ணில்
இடம் பிடித்துக் கொடுத்தும்
முழுமைக்கு வழி தெரியாமல்
முழித்துக் கொண்டிருக்கிறேன்….
மீண்டும் ஒருமுறை
என்னை சுமந்துகொள்
அம்மா உன் வயிற்றில்!
வாழ்க்கையில்எப்படி
முழுமை பெறுவதென
அங்குதான் எனக்கு
ஞானம் கிடைக்கும்!
நீ
மீண்டும் ஒருமுறை
என்னை சுமந்து
பெற்றெடு அம்மா….
பிறக்கும்போதே
புத்தனாகப் பிறப்பேன் நான்!
நம்பிக்கை
*************
இந்த உலகம்
எப்படியிருக்கும்?
இந்த வினா
எப்போதும் அவர் மனதில்
தோன்றியே இருக்காது!
தன்னைப்
பெற்றவர் எப்படி இருப்பர்?
கருப்பா? சிவப்பா?
அறிந்து கொள்ள
ஆர்வப்பட்டிருக்க மாட்டார்!
தன்னை நேசிக்கும்
நண்பர்கள்
தன்னை விமர்சிக்கும்
நண்பர்கள்
எப்படி இருப்பர்?
என்ற சிந்தனைகள்
எப்போதும் எழுந்திருக்கவும்
வாய்ப்பில்லை!
நடக்கும் பாதை
கடக்கும் மனிதர்
குரைக்கும் நாய்கள்
சுடுகின்ற வெயில்
நிழல் தரும் மரம்
யாதொன்றைப் பற்றியும்
சிந்தித்திருக்க மாட்டார்!
படைத்தக் கடவுள் மேல்
கோபம் கொண்டு
ஏசியதோ…. பேசியதோ…
இல்லை!
சாதாரண மனிதர்ப் போலவே
இந்தச் சாதாரண மனிதரும்
சாமியை நம்புகின்றார்;
வணங்குகின்றார்!
வெளியில் வரவும்
வித்தைகள் கற்கவும்
கல்வியில் உயரவும்
வேலைகள் செய்யவும்
காசு பணம் ஈட்டவும்
கல்யாணம் புரியவும்
குழந்தைப் பெற்றுக்
கொஞ்சவும்…
படைத்தக் கடவுளை
பார்வையுள்ளவன் மட்டும்
பார்த்து விட்டானோ?
பார்வை உள்ளவனுக்கும்
பார்வை இல்லாதவனுக்கும்
கடவுள் என்பவன்
ஒரே உருவம்தான்!
தன்னுடையப் பார்வையை
இறைவன் பறித்து விட்டானே
என்று…..
பார்வையற்ற எந்த
என் நண்பரும்
மூளையில் அமர்ந்து
முக்காடு போட்டு
ஒப்பாரி வைத்து
வாழ்வதில்லை!
அவருடைய….
எல்லாமும்
தன்னால் முடியும்
என்ற நம்பிக்கை மட்டுமே…
அதற்குப் பெயர்தான்
தன்னம்பிக்கை!
அவள் விருப்பம்
********************
இந்த
மனிதப்பிறவிதான்
மாநிலத்தில்
மதிகெட்டப் பிறவி!
மதியுள்ளப் பிறவிகள்
மற்ற உயிரினங்கள்தான்!
அதனதன் வழியில்
அதனதன் போக்கில்
அதனதன் வாழ்க்கை!
துன்பப்படுவதேயில்லை
மற்ற உயிரினங்கள்!
துயர் தொடும்போது
விடுபட முயன்று…
ஒன்று வெற்றி பெறும்;
இல்லையென்றால்
மரணித்துப்போகும்!
வஞ்சகத்தை
மனதில் தாங்கி…
வாழ்க்கை முழுதும்
வாழ்வதில்லை மிருகம்!
வாழ்க்கையை
எளிமையாக
எடுத்துக்கொள்ளும்
இயல்புப் பிறவி
பிற உயிரினங்கள்!
இந்த மனிதப்பிறவிதான்
மமதைக் கொண்டப் பிறவி!
அடுத்தவரைப்பற்றியே
ஆராயுமே தவிர…
தன்னிலை உணரா தரங்கெட்டப் பிறவி!
உணர்வுகளை
விருப்பங்களை விடுதலையை
புரிந்து கொள்ளாத
புவியின் அசிங்கம்
இந்த மனிதப் பிறவி!
திரு நங்கைகள் விஷயத்தில்
இன்னும்…
திருந்தாதப் பிறவி
இந்த மனிதப்பிறவி!
அவள் விருப்பம்
அவள் சுதந்திரம்
அவள் வாழ்க்கை
அவர் பிறப்பு!
திரு நங்கையாக
திருமதி நங்கையாக
திருவாளர் நங்கையாக
திருமிகு நங்கையாக
அவள் வாழ்க்கை…
அவள் சுதந்திரம்!
அங்கீகரிக்கத்
தெரியவில்லையானால்
அடங்கிக்கிட….
அவள் வாழ்க்கையை
அவள் வாழட்டும்!
தைரியம் கொண்ட
திறமை நங்கையாக
திரு நங்கை!
********
சரிங்க…
வீரம் பேசுங்கள்
ஆண்டப் பெருமை பேசுங்கள்
மூத்தக்குடி என்று
மார் தட்டுங்கள்….
தமிழர் எல்லோருக்கும்
பெருமைதான்!
தமிழர் இனம்தானே நாம்?
தனிமைப்படுத்தியது யார்?
தனித்தனிக் குழுவாய்….
ஒரு குழு சிங்கமென்றும்
ஒரு குழு சிறுத்தையென்றும்
ஒரு குழு புலியென்றும்
ஒரு குழு புழுவென்றும்
வாழ்கின்றோமே….
வலிக்கவில்லையா?
ஒரே மொழி
ஒரே உருவம்
ஒரே வாழ்வின் முறை
எப்படி… எப்படி…
நீ பெரியவன்?
அவன் சிறியவன்?
மொழியும் ஒன்று
முறை வைத்து
வாழும் முறையும் ஒன்று
உழைக்கும் முறையும் ஒன்று
உணவும் ஒன்றுதான்!
மீனும் நண்டும்
ஆடும் மாடும்
மாமிசம்தானே?
இதிலெது மட்டம்?
மட்டம் என்றால்
அனைத்தும் மட்டம்!
தகுதியென்றும்
தரமென்றும்
தந்திரச் சொற்களில்
மயங்கிக் கிடப்போர்
தன்மானத் தமிழராக
இருக்க முடியாது!
மானம்
மனிதனின் கொள்கை;
தன்மானம்
தமிழனின் தனியுடைமை!
தமிழருக்குள் என்னத் தகுதி?
வா எடை போடுவோம்…..
உன் செந்நீரும் என் செந்நீரும்
உன் கண்ணீரும் என் கண்ணீரும்
வேறுபாட்டால் சூழ்ச்சிக்கார்களின்
விதிப்படி வாழ்ந்து விட்டுப் போவோம்….
இல்லையானால்
தமிழராய் வாழ்வோம்!
ஏய்ப்போரை அடையாளம் காண்போம்;
இமயம் தொட்டத் தமிழ்க்குடியைக் காப்போம்!