நூல் அறிமுகம்: பாஸ்கரனின் ’ஆறு மாதம் சிறையில் இருந்தேன்’ தமிழில் டேவிட் சித்தையா (குற்றவாளிகளின் மறுபக்கம்) – பாவண்ணன்

நூல் அறிமுகம்: பாஸ்கரனின் ’ஆறு மாதம் சிறையில் இருந்தேன்’ தமிழில் டேவிட் சித்தையா (குற்றவாளிகளின் மறுபக்கம்) – பாவண்ணன்



குற்றவாளிகளின் மறுபக்கம்
பாவண்ணன்

ச.து.சு.யோகியார் எழுதிய எனது சிறைவாசம் புத்தகம் கிடைக்குமா என்றுதான் நூலகத்தில் தேடிக்கொண்டிருந்தேன். ஆறேழு அடுக்குகளில் அரைமணி நேரமாக தேடியபோதும் அந்தப் புத்தகம் என் கண்ணில் தென்படவில்லை. அதற்கிடையில் நூலகப் பொறுப்பாளர் இரண்டுமுறை எனக்கு அருகில் வந்து மெல்லிய குரலில் நூலக நேரம் முடியவிருப்பதை நினைவூட்டிவிட்டுச் சென்றார்.  அதற்குமேல் தேடல் வேட்டையைத் தொடர்வதில் பொருளில்லை என்று எனக்கும் தோன்றத் தொடங்கியது.  திரும்பிவிடலாம் என்று நினைத்த நேரத்தில் எதிர்பாராத விதமாக அடுக்கிலிருந்த ஒரு புத்தகத்தின் மீது என் பார்வை படிந்தது. ஆறுமாதம் சிறையில் இருந்தேன் என்பது அப்புத்தகத்தின் தலைப்பு. நான் தேடிய சிறைவாசம் வேறு. கிடைத்த சிறைவாசம் வேறு என்றபோதும், அதை எடுத்துக்கொண்டு நூலகரிடம் வந்து பதிவிடுவதற்காகக் கொடுத்தேன். ”கடந்த முப்பத்திரண்டு ஆண்டுகளாக யாருமே எடுக்காத புத்தகத்தை எடுத்து வந்திருக்கிறீர்கள்” என்று புன்னகைத்தபடியே அந்த நூலகர் பதிவிட்டுக் கொடுத்தார்.

யாருமே படிக்காத புத்தகம் என்னும் குறிப்பின் காரணமாகவே வீட்டுக்கு வந்ததுமே அப்புத்தகத்தை ஒரே அமர்வில் படித்துமுடித்தேன். பாஸ்கரன் என்னும் மலையாளக் கவிஞர் எழுதிய புத்தகத்தை டேவிட் சித்தையா என்பவர் தமிழில் மொழிபெயர்த்த புத்தகம் அது.  கொடுங்காநல்லூரைச் சேர்ந்த பாஸ்கரன் என்னு கவிஞர் 1942இல் நாடெங்கும் நடைபெற்ற ஆகஸ்டு போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக தண்டனை பெற்று சிறைக்குச் சென்றார். முதலில் விதிக்கப்பட்டது ஒன்பது மாத தண்டனை. பிறகு அது ஆறுமாதத் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. சிறையிலிருந்து விடுதலையான பிறகும் அவருடைய காங்கிரஸ் தொண்டு தொடர்ந்தது. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு தேசாபிமானி பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்து ஏராளமாக எழுதினார். மலையாளத்தின் முக்கியமான கவிஞராக அவர் அறியப்பட்டார். திரைப்படங்களுக்கு பாடல்களும் எழுதினார். எண்ணற்ற திரைப்படங்களை இயக்கினார். அத்தகு ஆளுமையின் தொடக்ககால அரசியல் பங்களிப்பு இந்தப் புத்தகத்தில் பதிவாகியுள்ளது.

ஆகஸ்டு போராட்டத்தின்போது, கொச்சியில் நடைபெற்ற மாணவர் சங்கக் கூட்டத்தில் உரையாற்றியதற்காக பாஸ்கரன் கைது செய்யப்பட்டார். நீதிபதி அவருக்கு ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தார். அப்போது அவருக்கு வயது பதினெட்டு. இரண்டு போலீஸ்காரர்கள் திருச்சூரிலிருந்து விய்யூர் மத்திய சிறைச்சாலை வரைக்கும் அவரை நடக்கவைத்து அழைத்துவந்தனர். சிறைச்சாலையின் கதவுகள் பெரியதாக இருந்தாலும், உள்ளே நுழைவதற்கான கதவு மட்டும் ஒரு நேரத்தில் ஒரு ஆள் மட்டும் செல்லக்கூடியதாக இருந்தது. முதலில் ஒரு போலீஸ்காரர் சென்றுவிட, அவரைத் தொடர்ந்து பாஸ்கரன் செல்ல இறுதியாக இன்னொரு போலீஸ்காரரும் நுழைய, அனைவரும் சிறையை நோக்கி நடக்கத் தொடங்கினர். 

நாளுக்குநாள் ஆகஸ்டு போராட்டத்தில் கைதாகி சிறைக்கு வரும் தொண்டர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே சென்றது. அவர்கள் அடைக்கப்படும் இடம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருந்தது. அவர்கள் அனைவரும் அரசியல் கைதிகள் என்பதால் மற்ற கைதிகளிலிருந்து பிரித்து தனிக்கூடத்தில் வைக்கப்பட்டார்கள். அவர்களுக்கு அருகிலேயே சிவில் குற்றங்கள் செய்த கைதிகளுக்கான கூடமும் தண்டனை பெற்றவர்கள் அடைக்கப்பட்ட குவாரண்டைன் கூடமும் இருந்தன. 

சமையல், உணவு விநியோகம், தூய்மைப்பணி என அனைத்து வேலைகளிலும் கைதிகளே ஈடுபடுத்தப்பட்டனர். அதனால் அரசியல் கைதிகளோடு மட்டுமின்றி எல்லாவிதமான கைதிகளோடும் பேசிப் பழகும் வாய்ப்பு பாஸ்கரனுக்குக் கிடைத்தது. சிறையில் சந்தித்த அபூர்வ கைதிகளைப்பற்றிய நினைவுச்சித்திரங்களை, சிறையிலிருந்து விடுதலை பெற்ற பிறகு சின்னச்சின்ன கட்டுரைகளாக எழுதி வெளியிட்டார். பிறகு ஆறு மாதம் சிறையிலிருந்தேன் என்னும் தலைப்பில் அக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்தது. 

ஒரு கைதியின் பெயர் பேக்கர். அவரும் கொடுங்காநல்லூர்க்காரர். தன் சொந்த ஊரிலிருந்து வந்திருப்பவர் என்னும் செய்தியைக் கேட்டு பாஸ்கரனைத் தேடி வந்து பார்த்து பழகி நட்புகொண்டார் பேக்கர். அவர் சிறைக்கு வந்த பின்னணி வேடிக்கையும் துயரமும் நிறைந்தது. முதலி ஒரு திருட்டுக்குற்றத்தை முன்வைத்து காவலர்கள் அவரை விசாரிப்பதற்காக காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். வாய்ப்பேச்சாக தொடங்கிய விசாரணை அடி வரைக்கும் நீண்டு விட்டது. தனக்கும் குற்றத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதால் பேக்கர் தொடர்ந்து மறுத்துக்கொண்டே இருந்தார். அவர் வாயிலிருந்து உண்மையை வரவழைக்கும் முயற்சியாக காவலர்கள் அவரை கடுமையாக அடித்துப் புரட்டியெடுத்துவிட்டனர். ஏதோ ஒரு கட்டத்தில் பேக்கர் குற்றமற்றவர் என்னும் உண்மை அவர்களுக்குப் புரியவந்தது. அதனால் அவரை வெளியே அனுப்பிவிட்டனர். 

காவல்நிலையத்திலிருந்து வெளியே சென்ற பேக்கருக்கு அவமானம் தாங்கமுடியவில்லை. கூனிக் குறுகிவிட்டார். வாழ்க்கையே வெறுத்துவிட்டது. உயிர் வாழவே பிடிக்கவில்லை. வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த கோயிலுக்குச் சென்று யாருமில்லாத வேளையில் தன் மர்ம உறுப்பை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்ய முயற்சி செய்தார். உறுப்பு அறுந்துவிட்டது. ஆனால் உயிர் போகவில்லை. நினைவிழந்து கிடந்தவரை யாரோ பார்த்துவிட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் மீது தற்கொலை செய்துகொண்ட வழக்கு தொடரப்பட்டது. மருத்துவர்கள் அவரைக் குணப்படுத்தினாலும் அவர் ஆணுமற்ற, பெண்ணுமற்ற மனிதனாகவே இருந்தார். அவருக்கு ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் அவர் கெளரவமாகவே நடத்தப்பட்டார். பக்கத்திலிருந்த பெண்கள் சிறைக்கு உணவுவண்டியை எடுத்துச் செல்லும் ஊழியராக அவர் காவல்துறையின் நம்பிக்கைக்கு உரியவராக செயல்பட்டார். பாஸ்கரனைச் சந்திக்கும் போதெல்லாம் தன் குடும்பக்கதையைச் சொல்லி உருகினார்.  விடுதலைக்குப் பிறகு தன் மனைவியின் முகத்தை எப்படி பார்ப்பேன் என சொல்லி அழுதார்.

பாஸ்கரனுக்கு நன்றாக அறிமுகமான இன்னொரு கைதி வர்கீஸ். ஒரே வட்டாரத்தில் வசித்தவர்கள். வயதில் மூத்தவன். அவனும் ஒரு கொலைக்குற்றத்தில் சிக்கி சிறையில் இருந்தான். ஒருநாள் தென்னந்தோப்பில் வர்கீஸும் அவனுடைய நண்பர்களும் பொழுதுபோக்காக சீட்டு விளையாடிக்கொண்டிருந்தார்கள். எல்லோருமே போதையில் மூழ்கியிருந்தனர். வர்கீஸுக்கும் காக்கு என்னும் இன்னொரு நண்பனுக்கும் இடையில் பேச்சு முற்றி மோதலாகிவிட்டது. ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். ஆத்திரத்தில் தென்னந்தோப்பில் கிடைத்த கத்தியை எடுத்து காக்குவைக் குத்தி வீழ்த்தினான் வர்கீஸ். ரத்த வெள்ளத்தில் காக்கு சரிந்துவிட, அச்சத்தில் வர்கீஸ் ஓடோடிச் சென்று காவல்நிலையத்தில் சரண்டைந்துவிட்டான். ஒரே ஒரு நொடி பொங்கி அவனை ஆட்டிப் படைத்த ஆவேசத்தில் அவன் தன் வாழ்க்கையையே இழந்துவிட்டான். நன்னடத்தையின் காரணமாக, சிறைவளாகத்திலேயே கைதிகளிடையே கண்காணியாக அவன் வலம்வந்தான்.

உக்குரு என்பவர் ஒரு கைதி. அவருடைய நன்னடத்தையின் காரணமாக அவர் சிறையில் வார்டராக பணியாற்றினார். பாஸ்கரனை சிறைக்குள் அழைத்துவந்த போது, அவரைப்பற்றிய குறிப்புகளை பேரேட்டில் அவர்தான் எழுதினார். பழகிப் பேசிய பிறகுதான் அவர் தன் மனைவியையே கொலை செய்தவர் என்று தெரிந்தது. மனைவியை மணந்துகொண்டு வந்த ஏழாவது மாதத்திலேயே உணவில் நஞ்சு கலந்து கொன்றுவிட்டார். 

சிறைக்கூடத்தில் அனைவருக்கும் முடிதிருத்தம் செய்யும் தொழிலாளியின் பெயர் கிருஷ்ணன் மேஸ்திரி. உண்மையில் அவரும் கொலைக்குற்றத்தில் சிக்கிய ஒரு கைதியே. ஒரே நேரத்தில் அவர் மூன்று கொலைகளைச் செய்ததை அவரே ஆழ்ந்த வருத்தத்துடன் ஒப்புக்கொண்டார். அவருக்குச் சொந்தமாக ஊரில் கொஞ்சம் நிலம் இருந்தது. அவருடைய முன்னோர் வழியில் கிடைத்த சொத்து அது. அந்த நிலத்துக்குப் பக்கத்தில் நிலம் வைத்திருந்தவன் ஒரு பேராசைக்காரன். அந்தத் துண்டு நிலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக தனதாக்கிக்கொள்ள முயற்சி செய்தபடி இருந்தான். வரப்பைத் திருத்தும் ஒவ்வொரு முறையும் சில அங்குலங்கள் தள்ளி வந்து ஆக்கிரமிக்கும் அடாவடித்தனங்களில் இறங்கினான். எத்தனையோ முறை நல்ல முறையிலும் பேசிப் பார்த்தாயிற்று. சண்டையும் போட்டாயிற்று. அவன் அவற்றைப் பொருட்படுத்தவே இல்லை. ரகசியமாக தன் ஆக்கிரமிப்பு வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தான். 

ஒருநாள் கிருஷ்ணனின் தந்தையார் தன் நிலத்தில் நட்டுவைத்த மாமரத்துக்குச் சொந்தம் கொண்டாடி, அதை வெட்ட குடும்பத்தோடு வந்தான் பக்கத்து நிலத்துக்காரன். தடுக்கச் சென்றபோது அவர்கள் அலட்சியமாக அவனைப் பார்த்துப் பேசிவிட்டு, மரத்தை வெட்டச் சென்றார்கள். தடுத்தபோது, அவனைக் கீழே தள்ளி உதைத்தான். ஆத்திரம் கொண்ட கிருஷ்ணன் இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுத்து மரம் வெட்டச் சென்றவனை வெட்டி வீழ்த்தினான். தடுத்து நிறுத்த வந்த அவனுடைய அப்பாவையும் வெட்டினான். அம்மாவையும் வெட்டினான். மூன்று வெட்டுகளில் மூன்று உயிர்கள் பலியாகி விழுந்தன. அவன் வாழ்க்கை அன்றோடு முடிந்துபோனது. திட்டமிடாத கொலை என்ற காரணத்தாலேயே அவன் சிறைக்குள்ளேயே இன்னும் உயிர்வாழ்ந்தான்.

அந்தக் கைதிகளிடையில் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதியும் இருந்தான். அவன் பெயர் குஞ்சுக்குட்டன். முப்பது வயது இளைஞன். அவனும் மூன்று கொலைகளோடு தொடர்புடையவன். கீழ் நீதிமன்றமும் செசன்ஸ் நீதிமன்றமும் அவனை குற்றவாளியே என உறுதிசெய்துவிட்டது. கடைசி முயற்சியாக கொச்சி மன்னரிடம் கருணை மனுவைச் சமர்ப்பித்துவிட்டு, முடிவுக்காகக் காத்திருந்தான். குஞ்சுக்குட்டனும் அவனுடைய வீட்டுக்கு அருகிலேயே வசித்துவந்த சின்னம்மு என்னும் இளம்பெண்ணும் உயிருக்குயிராகக் காதலித்து வந்தனர். அந்தப் பெண்ணுக்கு அம்மா மட்டுமே இருந்தாள். அப்பா இல்லை. அவளைத் தவிர ஒரு தங்கையும் இருந்தாள். இருவரும் ஒரே சமூகத்தவர் என்பதாலும் செலவு செய்து திருமணம் செய்யும் வசதி இல்லாததாலும், அந்தத் தாய் அவர்கள் காதலுக்குக் குறுக்கில் நிற்கவில்லை. இருவரும் திருமணம் செய்துகொள்வதை ஆதரிக்கவே செய்தாள். குஞ்சுக்குட்டனும் சின்னம்முவும் நெருங்கிப் பழகி வந்தனர். 

எதிர்பாராத விதமாக அந்தத் தாய் பட்டாளத்திலிருந்து வந்த வேறொரு இளைஞனுக்கு தன் மகளைத் திருமணம் செய்துவைக்க முடிவெடுத்தாள். பணமும் செல்வாக்கும்தான் முக்கியமான காரணம். அவள் மனம் மாறிவிட்டது. குஞ்சுக்குட்டனை விலகிக்கொள்ளுமாறு சொல்லிவிட்டாள். தாயின் சொல்லுக்குப் பணிந்த சின்னம்முவும் அவனிடமிருந்து விலகிவிட்டாள். முதலில் திருமணத்துக்குச் சம்மதித்தவள், தன்னைவிட கொஞ்சம் பசையுள்ளவன் கிடைத்ததுமே தன்னை ஒதுக்கிவிட்டாளே என நினைத்து நினைத்து வருந்தினான் குஞ்சுக்குட்டன். பட்டாளத்துக்காரனுடன் திருமணம் உறுதியாகிவிட்டது என்கிற செய்தி கிடைத்ததும் அவன் மிருகமாக மாறிவிட்டான். வெட்டருவாளுடன் அந்த வீட்டுக்குச் சென்று தன் காதலியை முதலில் வெட்டி வீழ்த்தினான். பிறகு அவள் அம்மாவையும் குறுக்கிட்ட தங்கையையும் வெட்டி வீழ்த்திவிட்டான். ஒரே நேரத்தில் மூன்று கொலைகள். 

அவன் கதையை அறியாதவர்களே அச்சிறையில் இல்லை. அவன் மீது அனைவருக்கும் இரக்கம் இருந்தது. ஆனால் வாழவைக்க அந்த இரக்கத்துக்கு சக்தி இல்லை. குஞ்சுக்குட்டனின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட செய்தி கிடைத்ததும் அவனுடைய மரணதண்டனை ரகசியமாக நிறைவேற்றப்பட்டுவிட்டது. நீண்ட நேரத்துக்குப் பிறகே அச்செய்தி சிறையெங்கும் பரவியது. சிறையே ஆழ்ந்த துக்கத்தில் மூழ்கிவிட்டது.

சிறையில் சந்தித்த வெவ்வேறு கைதிகளைப்பற்றிய நினைவலைகளை ஒவ்வொரு கட்டுரையிலும் பதிவு செய்திருக்கிறார் பாஸ்கரன். அவர்களுடைய வாழ்க்கையைப்பற்றிய நினைவுகளின் ஊடே அந்தக் காலத்து சிறை ஒழுங்குமுறைகளையும் விதிகளையும் இணைத்து எழுதியிருக்கிறார். அவருடைய எழுத்தாற்றலைப் புரிந்துகொள்ள இச்சிறு நூலே ஒரு சான்று. டேவிட் சித்தையாவின் மொழிபெயர்ப்பு சிறப்பாகவே உள்ளது. 1989இல் பூங்கொடி பதிப்பகம் இந்த மொழிபெயர்ப்பை வெளியிட்டுள்ளது. 

நூல் : ஆறு மாதம் சிறையில் இருந்தேன்
ஆசிரியர் : பாஸ்கரன்
தமிழில் : டேவிட் சித்தையா
விலை : ரூ.₹ 10/-
பதிப்பகம் : பூங்கொடி பதிப்பகம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]

அ.பாலாஜியின் கவிதைகள்

அ.பாலாஜியின் கவிதைகள்




பன்மைத்துவம் நமது வலிமை
***********************************
சேரிகளுக்கு அருகில்தான்,
வானுயரக் கட்டிடங்களும் எழுகின்றன;

அடிமைப்பட்டுக் கிடக்கும் பெண்ணினத்திற்குத்தான்
“சில நேரச்” சிறகுகளும் தரப்படுகின்றன;

கோவில்களுக்கு அருகில்தான்
தேவாலயங்களும் மசூதிகளும் தோளுரசி‌ நிற்கின்றன;

முரண்பாடில்லை என நம்ப வைத்துவிட்டேன் என்னை நானே!
கார்ல் மார்க்ஸையும்
பெரியாரையும்
அம்பேத்கரையும்
படிக்கச் சொல்லிய மனதுக்கு
ஒரு கடிவாளம் போட்டேனேயானால்
நம்ப வைத்து விடுவேன்
வேற்றுமையில் ஒற்றுமை என
இற்றுப்போன இந்த மனத்தையும்…!

மும்மேதைகளிடம்
முரண்பட்டுக் கிடப்போரின்
குறுக்கே ஒரு மன நூல் ஓடும்,

இதயங்களுக்கு இடையில் இடைவெளியா?

பன்றியைக் கடவுளின் அவதாரம் என்றபடியே

வயற்காட்டில் உழுதோடி உழைத்த நம் மக்களை
பன்றிகள் என்று பழித்துரைப்பர்…!

மனிதர்கள் நினைக்காமல்
மன நூல் பொசுங்காது !

நூல் பிடித்தாற்போல
தோழர்கள் நாம் தோள்களுரசி தொடர்ந்து பாடுவோம்!
நூலறுத்து பட்டமெனப் பறப்போம்
அகன்ற வானம் நம் அறிவின் விசாலம்!

பற
*****
தாய்க்குருவி தன் குஞ்சுக்குப்
பறக்கக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தது;

முன்பொரு நாள்
இதே கூட்டுக்குள்
தன் தாய் தனக்கு
எவ்வாறு கற்றுக்கொடுத்ததோ அவ்வாறு…!

புத்தகச்சிறை
*****************
புத்தகத்தைச் சிலநொடி நேரம் சிறை பிடித்திருந்த
பட்டாம்பூச்சியைப் படித்தேன்,
புத்தகத்தை மறந்து…!

அதன் பங்கிற்கு
எந்தக் காட்டிலோ
எந்த பூவோ தந்த தேனை எடுத்து வந்த
கதையை எழுதிச் சென்றது..‌.!

கதை
*******
இறகுகள் சொல்லும் கதைகளை
மொழிபெயர்க்க யாருமில்லை இந்தக் கூண்டில் ;
முன்பிருந்த பறவைகளைக் கேட்டால் ஒருவேளை சொல்லலாம்,
சொன்னால் என்ன சொல்லும்?!
பறந்து போகச் சொல்லும்…!

கதவு
*******
பள்ளிக்கூடக் கதவுகளில்
காம்பஸ் வைத்துச் செதுக்கிய
என் பெயரையும் அவள் பெயரையும்
இந்நேரம் பெயிண்ட் அடித்து அழித்திருப்பார்களோ?!

வீட்டுக் கதவில்
குழந்தை தற்செயலாய்
என் பெயரை க்ரேயான்ஸ் கொண்டு
எழுதி அழித்துக் கொண்டிருந்த கணம் தோன்றி மறைந்தது
அவள் பெயருடன் முகமும்…!

பிரார்த்தனை
*****************
“கைகால் நல்லாத்தானே இருக்கு,
உழச்சுத் திங்க வேண்டியதுதான” என்று
யாசகம் கேட்ட கிழவரின் காதுபடச் சொல்லிவிட்டு,
நந்தியின் காதில் சொன்னான்
“எல்லாருக்கும் கைகால் சொகத்த குடு,
எல்லாரும் நல்லாருக்கணும்”…!

கைதி
********
பார்வைச் சிறையில் என்னைக் கைதியாக்கினார்
கண்களில் பசி ஏந்தி நின்ற அந்தத் தாத்தா;

பார்சல் சாப்பாடு வாங்கிச் செல்வது என் முதலாளிக்கு என்று
எப்படிச் சொல்ல அவரிடம்…!

அ.பாலாஜி